கதையாசிரியர்:
தின/வார இதழ்: தினமணி
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: February 7, 2013
பார்வையிட்டோர்: 20,333 
 
 

அவரால வரமுடியலையாம்” கண்ணாடிக் கதவைத் திறந்தபடியே சொன்னார் செல்வநாதன். அந்த ஆதரவற்றோர் இல்லத்தின் மேலாளர் அவர். “”அப்படின்னா…” இழுத்தாள் டைப்பிஸ்ட் கங்காதேவி.

“”நம்பளையே எல்லாத்தையும் செய்யச் சொல்றார். மயானக்கரைச் செலவுகளை அடுத்த வாரம் வந்து செலுத்துவாராம்” என்று பதில்தந்த செல்வநாதன் மளமளவென்று அடுத்தகட்ட நடவடிக்கைகளை ஆரம்பித்தார்.

அந்த மனம்காலை எட்டுமணிக்குக் குளிக்கப்போன எழுபது வயது முத்துசாமி குளியலறையில் வழுக்கி விழுந்து தலையில் அடிபட்டுவிட்டது. அந்த இல்லத்தின் மருத்துவ அதிகாரி மணிகண்டன் விரைந்து வந்தார். ஆனால் பலனில்லை.

“”தலையில் ரத்தக்கட்டு ஏற்பட்டு அவர் ஏழெட்டு நிமிடங்களுக்கு முன் இறந்து போய்விட்டார்” எனக் கைவிரித்தபோது ஒட்டுமொத்தக் கூட்டமும் கலங்கியது.

ஏனென்றால் அவருடைய மகன் முத்துவீரப்பன் அவரை இந்த ஆதரவற்றோர் இல்லத்தில் விட்டு ஏழரை ஆண்டுகளாகிவிட்டன.

அதனால் எல்லோரையும் அவருக்குத் தெரியும். எல்லாரிடமும் மிகவும் அன்பு காட்டுபவர். சொற்களுக்கு வலிக்குமோ எனக் கவலைப்படுபவரைப்போல நிதானமாக, மிகப்பதமாக, இதமாகப் பேசுவார்.

“”என்னதான் அவசர வேலையிருந்தாலும் பெத்த அப்பனை அடக்கம் செய்ய வராத இவன்லாம் மனுஷனா” குளிருக்காக இழுத்து மூடிய சால்வையுடன் மாதங்கி முணுமுணுத்தாள். அவளும் அங்கே வாழ்பவள்.

எல்லாவற்றையும் கவனித்துக்கொண்டே வந்த அலமேலு அம்மாளுக்கு அடிவயிற்றில் ஓர் இனந்தெரியாத பயம் உருண்டு திரண்டு என்னமோ செய்தது.

அவர் இந்த இல்லத்தில் சேர்க்கப்பட்டு நாலுமாதமும் கொஞ்ச நாட்களும் ஆகியிருந்தன. உள்ளூரிலேயே இருக்கும் மகன் கதிர்வேலு “”உன்னைக் கவனிக்க முடியல்லே…” அது இதுன்னு சொல்லி இங்கே தள்ளிவிட்டான். மகன் உள்ளூரிலேயே இருப்பதை அவள் யாரிடமும் சொல்லவில்லை.

ஒருவேளை தன் மகனும் இறந்துபோன முத்துசாமியின் மகன் முத்துவீரப்பனைப் போல இருந்துவிட்டால்…இந்த எண்ணமே அவளை வெகுவாக வருத்தியது.

“”சே! அப்படியெல்லாம் கதிரு இருக்கமாட்டான்; ஏதோ என்னோட கிரகம் பேத்தியோட இருக்க முடியாமப் போச்சு”

இப்படித் தனக்குள் ஆறுதல்மொழியைச் சொல்லிக்கொண்டே,””இன்னைக்கு முடியாது; நாளக்கி ஆபிஸ்ல சொல்லி கதிர்கிட்டே இதைப்பத்தி பேசணும்” என நினைத்து மெüனமானாள்.

அலமேலு அம்மாளின் மருமகள் கவிதா மிகவும் நல்லவள். தனது மாமியாரை ஆதரவற்றோர் இல்லத்தில் சேர்க்கக்கூடாது எனப் பலவழிகளில் வாதாடியவள்தான். ஆனால் கோபக்கார கணவனை அவளால் மாற்ற முடியாமலே போனது. அவள் மகள் ரேவதியும் அப்படித்தான் தோற்றுப்போனாள்.

“”ஏங்க! அத்தைகிட்ட ஒரு செல்போனைக் கொடுத்துவுடுவோம்! டெய்லி இல்லேனாலும் எப்பப்ப வேணுமோ அப்போ அத்தைகிட்ட பேசலாம்! அத்தையும் பேசமுடியும்!”

கவிதாவின் இந்த பேச்செல்லாம் அவனிடம் எடுபடவேயில்லை. “”இங்க பாரு அவங்க நேரங்கெட்ட நேரத்துல பேசி உன்னை ஒரு வேலையும் செய்யவிடமாட்டாங்க! தூக்கம் கெட்டுப் போகும். ஆபிஸ்ல நம்ம நம்பரைத் தர்றேன்! அவசரம் ஆத்திரம்னா அம்மா ஆபிஸ்ல சொல்லி நம்மோட பேசுவாங்க”

அப்படித்தான் நடந்தது. ஆனால் இதுவரை அலமேலு அம்மாள் ஆபிஸ் வழியாக ஒருநாள்கூடப் பேசவில்லை. தனக்கு முந்தி மேலுலகம் போய்விட்ட தன் கணவன் சாமிநாதனை எண்ணிக்கொண்டே மூச்சைப் பிடித்துக் கொண்டிருக்கிறாள்.

ஆறுமாதங்களுக்கு முன்னால் கவிதாவிற்கு ஒரு நல்ல வேலைக்கான ஆர்டர் வந்தது. புதுதில்லியில் 15 நாள் பயிற்சி என்றனர். அப்போது முழுப்பரீட்சை விடுமுறை என்பதால் ரேவதியும் புதுதில்லிக்கு அம்மாவுடன் போக முடிவானது.

கதிர்வேலுவும் விடுப்பு எடுத்துக்கொண்டு தில்லிக்குப் புறப்பட்டபோதுதான் அம்மா நெருடலாகிப் போனாள். தில்லியின் குளிர் அவளால் தாங்கமுடியாது எனக் காரணம் சொல்லி அவளைப் பக்கத்திலிருந்த மகளிர் விடுதியில் சேர்த்தனர்.

ஊரிலிருந்து திரும்பியதும் கணவன் மனைவி இருவரும் வேலைக்குப் போக ஆரம்பித்தனர். பேத்திக்குத் துணையாகப் பாட்டி இருப்பது நல்லது என முதலில் நினைத்த கதிர்வேலு, மாற்றி யோசித்ததுதான் வினையாகிப் போனது.

அம்மா வீட்டிலிருப்பதைவிட ஏதாவது விடுதியில் சேர்க்கப்பட்டால் அம்மாவுக்காக மனைவி சமைப்பது, கவனிப்பது இத்யாதித் தொல்லைகள் ஏற்படாது என நினைத்தான். மகளைப் படிக்க விடாமல் பாட்டி என்கின்ற கோதாவில் செல்லங்கொடுத்துக் கெடுத்துவிடுவாள் எனவும் ஒரு நினைப்பு வந்தது.

அவனுடன் அலுவலகத்தில் வேலை பார்க்கும் ஆரோக்யம் தன் அப்பா, அம்மா இருவரையும் பக்கத்து ஊரில் உள்ள முதியோர் இல்லத்தில் சேர்த்துவிட்டு வந்து மிகவும் சந்தோஷமாக இருப்பதாக சாப்பாட்டு அறையில் வைத்து சொன்னது கதிருக்கு “டானிக்’ ஆயிற்று.

காரண காரியங்களை ஒரு பட்டிமன்றப் பேச்சாளனைப் போல அடுக்கிவிட்டு அலமேலு அம்மாளை கதிர்வேலு பலத்த எதிர்பார்ப்புகளுக்கிடையே ஆதரவற்றோர் இல்லத்தில் சேர்த்தது ஏதோ நேற்று நடந்தது போல இருந்தது.

டொக்! டொக்!

“”உள்ள வாங்க” என்றாள் அலமேலு அம்மாள்.

உள்ளே நுழைந்த மாதங்கி கட்டிலருகே இருந்த நாற்காலியில் உட்கார்ந்தாள்.

“”இந்தப் பாவி இப்படிச் செய்வானா” என்றாள் மாதங்கி.

“”யாரைச் சொல்லுகிறாய்” என இடைமறித்தாள் அலமேலு.

“”வேறு யாரை? முந்தாநாள் செத்துப் போனாரே நம்ம ஐயா முத்துசாமி, அவரோட சீமந்தப் புத்திரனைத் தான்”

“”ஏன் வரலைன்னு நமக்கென்னடி தெரியும்? வேணுமினா வராம இருந்திருப்பாங்க” என்றாள் அலமேலு அம்மாள்.

“”குடும்பம் பாசம்னா என்னான்னே இந்தக் காலத்துல புள்ளைங்களுக்குத் தெரியல்லே! ஆமா நீங்க ஒங்க மகனைக் கடனேன்னா வளத்திருப்பீங்க?” எரிச்சலுடன் மாதங்கியின் சொற்கள் இறங்கின.

“”அதெப்படி இருக்க முடியும்? பிள்ளைங்க மனசு கல்லாப் போனாலும் பெத்தவங்க மனசு பஞ்சாத்தானேடி இருக்கும்”

அலமேலு அம்மாளின் இந்தப் பேச்சுக்கு எந்த மதிப்பும் கொடுக்காமல் எழுந்து போனாள் மாதங்கி.

சற்றே படுக்கையில் சரிந்து உட்கார்ந்த அலமேலு அம்மாளுக்குப் பழைய நாட்கள் நினைவுக்கு வந்தன. கதிர்வேலுக்கு அப்போது ஆறுவயது. காய்ச்சல் வந்து படுத்திருந்தான்.

சோதனைக்கென நள்ளிரவு முதல் பயங்கர மழை. மின்சாரம் நின்று போனது. கிட்டத்தட்ட நாலரை மணி நேரம் பனை ஓலை விசிறியை வைத்துக் கண்மூடாமல் விசிறிக்கொண்டே இருந்தாள் அலமேலு.

காலையில் பால்காரன் வரவில்லை. பசும்பால்தான் பழக்கம். டிப்போ பால் ஒத்துக்கொள்ளவில்லை. எனவே தன் கணவனை எழுப்பிப் பால் பண்ணை எங்கே எனக்கேட்டு அங்கே பால் வாங்கி வருமாறு அனுப்பினாள் அலமேலு.

கொல்லைப்புறத்தில் ஒரே சகதி. விறகெல்லாம் ஈரமாகியிருந்தது. ஒரே சூட்டு வெந்நீரில் மகன் குளிக்க வேண்டி படாதபாடுபட்டு சருகுகளையும் பழைய பேப்பரையும் வைத்து வெந்நீர் வைத்தாள் அவள்.

இரவெல்லாம் முழித்திருந்தது, புகை மூட்டத்தில் வெந்நீர் போட்டது, ஈரமண்ணில் நெடுநேரம் நின்றது இவற்றால் குளிர்காய்ச்சல் வந்துவிட்டது அலமேலு அம்மாளுக்கு. சாமிநாதன் அவளை ஓய்வெடுக்கச் சொல்லி மன்றாடினார்.

மகனின் வயிறு காயக்கூடாது என்பதற்காக அரிசியைத் திரிகையில் இட்டு, கை வலிக்கச் சுற்றினாள் அவள். குருணையை எடுத்து மீண்டும் ஈர அடுப்பில் கஞ்சி காய்ச்சுவதற்குள் போதும்போதும் என்றாகிவிட்டது. இப்படியெல்லாம் கண்ணுக்குள் வைத்துக் காப்பாற்றியவள்தான் அவள். “”ரொம்ப நல்லாருக்கும்மா” எனக் காய்ந்துபோன ஊறுகாயைத் தொட்டுக்கொண்டே கதிர்வேலு கஞ்சி குடித்த காட்சி கண்ணுக்குள் வந்தது. கண்ணீரும் வந்தது.

கண்ணைத் துடைத்தபடியே எழுந்து ஆபிசுக்குப் போனாள். மகன் அங்கே கொடுத்திருந்த தொலைபேசி எண்ணை ஆபிஸில் கங்காதேவி தேடித் தந்தாள். அவன் கிடைத்தான்.

“”கதிரு! நல்லாயிருக்கிறியா ஐயா! இங்கே ஒரு பெரியவரு செத்துட்டாரு. அவரோட புள்ள வரவேயில்ல! நீயும் அப்படி இருந்திருவியா ஐயா!”

“”என்னம்மா இது! ஏன் இப்படியெல்லாம் பேசுற” அவளைப் பேசவிடாமல் தடுத்தான் கதிர்வேலு.

அழுகை நிறைய நிறைய வந்ததால் அலமேலுவால் தொடர்ந்து பேச முடியவில்லை. கதிர்வேலுதான் பேசினான். “”அம்மா! இன்னும் கொஞ்சநாள்தான் நீ அங்கிருக்கப் போற! கவிதாவுக்கு வேலை பெர்மனென்ட் ஆனதும் நீ வீட்டுக்கு வரலாம்”

“”சரிப்பா! என்னமோ மனசுலபட்டது…” இழுத்தாள் அலமேலு அம்மாள்.

“”வேற ஒண்ணுமில்லம்மா! இப்ப நானு சிம்லால இருக்கறேன். எண்ணிப் பதினெட்டு நாள். நான் ஊருக்கு வந்ததும் உன்னை வந்து பார்ப்பேன். இப்ப போன வச்சிரும்மா”

“”சரிடா கதிரு, உடம்பப் பாத்துக்க” அறைக்குத் திரும்பினாள் அலமேலு அம்மாள்.

இது நடந்து மூன்றரை மணிநேரம்தான் ஆகியிருக்கும். கவிதா அந்த இல்லத்து ஆபிசுக்குப் போன் பண்ணினாள்.

கங்காதேவி வந்து “”ஏங்க உங்க மருமக கூப்பிடறாங்க! ஆபிஸ்லே போன் வந்திருக்கு” என்றாள்.

பதறிப்போய் ஓடினாள் அலமேலு அம்மாள்.

“”வேறொண்ணும் இல்லே அத்தை. இங்க ஸ்டோர் ரூம்ல இருந்து வெளிலே வந்தபோது ஏணி தடுக்கிக் கீழே விழுந்திட்டேன். லேசா ஃபிராக்சர்னு சொல்றாங்க”

“”ஐய்யய்யோ! இப்ப எங்கடி இருக்கே! கதிருக்குத் தெரியுமா?” நடுங்கியபடியே கேட்டாள் அலமேலு.

“”நம்ம வீட்டுக்கு அடுத்த தெருவில இருக்கற மாலதி ஆஸ்பிட்டல்லேதான் இருக்கேன். இப்பதான் அவரு வந்து பாத்துட்டு, டாக்டர் பீûஸக் கட்டிட்டு ரேவதியைக் கூப்பிடப் போயிருந்தார்” இது கவிதாவின் பதில்.

“சுரீர்’ என்றது அலமேலு அம்மாளுக்கு. கொஞ்ச நேரத்துக்கு முன்தான் கதிர்வேலு தான் சிம்லாவில் இருப்பதாகவும், இரண்டு வாரத்தில் ஊருக்கு வருவதாகவும் சொன்னது காதில் ஒலித்தது.

“”அத்தை! என்ன பதிலைக் காணோம். ஒருவேளை வீட்டுக்குப் போனப்புறம் அடுப்படிப் பக்கம் போகாதீங்கன்னு டாக்டர் சொன்னா என்ன பண்றதுன்னு தெரியல. நாளைக்கு டாக்டர்கிட்ட கேக்கறேன். அப்படின்னா நீங்க வீட்டுக்கு வரவேண்டியிருக்கும். வச்சிடட்டுமா?” டெலிபோன் உறவு முடிந்தது.

உடைந்துபோனாள் அலமேலு அம்மாள். உள்ளூரில் இருந்தபடியே தன்னை அனாதை ஆசிரமம் போல் உள்ள இங்கே விட்டதுகூட அவளுக்குப் பெரிதாகப்படவில்லை. ஆனால் இன்றைக்கு போனில் தான் சிம்லாவில் இருப்பதாக மகன் சொன்னதுதான் ஜீரணிக்க முடியாமல் போனது.

பெரியவர் ஒருவரின் இறப்பைச் சொல்லித் தான் வருத்தியபோது கூடப் பொய் சொல்லும் மகனின் எந்திர மனதை என்னவென்று சொல்வது எனப் புரியவில்லை அவளுக்கு.

அறைக்குத் திரும்பிப் படுக்கையைத் தட்டிப் போட்டுவிட்டுத் தாழ்ப்பாள் போடும்போது,””நாளைக்கு எப்படியும் ஆஸ்பத்திரிக்குப் போகணும்! வேற யாருகிட்ட இல்லேனாலும் கவிதாவிடம் மட்டுமாவது உண்மையைச் சொல்லிடணும்” எனத் தனக்குள் சொல்லிக்கொண்டாள்.

விதி வேறுவிதமாயிருந்தது.

“”கவிதா! கதிர்வேலுவைப் பத்தின ஓர் உண்மையை சொல்லப் போறேன். எங்களைப் பத்தி நீ என்ன வேணாலும் நெனச்சுக்க. நானும் அவரும் கதிர்வேலுவைப் பொத்திப் பொத்தி வளர்த்தோம். லேசா ஒடம்பு சரியில்லாம போனாலும் பெரிய டாக்டர்கிட்டே காட்டுவோம். அவன் கேட்டான்னு நாலாம் வகுப்புப் படிக்கிறபோதே சைக்கிள் வாங்கித் தந்தோம். லீவுக்கு கொடைக்கானலுக்கும் ஊட்டிக்கும்தான் போவணும்பான். சரின்னு கடன ஒடன வாங்கி அவனைக் கூட்டிட்டுப் போவோம்.

ஆனா என்னை ஆதரவற்றோர் இல்லத்துல சேர்த்துட்டான். நேத்திக்குப் போன் பண்ணப்ப சிம்லால இருக்கேன்னு சொல்றான். என்னை ஏன் பிடிக்கலைன்னு தெரியல. மதுரைலே அவனை ஓர் ஆசிரமத்துலதான் பார்த்தோம்! எங்களுக்குக் குழந்தையில்லே! அவனை தத்தெடுத்து வளத்து ஆளாக்கி வீடுகட்டித் தந்து, வேலை வாங்கித் தந்து உன்னைக் கல்யாணமும் பண்ணிக்கொடுத்தோம். இதுவரை இதை யாருகிட்டேயும் ஏன் அவன் கிட்டக்கூட சொல்லலே! நீ அவனைப் பத்திரமாப் பாத்துக்கம்மா. ஏன்னா அவன்தான் உன்னோட உயிரு”

இப்படியெல்லாம் பேச வேண்டும் என்று நினைத்துக்கொண்டே படுத்தவள் மறுநாள் எழுந்திருக்கவே இல்லை.

– ஜூன் 2012

Print Friendly, PDF & Email

4 thoughts on “அந்த மனம்

  1. .வளர்ப்புமகன் என்று பிரித்து சொல்வதனால் பெற்ற மகனாக இருந்திருந்தால் வீட்டில் வைத்து பார்த்திருப்பான் என்று சொல்ல வருகிறாரா? முதியோர் இல்லத்தில் இருப்பவர்களெல்லாம் வளர்ப்பு பிள்ளைகளின் பெற்றோரா? மனதை பிசைவது போல் கதையை கொண்டு வந்து இறுதியில் செயற்கையாக முடித்து விட்டார்.

  2. கதையின் முடிவில், விழிகளின் விளிம்பில் கண்ணீர் துளி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *