ஒரே சலிப்பா இருக்கு டி மாலா, ஏன் டி என்ன ஆச்சு என கேட்டாள். என் அக்காவ நினைச்சு தான், இல்ல புரியல என மாலா கேட்க பேச ஆரம்பித்தாள் சுதா. என் அக்கா மாமியார், மாமனார் தொந்தரவு இல்லாம அவங்க வீட்டுலயே தங்கியிருக்கா, எப்ப வேணா எந்திரிக்கலாம், நினைச்சா வெளிய போலாம், அவ இஷ்டம்தான் எல்லாமே. அவங்க வீட்டுக்காரர் வெளியூரில வேல பாக்குறாங்க எப்பையாவது தான் வருவாங்க. அவளுக்கு எல்லா வேலையும் அவங்க அம்மா செஞ்சு வச்சுட்டு வேலைக்கு போவாங்க. இவ எந்திரிச்சு பாப்பாக்கு சோறு ஊட்டி விட்டு டிவியில பொம்ம படம் போட்டு விட்டுட்டு இவ போன் பாத்துட்டு இருப்பா.ராஜ வாழ்க்க என கூறினாள்.
உனக்கு மட்டும் என்னடி நல்ல வாழ்க்க தான, அடி போடி நீ வேற காலையில ஆறு மணிக்கு எந்திரிக்கணும், அவருக்கு சமைக்கணும், என் பையனுக்கு ஏழு மாசம் தான் ஆகுது. அவனுக்கு தனியா சாப்பாடு செய்யணும், பாத்திரம் வெளக்கணும், தம்பி யூஸ் பண்ண துணிய துவைக்கணும், வீடு கூட்டணும் கஷ்டம் டா சாமி. ஏன் உன் மாமியார் எந்த வேலையும் செய்ய மாட்டாங்களா, இல்லடி தம்பிய பாத்துபாங்க அவ்ளோதான். அவன் என்ன பொழுதுக்கும் முழுச்சா இருப்பான், தூங்குவான் தான. அதுக்குள்ள தான் நான் எல்லா வேலையும் முடிச்சுருவேனே என்றாள். விடு டி சுதா கொஞ்ச நாள் வெயிட் பண்ணு தம்பி வளரட்டும். அது வரைக்கும் ஒரு உதவியா அவங்க இருக்கட்டும். இல்ல இல்ல இவங்க இருக்க நாள இவங்களுக்கும் சேத்து நான் தான் வேல பாக்கணும். இவங்க இல்லாம இருந்தா எனக்கு வேலையும் கம்மி, நானும் வெளிய போலாம். எப்ப வேணா எந்திரிக்கலாம் என சொன்னாள். எப்படி தனியா அவன பாத்துக்க முடியுமா? ஏன் முடியாது அவனையும் கூட்டிட்டு போவேன்.
எனக்கு அவங்க இல்லாம இருந்தாதான் நல்லா இருக்கும் என்றாள். சமாதானப்படுத்தி விட்டு போனை வைத்தாள் மாலா. இப்படியே நாட்கள் சில கடந்தது. எங்க அம்மாவுக்கு உடம்பு சரியில்ல நீ வீட்ட பாத்துக்கோ என சுதாவின் மாமியார் கூறிவிட்டு ஊருக்கு சென்றுவிட்டார். சுதாவிற்கு சந்தோஷம் தாங்கல அவங்க வரவரைக்கும் என் ராஜ்யம்தான் நெனச்ச இடத்துக்கு போலாம், வரலாம் கேள்வி கேட்க யாரும் இல்ல, என நினைத்து கொண்டே மாலாக்கு போன் போட்டு சொன்னாள். அப்புறம் என்ன டி சுதா நீ கேட்ட மாதிரியே உனக்கு ஃப்ரீடம் கொண்டாடு என பேசிக் கொண்டு இருக்கும்போதே மகனின் அழுகை சத்தம்.
தம்பிய பாரு நான் அப்புறம் பேசுறேன் என கூறிவிட்டு வைத்துவிட்டாள் மாலா. சுதா மாறனை சமாதானப்படுத்தி விட்டு ஏதாவது சாப்பிடலாம் என யோசித்து பாசிபருப்பு பாயாசம் வைப்போம் என முடிவு எடுத்து செய்து முடித்துவிட்டாள். சரி சாப்பிடலாம் என நினைத்து டம்ளரில் ஊற்றியது தான் தாமதம் மீண்டும் அழுதான். இம்முறை பாத்ரூம் போய்விட்டான். அதை சுத்தப்படுத்தி விட்டு வருவதற்குள் பாயாசம் ஆறிவிட்டது. சூடு பண்ணி குடிக்கலாம் என எடுத்து வந்தாள். அவள் மகன் குடிக்க விடவில்லை, சாப்பிடும் ஆசையே போய்விட்டது. சாப்பாடு போட்டு விட்டு தட்டை வைத்தாள். மாறனோ தட்டிற்குள் கையை விட்டுவிட்டான்.
பிறகு தட்டையே இழுத்துவிட சாதம் அனைத்தும் தரையில் கொட்டிவிட்டது, அதை துடைக்க துணி எடுக்கச் சென்றாள். மதிய நேரம் சிறு தூக்கம் போடுவாள், ஆனால் இன்றோ அவளால் தூங்க முடியவில்லை, மகனின் சேட்டைகள் அதிகமாகி கொண்டே இருந்தது. அவளின் கணவர் எவ்வளவு தாமதமாக வந்தாலும் அவளின் மாமியார் சாப்பாடு கொடுத்துவிட்டு தூங்க செல்வார். அவளோ அசதியில் நன்றாக தூங்கி கொண்டிருந்தாள். அவளின் கணவர் பன்னிரண்டு மணிக்கு எழுப்பி தோசை ஊத்த சொல்ல கடுப்பாகி நடந்ததை கூறி கத்தினாள். அவனும் சரி நீ போய் ரெஸ்ட் எடு நான் பாத்துக்குறேன் என்றான். பரவால்ல நானே ஊத்துறேன் என சொல்லிவிட்டு வேலையை முடித்துவிட்டு தூங்கச் சென்றாள்.
நாளை ஞாயிற்றுக்கிழமை அவருக்கு ஆபிஸ் இல்லை எனவே லேட்டாக எழுந்திருக்கலாம் என நினைக்க அவளின் கணிப்பு பொய்யாகும் வகையில் ஐந்து மணிக்கெல்லாம் எழுந்து விட்டான். அவளின் கணவர் ரமேஷ் ஒன்பது மணிக்கு எழுந்து வந்தான், என்ன சாப்பாடு என கேட்க சுதா முறைத்தாள். இவன பிடிங்க மொத நான் போய் பிரஸ் ஆயிட்டு வரேன் என்றாள். பிரஸ் ஆயிட்டு துணியை ஊற வைத்துவிட்டு பாத்திரம் விளக்கி கொண்டிருக்கும் போதே சுதா தம்பி பாத்ரூம் போய்டான் வா என்றான். அவள் சுத்தம் செய்து கொண்டிருக்கும் போதே போனை காதில் வைத்துக் கொண்டு வெளியில் கிளம்பி விட்டான். அவள் மாறனை தூங்க வைத்துவிட்டு துணி துவைக்க சென்றால் வெயில் பயங்கரமா அடித்தது வேறு வழியில்லை துவைத்து விட்டு கீழே வந்தாள். வீட்டு வேலைகளை முடித்துவிட்டு தூங்கலாம் என நினைக்கயில் மாறன் எழுந்து விட்டான். அவனை தூக்கி சாப்பிட கொடுத்தால் இரண்டு மணி ஆகிவிட்டது.
ரமேஷ் அப்பொழுது தான் வந்தான், அவனுக்கு சாப்பிட கொடுத்தால் முடித்துவிட்டு தூங்க போனான். இவன கொஞ்ச நேரம் பாத்துக்குங்க நான் சாப்பிட்டு வரேன் என்றாள். நீ இன்னுமா சாப்பிடல என்றான். வந்தா முத நீ சாப்பிட்டியான்னு கேட்டிங்களா உங்க வயிறு நெரஞ்ச போதும் என திட்ட போய் சாப்பிடு நான் பாத்துக்குறேன் என ரமேஷ் கூற சுதாவும் சென்றாள். அவனை தூங்க வைத்துவிட்டு இவளும் சிறிது நேரம் தூங்கினாள். இவ்வாறாக இரு வாரங்கள் சென்றது. மாலா சுதாவை பார்க்க வந்திருந்தாள், வெளிய போனியா நல்லா என்ஜாய் பண்ணியா என கேட்டாள்.
அட நீ வேற ஏன்டி பாத்ரூம் கூட போக முடியல இதுல எங்க இருந்து நான் வெளிய போறது. நடந்ததை கூறி மிகவும் வருந்தினாள். அத்தை இருக்கப்ப இவ்ளோ கஷ்டம் இல்லடி மாறன அவங்க பாத்துபாங்க நான் வேல முடிச்சுட்டு டைம்க்கு சாப்டு போன பாத்துட்டு நல்லா தூங்கி எந்திருப்பேன். எல்லாம் மாறிப்போச்சு எப்ப வருவாங்கன்னு இருக்கு என்றாள் சுதா. நீ கூப்ட இப்பயே வந்துருவாங்க என்கிறாள் மாலா. என்னடி சொல்ற எனக்கு ஒன்னும் புரியல என்கிறாள் சுதா. அம்மா வாங்க என மாலா அழைக்க சுதாவின் மாமியார் கோதை உள்ளே வர சுதா ஓடிப்போய் அணைத்துக் கொண்டாள்.
இவகூட எப்படி வந்தீங்க உங்க அம்மாக்கு சரி ஆயிடுச்சுல உங்க அம்மா எப்படி இருக்காங்க இனிமே போகமாட்டிங்கள என்றால் கொஞ்சம் இரு சுதா உங்க அத்த எங்கையும் போல என் வீட்ல தான் இருந்தாங்க. உன் வீட்லயா தெளிவா சொல்லு மாலா என்றாள் சுதா. நீ போன் பண்ணி வச்ச உடனே நான் அவங்களுக்கு கால் பண்ணி பேசுனேன். எங்க வீட்ல வந்து இருங்க அவ புரிஞ்சிக்கட்டும் அப்பறம் போலாம்ன்னு சொன்னேன். ஆனா உங்க அத்த தான் புலம்பிக்கிட்டே இருந்தாங்க அவ பாவம் சாப்டாளோ இல்லையோன்னு. நிஜமா குடுத்து வச்சது உங்க அக்கா இல்ல நீ தான்டி சுதா சாப்பிட்டியா வச்சியான்னு கேக்க ஒரு ஆளு வேணும்டி என மாலா சொல்ல சுதா மாலாவை அணைத்துக் கொள்ள சுதா தன் தவறை உணர்ந்து கொண்ட நிம்மதியோடு மாலாவின் கார் மறைந்தது.