“ஏய்..,சரசு..மின்னல் வெட்டறாப்புலே இருக்குது..கொடியிலே காயப்போட்ட துணியெல்லாத்தையும் எடு..” சிவகாமிதான் இரைந்தாள்.அவளது கனத்த சரீரம் போலவே சாரீரமும் சற்று கனம்தான்.
‘விலுக்’கென்று,அதிர்ந்து நிமிர்ந்த சரசு,கதை கேட்பதற்காக அவளது மடியில் சாய்ந்திருந்த எங்களை, “தள்ளுங்க..தள்ளுங்க..கொஞ்சம் வழி விடுங்க..” என்றபடி,அவசரமாய் கைகளால் விலக்கிவிட்டு,சிறு பெண்போல எழுந்தோடினாள்.
சரசு அத்தை எங்கள் வீட்டிற்கு வந்தபிறகு,அந்த ஊரிலேயே,எங்கள் வீட்டில் மட்டுமே இருந்த ரேடியோப் பெட்டி மீது எனக்கிருந்த கவர்ச்சி குறைந்துபோனது. காரணம்,அத்தை சொல்லும் கதைகளைப் போல,ரேடியோவில் வரும் நிகழ்ச்சிகளோ,பாட்டுகளோ எனக்குப் பிடிக்கவில்லை. அவ்வப்போது அம்மா கேட்கும் நாடகமும்,அப்பா கேட்கும் செய்திகளும் பெரியவர்களுக்கானதாக இருந்தது.
சரசு அத்தைக்கு ஏறக்குறைய முப்பது வயதிருக்கும்.வீட்டின் அனைத்து வேலைகளையும் இழுத்துப் போட்டு,செய்து கொண்டிருப்பதால், அவளுக்கு எங்கும் ஊளைச் சதைகள் தொங்கவில்லை.படக்கென்று உட்காருவதும், நிமிர்வதும்.. அப்படியே அம்மாவிற்கு நேர் எதிராக இருந்தாள். என்ன..? அம்மாவைவிட கொஞ்சம் நிறம் கம்மி அவ்வளவுதான்.
பள்ளி விட்டதும் வீட்டில் ஓடியாடி விளையாடினாலும்,இரவு உணவுக்குப் பின்,சரசு அத்தையிடம் கதை கேட்காமல் நானும்,அண்ணனும் உறங்கச் செல்வதில்லை. அம்மாவும்,சில சமயம் அப்பாவும் “இது என்ன கெட்ட பழக்கம், சாப்பிட்டாச்சுன்னா போய்ப் படுத்துத் தூங்க வேண்டியதுதானே..? தெனமும் அவகிட்டே போய் கதை கேக்குறதே ஒரு பொழப்பாப் போச்சு உங்களுக்கு..” என்று சலிப்பாகவும்,சில சமயம் கோபமாகவும் சொல்லிக் கொண்டே இருந்தாலும்,நாங்கள் அதனை பொருட்படுத்தவேயில்லை..
“தூக்கம் வர்ற வரைக்கும்..,கொஞ்ச நேரம்தாம்மா..அப்புறம் போய் படுத்துக்கிறோம்..” என்று கெஞ்சலாகவும்,கொஞ்சலாகவும் சொல்லிவிடுவோம்..!
சரசு அத்தை,அப்பாவுடன் பிறந்தவளில்லை.சில வருடங்களுக்கு முன்பு,ஏதோவொரு தூரத்து உறவின் மூலம்,எங்கள் வீட்டுக்கு வேலைக்காரியாய் வந்தவள்தான். “அவளைக் கட்டுன புருசன், எனக்கொரு வாரிசைப் பெத்துக் குடுக்க வக்கில்லாத இவளைப் போய்க் கட்டினேன் பாரு..ன்னு அடிக்கடி தகராறு செஞ்சுட்டே இருப்பான். இப்ப ஒரு வருஷத்துக்கு முன்னாலே,பொழப்புக்குன்னு வேற ஏதோ ஊருக்குப் போனவன்,இன்னவரைக்கும் ஊடு திரும்பலை, அவன் உசுரோடுதான் இருக்கானான்னும் தெரியலைம்மா.., அவன் ரெண்டாவது கல்யாணம் பண்ணிகிட்டு,ஈரோடு பக்கத்தாலே இருக்கான்னும் சொல்றாங்க..! இதுலே, உண்மையெது.,பொய் எதுன்னும் தெரியலை..அப்படியே போலீசுலே சொல்லி,அவனை பொள்ளாச்சிக்கு இழுத்துட்டு வந்து சேத்து வெச்சாலும், திரும்பியும் ஓடிப் போக மாட்டான்னோ,இவளைக் கொடுமைப் படுத்தாம நல்லா வெச்சுக் காப்பாத்துவான்னோ என்னம்மா உறுதி இருக்கு.? பெத்தவங்களுமில்லாம,இப்ப புருசனுமில்லாமே இவ அநாதையா நிக்குறா. ஏதோவொரு நல்ல குடும்பத்தை அண்டிப் பிழைச்சுகிட்டுமேன்னுதான் இவளைக் கொண்டு வந்து இங்க விடுறேன் தாயி..” என்று சரசு அத்தையை முதல்முதலாக வீட்டுக்கு கூட்டி வந்த கிழவி சொல்லிவிட்டு;ப் போனாள்.
அம்மாவைவிட எட்டு வயது குறைந்தவளாக இருந்ததால்,அத்தை என்று கூப்பிட்டுப் பழகிவிட்டோம்.அதற்குக்கூட முதலில்,ஆட்சேபம் தெரிவித்தவள்தான் அம்மா.
“பின்னே எப்படிக் கூப்பிடுவதாம்..?” ஐந்தாம் வகுப்பு படிக்கும் நானும்,ஆறாம் வகுப்பில் படிக்கும் அண்ணனும்,அம்மாவிடம் எதிர்த்துக் கேட்டபோது, “ஏய்..சரசு..” என்று அவளைப் போலவே கூப்பிடச்சொல்ல,அவளுக்கும் மனம் வரவில்லை போல.! அப்புறம் அவள் ஒன்றும் சொல்லவில்லை.அப்பா இது குறித்து ஒன்றும் கண்டுகொள்ளவில்லை.
துணிகளை எடுத்துப் போட்ட சரசுவிற்கு,மீண்டும் ஏதோ வேலை கொடுத்திருந்தாள் அம்மா.! அத்தை திரும்ப வருவதற்காக காத்துக் கொண்டிருந்தோம்.வெளவால் ஒன்று வழிதெரியாமல் வீட்டின் முன்வழியாக நுழைந்து,நேராகப் பறந்து போய்,பின் வாசல் வழியாக வெளியேறியது. ஒருவேளை வழக்கமாய் இந்த வழியாய்த்தான் அது போய்க்கொண்டிருக்கிறதோ..? இதுவரை நான்தான் கவனிக்கவில்லையோ..?
‘இருக்கும்..,இருக்கும்..வீட்டின் பின்புறம் மா,கொய்யா,சீத்தா என பழமரங்கள் நிறைய இருக்கின்றதே..! அவற்றிலிருந்து அத்தை பறித்துத் தரும் பழங்கள் மட்டும் எப்போதும் இனிப்பாகவே இருந்தன.எப்படித்தான் அவளுக்கு அந்தப் பக்குவம் தெரிகிறதோ என்று எனக்கும் தெரியவில்லை.
சில நிமிடங்களில் வந்து சேர்ந்தாள் அத்தை. “மீனாட்சி.., உனக்குத் தூக்கம் வரலையா..? டேய் ராமு..உனக்குமா தூக்கம் வரலை..?”
“தூக்கம் வர்றமாதிரிதான் இருக்கு அத்தே..நீ சின்ன கதையா ஒண்ணு சொல்லு..அப்புறமாப் போய்ப் படுத்துக்கிறோம்..” ராமுதான் பதில் சொன்னான். நானும் அதனை ஆமோதித்தேன்.
ராமு இதனைச் சொல்வதற்கு காரணம் இருக்கிறது.சிலசமயம் அத்தை கதை சொல்லத் துவங்கினால்,அது வெகு நீளமாக இருக்கும்.அப்படித்தான் முதல் முதலாக,அவள் சொன்ன ஒரு கதை., “முன்ஜென்மத்தில் ஏதோ பாவம் செய்ததால் கடவுளால் சபிக்கப்பட்டு,இந்த ஜென்மத்தில் அரண்மனையில் பிறந்த இளவரசி ஒருத்தி,குழந்தையாக இருந்தபோதே கயவர்கள் சிலரால் கடத்தப்பட்டபோது,துரத்தி வந்த காவலர்களுக்கு பயந்து ஒரு ஏகாலியின் குடிசைக்குள்,குழந்தையைப் போட்டுவிட்டுச் சென்று விட்டனர். அங்கு வளர்ந்து வந்தவள், குமரியாக மாறியபோது,ஒரு இளவரசன் பெண்கேட்டு வந்து,கல்யாணம் செய்து கொண்டு போனான்.
சில நாட்கள் அவளுடன் சந்தோஷமாக இருந்த இளவரசன்,பின்னர் அவளை ஒதுக்கி வைத்துவிட்டு,வேறொரு நாட்டு இளவரசியைக் கல்யாணம் செய்து கொண்டான்.இதனால் ஆத்திரமுற்ற இளவரசி,அவனைப் பழிவாங்க திட்டமிட்டபோது,அவளைப்பிடித்து சிறையில் போட்டுவிட்டான்.
சிலநாள் கழித்து,சிறையிலிருந்து தப்பியவள்,இளவரசனை நெருங்க முடியாத அளவில் இருந்த காவல்களைத் தாண்டவே முடியவில்லை.அவன்தான் சகல அதிகாரங்களும் மிகுந்தவனாயிற்றே. அதனால்,எப்போதாவது இவனைப் பழிவாங்கியே தீரவேண்டும் என்பதற்காக அவள் தற்போது தலைமறைவாக வாழ்ந்து வருகிறாளாம்.எப்போது வேண்டுமானாலும் கொல்லப்படலாம் என்ற அச்சத்தோடு அவன் இன்றைக்கும் வாழ்ந்து வருகிறானாம்..”, இரண்டு இரவுகளில் நீண்ட தொடர்கதையாக இருந்த இந்தக் கதையில்,ராஜாக்கள் காலத்தில் இருந்த இளவரசி,இன்னுமா உயிரோடு இருப்பாள்..? என்று எனக்கு கேள்வியே எழவில்லை. எப்போதாவது ஒரு நாள் அந்த இளவரசனை,இளவரசி பழிவாங்கிவிட்டாள் என்று சீக்கிரமே தகவல் தெரிந்தால் சந்தோஷமாக இருக்கும் என்றே எனக்கு அன்று தோன்றியது.
ஆனால்,இரண்டுநாளும் ராமு இந்தக்கதையை முழுதாகக் கேட்காமல், இடையிலேயே தூங்கிவிட்டிருந்தான்.சரசு அத்தை சம்பவங்களை விவரிக்கும் போது, சந்தோஷம்,துக்கம், கோபம்,ஆத்திரம் என கதைக்கேற்றபடி,தனது குரலிலும்,முகபாவத்திலும் ஏற்படுத்திக் கொண்ட மாற்றங்களைப் பார்க்க,எனக்கு இறுதிவரையும் மிகுந்த உற்சாகமாகவே இருந்தது. சொல்லப்போனால் அவளின் அந்தப் பாவனைகளே,அவளுடைய கதைகளின் மீது எனக்கு ஒரு ஈர்ப்பை உண்டாக்கியிருக்கக் கூடும் என்று தோன்றுகிறது.
அதற்குப் பின் வந்த நாட்களிலும், அத்தை எப்போது கதை சொன்னாலும்,அதில் கட்டாயம் ஒரு ராஜகுமாரி இருப்பாள்.அவளின் கட்டளைக்குப் பணியாற்ற ஏராளமான வேலையாட்கள் காத்துக் கொண்டே இருப்பார்கள். தனது அடிமைகளை அவ்வப்போது சவுக்கால்,விளாசுவதும் உண்டு.
ராஜகுமாரியின் உடைகள் ஒவ்வொரு கதையிலும் மிக உயர்ந்த விலையுள்ள,பத்து யானை அல்லது ஐம்பது குதிரை அல்லது நூறு பசுக்கள் அல்லது இவற்றுக்கு ஈடானதாக எதையேனும் கொடுத்து பெறப்பட்ட உடைகளாகவே இருக்கும்.
எப்போதும் அரண்மணையில் அல்லது மாளிகையில், நடைபெறவேண்டிய காரியங்களுக்கு அவள்தான் முடிவு எடுப்பாள். என்ன சமைக்க வேண்டும் என்பது உட்பட.!
அவளை நாங்கள் எல்லாம் பிரியமாக அத்தை என்று அழைத்தாலும் அவள் எங்கள் வீட்டு வேலைக்காரி என்றும்,அவளுடன் ஒட்டி உறவாட வேண்டாம் என்றும் அம்மா சொல்லிக் கொண்டே இருப்பாள்.!
ஆனால்,அம்மா கழித்துப்போட்ட பழைய சேலைகளையே உடுத்திக் கொண்டு, கிழிந்த கோரைப் பாயை விரித்து உறங்கிக் கொண்டிருக்கும் அவளிடம் எப்போதும் கதைகள் கேட்க நாங்கள் கொண்டிருந்த ஆவல் மட்டும் தீரவேயில்லை. அவளிடமிருந்த கதைகளும் தீரவேயில்லை.
நான் பனிரெண்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்று,அடுத்து எந்தக் கல்லூரியில் சேர்க்கலாம் என்று அப்பா அலைந்து கொண்டிருந்த நேரம்.,அண்ணனின் ரசனைகளும் இப்போது மாறி விட்டது. முன்புபோல அவன்,அத்தையின் கதைகளைக் கேட்க பிரியப் படுவதில்லை. இந்த நேரத்தில்,சற்றே விபரம் தெரிந்தவளாக நான் வளர்ந்துவிட்டதால்,எனக்காக மட்டும் சில கதைகளையும் அத்தை சொல்லியிருக்கிறாள்.
அந்தக் கதைகளில் ஒன்றை,நான் இன்னும் மறக்கவேயில்லை.
“ ஒரு ராஜகுமாரி,தன்னுடைய நாட்டை மீட்பதற்காக,மற்றொரு நாட்டு ராஜாவிடம் உதவிகேட்டு, அடைக்கலமாய்ப் போய்ச் சேருகிறாள்.அது அங்கிருந்த ராணிக்குப் பிடிக்கவேயில்லை என்றாலும்,சகல அதிகாரங்களும் மிகுந்த ராஜாவை எதிர்த்துப் பேசமுடியவில்லை. இதனை தனக்கு சாதகமாய் பயன்படுத்திக் கொண்ட ராஜா,ராஜகுமாரிக்கு சீக்கிரமே உதவி செய்கிறேன் எனச்சொல்லியே,அவளையும் பலவந்தப்படுத்திக் கெடுத்து ஒரு மனைவியைப் போல,வைத்துக் கொண்டானாம்.
அந்த ராஜாவையும் பழி வாங்க சந்தர்ப்பம் பார்த்துக் கொண்டிருந்த ராஜகுமாரி, நாளடைவில் பல சந்தர்ப்பம் கிடைத்தும்,பழி வாங்க முடியவில்லையாம். காரணம், அந்த ராஜாவின் குழந்தைகள்,ஒரு தாயைப் போல எண்ணி,ராஜகுமாரியிடம் பாசமாக இருந்தனவாம்.சரி.. எதிர்காலத்தில் என்ன நடக்குமோ அப்படி நடக்கட்டும் என்று விதியை எண்ணி நொந்தபடியே அந்த ராஜகுமாரி,இன்னும் காலத்தைக் கழித்துக் கொண்டிருக்கிறாளாம்.
அத்தையின் கதைகளில் சில இப்படித்தான் முடிவுகளற்றுப் போய் நின்றுவிடும். “கதைகள் என்றால் அதற்கொரு முடிவு இருந்துதான் தீரவேண்டும் என்று எந்தக் கட்டாயமும் இல்லை மீனாட்சி..” என்றொரு முறை அவள் சொன்னதை நானும் ஏற்றுக் கொண்டேன்.
ஆமாம்..,மனித வாழ்க்கையில்,ஒரு கதையின் சம்பவம்போலத் துவங்கும் எத்தனையோ நிகழ்வுகள் முடிவற்ற வகையில் தொடர்ந்து கொண்டுதானே இருக்கிறது.? நான் கல்லூரிப் படிப்பை முடித்து தனியார் நிறுவனமொன்றில் வேலைக்கு சேர்ந்தபின்,மற்றொரு நிறுவனத்தில் பணியாற்றிக் கொண்டிருந்த கணேசனுடன் காதல் ஏற்பட்டது.அது தெரிந்தவுடன்,இரு பக்கத்து பெற்றோர்களின் வசையுடனும், சாபத்துடனும் எங்கள் காதல் திருமணத்தில் முடிந்தது.கணவன் வேலை செய்த கணிப்பொறி நிறுவனம்,அமெரிக்காவிலிருந்த அதன் தலைமை அலுவலகத்துக்கு பதவி உயர்வில் அனுப்ப,அங்கேயே வசிக்கத் துவங்கினோம். இடையே பத்தாண்டுகளும் ஓடிவிட்டது.
கடந்த ஆண்டு அப்பா இறந்துவிட்டார்.சொத்துக்குப் போட்டியில்லாத வீட்டு நிர்வாகம்,தோட்டம், வியாபாரம் எல்லாம் அண்ணன்தான் பார்த்துக் கொள்கிறான்.இப்போது சொந்தம் இறுகியிருந்தது.வயதின் மூப்பால் மிகவும் தளர்ந்து போன அம்மா,மூட்டுவலியால் கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கிறாள். கட்டிலைவிட்டு அவள் இறங்குவதில்லை.அவளுக்கு துணையாக,சரசு அத்தையும்,வேலைக்காரர்கள் புடைசூழ,வீட்டில்தான் இருக்கிறாள்.இப்போதெல்லாம், அம்மாவிற்கும் அவள் கதைகள் சொல்லிக் கொண்டிருக்கிறாளோ என்னவோ.?
எனது இரண்டு குழந்தைகளுடன்,அம்மாவைப் பார்த்துவருவதாகச் சொல்லி, அமெரிக்காவிலிருந்து கிளம்பி வந்தாயிற்று.
வீட்டின் முன்பாக,வாடகைக் காரிலிருந்து இறங்கும்போதே,அண்ணனும்,அண்ணியும் ஓடிவந்து வரவேற்றனர்.
அம்மாவிடம் நலம் விசாரித்தபோது,அப்பாவின் பிரிவு,அவளது இயலாமை, அங்கலாய்ப்பு என அரைமணிநேரம் மூச்சுவிடாமல்,அழுகையினூடே பேசித்தீர்த்தாள்.
அம்மாவை ஓய்வெடுக்கச் சொல்லிவிட்டு,அந்த அறையை விட்டு வெளியேறும் போது, அதுநேரம் வரை அருகாமையில் நின்று கொண்டிருந்த சரசு அத்தையின் கைகளைப் பற்றிக் கொண்டேன்.இருவரும் மெதுவாய் வீட்டின் பின்புறமிருந்த தோட்டத்திற்கு சென்றோம். அங்கிருந்த பழ மரங்கள் முன்னைக் காட்டிலும் நன்றாகவும்,அடர்த்தியாகவும் வளர்ந்திருந்தன.
சரசு அத்தைக்கும் வயதாகியிருந்தது.அவளின் முகத்தில் முன்புபோல,எப்போதும் நிலவும் விரக்தியோ,சோகமோ இல்லை.பூரண அமைதி நிலவிக் கொண்டிருந்தது. அது,அவளை இன்னும் அழகாக்கியிருந்தது. “அத்தை..,எப்படி இருக்கீங்க..?”
“நீதான் பாக்குறீயே மீனாட்சி..,நான் நல்லாயிருக்கேன்..!” குரல்கூட,மிக நிதானமாய் அவளிடமிருந்து வெளிப்பட்டது.
“இன்னைக்கு ராத்திரியும் ஏதாவது ராஜகுமாரியின் கதைசொல்றீங்களா..?” சிரித்துக் கொண்டே கேட்டேன்.எனது சிரிப்பில்,சரசு அத்தையின் உள்மனசு தெரியும்..என்ற அர்த்தமும் இருந்தது.
“இப்போவெல்லாம்,எனக்கு எந்த வேலையும் கொடுக்காம,உங்க அம்மாவும், அண்ணணும்,என்னை நல்லாப் பார்த்துக்கிறாங்க மீனாட்சி..,.இந்த வீட்டுலே என்ன செய்யணும்னாலும்,என்னையும் கேட்டு,சம்மதம் வாங்கிட்டுத்தான் செய்யுறாங்க.ஒரு ராணி மாதிரி சொந்த வாழ்க்கை போயிட்டு இருக்கு.மனசுக்கு நிம்மதியாவும் இருக்கு. சொல்லப்போனா.. இப்பல்லாம் எனக்கு அந்தமாதிரி கதையே தோணுறது இல்லே. கோபத்தோட,ஆவேசத்தோட,பழி உணர்ச்சியோட எனக்குள்ளே இருந்த அந்த ராஜகுமாரியும் எப்பவோ செத்துப் போயிட்டா..! என்றாள் அத்தை.!
அவளின் பதில் என்னை ஆச்சரியப் படுத்தவில்லை.!