மைந்த, தூங்கி விழாதே, நல்ல ஸ்வாரஸ்ய மான கதை. இலங்காத்வீபத்தை ஆண்ட முதல் அரசியின் காதல்களைப் பற்றியது. ஆகா, “காதல்” என்றதும் திடீரென்று விழிப்பு வந்து விட்டதே உனக்கு! கேள்.
அநுராதபுர நகரம் கிறீஸ்து பிறப்பதற்குச் சில ஆண்டுகளுக்கு முன்பு…..
சந்திரன் பாரபட்சமின்றி எல்லோருக்கும் சம மாகத் தன் வெண்ணிலாவைப் பரப் பினாலும் மனிதர்கள் அதை வெவ்வேறு விதமான உணர்ச்சிகளுடன் ஏற்றுக்கொள் கிறார்கள். நிலவைக் கண்டதும் உன் மனத்தில் கொடி போன்ற அழகிய கன்னிகைகளைப் பற்றிய நினைவு உண்டாகிறது. எனக்கு நித்திரை வருகிறது.
நீ இளவல், நான் வயோதிபன்….. அன்று பௌர்ணமி. அந்தப்புரத்து உப் பரிகையில் அரசனின் வரவுக்காகக் கதவடைக்காமல் பார்த்திருந்த அரசியின் மனத்தில் இனிமையும் வேதனையும் கொண்ட காதல் நினைவுகளை அந்தப் பால் நிலவு தோற்றுவித்தது. புதிதாக அரண்மனைக் காவலுக்கு வந்திருந்த சிவபாலன் என்ற தமிழ் இளைஞனின் பெண்மை தோய்ந்த யௌவனத் தோற்றத்தைத் தியானித்து அடிக்கடி நெடுமூச்செறிந்தாள். அவளுடைய நரம்புகளில் என்றும் இல்லாத ஓர் இன்பக் கிளர்ச்சி நெளிந்து துடித்தது.
அரண்மனையின் மறுகோடியில் தன் பிரத்தியேக அறையில் மதுவெறியில் புரண்டு கொண்டிருந்த அரசனோ புத்த விகாரைகளை அடித்துத் தரைமட்டமாக்கிக் களியாடுவதற்கே இந்த நிலவு ஏற்றது என்று நினைத்தான். ஆனால் நகரிலோ சுற்றுப்புறங்களிலோ புத்த விகாரைகள் இல்லை; எல்லாம் தகர்த்தெறியப்பட்டு விட்டன. அது அவனுக்குப் பெரிய ஏமாற்றமாக இருந்தது.
“கொண்டு வா இன்னும் ஒரு கிண்ணம்” என்று தயாராக நின்ற பணிப்பெண்ணை நோக்கி இரைந்தான். நினைத்த மாத்தி ரத்தில் இடிப்பதற்குப் புத்த விகாரைகள் இல்லாமற் போகவே, போதை ஏறிய அவன் மனம் அரசியை நோக்கித் திரும்பியது.
இந்த அரசனும் அரசியும் அரசுரிமைக்கு எவ்வித உரிமையும் இல்லாமல் வெறும் மிருக பலத்தைக் கொண்டு அரசுகட்டில் ஏறியவர்கள். மகாதீசன் என்ற அரசன் மரணத்தறுவாயில் இருந்த பொழுது கோரநாகன் என்ற உபபடைத்தலைவன் தன்வசம் இருந்த சேனையைக்கொண்டு அரண்மனைக் காவலை மடக்கிச் சிங்காசனத்தைத் தன் வசமாக்கிக் கொண்டான். கோரநாகனும் அவன் மனைவியான அநுலாவும் தேசத்தவரின் விருப்பு வெறுப்பை நோக்காமல் பலவந்தமாகவே அரசனும் அரசியுமாகிப் பட்டா பிஷேகம் செய்துகொண்டனர்.
அரசபரம்பரையில் தோன்றாத அவர்களை நாடு ஏற்றுக் கொள்ள மறுத்தது. பொதுஜன அபிப்பிராயத் தலைவர்களான புத்த பிக்குகள் அங்கங்கே மக்களிடையே குரோதத்தைப் பரப்பி வந்தனர். அதையறிந்த கோரநாகன் புத்த விகாரைகளை நாசம் செய்து பிக்குகளைச் சித்திரவதை செய்து சிறையிடத் தலைப் பட்டான். இயற்கையாகவே குரூர உள்ளம் படைத்த அவனுக்கு இந்தக் கைங்கரியம் மிக உவப்பாகவே இருந்தது. பிரஜைகளிடையே அரசின்மேல் வெறுப்பு வளர்ந்தது.
மைந்த, மறுபடியும் கண்ணயர்ந்து விட்டாயா? எழுந்திரு. காதல் இனிமேல்தான் ஆரம்பமாகிறது. இதுவரையும் கதைக்கு நிலைக்களனான நிலைமையைச் சொன்னேன்.
அநுலா, சிவபாலன் என்ற அரண்மனைக் காவற்காரனை நினைத்து உருகினாள் என்று சொன்னேன் அல்லவா? அவளுக்கு அரசனுடைய காதல் இல்லாமல் இல்லை. அரசன் தோற்றத்திலும் உணவிலும் மதுபானம் செய்வதிலும் ஓர் அரக்கன் போலிருந்தான். அவனுடைய காதலும் சண்டமாருதம் போல் கொடியதாகவும் வேகமுடையதாகவும் இருந்தது. அதை அவளால் சகிக்க முடியாமல் இருந்தது. சிலசமயம் மனத்தில் சகிக்கமுடியாத அருவருப்பு உண் டாயிற்று. உடல் கூச்சம் கொண்டது. அரசனுடைய உக்கிரமான மிருகதாபத்தினால் களைப்படைந்த அநுலா மென்மையையும் அழகையும் நாடினாள்.
கோரநாகனுக்கு வாழ்க்கையில் இலட்சியங்கள் மூன்றே; ஒன்று புத்த பிக்குகளை இம்சை செய்வது; இரண்டாவது மது பானம் செய்வது; மற்றது, அநுலாவை இடைவிடாது ‘காதலிப்பது’. இம்மூன்றிலும் அநுலாவுக்கு அபாரமான வெறுப்பு. மனைவியின் கடமை என்ற திரையினுள் இதுகாறும் தன் வெறுப்பை ஓரளவு மறைத்து வந்தாள்.
‘ஆகா! சிவபாலனை அந்தப்புரக்காவலுக்கு மாற்றிக் கொண்டால்’ என்று அவள் சிந்தனைத் தொடர் ஓடியது. அவன் அழகாய் இருந்தான். இளமையாய் இருந்தான். அவளும் இளமை யாய் இல்லாவிட்டாலும், அழகாகவே இருந்தாள். அத்துடன் ஸ்திரி சாகசம் இருக்கவே இருக்கிறது. சந்தர்ப்பம் வேண்டும்.
தேய்த்து மினுக்கிவிட்ட வெள்ளித் தகடுபோல் சந்திரன் நடுவானில் தொங்கிக் கொண்டிருந்தான். மரங்களின் தலைகள் மெருகு கொண்டு மென்காற்றில் சலசலத்தன. திடீரென்று அரசன் வரும் அரவம் கேட்டது. அநுலா மங்கிக் கிடந்த தீபத்தைத் தூண்டி விட்டு, சாளரத்தை மூடினாள். நிலவு வெளியே நின்றது.
அரசன் தட்டித் தடவிக்கொண்டு வேர் அறுந்த நெடு மரம் போல் மஞ்சத்தில் சாய்ந்தான். மதுநாற்றம் அநுலாவின் குடலைக் குமட்டியது. ஆயினும் அவள் அவனை வழக்கத்திற்குப் புறம்பான உபசாரத்துடன் வரவேற்றாள். “அரசே, மிகவும் களைப்படைந் திருக்கிறீர்கள். காலையில் எங்கோ போயிருந்தீர்களே, எப்பொழுது திரும்பி வந்தீர்கள்? தங்கள் வரவை எனக்கு அறிவிப்பதற்குக் கூடத் திராணி அற்றவனாய்ப் போய்விட்டான் என் அந்தப்புரப் பணியாளன்” என்றாள்.
அரசன் தாடியில் வழிந்திருந்த எச்சிலைக் கையால் துடைத்துக்கொண்டு, “ஆ! எங்கே அந்தப் போக்கிலி? அவனை இப்பொழுதே கட்டியணைத்துக் ….. என்ன சொன்னேன்? ஆமாம். அவனைச் சிரச்சேதம் செய்துவிடுகிறேன். இன்று, மதுவில் அதிகப் போதையை ஏற்றிவிட்டான் சண்டாளப் பயல். எங்கே அவன்?” என்று உளறினான்.
“நாதா, இப்படிச் சாய்ந்து கொள்ளுங்கள். அவன் யாராவது அரண்மனைத் தாதியருடன் ஸரசமாடப் போயிருப்பான். வேறு என்ன வேலை அவனுக்கு?”
“ஹ! என்ன சொன்னாய்? இதோ அவனை ….”
“அதற்காக அவனைத் தண்டிக்க வேண்டாமே பாவம்! அவனை வேறு எங்காவது மாற்றிவிட்டு, அந்தப்புரத்துக்குச் சாதுவும் பணிவுள்ளவனுமான ஒருவனை வைத்துவிட்டால் போகிறது.”
“சரி சரி சரி சரி. அநுலா, உன் இஷ்டம். என் ராணி யல்லவோ? ஹ ஹா ஹா ஹா ஹா, நாளையே உனக்கு வேறு பணியாள். சிவபாலன் எப்படி?”
அநுலாவின் முகத்தில் அலட்சிய பாவம் தோன்றியது. “யாரா யிருந்தால் என்ன? அடக்கமும் பணிவும் வேண்டும். அவ்வளவு தான்.”
தன் இஷ்டம் இவ்வளவு இலகுவில் நிறைவேறியதைக் கண்டு அவள் மிகவும் ஆச்சரியப்பட்டாள்.
கோரநாகன் அநுலாவின் மடிமேல் தன் தலையை நகர்த்தி வைத்தான். தாபம் மேலிட்டது. “அநுலமகா தேவி, என்னை மகிழ்வி” என்று கெஞ்சினான்.
அவனுடைய காவிபடிந்த கோரமான பற்களும், வாயின் நாற்றமும், தசை பிதுங்கும் பூதாகரமான உடலும் அவளுக்குச் சொல்லொணா வெறுப்பை உண்டாக்கின. இருந்தும் அதை அடக்கிக் கொண்டு அன்றிரவு அவனை விலைமகள் போல் மகிழ்வித்தாள்.
மகனே, ஏன் முகத்தைச் சுழித்துக் கொள்கிறாய்? இப்படி யான அசுர காமம் உலகிலே சர்வ சாதாரணம். மணந்த புதிதில் இனிய காதலாய் ஆரம்பித்த உறவு நாளடைவில் இப்படி ராக்கத மாய்ப் போவது பலருடைய அனுபவம். உனக்கு ஒன்றும் தெரியாது. நீ இளவல். கனவு காண்பவன். மேலே கேள்.
மேற்கூறிய சம்பவம் நடந்து சில தினங்களுக்குப் பிறகு ஒரு நாள் பொழுதுசாய இரண்டு நாழிகைக்கு முன் காலையில் தொலையூருக்குச் சென்ற மன்னன் திரும்பிவரவில்லை. அரண்மனை நிசப்தமாக இருந்தது.
அந்தப்புரத்தில் இருந்த அரசிக்கு இளம் பணிப்பெண்ணின் சேவைகள் கசப்பாக இருந்தன. அவளுடைய ஸ்பரிசம் மென்மை யாக இல்லை. அவள் தொடுத்த மாலைகள் அழகாக இல்லை. அவள் சேர்த்த சந்தனக்குழம்பில் வாசனை இல்லை. இப்படி ஒவ்வொன் றாகக் குறைகூறி ஈற்றில் “போடி, நானே எல்லாம் செய்து கொள் கிறேன். போகும்பொழுது வாசலில் சிவபாலன் நின்றால் அவனை இங்கே வரச்சொல்” என்று கூறி, பணிப் பெண்ணை அனுப்பி விட்டாள். பணிப்பெண் ஆச்சரியப்படவில்லை. சிவபாலன் அந்தப் புரத்தில் அரசியுடன் தனித்திருந்து பேசுவதும் குற்றேவல் புரிவதும் சில தினங்களாகச் சகஜம். அரண்மனைச் சிப்பந்திகள் இதைப் பற்றி ரகஸ்யமாகத் தங்களுக்குள் ஏதேதோ பேசிக்கொண்டனர்.
சிவபாலன் அந்தப்புரத்துக்குள் நுழைந்தபொழுது அநுலா சாளரத்தின் அருகில் மரங்களின் புறத்தே தாழும் சூரியனைப் பார்த்துக்கொண்டு நின்றாள். சாளரத்தருகே கரும்பட உருவமாகத் தோன்றிய அவள் உடல் அமைப்பின் லாவண்யத்தைக் கண்டு சிவபாலன் ஒருகணம் திகைத்து நின்றான். விம்மிய மார்பின் பாரத்தைச் சுமந்து நின்ற இடை முறிந்து விடும்போல் அவ்வளவு மெல்லியதாக இருந்தது.
அரவம் கேட்டு அநுலா கால் மெட்டிகள் இனிமையாக அனுங்க அவனை நோக்கித் திரும்பினாள். “ஆ! வந்தாயா? உன்னைக் கண்டபிறகுதான் என் மனத்தில் சிறிது உற்சாகம் ஏற்படுகிறது.”
“அம்மணி, நான் பணியாள்…”
அநுலா குறும்பாகப் புன்னகை செய்தாள்.
“பணியாளுக்கு அழகு, இளமை இல்லையோ?”
சிவபாலன் முகத்தைக் கவிழ்த்துக் கொண்டான். அவனுடைய நிலையை அறிந்த அநுலா, “அதுசரி; மதுரையில் பூவாணிச்சிகள் மாலை தொடுக்கும் பாணி என்று பிரமாதமாகப் பேசிக் கொண்டாயே; உன் ஊரும் மதுரைதானே? இந்தப் பூவைக் கொஞ்சம் தொடேன்” என்று கெஞ்சல் பாவம் தோன்றும்படி கட்டளை செய்தாள்.
சிவபாலன் மலர்த்தட்டின் முன் உட்கார்ந்து, அதில் குவித்து வைத்திருந்த பூக்களை கையால் கிளறிவிட்டான். வாசனை ‘கம்’ என்று பரவியது. அநுலா அணிந்திருந்த சவ்வாதின் வாசனையும் அதில் விரவி அவன் நெஞ்சில் ஒரு கணநேரத்துக்குச் சொல்ல முடியாத ஒரு தவிப்பை உண்டாக்கியது. அநுலா இலேசாக மஞ்சத்தில் சாய்ந்து தலையைக் கையில் தாங்கிக் கொண்டாள்.
“ஆமாம். அன்று அல்லி ராணியின் கதை சொன்னாயே. அவள் தன்னந்தனியேதான் ராஜரிகம் செய்தாளா? அர்ஜுனர் தலையிடவில்லையா?”
சிவபாலன் தன் முகத்தைச் சிறிது நிமிர்த்தி, “அர்ஜுனரைக் காதலர் என்ற அளவில்தான் வைத்துக்கொண்டாள். அவள் தன் ராஜதத்துவத்தில் எள்ளளவும் யாருக்கும் விட்டுக் கொடுக்கவில்லை. ஆகா, அவளுடைய ஆணையின் கீழ்க் குடிகள் எவ்வளவு சந்தோஷமாக இருந்தார்கள்!” என்று கூறினான்.
அநுலா மௌனமானாள். பெண்கள் ராஜரிகம் செய்வதைப் பற்றி அவள் சிந்தனை சென்றது. இலங்கையில் மட்டும் இதுகாறும் பெண் ராஜ்யம் தோன்றவில்லை. தோன்றினால்….
சிவபாலன் அவளைக் கடைக்கண்ணால் கவனித்தான். பிறகு மலர்களை வேகமாக எடுத்து மடித்து நாரில் செருகிக்கொண்டு, தனக்குத்தானே பேசிக் கொள்பவன்போல, மெதுவாக, “இலங்கை யிலும் ஒரு பெண்மணி சிங்காசனம் ஏறினால் கலவரங்கள் ஓய்ந்து நாடு நலம்பெறும்” என்றான்.
அநுலா திடுக்கிட்டு, நிமிர்ந்து உட்கார்ந்துகொண்டு, “என்ன சொன்னாய்? என்ன சொன்னாய்?” என்று பதறினாள்.
தான் அநுமானித்ததில் பிழை இல்லை என்பதை உணர்ந்து கொண்ட சிவபாலன், மிகச்சமாதானமாகவே பதில் சொன்னான். “அதில் வியப்பு ஒன்றும் இல்லையே! அரசருக்குச் சந்ததி இல்லாத தனால் அவருக்குப் பிறகு தாங்களே செங்கோல் செலுத்தவேண்டி ஏற்பட்டாலும் ஏற்படலாமல்லவா?”
உருவம் இல்லாத தன் எண்ணங்களைச் சிவபாலன் வார்த்தைகளாக்கிவிட்டது அரசியை வியப்புறச் செய்தது. மனத்தில் கொஞ்சம் பயமாகவும் இருந்தது. தீபத்தைக் கண்டு கவர்ச்சியும் மருட்சியும் ஒருங்கே அடையும் குழந்தைபோல அவள் தடுமாறினாள். சம்பாஷணையின் போக்கை மாற்றிவிட நினைத்து, “அது கிடக்கு, அரசர் இன்று எங்கே போனார் என்பது உனக்குத் தெரியுமா?” என்று கேட்டாள்
“தெரியவில்லை , அம்மணி.”
அநுலா மறுபடி மௌனமாக அடிக்கடி நெட்டுயிர்த்தாள். அவளுடைய கைவளைகள் எதற்கோ ஏங்குவன போல் மெல்லென அரற்றின. மங்கும் ஒளியில் சிவபாலனின் முகம் மெருகிட்டதுபோல் ஜ்வலித்தது. அநுலா அவனை இமை கொட்டாமல் நோக்கினாள். நெட்டுயிர்த்தாள். அவளுடைய கண்கள் விரகத்தால் பளபளத்தன.
சிவபாலன் ஒன்றையும் விடாமல் கவனித்து மனத்தில் கொஞ்சம் தைரியத்தை வருவித்துக்கொண்டு, “அம்மணி, தங்களை ஏதோ துயரம் வாட்டுகிறது போல் தெரிகிறது,” என்றான்.
அநுலா எழுந்து சிவபாலன் இருந்த இடத்திற்கும் சாளரத் திற்கும் இடையில் நின்று கொண்டாள். கதிரவனின் கடைசிக் கிரணங்கள் சாளரத்தை விட்டு இன்னும் அகலவில்லை. அநுலா மிக மெல்லிய துகிலை அணிந்திருந்தாள். முகத்தில் மந்தகாசமும் துயரமும் கலந்தது போன்ற ஒரு பாவத்தை வருவித்துக் கொண்டு சொன்னாள்: “ஒவ்வொருவருக்கும் அவரவர் துயரம்… மதுரையில் விட்டு வந்த காதலியைப்பற்றி உனக்குத் துயர். எனக்கு…”
“அம்மணி …”
“காதல் துயரத்தின் தாய் என்பதை நீ அறியாயோ?”
சிவபாலன் பதில் கூறவில்லை . திடீரென்று அவனுக்கு ஆழம் தெரியாத மடுவில் இறங்கிவிட்டதுபோல் பெரும் பயமாக இருந்தது. அநுலாவின் குரலில் தோன்றிய ஒரு நடுக்கம், கண்களிலே தோன்றிய குழைவு, தன்னை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கும் அபாயத்தின் முதல் ஸ்பரிசம் போல் அவன் மனத்தில் பட்டது. தனியே இருந்து இதைப்பற்றி ஆழ்ந்து யோசனை செய்யவேண்டும் என்று நினைத்தான்.
“அம்மணி, என்னை மன்னியுங்கள். தீபம் ஏற்றும் நேரமாகி விட்டது” என்று சொல்லிப் பதிலே எதிர்பாராமல் வேகமாக வெளியே சென்றான்.
அதன்பிறகு அரண்மனையில் தீபங்கள் ஏற வானில் தாரகைகள் முளைத்தன.
அரசன் அரண்மனை அடைந்தபொழுது சந்திரன் உதிக்கும் சமயமாய் விட்டது. அன்று போன காரியம் ஜயமாகவில்லை. அத்துடன் பிரதான ஊர்கள் சிலவற்றில் அவனுக்கு எதிராகக் கலகங்கள் தோன்றியிருக்கின்றன என்ற செய்தியும் அன்று கிட்டி யிருந்தது. அதனால் அவன் மனம் குழம்பிச் சினத்துடன் இருந்தான். மறதியை வேண்டி வழக்கம்போல் மது அருந்தத் தலைப்பட்டவன், அன்று கொஞ்சம் அதிகமாகவே அருந்தினான்.
நடு ஜாமத்தில் அவன் அந்தப்புரத்தை அடைந்தபொழுது, கதவு பூட்டிக்கிடந்தது. பல நேரம் கதவில் அறைந்தபிறகுதான் அது திறக்கப்பட்டது, அலங்காரம் எதுவும் இன்றி நித்திரை வழியும் முகத்தோடு காட்சியளித்த அநுலா தன் வெறுப்பை மறைக்க அன்று எவ்விதமான பிரயத்தனமும் செய்யவில்லை. கடமை என்ற முகமூடியை அன்று விலக்கி விட்டிருந்தாள். “அரசே, எனக்கு நிம்மதியே கிடையாதா? சுயமான விருப்பு வெறுப்பு ஒன்றுமே இல்லையா எனக்கு?” என்று கொஞ்சம் கடுமையாகவே கேட்டாள்.
கோரநாகனுக்கு ரௌத்திராகாரமான கோபம் வந்தது. தன்னை மறந்து சாதாரணமான குடிவெறியனைப் போல் மான ஹீனமான தூஷணை வார்த்தைகளைப் பேசினான். அரசியின் எண்சாண் உடம்பு எண்சாணாகவே நின்றாலும், உள்ளம் கூனிக் குறுகிச் சொல்லொணா மானபங்கப்பட்டு நின்றது. ஆனால் அவளுடைய மௌனமான எதிர்ப்பின் உறுதி மட்டும் தளரவில்லை. அரசன் வெறிகொண்டு உறுமினான். இரைந்தான். வைதான். குரல் எடுத்துக் கத்தினான். பலாத்காரம் கூடச் செய்ய எத்தனித்தான். அவ்வளவிற்கும் அநுலா பட்டமரம்போல், சுவாசிக்கும் பிணம் போல் நின்றாள். இருதயபூர்வமான வெறுப்பே பெண் வடிவு கொண்டு நிற்பது போல் தோன்றினாள்.
அரசன் அந்தப்புரத்தை விட்டு அகன்றான்.
மறுநாட் காலை சிறையிலிருந்த மூன்று அரசியற் கைதி களைச் சிரச்சேதம் செய்யும்படி அரசனின் ஆக்ஞை பிறந்தது. அதன் விளைவாக அநுராதபுர நகரிலே ஏற்பட்ட கலகத்தை அரசன் சேனாபலம் கொண்டு ஒருவாறு அடக்கிவிட்டான். அவனுடைய குரூர சுபாபம் அன்று உன்மத்த கதியடைந்திருந்தது.
மைந்த, கோரநாகன் அன்று அநுலாவைச் சிரச்சேதம் செய்யும் படி ஏன் ஆக்ஞை செய்யவில்லை என்று நீ அதிசயிக்கிறாய் அல்லவா? அந்த வினாவுக்கு விடை சரித்திர ஆசிரியர்களுக்கே தெரியவில்லை . எனக்கும் தெரியாது. சாரல் அடிக்கிறது. சாளரத்தை மூடிவிடு.
பகல் முழுவதும் சோர்ந்துபோய் அந்தப்புரத்துக்குள் அடை பட்டுக்கிடந்த அநுலா, நகரில் கலகம் ஏற்பட்டதைக் கேள்வி யுற்றதும் அவசரமாகத் தன்னை அலங்கரித்துக்கொண்டு சிவபாலனை அழைப்பித்தாள். சிவபாலனுக்கு அவளை ஏறிட்டுப் பார்க்கவே கூச்சமாக இருந்தது. அநுலா அவனை ஒருவித அநுதாபத்துடன் நோக்கினாள். அவனுடைய உடலின் வனப்பு அவள் மனத்திற்கு ஓர் எழுச்சியைக் கொடுத்தாலும் அவள் முகம் வாட்டமுற்றே இருந்தது.
“சிவபாலா, திடீரென்று வாழ்க்கை வேம்பாகி நாளை என்ற நம்பிக்கை அற்றுப் போய்விட்டால் என்ன செய்வாய்?”
சிவபாலன் அந்தக் கேள்வி தூண்டில் முள் என்பதை உணர்ந்தானாயினும், அதில் தொடுக்கப்பட்டிருந்த இரையின் கவர்ச்சி அவன் அச்சத்தை வென்றது. “அம்மணி, அரசியாகிய தாங்கள் அப்படிக் கலங்கக்கூடாது. வேம்பும், கரும்பும் நம் கையி லேயே இருக்கின்றன. துணிந்து கருமத்தில் இறங்கினால்தான் கரும்பைக் காணமுடியும்” என்றான்.
அநுலாவுக்கு அவனுடைய வார்த்தைகளின் அர்த்தம் அங்கை நெல்லிக்கனி போல் புலனாயிற்று.
அன்றிரவு அரசனுக்கு வேண்டிய பால், சிற்றுண்டி முதலிய வற்றை அநுலா தன் கையாலேயே சித்தம் செய்தாள்.
நடுயாமம்.
அரசன் தன் பிரத்தியேக அறையில் படுத்துக்கொண்டு மஞ்சத்தில் அங்கும் இங்கும் புரண்டுகொண்டிருந்தான். வெளியே, தங்கத்தகட்டில் ரஸம் பாய்ந்தது போல் சந்திரனை மறைத்துப் புகார் படர்ந்திருந்தது. தொலைவில் நகர் எல்லையில் இருந்து வரும் இணைக் கூகைகளின் உறுமல் நிசப்தமான இரவைக் காலத் துண்டுகளாக வெட்டி வெட்டி வைத்தது.
அரசனுக்குத் தூக்கம் பிடிக்கவில்லை. திடீரென்று அவன் மஞ்சத்தருகில், அநுலா சர்வாலங்கார பூஷிதையாய், சுகந்தம் கமழ கைவளை ஏங்க, வந்து நின்றது அவனைத் திகைப்பில் ஆழ்த்தியது. “நீ யார்?” என்று கேட்கும் தறுவாயில் கூட இருந்தான். அதற்குள் அநுலா நிலத்தில் மண்டியிட்டு அவன் கைகளை எடுத்துத் தன் கண்களில் ஒத்திக்கொண்டு, “நாதா, இந்தப் பாவிக்கும் மன்னிப்பு உண்டா ?” என்று உருகினாள். அரசன் எதிர்ப்பு எதுவும் இன்றி அவள் விரித்த கண்ணியில் வீழ்ந்துவிட்டான். அநுலா, மணந்த அன்றே போல் மோகனமான காதலையும் மதிமயக்கும் அநுராகத் தையும் காட்டி அரசனைத் திக்பிரமை கொள்ளச் செய்தாள்.
சிறிது நேரத்துக்குப் பின் அரசன் அநுலாவைத் தொடர்ந்து அவளுடைய அந்தப்புரத்துக்குச் சென்றான். அங்கே தாயினும் இனிய அன்பு காட்டி, அநுலா அவனுக்குப் பால், பட்சணம் முதலியவற்றை ஊட்டினாள்.
மறுநாள் காலை, அநுலாவின் மஞ்சத்தில் அரசன் பிணமாகக் கிடந்தான்.
அநுலா அவனை நஞ்சூட்டிக் கொன்றுவிட்டாள் என்பது சிவபாலன் ஒருவனுக்குத்தான் தெரியும். அநுலா அவ்விரவின் பிற்பாதியைச் சிவபாலனுடன் கழித்திருந்தாள்.
மைந்தா, உன் மனம் வெம்புகிறதா? ஆகா, சுதந்திரதாகம் எதையும் செய்யத் தூண்டும் சக்தி வாய்ந்தது. அரசாள்வதற்கும் மனம்போனபடி காதல் செய்வதற்கும் அநுலாவுக்குச் சுதந்திரம் வேண்டியிருந்தது. கதை இன்னும் இருக்கிறது கேள்.
ஆனால் அவள் நினைத்தபடி உடனே அரியணை ஏற் முடிய வில்லை. இறந்துபோன மகாதீசனுடைய மூத்த மகன் குடதீசனை நாடு வரித்தது. சேனையின் பலமும் அவன்பால் சார்ந்து நின்றது. அநுலாவால் அவன் அரசனாவதைத் தடுக்க முடியவில்லை .
சிவபாலனுடைய காதலுக்காகவே அநுலா தன் கணவனைக் கொன்றாள் என்றும், காதலில் திருப்தி ஏற்பட்டுவிட்டால் அவளிட மிருந்து தீங்கு ஒன்றும் வராது என்றும் நம்பி, குடதீசன் அவளை அரண்மனையிலேயே வசிக்க அனுமதித்தான். ஆனால் புதுமோகப் புயலின் வேகம் ஓரளவு தணிந்ததன் பின் அநுலா மறுபடி அரசி யாவதைப் பற்றிச் சிந்திக்கலுற்றாள். சிவபாலனும் ரகசியமாக அவளுடைய ஆசையை மேலும் கிளறிவிட்டான். இலங்கையின் முதல் அரசியாகிச் சரித்திரத்தில் இடம் பெற்றுவிட வேண்டு மென்பது அவளுக்குத் தவிர்க்கமுடியாத ஆவலாகிவிட்டது.
ஆகவே, குடதீசன், முடிதரித்து மூன்று வருஷங்கள் பூர்த்தி யாவதற்குள், சர்ப்பம் இரண்டாம் முறையாகப் படம் விரித்தது. ஓர் இரவு குடதீசன் விஷமிட்ட உணவை அருந்தி இறந்தான்.
அவனுக்குப் பின் அரசுரிமை கொண்ட அவன் தம்பி குடக்கண்ணதீசன் விரக்தி அடைந்து புத்தபிக்குவாகிப் போய் விட்டான்.
அநுலா சிவபாலனைப் பகிரங்கமாக மணம் செய்துகொண்டு சிங்காசனம் ஏறினாள். ஆனால் அரசுரிமையில் சிவபாலனுக்கு எவ்விதப் பாத்தியதையும் கொடுக்காமல் தன்கீழ் ஒரு நகர்க் காவலனாக மட்டும் வைத்துக் கொண்டாள். சிவபாலனுக்கு அது திருப்தி அளிக்கவில்லை. அவன் தன்மேல் கொண்டுள்ள காதலைப் பிணையாகக் கொண்டு செங்கோலையே கவர்ந்துவிடக் கருதினான். அவன் சேனைத் தலைவர்களுடனும் சிற்றரசர்களுடனும் அதிக உறவு கொண்டாடுவதை அநுலா கவனித்தாள்; தன் அபாயத்தை உணர்ந்தாள்.
ஓர் இருள் சூழந்த இரவு; விஷ அரவு மறுபடி சீறி எழுந்தது. மறுநாட் காலை அநுலாவின் மஞ்சத்தில் சிவபாலன் பிணமாகிக் கிடந்தான்.
அதன்பிறகு அநுலா ஒருவர் பின் ஒருவராக நால்வரை மணம் செய்து, சிவபாலனைக் கொன்ற அதே காரணத்திற்காக, அவர்களையும் ஒவ்வொருவராக நஞ்சூட்டிக் கொன்றாள்.
குழந்தாய், கதை முடிந்தது. என்ன உன் கண்களில் கண்ணீர்? இலங்கைச் சரித்திரத்தையே கறைபடுத்திய அரசிக்காகவா, அல்லது அவள் காதலினால் உயிர் இழந்த கணவர்களுக்காகவா? ஈற்றில் அநுலாவின் கதி எப்படியாயிற்று என்று அறியவேண்டுமா? இத்தகைய கிராதகியை எந்த நாடும் சகித்துக் கொள்ளாது! பிரஜைகளே திரண்டு எழுந்து அவளைச் சிங்காசனத்தைவிட்டுத் துரத்திவிட்டனர்.
கண்களைத் துடைத்துக்கொள். எனக்குத் தூக்கம் வருகிறது. நாளைக்கு வேறு ஒரு கதை சொல்கிறேன்.
– வெள்ளிப் பாதசரம், முதற் பதிப்பு: ஜனவரி 2008, மித்ரா ஆர்ட்ஸ் அண்ட் கிரியேஷன்ஸ், சென்னை.