கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்  
கதைப்பதிவு: August 31, 2024
பார்வையிட்டோர்: 1,231 
 
 

இப்பதான் லண்டனில் பல்கலைக்கழகத்தில் படித்து பட்டதாரியாகி வந்திருக்கிறான் அஜுன். ஏதோ அமேசனில் புத்தகம் புத்தகமாக வாங்கிப் படித்துக்கொண்டும்தான் இருக்கிறான். ஏதும் கதைக்கப்போனால் ;லிலீவ் மி எலோன்’ என்று தாயைத் தனது அறைக்கு வெளியே போகச் சொல்லி கதவைச் சாத்துகிறான். பல்கலைகழகம் முடித்தவுடன் தான் வளர்ந்து மச்சுவேர்ட் ஆகிவிட்டான் என்ற நினைப்பு அஜுனுக்கு. அதிகம்; வாசித்துவிட்டான் போல இருக்கு. என்னத்தைத் தொட்டுக் கதைத்தாலும் சரியாகப் பதில் சொல்கிறான். தொழில் நுட்பத்தால் பிள்ளைகள் நல்லாக வாசித்துத் தள்ளுதுகள். அவர்களுக்கு எங்களைவிட கூடத்தான் உலக அறிவு. வாழ்க்கையைச் செப்பனிட்டு வளப்படுத்தி பிள்ளைகளின் முன்னேற்றத்திற்காக எதிர்பார்ப்பில்லாமல் தங்களை அர்ப்பணிப்பவர்கள்தான் இந்தத் தாய்மார்கள். அமீனா தன் மகன் அஜுனின் எதிர்காலம் பற்றித்தான் கனவு. அவன் மேலும் படித்து ஒரு பெரிய அறிவாளியாக வேண்டும் என்பதே அமீனாவின் மனப்பிராந்தியத்தில் பரவிக்கொண்டிருந்தது.

சின்ன வகுப்புகள் படிக்கும்போது ஏதும் பெற்றோர் அறிவுரை சொன்னால் பிள்ளைகள் கொஞ்சம் கேக்குதுகள். வளர வளரத் தாங்கள்தான் அறிவாளிகள் என்ற மாதிரித்தான் கதைக்குதுகள். அதில் உண்மையும் இல்லாமலில்லை.

மதுரம் சொட்டும் குரலால் எப்போதும் மகன் அஜுனுடன் அமீனா பேசிக்கொள்வாள்.

காலையில் இருந்து கொண்டே கணணிக்கு முன்னால்தான் சத்தியாக்கிரகம் செய்ததுமாதிரி எந்த நேரமும் தட்டிக்கொண்டிருக்கிறான். இடைக்கிடை லண்டனில் உள்ள ‘மைக்கேல் மக்ளின்ரயர்’ ‘ஸ்ரீபன் ஜோன் ஃபிறை’ போன்ற பகிடிக்காரர்களின் பகிடிகளைக்கேட்டுக் குலுங்கிக் குலுங்கித் தனியவே இருந்து சிரித்துக்கொள்கிறான். இப்போ கணணிதான் உலகம் மாதிரி பிள்ளைகளுக்கு. அதற்குள்ளேயே ஊர்ந்துகொண்டிருப்பதைப் பார்க்கும்போது என்ன அஜுன் வேலை ஒண்டும் தேடாமல் இருக்கிறானோ! என்று மனதிற்குள் அங்கலாய்த்துக்கொண்டிருப்பாள் அமீனா. ‘பாவம் அவனுக்கு ஏற்றமாதிரி ஒரு வேலையும் வாய்க்கவில்லைப்போல்’ என்று மனதுள் வேதனைப்படுவதுண்டும் அமீனா. எது எது எப்போது நடக்கவேண்டுமோ அவ்வப்போது நடந்தே தீரும். நண்பி கூறும் தத்துவம்போல் எல்லாம் நல்லாக அமையும் என்பது அமீனாவின் நம்பிக்கை.

மனித வாழ்வில், ஏன் அவளின் பிரத்தியேக வாழ்வில் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் வேதனையும் ஏக்கமும் ஏமாற்றமுமே இலை மறை காய்போலப் பதுங்கிக் கிடக்கின்றன என்ற மகத்தான உண்மையை அமீனா எப்போதோ அறிந்து விட்டாள். சோகத்தின் கருமையினைக் கொண்டு வர்ணம் தீட்டியதுபோல் வானம் இருண்டு கிடக்கிறது. கலகலப்பு இல்லாது சுமாராக நகருகின்றது அவளது வாழ்வு. வாழ்க்கை அவளுக்கு முடிவும் தொடக்கமுமற்ற நெடுங்கதையாய் காட்சி தருகிறது. அவ்வப்போது சிதறிச் சிதறி அலைகளாய் அவள் மீது மோதுவதுமுண்டு. சிறுவயதில் தன் பெற்றோரோடு வாழ்ந்த பருவமும், தன் தந்தையோடு சலசலத்துச் சுற்றித் திரிந்த நாட்களும்தான் எந்நேரமும் கனவாகி நினைவில் அவளுக்குப் படமாகிப் போய்க் கொண்டிருக்கும். வாழ்க்கை எண்ணமாய், இலட்சியமாய், கற்பனையாய் கனவாகிப்போகும் ஒரு புதிர்போலத்தான் அவளுக்குத் தென்படுகிறது. அஜுனின் அன்பும் அதட்டலும்தான் அவளுக்கு இப்போ ஆறுதலாக இருக்கிறது. மாலையாகிவிட்டது சாளரத்தின் ஊடாக கண்களை ஊசிமுனைகள்போல் உறுத்தி நிற்கும் வெளியை நோக்கினாள் அமீனா. உலகத்திலுள்ள சோகம் அத்தனையையும் உருவாக்கி வார்த்துவிட்ட மௌனச் சிலைகள்போல் எல்லாமே அவளுக்குப் புலப்பட்டது.

அஜுனின் அழைப்பு அவன் அறையில் இருந்து கொண்டு…

அம்மா….

என்ன அஜுன்? அம்மா எனக்கு ரீ போட்டுத்தருவீங்களா? அல்லது கான் ஐ ஹாஃவ் எ பிளேற்? என்று அமீனாவிடம் கேட்பதுதான் வழக்கம். என்ன இன்று வழக்கத்திற்கு மாறாக வித்தியாசமான குரலில்.

‘உங்களுக்கு என்ன சாப்பாடு விருப்பம் அம்மா? ரேக் எவேயில் சைனிஸ் சாப்பாடு ஓடர் கொடுக்கப்போகிறேன்’ என்று அன்பு ததும்பக் கேட்டான்.

இன்று மார்ச் பதினொராம் நாள். தாய்மார்கள் தினத்தைக் கொண்டாடிக்கொண்டு பரிசுகள் வேண்டித் தாய்மார்களுக்கு கொடுத்துக்கொண்டிருக்கிறார்கள் என்று தொலைபேசி அழைப்புகளும் தொலைக்காட்சிகளும் விளம்பரப்படுத்திக் கொண்டிருக்கிறது. இது ஒரு போலிச் சம்பிரதாயம். வர்த்தகர்களின் புதுபுதுக் கண்டுபிடிப்புகள் என்று அமீனா எண்ணிக்கொண்டிருக்கும்போதே.

அழகான சொக்ளேற் ரின் ஒன்றைக் கொண்டுவந்து நீண்டினான் அஜுன்.

எதற்கு இவைகள்? என்ற தோறணையில் அவனைப் பார்க்கின்ற அமீனாவுக்கு.

‘அம்மா உங்களுக்கு என்ன படம் பிடிக்கும்? ‘அருவி’ என்ற ஒரு தமிழ்ப் படம் பல விருதுகளைப் பெற்றது என்று என் நண்பன் சொன்னான். பார்ப்போமா? அவளின்; மனதை மாற்றி அஜுன் மகிழ்ச்சிப்படுத்த நினைக்கும் செயலை வரவேற்றாள் அமீனா. ஆங்கில விளக்கத்தை அளிக்கும் ரைற்றிலையும் ஒழுங்கு செய்தான் அஜுஜன். தாயும் மகனும் அருவியை பார்க்கத்தொடங்கினார்கள். இருவரும் படத்தைப் பார்த்து முடிந்ததும், அஜுன்..

‘எப்படிப் படம் அம்மா?’ என்று கேட்டான்.

‘நடிப்பு பாத்திரங்களுக்கு ஏற்ப நன்றாக உள்ளது. எடுத்துக்கொண்ட விடயம் அதாவது கரு நல்ல விடயத்தை கூறுவதாக உள்ளது. ஆனால் கதை சொல்லும் முறைதான் யதார்த்தத்திற்கு அப்பாற்பட்டது’ என்றாள் அமீனா.

‘தமிழ்ப் படங்கள் எதுதான் அம்மா யதார்த்த வாழ்வைச் சித்தரிக்கின்ற மாதிரி கதையை நகர்த்திச் செல்கின்றது? ஒரு படம் என்று நினைத்துக்கொண்டு பார்க்கவேண்டும் அம்மா’ என்று சட்டென்று சொன்னான் அஜுன்.

தமிழ் படங்களே பார்க்காத அஜுன் எப்படி இதனைக் கூறுகின்றான் என அமீனா எண்ணிக்கொண்டாள். அவனின் நண்பன் கோபிதான் குறும்படங்கள் எடுப்பதில் ஆர்வம் மிக்கவன். லண்டன் பி.பி.சி. நடாத்திய குறும்படப் போட்டியில் வெற்றி பெற்று பரிசும் பெற்றுக் கொண்ட தமிழ்ப் பொடியன். கோபியுடன் சேர்ந்து தமிழ்ப் படங்கள்; எல்லாம் பார்க்கின்றவன் போல் இருக்கிறது. வித்தியாசமான சிந்தனைதான்.

வாழ்க்கை என்பது அழகுணர்வில் வளர்வதுதானே! அழகுணர்வே ஆளுமையின் முழுமையாகி வெளிவருவது. அழகுணர்வு என்பது மனித உள்ளத்தின் வெளியீடு. அத்தகையதொரு வெளிப்பாட்டிலத்தான் அஜுனும் படைப்பாற்றல் மிக்கவனாக அமீனாவுக்குத் தெரிந்தான். ஓவியக் கலைகூட கற்பனையால் ஒழுங்குபடுத்தப்பட்டு உருவம் கொடுக்கின்ற ஒரு கலையாகின்றது. இவையெல்லாம் அழகுணர்வை சுவைப்பவனுக்குத்தான் ஏற்படுகின்றது. பல்கலைகக்கழகம் முடித்து வந்ததும் உடனடியாக வேலை கிடைத்து ஒரு திருமணத்தைக்கண்டு அவனை ஓரு குடும்பமாக்கிவிட எத்தணிப்பவள் அல்ல அமீனா. ஆனால் இப்போ அவனுக்கு ஒரு கதையையும் சொல்லமுடியாமல் தத்தளிப்பவளாகத்தான் தெறிக்கின்றாள்.

அமீனாவின் நண்பி ஒருவரின் மகன் லண்டன் கேம்றிச் பல்கலைக்கழகத்தில் தனது பட்டப்படிப்பை மேற்கொண்டு பட்டதாரியாகி வெளிவந்த செய்தி மகிழ்வைக் கொடுத்தது. ஆனால் அவன் இப்போ வீட்டுக்குள்ளேயே முடங்கியிருந்தவண்ணம் வீட்டுப் பொருட்களை அடிச்சு நொருக்குவதாகக் கேள்விப்பட்டு மனம் உடைந்தாள் அமீனா. பெற்றோர்கள் பிள்ளைகளுக்குக் கூடுதலான மனஅழுத்தத்தைக் கொடுப்பதால்த்தானோ என்னவோ இப்படி ஆகிவிடுகின்றது என எண்ணத்தோன்றுகின்றது.

லண்டனில் மிகச் சிறந்த பல்கலைக்கழகத்தில் படித்துப் பட்டம் பெற்ற ஒரு மாணவனுக்கு தனது எதிர்காலத்தை எப்படி வளப்படுத்தி வாழவேண்டும் என்று தெரியும்தானே!. அவர்களுக்கு பெற்றோர் அறிவுரை வழங்கத் தேவையில்லை. ஆனால் ‘எங்கள் போன்றவர்கள் தாய்மார்கள் என்ற எண்ணத்தில், எங்களுடைய மனம் கேட்காது. வாயைச் சும்மா வைத்துக்கொண்டு இருக்காமல் ஏதாவது பிள்ளைகளுக்குச் சொல்லி புறுபுறுத்து உள்ளதையும் கெடுத்துப்போடுவம்’ என்று அமீனா எண்ணுகின்றாள். இனிமேல் அஜுனுக்கு ஒன்றுமே கூறக்கூடாது என்று எண்ணுகின்றாள். அவன் சிறந்த புத்திசாலி. அவனாகவே தன்வாழ்வின் இலட்சியங்களையும் உண்மைகளையும் உணர்ந்துகொள்ள, வழிவகைகளைத் தேட விட்டுவிட வேண்டும் என எண்ணுகின்றாள் அமீனா. ஒருவன் வளர வளர அவனின் அர்த்தங்கள் மாறிக்கொண்டேயிருக்கும்.

புகழ்ச்சியையும் இகழ்ச்சியையும் நாம் என்ன நேர்மையான முறையில் அவர்களுக்குச் சொல்லுகின்றோமா? கிடையவே கிடையாது. பிள்ளைகளின் திறமைகள் அல்லது உள உடல் சமூக முதிர்வுக்கு ஏற்றமாதிரி நாங்கள் நடத்துகிறோமா? இப்படியான பல கேள்விகள் அமீனாவின் உள்ளத்தில் உதிர்ந்து கொண்டிருந்தது. நமது பண்புகளைக் கொண்டே நாம் பிள்ளைகளின் பண்புகளை விளங்கிக்கொள்ள முனையும்போது எல்லாமே அகவயமாகிப் போகின்றதே. நாங்கள் தான் ரோல் மொடேல் அவர்களுக்கு. முதலில் நாங்கள் சமூகத்தில் நல்ல பிரஜைகளாக இருக்க வேண்டும் என்று அமீனாவின் உள்ளம் சிந்தித்துக்கொண்டே இருந்தது.

திரும்பவும் அஜுனின் குரல். அம்மா.

என்ன அஜுன்?

நாளை என்னுடைய பல்கலைக்கழக நண்பி வீட்டுக்கு வந்து ஒரு நாள் தங்க வேண்டி இருக்கு அம்மா?

என்ன அஜுன். அந்தப் பெண்பிள்ளைப்பிள்ளை வந்தால் தங்குவதற்கு வீடு வசதி இல்லை. உனது அறையும் எமது அறையும் தானே இருக்கிறது. எப்படி அஜுன் இரவில் அந்தப்பிள்ளையைத் தங்க வைப்பது?

என்ன அம்மா? எனது அறையில் இருக்கும் பங் பெட்டில் அவள் தூங்குவாள். எனது அண்ணா நித்திரை கொண்ட இடத்தில். இப்போ அண்ணா வெளிநாட்டில்தானே படிக்கிறார். படுக்கை விரிப்புகளை மாற்றி ஒழுங்கு செய்தால் அவளுக்குப் போதும்.

என்ன அஜுன் சொல்கிறாய்? அதுவும் யாரோ ஒரு பொம்பிளைப்பிள்ளை. எப்படி ஒரு அறையில் தங்குவது?

அவள் பல்கலைக்கழகத்தில் படித்த நண்பி. அவ்வளவு தான். ஏன் எனது அறையில் மேல் கட்டில் கீழ்கட்டில் என்று இருக்கும் பங் பெட் தானே அம்மா! தங்கினால் என்ன? என்னம்மா எந்த நூற்றாண்டில் வாழ்கின்றீர்கள்?

அம்மா நீங்க ஏன் பயப்பிடுகிறீங்கள் என்று எனக்குத் தெரியும். அவள் எனது ஒரு நண்பி மட்டும் என்று சொன்னேன் தானே! இன்னும் விளக்கமாகச் சொல்வதானால், அவள் ஒரு லெஸ்பியன் அம்மா. எங்களைப் போன்ற பொடியன்களை அவளுக்குப் பிடிக்காது அம்மா. இப்போது விளங்குகிறதா?

அமீனா ஆச்சரியத்தோடு விழித்தாள். பிள்ளைகள் இத்தகைய இருபால் உறவுகளை சமத்துவமாகவும் அவர்களின் ஓரினச் சேர்க்கைகளைக்கூட மிக இலகுவாக எடுத்துக்கொள்கின்றார்களே! வெளிநாடுகளில் இவை பகிரங்கமாகவும் ஏற்றுக்கொள்ளப்பட்டு வருகின்றது. ஆனால் தமிழ் சமுதாயத்தில் இவை குறைவாக இருந்தாலும் எதிர்காலத்தில் எப்படி ஆகுமோ?

கையிலை கணணியைத் தட்டிக்கொண்டு அடிக்கடி மவுஸ்சால மாற்றுவதுபோல எண்ணங்களையும் அடிக்கடி மாற்றிக் கொள்ளுதுகள் தற்போதைய பிள்ளைகள். தங்களுக்கு மட்டும் ஏதாவது தேவையென்றால் வளைஞ்சு குழைஞ்சு கதைச்சு காரியத்தை சாதிக்குதுகள். இனியென்ன வாற பெண்பிள்ளைக்கு அறையை கொஞ்சம் வசதியாக்கி ஆயத்தப்படுத்த வேண்டிக்கிடக்கு என்று அமீனா மனதுள் தயாராகின்றாள். வீட்டுக்கு வரும் விருந்தினர்களை மனங்கொண்டு பௌவியமாக உபசரிப்பது அவளது இயல்பான பண்பு.

வாழ்க்கை எல்லாத்துறைகளிலும் இசைவும் இணைவும் கொள்ள வைக்கத்தான் செய்கிறது.

மிண்டும் கணணிக்குள் தலையைப் புகுத்திக்கொண்டு இருக்கிறான் அஜுன்.

அதற்கிடையில் வேறு என்னென்ன புரளிகளைக் கிளப்பிக்கொண்டு வரப்போகிறானோ அஜுன். புகைப்படக் கமராவை சுருக்கி விரித்துப்பார்ப்பதுபோலத்தான் அஜுனையும் பல கோணங்களில் வைத்துப் பார்க்கவேணும். கண்ணால் பார்க்கின்ற சுயமான காட்சிபோல் ஒரு நாளுமே அஜுன் அமினாவுக்குத் தெரிவதில்லை.

அம்மா?

என்ன அஜுன்?

இஞ்ச வாங்கம்மா.

என்னென்று சொல்லன்; அஜுன்?

வாற மாதம் முதலாம்திகதி தொடக்கம் வேலைக்குப் போகப்போறன்.

என்ன வேலை?

லண்டன் பிபிசி செய்திப்பிரிவில்.

லண்டனிலா?

லண்டனில் தான்.

என்ர பிள்ளை கெட்டிக்காறன். அமினாவுக்கு கண்கள் பட படத்தன. பசுவும் கன்றும் ஒன்றை ஒன்று துரத்திக்கொண்டு மகிழ்வில் திளைப்பதுபோல் அமினாவும் அஜுனும் …

– 18.06.2018

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *