ஏன்டா அம்பி கோவில் நடை சாத்தியிருக்கு? என்று ஊரிலிருந்து திரும்பி வந்துக் கொண்டு இருந்த மணி மாமா விளையாடிக் கொண்டு இருந்தவர்களிடம் கேட்டபடி அக்ரஹாரத்திற்குள் நுழைந்தார்.
கடைசி வீட்டு சுப்புனி மாமாவோட மாமி தவறிட்டா மாமா !என்றனர் விளையாடியவர்கள்.
அச்சோ,,என உச் கொட்டியபடி நடந்து தெரு மத்தியில் இருக்கும் அவர் அகத்திற்கு சென்று,கை கால் அலம்பி உள்ளே சென்றார்.
மணி அய்யர். எழுபது வயதை தாண்டிய பெரிய வேத வித்து.
அக்ரஹாரத்திற்கே மூத்தவர்,
மற்றும் ஒரே வைதீகர்,
சாஸ்திர சாம்பிரதாயம் எல்லாம் அத்துபடி, அவர் சொல்படித்தான் அந்த தெரு வாசிகள் கேட்பார்கள், தெருவில் பத்தே வீடுகள்தான் அய்யர் குடும்பம் இருக்கு, வாரிசு உள்ளவா எல்லாம் வித்துட்டு சென்னை, வெளிநாடுன்னு போயிட்டா, பெண்ணைப் பெத்தவா வேற வழித் தெரியாம கல்யாணம் பண்ணிக் கொடுத்துட்டு ஊரே கதின்னு இருக்கா, அதிலே ஒருத்தர் தான் மணிஅய்யர்.
ஏண்ணா!ரயில் லேட்டா? போன வேலையெல்லாம் நல்லபடியா முடிஞ்சுதா?
இந்தாங்கோ காபி! குடிங்கோ!
சுப்புனியோட தர்மபத்தினி கமலா காலாமாயிட்டாண்ணா!
கேள்விப்பட்டேன்,பாவம் சுப்புனி!
தனியா கிடந்து தவிக்கப்போறான்.
ஸ்நானம் பண்றதுக்கு முன்னாடி, நாம போய். துக்கம் கேட்டுட்டு வந்திடலாம்,என்ன சொல்றேள்? என்றாள் மணி மாமாவின் அகத்துக்காரி.
போகலாம்! என கிளம்பினர்.
வீட்டு வாசலில் ஆள் அரவமே இல்லை. சுப்புனி மட்டும் தனியா தலையிலே கையை வச்சுண்டு தூணிலே சாய்ந்து உட்கார்ந்து இருந்தார். பாவம், அறுபது கூட ஆகலை. வாரிசுனும் யாருமில்லை,
இனி என்ன பண்ணப்போறானோ எனக் கவலையே பட்டனர் பலரும்.
உள்ளே சென்று பார்த்துவிட்டு வெளியே வந்தார். என்ன சுப்புனி இப்படி ஆயிடுத்து ,எப்படி,என்ன என்று விபரம் கேட்டறிந்தார்.
என்ன தெரு மக்கள் யாரையும் காணலை? என யோசனையுடன் வாசல் வந்தார்.
எங்கே அந்த வைத்தா? அவன் வந்தானோ? எனக் கேட்டுக் கொண்டே அவா அகத்துக்கு சென்றார்.
இந்த வைத்தா என்கிற வைத்தியநாதன் தான் அக்ரஹாரத்தில் யார் வீட்டில் இறப்பு நிகழ்ந்தாலும் வேலை எல்லாம் எடுத்து போட்டுன்டு செய்வான்,
என்ன வைத்தா, ஏற்பாடெல்லாம் பண்ணிட்டியா? சாயந்திரம் நடை திறக்க வேண்டாமோ? இப்பவே மதியம் ஆயிடுத்து.
என்ன அண்ணா, தெரியாத மாதிரி கேட்கிறேள்? என்று புதுக் குண்டைப் போட்டான்.
ஏன்? என்ன தெரியாது?என்றார்.
தகனமா? புதைக்கிறதா? சொல்லுங்கோ?
என்னடா? நாம தகனம்தானடா பண்ணனும்.
நாமன்னா? என்றார்.
கமலா யாருண்ணா? அவா யாரு?
நம்ம இடுகாட்டிலே எப்படி? எல்லோரும் ஒத்துப்பாளா?
அதுதான் எங்கள் தயக்கமே. நீங்க வரணும்னுதான் நாங்க காத்துண்டு இருந்தோம், நீங்களே முடிவு சொல்லுங்கோ! என்ன செய்யனும்.
எவ்வளவு காலம் ஆயிடுத்து,
நான் இதை மறந்தே போயிட்டேன், என யோசித்தார்..
அவன் காலேஜ் படிக்கிறபோது அவனும் அவனுடைய அம்மாவும்தான், அப்பா வைதீகம்தான் தொழில் காலமாயிட்டார். இவனுக்கோ படிப்பில்தான் நாட்டம் அதிகம். மூன்றாம் ஆண்டு படிக்கும் போது ஒரு பெண்னை காதலித்து இருக்கிறான்,கல்லூரி முடித்து நல்ல வேலைக்கும் சேர்ந்துட்டு, அம்மாவிடம் இந்த கமலாவை அழைத்து வந்து இவளைத்தான் கல்யாணம் செய்வேன் என்று ஒற்றைக்காலில் நின்றதும், இதெல்லாம் பார்க்க கூடாதுன்னுதான் உங்க அப்பா முன்னமே போயிட்டார் போல, என அவள் அரற்றியதை அவன் காதில் வாங்கவே இல்லை.
வேறு எதைப்பற்றியும் அவன் யோசிக்கவே இல்லை.
அப்பாவற்கு திவசம், தர்ப்பணம், எதுவும் அவன் பண்ணுவதற்கு அருகதையே இல்லை எனக்கூறி மறுத்துவிட்னர்.
அவள் அம்மாவே அதிகாரம் ஒருவருக்கு கொடுத்து காரியம் செய்து வந்தாள், அவள் வாழ்ந்த இரண்டாண்டு காலம் வரை.
இவன் பணி மாறுதல் பெற்று திரும்ப இந்த வீட்டிற்கு வந்து கமலாவுடன் வசிக்க ஆரம்பித்த பின்னும் அம்மாவுக்கும் எந்த முன்னோர் காரியம் செய்துவிக்க யாரும் வருவதில்லை.
ஆனால் அவனே எல்லாம் சம்பிராதாயப்படி கற்றுக்கொண்டு, நியமத்தோடு தர்ப்பணம், திவசம் எல்லாம் கமலாவின் உதவியோடு தானே செய்து வந்தான், அதற்குள் கமலாவும் அனைத்தையும் தெரிந்துக்கொண்டு பிராமணர் முறைப்படி இல்லறம் பேனினாள்.
ஆகையால் அவர்கள் காதல் திருமணம் செய்தது, கமலா வேறு சாதி என்ற நினைப்பே யாருக்கும் வரவில்லை. அந்தளவிற்கு தெருவோடும், வசிக்கும் மக்களிடமும் இருவருமே ஒன்றிப் போயிருந்தார்கள்.
நம்ம இடத்திலே வைத்து தகனக் காரியம் பண்றதுதான் முறை. எனக்குப் படறது என்றார் மணி.
அண்ணா, அது எப்படி? என ஆளாளுக்கு கருத்து சொல்ல முற்பட்டனர்,
யாரெல்லாம் நம்ம இடத்திலே வேண்டாம்னு சொல்றேளோ, அவா சார்பாக ஒருத்தர் சொல்லுங்க, ஏன்? கூடாது என்று.
சுப்புனி பிராமணன், ஆனா அவர் மனைவி கமலா வேற சாதி.
அவா வழக்கப்படி புதைக்கனும், அதுவும் அவா இடத்திலே.
எனக்கு எழுபது வயதாறது, அவன் கல்யாணம் பண்ணின்டபோது இருபத்தி மூன்று வயது. இந்தனை வருஷமா அவனைப் பார்க்கிறேன். மேலும் நான்தான் உங்காத்துக்கெல்லாம் வைதீகம் பண்ணிவைக்கிறேன். நான் சொல்றதைக் கேளுங்கோ, சுப்புனி பிராமணன் ,அவர் அகம் உடையாள் வேற சாதிதான்.
ஆனா பிறப்பால மட்டும் பிராமணர் சாதி வருவதில்லை. அவ அதுக்கப்புறம் செய்த செயல்களாலும், நடந்துண்ட வாழ்க்கை முறையும் அனுஷ்டானங்களும்தான் ஆக்குகிறது. அதுவே அவளை சுப்புனிக்கு ஏத்தபடி ஆக்கிடுத்து.
அதுவும் செத்ததற்கப்புறம் சாதி பார்த்துண்டு இருக்கிறது மனிதாபிமானமே இல்லை.
அதனால யாரும் எதுவும் தப்பா யோசிக்காம ஆக வேண்டியதைப் பாருங்கோ! என எல்லோரிடமும் வேண்டினார்.
மாமா, நாங்கள் பயந்ததே உங்களுக்குத்தான். நீங்க ஏதாவது சொல்வேளோன்னுதான்.
அப்புறமென்ன, மாமாவே சொல்லிட்டா என வைத்தா தன் வேலைகளில் இறங்கினான், கமலா மாமியின் நல்லடக்கம் சுப்புனியாத்து வழக்கப்படி நடந்தது.
சுப்புனியின் அப்பாவுக்கும், அம்மாவுக்கும் நடக்காத வைதீக காரியம் அவனின் அகம்உடையாளுக்கு தானே முன்னின்று குறையில்லாமல் நடத்தி வைத்தார்.