அது நான்தான்

1
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: November 3, 2014
பார்வையிட்டோர்: 15,637 
 
 

இரவு ஒன்பது மணியாகிவிட்டது. ரொறொன்ரோ சூரியனின் சாய்ந்த கிரணங்கள் அவன் கண்களைக் கூசவைத்தன. நெடுஞ்சாலையில் காரை வேகமாக விமான நிலையத்தை நோக்கி ஓட்டினான் வசந்தகுமாரன். அவனுடைய புது மனைவி தன்னந்தனியாகக் கொழும்பிலிருந்து வருகிறாள். அவள் வரும்போது அவன் அங்கே நிற்க வேண்டும். 13 மாதத்திற்குப் பிறகு மனைவியைப் பார்க்கப்போகிறோம் என்று நினைத்தபோது மனது குறுகுறுவென்று ஓடியது. காரை மூன்றாவது தளத்தில் நிறுத்திவிட்டுத் தரிப்புச் சீட்டில் காரை நிறுத்திய இடத்தைக் குறித்து வைத்துக்கொண்டான். புது மனைவியுடன் திரும்பும்போது காரைக் கண்டுபிடிக்க அலையக் கூடாது.

வருகைக்கூடத்தில் நிறைய ஆட்கள் சேர்ந்துவிட்டார்கள். அவனுக்குப் பக்கத்தில் ஒருவர் உரத்துப் பேசிக் கொண்டிருந்தார். அவர் பக்கத்தில் நிற்பவருடன் பேசக்கூடும். அல்லது 1000 மைல்களுக்கப்பால் உள்ள ஒருவருடன்கூட உரையாடலாம். ‘விநோதினி ரத்தினராசா’ என்று எழுதிய அட்டையைத் தூக்கிப் பிடித்துக்கொண்டு காத்திருந்தபோது கூச்சமாகவிருந்தது. ரத்தினராசா என்பது அவள் அப்பாவின் பெயர். அவளுடைய கடவுச்சீட்டும் அதே பெயரில்தான் இருந்தது. கனடா வந்து சேர்ந்தபின் அவள் பெயரை ‘விநோதினி வசந்தகுமாரன்’ என மாற்ற வேண்டும் என்று நினைத்துக்கொண்டான். யாராவது மனைவியின் பெயரட்டையைக் காவிக்கொண்டு நிற்பார்களா?

அவன் அப்படி நின்றதற்குக் காரணம் இருந்தது. 13 மாதங்களுக்கு முன்னர் அவன் சித்தப்பாவின் தொந்திரவு தாங்காமல் இலங்கை சென்று அங்கே அவர் தெரிவுசெய்த பெண்ணைக் கோயிலில் தாலி கட்டி மணமுடித்தான். அவனுக்குக் கிடைத்த ஒருவார விடுப்பில் பெண்ணைப் பார்த்து ஏற்பாடு செய்ய நாலு நாட்கள் போனது. மீதி மூன்று நாட்கள் அவளுடன் கழித்தபின்னர் கனடா திரும்பிவிட்டான். மணமுடித்த சான்றிதழ் அனுப்பி மனைவிக்கு விசா கிடைப்பதற்கு இத்தனைக் காலம் பிடித்தது. இந்த இடைவெளியில் கடிதம் பரிமாறினார்கள். கடிதத்தில் சொல்ல முடியாததைத் தொலைபேசியில் நீண்ட நேரம் பேசிச் சரிசெய்தார்கள்.

ஆனால் நம்பமுடியாத ஒரு விசயம் நடந்தது. திருமணம் நடந்த கோயிலில் அவனுடைய சித்தப்பா படம் பிடிப்பதற்கு ஒரு பையனை அமர்த்தியிருந்தார். இலக்கக்காமிராக்கள் பிரபலமாகாத காலம். படச்சுருள் பழுதாகி ஒரு படமும் தப்பவில்லை என்று சித்தப்பா எழுதியபோது அவனுக்கு அடக்க முடியாத கோபம் வந்தது. விநோதினியின் முகத்தை நினைக்கப் பார்த்தான். அது மனதில் வரவே இல்லை. அவளுக்கும் அவன் முகம் நினைவில் இருக்கிறதோ என்னவோ. அதுதான் பெயர் அட்டையைக் காவியபடி நின்றான். யாராவது இளம் பெண் தனியாக வண்டி தள்ளிக்கொண்டு வந்தால் அவளை உற்றுப் பார்த்தான். அவள் தாண்டிப் போனதும் இன்னொரு பெண் ஜீன்ஸ் அணிந்து நீண்ட கைப்பையைத் தோளிலே தொங்கவிட்டபடி அசைந்து அசைந்து வந்தாள். நீண்டநேரப் பயணத்தில் வருபவள் போலவே இல்லை. மியூசியத்தைப் பார்க்க வந்தவள்போல இரண்டு பக்கமும் பார்த்தபடி சாவதானமாக நடந்து போனாள். இவன் அட்டையை அவள் பக்கம் திருப்பினான். அவளாக இருந்தால் நல்லாயிருக்கும். அவள் அப்படியே நகர்ந்து போய்விட்டாள்.

