கதையாசிரியர்:
தின/வார இதழ்: மணிக்கொடி
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: November 10, 2022
பார்வையிட்டோர்: 4,134 
 
 

(1933-1939ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

குண்டப்பாவை நான் முன்பு ஒரு தடவை கூட அவ்வளவு கவலை தேங்கிய முகத்துடன் கண்டதில்லை, எப்போது பார்த் தாலும் புன்னகை தவழ, உதட்டைச் சுருட்டி “ஜகதோத்தாரணா” என்ற மெட்டில் சீட்டியடித்துக்கொண்டிருப்பார். அந்தப் பாட்டில் அவருக்கிருந்த பிரேமையை அளவிட்டுச் சொல்லிவிட முடியாது.

கட்டை குட்டையாக உருட்டிவிட்டது போன்ற உருவம். அதற்கேற்றாற் போல தடித்தடியாக அடர்த்தியான தலைமயிர். அதை ஒரு அங்குல அளவுக்கு, மேல் நாட்டு கிராப்பும், கீழ்நாட்டு குடுமியுமற்ற வகையில் வெட்டிவிட்டிருப்பார். ஆப்பிரிக்கா தேசத்து யானைப்புல் மாதிரி வளர்ந்து நிமிர்ந்து நிற்கும். அவருடைய முகத்திலும், கண்களிலும் காணும் உற்சாகத்திற்கும் சுறுசுறுப்புக்கும் அந்தத் தலை முடியின் உறுதியைக் காட்டும் தோற்றம் உதவி செய்வதாக இருக்கும். ஒரு கதர் வேஷ்டியை பஞ்சகச்சமாகக் கட்டி மேலே ஒரு கதர் ஜிப்பா அணிந்திருப்பார். தலையில் ஒரு கதர்க்குல்லாய். ஆனால் ஒரு நாளில் இருபத்து மூன்று மணி நேரமும் குல்லாய் அவர் கையிலேயே தானிருக்கும். அதோடு ஒரு சிறிய தோல் பெட்டியும் கையை அலங்கரித்துக்கொண்டிருக்கும்.

ஸ்ரீமான் குண்டப்பா பெங்களூர் லீலாவதி அனாதாஸ்ர மத்தின் காரியதரிசி. யாரோ லீலாவதி என்ற சீமாட்டி அளித்த நன்கொடையால் ஸ்தாபிக்கப்பட்டது அந்த ஆஸ்ரமம். அல்லது ஒரு சீமான் பணம் கொடுத்து அந்தப் பெயரை வைக்கச் சொன்னார். எப்படியோ பதினைந்து வருஷங்களாக பெங்களூரில் அந்தப் பெயருடன் ஒரு அனாதாஸ்ரமம் நடந்து வருகிறது. ஆரம்பமுதல் இன்றுவரை ஸ்ரீமான் குண்டப்பாதான் அதன் காரியதரிசி,

போன தலைமுறையில் நம் தேசத்தில் திடீரென்று தோன்றிய மனித சேவக ரத்தினங்களில் குண்டப்பாவும் ஒருவர். அலுப்புச் சலிப்பின்றி, எவ்விதப் பிரயோசனத்தையும் கருதாமல், “தான்” என்பதை அறவே மறந்து சேவையில் ஈடுபட்டவர். அவருடைய சேவையின் பிரத்தியட்ச சின்னம்தான் லீலாவதி அனாதாஸ்ரமம். பணம் கொடுத்தவர் யாராயிருந்தாலென்ன, குண்டப்பாதான் அதன் உயிர்நாடி. |

ஆஸ்ரம வேலை சம்பந்தமாக அவர் அடிக்கடி சென்னைக்கு வருவார். வரும்போதெல்லாம் என்னை வந்து பார்க்காமல் போக மாட்டார். வரும்போதெல்லாம் உற்சாகத்துடன் சீட்டியடித்துக் கொண்டேதான் வருவார். “என்ன ஸார்! நம்ப ஆஸ்ரமத்திற்கென்று பிர்மா அனுப்பி வைத்த ரெண்டு நபர்கள் போனவாரத்தில் வந்து சேர்ந்துவிட்டார்கள்” என்று ஆரம்பித்து, முந்தினவாரத்தில் வந்து சேர்ந்த இரண்டு அனாதைக் குழந்தைகளைப்பற்றிச் சொல்லுவார். சில குழந்தைகள் சாதாரணமாக எவ்விதச் சரித்திரமுமின்றி வந்து சேர்ந்துவிடும். வேறு சில விசேஷக் கதைகளுடன் வரும். “எங்கள் ஆஸ்ரமம் ஒரு விதத்தில் ஜனங்களின் மனோநிலையைப் பரீட்சிக்கிற நாடி ஸார். பாருங்கள், இந்தவாரம் வந்த அந்தக் குழந்தையை நம்முடைய சமூகத்திலேயுள்ள…… வழக்கத்தின் பிரத்யட்சச் சின்னம் அது” என்று குண்டப்பா சொல்லுவதற்கு இடமாக வரும் சில குழந்தைகள்.

அன்று அவர் முகத்தில் தேங்கியிருந்த கவலையைக் கண்டவுடன் நான் என்னவெல்லாமோ நினைத்துவிட்டேன். அவருடைய ஆஸ்ரமத்திற்குப் பணமுடையென்பதே ஏற்பட முடியாது. யாரோ ஒரு மகராஜன் (அல்லது மகராஜி) அந்த விஷயத்தில் முன் கூட்டியே பெரிய ஏற்பாடாகச் செய்துவிட்டார். தனது வேலையில் அவர் சலிப்படைந்துவிட்டார் என்றும் நினைக்க முடியவில்லை. ஏனெனில் நான் அவரையறிந்திருப்பது சரியானால் அது அசம்பாவிதம். அவருடைய சுபாவம்மாறிவிட்டது என்றுதான் அதற்கு அர்த்தமாகும். அது அவ்வளவு சுலபசாத்தியமான விஷயமா? என்மனம் கட்டவிழ்ந்து ஓடி ஒவ்வொரு பக்கத்திலும் ஒரு சுவரில் முட்டிவிட்டுத் திரும்பிக் கொண்டிருந்தது.

அறைக்குள் வந்த குண்டப்பா அளவுக்கு மிஞ்சிய மனக் களைப்பைக் காட்டும்விதமாக பெருமூச்சுவிட்டு மௌனமாக ஒரு நாற்காலியில் சாய்ந்தமர்ந்து கண்களை மூடிக்கொண்டார். அவருடைய முகத்தோற்றத்தைக் கண்டு ஏற்கனவே கலங்கியிருந்த எனக்கு அவருடைய நடத்தை இன்னும் அதிகக் கவலையை உண்டாக்கியது, ஒருகால் உடம்பு சரியில்லையோ?

“என்ன குண்டப்பா? என்ன சங்கதி” என்று பதட்டத்துடன் கேட்டேன்.

குண்டப்பா கண்ணைவிழித்து என்னை ஒரு முறைபார்த்து, “அலைச்சல்; கொஞ்சம் ஜலம் கொண்டுவரச் சொல்லுங்கள்” என்று சொல்லிவிட்டு மறுபடி கண்களை மூடிக்கொண்டார்.ஜலம் வந்தவுடன் குடித்த பின்னர் நிமிர்ந்து உட்கார்ந்தார்.

