அனுதாபம் வயிற்றெறிச்சலான கதை

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: March 17, 2020
பார்வையிட்டோர்: 4,744 
 

இப்பொழுதெல்லாம் பரமசிவத்தை பார்த்தால் அவரின் சகோதர சகோதரிகளுக்கு அனுதாபமே வருகிறது. நம்மால்தானே அண்ணன் இப்படி இருக்கிறார் என்கிற குற்ற மனப்பான்மையாக கூட இருக்கலாம். வயது நாற்பதாகியும் ஒரு பெண் அவருக்கென்று அமையாமல் இருப்பது அவர்களுக்கு பெரிய வருத்தம்தான். இந்த வருத்தத்தை அவரவர்களின் குடும்பங்களில் அண்ணனுக்கு இன்னும் பெண் தகையாமல் இருப்பதை கூட தங்களை

சம்பந்தபடுத்தி பெருமை பேசிக்கொள்வதற்காக மட்டும் உபயோகப்படுத்திக்கொள்வார்கள்.

பரமசிவத்தின் நேர் இளையவள் தன் கணவனிடம் பெருமையாக சொல்லுவாள்,

எங்கண்ணனை பாருங்க, உங்களுக்கு என்னை கட்டிகொடுக்கறதுக்கு ஐம்பது பவுன் போட்டு கொடுத்திருக்காரு, அதனால் அவருக்கு கடந்தான் மிச்சம், ம்..அவருக்குன்னு ஒரு பொண்ணு அமையமாட்டேங்குது !என்று பெருமூச்சு விட்டு சொல்லுவாள். இவள் தன் கணவனை கீழிறக்கி பேசுகிறாளா? இல்லை தன் அண்ணன் இன்னும் கொஞ்சம் நகை செய்து போட்டிருக்கலாம் என்று பேசுகிறாளா தெரியவில்லை.ஏங்க உங்க குடும்பத்துல யாராவது பொண்ணு இருந்தா பாருங்களேன் என்று முத்தாய்ப்பாய் ஒரு கோரிக்கையும் வைத்து விடுவாள்

அடுத்த இளையவள் அதுக்கும் மேலே, தன் மாமியாரிடத்திலே சண்டை வரும்போது

உங்க குடும்பத்துக்கு நான் வாக்கப்படணும்னு எனக்கு தலையெழுத்து, இதனால எங்கண்ணனுக்குத்தான் வாழ்க்கை வீணாகி போச்சு. அவளுக்கு தன் ஓரகத்திக்கு ஒரு ஏக்கரா அதிகமாக எழுதி கொடுத்தவிட்ட கோபம், அதை குத்திக்காட்ட தன் அண்ணன் கல்யாணமாகாமல் இருப்பதை எடுத்து காட்டுகிறாள். அதற்கும் ஓரகத்திக்கு ஒரு ஏக்கரா எழுதி கொடுத்ததற்கும் சம்பந்தம் இல்லை, என்றாலும் தன் அண்ணனுக்கு இன்னும் பெண் அமையவில்லை என்பதை இவ்வாறு அக்கறைப்படுத்திக்கொள்கிறாளாம்.

இந்த இருவருமே புகுந்த வீட்டில் அண்ணனுக்காக பேசுவதை அவ்வப்பொழுது பிறந்த வீட்டுக்கு வந்து அண்ணா உனக்காக எங்க வீட்டுக்காரரு பொண்ணு பாக்காத இடமில்லை, என்று ஒருத்தியும், மாமியாரிடம் சண்டை போட்ட தங்கை உனக்கு ஏன் இன்னும் பொண்ணு பார்த்து கட்டி வைக்கவில்லை என்று தன்னிடம் சண்டைக்கு வந்ததாக சொல்வாள். ஒரு ஏக்கரா அதிகமாக எழுதியதற்குத்தான் சண்டை என்று சொல்லுவாளா?

இப்படியாக இவர்கள் இருவரும் தன்னுடைய அண்ணன் வீட்டில் அவனுக்காக, பொண்ணு பார்ப்பதுதான் தங்களின் வேலை என்று தங்களால் முடிந்தவரை சொல்லி விட்டு வயதான ஆத்தாவிடம் ஏதாவது ஒன்றை கறந்து கொண்டோ, இல்லை தூக்கிக்கொண்டோ போய் விடுவார்கள்.

பரமசிவத்தின் தம்பி அதற்கும் மேலே, தன்னுடைய அண்ணனுக்கு கல்யாணமாகாமல் வீட்டில் இருப்பதால் தனக்கு எப்பொழுது ஆகும் என்று புலம்பிக்கொண்டே காத்திருந்தவன்,

சட்டென ஒரு சொந்தக்கார பெண்ணை பார்த்து இவளைத்தான் கட்டுவேன் என்று பெற்றொரிடம் போராடுவது போல போக்கு காட்டி, சீக்கிரம் இவளை கட்டிக்காவிட்டால்

அவளை வேறு மாப்பிள்ளைக்கு கொடுத்து விடுவார்கள் என்று பயம் காட்டி தாலியை கட்டி கூட்டி வந்து விட்டான். இப்பொழுதுதான் அவனுக்கு நிம்மதி. அப்புறம் அண்ணனுக்கு முடிந்துதான் தனக்கு கல்யாணம் என்றால் எப்பொழுது நடக்கும்.

இப்படியாக பரமசிவம் தனக்கு தெரியாமலேயே அந்த குடும்பத்தின் தியாகிவிட்டான்.

நீங்கள் ஏமாளி என்று நினைத்துக்கொண்டாலும் தவறில்லை. காரணம் தன்னுடைய தங்கைகளை போல வாய் சாமார்த்தியமோ, தம்பியை போல சட்டு புட்டென்று ஒரு பெண்ணை பிடித்து தாலிகட்டிக்கொள்வோம் என்ற எண்ணமோ இல்லாமல் இருந்து விட்டதால் நீங்கள் தியாகி, ஏமாளி எதையாவது ஒன்றை நினைத்துக்கொள்ளலாம்.

இவர்கள் யாராவது ஒருத்தர் முயற்சி எடுத்தாலும் அண்ணனுக்கு கல்யாணம் செய்துவிடலாம் என்றாலும், அவர்களுக்கு அந்த எண்ணம் கிஞ்சித்தும் இல்லை என்பது கண்கூடு. இருந்தாலும் அக்கம்பக்கத்தவர்கள் தங்களை தவறாக நினைக்க கூடாதல்லவா?

அண்ணனுக்கு ஒரு ஏற்பாடு செய்யலையின்னா எனக்கு நிம்மதியே கிடையாது என்று சம்பிரதாயமாக ஒரு வார்த்தையை சுற்றுப்புறத்தில் கசிய விடுவார்கள்.

அக்கம்பக்கத்தவர்கள் பேசுவதை கொஞ்சம் காது கொடுத்து கேளுங்கள், பாவம் அவங்க அண்ணனுக்காக, அவங்க எங்கெல்லாமோ பொண்ணை தேடி அலைஞ்சுகிட்டுதான் இருக்காங்க, அவனுக்கு அமையணுமில்லை. இப்படி வெளியே பேசுவார்கள், இவளுக நினைச்சா ஆயிரம் பொண்ணுங்க கிடைக்காமயா போயிடும், ஆனா செய்யமாட்டாளுங்க, செஞ்சா சொத்து பங்கு போயிடுமுன்னு கம்முனு இருக்காங்க. இது கிசு கிசுவாக பேசிக்கொள்வார்கள்.

இப்படியாக சுற்றுப்புறத்திலும், உறவுகளிடமும் பரமசிவத்தின் தனிமை பற்றி செய்திகளாகவும், வதந்திகளாகவும் பரவிக்கொண்டுதான் இருக்கின்றன. இதற்கும் பரமசிவம் கல்யாணத்தை பற்றி நினைக்கிறானா என்று அவனுக்கே கூட தெரியாது.

அவனுண்டு, விவசாயம் உண்டு, மாலையில் கொஞ்சம் ஊர் நலன் சமபந்தபட்ட பொதுவான விசயங்கள், இப்படி பொழுது போய்க்கொண்டிருந்தது.

ஒரு நாள் பக்கத்து டவுனில் இருந்த விவசாயக்கல்லூரியில் இருந்து ஒரு பெண் பேராசிரியர் தன் மாணவிகளோடு விவசாயம் சம்பந்தபட்ட நேரிடை நிகழ்ச்சிக்காக இவர்கள் ஊருக்கு வர ஊர்க்காரர்கள் விவசாயம் சம்பந்தமாக பரமசிவத்துக்கு நன்றாக சொல்ல தெரியும் என்று அவனை காட்டிவிட்டார்கள். பரமசிவம் அத்தனை பெண்களை ஒரே இடத்தில் இதுவரை பார்த்ததில்லை, தடுமாறிவிட்டான் என்றாலும், அந்த புரொபசர் தந்த ஊக்கத்தினால், விவசாயத்தை பற்றி விலாவாரியாக சொல்ல, அந்த பெண்கள் கண்கள் விரிய இவ்வளவு உண்டா என்று ஆச்சர்யப்பட்டனர். பரமசிவம் மண்ணின் மீது தீராத காதல் கொண்டவன், இவர்கள் ஆச்சர்யப்படவும், மண்ணின் சிறப்புக்களையும், தாங்கள் எப்படி அதனை பக்குவத்துக்கு கொண்டு வருகிறோம் என்று அதையும் விலாவாரியாக சொன்னான்.

அந்த கல்லூரி பெண்கள் அதைக்கண்டு வியந்தார்களோ இல்லையோ, அந்த பெண் புரொபசர், வியந்து என்ன அப்படியே மயங்கியும் விட்டார். மண்ணின் மீது அவரும் தீராத காதல் வைத்திருந்தார், அதனால் இதுவரை கலியாணமே வேண்டாமென்றிருந்தவர்கள், பரம்சிவத்தின் பேச்சையும், விளக்கத்தையும் கண்டு அவனை மெல்ல தலை சாய்த்து மனதுக்குள் வாங்கிக்கொண்டார்..

இதற்கு மேல் இவர்களின் காதல் வளர்ந்த கதைகளை சொல்லி உங்களை துன்புறுத்தாமல் பரமசிவத்தின் சொந்தங்கள் வாயை பிளக்க நன்கு படித்த அழகான பெண், அதுவும் கல்லூரி பேராசிரியர், இத்தனை சிறப்புடைய பெண். அதுவும் பெண்ணின் தாயும், தகப்பனும் இப்படிப்பட்ட விவசாயிக்குத்தான் என் பெண் என்று பரமசிவம் கையில் ஒப்படைத்தனர்.

இப்பொழுதெல்லாம் இவனது உடன் பிறப்புக்கள் அவனுக்கென்ன? நல்ல புளியங்க்கொம்பா புடிச்சுட்டான்” இப்படி சொல்லி தன் வயிற்றெரிச்சலை போக்கி கொள்வதாக கேள்வி. தங்களுடைய உறவுகளிலே எஸ்.எஸ்.எல்.சியையே பெரிய படிப்பாக பேசிக்கொண்டிருந்தவர்கள் பரமசிவத்தின் மனைவி பெரிய படிப்பு படித்தவள் என்றால் வயிற்றில் எரிச்சல் வர புழுங்கிக்கொள்ளத்தானே முடியும்..

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *