அந்த வண்டியின் ஓட்டம்

0
கதையாசிரியர்:
தின/வார இதழ்: மல்லிகை
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: May 30, 2021
பார்வையிட்டோர்: 2,562 
 
 

(1972ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

அந்த ஒற்றை மாட்டின் கழுத்து மணி கணீர் என்று ஒலிக்கிறது…

சாலையில் நேற்று முளைத்த நாகரிக ஒலிகளுக்கு மத்தி யில், “கிணுங் – கிணுங்” – அந்த ஆரவாரமற்ற மணி யோசை யாருக்குக் கேட்கப்போகிறது?. வண்டி என்ற பேரில் அது மெல்லத்தான் அசைகிறது. அதன் குடை இன் றும் முற்றாகச் சாய்ந்து விடவில்லை. ஆங்காங்கே காய்ந்த தென்னோலை இற்றுத் தொங்குகிறது. அதையெல்லாம் திருத்தி அமைக்க வேண்டுமென்றால் நல்ல பாக்குமரப் பட்டை சீவி .. ஓலை, கம்பு, பலகை என்றெல்லாம் பெரிய செலவு. மாடும் கிழடுகண்டு விட்டது. அதற்கு வெறும் வண்டியையே இழுக்க முடியவில்லையே. புதிய இளம்மாடு ஒன்று வாங்க வேண்டும் என்று எண்ணிக் கூடப் பார்க்க முடியாதே அவரால்.

வாகனங்கள் வந்து மோதும் நடுச் சந்தியில் வந்து குத்திட்டு நின்று விட்டதும். வண்டியின் உரிமையாளர் முகம்மது ஷாவுக்கு உள்ளூர ரோசமும், வெட்கமும், அவ மானமும் கனன்று கொண்டு வருகிறது. இறங்கி நின்று மாட்டுப் பாஷையில் கத்துகிறார். அந்த அர்த்தமற்ற சொற்களை அது புரிந்து கொண்டதோ என்னவோ! ‘அசைய மாட்டேன்’ என்கிறது. ஷாவுக்கு வந்த ஆத்திரத் தில், வலது கையிலுள்ள பச்சைப் பிரம்புக்கு உருவேற்றப் படுகிறது. கண் மண் தெரியாமல், அந்த ஒன்றும் அறியாத அப்பாவிப் பிராணியின் முதுகுத் தோலில் ஒரு கணம் நர்த்தனம் ஆடியது. எப்போதும் இல்லாமல்.

எசமானோடு ஒட்டிப் பழகிய அந்தக் கிழ மாட்டுக்கு, அவர் மனப்பாங்கு புரிந்திருக்குமோ, அல்லது அடி பொறுக்காமல் தான்… அது என்னமாய்க் குதித்து ஓடுகிறது. ஒரு புத்தம் புதிய கன்றுக்குட்டியின் துள்ளலுடன். ஷா , அசந்துபோய், பனிக்காலத்தில் நடுங்குவது போல, வண்டியின் வேகம் சகிக்காமல் ஆடிக்கொண்டே, மனம் பூரித்துப் போகிறார்.

அப்போது அவருக்கு…

அந்தப் பழைய ‘ஜில் ஜில்’ ஓட்டத்தை அல்லவா ஒத்திகை காட்டி ஓடுகிறது.

அவருக்குத்தான் மனம் எவ்வளவு இதமாக இழந்த இளமையெல்லாம் மீண்டும் – அவர் முகத்தில் அப்படி ஒரு ஒளி பிரகாசிக்கிறதே!

அப்போதெல்லாம் வண்டியின் ஒலியும், மாட்டின் கழுத்து மணியும் பின்னணி இசைக்கக் கம்பீரமாக, அவ ருகே உரித்தான மலாய்ப் பாடல் ஒன்றைப் பாட……

ஓட்டத்தையே ஆரம்பித்து வைத்து ஓடிய ஓட்டம் அது!

அந்த இனிய நினைவையெல்லாம் ‘டப்’ என்று நிறுத்தி விட்டதே வண்டி மாடு மிகவும் களைத்து, ஓரடி கூட எடுத்து வைக்க முடியாமல், கண்கள் பிதுங்க, ஷாவின் ஆக்கினைக் காக விழித்துக் கொண்டிருக்கிறது.

மனிதனுக்கு வந்த ஆக்ரோஷத்தால் தன்னையே ஒரு கணம் மறந்து விடுகிறார் பாவம் அது வாயில்லா ஜீவன். அதன் உடம்புக் கூட்டுக்குள் அந்த ஜீவன் எப்படிச் சிறைப் பட்டிருக்குமோ! அந்தத் தகாத கூட்டிலிருந்து என்று தான் விடுதலை கிடைக்கும் என்று ஏங்கிக் கொண்டிருக்குமோ! ‘ம்மா’ என்று கத்தத் தெரியும். ‘புஸ் புஸ் ‘ என்று மூச்சு விடத் தெரியும்.

முகம்மது ஷாவுக்கு கைகளும் ஓடவில்லை; கால்களும் ஓடவிங்லை.

“இருந்தாப்போல இருந்து இன்று, அதிர்ஷ்டம் குருட்டு வாக்கில் பட்டது. இந்த நேரத்திலே, இப்படிப் பேசி, எப்ப போய் இரண்டு ‘ட்றிப்’ சாமான் ஏத்தறது ..? சே! நாளுக்கு நாள் இந்தப் போராட்டம் – மிக மோசமான நிலைக்குத் தான் வந்துவிட்டது. அதனால் அவருக்குக் கஷ்டம், அவரால் அதற்குப் பெருந் துன்பம். அதன் இளமைக் கால சேவையை அவர் மறந்துவிட்டாரா? அவரது இளமைக் காலத்தில் எத்தனை ‘ இளம்” மாடுகளுக்கு அதிபதி. அப்படியானால் அவரைத்தான் இந்தச் சமுதாயம் மறந்து விட்டதோ!

ஒருவாறு முச்சந்தியைக் கடந்து நூறுயார் தூரம் நகர்ந்து, நகர்ந்து போனாரோ என்னவோ –

ரோட்டில் பல சரக்குச் சாமான்களை அடைத்துக் கொண்டு லொறியொன்று, இழித்துக் கூறி, எள்ளி நகை யாடிக்கொண்டு போயிற்று. அதனால் அவர் மனம்தான் மேலும் புழுங்கிற்று.

நான்கு சில்லுகள் பூட்டிய வண்டியொன்று போனாலே போதும். அது முகம்மது ஷாவின் நெஞ்சக் குமுறலைக் கிளறி சூறாவளியை ஏற்படுத்தத்தான் அப்படிப்போகும்.

கோபக் கனல் சொல்லுருவாய் உதட்டில் நெளிகிறது…

“அந்தக் காலத்தில் இவங்க இப்படித்தான் ஓடினாங்க. என்னமோ பெரிய ‘ இதெ’ கண்டு பிடிச்சிட்டாங்க; போங் கடா அதான் இடமிருக்கே, இன்னும் ஏன் பூம் பூம்.. னு கக்திக் கொல்லப் போறீங்க; துணிச்சல் இருந்தா இந்த முகம்மது ஷாவுடன் மோதிப் பாருங்கடா…”

இன்னும் அரைமைல் தூரம் போகவேண்டியிருப்பதை நிதானித்துக்கொள்கிறார். மார்கழியின் குளிரும், விடாத மழைத் தூறலும் வேறு. மீண்டும் இறங்கி நின்று ‘பூசை’ நிகழ்கிறது. அந்தப் பொல்லாத ‘மாட்டடி’ முடிந்ததும் கிழவருக்கே கைகள், மனம், உடம்பு சகலமுமே ஒரு மாதிரி யாகத்தான் இருக்கிறது.

பாவம் அந்தக் காலத்தில் இதுவும் ஒரு நல்ல இளம் மாடு என்று பெயர் எடுத்திருக்கும். கிழமாடுகள் இதனு டன் போட்டிபோட முடியாமல் தவித்திருக்கும், கிழடுக ளுக்கு வண்டிக்காரர்கள் மாட்டடி அடித்திருப்பார்கள். அப்போது அவை பூமித் தாயை அரவணைத்துக் கொண்டிருக் ரும். ஏற்றிச் சென்ற பொதிகள் எல்லாம் சிதறிப் போயி குக்கும்.

இப்போது வண்டியின் சக்கரங்களும், ஷாவின் நெஞ்ச மும் மெல்ல அசைகிறது.

ஆரம்ப காலத்திலும் அவரிடமிருந்தது ஒரு ஒற்றை மாடும் வண்டியும் தான். எவ்வளவு சுறுசுறுப்பு. நாவல் நகரைச் சுற்றி ஆறுமைல் சுற்று வட்டாரத்தில் அவர்தானே ”முடிசூடா மன்னர்”. எங்கு போக வேண்டுமென்றாலும் ஷாவின் வண்டி. எல்லாவற்றிற்கும் அவரையே சுற்றிச் சுற்றி எவ்வளவு பெருமை.

முகம்மது ஷாவுடைய வண்டியிலே போனால் “குளு குளு வண்டியில்” போனமாதிரித்தான் அன்று.

அதன் பின்…

எத்தனை எத்தனையோ மாற்றங்கள் –

அவை –

அந்த அதிர்ஷ்ட வண்டியின் முதல் மாட்டுக்கு ஈடா குமா? அதுதான் மேடு பள்ளங்களில் எப்படி ஓடிற்று!

முகம்மது ஷாவைப் பார்க்க மழுங்கிய மாநிறமாய் இருப்பார். வாரத்திற்கொருமுறை ”புல் சேவ்” பண்ணிக் கொள்ளும் முகமெல்லாம் நரைமுடி தாறுமாறாக மண்டிக் கிடக்கிறது. மொட்டை அடித்துக்கொள்ளும் தலையா அது!

அழுக்கேறிய “பிஜாமா’ ‘சாரம், அதற்கு மேலால் கன மான கமிசை. மழை நேரத்தில் கால்கள் குளிர்ந்து போகா மல், பாதுகாப்புக்கு ஒரு சோடி பழைய தோல் செருப்பு சகிதமாக…

திருமணமாகிப்போன, அவரது இரு பெண் பிள்ளைக ளும், நீண்ட காலமாக ஒதுக்கப்பட்டே போயின, தாய், தந்தையின் ஞாபகம் வந்து, திடீரென்று பார்க்க வந்து விட்டால் –

அவர்களாலேயே இனம் கண்டு கொள்ள முடியாத தோற்றம் அது.

அந்த வயோதிபத் தாய் தான் அறிமுகப்படுத்த வேண்டியிருக்குமோ! அவளாலும் முடியாது. ஷா ஏதாவது கொண்டுவந்து கொடுத்தால் அன்றைக்கு அடுப்பு புகையும். மற்ற நேரங்களில் – சதா ஏதாவது காரணம் இன்றி ஷாவுடன் ‘வாய்ச் சண்டை’ போடுவாள். பிள்ளைகளைக் காணாத ஏக்கம் என்று அயல் வீட்டுக் காரர்கள் கூறுவார் கள். சில சமயங்களில் ‘சண்டை’ வலுவடைந்து, ஷா ஏதாவது சொல்லிவிட்டார் என்றால், அழுகை ஓலம் கேட்கும். அந்தக் குடிசையில் இது விசித்திரம் ஒன்றும் அல்ல.

“ஆச்சி பேசாமல் ராபியா வீட்டிலே போய் இருங்க” என்று யாரும் இப்போது புத்தி சொல்லப் போவதில்லை.

“அப்ப நீயா கிழவனுக்கு கஞ்சி காய்ச்சிப் போடுவே” என்று எப்போதோ வெடுக்கென்று கூறி அதற்கு முற்றுப் புள்ளி வைத்து விட்டாள். அவள் குடிசையில் ஒரு சமயம் கண்ணீர் பெருகும். ஓலம் கேட்கும். ஒரு காலத்தில் சிரிப் பின் ஒலி இருந்திருக்கும் அயலவருக்கு என்ன?

மூத்தவள் ராபியா எப்போதோ ஒரு ஹஜ்ஜிப் பெரு நாளைக்கு பணமும், உடுப்பும் அனுப்பியிருந்தாள். இளைய வள் பௌசியாவும் ஓயாமல் தாய்க்குக் கடிதம் எழுதிக் கூப்பிடுவாள் தான்.

வயதானபின், பிள்ளைகளின் நிழலில் முடங்கிக் கொள் வதும் ஒரு வாழ்வா? என்று இருவருமே விரும்பவில்லை.

முகம்மது ஷாவுக்கு ஒரு பற்றுக்கோடு பலமாக இருந்தது.

வண்டிகள் பழசாகும்போது புதுப்பிப்பார். மாடுகளின் கால்கள் ஓடியோடித் தளர்ந்து விட்டால் இளயதுகளைக் கொண்டுவந்து கட்டுவார்.

அவரே கிழமாகி. பழசாகி நின்றால்…!

தூறிக்கொண்டிருந்த மழை வானத்தில் நிகழ்ந்த புரட்சியால் “சோ” வென்று கொட்டத் தொடங்குகிறது. வண்டியின் காய்ந்த தென்னங்கீற்றினூடாகப் பெரிய துளி கள் கொட்டுவது போதாதென்று சாரலும் வேறு ஷாவைத் தாக்க ஆரம்பித்துலிட்டது.

இந்நேரம் அவரது வீட்டின் கூரையும் ஒழுகும். அவரது வண்டியின் குடையைப் போல. அங்கு கிழவி என்ன பாடு படுவாளோ?

அவசரப்பட்டுத் திரும்பி விட்டால்…

இன்று கிடைத்திருக்கும் ஓர் அதிர்ஷட “பேரம்” என்ன ஆகும்.

அம்பகமுவ வீதி வழியாக ஊர்ந்து கொண்டிருந்தவ ருக்குச் சட்டென்று இடது பக்கத்துக்குத் திருப்பி பின்னால் எடுப்பதற்குள் இ.போ.ச. காரன் ஓயாமல் ஊதிவிட்டான். “மக்கள் வங்கிக்கு” முன் அரசாங்கத் தார் ரோட்டு குறுகி இருப்பதால் எப்போதும் ஒரு நெரிசல் இருக்கும் என்று அவனுக்குத் தெரியாதா? ரோட்டில் தேங்கி நின்ற நீரைச் ‘சடா’ ரென அறைந்தாற் போல மாட்டுக்கும் வண்டிக்கும்

அவருக்குமாக அடித்துவிட்டுப் பறக்கிறானே பாவி.

அப்புறம் …… இன்னொன்று பின்னால் ‘பூம்… பூம்….னு.

“ஹார்ன்” இருக்குன்னு சும்மா வேணும் என்று கத்தறான்களா!

“குருத்து இலை காய்ந்த இலையைப் பார்த்து அப்படி என்ன சிரிப்பு”

ஒற்றை மாட்டு வண்டியின் சொந்தக்காரர் முகம்மது ஷா மிகுந்த இறுமாப்புடன், ஒரு காலகட்டத்தின் அசலுக் குரிய வேகத்துடன் போகிறார்.

பூம்… பூ பூ.

“நகல்களுக்கு நாலு கால்களே முளைத்து முறைக் கட்டுமே”

நேற்று மாலைதான் அவருக்கு அந்த அதிர்ஷ்ட அழைப்பு வந்தது. நகரில் ஒரு பிரபல புள்ளியின் வீட்டு வேலைக்காரப் பையன் வந்து சொன்னான் –

ஷேக் முதலாளியின் லொறிகள் இரண்டும் கொழும்புக் குப் போயிருக்கு, நாளைக்குப் பகல் பன்னிரண்டு மணிக்கு முன் உள்ள “நல்ல நேரத்தில், ரம்புக் பிட்டிய புதிய பங் களாவுக்கு இரண்டு ‘டிறிப்’ கொண்டு போனால் போதும், அதுக்குள்ளே லொறி வரும்”

பேசி முடிந்ததும் அவன் விருட்டென்று ஓடிவிட்டான்.

“உங்க முதலாளி ஏன் டவுன் பக்கத்திலேயிருந்து இப்ப ஒதுங்கிறார்?” கிழவரின் கேள்விக்குப் பதில் சொல் லக்கூட அவன் அங்கு இல்லை. தானே பேசிக் கொண்டிருக்கிறார் —

முதலாளிக்கு என்னப்பா, அவர் காரில் போவார்; ஐந்து நிமிடம், நடந்து போனாலும் அரை மணி நேரம் போகாது அப்ப அப்ப…

மாட்டு வண்டியில் போனால்…?

அவரது ஆத்திரத்தைக் கிளப்பும் கேள்வி அது! அடிக் கிறார், துன்புறுத்துகிறார், துரிதப்படுத்துகிறார்.

பரபரப்பும் தவிப்புந்தான்.

“காலையிலே அவிழ்த்து விடப்பட்டிருந்த ‘சனியனை’ வண்டியில் பூட்டி வந்த லட்சணம் இப்படியா இருக்கனும்”

முப்பது வருடங்களுக்கு முன் தான் ஒரு புண்ணியவா னுக்கு, நாளாந்தக் கூலிக்கு வண்டி இழுக்கத் துவங்கிய போது தான் – அது அவர் தலையிலே ஒட்டியிருப்பதாக –

40

அதையே அவர் வாழ்க்கைக்கு ஆதாரமாக்கிக் கொண்டா ராம். பின்பு அவருக்கே வண்டியும் மாடும் சொந்தமாக வாங்க வேண்டுமென்ற ஆசை துளிர்விட்டு, விருட்சமாய் வளர்ந்தது…

“அடேயப்பா நினைவுகள் மட்டும் இன்னும் பழசாகவே இல்லை”

அதோ அந்த பங்களா!

முகம்மது மலைத்து நிற்கிறார்.

பூம் … பாம். பூம்

“அட… சீ…. இதென்ன?” அவரது உள்ளம் சுரீரென்று சுட்டுவிட்டது.

கொழும்புக்குப் போன லொறிகள் வந்து இந்த நேரத்திலா கழுத்தறுக்க வேண்டும்.

லொறிகள் பங்களாக் கேட்டுக்குள் நுழையப் பார்க் கின்றன.

ஷாவும் தன் வண்டியை சரியாக வாயிலில் நிறுத்திக் கொள்கிறார்.

இனி அவர் அசைத்தால் தான் அவை உள்ளே போக முடியும்.

பூம்… பூம்.. பூம்…

“நன்றாக நாக்கைப் பிடுங்கிக் கத்தட்டும் …”

அவர் வண்டியை அசைக்கவில்லை.

“முடிந்தால் இந்த ஷாவுடன் மோதிப் பாருங்கடா” என்று நினைக்கிறாரோ!

ஹார்ன் சத்தம் வானைப் பிளக்கிறது. யாரோ முதலாளியின் ஆள் ஓடி வருகிறான்.

“யாரப்பா.. என்ன இதெல்லாம் . ஓ வந்து அதுதான் லொறிகள் நேரத்துக்கு வந்திருச்சே… இப்ப என்ன அதுக்கு. உள்ளுக்கு வரட்டும்”

“அப்ப ரெண்டு ட்றிப் ஏத்த என்னை ஏன் வரச் சொல்லனும்?”

இப்படி திறந்த வெளியில், ஒரு சாதாரண வண்டிக் காரனோடு போர் தொடுப்பது அசிங்கமாகப் பட்டதோ அவருக்கு. முகம்மது ஷாவிடம் ஒரு ஐந்து ரூபா நோட்டை எடுத்து நீட்டுகிறார்.

ஷாவுக்கு இப்போது இரத்தம் நன்றாகச் சூடேறி விட்டது. துள்ளிக் குதிக்கிறார்.

“உங்களுக்கெல்லாம் மாட்டுவண்டி என்றால் எளப்பமா இருக்கு என்ன?”

“முப்பது வருஷமா இந்த முகம்மது ஷா வண்டி இழுத்து உழைத்துத்தான் சம்பாதிச்சான். இந்த மாதிரி ஐந்துக்கும் பத்துக்கும் அடிமை ஆகிற ஆள் இல்லே…”

அதற்கு மேல் அவரால் அங்கு நிற்க முடியவில்லை. தன் வண்டியை ஒரு வெட்டு வெட்டித் திருப்பிச் சாலையில் ஓட்டுகிறார். வெல வெலத்துப்போய், மாடு தன் ‘அசல்” வேகத்தில் தான் போகிறது.

இப்போது ஷாவின் மன ஆழத்தை என்னவோ குடை கிறது. அவர் அந்த ஒன்றும் அறியாத ஜீவனைக் கூர்ந்து கவனிக்கிறார். அதன் முதுகுத் தோல் மெல்லிசாக உரிந்து குருதி கசிய கண்க ளும் ஈர்த்து…

அவர் கண்களும் கண்ணீராய்க் கரைந்து ஓடுகிறது.

அந்தப் பச்சைப் பிரம்புகளை முறி முறியென்று முறிக் கிறார்.

அன்றெல்லாம் முதுகுக் காயங்களுக்கு மருந்து போட்டுத் தடவிக் கொடுக்கிறார்.

“இனி நான் உங்களைப் பிரம்பால் அடிக்க மாட்டேன்… சத்தியமாக…”

ஷா நெஞ்சம் நொந்து கூறுகிறார். அது பலமாகத் தலையை ஆட்டி ‘ம்மா’ என்று கத்துகிறது. ஷாவுக்குத் தான் புரியுமோ!

– மல்லிகை – மார்ச் 1972.

– இரவின் ராகங்கள் (சிறுகதைத் தொகுதி), முதற் பதிப்பு : ஜூலை 1987, மல்லிகைப்பந்தல், யாழ்ப்பாணம்.

ப. ஆப்டீன் (11 நவம்பர் 1937 - 9 அக்டோபர் 2015) என்ற பஹார்டீன் ஆப்டீன், ஈழத்து தமிழ்க் கலை இலக்கிய துறையில் பங்காற்றி வரும் மலையக முஸ்லிம் படைப்பாளிகள் வரிசையில் கவனத்துக்குரிய ஒரு படைப்பாளி ஆவார். இவர் இலங்கையின் மலையகத்திலுள்ள நாவலப்பிட்டியைச் சேர்ந்தவர். மலாய் இனத்தில் பிறந்தவர். 1962 ஆம் ஆண்டு இலங்கையில் வெளிவந்த தமிழின்பம் எனும் சிற்றிதழில் வந்த உரிமையா? உனக்கா? எனும் முதல் சிறுகதை மூலம்…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *