(1998ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
இரவு 11.00 மணியிருக்கும். மணமகள் பஸீராவின் வீடு அப்போதுதான் அமைதி கண்டிருந்தது. அன்று, அவளது திருமண தினமாகையினால், காலையிலிருந்தே காணாமற் போயிருந்த அமைதி, ‘தாலி’ கட்டி நான்கு மணித்தியாலங்களின் பின்பே அங்கு மீண்டிருந்தது.
அவ்வீட்டின் முன் மண்டபத்தில், இரு ‘ரியூப் பல்பு’கள் பால போன்ற ஒளியினைப் பாய்ச்சிக் கொண்டிருந்தன. இரண்டு சீலின் பேன்கள் காற்றை அளவாக அசையச் செய்து கொண்டிருந்தன.
வடக்குப் புறச் சுவரோடு பொருத்தப்பட்டிருந்த, தாலி கட்டும் வைபவத்திற்காக விசேடமாகத் தயாரிக்கப்பட்ட அழகிய வேலைப்பாடுகளுடன் கூடிய சிங்காசனம் அந்நிகழ்வு முடிவுற்றும் அதன் கோலம் கலையாது அப்படியே காட்சி தந்தது. அதிலே, சீராக இணைக்கப்பட்டிருந்த சின்னச் சின்ன பல வண்ண பல்புகள் திடீரென்று அணைவதும் பின்னர், பக்கென்று ஒளிர்வதுமாய் கண்ணாமூச்சி காட்டிக் கொண்டிருந்தன.
அம்மண்டபத்தில் எங்கும் மெல்லிய நறுமணம் தடவிய காற்று மிதந்து கொண்டிருந்தது.
இந்த இதமான சூழலில், கிழக்குப் பக்கச் சுவரோடு ஒட்டிய வாறு போடப்பட்டிருந்த மூவர் அமரக் கூடிய ஒரு கதிரையில், மணமகளது தந்தையின் மூத்த சகோதரி சரீனாவும், இளைய சகோதரி பரீனாவும் அமர்ந்திருந்தனர். அதன் பக்கமாகக் கிடந்த ஒரு கைக் கதிரையில் பரீனாவின் கணவர் சரீபும், அதனையடுத்து போடப்பட்டிருந்த இன்னுமொரு கைக் கதிரையில் சரீனாவின் கணவர் பரீதும் உட்கார்ந்திருந்தனர். அவர்களின் முன்பாக, ‘குசன்’ பண்ணப்பட்ட தனித் தனிக் கதிரையில் மணமகன் பஸீலும், மணமகள் பஸீராவும் அமர்ந்திருந்து அவர்களோடு மகிழ்ச்சியாக உரையாடிக் கொண்டிருந்தனர். பஸீல், தனது வீரப்பிரதாபங்களை விளம்பிக் கொண்டிருந்தான். பஸீராவோ, தனது கணவனை வாத்சல் யத்தோடு பார்ப்பதும், அடிக்கடி நாணத்தில் சிவப்பதுமாய் இருந்தாள்.
அம்மண்டபத்தில் சற்றுத் தொலைவில் சாய்வு நாற்கா லியில் உட்கார்ந்திருந்த மணமகளின் தாய்மாமன், அக்காட்சி யினை அவதானித்துக் கொண்டிருந்தான்.
தந்தையை இழந்து, தாயினதும், சகோதரர்கள் இருவரி னதும் பராமரிப்பிலும் வாழ்ந்து வந்த பஸீராவுக்கு வலது கரம் போல வந்து வாய்த்தவர்தான் அவள் தாய்மாமன் கரீம். அவர், மணமகனும், மணமகளும் வெகு சுகமாக ஒவ்வொரு கணத்தை யும் அனுபவித்துக் கொண்டிருந்த அக்காட்சியினைப் பார்த்ததும் சில மாதங்களுக்கு முன்பு பஸீலோடு சம்பந்தப்பட்ட ஒரு சம்பவம் அவர் நினைவிலே தோன்றியது.
பஸீலின் திருமணப் பேச்சு வார்த்தையில் பாரிய தடை விழுந்த ஒரு சந்தர்ப்பத்திலே ஒரு தினம். பஸீராவின் தாய்மாமன கரீம், பஸீலை அவனது தாய் வீட்டில் சந்திக்கிறார்.
இருவரும் அர்த்தமாகப் பேசிக் கொள்ளுகின்றனர்.
“என்ன சாச்சப்பா, நீங்க ஒரு மாதிரிக் கதைச்சிங்களாம்…” முதலில் கரீமே பேச்சை ஆரம்பித்தார்.
“ஒண்டுமில்ல… நீங்க நேரத்தோட சொன்ன மாதிரி சீதன ஆதனமா வீடு வளவும், கைக்கூலியா ஒன்றரை லெச்சம் ரூபாக் காசும் தாரத்தோட வீட்டுக்கு எதுக்க பத்தடி நீளத்திலயும், எட்டடி அகலத்திலயும் ஒரு கட கட்டிரத்துக்குரிய ஒரு துண்டு நிலத்தை யும் எழுதித் தந்திருங்க… கலியாணத்த முடிப்பம்.”
“என்ட தங்கச்சிக்கு இன்னமும் பொம்பிளப்பிள்ள இருக்கு… நீங்க எல்லாத்தையும் சிக்காறாவும் கேட்டுக் கொண்டிருக்கவும் போடா”
“அப்படின்டாத்தான் அந்தக் கலியாணத்தச் செய்வம். இல்லாட்டி சந்தோசமா நிண்டுக்குவம்.” தனது கருத்தை உறுதி யாகவே வெளிப்படுத்தினான் பஸீல்.
“சாச்சப்பா, முதன் முதல்ல நாட்டிற கம்பு நல்லா இருக் கணும் என்கிறத்துக்காகத்தான் நாங்க உங்கள எடுக்கணுமிண்டு நினச்சம்… கட கட்டிறதுக்கு அந்தத் துண்டு நிலத்தத்தானே கேக்கீங்க… சரி எழுதித்தாரமே…” கரீம் வார்த்தைகளை உதிர்த்து விட்டு தனது மகிழ்ச்சி பொங்கும் விழிகளாலே பஸீலை நோக்கினான்.
இவ்வாறு கரீமின் நினைவு நீண்டது.
“என்ன சாச்சப்பா, பேசாம அங்கிருக்கிங்க. எழும்பிக்கிட்டு இஞ்ச வாங்க” என்று மணமகன் பஸீல், கரீமை வேண்டிக் கொண்டதும் அவரது நினைவு இழையறுந்தது.
அவர், உடனேயே தன்னை சுதாகரித்துக் கொண்டு நிமிர்ந் தார். இதழில், புன்னகை ஒன்றை நெளியவிட்டவாறு சமாளித்துக் கொண்டு எழுந்தார். பஸீலின் பக்கமாக உள்ள இருக்கை நோக்கி நகர்ந்தார்.
தனது தங்கையின் புதல்வி பஸீராவின் திருமணத்தை ஒழுங்கு செய்வதற்கான பணியில் மட்டுமல்ல, அத்திருமணம் இனிதாக நடந்தேறுவதற்கான வேலைகளிலும் முழுமையாகப் பங்கு கொண்டு செயற்பட்டார் கரீம்.
தொலைவிலிருந்தால் வேலைகளில் குறைகள் தொட்டு விடக் கூடும் என்று எண்ணி தனது மருமகள் பஸராவின் திரு மணத்துக்கு முதல் நாளே அவர், தன் மனைவியோடு, தமது வீட்டை விட்டு, அவ்வீட்டுக்கே வந்துவிட்டார். திருமண வேலைகளில் பம்பர மாகவே சுற்றிச் சுழன்றார். பஸீராவின் திருமணத்தன்று பார்க்க வேண்டும் அவரது வேலையை!
மணமகனோடு வந்திருந்தவர்களும், மற்றவர்களும் பந்தலிலும் மனையிலும் நிறைந்திருந்தனர்.
கரீம், பந்தலில் நிறைந்திருந்தவர்களை தனது பொறுப்பிலே எடுத்துக் கொண்டார். அவர், பந்தலின் ஒரு கோடியிலே நின்று கொண்டு அங்கு ஆறு ஏழு இளைஞர்கள் சிற்றுண்டி வழங்குவதை மேற்பார்வை செய்து கொண்டிருந்தார்.
“சம்சாவைக் கொண்டு போங்க… கேக்கக் கொண்டு போங்க… சம்சா சாமான் குடுத்து முடிஞ்சா அந்தப் பக்கம் சோடாவைக் கொண்டு போங்க” என்று இடையிடையே தடித்த குரலில் சத்தமிட்டுக் கொண்டிருந்தார் கரீம். அவரின் அதிகாரம் கொடிகட் டிப் பறந்து கொண்டிருந்தது.
பொதுவாக, அவர், பஸீராவின் திருமணக் காரியங்களில் சந்தர்ப்பத்துக்கேற்ற வகையில் தன்னை ஈடுபடுத்திச் செயற்பட்டு வந்தார்.
பஸீலுக்கும் பஸீராவுக்கும் திருமணம் நிகழ்ந்து மூன்று தினங்கள் மறைந்தன.
நான்காவது நாள். இரவு 7.30 மணியிருக்கும். கரீம், தனக்கு ‘ஒரு மாதிரியாகவிருக்கு. நெஞ்சுக்க பிடிக்கிறது போலவும் இருக்கு’ என்று கூறி, தாம் இதுவரையும் தங்கியிருந்த அத் திருமண வீட்டிலிருந்து தன்னோடு தனது மனைவியையும் அழைத்துக் கொண்டு தமது வீட்டுக்கு மீண்டார்.
உடனேயே, டாக்டரிடம் காட்டி சிகிச்சையும் பெற்றுக் கொண்டார். இருந்தும், அது பயன் தரவில்லை.
அடுத்த நாள். அதிகாலை 4.00 மணியளவில் மாரடைப் பினால் மரணத்தைத் தழுவிக் கொண்டார் கரீம்.
அச்செய்தி, ஜெட் வேகத்தில் அத்திருமண வீட்டுக்கும் போய்ச் சேர்ந்தது. மணமகள் பஸீராவின் தாய் தலையிலடித்துக் கொண்டாள்.
”இண்டெல்லாம் காகம் ஒரே கத்திச்சி… ஏதோ நடக்கப் போகுதெண்டு நான் நினச்சன்… நடந்திட்டுதே! என்ட தம்பி” என்று புலம்பி அழுதாள்.
மணமகளோ, “என்ட மாமா…” என்று வாய் பிளந்து கதறினாள்.
சில நிமிடங்கள் சொல்லிக் கொள்ளாமலே மெல்ல நழுவின. மணமகளின் தாய், கண்ணீருக்குள் குளிக்கும் தனது விழிகளால் மகளைப் பார்த்தாள்.
“நான் அங்க போறன். நீங்களும் மச்சானும் மறுகா வாங்க” என்றாள்.
இல்லத்தை விட்டு வெளியே காற்றாய் விரைந்தாள்.
சற்று நேரத்தின் பின்பு, பஸீலின் தாயும், சகோதரியும் திருமண வாசம் இன்னும் மாறாத அவ்வில்லத்திற்கு மேல் மூச்சு, கீழ் மூச்சு வாங்க வந்து சேர்ந்தனர். அவர்களின் செவிகளிலும் கரீமின் மரணச் செய்தி சுடச் சுடவேதான் வந்து விழுந்திருந்தது. மற்றவர்களைப் போல அவர்களும் அதிர்ச்சியின் கைதிகளாக்கப் பட்டிருந்தனர்.
தனது மகனும், மருமகளும் அங்கு போய் விடுவார்களோ என்ற பதற்றம் வேறு அவர்களை ஆட்கொண்டுமிருந்தது.
அதிக பரபரப்படைந்தவர்களாக வந்த அவர்களை “வாங்க… இருங்க…” என்று மணமகள் வரவேற்றாள்.
பஸீலும் அங்கு வில்லிலிருந்து விடுக்கப்பட்ட கணையாய் விரைந்து வந்தான்.
அவனின் தாய், தன் மைந்தனைப் பார்த்துக் கொண்டாள்; இடையிடையே மருமகளையும் அவதானித்துக் கொண்டாள்.
”நாங்க இருக்கல்ல… மையத்து வீட்டுக்குத்தான் போப்றம்… நீங்க கலியாணம் முடிச்சி இன்டையோட மூண்டு நாள்தான் கழிஞ்சிருக்கு. ஏழு கழியாம நீங்களும் உங்கட பொண்டாட்டியும் அங்கு போகப்படா… ஆகா.. ஏழு கழியாமப் போனா உங்கள் இரண்டு பேருக்குள்ளயும் பிரச்சினைகள் வரும்… சில வேளை அது முத்தி இருவரும் பிரியக்கூடிய நிலை வந்தாலும் வரும். இல்லாட்டி உங்களுக்குள்ள வேற துன்ப துயரங்கள் வரும்… அதுதான் நான் ஆகாண்டு சொல்ற… உங்களுக்குள்ள ஏதும் வந்திராம அல்லா காப்பாத்தணும்… இப்ப இருக்கிறது போல ரெண்டு பேரும் வெச்ச குடியா நீட்டுக்கு இருந்திரணும்… எல்லா ருக்கும் துக்கமாத்தானிருக்கு… என்ன செய்யிற பேய்த்திராதிங்க” என்றாள்.
”உம்மா சொல்றது சரிதான்… பேய்த்திராதங்க.உம்மா சொல்றது போலவே நடந்து கொள்ளுங்க.” பஸீலின் சகோதரியும் அன்னைக்கு பக்கப் பாட்டு பாடினாள்.
திடீரென்று, சுவரின் ஒரு கோடியிலேயிருந்து ஒரு பல்லி, ‘நச்… நச்’ சென்று கத்தியது.
“இன்னா பாருங்க… நான் சொல்றது உண்ம என்று பல்லியும் சொல்லுது.” பஸீலின் தாய், வார்த்தைகளை மிக்க ஆர்வத்தோடு வெளிப்படுத்தினாள்.
இப்பொழுது, பஸீலுக்கு தாயின் வார்த்தையில் நம்பிக்கை மேலும் வலுத்தது.
வழமையாய் தாயினதும் சகோதரியினதும் வார்த்தைகளை வேதவாக்காய் மதிக்கின்ற பஸீல், தனது வாழ்வோடு தொடர்பான அவர்களது முக்கியமான இவ்வாலோசனையை ஒரு சின்ன விடயமாய் மதிப்பானா?
“சாச்சப்பா கரீம் மௌத்தானது எனக்கும் எவ்வளவோ துக்கமாத்தானிருக்கு… இப்ப நாங்க ரெண்டு பேரும் அங்க போறத்துக்குத்தானிருந்த… நீங்க வந்ததும் நல்லதாத்தான் பேய்த்து. ஆகாண்டா இனி அங்க போறது சரியில்லத்தானே… இனி நாங்க அங்க போகல்ல” என்றான் பஸீல்.
அவனின் அன்னையும், சகோதரியும் அங்கிருந்து வெளியேறினர்.
அதனையடுத்து பஸீராவின் உறவினர் சிலரும், பஸீலின் உறவினர் சிலரும் அங்கு வந்தனர்.
அவர்களை மொய்த்துக் கொண்டனர்.
”மரண வீட்டுக்குப் போவதால் அவனுக்கும் அவனது மனைவிக்கும் எவ்விதத் தீங்கும் ஏற்படாது” என்றனர்.
இருவரையும் அங்கு செல்லுமாறு அன்பாகவும் வேண்டிக் கொண்டனர்.
யார் எவ்வாறு கூறிய போதும் தனது தீர்மானத்தில் இம்மியும் பிசகாது உறுதியாகவிருந்து அதனைச் செயற்படுத் தினான் பஸீல்.
கரீமின் பூதவுடல் அடக்கம் செய்யப்பட்டது.
அடுத்த நாள் பிற்பகல், பஸீலைப் பார்ப்பதற்காக நண்பர் ஒருவர் அன்பளிப்புப் பொருட்களோடு அவனின் வீட்டுக்கு வந்திருந்தார்.
பஸீல், அவரை அவ்வீட்டின் விருந்தினர் அறைக்கு அழைத்து வந்து தென் திசைப் பக்கமாய் இடப்பட்டிருந்த ‘குசன்’ பண்ணப்பட்ட ஓர் இருக்கையில் அமரச் செய்து உபசரித்தான். தானும், நண்பரின் எதிரே கிடந்த ஒரு நாற்காலியில் உட்கார்ந்து அவருக்கு தனது கரத்தினாலே சிற்றுண்டி பரிமாறினான்.
இருவரும் நீண்ட இடைவெளியின் பின்னர் சந்தித்துக் கொண்டதால் பல விடயங்களையும் மனம் விட்டு உரையாடினர். அதற்குள்ளும், பஸீலினது மனைவியின் தாய்மாமன் கரீமின் மறைவு விடயமே பஸீலின் நண்பனால் அங்கு பெரிதாக பிரஸ் தாபிக்கப் பட்டது.
“உங்கட சாச்சப்பா கரீம்ட மையத்து, முதலாம் குறிச்சி மையவாடியில அடக்கக்க நானும் அங்க போயிருந்தன். அங்க, உங்களக் காணாதத்தால வந்திருந்த முக்கியமான சிலருக்கிட்ட நீங்க வராம உட்டத்துக்கான காரணத்த விசாரிச்சன். அவங்க எல்லாரும் எனக்கிட்ட உங்கட நிலைப்பாட்ட விளக்கமா எடுத்துச் சொன்னாங்க…கலியாணம் முடிச்சவங்க ஏழு கழியாம மையத்து வீட்டுக்குப் போகப்படா… அது ஆகா, என்கிறதெல்லாம் சரியான மூடப்பழக்கம். அப்படிப் போறத்தால கலியாணம் முடிச்சவங் களுக்குள்ள பிரச்சினைகள் வருமென்கிறதோ, இல்லாட்டி அது முத்தி கலியாணமே பிரிஞ்சி போகுமென்கிறதோ, அதுவுமில்லாட்டி அவர்களுக்குள்ள வேறு துன்ப துயரங்கள் ஏற்படும் என்கிறதோ ஏத்துக்கொள்ள முடியாத ஒரு விசயம். கலியாணம் முடிச்சி ஏழு கழியுமட்டும், மையத்து வீட்டுக்குப் போகாம மிச்சம் பாகு பகுத்திரமா இருந்தாற்கூட, இவைகள்ள ஏதாவது ஒண்டு நமக்கு வரணுமிண்டு ஒரு நியதியிருந்தா அது நமக்கு வந்துதான் ஆகும். நடப்பது எப்பயும் நடந்துதான் தீரும். நடக்காது என்றா அது எப்பயும் நடக்காதுதான்.”ஓர் அறிஞரைப் போல வார்த்தைகளை நிதானமாகவும் உறுதியாகவும் வெளிப்படுத்தினார் பஸீலின் நண்பர்.
”எனக்குக் கொஞ்சம் பயந்த சுபாவம். நானும் இப்பான கலியாணம் முடிச்ச… உம்மாவும் ஏழு கழியாம மையத்து வீட்டுக் குப் போறது சரியில்ல, அது ஆகா… அப்படி, இப்படி என்று சொன்னாங்க…நானும் பின்னுக்கு நடக்கப் போறத்த வித்தியாசமா யோசித்துப் போட்டு உம்மாட சொற்படியே நிண்டுக்கிட்டன்.”
“பஸீல், நான் இன்னும் ஒரு முக்கியமான விசயம் சொல்றன்… மிச்சம் கவனமாகக் கேளுங்க… நான் கலியாணம் முடிச்சி அடுத்த நாள்… என்ட பொஞ்சாதியின் வீட்டுக்குப் பக்கத் தில ஒரு கிழவமனிசன் மௌத்தாப் போனார். அவர், எங்களுக்கு பக்கத்து வீட்டுக்காரர் என்ற முறையைத் தவிர வேற உறவு முறை எதுவுமேயில்ல… அவருக்கு தொண்ணூறு வயது இருக்கு மாம். நல்லா நோய்வாய்ப் பட்டிருந்தவர்தான். திடீரென்று மௌத் தாப்போனார். நானும் பக்கத்து வீட்டுக்காரரான அவர னேயே போய்ப் பார்க்கப் புறப்பட்டன். அப்ப என்ட மாமாவும், மாமியும், எனக்குச் சேந்த இன்னும் கொஞ்சப் பேரும் என்ன அங்க வளைத்துக் கொண்டு உங்கட உம்மா உங்களுக்குச் சொன்னது போல ஏழு கழியாம மையத்து வீட்டுக்குப் போகப் படா. அது ஆகா. என்டெல்லாம் சொல்லி என்னத் தடுத்தாங்க. நானோ, அது மூடப்பழக்கம் என்டு சொல்லி அவங்கட சொல்லக் கேளாம உடனேயே அந்த மையத்து வீட்டுக்குப் போய் மையத்தப் பாத்தன். இண்டைக்கு எங்களுக்கு ஒரு வயதில ஒரு ஆம்பிளப் பிள்ள இருக்கு. நானும் என்ட பொஞ்சாதியும் நல்ல சந்தோச மாகவே இருக்கம். இதுவரையில எங்களுக்குள்ள எந்தப் பிரச் சினையோ, துக்கமோ ஏற்பட்டதில்ல. கொஞ்சம் யோசித்துப் பாருங்க. நீங்க உங்கட சாச்சப்பாட மையத்துக்குப் போயிருக் கலாம். நாம கலியாணம் முடிச்சி ஏழு கழியல்ல எண்டு வச்சுக்கு வம். நம்மிட உம்மா மௌத்தாப் பேய்த்து, இல்லாட்டி வாப்பா மௌத்தாப் பேய்த்து, நாம போகாம இருப்பமா… நல்லா யோசித் துப் பாருங்க. கொஞ்சமும் பொருத்தமில்லாத விசயம் இது. நடக்கிறது எப்பயும் நடக்கத்தான் செய்யும்.” பஸீலின் நண்பர், மீண்டும் வார்த்தைகளை மாரிகால மழை மேகமெனப் பொழிந்து தள்ளினார்.
கல் போல் உறுதியாகவிருந்த பஸீலை, நண்பனின் இவ்வார்த்தைகள் பனிக்கட்டியாய் உருக வைத்தது.
பஸீல், சில வினாடிகள்தான் தாமதித்திருப்பான். அவன் ‘பட்’டென்று தனது மாற்றத்தை வெளிப்படுத்தினான்.
“நானும் உம்மா சொன்னத்த அப்படியே நம்பிட்டன். இது மூடப்பழக்கம் என்பது இப்பதான் எனக்கு நல்ல தெளிவா வௌங்கிது. சாச்சப்பா கரீம் என்மேல் உயிரையே வைத்திருந் தாரே! அவரின் மையத்தைப் பார்க்காம இருந்து விட்டேனே!”
“இனி ஒண்டும் செய்ய ஏலா… சந்தர்ப்பம் வரக்குள்ள இருக்கிறவர்களுக்கிட்ட பிழைய எடுத்துச் சொல்லி, குடும்ப உறவ, சரியாக்கிக் கொள்ளுங்க.”
நண்பர், பஸீலிடம் விடை பெற்று வெளியேறினார்.
அதன் பின்பு, பஸீல் தன் மனைவி பஸீராவை நெருங் கினான்; அவளை மிக்க பரிவோடு பார்த்தான்.
“நான்தான் நீங்களும் உங்கட மாமாவின் மையத்தப் பாக்காமத் தடுத்துப் போட்டன் சீ…” என்று வேதனைப் பட்டுக் கொண்டான்.
பஸீராவின் நெஞ்சில் கனன்று கொண்டிருந்த துன்பத் தீயில் பஸீலின் வார்த்தைகள் எண்ணெய் வார்த்தன.
“எங்கட மாமா, என்மேல உயிரையே வச்சிருந்தார். நான் அவர்ர மையத்தப் பாக்காம உட்டது, இன்டைக்கும் எனக்கு எவ்வளவோ துக்கமாத்தானிருக்கு. நாம போறல்ல என்டு நீங்க சொல்லையுந்தான் நான் பேசாம இருந்த.” பஸீராவின் விழிகளுக்குள், ‘பொசு பொசு’ வென்று ஊறி வந்த கண்ணீர் இமைக் கரைகளை யும் தாண்டி வெளியிலும் பொசியத் தொடங்கியது.
“நடந்தது நடந்து போச்சி… இனி ஒண்டுஞ் செய்ய ஏலா. இப்ப நாம உங்கட மாமாட வீட்ட போவம்… உங்கட மாமா வெண்டி ‘ஈரா’ இருக்கிறத்தால நான் அவவப் பாக்கவோ, கதைக் கவோ ஏலாதுதான்… அவவுக்கிட்ட நீங்களும் விசயங்களச் சொல்லி என்ன மன்னிச்சிக்கச் சொல்லுங்க. நானும் அவட மகனுக்கிட்ட விசயங்களச் சொல்லி என்ன மன்னிச்சிக்கச் சொல்றன்.”
“ஓம்… ஓம்…அப்படியே செய்வம்.”
பஸீலும் பஸீராவும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர்.
இருவரினதும் வதனங்களில் சோகத்தின் மூட்டம் இன்னும் கலையவில்லை.
– தினகரன் வாரமஞ்சரி, 1998 ஜுலை 19.
– சாணையோடு வந்தது… (சிறுகதைத் தொகுதி), முதற் பதிப்பு: ஆகஸ்ட் 2007, முகாமைத்துவ தொழில்நுட்பக் கல்லூரி, இலங்கை.