“ஏண்டா? உருப்படியா ஏதாவது பண்ணோமா, வாழ்க்கைய நெம்மதியா அனுபவிச்சோமான்னு இல்லாம ஏன் இப்படி மறுபடியும் அனிதா கால்ல எண்ணை தடவுறே? அம்மாசி மனம் குமுறினான்.

அவன் சொல்வதிலும் நியாயம் புலப்பட்டது என்றாலும் அது ராஜுக்கு மண்டையில் ஏறவில்லை என்பதுதான் நிதர்சனம்.
அபலையைக் காப்பாற்றிய கையோடு ராஜ் தன்னுடைய நிலைப்பாட்டை முடிவு செய்துவிட்டான். தன்னந்தனியாக நிற்கும் அனிதாவுக்கு அவன் தான் காவலன். காசுக்காக அல்ல! கடந்த காலக் காதலுக்காக என்று.
எந்த ஒரு சந்தர்ப்பத்திலும் அவன் அவளைத் தப்பான கண்ணோட்டத்தில் பார்க்கப் போவதில்லை என்று உறுதி கொண்டிருந்தான். அவளுக்குத் தேவையான எல்லா வேலைகளையும் அவனே செய்து காட்டினான்.
பரசு கட்டின திருட்டுத் தாலியைக் கழட்டி வீசும் விஷயம், விசாலாட்சி அம்மா சொன்னது போல, அனிதாவிடம் ராஜ் ஒரு நாள் கூட எடுத்துச் சொல்லவில்லை!
அவன் அவள் மீது வைத்திருந்த ஆசையினால்தான் இத்தனை இக்கட்டுகளிலும் தியாகங்களை மனதாரச்செய்து கொண்டு, அவளிடம் இன்னமும் நட்புடன் இருக்கிறான் என்பதை அவள் மனது ஏற்கவில்லை.
அனிதா சம நிலைக்கு வந்த பின்பும் அவளின் பார்வையில் ராஜ் ஒரு உதவியாளன்தான். டிரைவர்தான். காதலன் அல்ல. தாலி கொடுத்த சுகமோ என்னவோ, அவள், ராஜ் தன்னிடம் காட்டிய பாசத்தின் மதிப்பையும் அதன் விலையையும் உணரவில்லை.
அனிதா வழக்கமான கால் ஷீட்டுகளில் நடிக்கத் தொடங்கி கொஞ்ச காலம் ஆனது! பண வரவும் கொஞ்சம் அபரிமிதமாக வரத் தொடங்கியது. புதுப் படங்களும் ஒப்பந்தம் ஆயின.
“இத்தனையும், பரசு எனக்குப் போட்ட பிச்சை!” என்று கருதி, வெளியிலும் சொல்ல ஆரம்பித்தாள் அனிதா.
ராஜ் தன்னுடைய சேவைக்குப் பாரட்டுக்களை எதிர்பாராமல், தீயாய் வேலை செய்து கொண்டிருந்தான்.
அப்போது தான்… அது நடந்தது!
பணத்தோடு கம்பி நீட்டின அத்தனை நியாயவான்களும் மீண்டும் ஒவ்வொருவராக தலையைக் காட்ட ஆரம்பித்தனர். அவ்வப்போது வாலையும் ஆட்ட ஆரம்பித்தனர்.
முதலில் பரசு வந்தான்
டிரைவர் வந்தான்
அவனைத் தொடர்ந்து மானேஜர் வந்தான்(ர்)
பின்னாலேயே வந்தாள் சூப்பர் நடிகை ரூபவதி!
அனிதாவின் மனக் குழப்பங்கள் அதிகமாயின போலும்!
கழுத்தில் கிடந்த தாலி அவளைக் கட்டிப் போட்டது!
‘விசாலாட்சி அம்மா சொன்னபடி, கழட்டிப் போட்டிருந்தால் இந்த நிலமை வந்திருக்காதோ?’ என்றது உள் மனசு! ஆனால் நன்றியுணர்வு அவ்வப்போது பரசுவால் நினைவுபடுத்தப்பட்டது.
பரசுவின் புது வருகை எப்போதும் சினிமா பாணியில்தான்!
அனிதாவிற்கு வசந்த மாளிகை வாங்க முடிவு செய்து விட்டான்(அவள் பணத்தில்தான்)
திடீர் முடிவு! அபாரச் செலவு! உடனடிப் பத்திரப் பதிவு!
ராஜ் பெரு மகிழ்ச்சி அடைந்தான். புதிய பங்களாவில் இன்னும் நிறைய அறைகள் கிடந்தன. அனிதாவின் அறை சூப்பர்.
ஆடி முடிந்து ஆவணி வந்துவிட்ட கையோடு, பரசு அனிதாவைப் புது பங்களாவில் குடியேற்றி விட்டான்!
“ராஜ்! பரசு ரொம்ப நல்லவர். நான் கூட தப்பாகப் புரிந்து கொண்டேன். எனக்காக இவ்வளவு செய்கிறார் என்பதை நீங்களே பார்க்கிறீர்களே! நான் புது வீடு போனதும் நீங்க எனக்காக எதுவும் செய்ய வேண்டியிருக்காது. உங்களை நான் தொந்தரவு செய்யவும் பரசு விடமாட்டார். நீங்க உங்க வழக்கமான டேக்ஸி வேலையில் உக்காரலாம்.” அனிதா மூச்சு விடாமல் சொன்னாள் போலும்! பெருமூச்சு விட்டாள்.
‘மடையா! இதன் உள் அர்த்தம் என்னவென்று புரிகிறதா?’ என்று தட்டிக் கேட்க ராஜிடம் வேறு யாருக்கும் அவ்வளவு உரிமை இருந்ததில்லை. ஆறுமுகம் தான் கேட்டே விட்டார் –ராஜ் கோட்டை விட்டதை.
அப்போது தான் ராஜ் கொஞ்சம் பரபரத்தான்-உண்மை தாக்கிய போது!
அனிதா அவனை வழி அனுப்ப ரெடியாகி நின்றாள்.
‘ராஜ்! எப்படி நன்றி சொல்லணும் என்று எனக்கே தெரியவில்லை!. பரசுதான் இந்த சின்ன கிப்டை உன்னிடம் கொடுக்கச் சொல்லி இருக்கிறார்.’ என்று ஒரு குட்டி லெதர் பையை நீட்டினாள். –‘மறுக்காதீர்கள்’ என்ற முகவுரையுடன்.
அழகான வெளி நாட்டுப் பை! (இந்தியாவிலிருந்து அங்கே போன பை தான்!) அது பருமனாகத்தான் இருந்தது.
ராஜ் இவை எவற்றையும் கவனிக்கவில்லை!. அனிதா அவனுக்கு விடை கொடுக்க முன் வந்தது அவனால் ஏற்க முடியவில்லை!
அப்போ அவன் மீண்டும் வெளியேற வேண்டியது தானா? அனிதாவை இந்தப் பாவிகளிடம் ஒப்படைத்துப் பெருமிதமாக தூரத்தில் நின்று பார்க்க வேண்டியதுதானா?
‘இது கிப்டா அல்லது அட்வான்ஸ் லஞ்சமா?’- பாதையை விட்டு விலக!
ராஜ் பெட்டியைக் கையில் எடுத்துக் கொண்டான். அனிதாவை நோக்கி மீண்டும் புன்னகை பூத்தான்.
“அனிதா! வாழ் நாள் முழுவதும் உன்னைக் காப்பாற்றுவேன் என்பது தான் உனக்கு என்னுடைய பெர்மனன்ட் கிப்ட்” அதனால்தான், இந்தப் பையை வேண்டாம் என்று சொல்ல வந்தேன்.
அனிதா நின்றாள்- அதிர்ச்சியின் நிழலாக!
ராஜ் கேட்டைத் திறந்து வெளியேறிக் கொண்டிருந்தான்.
தெருவில், அம்மாசி, ராஜின் டேக்ஸியுடன் காத்திருந்தான் – நிழலற்ற வெயிலில் நிஜமாக!