என் மனதிலிருந்த கேள்வியை நான் கேட்குமுன்பே அவரே பேச ஆரம்பித்தார்.“என் ஆயுசிலேயே இந்த மாதிரி ஒரு தடவை கூட மனசு தவித்ததில்லை ஸார். மனித ஜாதியின் துக்கமும் துன்பமும், எப்படியெல்லாமிருக்கும், எவ்வளவு ஆழமாகப் பாயும் என்பதையெல்லாம் நேரில் கண்டு, கேட்டு அனுபவித்திருக்கிறேன். இருந்தாலும் இந்த மாதிரி இருந்ததேயில்லை ஸார். நான் இந்த ஊருக்கு வந்து இரண்டு நாளாகிறது; உங்களை வந்து ஏன் பார்க்க வில்லை தெரியுமா? என் மனஸு என்னிடம் இருந்தால் தானே ஸார்?” என்று நிறுத்தினார்.

அவராகவே மேலே சொல்லட்டுமென்று நான் மௌனமாய் என் ஆவலையெல்லாம் அடக்கிக்கொண்டு உட்கார்ந்திருந்தேன் இரண்டு நிமிஷங்கள் கழித்து அவர் மறுபடி ஆரம்பித்தார்.

“எங்கள் ஆஸ்ரமத்திற்கு இதுவரை எவ்வளவோ அனாதை கள் ஆதரவு தேடி வந்திருக்கிறார்கள். கொண்டு வந்து விடப்பட்டிருக் கிறார்கள். இருந்தாலும் போன வாரம் வந்த அந்தக் குழந்தையைப் போல அனாதையாக்கப் பட்டவர் வேறு யாரும் இருக்க முடியா தென்றுதான் நினைக்கிறேன்.

ப ஒரு மனிதனுக்குத் துன்பம் பல காரணங்களால் ஏற்படுகிறது. பிறர் வேண்டுமென்றே சதி செய்ததாகச் சொல்லுகிறோம். அல்லது விதியின் கொடுமையென்கிறோம். ஆனால் இந்தக் குழந்தையைப் போல அன்பினால் கொடுமைக்காளாக்கப்பட்ட கதையை நான் கேட்டதேயில்லை. யானை தன் தலையில் தானாக மண்ணை வாரிப் போட்டுக்கொள்ளுகிறது. அதனால் அது ரொம்பத் துன்பமடைந்து விடுவதில்லை. அந்தப் பெண் தானாக மண்ணை வாரித் தன் தலையில் போட்டுக்கொண்டாள். அதிலேயே தன்னை இப்படிப் புதைத்துக் கொள்ளப்போகிறோமென்று அவளுக்குத் தெரிந்திருக்க முடியாது என்பது வாஸ்தவம்தான். அதற்காக அந்தக் குழந்தையை இப்படி அனாதையாக்கின அக்கிரமத்திற்கு யாரைக் குறை சொல்லுவதென்றே எனக்குத் தெரியவில்லை. கதையைச் சொல்லு கிறேன் கேளுங்கள். ஆனால் இது வெறும் கல்பனைக் கதையல்ல. உண்மையில் ரத்தமும் சதையுமுள்ள இன்றைய மனிதர்களின் வாழ்க்கையில் நடந்த, நடந்து கொண்டிருக்கும் நிகழ்ச்சி.

போனவாரம், வெள்ளிக்கிழமை அதிகாலையில், ஐந்து மணியிருக்கும், எழுந்தவன் வெளியே போகப் புறப்பட்டேன். நான் தினம் காலையில் இரண்டுமைல் தூரமாவது நடந்துவிட்டு வருவது வழக்கம் என்பதுதான் உங்களுக்குத் தெரியுமே. தலையில் ஒரு சிறு துண்டைக் கட்டிக் கொண்டே வாசற்படிகளில் இறங்கினேன். பின்னிருட்டுக் காலமாகையாலும், பனி கொஞ்சம் அதிகமாக வேயிருந்ததாலும் வீதியில் வெளிச்சம்கூட சரியாக இல்லை, அதனால்தான் போலிருக்கிறது வாசல்படியின் இடப்புற ஓரத்தில் தெருவில் நின்றிருந்த அந்தப் பெண் பிள்ளையை நான் கவனிக்கவே யில்லை. திடீரென்று “ஐயா” என்று வந்த அந்தப் பரிதாபகரமான குரலைக்கேட்டுச் சட்டென்று திரும்பினேன். பிச்சைகேட்கும் ஒருவளது குரலல்ல அது. ஆனாலும் அதில் ஏக்கத்துடன் இரங்கி கையேந்தும் பாவமிருந்தது. இருளில் கண்களை சிரமப்படுத்தி அவளைப் பார்த்தேன்.

அவ்வளவு பனியிலும் தலையை மூடாமல் இரு கையிலும் ஏதோ மூட்டைபோல ஒன்றை ஏந்திக்கொண்டு என்னை நிமிர்ந்து பார்த்துக் கொண்டு நின்றாள் அந்தப் பெண்.

“என்னம்மா வேண்டும்?” என்று கேட்டேன்.

“நீங்கள் தானே குண்டப்பா? உங்களிடம்தான் வந்தேன். இவ்வளவு அதிகாலையில் வந்தும் கொஞ்சம் தாமதமாகியிருந்தால் உங்களைப் பார்த்திருக்க முடியாது போலிருக்கிறதே. எங்கேயோ வெளியே போகிறீர்கள் போலிருக்கிறது. நான் தடுத்து நிறுத்திய தற்காக ஒரு வேளை கோபித்து.–” என்றாள்.

நான் அவளை மேலேபேசவிடவில்லை.” வெளியே போனாலும் சற்றுநேரத்தில் திரும்பி விடுவேன். உங்களுக்கு என்ன வேண்டும்? ஏன் அம்மா அப்படிப் பனியில் நிற்கிறீர்கள். உள்ளே வாருங்கள்” என்று சொல்லிவிட்டுப் படியேறினேன்.

அவள் கையிலிருந்தது வெறும் மூட்டையல்லவென்பதை அது அசைந்து காட்டியது. அதை அவள் தன் மார்போடு அணைத்துக் கொண்டாள். என் பின்னால் கொஞ்சம் ஜாக்கிரதை யாக வரும்படி அவளிடம் சொல்லிவிட்டு முன்னால் கூடத்திற்குப் போய் அங்கிருந்த விளக்கைத் தூண்டிவிட்டுக் கையிலெடுத்துக் கொண்டு வந்தேன். அதற்குள் அவள் நடையைக் கடந்து கூடத்துக் கதவருகில் வந்து விட்டாள். அப்படியே அழைத்துக்கொண்டு போய் உட்காரும்படி சொன்னேன். அவள் அங்கு என் மேஜையின் இடப்புறத்திலிருந்த கட்டிலின்மேல் விளக்கு வெளிச்சம் அதிகம் படாத ஒரு பக்கத்தில் அமர்ந்துகொண்டாள். நான் ஒரு நாற்காலியில் உட்கார்ந்துகொண்டு, “என்னால் உங்களுக்கு என்ன ஆகவேண்டும்” என்றேன்.

அவள் பதில் சொல்லுமுன் அவளிருந்த இடத்தில் பரவிய வெளிச்சத்தைக் கொண்டு அவளைக் கவனித்தேன் சுமார் இருபது அல்லது இருபத்திரண்டு வயதிருக்கும். வயதுக்கேற்ற உருவ அமைப்பு. செக்கச் சிவந்த மேனி. அதில் கரேலென்றிந்த அவள் கூந்தலும், கண்களும் ரொம்ப எடுப்பாகத் தெரிந்தன. இனிமையும் வசீகரமும் நிறைந்தமுகம். தாளமுடியாத துக்கத்தினாலும், ஏதோ வியாதியினாலும் அவள் கையிலிருந்தது ஒரு சிறு குழந்தையென்று தெரிந்து விட்டதனால், சமீபத்தில் பிரசவித்த களையென்று தோன்றியது-அவள் இளைத்துச் சோர்ந்து தோன்றினாள்.

இடையில் நல்ல பெங்களூர் பட்டுப்புடவையணிந்திருந்தாள். கழுத்திலும் காதிலும், கைகளிலுமிருந்த நகைகள் அவள் நல்ல ஸ்திதியிலிருந்த ஒரு குடும்பத்தைச் சேர்ந்தவள் என்று காட்டின.

நான் கேட்ட கேள்விக்கு பதில் சொல்லத் திரும்பினவள் மறுபடி மறுபக்கமே பார்த்துக்கொண்டு “உங்கள் அனாதாஸ்ர மத்தில் சேர்ப்பதற்காக இந்தக் குழந்தையைக் கொண்டு வந்திருக்கிறேன். இதை ஏற்றுக்கொள்வீர்களா? இதை அப்படியே விட்டுவிட்டு, அதன் பராமரிப்புக்காகும் செலவை நீங்களே கண்டுபிடிக்கும்படி நான் விட்டுவிட்டுப் போகப் போவதில்லை. அதற்காகவும் ஏற்பாட்டுடன்தான் வந்திருக்கிறேன்” என்றாள்.

அவள் சுற்றி வளைத்துப் பிடிக்காமல் நேரடியாக அப்படி வந்த காரணத்தைப்பற்றிச் சொன்னதும் என் மனதில் என்ன வெல்லாமோ யோசனைகளெல்லாம் எழுந்து விட்டன.

என்னுடைய போன பதினைந்து வருஷ வாழ்வில் இது புதிய அனுபவமன்று. இங்கு கொண்டுவந்து சேர்க்கப்படும் குழந்தை களைக் கொண்டுவருபவர்களுடன் பேசிப் பேசிப் பழகியிருக் கிறேன். அவர்கள் வரும் முறையும் பேசும் விதமுமே தனி. அதிலும் கொண்டுவரப்படும் குழந்தையின் ஜனனத்தில் கொஞ்சம் வழிப்பிசகு இருந்து விட்டாலும் சரிதான். அந்த அவமானம், துக்கம் எல்லாவற்றையும் என்னையும் அனுபவிக்கும்படிகட்டாயப்படுத்தி விடுவார்கள். அப்படிப் பேசுவார்கள் வருகிறவர்கள்.

ஆனால் இந்தப் பெண் அப்படியேதும் பேசவுமில்லை; நடந்து கொள்ளவுமில்லை. அவளுடைய வெளித்தோற்றம் என் மனதில் அவளிடம் எழுப்பிய மதிப்பை அவளுடைய இந்தப் பேச்சும் நடத்தையும் அதிகரிக்கச் செய்வனவாக இருந்தன. அவளுடைய குரலில் உதவியை நாடும் ஒரு அபலையின் கெஞ்சுதல் இருந்தாலும், அத்துடன் எனக்கு விளங்கா ஒரு நிமிர்வு-அல்ல, கம்பீரம் இருந்தது. என் பதிலை எதிர் பார்த்து அவள் மௌனமாக இருந்தாள்.

“முதலில் உங்கள் கேள்விக்கு பதில் சொல்லுகிறேன். எங்கள் ஸ்தாபனம் அனாதைகளின் சேவைக்காகவே ஏற்படுத்தப்பட்டது. ஆகையால் ஏற்றுக் கொள்ள மறுப்பதென்பதே எங்கள் நியதியில் கிடையாது. ஆனால் ஏற்றுக்கொள்ளுமுன் சில விவரங்களை மாத்திரம் நாங்கள் நிச்சயம் செய்துகொள்ள விரும்புவோம். அதில் உங்களுக்கு ஆட்சேபணையிருக்க முடியாதென்று நினைக்கிறேன். முன்னால் நீங்கள் சொன்னீர்களே, அதன் பராமரிப்புக்காகும் செலவு விஷயம். அனாதையென்றாலே பராமரிப்புக்கு நாதியற்றது என்றுதானே அர்த்தம்…” என்று பேசிக்கொண்டே வந்தவன் சட்டென்று நிறுத்தி விட்டேன்.

அந்தப் பெண் சகிக்கமுடியாத வேதனையால் துடிப்பவள் போலக் கண்களை மூடிக்கொண்டு முதுகை வளைத்துக் கழுத்தைத் திருப்பியதைக் கண்டு பயந்துபோய்விட்டேன். சட்டென்று “என்னம்மா! உங்களுக்கு உடம்பு சரியில்லையென்று தோன்று கிறது” என்று சொல்லிக்கொண்டே அவளிடம் நெருங்கினேன்.

ஆனால் என்னை அவள் கிட்ட நெருங்க விடவில்லை. சட்டென்று கண்ணை விழித்துக்கொண்டு உடம்பைச் சுருக்கி சுவற்றோடு சுவராக ஒட்டிக்கொண்டு “ஒன்றுமில்லை. சொல்லுங்கள்” என்றாள்.

நான் நின்றபடியே “உங்கள் மனசைப் புண்படுத்த வேண்டு மென்று எனக்கு உத்தேசமில்லை. இங்கு எங்களிடம் இம்மாதிரிக் குழந்தைகளைக் கொண்டுவந்து சேர்ப்பவர்கள், தங்கள் சொந்தக் காரணங்களினாலோ, அல்லது பரோபகார சிந்தனையாலோ, தங்களால் இயன்ற அளவு அல்லது இஷ்டப்படி ஆஸ்ரமத்திற்குப் பொளுளுதவியும் செய்வதுண்டு. ஆகையால் நீங்கள் அப்படி ஏதாவது செய்வதாக இருந்தாலும் அதை வந்தனத்துடன் ஏற்றுக் கொள்ளுவோம். ஆனால் அதற்காக நாங்கள் கட்டாயப்படுத்துவ தோ அல்லது பணம் கொண்டு வரவில்லையென்பதற்காக ஏற்க மறுப்பதோ கிடையாது. அவ்வளவுதான் சொல்ல விரும்பினேன். ஆனால் உங்களைப் பார்த்தவுடன் இன்னொரு விஷயமும் சொல்ல வேண்டுமென்று தோன்றுகிறது. இந்தக் குழந்தையைப்பற்றிய விவரங்களைப்பற்றி உங்களைப் பலவிதமான கேள்விகளெல்லாம் கேட்போமோ என்று நீங்கள் கவலையும் பயமும் அடையக்கூடும். நீங்களாக ஏதும் சொல்லாதவரை நாங்கள் அப்படி வற்புறுத்த மாட்டோம். உங்கள் வாயினால் இந்தக் குழந்தை தாய் தந்தையற்ற அனாதையென்று சொன்னாலே போதும். அதையே நம்பி ஏற்றுக் கொள்கிறோம்” என்றேன்.

அப்படி நான் “தாய் தந்தையற்ற-” என்று சொல்லியபோது அந்தப் பெண் மறுபடியும் ஒருதடவை முன்போல வேதனையால் துடித்தாள். ஆனால் என்னால் ஒன்றும் செய்ய முடியவில்லை.

அதிகம் வளர்க்காமல் சொல்லிவிடுகிறேன். அவளிடம் மேலே ஒன்றும் பேசாமல் என் மனைவியை அழைத்து அவளிடம் அந்தப் பெண்ணை ஒப்புவித்துவிட்டு “அம்மா நான் கொஞ்சம் வெளியே போய் வருகிறேன். வந்த பிறகு ஆஸ்ரமத்திற்குப் போகலாம். அதுவரை நீங்கள் இங்கேயேயிருங்கள். உங்கள் சௌகரியம்போல இருக்கலாம்” என்று சொல்லிவிட்டு வெளியே போய்விட்டேன்.

நான் திரும்பி வந்தபோது அந்தப் பெண் தன் கையிலிருந்த குழந்தைக்கு மாத்திரம் ஏதோ பால் வாங்கிக் கொடுத்துவிட்டு, தான் ஒன்றும் சாப்பிடாமல் உட்கார்ந்திருந்தாள். என் மனைவி எவ்வளவோ வற்புறுத்தியும் அவள் ஏதும் சாப்பிட மறுத்து விட்டதாக அறிந்தேன். நானும் என்னால் ஆனவரை சொல்லிப் பார்த்தேன், கேட்கவில்லை.

“உங்களிடம் இந்தக் குழந்தையைத்தான் ஒப்புவித்துவிட்டுப் போக வந்தேன். என்னையும் நீங்கள் ஒரு அனாதையாக மதித்து உபசாரம் செய்வீர்களென்று நான் எதிர்பார்க்கவேயில்லை. நான் ஒரு அனாதைதான். ஆனால் எனக்கு உதவிசெய்து காப்பாற்றக்கூடிய காலம் கடந்து விட்டது. ஆகையால் தயவுசெய்து இந்தக்குழந்தையை ஏற்றுக் கொண்டு எனக்குப் போக விடைகொடுங்கள். ஏற்கனவே இடிந்து நைந்து போயுள்ள என் நெஞ்சை உங்கள் உபசாரங்களால் இன்னும் அதிகமாக நோக வைக்க முயலாதீர்கள் என்று கெஞ்சிக் கேட்டுக் கொள்ளுகிறேன்” என்று அவள் கண்டிப்பாகச் சொல்லி விட்டாள்.

அவள் என்னைத் தப்பர்த்தம் செய்துகொண்டு விட்டாள். ஆனாலும் அவளுடைய பேச்சிலிருந்து, அவள் அப்படிப்பட்ட ஒரு நிலைமையிலிருப்பதை எப்படி வெறுத்தாள் என்பதை நான் தெளிவாகக் கண்டேன். ஆதலால் அதற்காக நான் ஆயாசப்படாமல் மேலே ஆகக்கூடிய வழியைப்பற்றி ஆலோசிக்க முயன்றேன்.

வழக்கமாகக் கேட்கும் கேள்விகள் கேட்கப்பட்டன. தன் தயக்கத்தைக் கூடியவரை மறைக்க முயன்று கொண்டே அவள் பதில் சொன்னாள். அந்தக் குழந்தை அவளுடையதுதான் என்பதை மாத்திரம் ஒப்புக்கொண்டாள். அதற்குமேல் அதைப்பற்றி ஏதும் சொல்ல மறுத்து விட்டாள். குழந்தையை தரித்திரத்தின் கொடுமை யால் அப்படிக் கொண்டுவந்து விடவில்லையென்றும், வேறு விதியின்றி அதன் வருங்காலத்தை உத்தேசித்தே அப்படி ஓர் அனாதாஸ்ரமத்திற்குக் கொண்டு வந்ததாகவும் சொன்னாள்.

எவ்வளவோ தந்திரமாகவும் சாமர்த்தியமாகவும் பேசி முயன்றும் அவளிடமிருந்து எதுவும் அப்போது கிரகிக்க முடியவில்லை. அந்தக் குழந்தையின் தந்தையைப்பற்றிய பேச்சு வந்தபோதெல்லாம் அவள் முகத்தில் தோன்றிய அந்தத் துன்பத்தின் அளவை வார்த்தைகளால் சொல்லவே முடியாது. கடைசியாக “உங்களிடம் பல விஷயங்களை மறைக்க முயலுகிறேனென்று நீங்கள் ஆயாசப்படக் கூடாது. காலையில் நான் உங்களிடம், வீட்டைத் தேடி வந்தபோது என் மனதிலிருந்த வேதனையையும், அவமான உணர்ச்சியையும் நீங்கள் உங்கள் அதியற்புதமான சுபாவத்தினால் அடியோடு மாற்றிவிட்டீர்கள். அது ஒன்றுக்கே நான் உங்களுக்கு ஏழேழு ஜன்மத்திற்கும் நன்றி செலுத்த வேண்டும், அதோடு என் மனதைப் புண்படுத்தக்கூடாதென்று நீங்கள் பக்குவமாகப் பேசுகிறீர்கள். என் இஷ்டம்போலப் பேச விட்டு விட்டுக் குழந்தையை ஏற்றுக்கொள்ளவும் தயாராக இருக்கிறீர்கள். இதற்கெல்லாம் நான் இந்த ஜன்மத்தில் உங்களுக்கு பதில் செய்துவிட முடியாது.ஏன், எப்போதுமே இதற்கு ஈடு செய்ய என்னால் முடியாது என்பது தெரியும். தெய்வத்தின் கருணைக்குப் பதில் செய்யவோ, நன்றி செலுத்தவோ யாராலாவது முடியுமா? நீங்கள் மறுத்துப் பேசிப் பயனென்ன? நீங்கள் எனக்குப் பிரத்தியட்சதெய்வம்தான்” என்று சொல்லிச் சட்டென்று கீழே குனிந்து என்னை நமஸ்கரித்து விட்டு விர்ரென்று வெளியே போய்விட்டாள். ஆனால் அவள் வெளியே போகும்போது அந்த முகத்தில் கண்ட காட்சியை, அதிலிருந்த துன்பத்தை நான் எப்போதாவது மறக்க முடியுமா! ஊம்…” என்று சொல்லி நிறுத்தினார். மறுபடி, சில நிமிஷங்கள் வரை மௌனமாக இருந்துவிட்டுப் பேசினார்.

“இனிமேல்தான் முக்கியமான பாகம் வருகிறது, கொஞ்சம் கவனமாகக் கேளுங்கள். குழந்தையை உடனே ஆஸ்ரமத்திற்கு அனுப்பவேண்டிய ஏற்பாடுகள் செய்தேன். அதன் தாய்-அந்தப் பெண்-போகும்போது ரொக்கமாகவும், நகைகளாகவும் விட்டு விட்டுச் சென்றதையெல்லாம் சரியானபடி கணக்கில் சேர்க்க ஏற்பாடு செய்தேன்.

அதன்பிறகு நாலைந்து நாட்கள் வரை என் மனம் நிம்மதியை இழந்துவிட்டது. இம்மாதிரி அனாதைகள் புதிது புதிதாகச் கொண்டு வரப்படுவதும், அவ்வப்போது ஏதோ ஒரு துக்ககரமான சரித்திரத்தைக் கேட்பதும் எனக்கு சகஜமாகிவிட்டது. இருந்தாலும் ஒவ்வொரு தடவையும் என் உணர்ச்சிகள் கட்டவிழ்ந்து பொங்குவதை அடக்கி, விருப்பு வெறுப்பற்ற நிலையை அடைய நான் முயன்றும், இன்னும் எனக்கு அந்த சக்தி ஏற்பட்டுவிடவில்லை. இந்த நிலைமையில் இந்தச் சம்பவம் என் நெஞ்சை அளவுக்கு மிஞ்சி நெகிழ்த்திவிட்டது. என் மனச்சமாதானம் குலைந்து விட்டது.

இந்த நிலைமையில்தான் நான்கு நாட்களுக்குமுன் அந்தக் கடிதம் வந்து சேர்ந்தது. எந்தக் கடிதமா? அதைத்தான் சொல்ல உங்களிடம் வந்தேன். இதோ அந்தக் கடிதத்தையே கொண்டு வந்திருக்கிறேன்; படிக்கிறேன். கேளுங்கள். இதற்கு நாலைந்து நகலெடுத்து நேற்றுத்தான் பத்திரிகைகளுக்கு அனுப்பினேன். அதைப்பார்த்தாவது அந்தக்குழந்தையின் தந்தை வந்து குழந்தையை ஏற்றுக்கொள்ள மாட்டாரா என்ற ஆவல்தான் அப்படிச் செய்யத் தூண்டியது என்னை , என் ஆவல் இருக்கட்டும். கடிதத்தைப் படிக்கிறேன் கேளுங்கள்.

லீலாவதி அனாதாஸ்ரமத்தின் காரியதரிசிஸ்ரீமான் குண்டப்பா அவர்களுக்கு அநேக கோடி நமஸ்காரம்.

என்னை நீங்கள் இதற்குள் மறந்திருக்க முடியாது. போன வெள்ளிக் கிழமையன்று அதிகாலையில் முதல் முதலாக நீங்கள் விழித்த என் முகத்தையும் நீங்கள் மறந்திருக்க முடியாது. விதியின் சதிக்குக் கையாளாக இருந்த இந்த துப்பாக்கியயுவதியின் பிரத்தியட்ச தெய்வமாகவுள்ள தாங்கள் இவ்வளவு சீக்கிரத்தில் மறந்துவிடக் கூடுமானால் அப்புறம்…..

அன்று உங்களிடம் என் செல்வத்தை, உயிரையே ஒப்புவித்து விட்டு வந்தேன். உங்களெதிரில், நாணத்தினாலோ அல்லது தவறான வெட்கத்தினாலோ, என் அபாக்கியக்கதையை முழுவதும் சொல்ல இயலவில்லை எனக்கு. ஆனால் உங்களிடம் என் தங்கத்தை ஒப்புவித்து விட்டு வந்த பிறகு என் மனதில் ஏதோ ஒரு பெரிய மாறுதல் ஏற்பட்டுப் போயிருக்கிறது. ஆகையால் துன்பமே நிறைந்த என் கதையை இந்தக் கடிதத்தின் மூலம் உங்களுக்குத் தெரிவித்து விட்டு, கதையையே முடித்துவிட முடிவு செய்துவிட்டேன். அதோடு என் செல்வன் ஊராருக்கு தாய் தந்தையரற்ற ஒரு அனாதையாக இருந்தாலும், உங்கள் ஒருவருக்காவது அவனுடைய சரித்திரம் தெரிந்திருக்கட்டும் என்று தான் இதை எழுதுகிறேன்.

உங்களிடம் குழந்தையை ஒப்புவித்த அன்றே நான் இங்கு புறப்பட்டு வந்துவிட்டேன். குழந்தையை உங்களிடம் ஒப்புவித்த வுடன், என்னுடைய இந்த துர்சொப்பனத்தைக் கலைத்துவிடுவ தென்று முன் கூட்டியே நான் முடிவு செய்திருந்தேன். இருந்தாலும் போகுமுன் ஒரு தடவை, ஒரே ஒரு தடவையாவது அவரை இந்தக் கண்களால் காண வேண்டுமென்ற ஆவல் உந்தித் தள்ளியது. இங்கே வந்தேன். அவரையும் கண்குளிரப் பார்த்தாகி விட்டது. இதோ இன்னும் இரண்டு மணி நேரத்தில் எல்லாம் முடிந்துவிடும். அதற்குள் என் கதையை உங்களுக்குச் சொல்லி விடுகிறேன்.

என் பிறந்தகமும், புக்கமும் தென் ஜில்லாவொன்றிலுள்ள அடுத்தடுத்துள்ள இரு கிராமங்கள். பிறந்த இடம் நல்ல செல்வ நிலையிலிருந்து தற்சமயம் நொந்து போயுள்ள ஒரு பெரிய குடும்பம். புக்ககமோ பரம்பரையாக ஒரு பெரிய செல்வந்தர் குடும்பம்.

ஏராளமான செல்வம் படைத்த அந்தக் குடும்பத்திற்கு அவர் ஒரே குழந்தை. அதன் சீர் சிறப்புகளுடன் வாழ்ந்தவர். விவாகத்தின் போது கூட என் தந்தை நல்ல நிலையிலேயே இருந்தார். எனக்கும், என்பின் பிறந்த மூன்று சகோதரிகளுக்கும் விவாகம் செய்தே எங்கள் குடும்பம் ஏழ்மையடைந்தது.

என் தந்தை எங்களை ரொம்ப அருமையாக வளர்த்தார். பெண்களையெல்லாம் படிக்கவைத்து, சங்கீதப்பயிற்சிக்கும் ஏற்பாடு செய்தார். பள்ளிக்கூட வயதுதாண்டிப் பின்னரும் வீட்டிலேயே உபாத்தியாயர் வைத்துப் படிப்பித்தார்.எங்கள் விஷயத்தில் எவ்விதக் குறைவும் இருக்கக்கூடாதென்பதே அவர் கவலையாக இருந்த தெனலாம். அதிலும் மூத்தவள், முதலில் பிறந்தவள் என்பதற்காக என்னிடம் அவருக்கு அளவுகடந்த வாஞ்சை.

கலியாணமாகி மூன்று வருஷங்களுக்குப் பிறகுதான் நான் கணவன் வீட்டிற்குப் போனேன். இப்போது ஏறக்குறைய ஏழு வருஷமாகிறது. என் பர்த்தா என்னைத் தமது இரு கரங்களாலும் வரவேற்றுத் தமது இதயத்தில் இடம்கொடுத்து அமர்த்திக் கொண்டார்.

மூன்று வருஷகாலம் கலப்பற்ற இன்ப வெள்ளத்தில் மிதந்தேன். ஏராளமான செல்வம். இனிமையும் கனிவும் பொங்கித் ததும்பியது நாற்புறமும். அந்த மூன்று வருஷங்களுக்கப்புறம்தான் என் வாழ்க்கையில் முதல் முதலாகக் கசப்புத்தட்டியது. ஆனால் ஐயோ! அது இப்படிக் கொடிய ஒரு விஷமாக வளர்ந்துவிடுமென்று அப்போது கண்டேனா!

என் கணவரது ஒன்றுவிட்ட சகோதரியொருவள் ஊருக்கு வந்திருந்தாள். அவள் தான் முதல் முதலாக ஆரம்பித்தாள் “மன்னி! அகத்திற்கு வந்து மூன்று வருஷமாகிறதே. என் மருமானை எப்போது நான் எடுத்துக் கொஞ்சுவது” என்று ஆரம்பித்தாள் அதிலிருந்துதான் வளர்ந்தது இவ்வளவும்.

“தூ ஒண்ணு, தூ ரெண்டு” என்பார்களே அப்படித்தான் “என்னடீ இது! மூணுவருஷமாச்சே! இன்னும் ஒரு தூரம் கூட நிற்கல்லேயேடீ” என்றாள் அவருடைய அத்தை டாக்டரைப் பார்க்க வேண்டுமென்றார்கள். “டாக்டருமாச்சு, கீக்டருமாச்சு, நன்னாமடியா மனசு சுத்தத்தோடு அஸ்வத்த பிரதட்சிணம் செய்யச் சொல்லு” என்றாள் ஒருபாட்டி அஸ்வத்த பிரதட்சிணம் செய்து நாகப்பிரதிஷ்டை செய்து, ஆற்றங்கரை மேட்டில் ஒருசிறு கோவில் மாதிரிக் கட்டி வைத்தோம்.

மேலும் இரண்டு வருஷம் ஓடிவிட்டது. என்னவெல்லாமோ மருந்தெல்லாம் வாங்கிக்கொடுத்தார் அவர். இருந்தும் பலனில்லை.

ஊரில் என்னவெல்லாமோ பேசினார்களாம். அவருடைய அத்தைக்கு அல்லும் பகலும், அறுபது நாழிகையும் இதுவே பேச்சாகிவிட்டது. அடாடா! அந்தக் காலத்தில் அவர்கள் பேசியதையெல்லாம் கேட்டு நான் எப்படித்தான் உயிரை நீடித்துக் கொண்டிருந்தேனோ! இப்போது கூட அதை நினைத்தால் துன்பத்தின் எல்லையை அடைந்துவிட்ட இந்தச் சமயத்திலும், அந்த வார்த்தைகளை நினைத்துக் கொண்டால் உடம்பு தானாக நடுங்குகிறது.

அவரைத் தனியாக அழைத்து அத்தை என்னவெல்லாமோ கேட்டாளாம்!

பாவம்! எங்களிருவருக்கும் ஒரு குழந்தை வேண்டுமென்ற ஆசை எந்த எல்லையிலிருந்ததென்பதை அவர்கள் எப்படி அறிந்திருக்க முடியும். அவர்கள் பேசுவதையெல்லாம் கேட்டு நான் புழுவாகத் துடிப்பேன். அவரிடம் என் கஷ்டத்தை மறைக்க முயன்று, எவ்வளவோ சாமர்த்தியமாக நடந்து கொள்வேன். ஆனாலும் அவர் நெஞ்சில் என்னிடமிருந்த பிரேமையின் முன் என் சாமர்த்தியம் எவ்வளவு! அவர் என் மன நிலைமையைக் கண்டு கொண்டு விட்டார்.

“பார் என்ன வேண்டுமானாலும் பேசட்டும் நானிருக்கிறேன் உனக்கு ” என்று எனக்குத் தைரியமளித்து என்னை அணைத்துக் கொள்வார். அவர் வீட்டில் இல்லாத போது கூட அவருடைய கரங்கள் என்னை மற்றவர்கள் சொல்லம்புகளிலிருந்து பாதுகாத்துக் கொண்டிருப்பதாக நான் உணருவேன். அப்படி நடந்துகொண்டார்.

இருந்தும் என்னால் அந்த நிலைமையைச் சகிக்க முடிய வில்லை. ஒருநாள் அவரிடம் வாய்விட்டு அழுதேன். அதைக் கண்டு அவரும் கலங்கிவிட்டார். அடுத்தவாரமே அவர் என்னை அழைத்துக்கொண்டு ராமேஸ்வரத்திற்குப்புறப்பட்டு விட்டார். இந்த மாதிரி தீர்த்த யாத்திரைகளிலெல்லாம் அவருக்கு நம்பிக்கை கிடையாது. இருந்தாலும் அத்தை முதலியவர்களிடமிருந்து எங்கேயாவது கண் காணாத இடத்திற்குப் போய்விட்டால் போதுமென்பதற்காகவும் இம்மாதிரிப் போவதிலும் ஏதாவது பலனிருக்குமோ வென்று அவரையும் மீறி எழுந்த ஆசையினாலுமே அப்படிப் புறப்பட்டார்.

மூன்று மாதகாலம் ஊர், உறவினர் என்ற பிரக்ஞையேயின்றி சுற்றினோம். குற்றாலம், மதுரை, ராமேஸ்வரம் முதலிய இடங்களுக் கெல்லாம் போனோம். கன்னியாகுமரியில் போய் ஒரு வாரம் தங்கினோம். கடைசியாக மதுரையிலிருந்து ஊருக்குப் புறப்படுவ தென்று முடிவு செய்தோம். ஆனால் அவருக்கு ஊருக்குத் திரும்புவதில் இஷ்டமில்லை. எனக்கும் ஏறக்குறைய அப்படித்தான். அதனால் நேராகச் சென்னைக்கு வந்து சேர்ந்தோம்.

அவருக்கோ பணத்தைப்பற்றிக் கவலையில்லை. ஆறு மாத காலம் சென்னையில் ரொம்ப சந்தோஷமாகக் கழித்தோம். இடையிடையே எங்களுடைய நிரந்தரமான ஏக்கம் தலையெடுக்கும்; ராமேஸ்வரம் போய் வந்தும் பலனைக் காணோமே என்று இருவரும் நினைத்துக் கலங்குவோம். ஆனாலும் எங்களுடைய பாக்கியம் அவ்வளவுதானென்று சமாதானம் செய்துகொள்வோம்.

சென்னையிலிருக்கும்போது அவருக்கு ஒரு கடிதம்வந்தது. அத்தை எழுதியிருந்தாள். தனக்கு ரொம்ப வயதாகிவிட்டதாகவும், அவரைப் பார்க்கவேண்டுமென்று ஆவலாயிருப்பதாகவும், அவர் குழந்தையை எடுத்துக் கொஞ்சத் தனக்குப் பாக்கியமில்லாமல் போய்விட்டதாகவும், தெய்வத்திற்குக் கண்ணில்லை யென்றும், தன் வயிற்றுப்பாட்டுக்கே வழியில்லாது தவிக்கும் ஏழைகளுக்கு ஏராள மாகக் குழந்தையைக் கொடுக்கும் பகவான், அவரைப் போன்றவர்கள் விஷயத்தில் கஞ்சத்தனமும், வஞ்சகமும் செய்வதாகவும் இன்னும் என்னவெல்லாமோ எழுதியிருந்தாள். கடைசியாக எழுதியிருந்த ஒரு வரியில்தான் விஷம் முழுவதுமிருந்தது. ஆனால் எனக்குத்தானே அது விஷமாகத் தோன்ற முடியும்? அத்தை நல்ல எண்ணத்தோடு தானே எழுதினாள், அவளை எப்படிக் குறை சொல்ல முடியும்?

ஜோஸியர்களிடம் எங்கள் இருவர் ஜாதகத்தையும் காண்பித்த தாகவும், என் ஜாதகப்படி, அவருக்கு களத்திர பாக்கியம் இல்லை யென்று சொன்னதாகவும், ஆகையால்……ஐயோ! அதை எப்படித் தான் எழுதத் துணிவு வந்ததோ! அவர் வேறு விவாகம் செய்து கொண்டாலென்னவென்றும் எழுதியிருந்தாள்.

அவர்தமக்கு வரும் கடிதங்களையெல்லாம் என்னிடம் தாராளமாகக் கொடுத்து விடுவார். இந்தக் கடிதத்தையும் அப்படி யேதான் கொடுத்தார். அதைப் படித்தவுடன் நான் பட்டபாடு! அப்பா!

அத்தை போட்ட விதை ஊற ஆரம்பித்துவிட்டது. அவர் அதைப் பற்றி அந்தரங்கத்தில் அப்போது என்ன நினைத்தாரோ, என்னிடத்தில் அதைப்பற்றிப் பேசிய போது “சட்” என்று சொல்லி ஒரே வார்த்தையில் அந்தக் கருத்தை உதறியெறிந்துவிட்டார். ஆனால் என் மனதில் அது ஊற ஆரம்பித்துவிட்டது.

ஒரு குழந்தைக்காக அவர் எப்படி ஏங்கினார் என்பது எனக்குத் தெரியும். என்னால் அவருடைய அந்த ஆசை பூர்த்தியாகாதென்றே தோன்றியது. பின் அத்தையின் யோசனைப்படி……. என் நெஞ்சில் ஒரு முள்ளால் குத்தியதுபோல இருந்தது. ஆனால் நாளாக ஆக அந்த வேதனை கொஞ்சம் கொஞ்சமாகக் குறைந்து கொண்டே வந்து, அது தான் சரி என்று எண்ணும் நிலைமைக்கு வந்துவிட்டேன்.

இந்தச் சமயத்தில்தான் என்னை இந்த கதிக்குத் தள்ளிக் கொண்டு வந்த விதி தன்னுடைய கடைசி ஆயுதத்தைப் பிரயோகித்தது; என்னை வஞ்சித்து இப்படி அலங்கோலப்படுத்தத்தான் அப்படி அது கொண்டு வந்து சேர்த்தது என்பதை நான் அறியாமல் போனேனே பாவி

சென்னையில் நாங்களிருவரும் ஒரு வீட்டின் மாடியில் குடியிருந்தோம். நாங்கள் இஷ்டப்பட்டிருந்தால் ஒரு தனி வீடாக எடுத்துக் கொண்டிருக்கலாம். ஏன், அவர் நினைத்திருந்தால் ஒரு சொந்த வீடே வாங்கியிருக்கலாம். ஆனால் இப்படியெல்லாம் வரவேண்டுமென்றிருக்கும் போது?

அந்த வீட்டின் கீழ்ப்பாகத்தில் இரண்டு குடித்தனங்கள் இருந்தன. நான் அங்கு குடிபோன சில நாட்களுக்குள் கீழே இருந்தவர்கள் என்னிடம் நெருங்கிப் பழகிவிட்டார்கள். இரண்டு குடித்தனத்தாரும் தங்கமானவர்கள். என்னிடம் அளவுகடந்த பிரியம் எல்லோருக்கும்.

அத்தையிடமிருந்து கடிதம் வந்து ஒரு மாதமிருக்கும். ஒரு நாளிரவு எட்டு மணிக்கு கீழே சமையலறையில் வேலையை யெல்லாம் முடித்துக்கொண்டு கையில் பால் செம்புடன் மாடிப் படிகளில் ஏறினேன். கீழே முன்கட்டுக் கூடத்திலிருந்து படி ஆரம்பிக்கிறது. கூடத்திலிருந்த அந்த வீட்டு மாமி நான் சொம்புடன் போவதைக் கண்டவுடன் “என்னம்மா! சாப்பாடெல்லாம் ஆச்சா! காரியங்களெல்லாம் முடிந்துவிட்டதா? உனக்கென்னம்மா பிள்ளையா குட்டியா! எட்டு மணிக்கே காரியமெல்லாம் முடிந்து படுக்கையாகி விடுகிறது; என்னைச் சொல்லு” என்றாள்.

அந்த மாமி, சர்வ சகஜமாக மனசில் எவ்விதக் கஷ்டமும் இன்றித்தான் அப்படிச் சொன்னாள். ஆனால்! அது என் உள்ளத்தை எப்படிக் கலக்கிச் சேறாக்கிவிட்டதென்பது அவளுக்கு எப்படித் தெரிந்திருக்கும்!

துடிதுடித்து விட்டேன். யாரையோ கண்டு பயந்து ஓடுகிறவள் மாதிரி எட்டுக்கு இரண்டு மூன்று படிகளாகத் தாண்டி ஏறி மாடிக்குப்பாய்ந்து சென்றேன். அவர் ஏதோ பத்திரிகை பார்த்துக் கொண்டிருந்தார். நான் வந்த வேகத்தைப் பார்த்தவுடன் பதறிப் போய் விட்டார். அதோடு என்முகமும் என் மனநிலையைக் காட்டி விட்டது. ஆனால் நான் அவரிடம் உண்மையைச் சொல்லாமல் ஒளித்து விட்டேன். பைத்தியக்காரி அவரிடம் அப்போதே சொல்லியிருந்தால் அதனால் ஏற்பட்டுள்ள விளைவுகள் வேறு விதமாக இருந்திருக்குமோ என்று பின்னால் எத்தனை தடவை யோசித்திருக்கிறேன்!

அதுதான் நான் அவரிடமிருந்த கடைசி இரவு, ஆம்! நான் அந்த இரவிலேயே முடிவு செய்துகொண்டு மறுநாளே என்னையும், எனக்குத் தெரியாமலே அன்று உங்களிடம் ஒப்புவித்தேனே அந்தக் குழந்தையையும் அனாதைகளாக்கிக் கொண்டுவிட்டேன்.

ஏனென்றா யோசிக்கிறீர்கள்? நான் உயிரோடிருக்கும்வரை, நான் அவருடன் இருக்குவரை அவர் வேறு விவாகம் என்ற விஷயத்தைப் பற்றிச் சிந்திக்கவே மாட்டாரென்பது எனக்கு நிச்சயமாகத் தெரியும் உலகம்தான் புரளட்டுமே ஆகையால் நானாக ஒழிந்துவிட்டால் அவராவது தமது ஆசையை, ஒரு தகப்பனாகும் ஆசையைப் பூர்த்தி செய்துகொள்ள முடியுமல்லவா?

மறுநாள் காலையில் அவர் வெளியே போயிருந்தபோது, அவருக்கு ஒரு கடிதம் எழுதி வைத்துவிட்டுப் புறப்பட்டுவிட்டேன். அதுவரை தனியாக வீட்டுவாசற்படியைக் கூடத் தாண்டியிராத எனக்கு அப்போது எப்படித்தான் அவ்வளவு தைரியம் வந்ததோ ஆச்சரியமாக இருக்கிறது. முன்னாடியே நான் யோசனை செய்து கொண்டிருந்தபடியே நேராக மைசூருக்கருகில் வசிக்கும் என் தூரத்து பந்துவும், பாலியத் தோழியுமா….. ளிடம் போய்ச் சேர்ந்தேன்.

அவள் என் நடத்தையைச் சரியென்று ஒப்புக் கொள்ளா விட்டாலும் எனக்கு ஆதரவு கொடுக்க மறுக்கவில்லை. அவளால் ஆனவரை முயன்று எனக்கு ஆறுதலளித்ததோடு என்னைத் திரும்ப என் கணவரிடம் அனுப்பவும் முயன்றாள். அதுவேயில்லா விட்டாலும், நான் இருக்குமிடத்தையாவது அவருக்குத் தெரிவிக்கும்படியும், அவர் வேறு விவாகம் செய்துகொண்டால் தான் திரும்பிவர முடியுமென்று எழுதும்படியும் தொந்திரவு செய்தாள். அது ஆகிற காரியமா? நான் இருக்குமிடத்தைத் தெரிவித்துவிட்டு அவரிடமிருந்து பிரிந்திருந்து விடவா! எனக்கல்லவா தெரியும் அவரை!

சதிகாரி! ஆம்; எனக்கு நானே சதிகாரியாக இருந்ததால்தான் என் புத்தி அப்படிப் போயிற்று. விதியென்பார்கள். விதி வந்து என்னிடம் அப்படிச் சொல்லித் தூண்டியிருக்கலாம். ஆனால் என் சொந்த புத்தி எங்கே போயிற்று? ஆனால் விதியைவிட சொந்த புத்தியென்ன….-என்னமோ வேதாந்தத்திலிறங்கி விட்டேன்.

இந்தத் துன்பக் கதையை இந்தச் சகிக்கமுடியாத கசப்பை அதிகம் வளர்த்த இஷ்டமில்லை. சுருக்கமாகவே சொல்லுகிறேன். நான் அப்படி விதியின் கையாளாக அவரைவிட்டுப் போனபோது ஒரு மாத கர்ப்பவதி!

தெய்வமே இப்படிச் சதிசெய்வதுண்டா எங்கேயாவது!

முதலில் நானும் என் தோழியும் அதை நம்பவில்லை. நாங்கள் உண்மையறிந்து நம்புவதற்குள் நான் மூன்று மாத கர்ப்பவதியாகி விட்டேன்.

ஐயோ! ஆற்றில் ஒருகாலும் சேற்றில் ஒருகாலுமாக இருந்த அந்த சமயத்தில், அடடா! என்ன பாடு பட்டது மனசு! துக்கமும் சந்தோஷமும் மழையாகப் பெய்வது போல இருக்கும். ஆனால் முடிவில், என் நிலைமை எனக்கு நிச்சயமாகத் தெரிந்த நிமிஷத்தி லிருந்து இன்று வரை நான் ஒரு நிமிஷமாவது கலப்பற்ற சந்தோஷத்தை யனுபவித்ததுண்டா! எவ்வளவு பெரிய துர்ப்பாக்கியவதி நான்!

சந்தேகம் நிச்சயமாகிவிட்டது. நான் தாயாக ஆகும் பாக்கியத்தை அடைந்துவிட்டேன். ஆனால்!

என் தோழி எவ்வளவோ சொல்லியும் அப்போதே நான் அவருக்கு ஒரு கடிதம் எழுத மறுத்துவிட்டேன். இனிமேல் எழுதமுடியுமா? எழுதினால் அவர் நம்புவாரா? களங்கமில்லாமல் என்னை ஏற்றுக் கொள்வாரா? அடி துக்குறி

என்ன செய்வதென்று அறியாமல் துடிதுடிக்க நாட்கள் கழிந்து கொண்டேயிருந்தன. அவள் சிரமத்தைக் கொஞ்சமும் பாராட்டாமல் அல்லும் பகலும் என்னைக் கவனித்துக் காப்பாற்றத் தான் செய்தாள்.

நாட்கள் வாரங்களாகி, வாரங்கள் மாதமாகிக் கழிந்து கொண்டேயிருந்தன. அவருடைய சொத்து அவரிடம் நான் தைரியமாகப்போய் இது உங்கள் சொத்து என்று சொல்லி ஒப்புவிக்க முடியாதென்று தெரியுமானாலும்- அது அவர் சொத்து என்ற ஒரே எண்ணத்தினால்தான் அப்போதே நான் இந்த ‘நாற’ உயிரை முடித்துக்கொள்ளவில்லை. அதோடு அவளும் என்னை இடை விடாதுசந்தேகத்தினால்தான் போலிருக்கிறது கட்டிக் காப்பாற்றிக் கொண்டிருந்தாள்.

முடிவென்ன? அதைத்தான் நீங்களறிவீர்களே. ஒரு பாபத்தையு மறியாத என் செல்வனை நான்-சண்டாளி–சதிகாரி, அனாதையாக்கி உங்களிடம் கொண்டுவந்து ஒப்புவித்துவிட்டேன்.

அவனுடைய தந்தையைப்பற்றிய விவரங்களை இதில் சொல்ல வேண்டுமென்று மனசு பதறுகிறது. உங்கள் முயற்சியினாலாவது அவன் தனக்குரிய அந்தஸ்தை அடையமாட்டானா என்று ஆசை எழுகிறது. ஆனால் அவரை எனக்கு நன்றாகத் தெரியும். அவர் நம்பவேமாட்டார். நான் அவரை விட்டுப்போய் எங்கேயோ தற்கொலை செய்துகொண்டு முடிந்துவிட்டதாகவே அவர் நம்பியிருக்கிறார். அதைக் கலைக்க வேண்டாம்.

உங்களிடம் குழந்தையை ஒப்புவித்துவிட்டு, அவரை விட்டுப் புறப்பட்டபோது நான் கொண்டுவந்த எல்லாவற்றையும் சேர்த்து விட்டேன். உலக நியாயத்திற்கும், தர்மச் சட்டங்களுக்கும் இம்மி யளவும் குறையாத பெற்றோர்களுக்குப் பிறந்தும், பெற்றவர்களா லேயே இந்த கதிக்காளாக்கப்பட்ட அந்தக் குற்றமற்ற பாலகனை என் பிரத்தியட்ச தெய்வமான உங்களிடம் ஒப்புவித்துவிட்டேன். இன்று என் கண்ணார அவரையும் ஒருதரம்- தூரத்திலிருந்தே தரிசித்து விட்டேன். போகிறேன் கடைசியாக ஒரு வார்த்தை-அனாவசியம் தான்-இருந்தாலும், என் செல்வத்தைப் பார்த்துக்கொள்ளுங்கள். நமஸ்காரம்..”

என்றிருந்த கடிதத்தை நிறுத்தாமல் படித்து முடித்து விட்டு என்னை நிமிர்ந்து பார்த்தார் குண்டப்பா.

என் முகத்தைப் பார்த்தவுடன் “இது சாத்தியமா என்று தானே யோசிக்கிறீர்கள். சாத்யம் மாத்திரமல்ல. இதிலுள்ள ஒவ்வொரு வரியும் சத்தியம் என்றும் சொல்வேன். அவள் வெறும் உணர்ச்சியால் மட்டும் ஆக்கப்பட்டவள். அந்தப் பெண்ணினால் பொய் சொல்லவே முடியாது என்று எனக்குத் தெரியும். அவளுடன் நான் இரண்டு மணி நேரம்தான் பழகினேன். ஆனால் அதுவே போதும் எனக்கு! இரண்டு நாட்களாக இந்தச் சென்னை முழுவதும் தேடிவிட்டேன். அவளைக் கண்டுபிடிக்க முடியவில்லை. அவள் கடிதத்தின் உறையில் சென்னை சௌகார்ப் பேட்டை தபால் முத்திரையிருக்கிறது. எப்படி எப்படியெல்லாமோ விசாரித்துப் பார்த்துவிட்டேன். அவளைப்பற்றி மட்டுமின்றி அவளுடைய புருஷனைப்பற்றியும் ஒன்றுமே கண்டுபிடிக்க இயலவில்லை ” என்றார்.

“இந்தக் கடிதத்தின் நகல்களைப் பத்திரிகைகளுக்கு அனுப்பியிருப்பதாகச் சொன்னீர்களே. அவளுடைய கணவன் தற்செயலாக இதைப்பார்ப்பதாகவும், தனக்கு அதிலுள்ள சம்பந்தத்தை அறிந்து கொள்வதாகவுமே வைத்துக் கொள்வோம். ஆனால் அவன் உடனே குழந்தையைத் தேடி, தனது உறவை பகிரங்கப்படுத்தி, அதற்குரிய அந்தஸ்தைக் கொடுக்க முன் வருவானென்று நினைக்கிறீர்களா?” என்று கேட்டேன்.

குண்டப்பா பதில் சொல்லவில்லை.

– மணிக்கொடி (1933-39), முத்துக்கள் பத்து, 2010, அம்ருதா பதிப்பகம்

– மணிக்கொடி இதழ் தொகுப்பு – 1933 ல் தொடங்கப்பட்டு ஆறு வருடங்களுக்கு குறைவாகவே வெளிவந்த இதழின் தொகுப்பு இது. இதை தொகுத்தவர்கள் சிட்டி, அசோகமித்திரன், ப.முத்துக்குமாரசாமி ஆகியோர். கலைஞன் பதிப்பகம் 2001ல் வெளியிட்டுள்ளது.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *