அன்னமும் அமைதியும்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: September 22, 2024
பார்வையிட்டோர்: 1,306 
 
 

நாளையும் நாளை மறுநாளும் விடுமுறை என்பதால் இன்று எப்படியும் பால்ராசு வந்துவிடுவான். சின்னத்தாயி கூலிக்கு போகவில்லை.தன் தவப்புதல்வனை எதிர் நோக்கும் ஆவல்.விடிந்ததும் வீட்டை சுத்தம் செய்து,முத்துக்கண்ணு வீட்டு மாட்டுத் தொழுவத்தில் சாணி எடுத்து வந்து வாளியில் போட்டு பதமாக கரைத்து பழைய துணியில் தோய்த்து வீடெல்லாம் மொழுகினாள். பின்பு சுண்ணாம்பை கெட்டியாக குழைத்து அதற்கான திட்டமான துணியில் தோய்த்து விதவிதமான கோலங்கள் போட்டாள். அடுப்பங்கரை,உள்வீடு,வாசல் என்று அலங்கரிப்பு செய்தாள். பால்ராசு வந்துவிடுவான் என்ற நினைப்பு உள் மனதில் உற்சாகத்தையும் குதூகலத்தையும் தந்தது. வாரத்தில் இரண்டு நாட்கள் மட்டும்தான் வீட்டில் இருப்பான். மற்ற நாட்களில் டவுன் பள்ளிக் கூடத்தில் படித்துவிட்டு அரசினர் மாணவர் விடுதியிலேயே தங்கிவிடுவான். பால்ராசு, தன் கிராமத்தில் எட்டாம் வகுப்பு வரைதான் படித்தான். அதற்கு மேற்கொண்டு படிக்க டவுனுக்குத்தான் போக வேண்டும்.

வானத்தை துடைப்பது போல் கூட்டம் கூட்டமாக வளர்ந்து நிற்கும் பனைமரத் தோப்பிற்கு நடுவேதான் பால்ராசுவின் குக்கிராமம். அங்கிருந்து பிரதான சாலைக்கு வருவதாகயிருந்தால் குறுகிய சாலையில் அரை மணி நேரம் நடக்க வேண்டும். பிரதான சாலையில்தான் ஆசிட் கம்பெனி இருக்கிறது. பிரபலமான ரசாயன தொழிற்ச் சாலைக்குதான் ‘ஆசிட் கம்பெனி’ என்று பெயர். மாந்தோப்புகளை அழித்து ஆலை உருவாகியிருந்தது. உள்ளூர் மக்களுக்கு அதில் வேலை வாய்பு மிகவும் குறைவுதான். வடமாநிலத்தை சேர்ந்தவர்களே அதிகம் பேர் வேலையில் இருக்கிறார்கள். மூன்றுவிதமான பணி நேரங்களில் நிறுவனம் இயங்குவதால் ஆட்களை அழைத்து வருவதற்கும் ,வீட்டிற்கே சென்று விடுவதற்கும் சொகுசு வாகனங்கள் முழு நேர வாடகைக்கு அமர்த்தப் பட்டிருக்கின்றன. விவசாயம் அற்றுப் போய் குறைந்த விலைக்கு நிலம் தந்தவர்களெல்லாம் ஊர் பொது மரத்தடி திண்ணையில் பழங்கதை பேசி பொழுதை கழிக்கிறார்கள்.பால்ராசுவின் கிராமத்தையும் இன்னும் சில கிராமங்களையும் அந் நிறுவனம் தத்தெடுத்து சாலை வசதிகளையும்,மரங்களும், குடிநீர் தொட்டிகளும் இலவசமாக அமைத்து தந்து பராமரிக்கவும் செய்கிறது.

ஊரிலிருந்து டவுனுக்கு போவதாயிருந்தாலும், டவுனிலிருந்து ஊருக்கு வருவதாயிருந்தாலும் ஆசிட் கம்பெனி பேருந்து நிறுத்தத்திற்கு வர வேண்டும்.இங்கு நூற்றைம்பது பேருக்கும் மேல் பணியாற்றுகிறார்கள். அவர்களுக்கு காலை ,மதியம் மற்றும் இரவு வேளை சாப்பாடுகளை நிர்வாகமே தயாரித்து வழங்குகிறது. அதற்கான கேன்டீன் தொழிற் சாலையின் பின்புறம் உள்ளது. சிற்சில நேரங்களில் தொழிலாளர்களின் வருகை குறைந்துவிட்டாலோ அல்லது இரவு வேலை ரத்தாகிவிட்டாலோ சாப்பாடு அபரிமிதமாக மிஞ்சிவிடும். அப்படி மிஞ்சும்  சாப்பாடுகளை அவர்கள் வீணடிப்பதில்லை. பால்ராசுவின் கிராமத்திற்கு எடுத்து வந்து தானமாக வழங்கி விடுவார்கள். இது போன்று மாதத்தில் நான்கைந்து நாட்கள் நடப்பதுண்டு.

சின்னத்தாயி இரண்டு நாட்களுக்கு முன்பு அரைத்து வைத்திருந்த கேப்பையில் களியும், முனியாண்டி கடையில் வாங்கிய உப்புக் கருவாடையும் போட்டு குழம்பும் வைத்திருந்தாள். வீட்டில் இருக்கும் போது பால்ராசுவுக்கு கேப்பை களியும்,கம்பஞ் சோறும்தான் அநேக நேரங்களில் கிடைக்கும்.கறிச் சோறு என்றால் பால்ராசுக்கு அலாதி பிரியம்தான்.நியாய விலை கடையில் கிடைக்கும் அரிசியை உண்ண மனம் ஒப்பவில்லை. அதை அவித்து மாட்டுக்குத்தான் போடுகிறார்கள். மருகி மருகி யோசித்து கேப்பை களியும்,கருவாட்டுக் குழம்பும் வைத்திருந்தாள்.

வாசலில் பெல்லு சப்தம் கேட்டது.மேலத் தெரு முத்துக்கருப்பன் சைக்கிளில் வந்து இறங்கினான் பால்ராசு.’அம்மா’-என்று கூவிக் கொண்டே எட்டு வைத்து உள்ளே வந்தான். உள் வாசலில் தலை வைத்து சித்த நேரம் உடம்பை சாய்த்திருந்தாள் சின்னத்தாயி. ‘ஆத்தாடி எம்புள்ள வந்திட்டியான்’-என்று உரத்த குரலுடன் எழுந்து சீலை முந்தானையை மேலே போட்டு பாசப்புனல் மடை உடைய சந்தோச வெள்ளமாய் ஒடி வந்து கட்டியணைத்தாள். சிறிது நேரம் தன் அம்மாவிடம் பேசியிருந்துவிட்டு,

“எங்கம்மா மணிய(நாய்) காணோம்?”

“அத உங்கொப்பேன் கொன்னு போட்டாக”

“ஏம்மா!”

“அத..ரெண்டு நாளா காணோம், நானும் உங்கொப்பாவும் தேடோ தேடுனு தேடுறோம்…”

“………….”

“அப்புறதேன் உங்கொப்பா கரட்டுக் காட்டுச் செவ போயி பாத்தாக. மானத்துல கழுகு வட்டம் போட்டுக்கிட்டு இருக்குதே,எங்கேயாவது மாடுகண்ணு செத்துக்கித்துக் கெடக்குதோன்னு.அங்கனதேன் அவ ஆம்புட்டா. நம்ம வண்ணாப்பய கழுத செத்துச் போச்சாம்.ஊர்ல இருக்கிற அம்புட்டு நாயிகளும் அங்கதேன். ஊளையிடுறதும் சண்டை போடுறதும் எல்லாம் கறித் துண்டுக்காக. அதுக்கப்புறம் அது போக்கே சரியில்ல.சீர் கெட்டுப் போச்சு.போறவாரவுகள கடிக்கினு உங்கப்பேன் ஒலக்கய கொண்டி ஒரே போடாபோட்டாக…!”

“………….!”

“நம்ம புறவாச தென்னம்பிள்ளைக்கு பக்கத்துல பொதச்சிருக்கு….”

ஊரில் இருந்த கடைசிக் கழுதையும் செத்துப் போனது. இனி கடைகளில் படமாகதான் பார்க்க முடியும். என்னை பார் யோகம் வரும்மென்று.

ஆனால், இன்னும்கூட சாலை வசதியில்லாத மலைக் கிராமங்களுக்கு எரி உருளைகளை கழுதைகள்தான் சுமக்கிறது.

அந்த மத்தியான நேரத்து ஏகாந்த வேளையில் தெருவில் யாரோ கூவினார்கள். ‘சின்னத்தாயி கம்பேனி சோறு போடுதாக ஓடியா..!’தெருவில் யாரோ கொடுத்த அழைப்பு கணப் பொழுதில் குஷிப்படுத்தியது. சோத்துக்கு ஒரு சட்டியும் குழம்புக்கு ஒரு சட்டியும் எடுத்துக் கொண்டு சேலையை அள்ளி சொருகிக் கொண்டு ஓடினாள்.பள்ளிக் கூடத்து வாசலுக்கு. அங்கே வைத்துதான் கம்பெனி சோறு போடுவார்கள்.நல்லா இருக்கோனும் மகராசா என்று வாழ்த்திக் கொண்டு கெழடு கட்டைகள் வரிசையில் நின்று கொண்டார்கள். சின்னத்தாயியும் வந்து நின்ற போது வரிசை நீண்டிருந்தது. அன்று மீதியிருந்த சோறு இருபத்தைந்து பேர் வயிறார சாப்பிடலாம். ஆனால், வந்து நின்றவர்கள் நாற்பதுக்கும் மேல். அதில் சின்னத்தாயி  ஏறக்குறைய முப்பதாவது இடத்தில் நின்றிருந்தாள். சின்னத்தாயிக்கு மனசு ‘திக், திக்’ கென்று அடித்தது. தன் குல தெய்வத்தை வேண்டிக் கொண்டாள். ‘அய்யனாரையா இன்னிக்கு என் புள்ள வந்திருக்கு கறிச் சோறுண்டா கொள்ள பிரியம் அதுக்கு. எப்படியாவது ஒரு வா சோறு கெடைக்கனும் சாமி!’-அவள் கும்பிட்டு நிமிரும் போது எங்கேயோ கெவுளி சத்தம் கேட்டது. சின்னத்தாயிக்கு மனசெல்லாம் நிறைஞ்சு போனது. வரிசை கொஞ்சம் கொஞ்சமாக கரைந்து கொண்டு வந்தது. இன்னும் நாலு பாகம் சோறுதான் இருக்கும்.சின்னத்தாயியை சேர்த்து எட்டு பேர் நிற்கிறார்கள். அதை எட்டு பேருக்கு பங்கிட்டு கொடுத்தாலும் சண்டை வந்துவிடும்.சின்னத்தாயிக்கு பின் நின்றிருந்த முண்டக் கன்னி மூக்கம்மாவுக்கு பசி பொறுக்கவில்லை.வரிசையின் கட்டுக் கோப்பை உடைத்து முன்னேறினாள்.மு.மூக்கம்மாவுக்கு பின் நின்றிருந்தவர்களும் வரிசையை உடைத்தனர். இப்போது நாலுபாக சோற்றுக்காக நீயா நானா என்று அடிதடி சண்டை ஆரம்பமானது. ஒரு கணம் பால்ராசுவை நினைத்து பார்த்தவளுக்கு எங்கிருந்து வந்ததோ புது வேகம். ஒரே பாய்ச்சலாக முன்னே செல்ல எத்தனித்த போது,’நங்ங்…!’-என்று நெற்றிப் பொட்டில் பலமான அடி இடியாக இறங்கியது. நல்ல பித்தளையில் வார்க்கப்பட்ட தூக்குப் போனியால் மு.மூக்கம்மாதான் மூர்க்கமாக அடி வைத்தாள்.அலைகுலையாகி சரிந்தாள் சின்னத்தாயி.அந்த சூழலில் அவளை தாங்கி பிடிக்க கூட யாரும் முன் வரவில்லை.அந்த கறிச் சோற்றுக்காக நாய் சண்டை பேய் சண்டை போட்டுக் கொண்டிருந்தார்கள்.சோற்றுப் பானை சுத்தமாக துடைத்து எடுக்கப்பட்ட பின் இனி பிடி சோறு கூட கிடைக்காது என உணர்ந்த பின்தான் கூட்டம் கலைந்தது.ஊர் பொது சாவடியில் பொருத்தப்பட்டிருந்த ஒலிபெருக்கியில் ‘…பாரதத்தின் சோத்துச் சண்டை தீரவில்லை….!’-என்ற பாடல் கேட்டுக் கொண்டிருந்தது.

மு.மூக்கம்மா கணவனை இழந்து ஒரு வாரிசும்மின்றி தனிக்கட்டையாக வாழ்ந்து ஏறக்குறைய மனநிலை பாதிக்கப்பட்ட ஒரு கைம் பெண். காடு கழனிகளில் மாடாக உழைப்பாள். சலிப்பின்றி உழைக்கும் அவளுக்கு கூலி ஒரு வேளை சாப்பாடுதான். அப்படி எத்தனை பேர் கழனிகளிலும் மாட்டுத் தொழுவத்திலும் அசூயை பாராமல் ஓடாக தேய்ந்திருப்பாள். அந்த மன நோயாளியை தண்டிக்கவும் சீர் திருத்தவும் யாரும் முன் வரவில்லை.

சின்னத்தாயி அடிபட்ட சேதி தீயாக பரவியது. ஒரு சாண் வயிற்றுக்குதான் இந்த பாடு என்று ஊரெல்லாம் ஹாஸ்யம் பேசிக் கொண்டார்கள்.அந்த சிறுக்கியை ஊரைவிட்டே துரத்தனும் என்று ஒரு சிலர் கறுவிக் கொண்டனர்.ஒவ்வொரு முறையும் கம்பெனி சோறு போடும் போது புதுப் புது பகையாளிகள் உருவாகிறார்கள். உறவுகள் முறிந்து சந்தோசங்கள் உதிர்கின்றன..மருத்துவ மனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட சின்னத்தாயி வீடு திரும்பினாள்.

ஆயிற்று! சில வாரங்களுக்கு பின் எப்போதும் போல் வாரக் கடைசியில் விடுமுறைக்காக வீடு திரும்பினான் பால்ராசு.ஆசிட் கம்பெனியின் பின்னால் நிறைய பேர் நின்று வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தனர்.இருபத்தைந்து பேர் சாப்பிடும் அளவிற்கு சாப்பாடு அன்றலர்ந்த மல்லிகையாய் இருந்தது. மணக்க மணக்க வைக்கப்பட்ட சாம்பார், ரசம், பொரியல் என அத்தனையும் மூன்றடி பள்ளத்தில் போட்டு மண்ணை தள்ளி மூடிக் கொண்டிருந்தனர். அந்த நிறுவனத்தின் பொது மேலாளரின் உத்தரவுப்படிதான் நடந்தது. நல்ல பசி மயக்கத்தில் இருந்த பால்ராசுக்கு அந்த காட்சி அடி வயிற்றில் அமிலத்தை கரைத்தது போல் இருந்தது. ஆனால், இனி ஊருக்குள் சோத்துச் சண்டை வராது என்று நினைக்கும் போது பசி மறந்து இனம் புரியாத சந்தோசம் உடலெங்கும் பரவியது!

– இக் கதை ஜூன் 2024, புதிய கோடாங்கி இதழில் பிரசுரம் கண்டது. 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *