அந்த சில நிமிடத்துளிகள்.

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: May 2, 2013
பார்வையிட்டோர்: 12,483 
 
 

சுகுணாவிற்கு எல்லாமே கனவு போல் இருந்தது. தன் மகனை அடிக்கடி தடவிப்பார்ப்பதும் இறுக அரவணைத்துப் படுப்பதுமாய் இருந்தாள். கண்களை நித்திரை தழுவமறந்தது.ஒரு கிழமை ஆகியும் அவள் மனசு இயல்பு நிலைக்கு திரும்பவில்லை.

குழந்தைகளுக்கு பாடசாலை விடுமுறையாதலால் அன்றும் வழமைபோல குழந்தைகளை காப்பகத்தில் விட்டு விட்டு சுகுணா வேலைக்குச்சென்றாள். வேலை முடிந்து மாலை குழந்தைகளை காப்பகத்தில் இருந்து அழைத்து வந்தாள்.

மகள் அன்று வழமைக்கு மாறாக தாயை நச்சரிக்கத் தொடங்கினாள். அம்மாக்கும், அப்பாக்கும் நெடுகலும் வேலை, வேலை. என்ரை பள்ளிக்கூட சினேகிதர்கள் எல்லாரும் விடுமுறையை கழிக்க தங்கடை அம்மா, அப்பாவோடை ஒவ்வொரு நாட்டுக்குப் போட்டினம். இரண்டு கிழமை ஆகியும் உங்களுக்கு எங்களை எங்காவது கூட்டிப்போக வேணும் எண்டு தோன்றேலையோ. என சுகுணாவை குடைந்தெடுத்தாள். றெஸ்றோறன் வேலை எண்டா இப்பிடித்தானம்மா. அவங்கள் பூட்டேக்கை தான் லீவு வரும். இன்னும் ஒரு கிழமையாலை எனக்கும் அப்பாக்கும் லீவு. அதுக்குப்பிறகு நாங்கள் டென்மார்க்கிற்கு அம்மம்மாட்டை போவம் என மகளுக்கு ஆறுதல் கூறினாள்.

மகளும் விட்டபாடாய் இல்லை. அப்பிடியெண்டா எங்களை சிவாணி அன்ரி வீட்டை கொண்டு போய் விடுங்கோ. நாங்கள் கோபியோடை விளையாடுவம். சிவாணி அன்ரிட்டை தமிழும் படிக்கலாம் என மகள் கூற சரி என்று விட்டு சிவாணியின் தொலைபேசி இலக்கத்தை சுழற்றினாள்.

சிவாணி நான் சுகுணா கதைக்கிறன். ஒரு இரண்டு நாளைக்கு தமிழும், யாதுவும் உங்கை நிக்கப்போகினமாம். கோபிக்கும் விழையாட துணையாகுது. உமக்கு வசதியோ ? ஓம் சுகுணா கூட்டிக்கொண்டுவந்து விடுங்கோ பிரச்சனை இல்லை. கோபியும் பாவம் தனியத்தானே. அவருக்கும் துணையாகுது.

சரி சந்திப்பம், எனக் கூறி தொலைபேசியை துண்டித்தாள்.

குழந்தைகள் மகிழ்ச்சியில் துள்ளினார்கள். அவர்களுக்குத் தேவையான உடுப்புகளை எடுத்து பையில் வைத்தாள்.

மகன் பால் என சிணுங்க அவளின் சிந்தனை தடைப்பட்டது. எழுந்து பாலைசூடாக்கி போச்சியில் விட்டு மகனை அணைத்து கள்ளப்பயலே அம்மாவைவிட்டுட்டு எங்கையடா போனாய்? என கண்கலங்கியவளாய் மகனை மடியில் படுத்திவைத்து பாலைக் கொடுத்தாள்.

அப்படியே மகனை எவ்வளவு நேரமாய்வைத்திருந்தாளோ அவளுக்கே தெரியவில்லை. கையும், காலும் விறைத்து விட்டது. மெதுவாய் யாதுவைத் தூக்கி கட்டிலில் படுத்தினாள்.

அன்றுமட்டும் எப்படி எனக்கு களைப்பே தெரியாமல் இருந்தது. கை விறைக்கவில்லை. கால் நோகவில்லை. அவளுக்கே வினோத மாக இருந்தது. மகனை காணவில்லை என்றதும் எப்படி துடித்துப்போனாள். நான்கு மணித்தியாலமாய் சைக்கிளில் ஓடி, ஓடி யாது, யாது என எவ்வளவு கத்தியிருப்பாள். அந்த நான்கு மணித்தியாலமும் அவளுக்கு களைப்பே தெரியவில்லை.

நான்கு நாள் சிவாணி வீட்டில் நிக்கட்டும் என நினைத்தவள் சிவாணிக்கு கூறிவிட்டு குழந்தைகளை விட்டுவிட்டு வீட்டிற்கு வந்தாள். முதல்நாள் சற்று நிம்மதியாகவும் வீடு அமைதியாகவும் இருந்தது. இரண்டாவது நாள் வேலை முடிந்து வந்தவளுக்கு குழந்தைகள் வீட்டில் இல்லாதது மனதை வெறுமைகொள்ளச் செய்தது. வேலை முடிந்து வந்தால் குழந்தைகளின் முத்த மழையிலேயே வேலை அலுப்பெல்லாம் பறந்து விடும்.

குழந்தைகளை உடனடியாக பார்க்கவேண்டும் என மனது சொல்ல உடனடியாக புறப்பட்டு சிவாணி வீட்டிற்குச் சென்றாள். குழந்தைகளை வீட்டிற்கு அழைத்து வந்தாள். மகன் யாது தனது பொக்கற்றுக்கால் விழையாட்டு தொலைபேசி ஒன்றை எடுத்து சுகுணாவிடம் காட்டினான்.

இது யாருடையது. என வினாவினாள். இதும்மா கோபின்ரை என தமிழ் சொல்ல கோபிதந்தவரோ என அடுத்த கேள்வியை ஏதோ வேலையில் மூழ்கியபடி கேட்டாள். இல்லையம்மா இதை தம்பி சொல்லாமல் எடுத்துக்கொண்டு வந்தவர் என மீண்டும் தமிழ் கூறினாள்.

ஐயையோ கோபி பாவம். தேடப்பேறார் எல்லோ. என கூறியவள் உப்பிடி ஆற்றை ஏனும் சாமானை எடுத்துக்கொண்டு வந்தால் பொலிஸ் பிடிக்கும். அடுத்தமுறை கோபிட்டை போகேக்கை இதை குடுத்திடவேணும். என கண்டிப்பான் குரலில் கூற யாதுவும் ஓம் என தலையை ஆட்டினான்.

பிள்ளைகளுக்கு தொலைக்காட்சியை போட்டுவிட்டு அவர்களை செற்றியில் அமர்த்தி விட்டு இரவுச் சமையலுக்கு தன்னை குசுனிக்குள் முடக்கிக்கொண்டாள். மகன் அடிக்கடி குசுனிக்குள் வருவதும் சுகுணாவைப்பார்ப்பதுமாய் அம்மா பொலிஸ் பிடிக்குமோ, பொலிஸ் பிடிக்குமோ என தன் மழலை மொழியில் அவளைக் கேட்டுக்கொண்டே இருந்தான்.

அவள் ஓம். பிடிக்கும். இனிமேல் இப்பிடி ஆற்றை ஏனும் சாமானை அவைக்கு தெரியாமல் எடுத்துக்கொண்டு வரக்கூடாது. அது கோபின்ரை தானே நாங்கள் போகேக்கை கொண்டுபோய்க்கொடுப்பம். என மகனை ஆசுவாசப்படுத்தி மீண்டும் செற்றியில் அமர்த்தினாள்.

சமையல் முடியும் தறுவாயில் இருந்தது. தமிழ் கீழே விழையாடப்போறன் அம்மா என கேக்க சரி என இருவரையும் வீட்டிற்கு கீழே உள்ள பாக்கில் விளையாட அனுப்பினாள். இறக்கி விட்டு ஒரு பத்து நிமிடமாகவில்லை தமிழ் ஓடிவந்தாள் அம்மா தம்பியை காணேலை எண்டு.

சுகுணா உங்கை தான் கீழை நிப்பான் என கூறிவிட்டு கதவைப் பூட்டிக்கொண்டு தமிழுடன் கீழே இறங்கினாள். நாலுபக்கமும் தேடினாள். ஓடி ஓடிப்பார்த்தாள் உண்மையிலேயே யாதுவைக் காணேலையோ என் மனம் திடுக்கிட்டது.

அவள் வசிக்கும் தொடர் மாடியே அல்லோல கல்லோலப்பட்டது. அந்த அல்லோல கல்லோலம் எல்லாம் கொஞ்ச நேரம் தான். அதில் வசிப்பவர்கள் எல்லோரும் சுகுணாவை வேடிக்கை பார்த்தார்கள்.யன்னலுக்காலும், படிக்கட்டிலுமாக நின்று அவளின் புதினத்தை தங்களுக்குள் பகிர்ந்து கொண்டார்களே ஒழிய அவளுக்கு யாரும் உதவ முன்வரவில்லை. தனித்து நின்று தேடினாள். அந்த தொடர் மாடியில் இருப்பவர்கள் எல்லோருமே இத்தாலியரும் யுகோசிலாவியரும், சுகுணா குடும்பம் மட்டும் தான் தமிழர்.

சுகுணா இருக்குமிடம் கிராமப்புறமாதலால் சற்று வாகனப்பயம் இல்லை அதனால்மனதை தேற்றிக்கொண்டு சயிக்கிளில் பக்கத்து வீதிகளில் தேடினாள் அவள் வாய்மட்டும் யாது, யாது என கத்தியது. மனசு ஏதேதோ எல்லாம் கற்பனை பண்ணி அவளுள் பயத்தை ஏற்படுத்தியது.

பக்க வீதியில் வந்த காரை மறித்தவள் பிறெஞ்சில் கேட்டாள் ஓர் சிறுவனை வரும் வழியில் கண்டீர்களா என் அவனும் ஆம் ஓர் சிறுவன் தனிய சயிக்கிளில் செல்வதாகவும் குறிப்பிட்ட இடத்தில் தான் விலத்தி வருவதாக அந்த வெள்ளைக்கார இளைஞன் கூறி காரை எடுத்துச்சென்றான் ஆனால் அவன் உதவ முன்வருவான் என நினைத்தாள் அனால் அவனும் உதவ தயங்கிச் செல்வது தெரிந்தது. மனிதம் செத்து விட்டதாய் அவளுக்குள் பிரமை தோன்றியது. வேகமாக சயிக்கிளை மிதித்தாள் அந்த இளைஞன் சொன்ன இடத்தில் தேடினாள் அங்கும் இல்லை. கேட்ட உடனே ஓம் கண்டன் எண்டான். சிலவேளை இவன் கடத்தி இருப்பானோ என மனது பலதரப்பட்டதை சித்தித்து அவளுக்கு மயக்கத்தை வரவழைப்பதாய் இருந்தது. ஐயோ நான் என்ரை அம்மா அப்பாக்கு என்ன சொல்லப்போறன். இவருக்கு என்ன சொல்லப்போறன் எல்லாரும் என்னைப்பேசப் போகினம் என பலவாறு மனசு சொல்லியது ஆனால் உதடுகள் மட்டும் யாது, யாது என கத்தியபடி சயிக்கிளை வேகமாக மீண்டும் மிதித்தாள்.

கண் எல்லா இடமும் தேடியது அவனது சயிக்கிளாவது எங்காவது இருக்கிறதா என தேடியது மனம். இல்லை. பக்கத்தில் பெரிய கால்வாய் ஓடுகிறது. இதனுள் விழுந்தானோ. என் நினைத்தவளாய் சயிக்கிழை கீழே போட்டவள் அந்த கால்வாயைப் பார்த்தபடி கால்களால் அதன் கரையே ஓடி, ஓடித் தேடினாள். அதனுள்ளும் சயிக்கிலுமில்லை யாதுவும் கிடைக்கவில்லை. அங்கால் சற்றுச் சென்றால் புகையிரதக்கடவை. இங்கே வந்திருப்பானோ றெயின் அடிச்சுதோ. என நினைத்தவளுக்கு தலையைச்சுற்றிக்கொண்டு வருவதுபோல் இருக்க புகையிரதக்கடவையின் ஓரமாய் இருந்தாள். அவள் இருக்கவும் புகையிரதமொன்று வேகமாய்க் கடக்கவும் சரியாக இருந்தது. ஒருகணம் திகைத்தவளாய் தலைச்சுத்து மட்டும் வாறமாதிரி இருக்கேலை எண்டால் நான் இப்ப இந்த றெயினுக்கை அடிபட்டு செத்திருப்பன் என நினைத்தவளை யாதுவைத் தேடிக்கொண்டிருக்கிறாய் என மூளை மனசுச்சுவரை அறைந்தது. மீண்டும் திடுக்கிட்டவளாய் யாது யாது என அரற்றி தன் தலையில் கைகளால் அடித்துக்கொண்டாள். நாட்டிலை இருக்கேலாமல் இஞ்சை வந்து ஐயோ என்ரை பிள்ளையை தொலைச்சுப்போட்டு நிக்கிறனே எனகத்தி அழுதாள் யாருடைய செவியிலும் விழுந்த மாதிரி இல்லை. ஒரே வெளி. ஊரிலை எண்டா அயல் உறவு எண்டு எத்தின சனம் உதவிக்கு. இஞ்சை ஆருமில்லா தனிக்கட்டைகளாய்.

வீட்டிற்கு வந்தாள். அந்தக் கட்டிடமே தங்கள் வேலைகள் எல்லாவற்றையும் விட்டுவிட்டு யன்னலுக்கால் இவளை வேடிக்கை பார்த்துக்கொண்டு நின்றது.

வீட்டிற்குள் வந்தவள் தனது கணவனின் வேலைத்தளத்திற்கு தொலைபேசி எடுத்தபடியே நேரத்தைப்பார்த்தாள். இரவு பத்து மணி. கொடுக்கிறான்களோ தெரியாது. என நினைத்தவளாய் எதிர்முனையில் றெஸ்ரோறன் பக்தாத் என்றாள் ஓர் பெண்மணி பிறெஞ்சில் எனது கணவர் சுரேசுடன் உடனடியாக கதைக்க வேண்டும் கொடுப்பியளா என பிறெஞ்சில் கேட்டாள் அவசரமோ பிறகு எடுங்களன் என்றது எதிர்முனை. ஓம் ஓம் அவசரம் என கத்திஅழுதாள்.ஏதோ விபரீதம் என எதிர்முனை நினைத்தவளாய் சுரேசிடம் உடனடியாக தொலைபேசியை கொடுத்தாள். சுரேசுக்கு நடந்த விடயம் ஒன்றுமே தெரியாததால் ஏன் இப்ப ரெலிபோன் எடுத்தனீங்கள் என கேக்க ஐயோ யாதுவை இப்ப நாலு மணித்தியாலமாய்க் காணேலை. என கதறி அழுதாள். அழாதேங்கோ சுகுணா அழாதேங்கோ உடனம் பொலிசுக்கு அடியுங்கோ நான் இப்ப வாறன். என கூறியவன் தொடர்பை துண்டித்தான். அவள் உடனம் பொலிசின் இலக்கத்தை அழுத்தினாள். எதிர்முனை அவசர பொலிஸ் என்றது. என்ரை நாலு வயது ஆம்பிளைப்பிள்ளையைக்காணேலை என் அவள் கூறிமுடிப்பதற்குள் பொலிஸ் கூறினான் சிறிலங்கன் பிள்ளையோ என. சுகுணா ஆம் என பதில் கொடுத்தாள்.

அவளுக்கு கொஞ்சம் தெம்பு வந்து விட்டு உடம்பெல்லாம் என்ரை பிள்ளை நிக்கிறான் நிக்கிறான் என கூக்குரல் போட்டது. இந்தாங்கோ உங்கடை மகனோடை கதையுங்கோ என தொலைபேசியை யாதவனிடம் கொடுத்தார்கள் யாது என இவள் கூப்பிட்டாள்.அவன் அம்மா என்றான் அம்மா என்றதும் சுகுணாவின் உடம்பெல்லாம் நடுங்கத்தொடங்கி விட்டது. எடே யாதவா அம்மாவை விட்டிட்டு எங்கையடா தொலைஞ்சாய். அம்மாவை இவ்வளவு நேரமும் றோட்டு றோட்டாய் விசர்பிடிச்ச நாய் மாதிரி அலைய விட்டிட்டியே என கோவிக்கோவி அழுதாள். குழந்தைக்கு இதெங்கை விழங்கப்போகுது. என நினைத்தவளாய் விக்கி விக்கி அழத்தொடங்கினாள். பொலிஸ் இவளின் நிலைம உணர்ந்தவனாய் பிள்ளையை உங்கடை வீட்டுக்கு நாங்களே கொண்டுவந்து விடுகிறம் உங்கடை விலாசம் என்ன என கோட்டான் சுகுணா தனது விலாசத்தை கொடுத்தாள். அடக்கடவுளே என்றான் பொலிஸ் பிறேஞ்சு மொழியில். அடக்கடவுளே என அவனின் சொல்லைக்கேட்டதும் தன்னை அமைதிப்படுத்தினாள் சுகுணா. பொலிஸ் தொடர்ந்து சொன்னான் உங்கடை மகனை உங்கடை வீட்டிலை இருந்து பத்து கிலோ மீற்றர் துரத்திலை வைச்சுத்தான் நாங்கள் கண்டனாங்கள். அதுகும் நாலு சில்லு சின்ன சயிக்கிள்ளை. கையிலை நத்தல் வேறை. என பொலிஸ் கூறியதும் அவளுக்கு தான் விட்ட பிழை உறைத்தது. சரி உங்கடை வீட்டை பத்துப் பதினைந்து நிமிடத்தில் மகனோடை வாறம் என் கூறி பொலிஸ் தொடர்பைத் துண்டித்தது.

சுரேஸ் வேலைத்தளத்திலிருந்து மேட்டச்சயிக்கிளில் வந்து இறங்கினான். அவன் வரவும் போலிஸ் வரவும் சரியாக இருந்தது. மகனை அள்ளி அணைத்தாள். அவன் சற்றும் பதட்டப்படாதவனாய் இருந்தான். பொலிஸ் இவர்களின் விசா எல்லாவற்றையும் வாங்கிப்பேனார்கள்.

சுகணா தலையில் அடித்து அழுதாள் என்னாலை தான் இந்தப்பிள்ளை துலைஞ்சது. நான் நத்தலை கொண்டுவந்ததும் பொலிஸ் பிடிக்கும் என சொல்லி இருக்காட்டி இது ஒண்டும் நடந்திருக்காது. இந்தக்குழந்தைக்கு என்ன விழங்கும் நான் தான் குழந்தையின் மனசை புரியாமல் நடந்திட்டன். இல்லாட்டி இப்படி ஒரு அனர்த்தம் நடந்திருக்குமே என தலையில் அடித்தாள் சுகுணாவை ஆசுவாசப்படுத்தி னான் சுரேஸ். தொலைபேசி சிணுங்க அவள் நினைவுகளும் தடைப்பட்டது.

( பூவரசு சஞ்சிகையால் நடத்தப்பட்ட சிறுகதைப்போட்டியில் மூன்றாம் பரிசினை பெற்றுக்கொண்டது.)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

* Copy This Password *

* Type Or Paste Password Here *