கதையாசிரியர்:
தின/வார இதழ்: மல்லிகை
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: March 29, 2023
பார்வையிட்டோர்: 3,965 
 
 

(1994 வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

சீமாவுக்கும் கிட்டிக்கும் ஆத்மார்த்த சிநேகம். இது எப்போது சாத்தியமானது என்பதை இவனால் தீர்மானிக்க இயல வில்லை . மிகச் சமீபத்தில் இப்படியொரு இறுக்கம் ஏற்பட்டிருக்கலாம். இவன் அவளுக்காக கொண்டு வரும் திண்பண்டங்களில் பாதி துரித கெதியில் கிட்டிக்குப் போய் சேர்ந்து விடும். மூன்று வயதுக் குழந்தையிடம் இப்படியும் ஈரம் சுரக்குமா? இவள் அதன்மீது காட்டும் கரிசனை ஒரு பக்குவமுள்ள தாயின் பரிவை ஞாபகப்படுத்தும். அதை, கன்னம் சேர்த்து அருகணைத்துக் கொஞ்சும்போது சின்ன ரோமங்கள் சிலிர்த்து நிமிரும். மெல்லிய மேல் மீசை உயர நீலக் கண்கள் பளபளக்க பல்லை வெளிக்காட்டி, ஆவல் இழைய, மியாவ்! எனக் குரல் கொடுக்கும்.

பூனைமீது இவனுக்கொன்றும் பெரிய பிடிப்பெதுவுமில்லை. அருமை மகள் சீமாவுக்குப் பிடித்திருக்கிறது என்ற காரணத்தினூடே, இப்போது புதிதாய் கட்சி மாறியிருக்கிறான். அவ்வளவுதான். இதன் சகவாசத்தால் இவன் எதிர்கொள்ளும் எரிச்சலும் சங்கடங்களும் தவிர்க்க முடியாதது. ஆனாலும் விழிகளை மிரள மிரள உருட்டி, நாலா பக்கமும் பார்வையை அலையவிட்டு உடலைச் சிலிர்த்து தரையில் கால்கள் அழுந் தாது நிமிர்ந்து நடக்கும்போது எங்கோ பதுங்கி வாழும் இதன் அசல் இவனது ஞாபகத்திற்கு வரும். கூடவே ஒரு அசட்டுக் கற்பனையும் சிறகு விரிக்கும்.

ஒரு கம்பீரமான பூனையைப் பிடித்து மையினால் உரு மாற்றி அருகில் வைத்து போட்டோ எடுத்து, ‘இது அசல் புலிக்குட்டி தான்!’ என்று யாரிடமாவது புளுகித் தள்ளினால் என்ன, என்ற அபூர்வமான ஆசைதான் அது. கிட்டியின் கடந்த காலம் இவளுக்குப் பரிச்சயமானதுதான். இதன் தாய் இவனில் உதிர்த்து விட்டுப் போன அந்தச் சோகச் சிதறல் இன்னும் ஈரலிப்பு வற்றாமல் இருக்கிறது. இங்கும் அங்குமாய் தாய்ப் பூனை எல்லா இடங்களிலும் சுற்றித் திரியும். அதன் வக்கிர மான பார்வை, அலட்சியமான நடை, கள்ளத்தனம் எல்லாம் இன்னும் நினைவுத் திரையில் நிழலாடுகின்றன.

சிலவேளை அடுக்களையில் அத்துமீறிப் பிரவேசித்து களவு தின்று இவன் மனைவியிடம் விறகுக் கட்டையினால் வாங்கிக் கட்டிக் கொண்டு ஓடிப்பிழைக்கும். இதை வட்ட மிட்டு மோப்பம் பிடித்தவாறு தொடருமே ஒரு கடுவன் பூனை. தொடர்ந்து, ஊடல், கூடல், சீறல், பிராண்டல், எல்லாமுமாகி காதல் விரிவடையும்.

அமானுஷ்ய உயிர்களுக்கும் சிருஷ்டி விளையாட்டு உவப் பான சங்கதியாய் இருக்கலாம். ஆனால்? இருளின் மோன தவத்தை முரட்டுத்தனமாய் குலைத்தும் – பாதிராத்திரி நித்தி ரைக்கு வேட்டு வைத்துக் கலைத்தும் – இவை எழுப்பும் பூதாகரமான கதறலும், அட்டகாசங்களும், மனிதனின் இராக் கால நிம்மதிக்கு விடுக்கப்படும் பயங்கர அச்சுறுத்தல்கள்!

உச்சியிலிருந்து பீறிட்ட கிரண வெப்பத்தை உள் வாங்கிய களைப்பில் மரங்கள் சோர்ந்து நின்றன. மழைக் காதலனின் ஈரலிப்பான வருகைக்கு சமிக்ஞை காட்டும் பூமிப் பெண். வீரியமிழந்து வரும் காற்றின் பிரவேசத்திற்கு கரிசனை காட் டாத செடி கொடி தாவரங்கள் ஒரு சூடான பகல் பொழுதின் உஷ்ண வெப்பம் தாங்காது இவன் முற்றத்து மர நிழலைத் தஞ்சமாக்கிக் கொண்டான்.

குட்டிக்கு வாஞ்சையோடு பாலூட்டிக் கொண்டிருந்த அது, எதையோ நினைத்து தன்னை விடுவித்து எழுந்து நின்று சிலிப்பி உதறி கைகால்களை நீட்டிச் சோம்பல் முறித்துக் கொண்டது. அடுத்த கணம்…! ஒரு அவசர உந்துதலில் குட்டியை விட்டு விட்டு பாதையின் குறுக்கால் எகிறிப் பாய்ந்தது. விரைவாக வந்த லொறி ஒன்றின் கனத்த டயர்களுக்கடியில், சடக்! என்ற ஓசையோடு, நசுங்கிப் பாதையில் குடல் சிதறி அகோரமாய் சீவனை விட்டது. இந்தக் காட்சி தந்த அதிர்விலிருந்து இன்னும் இவனால் முற்றாக நீங்க முடியவில்லை.

கிட்டி அனாதரவாகிக் கத்தித் திரிந்தது. இவன் வீட்டிலில்லாத பொழுதில் அதன் அவலம் மகளைப் பாதித்திருக்க வேண்டும். விளைவு, இந்த வீட்டினுள் இதன் வருகை ஸ்திரமாகியது. இப்போது இது சொந்த உறவுகளில் ஒன்றாகிக் கலந்த போதும் இவனது மனைவி மட்டும் நிர்தாட்சண்யமாய் எதிர்ப்பை பறைசாட்டிக் கொண்டிருநதாள.

பூனையின் முடி பிள்ளையின் வயிற்றில் உணவோடு உட்சென்று பொல்லாத நோய்களைக் கொண்டு வரலாம் என்பதும் அவளது அனுமானங்களில் ஒன்று. அன்று, விடிகா லைக் குளிரில் இவன் வெடவெத்து உறங்கும் வேளை. ஒரு மனுஷ வெப்பம் மிக நெருங்கி வந்து உடலைத் தழுவியபோது இதமாக இருந்தது. வேண்டுதலும் எதிர்பார்ப்பும் இல்லாத இரவுகளில்கூட திடுதிப்பென கிட்டும் சுக அனுபவங்களில் இதுவும் ஒன்று.

அந்த நிமிஷ நிகழ்வுக்கான தாற்பரியமும் அர்த்தமும்தான் என்ன? இவன் மனச்சிலந்தி கேள்வி இழைகளுக்குள் மூச்சுத் திணறியது. பெண் மனம் கிளர்ந்து மயங்கி மகிழும் கணங்கள் எவை? மழை தரும் மகிழ்ச்சி, குளிர்காற்றின் உதறல், வெப்ப தட்ப, காலமாற்றம், இவற்றில் எதுவாக இருக்கும்? ஒரு சுகானுபவத்தை வரவிடுவதற்கு அப்படி என்ன பெரிய சுயவி சாரணை வேண்டிக் கிடக்கிறது.

இவனுள் எசகு பிசகாய் எண்ணங்கள் சமர் புரிந்தன.

உறக்கம் கலைந்தும் மூடிய இமைகளுக்குள் கனவுகள் ஏன் நிழல் விரிக்கின்றன? பரவசங்களுக்கு சிறகு முளைக்குமென் றால் மனிதனுக்கு கிளை தாவுதல் ஒன்றும் அசாத்திய காரிய மில்லை. திடீரென கற்பனைக் கோட்டை சரிந்து தரைமட்டமா கியதில் மின்னலின் அதிர்வு! ஆள் மாறாட்டம்கூட அமானுஷ்ய உருவில் வரும் சாத்தியம் உண்டா ? இவன் இல்லத்தரசி பத்தடி தள்ளி தரையில் குறட்டை விட்டுத் தூங்க, கட்டிலில் கிட்டி இவன் சரீரத்தோடு ஒட்டியபடி சுருண்டு கிடக்கிறது. ஏமாற்றத் தைக்கூட ஒரு அனுபவமாக மட்டும் எதிர் கொள்ளும் பக்குவம் வாய்க்குமென்றால் வாழ்க்கை எத்தனை சுகமாக இருக்கும்?

அலையடித்துக் குமுறியதில் எண்ணத்திவலைகள் உடைந்து சிதறின!

“ஒங்களுக்கு எப்பிடிச் சொன்னாலும் நீங்க கேக்கிற இல்ல! இந்த நரகப்பூனைய எங்கெயெண்டாலும் கொண்டு பெயித்து தொலச்சிட்டு வரச்சொல்லி, ராவைக்கு கட்டிலேயும் பெட்சீட்டையும் ஹராபாக்கிற இந்த மூதேவி! கழுவிக் கழுவி ஏன்ட கை சந்து கழன்டு, விளப்போற, பெரிய அதாபு!”

வார்த்தைகளின் கனத்தில் முகம் சிவந்து துடித்தது அவளுக்கு.

இதன் ஒட்டுறவால் குடும்ப அன்னியோன்யம் கழுதை தேய்ந்து கட்டெறும்பாகிக் கொண்டிருந்தது. இது நிமித்தமாக மகள் தினமும் உம்மாவிடம் அடிவாங்கும் படலம் வேறு நீண்டு கொண்டிருந்தது. பிரச்சினையின் உக்கிரம் தணியாதா என்ற கேள்வியில் மனம் அவலப்பட்டது. கிட்டியை எங்கா வது கொண்டு போய் தலைமுழுகுவதைத் தவிர வேறு வழியே இல்லை என்பதை தீர்க்கமாக உணர்ந்தான். இது ஆகும் பட்சத்தில் இதுவிடயமாக இவளது எரிச்சலை முகங்கொள் ளும் சங்கடம் இனி இருக்காது. ஆள் மாறாட்டத்தால் அசடு வழியும் இரவுகளும் இருக்காது. ஆனால் ஒரே ஒரு பிரச்சினை. கிட்டியின் பிரிவால் தடுமாறிப் போகும் மகளின் நிலை மையை எவ்வாறு சமாளிப்பது? ஏதாவது அவளுக்கு சாக்குப் போக்கு சொல்லி சிறிது நாளைக் கடத்தி விட்டால் பின்னர் சகஜநிலை திரும்பலாம். இனி கிட்டியின் நாடு கடத்தல் விவகாரத்தை எப்படி எப்போது நடத்தலாம் என்பதில் இவன் நாரைக் கொக்காய் காத்திருந்தான்.

இன்று வீடும் சுற்றுப்புறமும் ஓய்ந்து வீடு அமைதி தட்டிப்போயிருந்தது. எல்லா வகையிலும் சாதகமாய் இருந் தது. காரண காரியத்தோடு விழிகளை நாலாதிசையிலும் அலைய விட்டான். சீமாவை அவள் உம்மா கிணற்றடியில் குளிப்பாட்டிக் கொண்டிருந்தாள். கிட்டி எங்கே போய் தொலைந்திருக்கும்? என்ற வினாவிற்கு உடன் விடை கிடைத்தது. அது முன்வாசல் கதிரையில் ஹாயாக உறங்கிக் கொண்டிருந்தது.

ஒரு செயற்கைத் தனமான வாஞ்சையோடு அதன் உடலை மெல்லத் தடவினான். ஏதோ ஒரு ஆபத்து வரப்போகிறது என்பதை முன்கூட்டியே அறிந்து தானோ என்னவோ கண்க ளைத் திறந்து கோபத்தோடு முறைத்து முகத்தை விகாரமாக்கி மியாவ் என்று சமிக்ஞை காட்டியது. பின் அசலான உறக்கத்தை உதறிவிட மனமில்லாமல் சுருண்டு படுத்துக் கொண்டது. இவன் உற்சாகமடைந்தான். ஒரே தாவலில் அதனை அழுத்திப் பிடித்தான். ஏற்கனவே தயார் நிலையிலிருந்த நைலோன் பைக்குள் வசமாகத் திணித்துப் போட்டுக் கொண்டு பரபரப்பாக வெளியே கிளம்பினான்.

உசிதமான இடமொன்று அமையாமல் இவன் மனமும் பையும் சுமையேறிக் கனத்தன. இரண்டு மைல்களை வியர்த்து விறுவிறுத்து நடந்தாகி விட்டது. சலிப்புடன் மீண்டும் பய ணத்தை தொடரும் வேளையில் ஒரு குறிப்பிட்ட இடத்தில் வந்து நின்று நிதானமாக யோசித்தான். இருபுறமும் பயிர் செழித்த வயல்கள். சலனமின்றி உறங்கும் ஆறு. பாதையின் குறுக்கே பிரமாண்டமான பாலம். விசாலமாய் கிளைபரப்பி எல்லா இடங்களிலும் அடர்ந்து செறிந்த மரங்கள். பாதசாரிகளின் நடமாட்டமும் குறைந்து காணப்பட்ட அந்த இடம் இவனைக் கவர்ந்தது. வயல் வரப்பினூடே உற்சாகமாக சிறிது தூரம் நடந்து சென்றான். அமுங்கிப் பிடியாய் கிட்டியை வெளியே எடுத்து ஒரு மரத்தடியில் நிர்தாட்சண்யமாய் கிடத்தி னான்.

அது மூச்சுத் திணறி சோர்ந்து துவண்டு வரட்சியாய் இவனைப் பார்த்தது. சனியன் தொலையட்டும் என்ற ஆசுவத பெருமூச்சோடு நடைபாதையை நோக்கி கால்களை எட்டி வைத்தான். அதன் அழுகுரல் மிகக் கீழ் ஸ்தாயியில் தேய்ந்து கரைந்தது… காரிய சித்தியில் உற்சாகம் கரைபுரண்டது. மனை வியின் மகிழ்ச்சி முகம் இவன் மனக்கண்ணில் அசைந்தது. ஆனால் குற்ற உணர்வின் முள் குத்திய நெருடலில் நெஞ்சின் எங்கோ ஒரு மூலையில் லேசாய் வலியெடுத்தது.

“கிட்டிய எங்க கொண்டு பெயித்து வுட்டுட்டு வார! ஒங்களுக்கு கொஞ்சமென்டாலும் யோசன இல்ல. வாய் பேச ஏலாத பிராணிய சும்மா வூட்டில் இருக்க வுடாம… பாவம்!” இவனது பாதாதி கேசமெல்லாம் சினத்தால் தடுமாறியது.

கட்சி விட்டு கட்சி மாறும் அவசரம் அரசியல்வாதிக ளுக்கு வரலாம். இவளுக்கு ஏன் வந்தது. சே! இந்தப் பெண்க ளுக்கு எப்பவும் எதிலும் நிலையான கொள்கை கிடையாது! மனதால் கறுவிக் கொண்டே அக்னிப் பார்வையை அவள் மீது சொரிந்தான்.

“ஒங்களுக்கு செய்தி தெரியாது போல. நேத்து அடுத்த வூட்டுக் கொல்லையில பெரிய பொடையன் பாம்பொன்றா இருந்தீக்கி! கிட்டி அத சுத்தி சுத்தி சீறிப் பாஞ்சிருக்கிய. அதோட எல்லம் சேந்து அத அடிச்சிக் கொண்டு போட்ட எல்லாருமே அந்தப் பூனைய பாராட்டுற. சின்னப் புள்ள உள்ள எங்கட வூட்டுலேயும் அது இருந்தா பாம்பு பூச்சிகள, வரவுடாது”.

அவள் இறுதியாகச் சொன்ன வார்த்தைகளின் அர்த்தத்தில், வெப்பம் கண்டு மறைந்த பனிப்படலமாய் இவன் கோபாவேசம் கலைந்தது.

அவசரத்தில் இப்படிச் செய்துவிட்டோமே என்று அங்கலாய்த்தான். அவள் அடுத்து சொன்ன விஷயம் கவலையை இரட்டிப்பாக்கியது.

“மகள் வெலனேலயிருந்து பாலையெண்டாலும் குடிக்கி றாலில்லையப்பா! பூனக்குட்டிய தேடித்தேடி ஒரே அழுகையும் அலட்டலும். இப்பதான் சாட கண் அசந்த”.

வீட்டில் நிலவிய அசாதாரண வெறுமையில் மனம் குமைந்து கனத்தது.

மறுநாள் பொழுது சங்கடங்களோடு புலர்ந்தது. இரவு பூராவும் கிட்டியை விளித்து உறக்கமின்றி அலட்டிக் கொண்டி ருந்த குழந்தைக்கு விடிந்ததும் காய்ச்சலும் சோர்வும் வாட்டின. இவன் கவலையோடு நெடுமூச்செறிந்தான்.

“நான் கிட்டிய தேடிப் பார்த்திட்டு வாறன் – நீங்க புள்ளய அவசரமா டொக்டர் கிட்ட கொண்டு போங்க” என்று கூறி விட்டு பதைபதைத்த மனதுடன் வீட்டிலிருந்து கிளம்பினான். கிட்டி தொலைந்த வருத்தம், மகளின் திடீர் சுகயீனம், வீட்டில் நிலவிய வெறுமை எல்லாமுமாக இவனை அல்லாட வைத் தது. ‘இண்டைக்கு கிட்டிய எப்படியும் தேடிக் கண்டு பிடித்தாக வேண்டும்’, என்ற எண்ணத்தில் வேகமாக விரைந்தான்.

மூலை முடுக்கெல்லாம் கிட்டியைத் தேடி களைத்துப் போனான். சோர்வும் ஏமாற்றமும் மேலிட அந்த அடர்ந்து செறிந்த மரங்களையும், வயல் வெளியையும் ஏக்கத்தோடு பார்த்தான். அந்தப் பிராந்தியமே ஒரு மயானவெளியாய் உள்ளுணர்வுகளைக் கலக்கின.

கிட்டிக்கு என்ன நடந்திருக்கும்? எந்தத் தடயங்களு மில்லை! எண்ணங்கள் தறிகெட்டு ஓடின.

திட்டுத் திட்டாய் வயற்காட்டை ஊடறுத்துப் பாயும் இருள் அந்த நடுநிசி வேளை அமைதியை அசத்திவிடுமாப் போல் கேட்கும் கிட்டியின் அவலக்குரல், எங்கும் வியாபிக்கி றது. செவிகளை கூர்மையாக்கிக் கொண்டும் விழிகளை குரூர மாக்கிக் கொண்டும் மெல்ல ஊர்ந்து வரும் காட்டுப் பிராணி கள். ஒன்றன்பின் ஒன்றாய், வந்து, பதுங்கி, உடல் சிலிர்த்து, வீயூகம் அமைக்கின்றன. அவை கிளர்ந்து, குறிபார்த்து, தாவிப் பாய்ந்து, கடித்துக் குதறி, குருதியும் மாமிசமான சதைத் துண்டங்களை வெறியோடு விழுங்கி பதுங்கிச் செல்கின்றன.

‘ஐயோ… கிட்டி! இது என்ன கொடுமை!’ இவனது ஆன்மா ஈரத்தால் கசிந்துருகியது. உடல் வியர்வையால் நனைகிறது. ஒரு வாய்பேச இயலாத ஜீவனின் படுகொலை நிகழ்வுக்கு நான் பாத்ரதாரியா? என்ற கேள்வியில் இவன் கூனிக் குருகி, சோர்ந்து தள்ளாடி வீடு வருகிறான்.

‘வாப்பா ஏண்ட கிட்டி வந்திட்டே!’ மகள் குதூகலித்தாள். இவனால் நம்பவே முடியவில்லை இந்த அதிசயத்தை. மகளின் மடியில் மகிழ்ச்சியோடு அமர்ந்திருந்த கிட்டியை ஆச்சரியத் தோடு நோக்கினான் இவன். அது குரூரமாய் முறைத்தது.

– 23.6.1994 – மீறல்கள், மல்லிகைப் பந்தல் வெளியீடு, முதற்பதிப்பு: நவம்பர் 1996

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *