(1962ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
மீனா குழாயடியில் முகம் கழுவிக் கொண்டிருந்தாள். சமையன்றை யில் அண்ணன் ராமநாதன் தன் தாயிடம் சொல்லிக் கொண்டிருப்பது அவள் செவியில் தெளிவாக விழுந்தது, சோப்பு அரைவைக் கழுவுவது போல் அவள் நிறைய நீரை வாரி வாரி இறைத்துக் கோண்டாள். குபுகுபுவென்று பொங்கி வரும் கண்ணீர் நிற்க மறுத்தது.
“மீனாவிடம் கண்டிப்பாகச் சொல்லி விடு, அம்மா? ராஜாவை நாம் வைத்துக் கொள்ள முடியாது இனிமேல்” என்று எவ்வளவு தீர்மானமாகக் கூறி விட்டான் அண்ணன்!.
ராஜா மீனாவின் ஒரே மகன் அது மட்டுமா?, அவள் உயிரோடிருப்பதற்கு அவனே கொழுகொம்பு. அவன் முன்று வயதுக் குழந்தையாக இருந்தபோது மீனா தன் கணவனை இழந்து விட்டாள். அரியலூர் ரயில் விபத்து அவள் மண வாழ்க்கையை வாயில் போட்டுக் கொண்டு விட்டது. மருதையாறு அவன் உடலை கூட அவளுக்குத் தரவில்லை. மீனுவை உடனே படிக்க வைத்து வேலைக்கு அனுப்பி விட்டார்கள். குழந்தை முதலில் அவன் பெற்றோரிடம் வளர்ந்து வந்தான். இன்று அவனுக்கு ஒன்பது வயதாகி விட்டது. கவலையின்றி இருக்கவேண்டிய நிலைமைதான் மீனாவுக்கு, ஆனால் விதியின் பயனோ, என்னதான் காரணமோ ராஜாவின் சுபாவம் சரியான திக்கில் வளரவில்லையே! இன்று அண்ணன் கடைசித் தீர்ப்பு தந்து விட்டான், ‘மகனை எங்கு அழைத்துச் செல்வது’ தான் இருப்பதோ ஒரு மாணவிகளின் விடுதி, அங்கு அவனை அழைத்துச் செல்ல வழியில்லை.
மீனா முகத்தைக் கழுவிக் கொண்டு கொடியில் தொங்கும் ஒரு துண்டில் துடைத்துக் கொண்டிருந்தாள். உள்ளத்து வேதனையெல்லாம் அதில் துடைத்து விட முடியுமா? அப்படியே முகத்தைத் திறக்காமல் தான் மூடிக் கொண்டிருக்க முடியுமா? அண்ணன் அருகில் நிற்பதை உணர்ந்து அவள் மெல்ல நிமிர்ந்து பார்த்தாள்.
“ஏதாவது ஏற்பாடு செய்ய வேண்டியதுதான், மீனா! அவரவர்கள் பலுவை அவரவர்கள்தான் சுமக்க வேண்டும். அதைச் சமாளிக்க அவரவர்கள் வசதி தேட வேண்டியதுதான். என்னால் முடிந்ததைச் செய்து விட்டேன் இனி அவன் இங்கு இருந்தால் எனக்கு அவமானம்தான் ஏற்படும் போலிருக்கிறது”.
மீனாவுக்கு மேலே பேச முடியவில்லை. துக்கம் அவள் நெஞ்சை அடைத்தது. இப்படி ஒரு மகன் வாய்த்திருக்கிறானே என்று மனம் குமுறியது. அவனை அழைத்துச் செல்ல வழியில்லையே என்று வேதனை துளைத்தது. தன் கணவன் ஒருவன் இல்லாததனாலல்லவா இப்படி யெல்லாம் நேருகிறது என்று ஏக்கம் வாட்டியது. தன்னை மீறி இனத் தெரியாத கோபம் அவளை ஆட்கொண்டது.
மீனா தனியே ஓரிடத்தில் போய் அமர்ந்து கொண்டாள். வீணே சண்டை யிட்டு, குறை கூறிப் பயனில்லை என்று தோன்றி விட்டது அவளுக்கு. ராஜா ஐந்து வயது வரை தாத்தா, பாட்டியிடம் தான் வளர்ந்தான். பிறகுதான் மீனாவின் தந்தை வாயுத்தொந்தரவில் ஒரு பக்கம் அடித்துப் படுக்கையில் கிடந்து விட்டார். அப்பொழுது தன் புக்ககத்தினரிடம் வீட்டிருந்தாள். ஒரு வருடம் அங்கே இருந்தான். அவனை அவர்கள் திரும்ப இவளிடமே அனுப்பி வீட்டார்கள்.
“அவர்களுடைய ரத்தக் கலப்பான மனிதன் உயிரோடில்லை. குழந்தையிடம் எப்படி ஒன்றிவிடுவார்கள்” என்று பலரும் சொன்னார்கள், மீனா மீண்டும் பிறந்தகத்துக்கு அவனை அழைத்து வந்தாள். இங்கு வந்து மூன்று வருடங் களாகி வீட்டன. தனியே யோசித்து மீனாவின் மூளையே சோர்ந்து விட்டது போல் தோன்றியது. அன்று அவள் கிளம்பித்தான் ஆக வேண்டும். அவள் தன் போக்கில் எல்லாவற்றையும் எடுத்து வைத்துக் கொண்டிருந்தாள். அப்பொழுது ‘டங்’கென்று ஓசை கேட்டது. திரும்பினால் அவள், ராஜா ‘திரு திரு’வென்று விழித்துக் கொண்டு நின்றிருந்தான். மீனாவின் கடிகாரம் தரைவில் விழுந்து கிடந்தது. நிமிஷ முள் சுழன்று ஓர் ஓரமாகப் புகுந்து விட்டது. கண்ணாடி பெயர்த்து தனியே வந்துவிட்டது. அவன் கடிகாரத்தைக் கையில் எடுத்தபோது ராஜா மெல்ல நழுவுவதைப் பார்த்தாள். இடக் கையால் அவனைப் பிடித்தாள். அவன் முகத்தை உற்று நோக்கினாள். மகனின் முகத்தில் இப்போழுது இளக்கமே இல்லை. அவன் கண்களிலே ஒருவித குரூரம் நிழலாடியது. உதட்டில் உதாசினம் தோற்றமளித்தது.
“ராஜா, நீ என்னோடு வந்து விடடா. உன் துணிமணி யெல்லாம் கொண்டு வா, எடுத்து வைத்து விடலாம்” என்றாள் மீனா. கடிகாரத்தை அப்படியே பெட்டியில் போட்டாள்.
“ஏன்தான் இப்படிச் செய்கிறாயோ?” என்று அறை வேண்டுமேன்று தான் தோன்றியது மீனாவுக்கு. ஆனால் தன்னையும் அறியாமல் எதனாலோ சாந்தமாகப் பேசி விட்டாள். ராஜாவும் அவளையே நோக்கி விட்டு, “சரி” என்று கூறி வெளியில் போனான்.
ராஜா தன் பெட்டியை எடுத்துக் கொண்டு வந்தான். மீனா அவனோடு கூட அமர்ந்து பெட்டியைத் திறந்தாள். துணிமணி அப்படியே அடைத்து வைத்திருந்தான், மீனு மடித்து மடித்து அடுக்க ஆரம்பித்தாள். பெட்டியின் அடியில் என்னென்ளவோ சாமான்கள் கிடந்தன. மூடியில்லாத பேனா, சைக்கிளின் சிறு மறை ஒன்று, சீவப்படாத பல நிறப் பென்சில்கள், பித்தான்கள், பணப்பை ஒன்று, ஒரு பேனாக்கத்தி…
‘இவை அனைத்தையும் எங்கிருந்து எடுத்தானோ தெரியவில்லையே ஆண்டவனே!’ என்று நினைத்த வண்ணம் அவள் அவைகளைப் பெட்டியின் அடியில் எடுத்து வைத்தாள்.
தான் வேலை செய்யும் இடத்துக்குச் சென்ற வுடனேயே அவனை ஒரு பள்ளிக்கூடத்தில் சேர்த்து விட்டாள். அதோடு சேர்ந்து மாணவர் விடுதியும் இருந்தது. மகனை அங்கு விட்டுவிட்டு வரும் போது மீனாவுக்கு நெஞ்சை அடைத்தது. இதுவரை அவனை விட்டுப் பிரியும் போதெல்லாம் தன் சொந்த மனிதர்களிடம் விட்டு விட்டு வருவாள். இப்பொழுது தனிமையில் வேற்றிடத்தில் விட்டு வர அவள் மனம் துடித்தது. அவனைச் சேர்த்து அணைத்துக் கொண்டாள். அவன் விலகி அவளோடு அணையாமல் விரைத்துக் கொண்டு இரு கைகளாலும் அவளைத் தள்ளியபடி இருந்தான். மீனாவுக்கு இந்தச் செய்கை சுருக்கென்றது, அவள் உள்ளுணர்வு அவளையே குற்றஞ் சாட்டியது. இதுவரை விடுமுறை நாட்களில் தன் மகனிடம் அவள் நெருங்கியதே கிடையாது. அதிகமாக எடுத்துக் கொஞ்சி, உறவாடி விட்டால் பிறகு ஏங்கி விடுவானே என்று பயந்து தன் மனத்தை அடக்கிக் கொண்டு வந்து விடுவாள், இப்பொழுது அவன் விலகுவதில் என்ன ஆச்சரியம் இருக்கிறது? தன் கண்களைத் துடைத்துக் கொண்டு, “ராஜா! நன்றாகப் படி, நல்லபையன் என்று பெயர் எடுக்கப் பார், நீ முன்னுக்கு வந்து பெரியவனாக வேண்டும் என்றுதான் நான் கஷ்டப்பட்டு வேலை செய்கிறேன்…என்ன?” என்றாள் மீனா.
அவள் பேச்சை அவன் காதில் வாங்கியதாகவே காட்டவில்லை. “நீ சீக்கிரம் போயேன்” என்று எரிச்சலுடன் கூறி விட்டான் ராஜா.
மீனா தலைமை உபாத்தியாயரிடம் சொல்லி விட்டுத் தன்னிருப்பிடம் திரும்பிவிட்டாள்.
ராஜா படித்துக் கொண்டு வந்தான். ஆனால் அவனைப் பற்றிப் புகார்கள் வந்த வண்ணம் இருந்தன, மீனா போய் அவ்வப்பொழுது ஆசுவாசம் சொல்லி விட்டு வருவாள்.
“அவன், தான் படிக்காததோடு, இல்லை, மற்றப் பிள்ளைகளையும் துஷ்டத்தனமான செயல்களில் தூண்டிவிடுகிறான். பெரியவர்களிடம் மரியாதை இல்லை. இரண்டொரு சமயம் திருடக் கூடச்செய்தான். நாங்கள் எவ்வளவு தான் கண்டிக்க முடியும்! இவனால் விடுதியே கெட்டு விடும் போல் இருக்கிறது” என்று தலைமை உபாத்தியாயர் கண்டிப்பாகச் சொன்னார்.
மீனாவின் கண்களில் நீர் சுரத்தது. கைக் குட்டையால் அவள் கண்ணீரைத் துடைத்துக்கொண்டாள். பிறகு விளனயத்தோடு தலைவரை நோக்கி, “உங்களுக்குப் புண்ணியமுண்டு, பெற்றோருக்கு அடுத்த ஆசிரியர்தானே? அவனுக்குத் தகப்பனாரின் ஆதரவு கொடுத்து வைக்கவில்லை., இனி நீங்கள்தான் அவனை உங்கள் மகன் போல் நினைத்துக் கண்டித்துச் சரி செய்ய வேண்டும்” என்றாள்.
தலைவர் சிரித்தார். தலைவரின் அறை வாசலில் யாரோ நிற்பது தெரிந்து அவள் தன் குரலைத் தாழ்த்திக் கொண்டாள். வழியில் நின்றிருந்த மனிதரும் நகர்ந்து இடம் விட்டார். மீனா தன் சிந்தனையில் சிக்கியவளாய் மகனைத் தேடிச் சென்றாள். அவன் விளையாட்டு மைதானத்தில் வேடிக்கை பார்த்துக் கொண்டு தனித்து நின்றான். “ராஜா” என்று அருகில் போய் அழைத்தபிறகு திரும்பி வந்தான்.
”நீ ஏன்டா விளையாடவில்லை?”
“உனக்கென்ன அதைப் பற்றி!” என்று எடுத்த எடுப்பில் திருப்பிக் கேட்டான் அவன்.
”என்னைத் தவிர வேறு யாருக்கடா உள்னைப் பற்றிக் கவலை? மறுபடியும் அப்படிப் பேசினால் உதை பிய்த்து விடுவேன். நினைவிருக்கட்டும்!” என்று கோபித்தாள் மீனா.
அலட்சியமாகச் சிரித்தான் அவன்.
அன்பு, அன்பால் மனிதர்கள் – இரண்டும் புரியாதவனாக இருக்கிறான் என்பதை ஊகிக்க முடிந்தது. அதனால் மீண்டும் மெதுவாக, “உனக்கு ஏதாவது சாமான்கள் வேண்டுமா? கிரிக்கெட் மட்டையா, ஹாக்கிக் குச்சியா, இல்லை பாட்மிண்டன் மட்டையா…?” என்று கேட்டாள் தாயார்.
“நீ உடனே வாங்கித் தந்து விடுவாயாக்கும்!”
“ஏன் தராமல்? வேறு யாருக்கடா வாங்கித் தரப் போகிறேன்? இன்னமும் இரண்டு வருஷங்கள் பொறுத்தால், நீயும் நானும் தனியாக ஒரு வீட்டில் இருக்கலாமே? இப்படி வந்து வந்து பார்க்க வேண்டாமே?”
“ஏன் வளவள வென்று பேசுகிறாய்? நீ போயேன், எல்லாரும் பார்த்துக் கொண்டே யிருப்பார்கள்!”
“பார்க்கட்டுமேடா. பெற்ற அம்மாவுடன் பேசுவதில் என்ன அவமானமிருக்கிறது? உன் மாமா பிள்ளைகள் அம்மாவிடம் கழுத்தைக் கட்டிக் கொண்டு கொஞ்சிப் பேசவில்லையா?”
”ஐயோ! நீ போயேன்!” என்று அலறிய பையன், அவள் பேச்சைக் கேட்கப் பிடிக்காதவன் போல் காதைப் பொத்திக் கொண்டான், மீனா அவன் முதுகை வருடினாள். அவன் ஆத்திரத்தோடு அவள் கையை உதறித் தள்ளி வீட்டு அப்பால் நகர்ந்தான்.
“சரி, நான் போய் வருகிறேனடா. ராஜா! நீ நல்ல பிள்ளையாக இரு!” என்றாள்.
மகன் ஒரு விநாடி தாயையே பார்த்தான். பிறகு குறும்பாகச் சிரித்துக் கொண்டு,”எனக்கு ஒரு வெள்ளிப் பேனா வாங்கித் தாயேன்” என்றான்.
சம்பத்தமற்ற அவன் பேச்சு அவளைக் கலக்கியது, ”ஆகட்டும், பார்க்கிறேன்” என்று கூறி விட்டு அவள் தன் வீட்டை நோக்கி நடந்தாள்.
ராஜாவின் மனம் இனம் தெரியாமல் கரடு முரடாகி விட்டது என்பதை அவள் அறிவாள், அவனைத் தன்னிடமே வைத்துக் கொண்டிருந்தால் இப்படி நேர்ந்திராது என்று அவளுக்குத் தோன்றியது. தன் குழந்தைகளை ஆதரவோடு பேணி அதிகாரத்தோடு அதட்டும் அண்ணன் இந்தப் பையனை மட்டும் ஏன் இப்படி விட வேண்டும்? என்னவோ மனசுக்குள் ஒரு வித ஐயம் தோன்றி விடுகிறது போலும்.
அன்று இரவெல்லால் மீனாவுக்கு உறக்கமே இல்லை, அந்த ஒரு வாரமும் மெல்லப் பல்லைக் கடித்துக் கொண்டு தள்ளினாள். மகன் கேட்ட வெள்ளிப் பேனா அவளுக்குக் கிடைக்கவில்லை. ஆனால் வெள்ளி போல் முலாம் போட்டது ஒன்று கிடைத்தது. அதை வாங்கிக் கொண்டு போனாள்.
தலைமை உபாத்தியாரைக் காணும் போதே அவள் உள்ளம் ‘திக் திக்’ என்று அடித்துக் கொண்டது. என்ன புதிய புகார் வருமோ என்று பயந்தவண்ணம் வராத சிரிப்பை வரவழைத்துக் கொண்டு அவர் எதிரே நின்றாள்.
“வாருங்கள் அம்மா!” என்று அவர் அழைத்த மாதிரியில் மீனாவுக்குச் சிறிது தெம்பு பிறந்தது.
“உங்கள் மகனுக்கு ஓர் ஏற்பாடாகியிருக்கிறது. எங்கள் பள்ளியில் ஒருவர் இருக்கிறர். நிரம்பப் படித்தவர். ஆனால் எப்பொழுதோ மூளைக் கோளாறு ஏற்பட்டு நினைவுச் சக்தி போய் விட்டது. அதனால் அவருக்கு ஆசிரியர் வேலையைக் கொடுக்க முடியவில்லை. வெறுமனே மேற்பார்வை யாளராக இருந்து வருகிறார். அவர் அன்று நீங்கள் வந்த போது வாசற்படியில் நின்றிருந்தார். நீங்கள் சொன்னதெல்லாம் கேட்டிருக்கிறார், உங்கள் மகனை அவர் பார்த்துக்கொள்கிறாராம்.
மீனா கையைக் குவித்துக் கடவுளுக்கு நன்றி செலுத்தினாள்..
“ஆனால் ஒரு நிபந்தனை. அவர் உங்களை ஒரு மாதம் இந்தப் பக்கம் வர வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறார். இன்று கூட நீங்கள் அவனைப் பார்க்காமல் போய் விடுங்கள்”
“இந்தப் பேனாவை அவனிடம் கொடுத்து விடுங்கள். நிஜ வெள்ளி கிடைக்கவில்லை. பிறகு வாங்கித் தருகிறேன் என்று சொல்லுங்கள்” என்று கூறி விட்டுப் போய் விட்டாள் மீனா.
ஒரு மாத காலம் தள்ளுவது அவளுக்கு மிகவும் கடினமாக இருந்தது. ஊரில் தன் பெற்றோரிடமும் அண்ணவிடமும் அவளுக்கு இருந்த கோபம் இப்பொழுது தணிந்து விட்டது. அவர்கள் நிலையில் அப்படித்தான் இருப்பார்கள் போலும் என்று தானே தெளிந்து கொண்டு விட்டாள்.
தீபாவளி நெருங்கிக்கொண்டிருந்தது. மீனா ராஜாவுக்காகத் துணிகள் வாங்கிச் சேர்த்தாள். பட்டாசு கட்டுகளை வாங்கினாள். பிறகு அவனையே அழைத்துச் செல்ல வேண்டும் என்று ஓர் ஆசை தோன்றவும் வாங்க வேண்டியதை நிறுத்திக் கொண்டாள். தலைமை உபாத்தியாயரைக் காணச் சென்றாள்.
“உங்கள் பொறுமையை நான் மிகவும் மெச்சுகிறேன், ஒரு மாத காலம் எப்படியோ தள்வி விட்டீர்களே ?”- என்று புகழ்ந்தார் தலைமை ஆசிரியர்.
“என் நன்மைக்குத்தானே? நீங்கள் இவ்வளவு சிரமம் எடுக்கும்போது… ராஜா எப்படியிருக்கிறான்?”
“பார்க்கிறீர்களா?” என்று கேட்டு, மணியை அடித்து ஆளிடம் சொல்லி அனுப்பினர் அவர்.
ராஜா வந்தான். வந்தவுடனே மீநாவினால் தன் கண்களையே நம்ப முடியவில்லை. அவன் உருவத்திலே ஏதோ மாறுதல் ஏற்பட்டு விட்டிருந்தது. இன்னது என்று அவளால் கண்டுகொள்ள முடியவில்லை. ஆசிரியரை வணங்கும்போதும், தன்னைக் காணும் போதும் ஏதோ ஒரு குணம் ஏற்பட்டிருப்பதாகத் தோன்றியது.
“உன் அம்மா உன்னைக் கடைக்கு அழைத்துப் போக வந்திருக்கிறர்கள். போய் வருகிறாயா?” என்று கேட்டார் ஆசிரியர்.
“நான் கணக்குப் போட வேண்டும். சார்!” என்று சொன்னவன், தலையைக் கவிழ்த்துக் கொண்டான்.
“ஏன்? பள்ளிக்கூடம்தான் முடிந்து விட்டதே?”
“கணக்குப் பரீட்சையில் நான் தவறி விட்டேன், அதனால் பள்ளி முடித்த பிறகும் வகுப்பில் இருந்து கணக்குப் போடும்படி கணக்குமாஸ்டர் சொன்னார்!”
மீனாவைப் பார்த்தார் ஆசிரியர். அவள், “சரி அப்படியானால் நாளை வருகிறேன்” என்றாள்.
“வேண்டாம், நான் கணக்குமாஸ்டரிடம் சொல்கிறேன். நீங்கள் அழைத்துச் செல்லுங்கள்.”
“வேண்டாம் சார். நாளைக்கே போகிறேன்” என்றான் ராஜா.
மீனா திரும்பி விட்டாள். தன்னேடு அவன் வரவில்லையே என்று ஏமாற்றம் இருந்தாலும் அவன் கூறிய பதில் அவளுக்கு ஓரளவு ஆறுதலைத் தந்தது. மறு நாள் மாலை மீண்டும் மகனைக் காண ஆவலோடு ஊசி மேல் இருப்பது போல் நிம்மதியின்றி ஒவ்வொரு விநாடியையும் பிடித்துத் தள்ளினாள் தாயார்.
அன்று மாலை அவள் கிளம்பத் தயாராக இருந்த போது ராஜாவே அவளிடத்துக்கு வந்து விட்டான். “எப்படிடா வந்தாய்? உன் தலைமை ஆசிரியருக்குத் தெரியுமா?” என்று கவலையோடு கேட்டாள் மீனா.
சிரித்தான் ராஜா, ”சர்மா சார்தான் என்னை இங்கு கொண்டு விட்டார்,”
“சர்மா சாரா?”
“மேற்பார்வையாளர்….”
”அவரை நான் பார்க்கவேண்டுமே?” என்று ஆவலோடு கேட்டாள் மீனா.
“அவர் யாருடனும் பேச மாட்டார். அப்பொழுதே போய் விட்டார்”
மீனா மேலே பேசாமல் கிளம்பத் தயாரானாள், அவனுக்காக வாங்கி வைத்திருந்த துணிகளை எடுத்துக் கொண்டு கிளம்பினாள். தையல் கடையில் அளவு கொடுத்து விட்டு மற்றக் கடைகளுக்குச் சென்றாள். பட்டாசு வகைகளைத் தானே பொறுக்கிக் கொண்டான் ராஜா.
“இன்னமும் ஏதாவது வேண்டுமா? கிரிக்கெட் பாட்…”
”வேண்டாம், எனக்கு வேறு ஒன்று வேண்டும், வாங்கித் தர உனக்குத் தெரியாதே?”
“என்னது அது?”
“சின்ன உளி” ராஜா நிமிர்ந்து அவளை நோக்கினான். மீனா அப்பொழுது தான் பையனின் முகத்தை நோக்கினாள். அவன் கன்னத்தில் மூன்று விரல்கள் படித்து சிவத்திருந்தது.
“ராஜா! இதென்னடா?”
“ஒன்றுமில்லையே” என்றான் ராஜா.
“உன்னை சர்மா சார் அடித்தாரா?”
”இல்லை இல்லவே இல்லை. நான் கதவில் இடித்துக் கொண்டு விட்டேன்”
“ராஜா! சரிமா சாருக்கு ஒரு சமயம் மூளைக் கோளாறு இருந்ததாம். அவரிடம் ஜாக்கிரதையாகப் பழக வேண்டும். அப்பா!” என்றாள் மீனா.
“அவருக்கொன்றும் பைத்தியமில்லை” என்று சொல்லும் போது கோபத்தினால் ராஜாவின் முகம் சிவந்து விட்டது. மீனா அவனை முதுகில் தடவிக் கொடுத்தாள். அவன் அவளை உதறித் தள்ளி வீட்டு நகர்ந்தான்.
“ராஜா! எனக்கு உளியெல்லாம் வாங்கத் தெரியாது. அதனால் சர்மா சாரையே வாங்கித் தரச் சொல், நான் பணம் தந்து விடுகிறேன்.”
“அவர் என்னிடம் பணம் வாங்கிக் கொள்ள மாட்டார்.”
“பின்னே, நீயே வாங்கக் கற்றுக் கொள், இல்லாவிட்டால் அவருக்குப் பணிவிடைகள் செய்தாவது..”
ராஜா ஈட்டென்று தன் தாயின் கையைப் பற்றினான். மீனாவுக்கு உடலே பதறியது. என்றோ அவன் குழந்தையாக இருந்த சமயத்துக்குப் பிறகு இன்றே அவன் தானாக அவளிடம் அணுகியது. அதை அனுபவிக்கக் கூடத் தெரியாது திணறினாள் அவள்.
“சரி! நீ சொல்வதுதான் சரியான வழி” என்றான் அவன், அவன் முகம் பளிச்சிட்டது. கண்கள் ஒளிர்ந்தன.
மீனா அவனை மீண்டும் பள்ளியில் கொண்டு சேர்த்தாள், வரும் முன் அவளால் கட்டுப் படுத்த முடியாமல் அவள் இரு கன்னங்களையும் தன் கைகளில் அள்ளி ஒரு முறை உச்சி மோந்து விட்டுத் திரும்பினாள். ராஜா திமிரவில்லை, ”ஜாக்கிரதையடா” என்று எச்சரித்தாள் தாயார், நெஞ்சடைக்க.
”பயப்படாதே” என்றான் மகன்,
மீனா திரும்பிப் பாராமல் வேகமாக வெளியேறி விட்டாள். அவள் மகன் அவளையே பார்த்துக் கொண்டு நின்றான் என்பது அவளுக்குத் தெரியாது.
மீனாவின் மூலையில் சதா மகனின் கவலை தான். பைத்தியக்கார மனிதனிடம் ஒப்படைத்து விட்டோமே. குழந்தையை என்ன செய்து விடுவாரோ? அவசர புத்தியில் செய்த காரியமாக முடியுமா? மற்றப்படி பையன் சிறிது முன்னேறியிருக்கிறானே? சிந்தித்துச் சிந்தித்து அவள் உள்ளமே மரத்துவிட்டது. அவள் தன்னை அன்றாடக் கடமைகளில் மூழ்கடித்துக் கொண்டாள். ஆனால் தன் குழப்பத்தை யெல்லாம் ஊருக்கு எழுத மனமில்லை அவளுக்கு. அவரவர் பளுவை அவரவர்களே தாங்க வேண்டியதுதான் என்று தமையன் சொன்ன பேச்சு அவள் மனத்தில் நின்று விட்டது.
“கடவுளே! எனக்கு மனவுறுதியைக் கொடு. என் குழந்தையை நீயே காப்பாற்ற வேண்டும்” என்று பிரார்த்தனை செய்த வண்ணம் இருந்தாள் அவள்.
தீபாவளிக்கு ஊருக்கு வரும்படி அவளுக்குக் கடிதம் வந்தது, ராஜா வந்தால் அழைத்துச் செல்லலாம் என்று அவள் அவன் பள்ளிக்கூடத்துக்கு விரைந்தாள், தலைமை ஆரியரின் அறையில் யாரோ பேசுவது கேட்டு வெளியே தயங்கி நின்றாள் அவள்.
“சர்மா! நீங்கள் இந்தக் கடிதங்களுக் கெல்லாம் பதில் எழுதி வாருங்கள். நான் கையெழுத்துப் போடுகிறேன்” என்று கூறுவது கேட்டது. அந்தச் சர்மாவைப் பார்க்க வேண்டும் என்று அவள் ஆவலோடு இருந்தாள். ஆனால் அவர் ஒரு துண்டினால் முகத்தைத் துடைப்பது போல் முகத்தை மறைத்துக் கொண்டு அவளைத் தாண்டிச் சென்று விட்டார் வேகமாக. அவர் செல்லும் போது அவர் முதுகுப் புறத்தைப் பார்த்தாள். சிறிது நொண்டி நடந்தார் அவர். தனக்கு மிகவும் நெருங்கிய உறவினரைக் காண்பதுபோல் ஓர் உணச்ச்சிப் பெருக்கு அவள் உடலில் பரவியது. ஆயின் என்ன செய்வது? அந்த மனிதர் விசித்திரமான மனமுடையவராக இருக்கிறாரே!
தலைமை ஆசிரியர் மீனாவின் வேண்டுகோளைக் கேட்டுக் கொண்டார், ‘ஆகட்டும் அம்மா! நான் அனுப்பப் பார்க்கிறேன்” என்றார்.
மீனா ராஜாவைப் பார்க்காமலே திரும்பி விட்டாள்.
நாளை தீபாவளி என்றிருக்க மீளு மீண்டும் பள்ளிக்கூடம் போனாள். தலைமை யாசிரியர் எங்கோ வெளியே சென்றிருந்தார், அதனால் அவள் அங்கேயே காத்துக் கொண்டிருந்தாள், பொழுதுபோகாமல் ஐன்னல் வழியே எட்டிப் பார்த்த போது ராஜா விளையாடிக் கொண்டிருப்பது தெரிந்தது, அவன் இருக்குமிடத்தை தேடிச் சென்றாள் அவள், தோட்டத்தில் ஒதுக்குப் பூறமாக ஒரு கொட்டகையில் தச்சு வேலை நடந்து கொண்டிருந்தது. மீனா அங்கு சென்றாள். அப்பொழுது தான் ஒரு வெடிக்குத் தீ வைத்து வீட்டு ராஜா ஓடி வந்து கொண்டிருந்தான். அவனுடைய விளையாட்டு வேகத்தில் கையிலிருந்த நெருப்புக் குச்சியைப் பின் பக்கமாகப் போட்டு விட்டுப் பின்னுக்காகவே நடந்து வந்தான். நெருப்புக் குச்சி மரச் சிராய்த் துகள்கள் மீது விழுந்ததை அவன் பார்க்கவில்லை. அவனது அந்தச் செய்கையினால் தீ விபத்து ஏற்பட்டால்? அதற்காகத் தன் மகன் குற்றவாளியாகித் தலை குனிந்து தண்டனையை அனுபவிக்க வேண்டுமே என்பதை எண்ணியபோது தாயுள்ளம் தவித்தது. மீனா விரைந்தோடினாள்.
“ராஜா, நெருப்பு” என்று அவள் கத்திக் கொண்டு ஒரு நெருப்பை அணைக்க விரைந்தாள், ஆனால் அதற்குள் அங்கு வைக்கப்பட்டிருந்த வெடி எழும்பி வெடித்த வேகத்தில் மீனாவின் முகத்தில் அடித்து விட்டது.
“ஐயோ! அம்மா!” என்று கண்ணைப் பிடித்துக் கொண்டு அவறி விழுந்து விட்டாள் மீனா. பள்ளிக்கூடத்தின் பல முலைகளினின்றும் ஆட்கள் ஓடி வந்தனர். அவளை உடனே சிகிச்சை இல்லத்துக்கு அழைத்துச் சென்றனர்.
ஆஸ்பத்திரியில் கண்ணில் கட்டுடன் படுத்துக் கிடந்தாள் மீனா. அதிர்ச்சியில் அவளுக்கு நினைவு தவறி, காய்ச்சல் கண்டு விட்டது. மூன்று நாட்கள் விடாமல் அடித்த பிறகு அவள் மெதுவாகத் தெளிவு பெற்றாள். கண்ணைத் திறந்து பார்த்த போது அவள் அண்ணன் அருகில் இருந்தான், “அண்ணா, ராஜாவுக்கு ஒன்றும் அடியில்லையே? நெருப்பு அணைந்ததா?!” என்று கேட்டாள் மீனா.
”அம்மா! இதோ நான் இருக்கிறேன்” என்று ராஜாவின் குரல் கேட்டதும்அவள் உடலெல்லாம் புல்லரித்தது, அவன் வாய் நிறைய ”அம்மா!'” என்று அழைத்தது அவளை எங்கோ எடுத்துச் சென்றது.
“மீனா, நீ இன்னமும் ஒரு மாதம் இங்கு இருக்க வேண்டியிருக்கும். நான் போய் அம்மாவை ஒத்தாசைக்கு அனுப்புகிறேன்” என்றார் அண்ணா.
”அண்ணா, உங்களுக்கெல்லாம் என்னால் தீபாவளிப் பண்டிகை கெட்டு விட்டதோ?” என்று கேட்டாள் மீனா.
“அசடு, பண்டிகைக்கு என்ன? என்றைக்குக் கொண்டாடினாலும் போயிற்று. உடம்பு சுகமாகட்டும்”
”அண்ணா! அம்மாவையோ வேறு யாரையுமோ அனுப்ப வேண்டாம். நானே குணமான பிறகு ஊருக்கு வருகிறேன்” என்றாள் மீனா.
“ஆமாம், மாமா, நான் அம்மாவைப் பார்த்துக் கொள்கிறேன்” என்றான் ராஜா உறுதியாக.
ஒரு வினாடி மருமகனின் முகத்தை நோக்கினார் மாமா, பிறகு தெளிந்து “செய்யடா ராஜாப் பயலே!” என்று அவன் முதுகில் தட்டிக் கொடுத்தார்.
”அண்ணா, ராஜாவைப் விசாரித்தாயா?” என்று மீனா மெல்லக் கேட்டாள்.
அண்ணலின் கண்களில் நீர் பளித்தது. “மீனா! நீ உன் மகனுக்குப் புது வாழ்வளித்து விட்டாய்”
மீனா நிம்மதியுடன் கண்களை நித்திரையில் ஆழ்ந்தாள். மீண்டும் விழிக்கும் போது ராஜா அருகில் அமர்த்திருந்தான், “ராஜா! நீ பள்ளிக்கூடம் போகவில்லை?” என்று கேட்டாள் அன்னை.
“போய் விட்டுத்தான் வந்தேன்.”
“தீபாவளிச் சட்டையைப் போட்டுக் கொண்டாயா?”
”கடையிலிருந்து வாங்கவில்லை…அம்மா, சர்மா சார் உன்னைப் பார்க்க வந்திருக்கிறார், ஹெட்மாஸ்டருங்கூட இருக்கிறார்…”
”வரச் சொல்”
ராஜா அவர்களை அழைந்து வரக் கிளம்பினான்.
தலைமை ஆசிரியர் தான் அவள் அருகில் வந்து அமர்ந்தார், மீனாவின் கண்ணுக்காக அறையையே இருட்டாக்கி வைத்திருந்தார்கள். அதனால் மற்றவரை அவளுக்குச் சரியாகத் தெரியவில்லை.
”அம்மா. உங்களுக்கு அதிர்ச்சி தாங்கச் சக்தியிருக்கிறதா?” என்று எடுத்த எடுப்பிலேயே கேட்டார் தலைமை ஆசிரியர்.
”சொல்லுங்கள்; என் வாழ்வை நடத்த எனக்கு வளிமை இருக்கிறது.”
“உங்களுக்கு இனி ஒரு கண் தெரியாது என்கிறார்கள். நேரே விழியிலேயே வெடித்து விட்டது வெடி…”
”அங்கே பந்தல் ஒன்றும் பற்றிக் கொண்டு விடவில்லையே?? என்றுதான் மீனா கேள்வி கேட்டாள்.
“அங்கே விபத்து ஒன்றும் நேரவில்லை. நான் சொல்ல வந்திருப்பவையே பெரிய விஷயங்கள். ஒன்று உங்கள் கண், மற்றதும் உங்கள் வாழ்க்கையைப் பாதிக்கக் கூடியதே. இதோ சர்மா சார் வந்திருக்கிறார். அவரைத் தெரிகிறதா, பாருங்கள்?”
மீனா நிமிர்ந்து நோக்கப் பார்த்தாள். பருமனாக, முகம் விகாரமடைந்த ஒரு நொண்டி மனிதனையே அவள் கண்டாள்.
“அருகே வந்தால் பார்ப்பேன்” என்றாள் அவள் ஆயாசமாக.
”மீனா!” என்று அந்த உருவம் அருகில் வந்து குரல் கொடுத்தது.
அதைக் கேட்டதும் “ராஜா!” என்று உரக்கக் கூவி விட்டாள் மீனா.
ராஜா பக்கத்தில் வந்து அவளைப் பிடித்து அணைத்தும் கொண்டான்.
“அம்மா, இதோ இருக்கிறேனே? சர்மா சார் மிகவும் நல்லவர், அம்மா, பார்க்கத்தான் அவர் அப்படி யிருக்கிறார்” என்று அவன் காதோடு ஆசுவாசப் படுத்தினான் அவன்.
“அது இல்லையடா, மண்டு! அவர் அவர்தாண்டா உன்…அப்பா..அவரைக் கிட்டே வரச் சொல்லடா!” சர்மா சார் அருகில் வந்து கட்டிலில் அமர்ந்தார்.
“இதென்ன கோலம்! ஏன் இத்தனை நாட்கள்? நான் எதைக் கேட்பது என்றே தெரியவில்லையே?” என்று பேசத் தெரியாமல் தத்தளித்தாள் மீனா.
”நீ ஒன்றும் கேட்க வேண்டாம், மீனா, நான் செய்த அசட்டுத்தனத்தை நானே சொல்லி விடுகிறேன், அரியலூரில் அடிபட்ட போது எங்கிருந்தோ ஒரு திராவக ஜாடி உடைந்து என் உடம்பில் கொட்டி விட்டது. அதனால் முகம் கோரமாகி விட்டது. விபத்தினால் ஒருகாலும் நொண்டியாகி விட்டது. நினைவிழந்து கிடந்தேன் போலும், என்னைப் பற்றிய தகவல் யாருக்குமே தெரியவில்லை. ஒரு புதரில் எறியப்பட்ட நான் ஒரு கிராமத்தினரால் எடுத்துச் செல்லப் பட்டேன், அங்கே என் உடல் நிலை சரியானதும் பார்த்தால் எனக்கே அருவருப்பாக இருந்தது. இந்தக் கோலத்துடன் மீண்டும் தெரிந்த மனிதர்கள் மத்தியில் வரக் கூடாது என்று தோன்றி விட்டது. அதனால் மாற்றுப் பெயருடன் எங்கெங்கோ திரிந்து இங்கு வந்து சேர்ந்தேன், தலைமை ஆசிரியரிடமுள்ள நட்பினால் இங்கு தங்கி விட்டேன். நீ முதல் நாள் ராஜாவை அழைத்து வந்தபோதே பார்த்தேன். இங்கிருந்து போய்விட வேண்டும் என்று எண்ணிக் கொண்டே யிருந்தேன், பிறகுதான் ஒரு நாள் நீ ராஜாவுக்காகப் பேசியதைக் கேட்க நேர்ந்தது. தவற்றை உணர்ந்தேன். கடமையில் தவறி, குழந்தையை யும் உன்னையும் கைவிட்டதாக மனசாட்சி உறுத்தியது. அதனால் தான் ராஜாவைத் திருத்த மேற்கொண்டேன். அவனும் என்னிடம் ஒன்றிக் கொண்டான்.”
”அதுதான் பெரிய அதிசயமாக இருந்தது எனக்கு” என்றாள் மீனா.
“கடவுள் வைத்த உறவே இருக்கிறதே!” என்று வியந்தார் தலைமை ஆசிரியர்.
“அப்பொழுதும் நான் யார் என்று காட்டிக் கொள்ள நினைக்கவில்லை. இந்த விபத்தினால் உனக்குக் கண் போய் விட்டது என்றதும் மனம் கேட்கவில்லை. நீ ஏற்றுக் கொள்வாயானால் உஉன்னை நான் இனி பார்த்துக் கொள்கிறேன்” என்றார் சர்மா சார்.
“ராஜா, கேட்டாயாடா எல்லாம்?” என்றாள் மீனா, மகனை அணைத்தபடியே.
“அப்பா! இனி உங்களை நாங்கள் விடுவோமா?” என்றான் ராஜா.
“மீனா! உன்னைப் பெயர் வைத்து அழைக்கிறேன், நீ என் பெண் போல இனி என் வீட்டில் வந்து இருங்கள்” என்றார் தலைமையாசிரியர்.
“நீங்கள்தான் எங்கள் தெய்வம்!” என்றாள் மீனா கரங்குவித்து.
“கண் தெரியலியிலையே என்று நீ கவலைப்படக் கூடாது. என்ன?”
“ஒரு கண் போனால் என்ன? இப்பொழுது புதியதாக இரண்டு கண்களைப் பெற்று விட்டேனே? அவையிரண்டுமே நீங்கள் எனக்கு அளித்த ஆசிர்வாதப் பரிசுகள்தாமே” என்றாள் மீனா.
சர்மா கட்டிலில் அமர்ந்திருந்தபடியே முகத்தைத் துண்டால் மூடிக்கொண்டிருந்தார். அவர் உடல் குலுங்கியது. மீனா ஒரு கையை நீட்டி அவரைத் தொட்டாள். ராஜா தன் தகப்பனாரைத் தழுவிக் கொண்டான். தலைமையாசிரியரும் கண்களைத் துடைத்துக் கொண்டார்.
“அன்பு கலங்கும்போது நேருவது தான் புனிதக் கண்ணீர் – அது கங்கா ஸ்தானத்துக்கு ஒப்பானது” என்றார் தலைமையாசிரியர்.
“ராஜா!” என்று மீனா ழைத்தாள்.
“நான் முன் போல இல்லையம்மா. இப்பொழுதெல்லாம் நான்தான் வகுப்பிலும் விளையாட்டிலும் முதல்வன். சர்மா சார்… இல்லை. அப்பாதான் எனக்கு வழி காட்டினர். நேர்மையான செயல்களினால்தான் மனிதர்களை வெல்ல முடியும் என்று சொல்லித் தந்தார். அந்தப் பத்து ரூபாயைக் கூடத் திருப்பித் தந்து விட்டேன் நான், அம்மா!”
“தெரியுமடா!” என்றாள் மீனா.
“குழந்தையை அடித்துக் கொன்று விட்டேன் நான்” என்றார் சர்மா, விக்கல் களுக்கிடையே.
”இல்லை, அடித்து உருவாக்கினீர்கள் சார். அவனுக்கென்று ஆதரவான ஒரு கை இல்லாமல்தானே அவன் கோணலாக மாறி விட்டான்? ஒரு தாயின் சலுகையும், தகப்பனின் கண்டிப்புமே மனிதனை உருவாக்கும் சாதனங்கள். அவர்கள் இல்லையேல், மற்றவர்கள் அந்த இடத்தைச் சரிவர நிரப்புபவர்களாக இருக்க வேண்டுமல்லவா?”
தலைமையாசிரியர் விடை பெற்றுக் கொண்டு போய் விட்டார், ஒன்றுபட்ட குடும்பம் மௌனத்தில் கலந்து இன்புற்றது.
“உனக்காகச் செய்தேன்!” என்று ராஜா ஒரு கண்ணாடியைக் காட்டினான். அழகான பெட்டி உருவத்தில் அது அமைந்திருந்தது.
மீனா அன்போடு வாங்கினாள்.
”நானும் தான், மீனா” என்று ஒரு குங்குமச் சிமிழைக் காட்டினார் சர்மா. கடைசல் பிடித்து அழகான வேலைப்பாட்டுடன் இருந்தது அந்த மரச்சிமிழ்.
”இந்தத் தீபாவளிக்கு நீங்கள் இரண்டு பேருமாக என் வாழ்வையே பரிசாக அளித்து விட்டீர்கள்!” என்றாள் மீனா, சிரித்துக் கொண்டே.
வெளியே கோயில் மணிகள் கணகண வென்று ஆமோதித்தன.
-01-01-1962, கல்கி தீபாவளி மலர் 1962