(2011ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
ஒரு நீண்ட சதுரப்பலகை; அப்பலகையின் முன்பக்கம் இருச்சக்கரங்கள்; பின்பக்கம் இரு சக்கரங்கள். இழுத்து செல்வதற்கு வசதியாக ஒரு நீண்ட கயிறு, அப்பலகையின் முன்பக்கம் கட்டப்பட்டிருக்கிறது. நாலு சக்கரங்கள் பொருத்தப்பட்ட அந்த பலகையைப் பொதுவாக ‘நாலு சக்கர வண்டி’ என்றே அழைக்கலாம் அந்த நாலு சக்கரவண்டியின் கயிற்றை தனது வலப்புற தோளின் மீது போட்டு, தன்னிரு கைகளாலும் அதை இறுகப் பற்றியடி ‘செள பாங்’ நடக்க. ஓர் நன்றியுள்ள நாய் தன் எஜமானை தொடர்வதுபோல் அந்த நாலுசக்கர ,வண்டி அவனை பின் தொடர்கிறது…!
‘சௌ பாங்கிற்கு’ குறைந்தது ஓர் எழுபது வயதாவது இருக்கும். நரைத்த தலை…குழிவிழுந்த கண்கள்…ஒட்டிய கன்னங்கள்…! காய்ந்த உதடுகள்! அந்த ஒட்டிய உதடுகள் பிரியும்போது தலைகாட்டும் நாலைந்து கறைபடிந்த பற்கள்! ‘பொக்கை வாய் கிழவி’ எனும் நையாண்டி சொல்லிலிருந்து அவளைக் காப்பாற்றுவது, அந்த நாலைந்து ஓட்டைப் பற்களே! பெரும் காற்றடித்தால் பறந்துவிடுவாளோ?’ என்று எண்ணும் அளவுக்கு மெலிந்த தேகம். வீட்டில் இருந்து ஓய்வு எடுத்துக் கொள்ளவேண்டிய இந்த தள்ளாத வயதில், அவள் உழைக்கிறாள்! அன்றாடம் அட்டைப் பெட்டிகளை சேகரித்து, அவற்றை விற்று, கிடைக்கும் பணத்தில் தன் வயிற்றை அவள் நிரப்பிக்கொண்டு வருகிறாள். எப்போதும் அந்த ‘கருப்பு உடை’யில்தான் ‘செள-பாங்’ காட்சி தருவாள். ஒருவேளை’ அந்த ஓர் உடைதான் அவளிடம் இருக்கிறதோ? தலையை சுற்றி ஓர் சிகப்பு துணியை அவள் கட்டியிருப்பாள் அந்தக்காலத்தில் கடும் உழைப்பாளிகளாக விளங்கிய சீனப்பெண்களின் பாரம்பரிய உடையை, அவளது தோற்றம் ஞாபகப் படுத்தும்; அவளும் அந்தக்காலத்து பெண்தானே!
நாலு சக்கர வண்டியை இழுத்துக் கொண்டு, அந்த பெரிய பகுதிவாரி கடையின் பின்புற வாசலை நோக்கி, “செள பாங்’ மெல்ல நடக்கிறாள். அந்த பின் வாசல் பக்கம் இருக்கும் இரு பெரிய குப்பைத் தொட்டிகளிலிருந்துதான்… அவள் அட்டை பெட்டிகளைப் பொறுக்குவாள். கடந்த ஆறேழாண்டுகளாக அந்த குப்பைத் தொட்டிகள்தான் அவளுக்கு ‘படியளந்து’ வருகின்றன அந்த பகுதிவாரி கடைத்தொகுதியின் ‘பாதுகாப்பு அதிகாரியாக பணியாற்றும் ராமனுக்கு, ‘ செள பாங்’ மீது ஓர் அன்பு மரியாதை , ‘ தள்ளாத வயதில் இந்த மூதாட்டி அட்டைப் பெட்டிகளை கேகரித்து விற்று பிழைப்பு நடத்துகிறாளே!’ என்ற உண்ணம் அவள்பால் அவருக்கு இரக்கவுணர்வை ஏற்படுத்தியிருந்தது. சிலவேளைகளில் அவரே அட்டை பெட்டிகளை சேகரித்து, அவற்றை பிரித்து அடுக்கி, கட்டி செள பாங்க்கு கொடுப்பார். தன்னிரு கரங்களை கூப்பி, தன் தலையை மேலும் கீழும் ஆட்டி ‘கம்ஷியா!’ என்று நன்றி தெரிவித்த படி மகிழ்ச்சியோடு அட்டைப் பெட்டிகளை அவள் வாங்கிக் கொள்வாள் சில சமயங்களில் ராமனே அந்த அட்டைப் பெட்டிகளை அந்த சக்கர வண்டியில் வைத்து கட்டியும் கொடுப்பார்; ஆனால், இரக்க உணர்வால் அவரோ மற்ற பாதுகாப்பு அதிகாரிகளோ பணம் கொடுத்தால் அதனை அவள் ஏற்றுக் கொள்ளவே மாட்டாள்…! ஆம்! பட்டினி கிடந்தாலும் கிடப்பாளே தவிர, மற்றவர்களிடம் கையேந்தும் பழக்கம் அவளிடம் கிடையாது; மிருகங் களைப்போல பறவைகளைப்போல ‘தன் கையே தனக்குதவி’ என்ற கொள்கை, அவளது ரத்தத்தில் ஊறிப்போன ஒன்று!
தான் சேகரித்த அட்டைப் பெட்டிகளை பிரித்து, அந்த நாலுசக்கர வண்டியில் வைத்து அடுக்கி, வண்டியிலிருந்து அவை விழுந்துவிடாமலிருக்க தன் பலத்தையெல்லாம் ஒன்றுதிரட்டி, ஓர் கயிற்றால் அவற்றை வண்டியோடு சேர்த்து கட்டுகிறாள் செள பாங்; கட்டியதை இருமுறை இழுத்துச் சரி பார்த்துக் கொள்கிறாள்; அவளது முகத்திலே திருப்தி :.! ‘வழக்கத்துக்கு மாறாக இன்னிக்கு அட்டைங்க கொஞ்சம் அதிகமாகவே கிடைச்சிருக்கு! இன்னிக்கு காசு கொஞ்சம் கூட கிடைக்கும்|’ என்று அவளது உள்ளம் முணுமுணுக்க முகத்திலே மலர்ச்சி இப்போது அவளது பார்வை தரையில் பாம்பு போல் சுருண்டு கிடக்கும் கயிற்றுக்கு செல்கிறது. மெல்ல குனிந்து வலக்கரத்தால் அந்த கயிற்றின் நுனியை பற்றி நிமிரும் செள பாங் , முதுகுபுற வழியாக அந்த கயிற்றின் நுனியை தன் தோளுக்கு கொண்டு வந்து, இரு கரங்களாலும் அதனை இறுகப்பற்றி நடக்க, ‘கிறிச்…! கிறிச்!’ என்று முக்கி முணங்கிக் கொண்டு, அந்த நாலுச்சக்கர வண்டி அவளை பின் தொடர்கிறது. தனது விழிகளை தரையில் தவழவிட்டபடி உள்ளத்தில் பற்பல சிந்தனைகள் அலைமோத ‘செள பாங்’ அந்த ஒற்றையடிப் பாதையில் ஓரமாக நடந்துக் கொண்டிருக்கிறாள். அவள் வழக்கமாக நடந்து செல்லும் பாதைதான் அது! கடந்தகால நினைவுகளில் மிதந்தபடி அவள் நடந்துக் கொண்டிருக்கிறாள்.
செள பாங் யாருமற்ற அனாதையல்ல; ஆனால் இன்று … அவள் ஒரு அநாதையாக தன் வாழ்க்கைப் பயணத்தை தொடர்ந்துக் கொண்டிருக்கிறாள். ஆம்! இவ்வுலகில் யாரும் அநாதைகளாகப் பிறப்பதில்லை; இடையில்தான் அநாதைகளாக் கப்படுகின்றனர்! செள பாங்கும் அநாதையாக்கப்பட்டவள்தான் அவளது வாழ்க்கைப் பயணத்தில் இணைந்து அவளது இன்ப துன்பங்களில் பங்கெடுத்துக் கொண்ட அவளது துணைவரைத் தவிர, மற்ற எல்லோருமே இருக்கிறார்கள்! இருந்தும் என்ன பயன்? நீரில்லாக் குளமாக நிலவில்லா வானமாக அவளது பிள்ளைகளும் உறவினர்களும் இருக்கும்போது, அவள் அநாதையாகத்தானே தன் வாழ்க்கைப் பயணத்தைத் தொடர வேண்டியுள்ளது! அவளது கணவன் பழம் உதிரும் மரமாக இருந்தபோது, அவளை எல்லோரும் தலையில் தூக்கி வைத்துக் கொண்டு ஆடினர். ஆனால் அவளது கணவன் பழுத்த மரமாகி , இவ்வுலக வாழ்வை முடித்துக் கொண்டுபோன பின் அவளை விட்டு எல்லோரும் விலகிவிட்டனர்; இல்லை…! அவளே விலகிக் கொண்டாள்!
சௌ-பாங் அந்தக் காலத்துப் பெண்! அந்தக் காலத்தில் சுமார் அறுபது ஆண்டுகளுக்கு முன்னால் இந்த சிங்கப்பூர் எப்படி இருந்தது? அடர்ந்த காடுகளும் மலைகளும் சூழ்ந்து மனிதர்கள் வாழ தகுதியற்ற இடமாகவே அன்றைய சிங்கப்பூர் திகழ்ந்தது! அங்கொன்றும் இங்கொன்றுமாய் சிறுசிறு கிராமங்கள் (கம்போஃங்! குதிரை வண்டிகளும் மாட்டுவண்டிகளும் போக்குவரத்து வாகனங்களாய் பவனி வர செம்மணற் சாலைகள்! மக்கள் பள்ளிக்கூடத்தையோ மருத்துவமனையையோ காண முடியாத நிலை; ஒரு சிறு மீன் பிடி கிராமமாக விளங்கிய அன்றைய சிங்கப்பூரில் பிறந்தவள்தான் செள பாங் அவளது தந்தையும் ‘ மீன்பிடி தொழிலில்தான் ஈடுபட்டிருந்தார். செள பாங்கும் அவளது இரு சகோதரர்களும் தந்தைக்கு உதவியாக அந்த சின்னஞ் சிறு வயதிலேயே மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு வந்தனர்; ஏட்டுக்கல்வியைப் பற்றி அவர்கள் கவலைப்படவே யில்லை!
செளபாங்குக் அப்போது பதினைந்து … பதினாறு வயதிருக்கும்; பருவ ஏணியின் முதல் படியில் அவள் காலடி எடுத்து வைத்த காலத்தில்தான் இரண்டாவது உலக மகாயுத்தம் ஏற்பட்டு , ஜப்பானியர்கள் சிங்கப்பூரை கைப்பற்றினர். ஜப்பானியர்களின் கொடுங்கோல் ஆட்சியில் மக்களின் வாழ்க்கை ஓர் கேள்விக் குறியாகியது! சிறுசிறு குற்றம் குறைகளுக்குக் கூட ‘சிரச்சேதம்’ செய்வதை, அவர்கள் வழக்கமாகக் கொண்டிருந்தனர். சுருக்கமாகச் சொல்லப் போனால், ‘தங்களின் வாட்களின் கூர்மையை பரிசோதித்துக் கொள்ள… மக்களின் தலைகளை சீவித்தள்ளினர்’ என்றுதான் சொல்ல வேண்டும். அதுவும் குறிப்பாக சீன அன்பர்களின் தலைகள் மீதே அவர்கள் குறி வைத்தனர். செளபாங்கின் பெற்றோரும் சகோதரர்களும் ஜப்பானியர்களின் வாட்களுக்கு இரையாகினர்|
ஒரு இந்திய… குடும்பத்தின் உதவியால் ‘செள பாங்’ உயிர் தப்பினாள். அவளது உடல் முழுவதும் கரியை பூசி பாவாடை தவாணியை அணிவித்து அவளது உயிரை காத்துவந்த அந்த இந்தியக் குடும்பத்தையும் ஜப்பானியர்கள் விட்டுவைக்கவில்லை. எப்படியோ உண்மையை அறிந்து கொண்ட அவர்கள், அந்த இந்தியக் குடும்பத்தை கூண்டோடு கைலாசத்துக்கு அனுப்பி வைத்தனர் செளபாங்கின் உயிரைக் காக்க முயன்ற ஒரு மலாய்க்கார குடும்பத்துக்கும் இதே கதிதான் ஏற்பட்டது.
அதன் பிறகு ஒரு பாழடைந்த கட்டிடத்துக்குள் புகுந்து தன் உயிரை காத்து வந்தாள் செளபாங். கடவுளும் அவளை அதிக நாள் சோதிக்கவில்லை! ஜப்பானின் இரு முக்கிய நகரங்கள் மீது அமெரிக்கா மேற்கொண்ட அணுகுண்டு தாக்குதலினால் ஜப்பான் சரணடைந்தது ; தங்கள் கைப்பற்றிய நாடுகளில் நின்று ஜப்பானியர் மூட்டைக்கட்ட, சிங்கப்பூரும் புத்துயிர் பெற்றது. நாட்டைச் சீர்படுத்த… செம்மைபடுத்த நான்கின மக்களும் ஒன்றுபட்டு உழைத்தனர். செள பாங்கை போல் ஜப்பானியர்களால் அனாதைகளாக்கப்பட்ட ஆண்களும் பெண்களும் தங்களது துயரங்களை மறந்து , வாழ்க்கையில் எதிர்நீச்சல் போட சாலைப்போடும் பணியில் , கடின உழைப்பாளிகளாக மாறினர். கருப்பு ஆடைகளை அணிந்து சிகப்பு துணியால் கூந்தலை மறைத்துக் கொண்டு ஒரு கையில் மண்வெட்டியும் மறு கையில் கூடையையும் சுமந்துக் கொண்டு சாலை போடும் கடின பணியில் முழுமனதோடு ஈடுபட்டாள் செள பாங். அங்கு கங்காணியாக (மேற்பார்வையாளராக) பணியாற்றி வந்த ‘கிம் செங் … என்பவர் செள பாங்கின் அழகிலும் நற்பண்பிலும் மனதை பறிகொடுக்க, இருவரும் இல்லற வாழ்வில் இணைந்தனர்; அவர்களது ‘இல்லற படகு’ இன்பக்கடலிலே தவழ்ந்தது.
அவர்களது இன்பமயமான இல்லற வாழ்வின் பிரதிபலிப்பாக, ஐந்து குழந்தைகள்| இரு பெண் குழந்தைகள்; மூன்று ஆண் குழந்தைகள். குழந்தைகளின் எதிர்கால நல்வாழ்வுக்காக இரவு பகல் பாராது உழைத்தார் செள பாங்கின் கணவர் கிம்செங். செல்வச் சீமான் வீட்டு பிள்ளைகளைப்போல தம் பிள்ளைகளை அவர்கள் வளர்த்தனர். சிங்கப்பூரின் துரித வளர்ச்சியோடு அவர்களது பிள்ளைகளும் வளர்ந்தனர். மூத்தப் பிள்ளைகள் பெண் பிள்ளைகள் இருவரும் உயர்கல்வியை முடித்த கையோடு, ஆளுக்கொரு ‘வரணை’ தேடிக் கொண்டனர் மூத்தவள் ஒரு டாக்டரை மணந்து கொண்டு அமெரிக்கா சென்றுவிட்டாள்; இளைய மகளோ ஒரு இஞ்சினியரை மணந்து கொண்டு கெனடாவுக்கு பறந்துவிட்டாள். எப்படித்தான் சீராட்டி பாராட்டி வளர்த்தாலும் பெண் பிள்ளைகள் திருமணத்துக்குப் பின் பிறந்த வீட்டைத் துறந்து விடுவது – இயல்புதானே! செள பாங்கின் பெண் பிள்ளைகள்தான் அப்படியென்றால்… ஆண் பிள்ளைகள்? மூன்று ஆண்மக்களையும் எப்பாடு பட்டாவது ஒரு டாக்டராகவோ இஞ்சினியராகவோ அல்லது வழக்கறிஞராகவோ ஆக்கிவிட வேண்டும் என்று செள பாங்கும் அவளது கணவரும் கங்கணம் கட்டினர். ஆனால் ‘ விதி ‘ அவளது இன்ப வாழ்வில் தலைகாட்ட, ஒரு நாள் அவளது அன்பான கணவன் மாரடைப்பால் இவ்வுலக வாழ்வை முடித்துக் கொண்டார். தனது துக்கத்தையும்… துயரத்தையும் மூட்டைக்கட்டி வைத்துவிட்டு பிள்ளைகளின் கல்வியில் கவனம் செலுத்தினாள் செ பாங்!
உயர் கல்வியை முடித்த அவளது மூன்று மகன்களும், தாங்கள் வெளிநாட்டில் போய் மேற்படிப்பு படிக்க போவதாகக் கூறினர். ஆரம்பத்தில் தயங்கிய செள பாங்… பிறகு பிள்ளைகளின் ‘கல்வி ஆர்வத்தை’ தடுக்கக் கூடாது எனும் எண்ணத்தில் அவர்களை அவள் வெளிநாட்டுக்கு அனுப்பி வைத்தாள். தனது சேமிப்பில் இருந்த கணவனின் மத்திய சேமநிதிப் பணத்தைக் கொண்டு , பிள்ளைகளின் ஆசையை மத்திய சேமநிதிப் பணத்தைக் கொண்டு, பிள்ளைகளின் ஆசையை நிறைவேற்றி வைத்துவிடலாம் என்று அவள் எண்ணினாள்; ஆனால் ஒரே ஆண்டில் சேமிப்பில் இருந்த கணவனின் மத்திய சேமநிதி பணம் காலியானது. ஆம்! மூன்று பிள்ளைகளும் போட்டிப் போட்டுக் கொண்டு ‘பணம் தேவை! பணம் தேவை!’ என்று கடிதம் எழுதும்போதெல்லாம் முன்பின் யோசிக்காமல் பாசத்தால், பிள்ளைகளின் மனம் நோகக்கூடாது எனும் எண்ணத்தில் சேமிப்பில் இருந்த பணத்தையெல்லாம் வாரிவாரி இரைத்தாள். கடைசியில் சேமிப்பில் பணம் இல்லை என்று அறிந்ததும் அவள் கதிகலங்கிப் போனாள். பணப்பிரட்சணையால் தன் பிள்ளைகளின் படிப்பு முற்று பெறாமல் பாதியில் நின்றுவிடுமோ என்று அஞ்சிய அவள் தனது உற்றார் உறவினர்களின் உதவியை நாட எண்ணினாள்; ஆனால் அவளுக்கு உதவி தேவைப்படுகிறது ‘ என்பதை அறிந்துக் கொண்ட அவளது உற்றார் உறவினர்கள் அவளை விட்டு விலகி நின்றனர். பிறரின் கையை எதிர்பார்த்து நிற்பதால் பயன் எதுவும் கிட்டப்போவதில்லை என்பதை அறிந்துக் கொண்ட செள பாங், தன் பிள்ளைகளின் படிப்புக் காக இரவு பகல் பாராது உழைக்க ஆரம்பித்தாள். காலையில் ஒரு தொழிற்சாலையில் மிஷின் ஆப்ரேட்டராகவும், மாலையில் ஒரு உணவுவிடுதியில் ‘பாத்திரங்கள் கழுவும் பணியிலும் நல்லிரவில் ஒரு ‘ஹோட்டலில்’ சமையல் அறையினை சுத்தம் செய்யும் வேலையிலும் ஈடுபட்டு, தன் பிள்ளைகளின் நல்வாழ்வுக்காக ஊண் உறக்கத்தை மறந்து அவள் பாடுபட்டாள் அவளது… அயரா உழைப்பில் அவளது வியர்வையில் அவளது பிள்ளைகள் கரை சேர்ந்தனர். ஆம்! அவளது மூன்று மகன்களுமே ‘டாக்டர்’ பட்டம் பெற்றனர். பாடுபட்டதுக்கு பலன் கிடைத்து விட்டதைக் கண்டு சௌ பாங் ஆனந்தக் கண்ணீர் வடித்தாள். டாக்டர்களாகிவிட்ட தன் மகன்கள் சிங்கப்பூரில் வந்து பணியாற்றப் போகிறார்கள்; தனது கடைசி காலத்தை மகன்களின் நிழலில் நிம்மதியாகக் கழிக்கலாம் என்று எண்ணி, மகன்களின் வரவை எதிர்பார்த்து நின்ற அவளுக்கு பெரும் ஏமாற்றம். ஆம்! ‘விதி‘ மீண்டும் செள பாங்கின் வாழ்வில் விளையாட ஆரம்பித்தது.
“இங்கே வேலைவாய்ப்பு நிறைய இருக்கிறது ; டாக்டர் தொழிலில் நல்ல வருமானம்; எங்கள் மூவருக்கும் இங்குள்ள ஒரு பெரிய மருத்துவமனையில் வேலை கிடைத்துவிட்டது; நிரந்தரமாக இங்கேயே இருந்துவிட, நாங்கள் முடிவு செய்துவிட்டோம்; இங்கே கடும் குளிர். அது உங்கள் உடம்புக்கு ஆகாது! ஆகையால் நீங்கள் அங்கேயே இருங்கள்! நாங்கள் மாதாமாதம் ‘பணம்’ அனுப்பி வைக்கிறோம்” என்று அவர் பேணிகாத்த அருமை பிள்ளைகளிடமிருந்து கடிதம் வர, அவளது பெத்த வயிறு பற்றி எரிந்தது! பணத்துக்காகவா அவள் இத்தனை நாள் பாடுபட்டாள்! ‘சிறகு முளைத்த பறவை குஞ்சுபோல் பாசத்தை துச்சமென உதறிதள்ளிவிட்டு சென்றுவிட்ட தன் பிள்ளைகளின் முகங்களில் இனி விழிக்கக் கூடாது ‘ என்ற எண்ணத்தில் வைராக்கியத்தில்தான் தான் நீண்டகாலமாக வாழ்ந்த அந்த ‘ஆங்மோகியோ’ வட்டாரத்தை விட்டு ‘ தோபாயோ’ வட்டாரத்துக்குள் நுளைந்தாள். ‘செள- பாங்! தோபாயோ வட்டாரத்தில் கடந்த இருபத்தைந்து ஆண்டுகளாக அவள் தனிமரமாகத்தான் உலாவி வருகிறாள். எத்தனையோ வேலைகளைப் பார்த்து வந்த அவள் இன்று , ‘இயலாத நிலையிலும் உழைத்து வாழ வேண்டும் எனும் எண்ணத்தில் வைராக்கியுத்தில் பிறரிடம் கை நீட்டாது சிறு தொழிலைச் செய்து வருதிறாள். தெருவில் வீசப்படும் அட்டைகள், பத்திரிகைகள், பழைய துணிமணிகள் இவற்றை சேகரித்து , குறிப்பிட்ட இடத்தில் அவற்றைக் கொண்டுபோய்க் கொடுத்து அதன் வழி கிடைக்கும் சிறு தொகையைக் கொண்டு தன் வயிற்றைக் கழுவி தனது வாழ்க்கைப் பயணத்தை அவள் தொடர்ந்து கொண்டிருக்கிறாள்.
டும். ..! டும்…! பளிச்…! பளிச்…!! இடி மின்னல்! வானம் கதறி அழப் போவதன் அறிகுறி! கடந்தகால நினைவுகளில் மூழ்கி வந்த செள பாங்கின் சிந்தனை கலைகிறது நெற்றி சுருங்க, அவள் வானத்தை அண்ணாந்து பார்க்திறாள்; பார்த்த விழிகளிலே மருட்சி! ‘ ‘ஐயோ! பெரிய மழை வரும் போலிருக்கே! “ அவளது மனம் முணுமுணுக்கிறது. அவளது பார்வை மெதுவாக நாலுசக்கர வண்டியின் மேல் விழுகிறது. அந்த வண்டியின் மேல் அவளது அன்றைய உழைப்பு, அன்றைய ஊதியம்; அன்றைய உணவு; அத்தனையும் அட்டைப் பெட்டிகளாக காட்சியளிக்கின்றன. ‘இதெல்லாம் மழையிலே நனைஞ்சா இன்னிக்குப் பாடுபட்டதுக்கு பலனில்லாது போயிடுமே! மூணு. .. நாலு வெள்ளி கிடைக்காமே போயிடுமே! கடவுளே! இப்ப நான் என்ன செய்வேன்? ‘ அவளது மனம் புலம்ப ஆரம்பிக்க, அந்த நீண்ட ஒற்றையடிப் பாதையை தன் விழிகளால் அவள் அளவெடுக்கிறாள் நேராகச் சென்று வலப்பக்கம் திரும்பி, சிறிது தூரம் நடந்து மீண்டும் வலப்பக்கம் திரும்பினால் காராங் கோணியின் கடை! இவைகளை அவளது தலையிலே கட்டிட்டா..? பாடுபட்டதுக்கு பலன் கிடைச்சிடும்! ஆனா… அங்கே போய்ச் சேருவதற்குள்ளே மழை வந்துட்டா? அதற்கு மேல் செள பாங்கால் நினைத்து பார்க்க முடியவில்லை. மழை இறங்குவதற்குள் போய்விட வேண்டும் எனும் ஆர்வத்தில் அவள் வேகமாக நடக்க முயலுகிறாள்.
கிறீச்… ! கிறீச்!! என்று அந்த நாலு சக்கர வண்டி .. செள பாங்கை பின் தொடர்கிறது. ‘கடவுளே! இன்னும் கொஞ்ச தூரம்தான்; அந்த சந்துலே நுழைஞ்சி வலப்பக்கம் திரும்பிட்டா?’ அவள் எண்ணி முடிப்பதற்குள் வானம் பூமழை தூவ ஆரம்பிக்கிறது ‘ஐயோ! மழை தூர ஆரமபிச்சிடுச்சே! அவளது உள்ளத்தில் அதிர்ச்சி! வண்டியை இழுத்துக் கொண்டு அவள் வேகமாக ஓட முயலுகிறாள்; ஆனால்…முதுமை… தளர்ந்துவிட்ட அவளது கால்களை, ஓடவிடாது தடுத்து நிறுத்துகிறது! அவளால் ஓட முடியவில்லை; அவளது விழிகள் பரபரப்போடு ஒதுங்குவதற்கு இடம் தேடுகின்றன. ஆனால் ஒதுங்கிக் கொள்வதற்கு வீடோ .. மனையோ … மரமோ அங்கில்லை! ‘ஐயோ! மழை இறங்கிவிட்டதே! நான் என்ன செய்வேன்? ‘நீரில் விழுந்த எறும்பாக’ அவள் தத்தளிக்கிறாள்; அவளது தத்தளிப்பை பொருட்படுத்தாது , ‘ சட…சட’ என்று பேரிரைச்சலோடு பெரும்மழை கொட்ட ஆரம்பிக்கிறது. அவளுடைய உழைப்பு ஊதியம் உணவு… யாவுமே மழைநீரில் கரைய , ஆரம்பிக்கின்றன. இறைவனின் சோதனையைக் கண்டு அவளது தளர்ந்த மனம் குமுறுகிறது . அந்த குமுறலும் ஓர் சில வினாடிகள்தான்! ஆம்! விதி வழிதானே எல்லாம் நடக்கும்! செள பாங்கின் முகத்திலே… புத்தொளி புது பொலிவு! அவளது விழிகள், அலட்சியமாக வானவீதியை நோக்குகின்றன. நோக்கிய விழிகள் அங்கே நிலைகுத்தி நிற்க, அவ்விழிகளில் கண்ணீர் துளிர்த்து அருவியாகி மழை நீரோடு கலந்துறவாட, செள பாங் உணர்ச்சியற்ற மரக்கட்டைபோல்… வாய் பிளந்துநிற்கிறாள். அவளது திறந்த வாயும் விரிந்த விழிகளும் எதைக் காட்டுகின்றன? பெத்த பிள்ளைகள் உயிரோடு இருந்தும் ஓர் அன்னை அனாதைப் பிணமாக அங்கே நிற்கிறாள்! ஆம்! பெற்றோர் புறக்கணித்தால் பிள்ளைகள் அனாதைகள், பிள்ளைகள் புறக்கணித்தால்… பெற்றோர் அனாதைகள் இல்வுலகில் யாருமே அனாதைகளாக பிறப்பதில்லை; இடையில் உருவாகுகிறார்கள் உருவாக்கப்படுகிறார்கள். இன்றைய சமுதாயத்தில் ‘சௌ பாங்கை போல் எத்தனையோ தாய்மார்கள்… தந்தைமார்கள் பிள்ளைகளால் புறக்கணிக்கப்பட்டு அனாதைகளாக ஆதரவற்றவர்களாக கண்ணீர் கடலில் மிதந்துக் கொண்டிருக்கின்றனர் ஏறி வந்த ஏணியை எட்டி உதைப்பதுபோல் வளர்த்து ஆளாக்கிய பெற்றோரை அரவணைக்காமல்… அவர்களது பாரமாகக் கருதி புறக்கணித்தால் பிற்காலத்தில் அவர்களது பிள்ளைகள் அவர்களை புறக்கணிக்க மாட்டார்கள் என்பது என்ன நிச்சயம்? பெற்றோர் வழிதானே பிள்ளைகள் செல்வர்! இன்றைய இளைய தலைமுறையினரே! சிந்திக்க வேண்டும்; பெற்றோரை அரவணைக்க வேண்டும்!
– புது அப்பா!, முதற்பதிப்பு: பெப்ரவரி 2011, தமிழ்க் கலை அச்சகம், சிங்கப்பூர்