அந்த கணங்கள்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: December 28, 2020
பார்வையிட்டோர்: 5,904 
 
 

திருமணங்கள் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகின்றனவா, இல்லை திருமணங்கள் திருமணங்களில் நிச்சயிக்கப்படுகின்றனவா என்ற விவாதங்கள் சிலகாலம் எழுந்து இப்போது ஓய்ந்து போய்விட்டன. என்னைக் கேட்டால் எங்கெல்லாம் காதல் உள்ளங்கொண்ட இரு ஆண்– பெண் சந்தித்துக் கொள்கின்றனரோ அங்கெல்லாம் திருமணங்கள் நிச்சயிக்கப்படுகின்றன என்பேன்.

ஆம், அஜந்தனும் அனுபமாவும் தற்செயலாகத்தான் சந்தித்துக் கொண்டார்கள்.

அவர்கள் இருவருமே ஒரு பத்திரிகை காரியாலயத்தில் பத்திரிகையாளருக்கான வேலை ஒன்றுக்கு விண்ணப்பித்து விட்டு நேர்முகத் தேர்வுக்காக வந்திருந்தார்கள். அவர்கள் இருவரும் அருகருகே அமர வேண்டிய ஒரு சூழ்நிலை ஏற்பட்டிருந்தது. நேர்முகத் தேர்வு நடக்க மிகத் தாமதித்ததால் வந்திருந்த அனைவருக்குமே எரிச்சலாக இருந்தது. அப்போது தான் தன் பக்கத்தில் அமர்ந்திருந்த அவளிடம் அஜந்தன் பேச்சுக் கொடுத்தான்.

அனுபமாவை ஒரு பேரழகி என்று வர்ணிக்க முடியாத போதும் அவன் கண்ணுக்கு குளிர்ச்சியானவளாகவே தோன்றினாள். அவளது கண்களிலும், முகத்திலும் ஏதோ ஒரு சோகம் அப்பிக் கொண்டிருந்தது போல் அவனுக்குப் தோன்றியது. அதுவே அவள்பால் அவனுக்கு ஆர்வத்தையும் அனுதாபத்தையும் ஏற்படுத்தியது.

அவர்கள் இருவருமே பத்திரிகையாளர்களாக வருவதில் ஆர்வம் கொண்டிருந்ததால் எழுத்துத்துறை பற்றியும் செய்தித்துறை பற்றியும் தத்தமது கருத்துக்களை பரிமாறிக்கொண்டனர். அஜந்தன் ஏற்கனவே பத்திரிகைகளுக்கு கட்டுரை, கவிதைகளை எழுதுபவனாக இருந்தான். அவன் எழுதிய பத்திரிகைகளில் வெளிவந்திருந்த அத்தகைய ஆக்கங்களின் பிரதிகளை கத்தரித்து ஒரு கோவையாக தயாரித்து அவற்றையும் நேர்முகத்தேர்வில் சமர்ப்பிப்பதற்காகக் கொண்டு வந்திருந்தான்.

அவற்றைப் பார்த்து பிரமித்த அனுபமா அவனுக்குக் கட்டாயம் அந்த வேலை கிடைக்குமென தைரிய மூட்டினாள். அப்போதே அவன்பால் அவள் ஈர்க்கப்பட்டிருந்தாள்.

அவளும் கூட தன்னை ஒரு கவிதாயினி என்றுக் கூறிக் கொண்டாள். அவளுடைய கவிதைகளை எல்லாம் அழகிய கையெழுத்தில் வெள்ளைப் பேப்பரில் எழுதி அவற்றுக்கேற்றாற்போல் ஓவியங்களும் வரைந்திருந்தாள். அவற்றை ஒரு புத்தகமாக பைன்டிங் செய்து எடுத்து வந்திருந்தாள். அவர்கள் இருவருமே அந்த வேலைக்குப் பொருத்தமானவர்கள் தான். அதன் காரணமாகவே அவர்கள் ஒருவர்பால் ஒருவர் கவரப்பட்டனர். அதன் பின் வெகு நேரம் கழித்தே நேர்முகப்பரீட்சை இடம் பெற்றது. எழுத்துப் பரீட்சை ஒன்றும் வைக்கப்பட்டது. அவற்றில் அதிக மதிப்பெண்களை அஜந்தனும் அனுபமாவும் பெற்றிருந்த போதும் அவர்கள் இருவருமே பதவிகளுக்குத் தெரிவாகவில்லை. அமைச்சர்கள், அரசியல்வாதிகள் முகாமைத்துவத்திற்கு வேண்டியவர்கள் ஆகியோருக்கே நியமனங்கள் வழங்கப்பட்டன.

திறமைக்கு எங்கேயும் இடமில்லை என்பதனை அஜந்தன் ஏற்கனவே புரிந்து வைத்திருந்தாலும், திறமை இருந்தும் தனக்கு நியமனம் கிடைக்கவில்லையே என்ற ஆதங்கம் அனுபமாவை அதிகம் பாதித்தது. அவள் துக்கம் தாங்க முடியாமல் தேம்பித் தேம்பி அழ ஆரம்பித்து விட்டாள்.

அதன் பின் அவளுக்கு ஆறுதல் கூறி தேற்றும் பணியையயும் அஜந்தனே தலைமேற்கொண்டு செய்தான். இந்த சம்பவம் அவர்களுக்கிடையில் பெரும் நெருக்கத்தை ஏற்படுத்தி விட்டது. அவர்கள் அதன் பின் அடிக்கடி சந்தித்துக் கொண்டனர். ஆனால் அவர்கள் தத்தமது சொந்த வாழ்க்கையைப் பற்றி ஒன்றும் கதைக்காதிருந்தார்கள். அப்படியிருந்த போதுதான் ஒரு நாள் அனுபமா ஒரு துரு துருத்த அழகிய ஐந்தே வயது நிரம்பிய பெண் குழந்தையை அழைத்து வந்து தன் குழந்தை சிந்து என அறிமுகப்படுத்தினாள். அவன் அவளை ஏற்கனவே காதலிக்க ஆரம்பித்திருந்ததால் அவளுக்கு கல்யாணமாகிவிட்டதை எண்ணி அவன் மனது சோர்ந்து போனது. ஆனால் அடுத்து கூறிய அவள் வார்த்தைகள் அவன் மனதில் சிந்தனையை ஏற்படுத்தியது.

அவள் ஒரு சோகக் கதையைக் கூறினாள். அவள் கணவன் துன்பியல் மனப்பாங்கு கொண்டவன் என்றும் அவளை ஒவ்வொரு நாளும் துன்புறுத்தி அதில் இன்பம் காண்பவன் என்றும் கூறினாள். எந்த ஒரு ஆணும் அவளை ஏறெடுத்துப் பார்த்து விட்டால் அன்றிரவு பெல்ட்டால் அடிப்பான் என்றும் அந்தரங்க உறுப்புக்களில்நகத்தால் கிள்ளுவான் என்றும் கடந்த மூன்று வருடமாக நாங்கள் பிரிந்தே வாழ்வதாகவும், தங்களுக்கிடையில் எதுவிதமான தொடர்பும் இல்லையெனக் கூறி அழத் தொடங்கினாள்.

அன்று அஜந்தன் அனுபமாவைப் பிரிந்து மிகக் கலக்கமான மனநிலையிலேயே வீடு திரும்பினான். அவன் தன் மனநிலையை மீட்டுக் கொள்வதற்காக நண்பன் சித்தார்த்தனை சந்திக்கச் சென்றான். அவனது எல்லா சுகதுக்கங்களிலும் சித்தார்த்தனுக்கு ஒரு வகிபாகம் இருந்தது. சித்தார்த்தனிடம் அனுபமா தொடர்பான எல்லா விடயங்களையும் கூறி அவளை தான் திருமணம் செய்யப் போவதாகவும் கூறினான்.

எனினும் அந்த யோசனைக்கு சித்தார்த்தன் ஆதரவு தெரிவிக்கவில்லை. அது அவன் வாழ்க்கையில் பல்வேறு சிக்கல்களை தோற்றுவிக்கும் என்று எச்சரித்தான்.

இருந்தாலும் அந்த எச்சரிக்கையை அஜந்தன் பொருட்படுத்தவில்லை. எப்படியோ தன் பெற்றோரின் சம்மதத்தையும் பெற்று ஒரு நல்ல நாளில் அவர்கள் திருமணம் செய்து கொண்டனர்.

அவன் அனுபமாவின் மகள் சிந்துவிடம் இனி அவள் தன்னை அப்பாவென்றே கூப்பிட வேண்டும் என்று கூறியபோது அவளும் அவனை அப்பாவென்று கட்டிப்பிடித்துக் கொண்டாள். அவர்கள் சிந்துவின் நன்மை கருதி இப்போதைக்கு தமக்கு வேறு குழந்தை வேண்டாமென கட்டுப்பாடுகள் விதித்துக் கொண்டனர். அவர்கள் மூன்று பேரின் வாழ்வு இனிதாகவே போய்க் கொண்டிருந்தது. இருவருக்கும் வேலையும் கிடைத்துவிட்டது. குழந்தையை தாத்தாவும் பாட்டியும் கவனித்துக் கொண்டனர்.

அப்போது தான் ஒரு விசயம் பேச வேண்டுமென்று அனுபமா தயங்கித் தயங்கித் வந்தாள். அவள் முகத்தில் சோகம் அப்பிக் கிடந்தது. அவன் என்ன விசயம் என்று கேட்டான். அவளுக்கு இம்மாத மாதவிலக்கு தவறிவிட்டதென்றும் தான் கர்ப்பம் தரித்திருப்பதாக சந்தேகப்படுவதாகவும் தெரிவித்தாள். அவர்களின் தாம்பத்திய கட்டுப்பாட்டில் எங்கோ தவறு நடந்து விட்டது. அவர்கள் இதனை உறுதி செய்து கொள்ள மருத்துவ பரிசோதனை செய்து கொண்டபோது அவள் கர்ப்பம் தரித்துள்ளமை நிச்சயமானது. அஜந்தன் இதனை சாதாரணமாக எடுத்துக் கொண்டாலும் அனுபமாவால் இதனை ஜீரணிக்க முடியவில்லை. தன் பிள்ளை சிந்துவுக்கு தான் துரோகமிழைத்து விட்டதாக அவள் மனது உறுத்திக் கொண்டே இருந்தது. அஜந்தன் சிந்துவை என்னதான் தன் பிள்ளை என்று அன்பு காட்டினாலும் தனக்கென ஒரு பிள்ளை பிறந்து விட்டால் அவன் மனம் மாறி விடும் என்று அவள் மனதுக்குப்பட்டது.

இதனால் அவர்களின் சுமுகமான வாழ்க்கையில் சற்றே விரிசல் ஏற்பட்டது.

அஜந்தனும் விடாமல் அவளை சமாதானப் படுத்திக் கொண்டே இருந்தான். இப்படி இருக்கும் போதுதான் அந்த விபரீதமான சம்பவம் நிகழ்ந்தது. ஒரு நாள் காலையில் அனுபமா திடீரென மயக்கம் போட்டு விழுந்தாள். அவள் தொடை வழியாக நிறைய இரத்தம் வெளியேறியது. அவர்கள் எல்லோருமாக சேர்ந்து அவளை ஆஸ்பத்திரிக்கு எடுத்துச் சென்றார்கள். சில மணித்தியால காத்திருப்புக்குப் பின்னர் அவளுக்கு கர்ப்பம் கலைந்து போய்விட்டதாக மருத்துவர்கள் அறிவித்தார்கள். அவள் அதன் பொருட்டு ஏதோ மருந்து மாத்திரைகள் சாப்பிட்டிருப்பதாகவும் தெரிவித்தார்கள்.

அஜந்தனுக்கு இந்த உலகமே இருண்டுப் போய் விட்டது போல் தோன்றியது. அனுபமா இப்படி ஒரு காரியத்தை செய்து விடுவாள் என அவன் கனவிலும் எண்ணியிருக்கவில்லை. அவனுக்கு முதல் முறையாக அனுபமா மேல் ஆத்திரம் ஆத்திரமாக வந்தது. அவளை இனி இல்லை என்னும் அளவுக்கு திட்டி, தான் நீண்ட நேரம் அழுது விசும்பிக் கொண்டிருந்தான். அவன் மனம் சற்றே அமைதி அடைந்ததும் அவன் அனுபமாவை சந்தித்து அவள் மனதைப் பறிகொடுத்தது, அவளுடன் பழகித் திரிந்தது, தன் காதலைக் கூறியது எல்லாமே கோர்வையாக அவன் நினைவுக்கு வந்ததது. அனுபமா செய்ததில் நியாயம் இருக்கிறதா என்று சற்றே சிந்தித்தான். அவள் ஒரு பெண் ஒரு குழந்தையின் தாய் வாழ்வில் துன்பப்பட்டு நொந்து போனவள் அவளுக்கு இனியும் துன்பம் கொடுக்க கூடாது. அவன் உறங்கிக் கொண்டிருந்த சிந்துவின் தலைமயிரைக் கோதி விட்டான். அவன் ஒரு தீர்மானத்துக்கு வந்து விட்டான். அவன் சோகங்கள் எங்கோ ஓடி ஒழிந்து கொண்டுவிட்டன.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *