அன்னையின் நிழல்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: March 14, 2020
பார்வையிட்டோர்: 5,969 
 

மிருதுவான காலை இருளின் அணைப்பில் உலகம் துயில்கிறது. கிழக்கின் விளிம்பில் வெளிச்சக்கோடுகள் கோலமிடாத போதிலும், பட்சி ஜாலங்களின் ஆர்ப்பரிப்பு முதிர்ச்சியடைந்த இரவின் அமைதி உதிர்ந்து கொண்டிருக்கின்றது.

வீதியின் ஓரமிருந்து உட்புறம் நோக்கிச் செல்கின்ற ஒரு குறுகலான சேற்றுப் பாதை,

நதிக் கரையோரம். கறுத்த ஜலதாரை

தொங்களில்….!

பலகைச் சுவர்களைக் கொண்டு நெரிசலாக கல்லறைகள் போல் காட்சியளிக்கும் குடிசைகள்.

கதவை வேகமாக மூடிவிட்டு, வெளியில் வந்து வாசலில் அதிர்ச்சியடைந்தவளாக நிற்கிறாள் றெஜினா மாமி.

மனக்கடலில் கொந்தளிப்பு.

தலையை அணைக்கும் கையோடு சில கணங்கள் நின்றுவிட்டு முக்காட்டை இழுத்து முகத்தின் அரைப்பகுதி வரை மூடிக் கொண்ட மாமி, தனது கிழிசலான சாக்குப் பையுடன் வீதியில் அடியெடுத்து வைத்தாள். தடுமாறும் மனமுடன் கால்கள் நடைபோடுகின்றன.

கால்களை நன்றாக ஊன்றி நடக்க முடிவதில்லை. செருப்புகளை அணிந்து கொண்டிருக்கின்ற போதும் அவற்றால் பிரயோசனமில்லை, அவை பழையவை. அடிபாகங்கள் முற்றாகவே சிதைந்துவிட்ட சருகுகள்.

நெருப்பு வெயிலின் காங்கையால் தகித்து உருகும் தார் வீதியில் வேகமாக நடப்பதில் மட்டுமல்லாமல், அந்த செருப்புகளைச் செப்பனிடுவதிலும் றெஜினா மாமி மகா சமர்த்து .

யாரோ ஒரு நல்ல பெண்மணி வழங்கிய நன்கொடை அந்த செருப்புகள்.

காலமானது மாமலைகளையே தகர்க்கும் போது, தோலிலான இந்த செருப்புகள் எம்மாத்திரம்? அடிபாகங்கள் தேய்ந்துவிட்டன. பட்டிகள் அறுந்துவிட்டன. முழுச் செருப்பும் கொஞ்சமேனும் பாவனைக்கு லாயக்கற்றதாக ஆகிவிட்டது. செருப்புகளும் மாமியைப் போல சருகாகிவிட்டன.

மாமி விட்டபாடில்லை. மாமியைப் போலவே செருப்பும் அவளை ஒட்டிக் கொண்டிருக்கிறது.

அறுந்த பட்டிகளுக்குப் பதிலாக இரண்டு ரப்பர் துண்டுகளைக் கட்டிக்கொண்டாள். நடக்கின்ற பொழுது பெரும் சங்கடமாகவேயிருக்கும். வீடோ, வீதியோ என்று அவள் எதனையும் எண்ணிப் பார்ப்பதில்லை. அவிழ்ந்த இடத்தில் குந்திக் கொண்டிருந்து செருப்பைச் சீராக்குவாள்.

பாவம் றெஜினா மாமி! அவள் எவ்வளவு செப்பனிட்டும் என்ன புண்ணியம்? அந்த வெயிலுக்கோ, வீதிகளுக்கோ அணுவளவேனும் இரக்கமில்லை.
கால்

தார் கொதிக்கும் வீதியில் சதா பயணம் என்பதால் பாதங்களின் அடிபாகங்கள் தீயந்து புண்ணாகிவிட்டன. ஊன்றி நடக்க முடிவதில்லை ; தத்தித் தத்தியே நடப்பாள்.

இதோ இன்றும் அந்த யாத்திரை.

இருள் முற்றாக கரைந்துவிடாதபோதிலும்.

வீதியில் வாகனப் போக்குவரத்து ஆரம்பித்து விட்டது. மஞ்சள் ஒளியை நேர்க்கோட்டிற் பாய்ச்சியவாறு ஓரிரு வாகனங்கள் பறக்கின்றன. சைக்கிள்கள் விரைகின்றன. அவற்றில் செல்வோர் பலர் சில்லறை மீன் வியாபாரிகள், பால்காரர்கள்.

சைக்கிளில் பறந்து கொண்டிருந்த மீன்காரன் மீராசாஹிபு கையை அசைத்துக் குரல் கொடுத்தான்.

“ரெஜினா மாமி…”

கலகலப்பான குரல்.

மீராசாஹிபுவைக் கண்டதும் பொக்கை வாயை அகலத் திறந்து பெரிய கண்களை உருட்டிச் சிரிக்கும் றெஜினா மாமி இன்று சிரிக்கவில்லை.

அட்டா மாமிக்கு என்ன?

கடந்த முப்பது முப்பத்தைந்து ஆண்டுகளாகச் சம்பிரதாயமாகிவிட்டிருந்த ஒரு பழக்கம் இன்று உதிர்ந்த சருகானதே.

கிழவனுக்கு அதிர்ச்சி.

சைக்கிளின் பெடலை சீராக மிதித்தவண்ணம் சறேலெனப் பறந்து கொண்டிருந்த அவன் தன்னை நெருங்கினாற் போல் வரும் நண்பனிடம் :

“மச்சான்! நானும் முப்பது முப்பத்தைந்து வருஷமாய் இதே ரோட்டிலே இதே நேரத்திலே மீன் வாங்கி வர போய்க் கொண்டுதானிருக்கிறேன். அதுமாதிரி இந்த றெஜினாவும் இதே ரோட்டுலே இதே நேரத்திலே நடந்து போறதை எத்தனை வரிஷமா பாத்து வாரேன். இன்னிக்குத்தான் அவ மொகத்துலே சிரிப்பை பார்க்கல்ல ” என்றான்.

அவன் குரல் கவலையில் தோய்ந்து வருகிறது.

துன்பங்களும், துயரங்களும் மனத்தின் சுமைகளாக விருக்கின்ற போதும் மாமி சிரித்த முகத்துடனேயே இருப்பாள். பற்கள் இல்லாத அந்த வயோதிக மாதின் உதடுகளில் புன்னகை மிளிர்ந்த வண்ணமே இருக்கும். வாழ்க்கைச் சுமை இயல்பாகி விட்டது. முகம் எங்கும் சுருக்கங்கள் வரிகளாகக் கோடுகள் கீறியுள்ள போதும் நடையிலே தளர்ச்சியில்லை. நடந்து நடந்து இயந்திரமாகிவிட்ட கால்கள் அவை!

இன்று ….!

சிரிப்பில்லை, புன்னகை இல்லை, கலகலப்பில்லை, மௌனமாகவும் யோசனையுடனும் நடந்து கொண்டிருந்தாள். வெகுதூரம் வந்த பின்னரும் அவையிரண்டும் அவளை விட்டபாடில்லை.

ஆமாம்! குடிசைக்குள் அப்படி என்னதான் நடந்துவிட்டது ….?

***

றெஜினா கருக்கல் பொழுதிலே எழுந்துவிட்டாள். நினைவு தெரிந்த நாள் முதலே இந்த விழிப்பு தொடர்கிறது. பானையிலிருந்து கொஞ்சம் நீரை எடுத்து முகம் அலம்பிய பின்னர், சேலையின் முனையால் முகத்தை அழுந்தத் துடைத்துவிட்டு சாக்குப் பையை கையிலெடுத்துக் கொண்டு செருப்புகளிரண்டையும் மாட்டிக் கொண்டாள்.

குப்பிலாம்பு கரும்புகைச் சுருளை உமிழ்ந்து கொண்டிருக்கிறது. அடுப்பின் அருகே சென்ற அவள் லாம்பைக் கையிலெடுத்துத் தூக்கிய வண்ணம்,

“மவேள் !” என மெதுவாக அழைத்தாள். பலர் உறங்குவது நிழலாகத் தெரிகிறது.

வெறுந்தரை, கிழிசலான சாக்குகள் அதன்மீது பிணம் போல் உறக்கம்.

அவர்கள் ரெஜினா மாமியின் மகளும் மகள் பெற்றெடுத்த பிள்ளைகளுமே. அவள் எவ்வளவு துரதிர்ஷ்டக்காரி. எல்லாப் பிள்ளைகளும் பெண்களே.

“மவேள் ! சுல்பிகா!” மாமி கனிவாக அழைத்தாள்.

லாம்பை மகளின் முகத்துக்கு நேராகப் பிடித்து, நெற்றியில் கை வைத்து வருடி, ”யா மொகிதீன்! காய்ச்சல் உட்டபாடா இல்லியே” என அங்கலாய்ப்புடன் முணுமுணுத்துக் கொண்டாள்.

“உம்மா நானும் வரட்டா?” சுல்பிகா தூக்கத்தில் முனகினாள்.

“என்ன பைத்தியமா? நான் மட்டும் பெய்த்திட்டு வாரேன் ” றெஜினா மாமி படபடத்தாள்.

“பிள்ளையல் ரெண்டு நாளா பட்டினி” சுல்பிகாவின் முணுமுணுப்பு.

சுல்பிகாவின் நெற்றிப்பொட்டு விண்விண்’ னென வெடிப்பது போல் இருப்பதை, வேதனையில் உட்குழிந்து குறுகிய கண்கள் வெளிப்படுத்துகின்றன.

***

சுல்பிகாவிற்கு மூன்று பெண்கள். திருமணம் செய்து குழந்தைகளுக்குத் தாயாகியிருக்க வேண்டிய வயதில் முறு முறு’ வென்றிருக்கிறார்கள்

கணவன் ரகுமத் பெரும் குடியன். சில வருடங்களுக்கு முன்பு பஸ் விபத்தில் இறந்து போனான்.

அவன் இருந்தால் அதுவும் அவளுக்குச் சுமைதான்.

சுல்பிகாவின் குழந்தைப் பருவத்திலிருந்தே றெஜினா மாமி கையிற் பையொன்றுடன் பங்களாக்களை நோக்கி நடக்கத் தொடங்கியவள். மகள் திருமணமாகிக் குழந்தைகளைப் பெற்று அவர்கள் பருவப் பெண்ணான பின்னரும் அதே பையுடன்தான் வீதியில் நடக்கிறாள்.

உற்சாக நடை தத்தலாகிவிட்டது. அவ்வளவுதான் மாற்றம். முஸ்லிம் பெரியவர்களின் பங்களாக்களுக்குச் சென்று அவர்கள் இடும் வேலைகளையெல்லாம் செய்வாள். பாத்திரங்கள் கழுவுதல், துணிமணி துவைத்தல், பூஞ்செடிகளுக்கு நீர் ஊற்றுதல் அவளுடைய வேலைகள்.

பல வீடுகளுக்குச் செல்வாள். அவள் பல வீடுகளுக்கு சேவகி. அந்திப்பொழுதில் வீடு திரும்புகின்ற நேரத்தில் அந்தப் பை உணவுப் பண்டங்களால் நிறைந்துவிடும். ஒவ்வொரு வீட்டிலும் கிடைக்கின்ற சோறு, கறிகளைப் பார்சல்களாக்கிப் பையை நிறைத்துக் கொண்டு திரும்புவாள்.

குடும்பத்தின் வறுமையைப் போக்க மாமி மட்டும் உழைத்தால் போதாது என்ற முடிவிற்கு சுல்பிகா வந்தாள். மாமி அதனைக் கடுமையாக எதிர்த்தாள்.

மூன்று குமர்களையும் வீட்டுக்குள் அடைத்து வைத்தால் போதுமா? எவருக்காவது கட்டிக் கொடுக்க வேண்டாமா?

எரிசரங்கள் சுல்பிகாவின் கேள்விகளாகப் பறந்தன.

றெஜினா மாமி பொசுங்கிப் போனாள். அவள்தான் என்ன செய்வாள்? மகளின் பிடிவாதமானது மனவுறுதிகள் அனைத்தையும் பொடியாக்கிவிட்டது.

சம்மதம் கிடைத்தது.

றெஜினா மாமியின் மனதில் இருந்த ஒரேயொரு ஆசை தனது மகளுக்கும் அவளுடைய பெண்களுக்கும் தானே உழைத்து உண்ண கொடுக்க வேண்டும், அவர்களைக் கரைசேர்க்க வேண்டும் என்பதே. மூன்று பெண்களையும் திருமணம் செய்து கொடுப்பதற்காக குருவி சிறு தானியம் சேர்ப்பது போல் சில்லறைகளைச் சேர்க்கிறாள். அட்டா! அவள்தான் எவ்வளவு காலமாக இவ்வாறு சேர்க்கின்றாள். இன்னும் ஒரு குமராவது கரை சேரவில்லையே!

அன்று..

அவளுடைய நெஞ்சம் அதிர்ந்த சம்பவம் நிகழ்ந்தது.

***

வாகன வீதியிலிருந்து இறங்கி ஒரு மணற்பாதையின் மீது ‘விறுக் விறுக் கென் நடந்து கொண்டிருக்கிறாள் றெஜினா மாமி. அவள் மனம் காலையில் நடந்த சம்பவத்தை அசை போட்டுக் கொண்டிருக்கின்றது.

சுல்பிகாவுக்குக் காய்ச்சல். அவளால் தாயுடன் பங்களாவுக்குச் செல்ல முடியவில்லை. அந்திப் பொழுதில் பை நிறைய உணவுகளைக் கொண்டுவர முடியவில்லை. சில்லறைகளும் சொற்பமாகவே கிடைத்தன.

அவள் செல்கின்ற செல்வர்களின் வீட்டுப் பெண்கள் மிகவும் வயோதிக நிலையை அடைந்துவிட்ட றெஜினா மாமியிடம் அதிகமாக வேலை வாங்க விரும்பவில்லை. நீண்ட காலமாகத் தெரிந்த பெண் என்பதால் இரக்கம் கொண்டு ஏதேனும் கொடுத்தார்கள். ”மகள் சுல்பிகா வரவில்லையா? சுல்பிகாவிற்கு பெண் பிள்ளைகளில்லையா? அவர்களை அனுப்பி வைக்காமல் நீங்கள் ஏன் வருகிறீர்கள்?” என விசனமுடன் கேட்டார்கள்.

மாமி திக்குமுக்காடிப் போனாள். ‘குமர்ப் பெண்களை வேலைக்கு அனுப்புவதா?’ நெஞ்சு நடுங்கியது.

காலையில் சுல்பிகாவிடம் வேலைக்குப் போவதாகச் சொன்ன பின்னர் புறப்பட்ட மாமி கதவைச் சாத்திய பொழுது சுல்பிகாவின் மூத்த மகள் ஜசீமா அழைக்கும் குரல் கேட்டது.

‘உம்மம்மா !”

கதவைச் சாத்திக் கொண்டிருந்த றெஜினா மாமி சரேலெனக் கதவைத் திறந்து வீட்டினுள் நுழைந்து, “என்ன மவேள்?” எனக் கேட்டாள்.

குப்பிலாம்பின் மங்கலான வெளிச்சத்தில் ஜசீமா நின்று கொண்டிருப்பது தெரிகின்றது. அவள் கைகளைப் பிசைந்துகொண்டு நிழல் போல் நிற்கிறாள்.

“என்ன மவேள்?”

”உம்மம்மா! நானும் ஒங்கலோட வரட்டா?” அவள் திக்கித் திணறி தடுமாற்றத்துடன் கேட்டாள்.

”ஏன் என்னத்துக்கு?”

“உம்மாவிற்கு சொகமில்லதானே!”

இடி விழுந்தாற் போன்று அதிர்ந்துவிட்டாள் றெஜினா. இருதய இலையில் மரண வேதனை. நெஞ்சிற்குள் தீப்பந்தம் ஒன்று திகுதிகு’ வென பற்றியெரிகிறது.

“வாணாம் மவேள்! கொமருகள் வெளியில் போறது ஹராம்” என மெலிதான குரலில் பதற்றமுடன் சொன்னாள். அவள் உடல் நடுங்கிக் கொண்டிருக்கிறது.

***

இரவு பெய்த மழையால் மணற் பாதை சகதியாகிவிட்டிருந்தது. பாதைக்கு முன்பாகவுள்ள மேட்டிலிருந்து இறங்கிவிட்டால் சலீம் நூராணி பாயின் வீடு வந்துவிடும். அவருடைய வீட்டை நோக்கியே றெஜினா மாமி நடந்து கொண்டிருக்கிறாள். அவள் எண்ணமெல்லாம் பேத்தி ஜசீமாவின் ‘உம்மம்மா நானும் வரட்டா ‘ என்ற குரல் மீதே லயித்துக் கிடந்தது. பலத்த யோசனை. உடலில் நடுக்கம்.

மார்க்கத்திற்குப் புறம்பான காரியங்களைச் செய்ய ஒப்பாத அவளுடைய மனம் எப்படிக் கன்னிப் பெண்ணை வெளியில் தொழில் புரிய அனுப்ப விரும்பும்?

உள்ளம் ஏங்கியேங்கி பெருமூச்சுடன் அழுகிறது.

யோசனை கழன்றபாடில்லை. சுமையுடன் மேட்டின் மீதிருந்து இறங்கியபோது மாமியின் கால்களிலொன்று பிசகி வழுக்கியது. தடாலென வீதியில் சரிந்தாள்.

”யா அல்லாஹ்” என்ற அலறல். மாமியின் இடுப்பெலும்பு இடம்பெயர்ந்து விட்டது.

***

மாமியின் உடல் சாக்கிற்கு அடைக்கலமாகி விட்டது. அதில் சுருண்டு கிடந்தவாறே குடிசைக்குள் எரியும் குப்பிலாம் பின் வெளிச்சத்தில் விடியப்பொழுதில் நடைபெறும் காட்சிகளைப் பார்த்து அணு அணுவாகச் சாகிறாள்.

உட்குழிந்த கண்களில் நீர் மணிகள் பெருகிக் கொண்டேயிருக்கிறது.

‘யா அல்லாஹ் என்னை மன்னித்துவிடு! என் மனம் இறைவனிடம் இறைஞ்சுவதுடனே காலம் கரைசலாகிறது.

இப்பொழுதெல்லாம் சுல்பிகாவும் ஜசீமாவும் அதிகாலையில் எழுந்துவிடுவார்கள். பானையிலிருந்து கொஞ்சம் நீரை எடுத்து கை. கால், முகம் கழுவிய பின்னர், சுள்ளிகள் எரியும் அடுப்பில் கேத்தலை வைத்து பிளேன்டி செய்து உம்மம்மாவிற்குக் கொடுத்து அவர்களும் ‘மடக் மடக்’ கென குடிப்பார்கள்.

சுல்பிகா தாயின் சாக்குப் பையை தூக்கிக் கொள்வாள். கதவைச் சாத்திவிட்டு தாயும் மகளும் வீதியில் இறங்கிவிடுவார்கள்.

பாதைகள் நீண்டிருந்த போதும் யாத்திரை செய்பவனைவிட்டு நிழல்கள் நீங்குவதில்லை. வயிற்றுப் போராட்டத்திற்கான இந்த நீண்ட போராட்டத்தில் அன்னையின் நிழலாக மகள் தொடர, அவளின் நிழலாக பேத்தி தொடர்கிறாள்.

இது ஒரு தொடர்கதை.

– நூல் தலைப்பு: அன்னையின் நிழல், மணிமேகலைப் பிரசுரம், முதல் பதிப்பு: 2004

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *