அந்தராத்மாவின் ஆட்டம்

0
கதையாசிரியர்:
தின/வார இதழ்: தினமணி
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: August 4, 2016
பார்வையிட்டோர்: 10,771 
 

“டக்கரடக்கரடக்கர”

அந்தரத்தில் அந்தக் குழந்தை கயிற்றில் மிதந்தபடி வித்தையாடிக் கொண்டிருக்க கீழே குழந்தையின் தாயார் – அப்படித்தான் இருக்க வேண்டும் – ஒடிசலான உடல் அமைப்போடு சர்க்கஸ் பெண்ணின் உடையுடன். பம்பைக் கொட்டு ஒன்றை கழுத்தில் தொங்கவிட்டு தாளம் தப்பாமல் அடித்துக் கொண்டிருந்தாள்.

“இப்படி ஒரு காலை நேரத்தில், நட்டநடு வீதியில் அதுவும் பஸ் ஸ்டாண்டில் இந்த கூத்தை நடத்தவிடலாமா? பச்சை மண்ணை அந்தரத்தில் ஆடவிட்டு எப்படி ரசிக்க முடிகிறது?’ தலையை குலுக்கிக் குலுக்கி பதிவான காட்சிப் படத்தை அழிக்க முயற்சித்தார் பெருசு. ஆனால் கண்ணெதிரே ஆட்டம் தொடர்ந்து கொண்டிருந்தது.

அந்தராத்மாவின் ஆட்டம்தரையில் விரித்திருந்த நைந்த சமுக்காளத்தில் மேல்சட்டையில்லாமல் ஓர் ஆண் பல கலராலான பேண்ட் அணிந்து பல்டி மேல் பல்டியடித்தபடி கூட்டத்தின் சேர்க்கையினை அதிகப்படுத்தினான். அதோடு தாயார் பெண்ணின் தாளத்தோடு சேராமல் தனித்து ஒலிக்கும்படியான ஓசையில் எவர்சில்வர் சாப்பாட்டுத் தட்டு ஒன்றை ஆள்க்காட்டி விரலில் சுழலச் செய்தும், ஒரு குச்சியால் அடித்து அதிரச் செய்தபடியும் கூட்டத்தை நகரவிடாத ஒருமையினை அமைத்தான்.

தேனிக்கு புது பஸ் ஸ்டாண்ட் வந்த பிறகு மொபசல் பஸ்கள் எதுவும் ஊருக்குள் வருவது கிடையாது. ஒன்றிரண்டு டவுன் பஸ்கள் மட்டும் முக்கால் மணி நேரத்திற்கு ஒன்று எனும் கணக்கில் போக்குவரத்துக்கு அனுமதித்து இருந்தது ஆர்டிஓ அலுவலகம். அதுவும் அரதப் பழைய வண்டிகளை அனுப்புகின்றனர். இரவு பத்து மணிக்கு மேல் அதுவும் கிடையாது. கிட்டத்தட்ட முப்பதாயிரம் பொதுஜனங்கள் வசிக்கும் ஒரு பகுதி கேட்பாரற்றுக் கிடக்கிறது. இரவு நேரத்தில் போக்குவரத்து இல்லாததால் வெளியூரில் படிக்கும் பிள்ளைகள், திருப்பூர், கோவை பகுதியில் வேலைபார்க்கும் ஆண்-பெண்கள் மிகவும் சிரமத்திற்குள்ளாக நேரிடுகிறது. எம்எல்ஏ வந்து நின்று போராடியும் காரியம் நடக்கவில்லை. ஆட்டோக்காரர்களுக்கும் மினி பஸ்கார்களுக்கும் நல்ல சவாரி.

தேனி- அல்லிநகரம் நகராட்சிக்கு தாய்க்கிராமம் அல்லிநகரம். கடைசிக் காலத்தில் தாயைத் தவிக்கவிட்டது போல துண்டுபட்டுப் போனது ஊர். இதில் பெருசு போன்ற வயசாளிகளுக்கு மிக்க வருத்தம்.

பெருசு, பேரப்பிள்ளைகளைப் பார்க்க வாரந்தோறும் பெரியகுளம் போவது வழக்கம். முன்னெல்லாம் வீட்டிலிருந்து எந்த நேரம் வந்து ஸ்டாண்டில் நின்றாலும் திருச்சி, திண்டுக்கல், கோயம்புத்தூர், திருப்பூர், கரூர், சேலம், சென்னை என அத்தனை பஸ்களும் அடுத்தடுத்து வந்து நின்று போகும். எல்லா வண்டிகளுமே பெரியகுளம் கடந்துதான் செல்லுமென்பதால் அவருக்குக் கவலையில்லை. வரும்போதும் நடுச்சாமம் கடந்தாலும் பிரச்னையில்லை. எல்லா வண்டிகளுமே திரும்பவும் வரும். ஆனால், இப்போது ஊருக்கு சம்பந்தமில்லாமல் பைபாஸ் பக்கம் புது பஸ்

ஸ்டாண்ட் கட்டிவிட்டதால் மூணு கிலோமீட்டர் தள்ளி, அதும் பழைய பஸ்ஸ்டாண்ட் போய் இன்னொரு வண்டிபிடித்துப் போக வேண்டும். அல்லது ஆட்டோதான். அரைமணி நேர பயணத்திலிருந்த பெரியகுளம், பஸ்சுக்காக மட்டும் பல மணி நேரம் காத்து நிற்க வேண்டிய சூழ்நிலை ஆகிப் போனது. காத்து நிற்பதாலேயே பல கண்றாவிகளை கண் கொண்டு பார்க்கவும் வேண்டியிருக்கிறது. தினமும் எவனாவது தண்ணியைப் போட்டுக் கொண்டு வந்து வெட்டிநாயம் பேசிக் கொண்டிருப்பான். அதனைக் காது கொடுத்துக் கேட்பதற்குள் அவனது போதை தனக்கு ஏறிவிடும்.

அப்படியில்லையானால் இந்த மாதிரி சர்க்கஸ், சவுக்கை எடுத்து ரத்தம் வழிய வழிய உடம்பில் அடித்து தானம் கேட்பது என்று எதானாச்சும் கருமாயத்தைப் பார்த்துத் தொலைக்க வேண்டிருக்கிறது. இன்னைக்கி கடவுள் இதப் பார்க்க விட்டுவிட்டான் போலிருக்கிறது. எதுக்கு இப்படி சிறுபிள்ளைகளைப் போட்டு சித்திரவதைப்படுத்துகிறார்கள். ஓட்டலில் கடைகளில் வேலை பார்க்கும் பிள்ளைகளைக் கேள்வி கேட்கும் அரசாங்கம் இதை மட்டும் எப்படி விட்டது. ஏழு எட்டு வயசு இருக்குமா… அப்படியே சின்னவன் மகள் சாவித்திரியை ஞாபகப்படுத்துகிறது. கயத்தில் ஆடுகிறது இந்தக் குழந்தை. அங்கே இன்னமும் சாவித்திரிக்கு தானாக பாவாடை சட்டை போடத் தெரியவில்லை. பள்ளிக்கூடம்போக, பல்லு விளக்குவதிலிருந்து அத்தனையும் ஆள் போட்டுச் செய்ய வேண்டியிருக்கிறது.

இதுக்காகவே கிழவியை அங்கேயே வைத்துக் கொண்டார்கள். வயசான காலத்தில் இங்கே இருந்து புருசனைக் கவனியாமல் கூப்பிட்ட வேகத்தில் ஓடிப்போனாள் சிறுக்கி. பேரப்பிள்ளைகள் பாசம் அப்பிடி இழுக்கிறதாம்.

“”பாசத்துல ரொம்பவும் சிக்கீராத வழுக்கீரும். ஆமா, எமெங்கிட்ட இருக்கறதும் பாசக்கயறுதா. பட்டுன்னு எடுத்து வீசிறப் போறான்”

கிழவியோடு கோபம் வந்து அவளோடு சரிக்குச் சரி மல்லுக்கட்ட முடியாத சந்தர்ப்பத்தில் இயலாமையில் இப்படிச் சொல்வது பெருசுக்கு வழக்கமாகியது.

“”இந்த எமேங்கிட்டக்க இருந்து வேற எந்த எமெ வந்து கூப்புட்டுக்குவான். அம்புட்டுத்தகிரியம் இருக்கா அவனுக்கு..” பெருசின் தலையில் குட்டி

கிழவி ஒரு சிரிப்புச் சிரிப்பாள். அதற்காகவே அவளைப் பொழுதூக்கும் சொல்லிக் காட்ட வேணும் போலிருக்கும்.

இன்னமும் பஸ் வந்தபாடில்லை. வெள்ளைக்கலரில் ஷேர் ஆட்டோ வந்து நின்றது. “”பெர்சு, பெரியகுளமா?” டிரைவர்மெனக்கிட்டு தலையை வெளியில் நீட்டிக் கேட்டான். வேறு பலர் ஏறினார்கள். இவர் இல்லையென தலையசைத்தார். அதுபோனதும் அடுத்த ஒருநிமிடத்தில் இன்னொன்று. தள்ளி நின்று கொண்டார். ஒவ்வொரு ஆட்டோவுக்கும் பதில் சொல்ல முடியாது.

பொதுவாகவே பெருசு தனியார் வாகனங்களில் ஏறுவதைத் தவிர்ப்பார். உயிர்ப்பயம் என்பதற்கு மேல் அரசுக்கு குடிமகன் செய்யும் கடமை, தனது பணம் தனியார்க்குப் போகக் கூடாது என்பதுதான். பிள்ளைகளோடு பிரயாணம் மேற்கொள்கிற போதுதான் சிலசங்கடங்கள் வரும் அதிலும் பெரியவனை தன் போல திருத்தியிருந்தார். சின்னவன் வேகமெடுத்தவன் புரிந்து கொள்ளும் தன்மையில்லை.

“”பாருங்கய்யா, எத்தன ஆட்டா பெரிய கொளத்துக்கு சண்டிங் அடிக்கிது பூராமே அவுஸ் புல்லுதே

ஒரு நாலஞ்சு பஸ் சேந்தவாக்கில விட்டா, சனங்களும் செரமமில்லாம போய் வருவாங்க, கவர்மெண்டுக்கும் நாலு காசு போகும். வளர்ச்சி வளர்ச்சின்னு பேசறவங்க, சனங்களோட சவுகரியம்தா வளர்ச்சிங்கறத புரிஞ்சிக்காம மொதலாளிகளொட வளர்ச்சிதான் வளர்ச்சின்னு மொக்கையா நடக்கறானுக” அவரோடு நின்றிருந்த ஓர் இளைஞன் அங்கலாய்த்தான்.

பெருசு அவனைப் பார்த்துப் புன்னகைத்தார்.

மீண்டும் “டகரடகரடகர’ சத்தம். இப்பொது அந்தச் சிறுமி கும்ப ஆட்டத்தைத் துவக்கி இருந்தாள்..

அந்தரத்தில் கட்டிய கயிற்றில் வெறும் காலிலும், செருப்பணிந்த நிலையிலும் பயணித்த அச்சிறுமி, தலையில் ஒன்றன் மேல் ஒன்றாய் மூன்று கும்பங்களை அடுக்கி அவை கீழே விழாமல் ஒருதரம் நடந்து காண்பித்தாள். அதுமட்டும் போதாது, எவர்சில்வர்தட்டைப் போட்டு அதனை கயிற்றில் நிறுத்தி அந்தத் தட்டின் மேல் நின்று கயிற்றில் பயணிக்க வேண்டும் என கீழிருந்து ஆண் கட்டளையிட்டான். தாய்ப் பெண் “”செய்வா செய்வா” என உரைத்துவிட்டு தன் வசமிருந்த உருமியால் டண்டனட்டு. டண்டனட்டு.டண்டனட்டு என ஒலித்தாள்.

“”எல்லாரும் கைதட்டுங்க” ஆண் கேட்டுக் கொண்டதும் கூட்டத்தார் கைதட்டினார்கள்.

மரப்பாச்சி பொம்மையைப் போல அந்தச் சிறுமி முகத்தில் எந்தவிதமான உணர்ச்சியும் காட்டாமல் கவட்டைக் குச்சியிலிருந்து எழுந்து நின்றாள். தலையில் கும்பங்கள் அடுக்கியபடி இருந்தன. கீழிருந்து ஆண், தட்டை எறிந்தான். லாகவமாய் அதனைப் பிடித்த சிறுமி, கழுத்தை அசைக்காமல் உடம்பை மட்டும் கீழிறக்கி தட்டை கால்களில் பொருத்திக் கொண்டாள்.

உள்புறம் தள்ளி நின்ற பெருசு முன்னால் வந்தார்.

“”அட, எடுவட்ட சனியனே, ஒனக்கு இது தேவயா, காலம்பற எந்திரிச்சமா, மூஞ்சியக் கழுவி பல்லத் தேச்சு பள்ளியொடம் போனமான்னு இல்லாம, உச்சி வெய்யில்ல இப்பிடி ஒசரத்தில நிண்டு உசுருக்கு பங்கம் வச்சு வித்த காட்ட எந்தக் கடவுள்அனுப்பிச்சு வச்சான்?”

பெரியவனின் மகனும் இப்படித்தான். இங்கிருந்து கிழவியோ தானோ போய்விட்டால் வேறு யாரிடமும் போகமாட்டான். ஊருக்கு வந்து சேரும் மட்டும் அவனைத் தூக்கிச் சுமந்து இடுப்பும் தோள்பட்டையும் வலியெடுத்துப் போகும். வீட்டுக்கு வந்து படுத்தால் அந்த வலி அத்தனை சுகமாய் இனிக்கும். வலி சுகமானது என்பதை அந்த நாளில்தான் பெருசும் கிழவியும் ஒருவருக்கொருவர் சொல்லிக் கொண்டனர். பிள்ளைகளைப் பெற்ற போது அவர்களைக் காலமெல்லாம் தூக்கிச் சுமந்தபோது கூட இத்தனை ருசி கிட்டவில்லை. பேரப் பிள்ளைகளிடம் மட்டும் எப்படி இத்தனை தித்திப்பு .

மூத்தவனின் வீட்டுவாசல் படிக்கு ஐந்துபடிகள். சாயங்கால வேளையில் அந்த வாசலில்தான் உட்கார்ந்து பேசுவார்கள். அத்தனை நீளமானது. உயரம் வழக்கமான முக்காலடி, அல்லது ஒரடிதான் இருக்கும். மேல்படியிலிருந்து கீழ்படி வரைக்கும் ஒவ்வொருபடியாய் குதிப்பதுதான், பெரியவனின் மகனுடனான முக்கிய விளையாட்டு.

அப்படிக் குதிக்கிறபோது கிழவியோ பெருசோ பக்கத்திலிருக்க வேண்டும். அம்மா, அப்பாவை விரும்பமாட்டான். அவர்கள் சலித்துப் போவார்கள் என்பது காரணமாய் இருக்கலாம். அதுமட்டுமில்லாது, ஒவ்வொரு குதிப்புக்கும் அவனோடு சேர்ந்து உற்சாகக் குரல் எழுப்புவது முக்கியம்.

“”யே… தம்பி குதிச்சுட்டாண்டா… இன்னொரு குதி, குதி, சூப்பரு….” முதல்படி, இரண்டாம்படி, மூன்றாம்படி வரை உற்சாகக் குரல் ஓங்கி ஒங்கி வரும், நாலாவது படி வருகையில் வடிந்துவிடும். மீண்டும் முதலிலிருந்து, துவங்கும். இதைக் கலைப்பதற்கென சில வாண்டுகள் தெருவில் திரிவான்கள். முதல்படியிலிருந்து இரண்டாவதுபடிக்கு பேரன் குதிக்கிறபோதே கலகக்காரன், நேரே ஐந்தாவது படிக்கு குதித்து பேரனின் உற்சாகத்தைக் குலைத்திடுவான். அதனை ஈடு கட்ட கிழவி, நிலைப்படியிலிருந்து பேரனை அச்சுத்தூக்காய்த் தூக்கி கீழே “டம்’ மென இறக்கிவிடுவாள். “”தம்பிப் பய தாண்டிட்டான்டா”

அவ்வளவுதான். பிள்ளைக்கு சந்தோசம் தாங்க முடியாது. “ஹேஹே’ என கும்மாளமிட்டுக் குதிப்பான். அது தரையில்தான் என்றில்லை. தாத்தாவின் மடியாய் இருக்கலாம், அப்பத்தாளின் இடுப்பாய் அமையலாம். அவனோடு சேர்ந்து நாமும் குதிக்க வேண்டும். குறைந்தபட்சம் சத்தமாவது காட்டவேண்டும். அதுதானாகவே வந்துவிடும். சிலசமயம் அவனையும் மீறின குரலாய் ஒலித்ததும் உண்டு. அதற்கப்புறம் நமக்கு அவனைக் கொஞ்சத் தோணும். முகத்தில் மட்டுமல்லாது வயிறு, கைகால், உச்சந்தலை என துணி மூடாத பகுதிகளில் வெற்றுடம்பில் முத்தச் சண்டை நிகழும். பதிலுக்கு பேரப்பிள்ளைகளிடமிருந்தும் முத்தக் கணை வரும். ஆனால் இங்கிதமெல்லாம் அவர்களிடம் பார்க்க முடியாது. அதும் சின்னவனின் மகனுக்கு முத்தமிடவே தெரியாது. ஆச்சிக்கு ஒண்ணு, அம்மாய்க்கு ஒண்ணு என்று முகத்தை நீட்டினால் தனது கிளிப்பல்லால் கடித்து வைப்பான். நினைக்கும்போதே பெருசுக்கு சிலிர்த்தது. உடனே ஒரு கடி பெற வேணும் போல உடலும் மனமும் தவித்தது.

“”தாத்தா”…

அந்தரத்தில் ஆடிக் கொண்டிருந்த சிறுமி தனது ஆட்டத்தை முடித்துவிட்டு தரையில் இறங்கி தான் ஆடிய தட்டை கையிலேந்தி வந்தாள்.

பெருசுவுக்கு என்ன செய்வதென விளங்காமல் திகைத்தார். திடுமென அச்சிறுமியைத் தூக்கிக் கொஞ்சலானர். பஸ் ஸ்டாண்டிலிருந்த அத்தனைபேரும் அவரை அதிசயமாய்ப் பார்த்தனர்.

– பெப்ரவரி 2015

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *