கல்யாணத்துக்கப்புறம் சுக்கிர தசை அடித்தவர்களும் உண்டு . சனிபகவான் பிடிவாதமாய் நாற்காலியைப் போட்டுக்கொண்டு நிரந்தரமாய் குடியேறி விடுவதும் உண்டு.
நான் இதில் இரண்டாம் ரகம் என்று நினைத்துக் கொண்டிருந்தேன். ஆனால் ஒரு நாள் இதைப்பற்றி சுபத்திராவுடன் பேசிக்கொண்டு இருந்தபோது அவளுக்கும் அதே எண்ணம் இருப்பதாய் சொன்னதிலிருந்து நான் அந்தப் பேச்சையே எடுப்பதில்லை என்று சபதம் செய்து விட்டேன்.
திருமணம் ஆன புதிது. தனிக்குடித்தனம் போக வேண்டிய கட்டாயம். நான் ரயில்வேயில் ஸ்டேஷன் மாஸ்டராக இருந்தால் அதியமான்பட்டி. ஆதிச்சநல்லூர்.
என்று கேள்விப்படாத ஊரிலெல்லாம் போஸ்டிங். நானும் சுபத்திராவும் மட்டும்.
காலையில் பேப்பரை எடுத்து வைத்துக்கொண்டு. வாசல் திண்ணையில் உட்கார்ந்தபடி.
“சுபத்திரா. காப்பி!” என்றேன். அதுதான் முதலும் கடைசியுமாய் நான் காப்பி கேட்டது.
“சித்த உள்ளே வரேளா?”
என்னவோ ஏதோ என்று பயந்து நடுங்கியபடி உள்ளே போனேன்.
“அது என்னவாக்கும் வாசலில் உக்காந்தபடிக்கு ‘காப்பி’
காப்பி வேணும்ன்னா அடுக்களைக்கு வரணும். எங்காத்தில இந்த காப்பிய கைல கொண்டு போய் குடுக்கிற வழக்கமெல்லாம் இல்லையாக்கும். !
நல்லவேளை. அவாவாளே கலந்து குடிக்கணும்னு சொல்லாம விட்டாளே!
எனக்கு பால் வெள்ளை. டிக்காஷன் கருப்பு. என்கிறதைத்தவிர காப்பியைப் பற்றி ஒன்றுமே தெரியாது.
நான் பிறந்து வளர்ந்ததெல்லாம் மாயவரம். கூட்டுக் குடும்பம். குறைந்தது பத்து பேர். Floating population ஐந்துக்கு குறையாது.
நான். அப்பா. அம்மா. தாத்தா. பாட்டி. அத்தை. இரண்டு அக்கா. இரண்டு தம்பி.
இவர்கள் நிரந்தரமாய் தன் தங்குபவர்கள்.
இது தவிர வந்து போகிறவர்கள்.
சித்தி. சித்தப்பா. ஒன்று விட்ட மாமா. இன்னும் பலபேர்.
ஆட்டோ சத்தமும். ரிக்ஷா சத்தமும் கேட்ட வண்ணம் இருக்கும் .
“மாமா எங்கம்மா காணும்?”
“அவர் கும்பகோணம் கிளம்பி போய்ட்டாரே கண்ணா. ஏன்?”
“பம்பரம் வாங்கித்தரேன்னு ஏமாத்திட்டாரே”
“யார் வரா. யார் போறான்னே தெரியாது”.
“நான் சொல்ல வந்ததே வேற. நடுவில அப்பப்போ டிராக் மாறிடுவேன்”.
என்னுடைய அத்தை காப்பி கலப்பதற்காகவே இந்த பூவுலகில் அவதரித்தவள். காலை மூணு மணிக்கு எழுந்து விடுவாள். பிரம்ம முகூர்த்தமாம்!
வென்னீர் அடுப்பை மூட்டி. குளித்து. தன் துணியைத் தானே துவைத்து. பின்கட்டில் நுரை மிதக்கும் கறந்து வைத்த பாலை குமுட்டி அடுப்பில் காச்சிவிடுவாள்.
ஏற்கனவே சுடச் சுட பித்தளை பில்டரில் டிக்காஷன் இறங்கியிருக்கும்.
விளக்கேத்தி. நாலு சுலோகம் சொல்லிவிட்டு. மடக் மடக்கேன்று நாலு வாய் காப்பி தொண்டைக்குழியை நனைத்தால்தான் வண்டியே ஒடும்.
காலை ஆறுமணிக்கு தொடங்கும் காப்பிக் கடை. ஒவ்வொருத்தரும் எழுந்ததும் அத்தைக்கு தெரியும். உடனை அவர்களுக்கு ஏத்த மாதிரி கலந்து ( சிலபேருக்கு ஸ்ட்ராங். அப்பாவுக்கு சர்க்கரை இல்லாமல். எனக்கும் தம்பிகளுக்கும் நிறையவே பாலும். சக்கரையும். அம்மாவுக்கு ஒரு ஸ்பூன் சர்க்கரை . எப்படி நியாபகம் இருக்குமோ யாமறியேன் பராபரமே. ) எல்லோருக்கும் அவரவர் கையில் கொண்டு கொடுத்தால்தான் அத்தைக்கு திருப்த்தி.
இந்த மாதிரி சூழ்நிலையில் வளர்ந்தவன். என்னிலமையைக் கொஞ்சம் யோசித்துப் பாருங்கள்.
லேசாக திறந்திருந்த கதவு வழியாக அன்றைக்குத்தான் சனி பகவான் உள்ளே நுழைந்திருக்க வேண்டும்.
எங்கள் வீட்டில் பத்தரை மணிக்கு இரண்டாவது காப்பி உண்டு. முதற்காப்பிக்கே இத்தனை பாடு. இதில் இரண்டாவது காப்பி கேட்டு. ஏதாவது ஏடாகூடமாய் பதில் வந்தால். வாயை மூடிக்கொண்டிருப்பதுதான் உத்தமம்.
சனி. ஞாயிற்றுக் கிழமைகளில் பதினோரு மணிக்கு சாப்பிட்டு விடுவோம். நல்லவேளை. எங்காத்தில அந்த பழக்கம் இல்லையென்று சொல்லாமல் . டாணென்று பதினோரு மணிக்கு.
“சாப்பிட வாங்கோ “என்ற அழைப்பு.
நாங்கள் சின்னவயசில் கிச்சனில் நுழைவது ஒரே ஒரு காரணத்துக்காகத்தான்.
காலையில் பெரியவர் எல்லோரும் சீக்கிரமே எழுந்து விடுவதால். சாப்பிட்டதும் ‘ உண்ட களைப்பு தொண்டருக்கும் ‘ என்று அங்கங்கே பாயை விரித்து படுத்து விடுவார்கள். குறட்டை சத்தம். விதவிதமான ஏற்ற இறக்கத்துடன் symphony orchestra கேட்பது மாதிரி ஒரு அனுபவம்.
எல்லோரும் தூங்கி விட்டதை நிச்சயம் செய்து கொண்டு சமையலறைக்கு படையெடுப்போம். ஒருத்தன் காவலுக்கு வெளியே.
சமையலறையை இதைவிட சுத்தமாக வைத்துக் கொள்ள முடியாது. சின்ன. கீக்கிடமான அறைதான். ஒரு மூலையில் பெரிய அடுக்கு. சமையலறையில் நல்ல தண்ணீர் பைப் இல்லாததால் வெளியிலிருந்து கொண்டு வந்து கொட்ட வேண்டும். அது மட்டும்தான் பெரியக்கா வேலை.
சின்ன மேடையில் பம்பிங் ஸ்டவ்.
கீழேதான் சமையல். இரண்டு குமுட்டி அடுப்பு. நன்றாக அலம்பித் துடைத்து மாலை சமையலுக்கு தயாராய் இருந்தது.
சின்ன அலமாரி. வரிசையாய் கடுகு. உளுத்தம்பருப்பு. சீரகம். வெந்தயம். இன்னும் பேர் தெரியாத சாமானங்கள்.
அதற்கு மேல் தட்டில் தான் நாங்கள் தேடி வந்த புதையல்.
எங்கள் அத்தைக்கு ரொம்பவே மனசு. நாங்கள் தலையைச் சொறிந்து கொண்டு போய் நின்றாலே.
“என்னடா. அம்பிப்பயலே. பயத்த லாடு வேணு. ?? ஒண்ணே ஒண்ணு தரேன். யாருக்கும் தெரியாம இங்கேயே சாப்பிட்டுட்டு போ. என்ன. ?”
ஆனால் எங்கள் தாயார் நேர் எதிர். நாலு மணிக்குத்தான் டப்பாவைத் திறப்பாள்.
எல்லாம் ஸ்டீல் சம்புடங்கள். இறுக்கமான மூடி. ஒவ்வோன்றாய் திறந்து பார்க்க வேண்டும்.
இங்குதான் என்னுடைய தம்பியின் அபார மோப்ப சக்தி கை கொடுக்கும். நிச்சியமாக போன ஜென்மத்தில் நாயாகத்தான் பிறந்திருப்பான்.
“டேய். இரண்டாவது டப்பாவைத் திற. அதிலதான் முறுக்கு. நாலாவது கடல உருண்ட”
கிடுகிடென்று வாரி ஜோபில் அடைத்துக் கொள்வோம்.
ஒன்றுமே இல்லையென்றால் கொஞ்சம் பொட்டுக் கடலை. அவல். வெல்லம். பையில் அடைத்துக்கொண்டு சத்தம் போடாமல் வந்து விடுவோம்.
சில சமயம் கொஞ்சம் புளி. உப்பு. ஒரு மிளகாய் வத்தல். அம்மியில் அரைத்து . உருண்டைகளாக்கி. துடைப்பக்குச்சியை துண்டுகளாக்கி . முனையில் சொருகி வைத்துக் கொண்டு நக்கி. நக்கி. தின்போம்.
சுத்தமாவது சுகாதாரமாவது!
இப்போது இருக்கும் லாலிபாப்புக்கே முன்னோடி நாங்கள்தான்.
காலையில் பாத்ரூமுக்கு போட்டி போடும்போது தான் எங்களுடைய வண்டவாளம் தண்டவாளம் ஏறும். வாயெல்லாம் புண்கள் வேறு.
பாருங்கோ. டிராக் மாறி எங்கேயோ போய்விட்டேன்.
முதல் நாள் கிச்சனை கவனிக்க நேரமில்லை. சுபத்திராவின் அதட்டலில் சப்தநாடியும் ஒடுங்கியல்லவா போனது.
இன்றைக்குக்குதான் சமையலறையை முழுதுமாய் பார்க்க முடிந்தது. ஒரு மாதிரி மயக்கம் வரும்போல் இருந்தது.
நானும் துருவித் துருவி பார்த்தேன். எதாவது ஒரு ஆர்டரில் வைத்திருப்பாளேன்று . ம்ஹூம்.
கடுகு பக்கத்தில் மிளகாய் வத்தல். பக்கத்தில் அரிசி. எண்ணெய் ஜாடி. தேங்காய். வாழைப்பழம் அழுகியது. விடுங்கள்.
“தட்டத்த எடுத்து வச்சுக்க மாட்டேளோ?”
அவளுடைய அதட்டலைக்கேட்டு சுய நினைவுக்குகத் திரும்பினேன்.
“தட்டா? எங்க இருக்கு?”
இந்த களேபரத்தில் ‘treasure hunt‘ மாதிரி தேடி கண்டுபிடிப்பவர்களுக்கு ஒரு மெடல் அவசியம் கொடுக்க வேண்டும்.
எங்கேயோ அடியில் தேடித் துழாவி எடுத்துக் கொடுத்தவள்.
“கண்ணுக்கு மின்னாடி இருந்தாக் கூட தெரியாதே!” என்று கமென்ட் வேறே.
“உனக்கு?”
“உங்களுக்கு பரிமாறிட்டு சாப்பிட்டுக்கறேன்!”
“அதெல்லாம் முடியாது. நீயும் உக்காரு!”
அதிசயமாய் அடிபணிந்தாள்.
இன்னொரு தட்டைத் தேடிக் கண்டுபிடித்து வைத்தாள். இரண்டு டம்ளரில் ஜலம்.
சமைத்ததை எல்லாம் எடுத்து நடுவில் வைத்தாள்.
எனக்கு பரிச்சயமாய் தெரிந்தது சாதமும். மோரும் தான். மற்றதேல்லாம் இதுவரை ‘ பார்த்த நியாபகம் இல்லையோ????’
“இன்னிக்கு காளனும். ஓலனும் பண்ணியிருக்கேனாக்கும். அப்புறம் ‘மெழுக்குவரட்டி”
எனக்கென்னவோ நெஞ்சை அடைப்பது மாதிரி இருந்தது.
“இரு. இரு. காளானெல்லாம் அத்த சமச்சு பாத்ததேயில்லையே. வரட்டியா?”
கலகலவென்று முத்துக்கள் கொட்டினமாதிரி சிரித்தாள்.
“சரியான அசடுதான்!” என்னுடைய கன்னத்தைப் பிடித்து கிள்ளினாள்.
அவள் மூக்கில் ஜொலித்த வைர பேஸரியும். முத்துமாதிரி மின்னிய பற்களும். அவளுடைய ஸ்பரிசமும் . கேலியும் . என்னை எங்கேயோ கொண்டு போனது.
“ரொம்பத்தான் அலட்டாதீங்கோ. காளான் இல்ல. காளன். அவாவா ஏங்குவா. ருசி பாத்தாத்தானே தெரியும்”
அவளைப் பார்த்துக் கொண்டே மளமளவென்று தட்டை காலி செய்தேன்.
ராத்திரியும் அவளுடைய சிரித்த முகம் என்னை ஒரு வழியாக்கி இருக்க வேண்டும்.
அவள் கைகளைப் பிடித்து கொண்டு.
“இந்த விரலுக்கு ஒரு வைர மோதிரம் பண்ணிப் போட வேண்டும்” என்று ஏதோ உளறியிருப்பேன் போலிருக்கிறது!
“நீங்க ராத்திரி சொன்னதக் கேட்டு எனக்கு தூக்கமே!”
“ஐயய்யோ. ராத்திரி என்ன சொல்லித் தொலைச்சேன்?”
“என் விரலப்பிடிச்சிண்டு. இப்படி சமைக்கிற கைக்கு ஒரு வைர மோதிரம் போடறேன்னு?”
“வைரமா? இங்க கவரிங் மோதிரத்துக்கே லாட்டிரி!”
“நினைச்சேன். குடிகாரன் பேச்சு. விடிஞ்சா போச்சு!”
“கோச்சுக்காதடி. அடுத்த மாசம் பாரு”
ஒரு மாதிரி மெழுக்குவரட்டி. எரிசேரி.
புளிசேரி. அவியல். துவரன். அடப்பிரதமன். சக்கப்பிரதமன். பழம்பொரி . என்று என்னேன்னமோ பண்ணி என்னை அசத்திவிட்டாள்.
ஒரு வாரத்தில மயக்கமெல்லாம் தெளிஞ்சு பழைய நிலைக்குத் திரும்பியதும் நாக்கு அரச்சுவிட்ட சாம்பாருக்கும். பருப்புருண்டை மோர்க்குழம்புக்கும்.
பருப்புசிலிக்கும். வத்தக்குழம்புக்கும். பாவக்காபிட்லைக்கும். ஏங்கியது!
“சுபா. உனக்கு பருப்புருண்டை மோர்க்குழம்பு பண்ணத் தெரியுமோ?”
“ஏன். நான் பண்ற சமையல் அலுத்துடுத்தா? காளன விழுந்து விழுந்து சாப்பிட்டேளே. அதுதான் மோர்க்குழம்பு. குழந்தைக்கு அம்மை ஓர்ம வந்துடுத்தாக்கும்?
மந்திரவாதி மாதிரி என் மனசிலுள்ளதைக் கண்டுபிடித்து விட்டாளே.
அதிர்ஷ்ட தேவதை என்மேல் பரிதாபப்பட்டிருக்க வேண்டும்.
“இந்தாங்கோ. கடுதாசி. அம்மையாக்கும்னு தோணறது”
“அம்பி. நீ கண்ணுக்குள்ளே இருக்கடா. சுபத்திராவையும் பாக்கணும்போல இருக்கு.
இன்னைக்கு ராத்திரி ரயில்ல கிளம்பி வரேன். ஒரு மாசம் இருக்கலாம்னு உத்தேசம்.
உனக்குப் பிடிச்ச மாகாணிக் கிழங்கு. மிளகு இஞ்சி. வடுமாங்கா. குழம்பு வடாம். எல்லாம் கொண்டு வரேன். ஸ்டேஷனுக்கு மறக்காம வந்துடு. எனக்கு திக்கு திச தெரியாது”
என்னத்த திக்கு திச. இருக்கிறதே எண்ணி நாலு வீடு.
அம்மா இளைத்திருந்தாள்.
சுபத்திராவை அப்படியே கட்டிக் கொண்டாள்.
“என் தங்கமே. நன்னா பாத்துக்கறயாம். அருமையா சமைக்கறயாம். எல்லாம் விவரமாய் எழுதி இருந்தான். ”
“அம்மா. அவர நம்பாதீங்கோ. பல்லக் கடிச்சுண்டு சகிச்சிண்டிருக்கார். நீங்க எப்படா வருவேள்னு காத்திண்டிருக்கா. மிளகு குழம்பும். சுட்ட அப்பளமும் வேணுமாம்!”
“நன்னா சொன்ன போ. நானே உன் சமையலை சாப்பிடணும்னுதானே ஓடி வந்தேன். நீதான் சமைக்கப் போற”
ஒரு வினாடியில் என் கற்பனைக் கோட்டை மடமடவென சரிந்தது.
அப்போதுதான் சனிபகவான் நாற்காலியைப் போட்டுக்கொண்டு நடுவீட்டில் உட்கார்ந்திருக்க வேண்டும்.
மறுபடி புளிசேரி. மிளகூட்டல். பப்படம். இதில் சமையல் குறிப்புக்கள் வேற.
“சுபத்திரா. இந்த காளனுக்கு சேனைக்கிழங்கு தான் போடணுமா?”
தேங்காயெண்ணைதான் எல்லாத்துக்கும் இல்லையா?”
“ஓ. வெளிச்செண்ணயச் சொல்றேளா?”
நினைத்தது ஒண்ணு. நடந்தது ஒண்ணு!
அம்மா அழகாய் பாலக்காடு சமையலைக் கற்றுக்கொண்டுவிட்டாள்.
கிட்டத்தட்ட அம்மா வந்து இருபது நாளாகிவிட்டது.
திடீரென்று நினனைத்துக்கொண்டவளாய் சுபத்திரா அம்மாவிடம் கேட்டாள்.
“அம்மா. முக்கியமானத மறந்தே போய்ட்டேன். உங்க கிட்டேந்து நிறைய கத்துக்கணுமே. எனக்கு இந்த பொரிச்ச குழம்பு. உருளைக்கிழங்கு பொடிமாஸ். இதெல்லாம் சொல்லிக் குடுங்கோ. ”
“எனக்கென்னமோ பாலக்காடு சமையல்தான் ருசியா தோணறது. நீயே இந்த வாட்டி சமச்சுடு. நானும் இனிமே அங்கபோய் ஓலன். காளன்தான். அசத்திட மாட்டேன். !!”
‘நினைப்பதெல்லாம் நடந்து விட்டால் தெய்வம் ஏதுமில்லை.
நடந்ததையே நினைத்திருந்தால் அமைதி என்றுமில்லை’
கண்ணதாசன் கவிதை வரிகளுக்கு. P. B. சீனிவாசன் குரல் கொடுக்க. M. S. V. இசையில் முத்துராமனுக்கு பதில் நான் பாடிக்கொண்டிருக்கிறேன்.
அம்மா கிளம்பி போய்விட்டாள். போகும் போது ஒரு மாசத்துக்கு வேண்டிய பப்படத்தை பேக் பண்ணிக் கொடுத்தாள் சுபா.
அம்மா போய் ஒரு வாரம் இருக்கும்.
***
இப்படியே வருஷம் ஓடினதே தெரியவில்லை.
“ஏன்னா? உங்களுக்கு திரிபுரசுந்தரிய நியாபகம் இருக்கோ?”
“நீதான் தினமும் லலிதா ஸகஸ்ரநாமம் சொல்லியாறதே. எப்படி மறக்கும்?”
“அதில்லை. நாம திருச்சில இருந்த போது பக்கத்தாத்தில இருந்தாளே. நீங்க கூட அவாத்தில சாப்பிடகூப்பிட்டா நாக்க நீட்டிண்டு ரெடியா நிப்பேளே!”
எனக்கும்தான் ரோஷமில்லையே!
“ஆமா. ஒரு மிளகு குழம்பு பண்ணுவா பாரு!”
“போறும் போறும். வழிஞ்சது”.
“அவ YouTubeல ‘சுந்தரி சமையல்’ னு ஆரம்பிச்சிருக்காளாம். ஒரு மாசத்துக்குக்குள்ள ஒரு லட்சம் பேர் சேந்தாச்சாம். ஒரு நாளைக்கு மட்டும் இருபதியிரம் பேர் பாக்கறான்னா பாத்துக்கொங்கோ”.
“நானும் சேந்து கத்துக்கப்போறேன்!”
“ரொம்ப நல்ல சமாச்சாரமாச்சே!”
“வாயால சொன்னா போறுமா?”
“என்னக் கத்துக்க சொல்றியா??”
“எனக்கு டேப்லெட். ஐ பாட். இல்லைனா ஒரு ஸ்மார்ட் போன் உடனே வேணும். பாத்துண்டே ஒரு நிமிஷத்தில பண்ணிடமாட்டேனாக்கும்?”
***
“சித்த வரேளா!”
எமர்ஜென்சி அலாரம் அடித்துவிட்டது.
“சீக்கிரம் வாங்கோ!”
“என்ன சுபா?”
“இத கொஞ்சம் பிடிச்சுக்கொங்கோ!”
“எதச் சொல்ற?”
“இந்த youtube தான். சுந்தரியோட ‘பருப்புருண்டை மோர்க்குழம்பு’ விட்டா போய்த் தொலைக்கிறது”
“இத அப்பப்போ நிறுத்தி வைக்கலாமே”
“அதெல்லாம் எனக்கு தெரியாது. அவ ஒரு புடவை கட்டிண்டிருந்தா பாருங்கோ. அதப்பாத்துண்டே இருந்தத்தில என்ன சொன்னாள்னு கேக்கல. ரொம்ப ஸ்டைலாத்தான் இருக்கா. !முதல்லேந்து என்ன சொல்றான்னு கேளுங்கோ!”
***
“வணக்கம். நேத்து நான் சொல்லிக் குடுத்த கத்திரிக்கா ரசவாங்கிக்கு அமோக வரவேற்பு குடுத்தேள். ”
“ஆமா. தற்பெருமையப் பாருங்கோ. எப்போதுமே அவளுக்கு ராங்கி ஜாஸ்தி”
“சுபா. முதல்ல உன்னோட இந்த ரன்னிங் கமென்ட்ரிய நிறுத்து. அவ என்ன சொல்றான்னுதான் கேளேன்”
“ஆமா. உங்களுக்கு மத்த பொம்மனாட்டியச் சொன்னா பொறுக்காதே”
“இப்போ நான் இருக்கணுமா. போட்டுமா”
“சரி. முதல்லேந்து . நன்னா. ஒழுங்கா பாருங்கோ”
“இன்னிக்கு பருப்பருண்டை மோர்க்குழம்பு செய்யலாம். இதுக்கு முக்கியமான புளிச்ச தயிர் தேவை”
“நம்மாத்தில எப்பவுமே புளிச்ச தயிர் தானே”
“அரை மூடி துருவின தேங்காய்”
“தேங்காய் துருவி வச்சுக்கணும்னு சொல்ல வேண்டாமோ?”
“பருப்புருண்ட எப்படி பண்றதுன்னு பாக்கலாம்! ஏற்கனவே ஊறவச்ச பருப்பை”
***
“என்னது. ஏற்கனவே ஊறவச்சதா. முதல்ல அதச் சொல்ல வேண்டாமா. இப்போ ஊற வச்சு நான் எப்போ பண்றது. ஆனாலும் சுந்தரி கொஞ்சம் திமிர் பிடிச்சவதான். இவளுக்கு போய் ஒரு லட்சம் பேர் சேந்திருக்காளாம். முதல்ல நிறுத்துங்கோ”
இதேல்லாம் தெரிஞ்சுதான் அம்மா சாமர்த்தியமாய் நழுவி விட்டாள்.
“சுபா. விடு. நீ சமைக்கிறதே நன்னாருக்கு!”
மறுபடியும் ஒரு நாள் ஒரு லெட்டரை எடுத்துக் கொண்டு வந்தாள்.
“நானே பிரிச்சு படிச்சுட்டேன். அம்மை வரளாம்”
“அம்மையும் வரவேண்டாம். காலராவும் வரவேண்டாம்”
“என்ன உளற்றேள்?”
இதை இப்படியே விடக்கூடாது. இங்கே அம்மா வந்ததால்தானே இத்தனை ஆட்டம் ஆடின. இப்போ நடக்கப்போறதே வேற. (மனசுக்குள் தான் ) . கறுவிக் கொண்டேன்.
“பத்து நாள் ஆபீசுக்கு லீவு. நாம நாளைக்கே மாயவரம் கிளம்பறோம்”
தந்தியே குடுத்து விட்டேன். எங்கேயாவது அம்மா கிளம்பி விட்டால்?
ஆரத்தி கரைத்து வரவேற்றாள் அம்மா. அப்பா உடம்பு முன்னைக்கிப்போ தளதளவென்றிருந்தது!
“வாடா அம்பி. வாம்மா சுபா. இப்பவாவது வரத்தோணித்தே!”
“அம்மா நமஸ்காரம் பண்றோம்”
“நன்னா இருங்கோ. அடுத்த தடவை குட்டி சுபாவோடதான் பாக்கப் போறேன்!”
“பல்தேச்சுட்டு வாங்கோ. காப்பி கலந்துண்டு வரேன்”
கமகம காப்பி. ஒவ்வோருத்தர் கையிலும். அப்பாவுக்கும் தான். இது மூணாவதாய் இருக்கும். எதற்கும் கொடுப்பினை வேணும்!
“பாவம். அலுத்துப் போய் வந்திருக்கேள். சீக்கிரம் இல போட்டுடறேனன். நடுவில பசிச்சா இன்னொரு வாய் ! கேளுங்கோ. ”
உடனே சுபாவைத் திரும்பி பார்த்தேன். எதிர்பார்த்த படியே என்னை முறைத்துப் பார்த்தாள். எனக்கென்ன பயம். ??இனி பத்து நாளைக்கு என்னை ஒண்ணும் பண்ண முடியாது. !
பதினோரு மணிக்கு இலை போட்டு விட்டாள். பெரிய தலைவாழை இலை. கொல்லைப்பக்கம் வாழைமரத்துக்கு பஞ்சமேயில்லை. !!.
மூணு இலை!
“அம்மா. எதுக்கு மூணு? நானும் பரிமாறிட்டு உங்களோடதான் உக்காருவேன்!”
“அதேல்லாம் நாளேலேர்ந்து. இன்னிக்கு ஒரு நாள். நான்தான் பரிமாறுவேன்!”
இலையில் தண்ணீர் தெளித்து . துடைத்து. தயாரானேன். நேற்றிலிருந்தே வயிற்றை காயப்போட்டு வைத்திருக்கிறேனே. !
அம்மாவின் புடலங்காய் பொரிச்ச குழம்பும். வாழைக்காய் பொடிமாசும்!
முதலில் பால் பாயசம்! அம்மா. உன் கை மணமே தனிதான்!
அம்மாவின் ஸ்பெஷல் வாழைப்பூ பருப்புசிலிக்கு நாக்கை நீட்டிக் கொண்டு காத்திருந்தேன்!
அடுத்தடுத்து வந்து விழுந்த பதார்த்தங்கள். அணுகுண்டுகள்!
நேந்திரங்கா வறுவல். மாம்பழ புளிசேரி. சக்க வரட்டி. அவியல். காளான். ஓலன்!
“சுபா. அப்பாவுக்கு எரிசேரின்னா இப்போ உயிர். பப்படம் இல்லைன்னா சாப்பாடே எறங்காது”
சுபா இலையிலிருந்து எழுந்திருக்கப் பார்த்தாள்.
“எதுக்கு எந்திருக்கிற. பாதி சாப்பாட்ல எந்திருக்கக் கூடாது”
“பப்படம்னதும் நியாபகம் வந்தது. இரண்டு மாசத்துக்கு தகையறாமாதிரி பப்படமும். இஞ்சிப் புளி. நுறுக்கு மாங்கா ஊறுகாயும் போட்டு எடுத்துண்டு வந்திருக்கேனாக்கும்.
குடுக்கலாமேன்னுட்டுதான்!”
போனதடவ வந்தப்போவே அப்பாக்கு பிடிக்கும்னேளே!
கைகாரி. இஞ்சிப் புளியை லஞ்சம் குடுத்து அப்பாவையும் உன்கட்சியில இழுத்து விட்டாயே. அரசியலில் இருக்க வேண்டியவள்.
“அம்மா. அருமையா சமச்சிருக்கேள். உங்க கைக்கு தங்க வளதான் பண்ணிப் போடணும்!”
“நல்லவேளை நியாபகப்படுத்தின. அப்பா உனக்கு ஒரு ஜோடி தங்க வள ஆர்டர் பண்ணி ரெடியா வச்சிருக்கா. சாப்பிட்டுட்டு வா. போட்டு விடறேன்!
அப்பா இலையை ஒட்ட வழித்து சாப்பிட்டு . பெரிய ஏப்பம் ஒன்றையும் விட்டுவிட்டு எழுந்தார்!
நான்???