(2004ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
வடக்குக் களத்தில் நின்றிருந்த வேப்ப மரத்தை பார்த்ததும் கட்டிப் பிடித்து அழ வேண்டும் போல தோன்றியது. கூட வந்த உறவினர்களை உணர்ந்து, கண்ணீர் வழிந்ததை துடைத்துக் கொண்டார் அப்பாத்துரை.
அந்தக் களத்தில் எத்தனை முறை மிளகு பழம் பறித்து வந்து காய வைத்தது, வற்றலாகிய மிளகை எடை போட்டு சந்தைக்கு எடுத்துப் போனது… கடலை எடுத்த சமயங்களில் காய வைப்பதற்காக இந்தக் களத்தில், இதே வேப்ப மரத்தில் வடக் கயிற்றைக் கட்டி, தொட்டில் போல பனை மட்டை சீவி ஊஞ்சலில் ஆடிக் கொண்டே காக்கா விரட்டியது…
அடுத்து இருக்கும் காம்பவுண்ட் சுவரைச் சுற்றியுள்ள பூவரச மரங்கள் ஒவ்வொன்றாய் தொட்டுப் பார்த்துக் கொண்டே வந்த போது அப்பாவும் அம்மாவும் சேர்ந்து ஊன்றிய மரங்கள், தங்கை, நங்கை ஒவ்வொரு நாளும் கிணற்றிலிருந்து தண்ணீர் இறைத்து ஊற்றியது…
அதைத் தாண்டிய புகையிலை அவிக்கும் சூளைகள் தெரிந்தது. வருடம் தோறும் பச்சைப் புகையிலையை வெட்டிவந்து, வேலையாட்களை வைத்து கண்ணி போட்டு சரம்பில் எரித்து புகையிலையை பதப்படுத்தி கஷ்டம் ரூட்டி கட்டி அப்பா கோடடாத்தில் கமிஷன் கடையில் விற்று விட்டு வாங்கி வரும் திராட்சைப் பழத்திற்கு வீட்டிலே நடக்கும் சண்டை.
எல்லாவற்றையும் தாண்டி திரும்பவும் கீழ களத்தில் உள்ள தென்னை மரங்கள், மா, கொய்யா, ஒரு மல்லிகைச் செடி. துணி துவைக்கும் கல், (அம்மா துவைக்கும் லாவகம் ஞாபகத்திற்கு வந்தது) தாண்டி பழைய சீட்டிற்குள் வந்தபோது, “என்ன சித்தப்பு, நாளைக்கு அந்த குவைத் பையன் வருகிறான். மொத்தமாக பணம் கொடுத்து விடுவான். நீங்கள் பணகுடி வரைக்கும் போய் எழுதிக் கொடுத்து விட்டு வந்தால் நாளை கழித்து டில்லி ரயிலிலே போய் விடலாம்” என்றான் தண்டபாணி.
“ஆமாம்” என்பது போல தலை யாட்டிக் கொண்டு முன் வரவேற்பரையில் அப்பா எப்போதும் அமரும் அந்தச் சாய்வு நாற்காலியில் அமர்ந்தார் அப்பாத்துரை.
உள்ளே வந்த நங்கை “அண்ணே அந்த கிழக்கு களத்தில் நிற்கும் தென்னை மரங்களை மட்டுமாவது உங்க மருமகனுக்கு எழுதி வச்சிருக்கலாம். சரி, பரவாயில்லே. சாப்பிட வாறீகளா?” என்று முந்தானையால் மூக்கை சீந்தினாள்.
போன வருடம் வரை, அம்மா அப்பாவை பார்க்க வேண்டும் என்ற கண்டிப்போடு, எப்படியாவது ஊருக்கு வந்து அவர்களோடு ஒரு மாதமாவது தங்கி, தோப்பு, வயல் எல்லாம் பார்த்துக் கொண்டு, தன் இளமைக் காலங்களை தேடிப் பிடித்து விளையாடிய இடங்களை திருவிழா நாட்களில் செய்த சேட்டைகளை ஞாபகப்படுத்திக் கொண்டு திரும்பவும் தேங்காய், அரிசி என மூட்டைக் கட்டிக்கொண்டு டில்லிக்கு திரும்பும்போது அடுத்த வருடம் வரலாம் என்ற ஆறுதலோடு பயணித்த காலங்கள்.
இந்த இடங்களை இப்போது விற்றுவிட்டுப்போனால் இனி இங்குவர முடியுமா? தங்கைக் குடும்பத்தினர் அனைவருக்கும் துணிமணிகளோடு வந்த பிறகும், பாதி நாள் காபிக் கடையிலே சாப்பிட வேண்டிய சூழ்நிலை. இந்த ஊரில் இருக்கும் நிலங்களை விற்று விட்டுப் போய் திரும்பினால் கண்டிப்பாக இந்த உறவுகளுக்கு கூட வேற்று மனிதனாகத்தான் தோன்றுவேன்.
“அண்ணே, சாப்பிட வாரியளா. அவுக வேற தோப்புக்கு போயிட்டு வர்ற நேரம்” திரும்பவும் கேட்டாள் நங்கை.
“நங்கை எனக்கு பசிக்கலை. போய் உன் வீட்டுக் காரருக்குச் சாப்பாடு போடு நான் சாயங்காலம் வீட்டுக்கு வருகிறேன்” என்றார் அப்பாத்துரை.
எதுவும் சொல்லாமல் கிளம்பிப் போனாள் நங்கை.
“அப்போ, நான் கிளம்பட்டுமா சித்தப்பு. நாளைக்கு காலையிலே அந்தக் குவைத் நாகராஜனை கூட்டிண்டு வாறேன்” என்று தலையைச் சொறிந்தான் தண்டவாணி.
“ரொம்பக் குடிச்சு வயித்தைப் புண்ணாக்கிக்காத. கொறைச்சுக்கடா” என்று பையிலிருந்து ஒரு நூறு ரூபாய் தாளை எடுத்து நீட்டினார்.
“உங்களுக்கு சாயங்காலம் ஒரு குவார்ட்டர் பிராண்டி வாங்கிட்டு வரணுமா?”
“வேணாம் தண்டபாணி. நீ கிளம்பு” என்று சொல்லிவிட்டு எழுந்து புழக்கடைக்கு வந்து முகம் கழுவிக் கொண்டார்.
திரும்ப ஒருமுறை வீட்டை வலம் வந்தார். கல்லூரி முடியும் வரை ஏறக்குறைய இருபத்திரெண்டு வயது வரை இளமைக் காலத்தைக் கழித்த இந்த வீட்டை விற்க வேண்டுமா? டில்லிக்குப் போய் வேலை தேடி, திரும்ப வந்தபோது மல்லிகாவை திருமணம் செய்து வைத்த போதும், இரு குழந்தைகளையும் பெற்றுக் கொள்ள மல்லிகா ஊருக்கு வந்தபோது, அவளோடு வந்தது, அப்புறம் வருடம் தோறும் மே மாத விடுமுறைக்கு குழந்தைகளோடு வந்து ஆர்ப்பாட்டம் நடத்திவிட்டுத் திரும்ப அவசர வாழ்க்கைக்குள் புகுந்து கொள்ள ஓடியது…
யோசித்துக் கொண்டு திரும்பவும் வடக்குக் களத்திற்கும் கிழக்கு களத்திற்கும் ஒருமுறை வந்துவிட்டுத் திரும்பினார்.
ஊரின் கிழக்குக்கரையிலுள்ள காபி கடைக்கு வந்து “ஸ்டிராங்க் டீ போடு” என்று வடை எடுத்துக் கடித்த போது “எனக்கும் ஒரு டீ போடு. அப்பாத் துரையிடம் பைசா வாங்கிக் கொள்” என வடையும் எடுத்துக் கொண்டு “என்ன அப்பாத்துரை நிலத்தையெல்லாம் வித்துட்டு டில்லியிலேயே செட்டிலாகப்போறியாமே” என்றார் இளமைக்கால நண்பர் தங்கசாமி.
எதுவும் பேசாமல் சிரித்து வைத்தார் அப்பாத்துரை, “என்னவோப்பா வித்துடறது பெரிய விஷயமில்லை. குடுத்தா திரும்ப வாங்க முடியாது. அப்புறம் ஊருல வீடு, களம், தோப்பு, துரவுன்னு இருந்தாதான் இந்த ஊருக்குத் திரும்பவும் வரத் தோணும்” என்று சொல்லி டீ எடுத்து உறிஞ்ச ஆரம்பித்தார் தங்கசாமி.
”நீ சொல்றது சரிதான் தங்கசாமி” என்று டீ கப்பை வைத்து விட்டு பணம் கொடுத்துவிட்டு அருகிலிருக்கும் தோப்புக்கு போனார்.
தோப்பைக் கவனித்துக் கொண்டிருந்த கதிர்வேல் வேகமாக ஓடி வந்து, “என்ன அப்பாத்துரை, நீங்க பாட்டுக்கு தோப்பையும் வித்துட்டுப் போறதா சொன்னீங்களாமே. இது பொன் விளையும் பூமி ஐயா” என்றான். தோப்பு தன் கையிலிருந்து கைநழுவப் போவதை உணர்ந்து,
“யார் சொன்னது கதிர்வேலு”
“என்னவோ உங்க அண்ணன் மவன் தண்டபாணிதான் சொல்லிட்டிருக்காரு”
“அப்படியா?” என்று சொல்லி விட்டு அந்தத் தென்னந் தோப்பின் மாலை இளம் வெயிலின் நிழல்களில் குளித்துக் கொண்டே ஒருமுறை சுற்றித் திரும்பி வந்தார்.
மறுநாள் காலையில் தண்டபாணி கூடவே குவைத் நாகராஜனை அழைத்துக் கொண்டு வீட்டுக்கு வந்து, “என்ன சித்தப்பு. நீங்க லுங்கிக் கட்டிக்கிட்டு இருக்கீங்க. பணகுடி எழுத்தாபீஸுக்கு போவாண்டாமா?” என்று கேட்டான்.
“இல்லை தண்டபாணி. நான் இப்போ எதையும் விக்க விரும்பலை. விக்கணும்னு தோணும்போது சொல்லி அனுப்பறேன்” என்றார்.
“குவைத் ராஜன் வேற பணத்தை எடுத்துக் கொண்டு வந்திருக்கான்”
“ஸாரிப்பா” என்றபோது, “என்ன சித்தப்பு இப்படி பண்ணிப்புட்டீங்க” என்று முகத்தை சுழித்துக் கொண்டு தண்டபாணி குவைத் ராஜனை இழுத்துக் கொண்டு வெளியேறினான்.
உடனே செல்போன் அழைக்க, “ஹலோ சொல்லு குமணன். நான் அப்பாதான் பேசறேன்” என்றார்.
“எல்லாவற்றையும் விற்று பணம் வாங்கி விட்டீர்களா. நான் இங்கே பிளாட் வாங்க அட்வான்ஸ் கொடுக்க வேண்டும்” என்றான் குமணன் எதிர்முனையில்.
“இல்லப்பா நான் இருக்கிற வரைக்கும் இங்கே எதையும் விற்க விரும்பவில்லை. உனக்கு பிளாட் வாங்க டில்லி வந்ததும் பேங்கிலே லோன் போட்டு பணத்துக்கு ஏற்பாடு செய்கிறேன்”
“ஏம்பா..இங்கேயிருந்து போகும் போது, வீடு, களம், தோப்பு, வயல் எல்லாம் விற்று பணம் கொண்டு வர்றேண்ணுதானே சொல்லிட்டுப் போனீங்க” என்றார் எதிர் முனையில் குமணன்.
“ஸாரிப்பா இதெல்லாம் விற்கக் கூடிய பொருட்களில்லை. நான் நாளைக்கு டில்லிக்கு கிளம்பறேன்” என்று சொல்லி தொலைபேசி தொடர்பை துண்டித்துவிட்டு நிம்மதியாக அந்த சாய்வு நாற்காலியில் அமர்ந்தார் அப்பாத்துரை.
– தமிழ் போஸ்ட், பிப்ரவரி 14, 2004