அவனுடைய மனைவியின் நடையை ஞாபகப்படுத்திப் பார்த்தான். கொஞ்சம் முன்சாய்ந்த நடை. சிலவேளை விழுந்துவிடுவாளோ என்றுகூட அவன் நினைத்ததுண்டு. சற்றுக் குனிந்து மேல்கண்ணால் பார்த்துக் கதைப்பாள். என்ன சொன்னாலும் திருப்பி ஒன்றைச் சொல்லுவாள். ‘கிக் கிக்’ என்று பெரிதாகச் சத்தம் போட்டுச் சிரிப்பாள். அவள் இருக்கும் இடம் கலகலப்பாக இருக்கும். அவனுக்கு ஏற்றமாதிரி பெண்ணைச் சித்தப்பா தேர்வு செய்ததில் அவனுக்கு மகிழ்ச்சிதான். ஆனாலும் அவரை நினைக்க நினைக்கக் கோபமாக வந்தது. இப்படி ஏமாற்றிவிட்டார். திருமணப்படம் ஒன்றுகூட அவனிடம் இல்லாமல்போனது அவரால் தான். மனைவியின் முகத்தில் ஞாபகம் இருப்பது அவளுடைய கண்கள்தான். ‘தீக்கோழிபோல உனக்குப் பெரிய கண்கள்’ என்று சொல்லியிருக்கிறான். அவள் உடனே ‘உங்களுக்குத் தெரியுமோ, தீக்கோழியின் மூளை அதன் கண்களிலும் பார்க்கச் சிறியது’ என்றாள். அவள் சொன்னது உண்மைதான் என்று பின்னர் தெரிந்தது,

ஒன்றிரண்டு பழுப்புத் தோல் நிறப் பெண்கள் வந்தார்கள். இவர்களில் யாராவது விநோதினியாக இருக்கலாம் என்று நினைத்தான். தூரத்தில் சேலையுடுத்திய பெண் ஒருத்தி வந்தாள். பக்கத்தில் ஒரு சிறுவனும் வந்ததால் அவளாக இருக்க முடியாது. மணமுடித்த மூன்றாவது நாள் அவன் புறப்படுமுன் மாடியில் அமர்ந்து அவளுடன் பேசிக்கொண்டிருந்தான். அவள் கேட்டாள் ‘நீங்கள் சிஷிமிஷிஇல் வேலை பார்க்கிறீர்கள். அப்படி என்றால் என்ன?’ ‘அமெரிக்காவில் சி.ஐ.ஏ இருப்பதுபோல இந்தியாவில் ரோ இருப்பதுபோலக் கனடாவில் இதுதான் உளவுத்துறை.’ ‘அப்படியென்றால் நீங்கள் ஜேம்ஸ்பொண்ட் போலத் துப்பாக்கியுடன் நாடு நாடாகச் சென்று கொலை செய்வீர்களா?’ ‘அப்படியெல்லாம் இல்லை. முழுக்க முழுக்கக் கணினியின் முன் உட்கார்ந்து செய்யும் வேலைதான். குறியீட்டியல் படித்திருக்கிறேன். சங்கேத வார்த்தைகளில் பரிமாறப்படும் ராணுவ ரகஸ்யங்களை உடைத்துக் கொடுப்பதுதான் என் வேலை. 10 சதவீதம் மூளைக்கு வேலை; மீதியைக் கணினி செய்துவிடும்.’ ‘ஓ, நான் படித்திருக்கிறேன். ஜூலியஸ் சீசர்தான் முதன்முதலில் 2000 வருடங்களுக்கு முன்னரே யுத்த உத்தரவுகளைக் குறியீட்டு முறையில் அனுப்பினான் என்று. ஓர் எழுத்துக்குப் பதில் மூன்றாவது எழுத்தைப் பாவிப்பான். கிக்கு பதிலாக ஞி; ஙிக்குப் பதிலாக ணி என்று எழுதுவான்.’ ‘இந்தக் காலத்தில் இப்படிச் சங்கேத வார்த்தைகளில் தகவல் அனுப்பினால் அதை 10 வயது பள்ளி மாணவன் உடைத்துவிடுவான். இப்பொழுதெல்லாம் அதிநவீனக குறியீட்டு முறைகளைப் பயன்படுத்துவதால் மனித மூளையால் அவற்றை உடைக்கவே முடியாது. அதிவேகமான கம்ப்யூட்டர்கள் உதவுகின்றன. அப்படியும் சில தகவல்களை முறிக்க இரண்டு மாதமாகி அவை பயனற்றதாகிவிடும்.’

‘நான் உங்களுக்குக் கடிதங்களைக் குறியீட்டு முறையில் அனுப்பினால் அவற்றை அவிழ்த்துப் படிப்பீர்களா?’ ’முயற்சி செய்கிறேன்’ என்றான் அவன் சிரித்துக்கொண்டே. ஆனால் ஒரு குறியீட்டுக் கடிதம்கூட அவளிடமிருந்து வரவில்லை. 8ஆம் வகுப்பு மாணவி போலத்தான் எழுதினாள். ‘எப்ப வருகிறீர்கள்? குளிக்கிறீர்களா? சாப்பிடுகிறீர்களா? உடம்பைப் பாருங்கள். உங்கள் நினைவாகவே இருக்கு. இங்கே வரும் சந்திரன்தான் அங்கேயும் வருவானா? ’நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் நெருப்பாய் எரிகிறது’ என்ற கண்ணதாசனின் வரிகள் எனக்காகவே எழுதப்பட்டவை என்று நினைக்கிறேன். காலண்டரில் ஒரு நாளைக்கு இரண்டு தாள்களாகக் கிழிக்கிறேன். அங்கே மாலை நாலு மணிக்கே இரவு வந்துவிடுமாம். நானும் உங்களைப் போல மாலையே தூங்கப் போய்விடுகிறேன். அப்பொழுதுதானே அடுத்தநாள் காலை சீக்கிரமாக விடியும்’ இப்படியெல்லாம் எழுதுவாள்.

அவனுக்கு முன் ஒரு பெண் நின்றாள். அவன் நிமிர்ந்து பார்த்தபோது திடுக்கிட்டுவிட்டான். சேலையுடுத்தி அதற்குமேல் ஒரு மெல்லிய கோட் அணிந்திருந்தாள். சரோஜாதேவி போடுவதுபோல உயரமான கொண்டை. பழுப்பு நிறம். முடிவடையாத முகம். தள்ளுவண்டியில் இரண்டு பயணப்பெட்டிகள். அதற்குமேல் பயணப்பை. இவன் ஒன்றுமே பேசாமல் அவளுக்கு என்ன வேண்டும் என்பதுபோலப் பார்த்தான். ‘தெரியவில்லையா? நான்தான் உங்கள் மனைவி விநோதினி ரத்தினராசா’ என்று அவருடைய பெயரட்டையைச் சுட்டிக் காட்டினாள். தன்னை அவனுக்கு அடையாளம் தெரியவில்லையே என்பதில் ஏமாற்றமும் துயரமும் முகத்தில் தெரிந்தது. தண்ணீருக்கு அடியில் ஒருவர் சிரிப்பதுபோல அவனைப் பார்த்துச் சிரித்தாள்.

குறியீட்டியல் நிபுணரின் முகத்தில் அதிர்ச்சி. அவனால் நம்பமுடியவில்லை. அவன் பாவிக்கும் அதிவேகக் கணினிபோல மூளை வேலை செய்தது. இந்தப் பெண் ஓர் அங்குலம் கட்டையாகத் தெரிந்தாள். உடல் மெலிந்து அதே பருமனில் இருந்தாலும் அவளிடம் இருந்த மிடுக்கு இல்லை. முகத்தைப் பார்த்தபோது ஏதோ சதி நடந்துவிட்டது போன்ற உணர்வு. ஒரு பக்கம் முகம் பளிச்சென்று இருந்தது. மறு கன்னத்தில் சந்திரனில் இருப்பதுபோலத் திட்டுத் திட்டான கறுப்பு. வசந்தகுமாரன் ‘நீங்கள் தவறான இடத்தில் நிற்கிறீர்கள். நான் என்னுடைய மனைவிக்காகக் காத்திருக்கிறேன்.’ ‘அது நான்தான்.’ அவள் குரல் தழுதழுக்க ஆரம்பித்தது. சுற்றிலும் நின்றவர்கள் திரும்பிப் பார்த்தார்கள். அவள் கைப்பைக்குள் கையைவிட்டுக் கடவுச்சீட்டை வெளியே எடுத்து நீட்டிப் ‘பாருங்கள்’ என்றாள். விநோதினி ரத்தினராசா. அவளுடைய படம்தான். அதில் பதிந்த கையெழுத்தும் அவளுடையதுதான். மாதத்துக்கு நாலு என்று வந்த அவளுடைய கடிதங்களில் காணப்பட்ட அதே கையொப்பம்தான்.

என்ன செய்வதென்று தெரியவில்லை. வண்டியைப் பிடுங்கித் தானே தள்ளினான். அவள் பின்னே தலை குனிந்து பாவமாகத் தொடர்ந்தாள். போகும் வழியில் தரிப்பிடக் காசைக் கட்டிவிட்டுச் சாமான்களைக் காரில் ஏற்றி அவளுக்குக் கதவைத் திறந்துவிட்டான். காரில் ஏறியபின்னர் அவளுக்கு இருக்கை பெல்ட் கட்டத் தெரியவில்லை. அதையும் சொல்லித் தந்தான். அடுத்த கணமே நெடுஞ்சாலையை நோக்கி வேகமாகக் காரைச் செலுத்தினான். அவள் பக்கத்தில் உட்கார்ந்து ஆகாயத்தையும் மரங்களையும் கட்டிடங்களையும் பார்த்தாள். ஒன்றைப் பார்த்து முடிவதற்குள் கார் வேகமாகக் கடந்துவிடுவதால் கழுத்தை வளைத்து வளைத்துப் பார்க்கவேண்டி வந்தது. தண்ணீர் கலந்ததுபோலச் சூரிய வெளிச்சம் பலகீனமாக விழுந்து கொண்டிருந்தது. கார்கள் ஏதோ இடிப்பதுபோல எதிர்திசையில் வேகமாக வருவதும் வெளிச்சம் ஒன்றையொன்று வெட்டிப் போவதும் கண்களை எடுக்காமல் அவளைப் பார்க்க வைத்தன.

யங் வீதியைத் தாண்டும் வரைக்கும் அவன் அவளுடன் ஒரு வார்த்தை பேசவில்லை. அதிர்ச்சியிலிருந்து மீள நேரம் தேவைப்பட்டது. போலரொய்ட் காமிராவில் எடுத்த படம் மெல்ல மெல்லத் துலங்குவதுபோல அவன் மூளை அப்போதுதான் மெதுவாகச் சமநிலைக்குத் திரும்பி வேலை செய்ய ஆரம்பித்தது. அவன் தாலி கட்டியதும் மூன்று நாள் சேர்ந்து வாழ்ந்ததும் இந்தப் பெண்ணல்ல என்பது அவனுக்கு நிச்சயமாகத் தெரிந்தது. ஆனால் எப்படி இவள் அதே பெயருடன் வந்து நிற்கிறாள்? அவனுடைய மனைவி என்று வாய்கூசாமல் சொல்கிறாளே! கனடிய உளவுப் பிரிவில் வேலை செய்யும் ஒருவனை அத்தனை சுலபமாக ஒரு கிராமத்துப் பெண்ணால் ஏமாற்றிவிட முடியுமா?

வீட்டுக்கு வந்தவுடன் அவள் மிரள மிரள விழித்தாள். எசமான் முகத்தை வேலைக்காரி பார்ப்பதுபோல உத்தரவுக்காகக் காத்து நின்றாள். அவளுக்குக் கனடா புதிது, வீடு புதிது, கணவன் புதிது. வசந்தகுமாரனுக்கு அவளைப் பார்க்க இரக்கமாக இருந்தது. சூழ்ச்சி செய்யும் ஒரு பெண் போலவே அவள் இல்லை. இதுவெல்லாம் சித்தப்பாவின் சதி. ஒரு பெண்ணுக்குத் தாலி கட்டவைத்து இன்னொரு பெண்ணை அனுப்பியிருக்கிறார். அவளுக்கு ஒரு படுக்கையைக் காட்ட அவள் படுத்துக்கொண்டாள். சித்தப்பாவைத் தொலைபேசியில் அழைத்துக் கடுமையாகத் திட்டினான். அவருக்குக் கோபம் வந்தது. ‘என்ன விசர்க் கதை கதைக்கிறாய். அதுதான் நீ தாலி கட்டிய பெண். உன்னை நம்பி வந்திருக்கிறாள். திருப்பி அனுப்பாதே. இது என்ன சூப்பர்மார்க்கெட்டில் வாங்கும் சாமானா?’ அன்றிரவு முழுக்க அவன் உறங்கவில்லை.

அடுத்தநாள் காலை அவளுக்குச் சமையலறை யந்திரங்களை எப்படி இயக்குவது என்று மூளைக் குறைபாடு உள்ள ஒருவருக்குக் கற்பிப்பதுபோல மெதுவாகச் செய்து காட்டினான். என்ன பொருட்கள், எங்கே இருக்கின்றன, என்ன செய்ய வேண்டும், என்ன செய்யக் கூடாது என்பதையும் சொல்லிக்கொடுத்தான். அவளைக் கொடுமைப்படுத்தி என்ன பிரயோசனம்? அவன்தான் உண்மையைக் கண்டுபிடிக்க வேண்டும். அவளிடம் நேரிலேயே கேட்டான். ‘அச்சுவேலிக் கிராமத்துக் கோயிலில் 1999ஆம் ஆண்டு மே மாதம் 20ஆம் தேதி நான் தாலி கட்டியது யார் கழுத்தில்?’ ‘அது நான்தான்’ என்றாள். சட்ட ஆலோசகரிடம் யோசனை கேட்டான். ‘நீங்கள் இந்தப் பெண்ணைத்தான் சட்டப்படி மணமுடித்திருக்கிறீர்கள். திருமணச் சான்றிதழில் அவள் பெயர்தான் காணப்படுகிறது. கடவுச் சீட்டில் அவள் படம், அத்துடன் கையொப்பம்கூடச் சரியாகத்தானே இருக்கிறது. நீங்கள் வேறு ஒரு பெண்ணின் கழுத்தில் தாலி கட்டியதற்கு என்ன அத்தாட்சி? ஒரு புகைப்படம்கூட இல்லையே. கோர்ட் இதை ஏற்காது. பெண் நல்லவராகத் தெரிகிறார் என்று வேறு சொல்கிறீர்கள். அப்ப என்ன பிரச்சினை?’ என்றார்.

அப்படித்தான் வசந்தகுமாரன் சேர்ந்து வாழத் தொடங்கினான். வாழ்க்கையும் மகிழ்ச்சிகரமாகப் போனது. ஆனாலும் அவனுக்கு மனதின் அடியில் ஒரு நெருடல் இருந்துகொண்டே வந்தது. அவன் தாலி கட்டிய பெண் வெடுக் வெடுக் என்று பதில் கூறுவாள். நடக்கும்போது உடை மடிப்புகள் உரசும் சத்தம் எழும். எதையோ பார்த்து அதிர்ச்சியடைந்தது போலப் பெரிய கண்கள். அவளை அணுகும்போதெல்லாம் அவனுக்கு இதயத்தின் படபடப்பு நிமிடத்துக்கு நிமிடம் அதிகமாகும். அவள் ‘பைபை’ என்றோ ‘டாட்டா’ என்றோ சொல்லாமல் ‘சீரியோ’ என்றுதான் சொல்வாள். விமான நிலையத்துக்கு அவன் கிளம்பியபோது ‘சீரியோ’ என்றுதான் விடைகொடுத்தாள். விநோதினிக்கு அந்த வார்த்தையே தெரியவில்லை. ஒருநாள் சோதிப்பதற்காக அலுவலகத்துக்குப் புறப்பட்டபோது ‘சீரியோ’ என்று சொல்லிப் பார்த்தான். அவள் ‘சரி, போயிட்டு வாங்கோ’ என்றாள்.

அவர்களுக்கு ஒரு குழந்தை பிறந்தபோது யுகேஷ் என்று பெயர் வைத்தார்கள். தனிமையில் இருக்கும்போது வசந்தகுமாரன் யோசிப்பான், இனி வாழ்க்கையில் என்ன வேண்டும் என்று. அவன்மேல் அத்தனை அன்பாக இருக்கும் மனைவி. கனடாவுக்கு வந்து இரண்டு ஆண்டுகளில் அவனுடன் ஒரு சின்னச் சண்டைகூடப் பிடித்ததில்லை. ஒருநாள் யுகேஷ் காலையும் கையையும் ஆட்டியபடி கிடப்பதைப் பார்த்து ரசித்தபடி இருந்தான். விநோதினி தேநீர் கோப்பையைக் கொண்டு வந்து அவன் முழங்காலுக்கு முன்னால் வைத்துவிட்டுப் பக்கத்தில் அமர்ந்தாள். யுகேஷ் நடுவிலே கிடந்தான். திடீரென்று யுகேஷ் திரும்பி வயிற்றிலே படுத்தான். இவர்களால் நம்பமுடியவில்லை. அவனை மறுபடியும் திருப்பிப் போட்டார்கள். கால்களையும் கைகளையும் போட்டு ஆட்டினான். கவிழ்த்துப்போட்ட கரப்பான் பூச்சி கால்களை உதைப்பதுபோல உதைத்தான். பின்னர் திடீரென்று வயிற்றிலே போய் விழுந்தான். அந்தக் காட்சியைப் பார்த்துக் கணவனும் மனைவியும் விழுந்து விழுந்து சிரித்தார்கள். அதுதான் முதல் தடவை அவர்கள் ஒன்றாகச் சிரித்தது.

வசந்தகுமாரனின் அலுவலகத்தில் 1984ஆம் ஆண்டிலிருந்து சேகரிக்கப்பட்ட உடைக்க முடியாத சங்கேதத் தகவல்கள் ஒரு கோப்பில் கிடந்தன. அவற்றை அவ்வப்போது யாராவது பயிற்சிக்காக உடைக்க முயல்வார்கள். ‘உடைக்க முடியாத புதிர்கள் பட்டியல்’ என அதற்கு பெயர். ஒருநாள் அலுவலகத்தில் அதிமுக்கியமான தகவல் ஒன்று அவன் மேசைக்கு வந்தது. மேலாளர் அதை எப்படியும் சீக்கிரத்தில் உடைத்தே ஆக வேண்டும் என உத்தரவிட்டிருந்தார். அல்லது அதுவும் பட்டியலில் சேர்ந்துவிடும். இரண்டு நாளாக அந்தப் புதிரை உடைக்க முயன்றான். தகவல் யாரிடமிருந்து யாருக்குப் போனது, என்ன தேதி போன்ற விவரங்கள் மறைக்கப்பட்டிருந்தன. மறைமொழியில் இருந்ததை விடுத்து ஆங்கிலத்தில் எழுதினான். ஒரு வசனம் அவனுக்கு வியப்பை உண்டாக்கியது. ‘பல சமயங்களில் உண்மை மோசமானது; பொய்தான் சுகமானது.’ அவனுக்கு விநோதினியின் நினைப்பு வந்தது. வேலையை உடனே நிறுத்திவிட்டு அவளைப் பார்க்க ஒருவரிடமும் சொல்லிக்கொள்ளாமல் வீட்டுக்குப் புறப்பட்டான்.

பின்மதியம் 3 மணி. கள்ளம் செய்துவிட்ட சந்தோஷம் அவன் முகத்தில் தெரிந்தது. கதவு திறந்த சத்தத்தைக் கேட்டு மனைவி சமையலறையில் இருந்து ஓடிவந்தாள். பாதிரிமார் பைபிளை நெஞ்சோடு பிடிப்பதுபோலக் கரண்டியை நெஞ்சோடு அணைத்துக்கொண்டு அவன் முன்னால் இளைக்க இளைக்க நின்றாள். முகத்திலே பரவசம். எதற்காக இப்படி ஓடி வருகிறாள்? கழுத்தில் கொலர் வைத்துக் கால்மட்டும் நீண்ட வீட்டு உடை அணிந்திருந்தாள். முகத்து வியர்வையில் முன்மயிர் விழுந்து ஒட்டியிருந்தது. கறுப்புத் திட்டுக் கன்னம்கூடப் பளிச்சென்று மின்னியது. ‘திரும்பிப் போக வேண்டுமா?’ என்று கேட்டாள். அவன் இல்லை என்றதும் அப்படியே கரண்டியுடன் சேர்த்து அவனைக் கட்டிக்கொண்டாள். அவன் அவளுக்கு ஒன்றுமே செய்தது கிடையாது. ஆனால் அவனைக் கண்டதும் அவளுக்கு அத்தனை அன்பு பீறிட்டுக்கொண்டு வந்தது. அவர்கள் வாழ்க்கையில் புதிய அத்தியாயம் தொடங்கியது.

பனிக்காலம் வந்தது. 11ஆம் மாடியில் இருந்த அலுவலக யன்னல் வழியாக வசந்தகுமாரன் வெளியே பார்த்தான். ஆகாயம், மரம், நிலம் சகலதும் வெள்ளை மயம். அட்சரேகை, தீர்க்க ரேகை எல்லாமே மறைந்துவிட்டன. பனித்திவலைகள் மேலேயிருந்து கீழே கொட்டுகின்றனவா அல்லது நிலத்திலேயிருந்து உற்பத்தியாகி மேலே பறக்கின்றனவா என்பது தெரியவில்லை. தொலைபேசி ஒலித்தது. இலங்கையிலிருந்து வந்த அழைப்பு ஆச்சரியத்தைக் கொடுத்தது. ஒரு பெண்குரல் ‘நீங்கள் வசந்தகு மாரன்தானே?’ என்றது. ‘ஓம், நீங்கள் யார்?’ என்றான். ‘மூன்று நாட்கள் உங்களுடன் வாழ்ந்திருக்கிறேன்’ என்றாள். வெலவெலத்துப்போய் ஒரு முழு நிமிடம் பேசாமல் நின்றபின் ‘உங்களுக்கு என்ன வேணும்?, என்றான். ‘ஒன்றுமே வேண்டாம். என்ரை கழுத்தில் நீங்கள் கட்டிய அம்மன் தாலி இன்னும் தொங்குகிறது. நான் அதைக் கழற்றமாட்டேன். ஒருவேளை என்னைத் தேடி நீங்கள் இங்கே வரலாம். வரவேண்டாம். நான் நிரந்திரமாக வெளிநாடு போகிறேன். அதைச் சொல்லத்தான் எடுத்தேன்.’ ‘எதற்காக அப்படிச் செய்தாய்? உனக்கு அது ஒரு தொழிலா?’ ‘சேவை என்றல்லவோ நான் நினைத்தேன்.’ ‘அந்தப் பெண் நீதான் என்று நான் எப்படி நம்புவது?’ ‘சீரியோ’. டெலிபோன் வைக்கப்பட்டது.

அவன் கைகள் வெகுநேரம் நடுங்கின. விநோதினியிடம் என்ன என்ன கேட்க வேண்டும், என்ன என்ன தன்னிடமே வைத்துக்கொள்ள வேண்டும் என்பதைத் திட்டமிட்டு முடிவு செய்தான். தொலைபேசி வந்த விசயத்தை அவளிடம் சொல்லவே கூடாது. எத்தனை பெரிய பொய்? அவன் பார்த்ததில் விநோதினிதான் ஆகப் பெரிய புதிர். மீன் நீந்தி வந்த பாதையைக் கண்டுபிடிக்கலாம். ஆனால் அவள் மூளை ஓடும் பாதையைக் கண்டுபிடிக்கவே முடியாது. சாவியை நுழைத்து வீட்டுக் கதவைத் திறந்ததும் சமையலறையிலிருந்து விநோதினி துள்ளியபடியே ஓடிவந்தாள். பத்து வருடம் காணாததுபோல முகத்திலே எத்தனை மகிழ்ச்சி. பரவசம். அவன் மேலங்கியைக் கழற்ற முன்னரே காலையில் யுகேஷ் என்ன செய்தான், என்ன விளையாடினான், என்ன புது வார்த்தை சொன்னான் என்று முழு விவரங்களையும் நிறுத்தாமல் ஒப்புவித்தாள். அவள் முகத்தில் ஓடிய பெரும் மகிழ்ச்சியை ஒரேயொரு கேள்வி துயரமாக மாற்றிவிடும்.

இரவு குழந்தையைத் தூங்கப்பண்ணிய பிறகு மெதுவாக வசந்தகுமாரன் பேச ஆரம்பித்தான். அவன் வாயை திறந்ததும் அவள் முகம் மாறியது. கண்களில் இருந்து நீர் கொட்டத் தொடங்கியது. ‘எத்தனைதரம்தான் ஒரே கேள்வியைக் கேட்பீர்கள். மருந்துக்கடையில் வாங்கும் மருந்துக்குக்கூட முடிவு தேதி உண்டு. உங்கள் கேள்விக்கு முடிவு தேதி கிடையாதா? நான்தான் உங்கள் மனைவி. இதில் என்ன சந்தேகம். இவன் யுகேஷ், எங்களுக்குப் பிறந்தவன். இத்தனை வருடத்தில் அதை வாங்கித்தா இதை வாங்கித்தா என்று எப்பவாவது கேட்டேனா? நீங்கள் என்ன குற்றம் சாட்டினாலும் நான் என் நியாயத்தைச் சொல்ல முடியும். ஆனால் என் நேர்மையைச் சந்தேகித்தால் என்னால் என்ன செய்ய முடியும்?’ அவள் விம்மத் தொடங்கினாள்.

‘என்னுடைய அன்பு ஒன்றும் குறையாது. உண்மையைச் சொல்லும். நான் உமக்குக் கட்டியது அம்மன் தாலி. உம்முடைய கழுத்தில் இருப்பதோ பிள்ளையார் தாலி. இது எப்படி நடந்தது? உண்மையைச் சொன்னால் ஞாபகம் வைக்கவேண்டிய அவசியமே இல்லை.’ ‘நீங்கள் கட்டியது பிள்ளையார் தாலி. அதுதான் என் கழுத்தில் இருக்கிறது.’ இப்படி உரக்கக் கத்தியபடியே விநோதினி அழத் தொடங்கினாள். அழுகை பெரிதாகி அவள் கேவத் தொடங்கியபோது குழந்தை எழும்பிவிடுவானோ என்ற பயம் தோன்றியது. ‘சரி, சரி. நிறுத்தும். எனக்குப் பதில் வேண்டாம். எப்பக் கேட்டாலும் இதேதான். எனக்குத் தெரியும் பொய் என்று. உமக்கும் தெரியும் பொய் என்று. அவசியமில்லாமல் எங்கள் வாழ்க்கை நரகமாகிக்கொண்டு வருகிறது.’

அவள் முழங்காலில் தலை வைத்து அழுதுகொண்டே இருந்தாள். வசந்தகுமாரனுக்குத் தெரியும் பிரி தேய்ந்த நட் சுழலுவதுபோல அவளிடம் இருந்து ஒரே பதில்தான் வரும் என்று. நேரம் முடிவில்லாமல் ஓடிக்கொண்டிருந்தது. கணினியில் மின்நுனி ஒளிர்ந்து ஒளிர்ந்து அடுத்த வசனத்துக்குக் காத்து நிற்பதுபோலக் காத்து நின்றான். அப்படியே சரிந்து தூங்கியும் விட்டான். இரவு இரண்டு மணி இருக்கும். திடீரென்று முழிப்பு வந்து தலையை நிமிர்த்திப் பார்த்தபோது அவன் அதிர்ச்சியடைந்தான். அவள் அந்த இடத்தைவிட்டு நகரவேயில்லை. தலைவாரி இழுத்து, முகத்தைக் கழுவித் துடைத்துப் பளபளப்பாக ஆக்கிக்கொண்டு, அவனையே உற்றுப் பார்த்தவாறு உட்கார்ந்திருந்தாள். அவள் முகம் ஒரு பக்கம் பிரகாசமாகவும் மறுபக்கம் சந்திரனின் கறுப்புத் திட்டுப்போலவும் இருந்தது.

‘நான் உங்களுக்கு உள்ளதைச் சொல்லப் போகிறேன். இந்த விசயத்தை இனிமேல் நீங்கள் என்னிடம் கேட்கக் கூடாது. இது எங்களுக்காகவும் எங்கள் குழந்தையின் எதிர்காலத்துக்காகவும்.’ அந்தக் கணத்தில் அவன் மனம் உருகியது. ‘எத்தனை கொடூரமாக நடந்துகொண்டேன்’ என்று நினைத்தான். ‘நீங்கள் சத்தியம் செய்து கொடுக்க வேண்டும்.’ ‘சத்தியம்’ என்றான் வசந்தகுமாரன். ’நீங்கள் தாலி கட்டிய பெண் வேறு யாருமல்ல. அது நான்தான்’ என்றாள் சிரித்துக்கொண்டே.

அலுவலகத்தின் உடைக்க முடியாத புதிர்கள் பட்டியலில் அதையும் சேர்க்க வேண்டும் என்று வசந்தகுமாரன் நினைத்துக் கொண்டான்.

– ஜனவரி 2014

Print Friendly, PDF & Email

1 thought on “அது நான்தான்

  1. புதிரே உன் பெயர் தான் பெண்ணோ ? தமிழ் அழகு. இலங்கை தமிழ் கொள்ளை அழகு! இன்னும் ஆங்கிலம் கலக்காமல் கதை எழுத உங்களால் மட்டும் முடிகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *