அன்புக்கும் உண்டோ அடைக்கும் தாழ்?

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: December 6, 2023
பார்வையிட்டோர்: 942 
 
 

சென்னை விமான நிலையம். முற்பகல் நேரம். நரைத்த தலை, நரைத்த தாடி முகம் கொண்ட, ஜிப்பா அணிந்த பருமனான நபர் விமான நிலையத்திலிருந்து கையில் பயணப்பெட்டியுடன் வெளியே வந்து நின்றார். அவருக்காக ஊர்தி கொண்டு வந்து இருப்பவரை அவரது விழிகள் தேடிக் கொண்டிருந்த போது, ஒல்லியான, உயரமான சூரிதார் அணிந்த இளம்பெண் அவர் அருகில் வந்தாள். அவரைக் கண்டதும் அவள் முகம் மலர்ந்திருப்பதை அவர் கவனித்தார். அந்த இளம்பெண், அவரது கைகளைப் பற்றிக் கொண்டாள். ‘ என்ன தாத்தா புது கெட் அப்…. வா போகலாம்’ என்று அவரது கைகளைப் பிடித்துக் கொண்டு விறுவிறுவென நடந்தாள். அவளுடைய காரின் முன் இருக்கையில் அவரை அமர்த்தினாள். அவள் ஓட்டுநர் இருக்கையில் அமர்ந்து, அவளுக்குப் பிடித்த இசையை ஒலிக்க விட்டு வண்டியை ஓட்டத் தொடங்கினாள்.’ என்ன தாத்தா உம்னு வரே… பயணக் களைப்பா?’ கேட்டாள் அவள். அவர் தலையை அசைத்தார்.

கார், மிகப்பெரிய மாளிகைக்குள் சென்றது. இருவரும் இறங்கினர். இளம்பெண், அவருடைய கைகளைப் பிடித்து இழுத்தபடியே வீட்டின் உள்ளே சென்றாள். அங்கே கூடத்தில் ஆடம்பரமான சோபாவில் அமர்ந்து டேப்லெட்டில் வீடியோ பார்த்துக் கொண்டிருந்த கனமான தேகம் கொண்ட வயதான பெண்மணி முன் நின்றாள் அந்த இளம்பெண்.

‘ பாட்டி, தாத்தா நேரா ஆபீஸ் போயிடுவார்ன்னு சொன்னியே தாத்தாவை நானே ரீசிவ் பண்ணி வீட்டிற்கு அழைச்சிட்டு வந்துட்டேன்’ என்றாள். சோபாவின் பின்னால் சபாரி அணிந்த ஒல்லியான நடுத்தர வயது நபர் நின்று கொண்டு இருந்தார். புதிதாக வந்த வெள்ளை முடி நபர் சுற்றும் முற்றும் பார்த்தார். தெலுங்கு படத்தில் காட்டப்படும் பணக்கார வீடு போல் வீடு முழுக்க உறவினர்கள், பணியாளர்களைப் பார்த்தார். பாட்டி என்று அழைக்கப்பட்ட பெண்மணியைப் பார்த்தார். அவள், மாறாத இளமையும் அழகும் கொண்ட பேரிளம் பெண்ணாக இருப்பதைக் கண்டு வியந்தார். அப்படி பார்ப்பது தவறு என்று உறைக்க, பார்வையை சபாரி நபர் மீது திருப்பினார்.

‘யார் சார் நீங்க? சின்னப் பொண்ணு தாத்தான்னு நெனச்சு கூப்பிட்டா வந்துடுவீங்களா’

கம்பீரக் குரலில் கேட்டார் அந்தப் பெண்மணி. ‘மிருதுளா இவரு ஒங்க தாத்தா இல்ல’ என்றார்.

‘வாசல்ல இருக்கிற நாய் கூட கண்டுபிடிக்கல ஆள் மாறி இருக்குன்னு பாருங்க அத்தை கண்டுபிடிச்சுட்டாங்க’ என்றார் சபாரி அணிந்தவர். ‘மாப்ள’ என்று அதட்டினார் அந்தப் பெண்மணி.

‘சார் நீங்க இண்டஸ்ட்ரியலிஸ்ட் சந்திர காந்த் இல்லையா?’ ஏமாற்றம் தொனிக்க கேட்டாள் மிருதுளா. நின்று கொண்டு இருந்த நரை முடி நபர் பேசினார்

‘மேம் என் பேரு ரவி ராஜன் கோயம்புத்தூர் ல இருக்குற எழுத்தாளன். தினத் தென்றல் மீடியா ஹவுஸ், ஓடிடி தொடங்க போறாங்க.. கன்டென்ட்க்கு ஆலோசகரா என்னைப் போட்டு இருக்காங்க இன்னிக்கு முதல் கூட்டம் அதுக்கு தான் வந்தேன். யாராவது கம்பெனியில் இருந்து அட்டை வெச்சிக்கிட்டு நிக்கறாங்களான்னு பார்த்தப்ப இந்த பொண்ணு சாரி இந்த மேம் என்னை அழைச்சிட்டு வந்தாங்க. இவங்களோட அன்புல நான் திக்குமுக்காடிப் போய்ட்டேன். அதில் இருந்து வெளியே வர மனசு இல்லை… எனக்கு பேரன் பேத்தி இல்லை அரசியல்ல இல்லாதவனுக்கு நாடகத்தில் அமைச்சர் வேஷம் கிடைச்சா, ஒரு வித மகிழ்ச்சி கிடைக்கும் இல்ல அது மாதிரி தான் கொஞ்ச நேரம் இவங்க கொடுத்த தாத்தா ஸ்தானத்தை ஏத்துகிட்டேன்… எனக்கு வேற உள்நோக்கம் எதுவும் இல்லை. இதையே அட்வான்டேஜ் எடுத்துகிட்டு ஆள் மாறாட்டம் தில்லுமுல்லு எதுவும் நான் பண்ண மாட்டேன். சார் அடுத்த விமானத்தில் வருவாரா இருக்கும் அவர் கிட்ட பேசி பாருங்க நான் வரேன் ‘ என்று பேசி விட்டு கையில் பயணப்பெட்டி உடன் வாசலை நோக்கித் திரும்பினார் ரவி ராஜன்.

‘நில்லுங்க’ என்றார் அந்த பேரிளம் பெண்மணி . அவர் திரும்பினார். ‘உட்காருங்க’ அவர் அருகில் இருந்த இருக்கையில் அமர்ந்தார். ‘மிருதுளா சாருக்கு டீ கொடு’ என்றார் அந்தப் பெண்மணி.

பணியாளர் ஒருவர் தயார் ஆக வைத்து இருந்த தேநீர் கோப்பை உள்ள தட்டை வாங்கிக் கொண்ட மிருதுளா ரவி ராஜனிடம் கொடுத்தாள். தேநீரைப் பருகிய ரவி ராஜன் வரேன் மேம் என்று விடை பெற்றார். மிருதுளா, அன்புடன் அவரது தோள்களைத் தொட்டாள். ‘வாங்க சார்’ என்ற பெண்மணி ‘மாப்ள அவரை அந்த மீடியா கம்பெனில விட்டு வாங்க’ என்றார்.

ரவி ராஜன் வாசலை நோக்கி நடந்தார். சபாரி நபர் அவரைப் பின்தொடர்ந்தார். ரவி ராஜன் காரில் ஏறி அமர்ந்தார். வாசலில் நின்றபடி அவரைப் பார்த்து கைகளை அசைத்தாள் மிருதுளா.

– என்னைப் போல் ஒருவன் – உருவ ஒற்றுமையை அடிப்படையாகக் கொண்ட 10 கதைகள்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *