அனுபவம் புதுமை

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: January 19, 2019
பார்வையிட்டோர்: 6,164 
 

புரட்டாதி மாதம். சிட்னியில் குளிர் குறையத் தொடங்கிவிட்டது. மாலை நேரம். துவாரகன் தனது நண்பி லோறாவுடன் நியூமன் என்ற நோயாளியை சந்திக்கப் போயிருந்தான்.

துவாரகனும் லோறாவும் மருத்துவபீட இறுதிவருட மாணவர்கள். பேராசிரியர் நெயில் றொபின்ஷன் பாடமொன்றின்—long integrated population medicine (IPM)— ஒப்படைக்காக மாணவர்களைப் பல குளுக்களாகப் பிரித்திருந்தார். . Choronic diseases – asthma, cancer, diabetes, heart diseases – சம்பந்தமான நோயாளர்களை, வருடத்திற்கு குறைந்தபட்சம் பன்னிரண்டு தடவைகள் நேரில் சந்திக்க வேண்டும். நோயாளியுடன் கலந்துரையாடி குறிப்புகள் எடுக்க வேண்டும்.

இவர்கள் குழுவில் ஜொனதான், அன்டி நூஜ்ஜின், கான், ஜெசிக்கா, லோறா, ஜுவான் என மொத்தம் ஏழு பேர்கள் இருந்தார்கள். விரிவுரைகள் இல்லாத மாலை நேரங்களில் துவாரகனும் லோறாவும் நியூமனை சந்திப்பது வழக்கம்.

பெரியதொரு வளவிற்குள் அந்த வீடு தனிமையில் இருந்தது. காரை கேற்றுக்குச் சமீபமாக நிறுத்திவிட்டு கொழுவியிருக்கும் கேற்றைத் திறந்து கொண்டு உள்ளே போனால், முற்றத்திலே சாய்வணைக் கதிரையில் சரிந்தபடி ஆகாயத்தைப் பார்த்துக் கொண்டு நியூமன் இருப்பார். அவருக்கு ஒரு எழுபது வயது இருக்கலாம். அந்த முதியவரின் ஒத்துழைப்பு இவர்களுக்கு வியப்பைத் தந்தது. எல்லா நோயாளிகளும் இந்தத் திட்டத்திற்கு உதவிபுரிய முன்வருவதில்லை. நோயின் உக்கிரத்துடன் போராடிக்கொண்டிருக்கும் அவர்கள் தம் எதிர்கால சந்ததியினர் வளமாக வாழ செய்யும் ஒரு சேவை இது.

கேற்றிலிருந்து வீட்டின் வாசல்வரை செல்லும் பாதையின் இருமருங்கிலும் அழகாக புல் வெட்டப்பட்டிருக்கும். வேலிக்கரையோரமாக அப்பிள், பீச்சஸ் எலுமிச்சை மரங்கள். சாய்வணைக்கதிரைக்குப் பக்கத்தில் ஒரு குட்டி மேசையும், இவர்களுக்கான கதிரைகளும் இருக்கும். மேசைக்குக்கீழே விரிக்கப்பட்டிருக்கும் பொலித்தீன் கடதாசி மீது சில தட்டுமுட்டுச் சாமான்களுடன் நாலைந்து புத்தகங்களும், அன்றைய புதினப்பத்திரிகையும் இருக்கும்.

இன்று நியூமனைக் காணவில்லை. மூன்று கதிரைகள் போடப்பட்டிருந்தன. இவர்கள் தயங்கியபடியே மேசைக்குக் கிட்டப் போய் நின்று, சுற்றுமுற்றும் பார்த்தார்கள். மேசையில் நிறையப் புத்தகங்கள் இருந்தன. கதவு திறந்து கொண்டது.

நியூமன் வெளியே வந்தார். கம்பீரமான ஆடையுடன் ஒரு கனவான் போலக் காட்சி தந்தார். இவர்களுக்காகவே ஜன்னலிற்குள்லால் பார்த்துக் கொண்டு நின்றிருப்பார் போலும்.

“இன்று நான் ஹொஸ்பிற்றல் போயிருந்தேன். சீக்கிரம் உடைகளை மாற்றிவிட்டு வந்துவிடுகின்றேன்” சொல்லிக்கொண்டே மீண்டும் வீட்டிற்குள் நுழைந்தார் நியூமன்.

நியூமனுடன் உரையாடி அவரின் உடல் நிலைமைகளைப் பதிந்து கொள்வார்கள். பாவிக்கும் மருந்துகள், இரத்த அழுத்தம், இதயத்துடிப்பு என்பவற்றைக் குறித்துக் கொள்வார்கள். மெடிக்கல் செக் லிஸ்ற் நிரப்புவார்கள். இடையிடையே பலதும் பத்தும் கதைத்துக் கொள்ளுவார்கள்.

அந்தப்பெரிய பங்களாவில் நியூமன் மாத்திரமே இருந்தார். அவரின் மனைவி இறந்து பல வருடங்கள் ஆகிவிட்டன. அவரின் மகள், தனது கணவன் பிள்ளைகளுடன் நான்கு வீடுகள் தள்ளி இருக்கின்றாள். நியூமனிற்கு மூப்பு காரணமாக கண்பார்வை குறைந்திருந்தாலும் தனக்குரிய வேலைகளைத் தானே செய்து வருகின்றார். துவாரகன் அங்கிருக்கும் சிலதருணங்களில் அவரின் குடும்ப வைத்தியர் அங்கு வந்து போவதைக் கண்டிருக்கின்றான். தவிரவும் அருகே இருக்கும் நண்பர் ஒருவர் கடையில் சில பொருட்களை வாங்கி வந்து கொடுப்பார், நியூமனுடன் உரையாடுவார்.

துவாரகன் கடந்த ஆறு மாதங்களாக இங்கே வந்து போகின்றான்.

நீண்ட நேரமாக நியூமனைக் காணாததால் துவாரகன் வீட்டிற்குள் சென்று அவரைப் பார்த்தான். அவர் தனது அறைக்குள் அரையும் குறையுமாக ஆடை மாற்றியபடி விழுந்து கிடந்தார்.

அவசரமாக வெளியே வந்த துவார்கன் லோறாவை உதவிக்கு அழைத்தான். அம்புலன்ஸிற்கு ரெலிபோன் செய்தான். லோறா விரைந்து சென்று, நான்கு வீடுகள் தள்ளியிருந்த அவரது மகளைக் கூட்டி வந்தாள்.

அம்புலன்ஸ் வந்து நியூமனை ஏற்றும்போது அவரது உடல் அசைவற்றுக் கிடந்தது.

“நியூமன் இறந்துவிட்டாரா?” லோறா துவாரகனின் கைகளைப் பற்றினாள். அவளது கை நடுங்கியது.

”நியூமன் இறந்துபோய் விட்டால் எங்கள் படிப்பு ஒருவருடம் தாமதம் ஆகுமல்லவா?” ஏங்கிய விழிகளுடன் துவாரகனைப் பார்த்துக் கேட்டாள் லோறா.

“உண்மைதான். இடையில் ஒரு நோயாளி இறந்துவிட்டால், எங்களுக்கென்று இன்னொரு நோயாளியை பல்கலைக்கழக நிர்வாகம் தரமாட்டார்கள். பயப்படாதே! அப்படியொன்றும் நடந்துவிடாது. நல்லதையே நினைப்போம். நியூமன் சுகம்பெற்று வர பிரார்த்திப்போம்” சொல்லியபடியே காரை ஸ்ராட் செய்தான் துவாரகன்.

லோறாவை இறக்கிவிட்டு துவாரகன் வீடு திரும்ப இரவு ஒன்பது ஆகிவிட்டது. அவனது அப்பா டைனிங் ரேபிளில் அவனுக்காகக் காத்திருந்தார். சுகயீனம் காரணமாக ஐம்பத்தைந்து வயதில் ஓய்வு பெற்றுவிட்டார். தினமும் அவன் வரும் வரையும் காத்திருந்து அவனுடன் இரவுச்சாப்பாட்டை சாப்பிடுவதுதான் அவரது வழக்கம். அம்மா படுக்கைக்கு நேரத்துடனே போய்விடுவார். அவர் இன்னமும் றெஸ்ற்ரோரன்ற் ஒன்றில் பகுதி நேரமாக வேலை செய்து வருகின்றார். சிலவேளைகளில் இவர்களின் அரவம் கேட்டு எழுந்து வருவார்.

“அடுத்த வருடம் நீ ஒரு டொக்ரர் ஆகிவிடுவாய்… என்ன?”

அப்பா சொல்லிவிட்டுச் சிரிக்கின்றார்.

ஆனால் துவாரகனால் சிரிக்க முடியவில்லை. அவன் மனம் பாறைபோல் இறுகிக் கிடந்தது. நியூமனின் உடல்நிலை அவனைப் பயமுறுத்தியபடி இருந்தது.

அப்பா மகனை உற்றுப் பார்த்தார்,

நியூமன் வைத்தியசாலைக்குச் சென்ற மூன்றாம்நாள் பேராசிரியர் நெயில் றொபின்ஷனுடன் இவர்களின் செயல்திட்டம் தொடர்பான ஒரு கந்துரையாடல் இடம்பெற்றது. பேராசிரியர் நெயில் றொபின்ஷன் இவர்களின் அனற்ரொமி விரிவுரையாளர். அத்துடன் செயற்திட்டத்திற்கும் பொறுப்பானவர். எந்த நேரமும் குறுகுறுத்தபடி ஓடித்திரிவார். அவரின் விரிவுரைகள் மாணவர்களை உறக்கத்திற்கு அழைத்துச் செல்வதில்லை. தனது குரலை ஏற்ற இறக்கத்தில் வைத்திருந்து மாணவர்களைக் கவர்ந்துவிடுவார். இடையிடையே நகைச்சுவைக்கதைகள் சொல்லி உரையாடலை நகர்த்திச் செல்வார்.

இவர்களின் குழுத்தலைவன் ஜொனதான் செயல்திட்டம்பற்றி விளக்கிக் கூறினான். தமது நோயாளி ஒரு அற்புதமான மனிதர் என்றும், தமது திட்டத்திற்கு முகம் கோணாமல் முழு ஒத்துழைப்பும் தருவதாகப் பெருமை கொண்டான். சக மாணவி கான் அண்டி நூஜ்ஜினின் காலை உழக்கினாள். அவன் குமுறிவரும் சிரிப்பை அடக்கிக் கொண்டான். கான் எதையும் சீரியஸ் ஆக எடுத்துக் கொள்ளமாட்டாள். துவாரகனின் மனம் திக்குத்திக்கென்று அடித்தது.

அதன்பின்னர் வந்த அடுத்த மூன்று மாதங்களில், துவாரகன் இரண்டு தடவைகள் நியூமனைச் சந்தித்தான்.

அவன் தனது ஒப்படைக் குறிப்புகளில் நியூமனின் உடல்நிலை நாளுக்குநாள் மோசமடைந்து வருவதாகத் குறிப்பிட்டான்.

வருட இறுதியில் ஒப்படை தொடர்பான நேர்முகம் வந்தது. நேர்முகம், பரீட்சை என்பவற்றில் இவர்கள் குழுவில் உள்ள அனைவரும் சிறப்பாகச் சித்தியடைந்தார்கள். பட்டமளிப்பு விழா முடிவடைந்து எல்லாரும் திக்கொன்றாக வேலை எடுத்துக் கொண்டு போய்விட்டார்கள்.

பல்கலைக்கழக வாழ்க்கையின் பின்னர் எல்லாரும் பிரிந்து சென்றுவிட்டார்கள். ஒவ்வொருவரும் ஒவ்வொரு இடத்தில் வேலை செய்கின்றார்கள். சிலர் திருமணமும் செய்துவிட்டார்கள். இருப்பினும் ஒருவரோடு ஒருவர் தொடர்பைப் பேணி வந்தார்கள். துவாரகன் பெண்டிக்கோ என்ற இடத்தில் வேலை செய்கின்றான்.

‘நியூமன் என்ற நோயாளியைப் பற்றி இடையிடையே கதைத்து சிரித்துக் கொள்வார்கள். அப்போது பேராசிரியர் நெயில் றொபின்ஷன் பற்றியும் கதைத்துக் கொள்வார்கள்.

“ஒருநாளைக்கு நியூமனைச் சந்திக்க வேண்டும்” என்று அண்டி அடிக்கடி சொல்லிக்கொள்வான்.

”அது ஒரு காலம். கத்தி முனையில் நடந்தோம்” என்று ஏக்கப் பெருமூச்சு விடுவான் துவாரகன்.

பேராசிரியர் நெயில் றொபின்ஷன், தனது மாணவர்களின் மருத்துவத் திட்டத்திற்கு பங்களிப்பு செலுத்திய நோயாளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் முகமாக அன்றைய நாளைத் தெரிவு செய்திருந்தார்..

ஒவ்வொரு நோயாளர்களாகக் கதைத்து ரெலிபோனில் மகிழ்ச்சி ததும்ப உரையாடிக் கொண்டிருந்தார் பேராசிரியர் றொபின்ஷன். பட்டியலில் றொபேர்ட் நியூமனின் பெயர் அடுத்ததாக இருந்தது.

“காலை வணக்கம். றொபேர்ட் நியூமனுடன் பேச முடியுமா?”

“அவர் இறந்து எட்டு மாதங்கள் ஆகிவிட்டன” மறுமுனையில் ஒரு பெண்குரல் ஒலித்தது.

“சிரமத்திற்கு மன்னிக்க வேண்டுகின்றேன். அவர் எப்போது இறந்தார் என்று சொல்லமுடியுமா?”

”கடந்த வருடம் புரட்டாதி மாதம் 15 ஆம் திகதி.”

“மிக்க நன்றி” சொல்லிவிட்டு ரெலிபோனை வைத்தார் பேராசிரியர். அவரது முகம் கொழுந்துவிட்டுச் சிவந்தது. என்றுமில்லாதவாறு கெட்ட வார்த்தைகளினால் சத்தமிட்டார். மேசையின் மேல் ஓங்கி ஒரு குத்து விட்டார். அதிர்ச்சியில் மேசையில் இருந்த சில பொருட்கள் பொலபொலவெனக் கீழே விழுந்தன. கவலை மேலிடத் தொப்பென கதிரைக்குள் விழுந்து கொண்டார். இப்படி ஒருநாளும் பேராசிரியர் நடந்து கொண்டது கிடையாது. அவரின் சத்தம் கேட்டு அடுத்த அறைக்குள் இருந்தவர்கள் கண்ணாடியினூடாக உற்றுப் பார்த்தார்கள். பேராசிரியரின் குள்ளமான உடல் கதிரைக்குள் புதைந்திருந்தது. அந்தக் காட்சி அவர்களையும் கவலை கொள்ள வைத்தது.

சிறிது நேரத்தின் பின்னர் அருகே இருந்த றோயரை இழுத்து, ஃபைல்களைப் புரட்டிப் பார்ப்பதும் வெளியே எறிவதுமாக இருந்தார் நெயில் றொபின்ஷன். குறிப்பிட்ட அந்த ஃபைல் வந்ததும் கட்டுகளுக்கிடையில் இருந்து அதனை உருவி எடுத்தார்.

’ம்’ என்று முனகிக் கொண்டார்.

“எவ்வளவு சாதுர்யமாக என்னை ஏமாற்றிவிட்டார்கள். இறந்த நோயாளியுடன் ஆறுமாதங்கள் கற்பனையில் உரையாடி நேர்மையீனமாக ஒப்படை தயாரித்திருக்கின்றார்கள். பல்கலைக்கழக நிர்வாகத்தை ஏமாற்றியிருக்கின்றார்கள்.”

உள்ளே பக்கம் பக்கமாகத் தட்டிப் பார்த்துவிட்டு, ‘தொலைந்தார்கள் இவர்கள் அனைவரும்’ என்று கர்ச்சித்தார். அந்தக் குழுவில் இருந்தவர்கள் பெயர்களை ஒவ்வொன்றாகப் பார்த்துவந்த அவர் ‘ஜெசிக்கா’ என்ற பெயர் வந்ததும் திடுக்கிட்டார்.

“என் மகளுமா?” என்று தலையில் அடித்துக் கொண்டார்.

அன்று இரவு முழுவதும் அவரால் உறங்க முடியவில்லை. மனச்சாட்சியுடன் போராடினார்.

மகளையும் தண்டிக்க வேண்டி வருமே என்று மனம் குழம்பினார்.

நன்றி : கணையாழி

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *