கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: May 5, 2020
பார்வையிட்டோர்: 4,734 
 

நான் அலுவலகத்தில் வேலையாய் இருக்கும்போது கைபேசி அழைத்தது.

எடுத்தேன்.

“அண்ணே…”- என் உடன் பிறந்த தங்கை.

“என்ன அருணா..?”

“அங்கே என் மாமியார் வாதங்களா…?”

“எங்கே…?”

“உன் வீட்டுக்கு …”

“என் வீட்டுக்கா…?!”

“ஆமாம் !”

“ஏன்..?”

“கோபம். உன் வீட்டுக்கு வர்றேன்னு கிளம்பினாங்க…”

“யார்கிட்ட கோபம்…?”

“சட்டைத் துவைச்சுப் போடலைன்னு காலையில மாமா என்னைத் திட்டுச்சி. இவங்க சும்மா இல்லாம….. எனக்கு வக்காலத்து வாங்கினாங்க. கோபமா இருக்கிற ஆள்கிட்ட எதிர்த்துப் பேசினாஎப்படி சரி படும்..? அதிகமா கோபப்படத்தானே செய்வாங்க. ?!! அதனால்….. மாமா அவுங்களைத் திட்டுச்சு. மகன் மேல கோபம் . அத்தை உன் வீட்டுக்குக் கிளம்பிடுச்சு . “விலாவாரியாகச் சொன்னாள்.

“விசயம் உன் வீட்டுக்காரனுக்குத் தெரியுமா..? “கேட்டேன்.

“தெரியாது. அவர் சத்தம் போட்டுட்டு அந்தண்டை நகர்ந்ததும் இவுங்க இந்தண்டை கிளம்பிட்டாங்க. உன் வீட்டுக்குத்தானே வர்றாங்க.மாமாகிட்ட பொறுமையா சொல்லிக்கலாம்ன்னு இருக்கேன். வந்தாங்களா..?”

“எப்போ புறப்பட்டாங்க..?”

மதியம் சரியா ரெண்டு மணி இருக்கும்.”

கைக்கடிகாரத்தைப் பார்த்தேன். மணி…3 .30 .

“மதியம் சாப்பாட்டுக்குச் சென்ற நான் ஒரு மணி நேர அனுமதியில் மூன்று மணிக்குத்தான் வீட்டைவிட்டுக் கிளம்பினேன். உன் மாமியார் என் வீட்டுக்கு வர்றதா இருந்தா … பக்கத்துக் கிராமம்தானே. பத்து நிமிசத்தத்துல வந்திருக்கலாமே..! வரலையே…?! “என்றேன்.

“எங்கே போயிருப்பாங்க..? “எதிரிமுனையில் அருணா முணுமுணுத்தாள்.

“ஒருவேளை தன் மகள் வீட்டுக்குப் போயிருப்பாங்களா…? “- என் மனதில் பட்டதைச் சொன்னேன்.

“இருக்காதுண்ணே..! “அருணா பட்டென்று சொன்னாள்.

“நாலு நாளைக்கு முன்னாலதான் அது இங்கே வந்துது. என்ன காரணமோ…தாய்க்கும் மகளுக்கும் சண்டை. அது செத்தா வாழ்ந்தா இல்லேன்னு சொல்லிப் போச்சு.”

“நீரடிச்சு நீர் விலகாதும்மா…”

“ஆனாலும் சூடு தணியலைண்ணே..!”

“……………………………”

வெளியில போன மாமாவும் இன்னும் வீடு திரும்பல. கோபத்துல.. எங்கேயாவது போய் தற்கொலை அது இதுன்னு முடிவெடுத்துட்டால் கஷ்டம். கொஞ்சம் தேடித் பாருங்கண்ணே..! “பரிதாபமாகக் கெஞ்சி துண்டித்தாள்.

எனக்குத் திக்கென்றது.

வேளையில் ஒய்வு பெற்று அறுபத்தைந்தைத் தாண்டியவள். கொஞ்சம் கணிசமாய் ஓய்வூதியமும் பெறுபவள். ரோசப்பட்டு எங்கே சென்றது…? – உடன் வீட்டிற்கு தொடர்பு கொண்டு….மனைவியிடம் விசாரித்தேன்.

“வரவில்லை ! “சொன்னான்.

மேலும் தாமதிக்காமல் அலுவலகத்தில் விடுப்பெழுதி கொடுத்துவிட்டு இரு சக்கர வாகனத்தை எடுத்துக்கொண்டு நகரத்தின் சந்து பொந்துகள் அலசினேன்.

“நடராஜ் ! “ஓரிடத்தில் நண்பன் வழி மறித்தான்.

நின்று.. “என்ன ராமு..? “என்றேன்.

“புறநகர்ப் பகுதியில் உன் தங்கை மாமியாரைப் பார்த்தேன்டா..”

“எங்கே…? எந்தப் பக்கம்…?”

”கிழக்கே. மாதாகோவில் அருகில்…”

“வர்றேன். ! “அவனிடம் விடை பெற்று உடன் வண்டியை விட்டேன்.

பத்து நிமிடங்களில் அங்கு சென்ற போது…அவள் மாதா கோவில் அருகிலுள்ள மடத்துப் படி ஏறினாள்.

“அத்தை ! அத்தை..! “உடன் வண்டியை நிறுத்தி தாவி அவள் கைகளை பற்றினேன்.

நின்றாள்.

“எங்கே போறீங்க…?”

“இங்கே முதியோர் காப்பகம் இருக்கு. அங்கே ..”

“ஏன்…??? “அதிர்வாய் ஏறிட்டேன்.

“வயசான காலத்துல இளசுகளுக்கு இடைஞ்சலா இருக்கக் கூடாதுன்னு எனக்குள் எப்போதோ தீர்மானம். நல்லத்தனமா பிரிய முடியல. காரணம்…? மகள், மகன், மருமகள்.. எல்லாரும் ரொம்ப பாசம், நேசமா இருக்காங்க. எங்கே போனாலும் அரவணைப்பு. பிரிய வாய்ப்பே இல்லே. எப்படியும் இடத்தைக் காலி செய்யணும்ன்னு சமயம் பார்த்து…. அண்ணன் வீட்டுக்கு மகளிடம் வலிய சண்டை போட்டு உறவை முறிச்சேன். அடுத்து… இன்னைக்கு என் மகன் என்ன காரணமோ உன் தங்கச்சியைத் திட்டினான். வலிய வக்காலத்து வாங்கி அவன் கோபத்தை எம் மேலத் திருப்பி அதிகமாக்கினேன். அவன் என்னைத் திட்டினான். இதுதான் சாக்குன்னு…. அவன் அந்தண்டை …உன் வீட்டுக்குப் போறேன்னு சொன்னா உன் தங்கை தடுக்க மாட்டாள்ன்னு நெனைச்சு அ சொல்லி இங்கே வந்தேன். தயவு செய்து நீ அங்கே உண்மையைச் சொல்லி வீட்டுக்கு அழைச்சிக்கட்டுப் போக வைச்சிடாத ராசா…”

“உன் தங்கச்சி உனக்கு சேதி சொல்லி என்னைத் தேட வைச்சிருப்பாள். நீயும் அப்படித்தான் வந்திருப்பே. காட்டிக் கொடுத்துடாதே. காப்பாத்து.! “சொல்லி என் கையைப் பிடித்தாள்.

‘இளசுகள்…. பெருசுகளைக் காப்பகத்திற்குத் தள்ளிவிடும் இந்தக் காலத்தில்…. இவள் எப்படி நேர்மாறாய் ஒதுங்கல்…? ! இப்படி எல்லா பெருசுகளுமே…நிலைமை உணர்ந்து தானாக விலகிவிட்டால் அவர்களுக்கும் கஷ்டமில்லை. பிள்ளைகளுக்கும் வருத்தமில்லை. ! ‘ நடக்குமா ….?? ! ‘ – நினைக்க….

அத்தை அந்த மடத்தின் படியேறி மறைந்தாள்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *