அனிதாவுடன் ஓர் அந்தரங்கம்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: April 26, 2023
பார்வையிட்டோர்: 2,952 
 
 

‘ஏண்டா! சும்மா ரெட் டேக்ஸியில் உட்கார்ந்து வேலையைப் பார்த்திருக்கலாமில்ல?’ அநுதாபக் குரல் ராஜேஷை வச்சு செய்ய யோசனை பண்ணியது. 

‘ஏன் இப்படி இங்கே வந்து ….. வம்பை விலைக்கு வாங்கணும்… அல்லது……’   முடிக்க வார்த்தைகள் கிடைக்கவில்லை என்பதால் சீரியஸ் சிந்தனை டைம் அவுட் ஆனது.

இன்றுடன், இங்கே வந்து இறங்கி,  இரண்டு மாதங்களுக்கு மேல் ஆகி விட்டது. டேக்ஸியை  நண்பனிடம் கொடுத்து ஓட்டச் சொல்லியிருந்தான். தினம் தினம் வரும்படியில் ‘கட்’  கிடைக்கும்.  ஆனால் அது அவனுக்குத் தேவை என்பதே இல்லை! இங்கே பணத்திற்கு அவன் தான் அதிபதி! செலவுக்கு மீறி பணம் இருந்தது- அவனுடைய ஆதிக்கத்தில். அங்கே வேறு யாரும் கிடையாது!

ஆனாலும் மனசில் இன்னும் அந்தக் கொடுமையான கேள்வி எஃப் எம்  ரேடியோ ரிட்ரோ மாதிரி, திருப்பித் திருப்பி ஒலித்தது- “இதற்குத்தான் ஆசைப்பட்டாயா ராஜ்?” 

‘எப்படி இங்கே வந்து சேர்ந்தேன்’ என்பதை யோசனை செய்யும் போது அவனுடைய  மனசில் நிகழ்ச்சிகள் மொத்தமாகவும், சில்லரையாகவும் ஒன்றொன்றாக ‘அப்லோடு’ ஆன விபரீதம் தான் இந்தக் கதை. 

சவாரி கிடைக்காமல் பாண்டி பஜாரில் ஒண்டிக் கொண்டு, மேம்பாலத்தின் பக்கத்தில் இருந்த ஒரு டீக் கடையில் டீயும் பிஸ்கெட்டும் வாங்கி, சாப்பிடத் தயாராகக் காரின் வெளியே நின்றுகொண்டிருந்தான்.

பெர்சனல் போனில் வந்த அதிசயமான கால்!

“ராஜ்,” வழக்கமான குரலில் கொஞ்சம் அயற்சியும் தளர்ச்சியும் கண்டது.

“வணக்கம் மேடம்!  சொல்லுங்க மேடம்! எங்கே போகணும்?” ராஜேஷின் அனுசரணை போனினுள் சென்று  அந்த முனையில் சீறிப் பாய்ந்து ‘டிரோண்’ மாதிரி இறங்கியது.

“உங்களை நேரில் பார்க்கணும்! உடனே வீட்டுக்கு வாங்க!” குரலுக்கு சொந்தக்காரி மேடம் சொன்னாள்.

ராஜ் மெய் சிலிர்த்துப் போனான். சினிமாவில் அத்தனை உள்ளங்களையும் அள்ளும் கனவுக் கன்னி அனிதாதான் அந்தக் குரலுக்குச் சொந்தக்காரி. அறிமுகமான சில ஆண்டுகளிலேயே அவள் மின்னும் தாரகை ஆகி விட்டாள். வழக்கமாக, ராஜின் டேக்ஸியில் பவனி வந்து சினிமா சான்ஸ் கேட்டுக் கொண்டிருந்தவள் திடீரென உயர்ந்தாள். ஆனால், ராஜின் நட்பு தொடர்ந்து வந்தது.  அவள் அவனிடம் பக்தி கலந்த பிரியம் வைத்திருந்தாள். அவனுடைய நேர்மையை அவள் மிகவும் இரசித்தாள்.

இடையில் ராஜ் அவளுடைய தொடர்பை இன்னும் இறுக்கமாகப் பிடிக்க அவளிடம் அதிகம் பழகினான். அவளை ஆராதித்தான். மனசு கிடந்து கனவு கண்டது. அமோல் பாலேகர், ரஜனி எல்லாம் அவனுக்கு முன்னோடியான டேக்ஸி டிரைவர் என்பது போல ஒரு பாவனை! காதல் நினைவுகள் சிறகடித்துப் பறந்தன.

நாளாவட்டத்தில், அவனுடைய மோகம் தலைக்கேற அவளுக்குப் பரிசுகள், கடிதங்கள் எல்லாம் கொடுக்கத் தொடங்கினான். அனிதா அவற்றை மறுக்க வில்லை; ஆனால் ராஜ் மேல் அவள் கரிசனம் மட்டும் காட்டினாள். 

“ராஜ்! “

அனிதாவின் முனகல் கேட்கவே, ராஜின் அப்லோடு தொடர்பு எல்லைக்கு அப்பால் போய் விட்டது!

“என்ன மேடம்?”

பேச சிரமப் பட்டதால், வாக்கரைக் காண்பித்தாள். பாத்ரூமைக் காண்பித்தாள்.

ராஜ் அனிதாவை அவளுடைய பலமிழந்த கால்களில் நிற்க வைத்து  அவளைக் கைகளால் அணைத்து கெட்டியாகப் பிடித்துத் தாங்கி,  பாத்ரூமிற்கு அழைத்துச் சென்றான்.

மீண்டும் தொடர்பு எல்லை தோன்றியது! அவனுக்கு அன்றைய சந்திப்பு மீண்டும் நினைவில் வந்தது!

“ராஜ்! உங்களிடம் நிறையப் பேச வேண்டும்.” என்று விம்மிய அவள் குரல் வந்த திசையைப் பார்த்த ராஜ் பேதலித்துப் போனான். கதறினான். மனசு கிடந்து அரற்றியது.  என் அழகுப் பதுமை என்ன ஆனது? ஏன் இந்த நிலை?

வீட்டில் இரண்டு வேலைக்காரர்களைத் தவிர யாருமே இல்லை!. மாடி பெட் ரூமில் கிழிந்த நாராகப் படுத்துக் கிடந்தது யார்? அவனால் அநுமானிக்க முடியவில்லை.  அது சத்தியமாக அனிதாதானா?   மீண்டும் எழுந்த குரல்தான் காட்டிக் கொடுத்தது.

“மேடம்! என்ன இது?”

கண்ணீரைத்தவிர பதில் சொல்ல அவளால் இயலவில்லை! வலுவற்ற கைகளைக் கூப்பினாள் அவனை நோக்கி!

சமையல் வேலை செய்யும் விசாலாட்சி சொன்னாள், “ யார் வச்ச வெனையோ தெரியலை ஐயா! திடீர்னு ஒரு மாசமா இவிங்க படிப் படியா இந்த நிலைக்கு வந்திட்டாங்க! பெரிய பெரிய டாக்டர்கள் பாத்துட்டாங்க. ஆனால் அவிங்களால குறிப்பா வியாதி என்னனு சொல்ல முடியல!”

“ஆமாம்! வைத்தியம் என்ன? ஹோம் நர்ஸ் எங்கே? யாரு டாக்டர்?” மிகவும் அதிர்ச்சிக்குள்ளானதில் கேள்விகள் எழுந்தன.

“பணம் குடுத்தாலும் இவங்களைப் பாத்துக்க யாரும் தயாரா இல்லை! வீட்டில பெரியவங்க இல்லை! கூடப் பிறந்தவங்க எல்லாரும் கைவிட்டு விட்டாங்க. இது கொரோனாவை விடப் பெரிய வியாதின்னு நினைச்சு எல்லாரும் பின்வாங்கிட்டாங்க  ஐயா”. வெளி அவுட் அவுஸ்ல இவிங்களை தனியா விட்டுடலாம்னு  அவிங்களோட சக நடிகை அம்மா மேனேஜர் கிட்ட சொல்லிச்சு. மேனேஜரும் வேலைலிருந்து நின்னுட்டாரு. என்ன அநியாயாம் ஐயா? எல்லாம் முடிந்து போன மாதிரி இருக்குது ஐயா.

அப்பத்தான் அம்மா உங்களைக் கேட்கலாம்னு முடிவு பண்ணினாங்க. இங்கே சமையலுக்கு நானும், வெளி வேலைக்கு அந்த ஆறுமுகம் சாரும் இருக்கோம். நீங்க மட்டும் கூட இருந்தா அம்மாவுக்கு எல்லா விதங்களிலும் உதவி கிடைக்கும். பாதுகாப்பும் இருக்கும். யாரும் சுரண்ட மாட்டாங்க.

ராஜேஷுக்கு மனம் உடல் எல்லாம் பதறியது. அவன் வீட்டில் அவன் தனிதான். யாரும் கிடையாது. தூரத்து உறவான அத்தை,  கிராமத்தில் இருக்கிறாள். அவளுக்கு அவ்வப்போது பணம் அனுப்புவான். 

அவன் ஆண்டு அனுபவிக்க ஆசைப் பட்ட கனவுக் கன்னி இப்போது கலைந்த ஓவியமாகத் தரை தட்டி, நிறமிழந்து நிற்கிறது. எந்த அவயங்கள் அவனைக் கிறங்கச் செய்தனவோ, அவை பார்வையை மறைக்கும் கண்ணீர்ப் படலத்தினுள்  காணாமல் போய் விட்டனவே!

அனிதாவிடம் சென்றான்.  அவள் வேதனையுடன் பார்த்தாள். கண்களுக்குள் கண்ணீரைத் தவிர வேறு காந்தம் எதுவும் தென்படவில்லை.

அவளுடைய பூரண அனுமதியுடன் அவன் பார்க்கும், ஸ்பரிசிக்கும் அவளுடைய அவயங்கள், அவனுக்கு இப்போது வேறு எந்த உணர்வையும் ஏற்படுத்த வில்லையே!

ராஜேஷ் மனதில் ஒரு முடிவு தோன்றியது!

சாகும் வரையில் இவளை நான் காப்பாற்ற வேண்டும்! அது பழைய மோகக் காதலின் கட்டாயம்.

இவள் உடலின் மேல் மோகம் கொண்ட அனைவரும் இன்று பதறிப் போய் பத்தடி தள்ளி நின்று பார்க்கின்றனர்.

அனிதாவின் கவர்ச்சியான உடல் அமைப்புதான் அவர்கள் எல்லோருக்கும் தேவை!

எனக்கு, அனிதாதான் முக்கியம்! அவளைக் கடைசிவரை  நானே பார்த்துக் கொள்வேன்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *