அதுவும் ஒரு மழைக்காலம்

1
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: December 7, 2012
பார்வையிட்டோர்: 10,543 
 

1980 ஜூலை.

“மழையும் அதுவுமா பால்கனியில என்ன பண்ணிட்டு இருக்கே கமலா?”

“உஷ்… சத்தம் போடாதீங்க. சென்னையில மழையே அபூர்வம். அதைவிட அதிசயம், தண்ணி கொடகொடன்னு கொட்டாம சில்லுனு சாரலை மட்டும் முகத்துல தெளிக்கிற இந்த பால்கனி. வாங்க, நீங்களும் வந்து கொஞ்சம் நில்லுங்களேன் தியாகு.”

“சரிதான், உங்க அம்மா சொன்ன மாதிரி… நீ சரியான மழைப் பைத்தியம்தான். ஆனா, நீ பெத்ததைப் பாரு. ஒரு மூலையில மூஞ்சியைத் தூக்கிவெச்சிட்டு உட்கார்ந்திருக்கு.”

கணவன் சொன்னதும்தான் தலையை மட்டும் ஹாலுக்குள் நுழைத்து அஸ்வினைத் தேடினாள் கமலா. லேசாக ஆடிய ஊஞ்சலில் தலை கவிழ்ந்து இருந்தான் அவளின் பாலகன். மனசுகொள்ளாமல் மழையிடம் இருந்து பிய்த்துக்கொண்டு மகனிடம் சென்றாள்.

“ஏன்டா அஸ்வின் டல்லா இருக்கே?”

அவன் அவளை ஏறெடுத்தும் பார்க்கவில்லை.

“மழையால ஸ்கூலுக்கும் லீவுகூட விட்டாச்சு. அப்புறம் என்ன ஆச்சு என் செல்லத்துக்கு?”

இப்போதும் அவனிடம் சலனம் இல்லை.

“ஸ்கூல்ல யார்கூடயாவது சண்டையா அஸ்வின்?” – கலவரத்துடன் அவன் தலை தொட்டாள். அவசரமாக அஸ்வின் தலை மட்டும் இடம் வலமாக ‘இல்லை’ என்று ஆட, சற்றே நிம்மதி படர்ந்தது கமலாவிடம்.

“பின்ன எதுக்குடா கப்பல் கவுந்தவனாட்டம் கவுந்தடிச்சு உட்கார்ந்து இருக்கே. மழை ஜோராப் பெய்யுது. உள்ள போய் ஆர்ட் பேப்பர் எல்லாம் எடுத்துட்டு வா. விதவிதமாக் கப்பல் பண்ணி, தண்ணியிலவிடலாம். நீ கேட்டா அப்பாகூட ஜாயின் பண்ணிப்பார். என்னங்க அப்படித்தானே” – கமலா கணவனைத் துணைக்கு அழைத்தாள்.

“ஆளை விடுங்க சாமி! அஸ்வின். நீ வேணா… உங்க அம்மாவுக்கு ஜோடியா மழைப் பைத்தியமா இரு. நான் ஜம்முனு துங்கப்போறேம்ப்பா. தேங்க்ஸ் டு மழை. திடீர் ஹாலிடே!”

தியாகு ஈஸியாகக் கழன்று பெட்ரூம் போய்விட்டார்.

“அஸ்வின், நீ குட் பாய்தானே. மழை சூப்பரா இருக்குடா… கொஞ்சம் வெளியில வந்துதான் பாரேன்.”

மனசு பால்கனியிடம் மறுபடி தாவியபோது, கமலாவின் முகமும் தானாகத் திரும்பியது.

“எனக்குப் பிடிக்கலம்மா… மழையை சுத்த மாப் பிடிக்கலை.”

சின்ன வாய் திறந்து அஸ்வின் அழுத்தமாகப் பேசியபோது, துணுக்குற்றுத் திரும்பினாள் அவள். அதிர்ச்சி அலை அலையாக எழும்ப… “ஏன்டா அப்படிச் சொல்றே” என்றபோது, குரல் அவளுக்கே ஈனஸ்வரத்தில்தான் கேட்டது.

“பின்னே என்னம்மா… ஸ்கூல்ல இருந்து ஆட்டோ ரிக்ஷால வரும்போது பார்த்தேன்… உதயம் தியேட்டர்கிட்ட ரோட்ல படுக்கிறவங்கள்லாம் எவ்ளோ கஷ்டப்படுறாங்க தெரியுமா? எல்லாரும் சொட்டச் சொட்ட நனைஞ்சிட்டாங்க. யாருக்கும் நிக்கக்கூட இடம் இல்லை. இன்னிக்கு நைட் அவங்க எல்லாம் எங்க சாப்பிடுவாங்க… எப்படிப் படுப்பாங்க? இதெல்லாம் சாமி யோசிக்க வேணாம்? எனக்கு மழையும் பிடிக்கலை. மழையைக்கொண்டு வந்த அந்த சாமியையும் பிடிக்கலை.”

இதற்கு மேல் பேச வராததாலோ என்னவோ, அஸ்வின் தேம்பித் தேம்பி அழத் தொடங்கினான். துடித்துப்போன கமலா, மகனைச் சட்டெனக் கட்டிக்கொண்டு, “அழாதடா… அழாதடா என் செல்லம். நாம வேணா ரெய்ன் ரெய்ன் கோ அவே பாடலாமா? என்று கேட்க, அஸ்வின் முகத்தில் ஆயிரம் வாட்ஸ் பல்பு.

“ரெய்ன் ரெய்ன் கோ அவே

கம் அகெய்ன் அனதர் டே

லிட்டில் சாமி வான்ட்ஸ் தட் வே

ரெயின் ரெயின் கோ அவே”

– மகனைக் கட்டிக்கொண்டு வானம் பார்த்துப் பாடியபோது, உள்ளே சகலமும் நெகிழ்ந்தது கமலாவுக்கு!

1990 ஆகஸ்ட்

இந்த மாதத்தில் எதிர்பார்க்கும் சனியன் பிடிச்ச மழைதான் என்றாலும், இப்போது எல்லாம் மழை ரசிப்பதில்லை கமலாவுக்கு. மழை வந்துவிட்டாலே, 10 வயசு அஸ்வினாக மனம் மாறிவிடுகிறது. எத்தனை ஆயிரம் பேர் குளிரில் நடுங்குகிறார்களோ. எத்தனை பேருக்கு வீடு வாசல், ஆடு, மாடு பறிபோகுமோ என சஞ்சலமாகிவிடுகிறது.

“கடவுளே! மழை அவசியம்தான். ஆனா, ஜனங்களை ரொம்பக் கஷ்டப்படுத்தாம சட்டுனு நிறுத்திடு. இல்லைன்னா, கொஞ்சம் விட்டுவிட்டாவது மழை பெய்யட்டும்” என்று அவசர வேண்டுதல் நடத்துவாள் கமலா.

காலேஜுக்குப் போன மகன் அஸ்வின் பத்திரமாக வீடு திரும்ப வேண்டுமே என திடீர்க் கவலை வந்தது. தியாகுபற்றி கவலை இல்லை. அவர் டூரில் எங்கோ கடல் தாண்டி தாய்லாந்தில் இருக்கிறார். இங்கே இருந்தால், வெங்காயப் பக்கோடா போடு. கற்பூரவல்லி பஜ்ஜி போடு எனப் பிடுங்கி எடுத்திருப்பார் என்று நினைப்பு ஓட, அவளுக்குமே நாக்கு ஊறி நப்பாசை எட்டிப்பார்த்தது. வெங்காயப் பக்கோடா போட்டால்தான் என்ன? மழைக்கு இதமாக இருக்குமே என நினைத்து, செயல்படுத்த ஆரம்பித்துவிட்டாள்.

அரை மணி நேரத்துக்குள் வெங்காயப் பக்கோடாவும் டீயும் ரெடி. மீண்டும் அஸ்வின் நினைப்பு வர, பால்கனியில் நின்றபடி எட்டிப்பார்த்தபோது, தெரு முனையில் மொத்தமாக நனைந்து சிரித்துக்கொண்டே நின்று இருந்த அஸ்வின் தெரிந்தான். அஸ்வின் பக்கத்தில் சற்றே குள்ளமாக மிடி டி-ஷர்ட்டில் ஓர் இளம் பெண்.

யார் அது? அட, அவன்கூடப் படிக்கும் வந்தனா! அந்தப் பெண் கையை விரிப்பதும்… அவனைச் சுற்றி ஆடுவதும்… விரலால் மழையைச் சுண்டி அவன் முகத்தில் தெளிப்பதுமாக இருந்தாள். “ச்சே… நடுரோட்டுல இது என்ன கூத்து?” என்கிற அசூயையுடன் கமலா உற்றுப்பார்த்தபோதுதான் புரிந்தது… ‘மௌன ராகம்’ படத்தில் வரும் ரேவதியின் பாட்டை அந்தப் பெண் பாடிக்கொண்டு இருப்பது. யாரும் நம்மைப் பார்ப்பார்களே எனும் உணர்வு துளிகூட இல்லாமல் அவள் ஆடுவதும் இவன் சிரிப்பதுமாக ஓர் ஐந்து நிமிடப் படம் கண் முன்னே ஓட… திகைத்து நின்றாள் கமலா. அடுத்த ஐந்தாவது நிமிடத்தில் இருவரும் உள்ளே வந்தார்கள். வெங்காயப் பக்கோடாவை ஒரு தூள்கூட மிச்சம்வைக்காது முடித்து, டீ குடித்து நிமிர்ந்தார்கள்.

“சூப்பர் ஆன்ட்டி” – பச்சக் என்று கமலாவுக்கு முத்தம் வைத்துவிட்டு, அஸ்வினின் ஸ்டடி ரூமுக்குள் ரொம்ப இயல்பாக நுழைந்துகொண்டாள் வந்தனா. பெயருக்குக் கொஞ்சமாகத் திறந்து இருந்த அந்தக் கதவின் இடுக்கு வழியே இருவரின் சிரிப்பும், ஒருவர் தலையை இன்னொருவர் விளையாட்டாகத் துடைப்பதும்… தும்மல், ஜோடித் தும்மல் எனக் கலாய்ப்பதுமாக நேரம் ஓடியது. சத்தத்துடன் மழை கமலாவின் மனதிலும் பெய்தது.

திடீர் என வீட்டுத் தொலைபேசி ஒலிக்க, கமலா எடுத்தபோது எதிர் முனையில் “அஸ்வின் வீடுதானே” எனக் கரகரத்தது ஒரு பெண் குரல்.

“ஆமா, நீங்க யாரு?”

“நான் யாருங்கிறது இருக்கட்டும்… அங்க வந்தனா இருக்காளா?” – சினத்துடன் ஒலித்தது குரல்.

“வந்தனா” என இவள் உள்ளே பார்த்து அழைப்பதற்குள், கிட்டத்தட்ட போனைப் பிடுங்கியேவிட்டாள், அஸ்வின் ரூமில் இருந்து ஓடி வந்த வந்தனா. “ஏம்மா மழை கொட்டினாலும் உன் 6 மணி டைம் மாறாதா?”

“பஸ்ஸே கிடைக்கலை தெரியுமா?”

“இப்பதாம்மா அஸ்வின் வீட்டுக்கு வந்தேன். ஆன்ட்டி ரொம்ப கம்பெல் பண்றாங்க. ஒரு கப் சாயா குடிச்சிட்டு வந்திடறேன்.”

“ஓ.கே. நீ அடையே பண்ணு. தொட்டுக்க அவியல்… ஓ.கே?”

“சரி, நான் ஆன்ட்டிகிட்ட பேசிக்கறேன். சரிம்மா… சீக்கிரம் வந்துடறேன்”.

ஒரு முனையாகக் கேட்கப்பட்ட சம்பாஷணையைவைத்தே வந்தனாவையும் அவள் வீட்டையும் புரிந்து போனது கமலாவுக்கு.

“ஸாரி… ஆன்ட்டி. எங்க அம்மா கொஞ்சம் ஸ்ட்ரிக்ட் டைப். நான் நேரத்துக்கு வந்துடணும். உங்ககிட்டகூட கொஞ்சம் ரஃப்பா பேசிட்டாங்களாம். ஸாரி சொன்னாங்க.”

வந்தனா வழிந்துவிட்டுக் கிளம்பியபோது, நன்றாகக் காய்ந்து சுத்தமாகி வேறு உடை மாற்றி இருந்த அஸ்வின், மீண்டும் மழையுடன் உறவாடப்போனான். ஒரு மணி நேரம் கழித்துத் திரும்பி வந்து, தானாக ஆரம்பித்தான், “அவளை ஆட்டோவுல ஏத்திவிட்டேன். பஸ்ஸே கிடைக்கலை. ஹச்சக்…”

“ம்…”

“வந்தனா ரொம்ப ஸ்வீட் இல்லம்மா?”

“ம்…”

உன்னை மாதிரியேதாம்மா… ரொம்ப ஹெல்ப்பிங் டைப். ஹச்சக்… ஹச்சக்… ஹச்சக்…”

வெந்நீரில் தைலத்தைப் போட்டு கம்பளியால் அவனைப் போர்த்திவிட்டு, கமலா ஆவி பிடிக்கச் செய்தபோதுதான் நிம்மதியாகச் சுவாசிக்க முடிந்தது அஸ்வினால்.

“மழையே பிடிக்காதேடா உனக்கு? அப்புறம் எதுக்கு இப்படித் தொப்பலா நனைஞ்சே?

“அவளுக்குப் பிடிச்சிருக்கேம்மா. சரியான மழைக் கிறுக்கு. கொஞ்சம் மணிரத்னம் கிறுக்கும்.”

“அவளுக்குப் பிடிச்சா, உனக்கும் பிடிக்கணுமா?”

“பிடிச்சிருக்கே. அவளுக்குப் பிடிச்சதெல்லாம் பண்ணத் தோணுதே. ஹாண்ட்சம்மா, கொஞ்சம் ரொமான்ட்டிக்கா… அவளை அட்ராக்ட் பண்ண ணும்னு தோணுது.”

“அப்ப ரொமான்ஸுக்காக மழையை ரசிக்க ஆரம்பிச்சிட்டியா?”

“நேச்சுரலி… விட்டா நான் இப்போ மழையையும் வந்தனாவையும் சேர்த்துவெச்சு கவிதைகூட எழுதுவேன். அட, உன்கிட்ட எனக்கென்னம்மா வெட்கம்?” – இரண்டு முட்டிகளையும் காட்டியபடி அஸ்வின் தன்னைத்தானே இறுக்கிக்கொண்டபோது, மகனின் அந்த இளமை ததும்பிய காதல் கோலம் கண்டு தன்னை அறியாத ஆச்சர்யத்துடன் ரசித்துச் சிரித்தாள் கமலா!

2000 ஜூலை

காலையில் வெளுத்திருந்த வானம் திடீர் என இருட்டத் தொடங்க… மதியம் தொடங்கிய மழை நான்கு மணி நேரத்தில் சென்னையையே அதகளப்படுத்திவிட்டது. எப்போதும் வெயில் பிடித்த சென்னையைப் பார்த்து இருந்ததால், அதுதான் வசதி என்ற சென்னைவாசிகளின் மன நிலைக்குக் கமலாவும் எப்போதோ மாறி இருந்தாள். இதோ மழை வந்துவிட்டது. இனி வாக்கிங் போக, வந்தது கேடு. திரும்பவும் கால் வீங்கி அவஸ்தைப்பட வேண்டியதுதான். முட்டிக்கு எதற்கும் இப்போதே சொக்காய் போட்டுவைக்கலாம் என்ற எண்ணத்துடன் ‘நீ கேப்’ தேடினாள். கிடைத்தபோது காலிங் பெல் அடித்தது.

எழுவதற்குள் இரண்டாவது முறை அலறியது. பேத்திக்கு ஸ்கூல் எதுவும் திடீர் லீவு விட்டுவிட்டார்களோ? ஆட்டோக்காரனாக இருக்குமோ என நினைத்தபடி கதவைத் திறந்தபோது, அஸ்வின் வெறுப்பும் சலிப்புமாக நின்று இருந்தான்.

“ஷிட். கதவைத் திறக்க உனக்கு ஏம்மா இவ்வளவு நேரம்?”

“எழுந்து வர வேணாமாடா… லேசா நனைஞ்சி ருக்கியே. கார்லதானே வந்தே?”

“காரை பார்க் பண்ணிட்டு லிஃப்ட் ஏறுறதுக்குள்ளேயே இந்த அளவு நனைஞ்சாச்சு. பாழாப்போன மழையால, இன்னிக்கு எல்லாமே குட்டிச்சுவர்ம்மா. கொரியாக்காரன் வந்த ஃப்ளைட் மேக மூட்டத்துல இங்க இறங்க முடியாம திருப்பதியில் இறங்கிடுச்சு. சரிதான்னு அங்க வண்டியை அனுப்பினா, அவன் வந்து மீட்டிங்கை கேன்சல் பண்றான்.”

“ஏன், அவங்க ஊர்ல மழை பெய்யாதா என்ன? அடிக்கடி பிய்ச்சிண்டு கொட்டுற ஊர்தான்னு உங்க அப்பா சொல்வாரே.”

“அங்க மழை பெய்ஞ்சாலும்… ரோட்ல இப்படித் தண்ணியே நிக்காதாம். உடனே வடிஞ்சிடுமாம். ஒரு சின்ன மழைக்கே ஊர் இப்படி ஏரியாட்டம் மிதக்கறதே. இந்த லட்சணத்துல இந்த ஊரை நம்பி நான் எப்படிடா என் ஃபேக்டரியைத் திறக்கறதுங்கிறான். இந்தக் கேடு கெட்ட மழை இவன் வந்த நேரத்துலயா வந்து தொலைக்கணும்? எல்லாம் நம்ம தலை எழுத்து. எவன் வந்து ஆண்டா என்ன? இந்தத் தேசம் உருப்படவே போறது இல்லை. ரோட்டை ஏற்கெனவே அங்கங்க வெட்டி வெட்டிப் பள்ளமாக்கிவெச்சிருக்கானுங்க. இந்த மழைக்கு அது இன்னும் பள்ளமாயிடும். வண்டி நாசமோ நாசம்தான். மெக்கானிக்குக்கு எத்தனை ஆயிரம் அழணுமோ? நீ ஏம்மா மசமசன்னு என்னையே பார்த்துட்டு இருக்க… எனக்கு ஒரு காபி போட்டுத் தர மாட்டியா? அதைக்கூட வாய்விட்டுக் கேட்கணுமா? எழவு எடுத்த மழை வந்தா, எல்லாருக்கும் மூளைகூட மழுங்கிடுது.” – அலட்சியமாகப் பேசிக்கொண்டே அஸ்வின் அறைக்குள் புகுந்து கதவை அவளின் முகத்தில் அறைந்தான். காபிகூட போடத் தோன்றாமல் அப்படியே திகைப்பாக நின்றுவிட்ட கமலாவை உலுக்கியது நான்கு வயதுப் பேத்தி வர்ஷாவின் குரல்.

“ஹை பாட்டி… மழைக்காக ஸ்கூல் ஹாலிடே விட்டாங்களே. நீ இப்போ என்ன பண்றேன்னா, அம்மா நேத்து சூப்பர் மார்க்கெட்ல வாங்கின பாஸ்தா பாப்கார்ன் பாக்கெட்லாம் வெளிய எடு. நானே அதை எல்லாம் மைக்ரோவேவ்ல குக் பண்ணுவேனாம். நீ சமர்த்தா வேடிக்கை பார்ப்பியாம். பயப்படாதே… ரெண்டு பேரும் சேர்ந்துதான் சாப்பிடப்போறோம். ஓ.கே?” – பெரிய மனுஷிபோல வர்ஷா தன் குண்டு விழிகளை உருட்டி உருட்டிப் பேச, கண்ணில் கசிந்து இருந்த ஈரம் விலகி புன்னகை மீண்டது கமலாவுக்கு!

2010 ஆகஸ்ட்

சென்னையில் மீண்டும் மழைக் காலம் தொடங்கிவிட்டது. வழக்கம்போல ரோடுகளுக்குச் சொறி சிரங்கு பிடித்துவிட்டது. ரோடு எப்படி இருந்தால் என்ன? வீட்டுக்கு ரெண்டு மூணு கார்களும் தெரு வுக்கு ஒரு கார் கம்பெனிக்காரனும் முளைத்துவிட்டார்கள். டிராஃபிக் ஜாம் இல்லாத சென்னைத் தெருவை லென்ஸ் வைத்துதான் தேட வேண்டும்போல் இருக்கிறதே என்று பலதையும் யோசித்தபடி 22-வது மாடியின் பால்கனியில் இருந்து கீழே வேடிக்கைபார்த்துக்கொண்டு இருந்தாள் கமலா.

நன்கு அகன்ற ரோடு என்பதால், கீழே சின்னச் சின்ன புள்ளிகளாக வாகனங்கள் ஊர்ந்துபோவதைப் பார்க்கப் பார்க்க ஏதோ கிராஃபிக்ஸ் படம் பார்ப்பதுபோல் இருந்தது. சுற்றிலும் கான்கிரீட் வனமாகிவிட்ட இந்தப் புறநகர் சென்னையில் மழையோ, வெயிலோ எந்தப் பாதிப்பும் பெரிதாக இல்லை.

வாக்கிங் போக லிஃப்ட் வழியே மூணாவது தளத்தில் இருக்கும் ஜிம் போய்விட்டால்போதும். வலப் பக்கத்து பில்டிங்கில் மார்க்கெட், இடப் பக்கத்தில் ஆஸ்பத்திரி. எங்கும் போய்… மழையில் நனையவோ, வெயிலில் காயவோ வேண்டாம். எல்லாமே வளாகத்துக்கு உள்ளேயே இருக்கிறது. எங்கு போகவும் அலுமினியக் கூரை வேய்ந்த இணைப்புப் பாலம் இருக்கிறது. நிஜமாகவே இந்த கேட்டட் கம்யூனிட்டி உயர்தர ஃப்ளாட்டுக்குக் குடி வந்ததில் இருந்துகொஞ் சம் நிம்மதியாகத்தான் இருக்கிறது கமலாவுக்கு.

எல்லாவற்றுக்கும் காரணம், மகனின் அமெரிக்க வேலைதான். அது செய்யும் மாயத்தில்தான் இப்படி திடீர் பணக்காரத்தன்மையுடன் திகழ முடிகிறது என நினைத்தபோது, சொல்லிவைத்தாற்போல் மணிஅடித்தது. அவள் எடுக்க நினைப்பதற்குள், அதுவரை பக்கத்து ரூமில் படுத்திருந்த கணவர் தியாகு வந்து எடுத்துவிட்டார்.

“சொல்லு அஸ்வின், எப்படி இருக்கே?”

“வீ ஆர் ஃபைன். உங்க அம்மாவா? வழக்கம்போல பால்கனி வேடிக்கைதான். மழை வேற பெய்யுதா? குஷிக்குக் கேக்கணுமா உங்க அம்மாவுக்கு? இரு… இரு… வந்து பக்கத்துல நின்னுட்டா. குடுக்கலேன்னா, எனக்கு அடுத்த வேளை சோறு கிடைக்காதுப்பா. நீ அவகிட்ட பேசு. நான் நிதானமா நைட் வெப்கேம்ல வர்றேன். நாளைக்கு உனக்கு ஆஃப்தானே?” என்றவர், போனை அவளிடம் கொடுத்துவிட்டு, பால்கனிக்கு நகர்ந்துவிட்டார்.

“என்ன அஸ்வின், சாப்பிட்டியா?”

“எப்பவும் இதே கேள்விதானா? மணி இப்போ 11. எல்லாம் ஆச்சு. அது இருக்கட்டும்மா, அங்க மழை பெய்யுதாமே? உனக்கு உடம்புக்கு எதுவும் இல்லையே. டாக்டர்கிட்ட செக்கப் எல்லாம் சரியாப் போறியா… பணம் ஏதாவது அனுப்பட்டுமா?”

“டேய்… டேய் இருடா. ஒரு கேள்விக்காவது பதில் சொல்லவிடு. மழை பெய்ஞ்சா என்ன? நாங்கதான் வெளியிலயே போறது இல்லையே. எல்லாம் நம்ம காம்ப்ளெக்ஸ்லயே இருக்கே. மழையோ, வெயிலோ எல்லாம் இப்ப இங்க ஒண்ணுதான்”- கமலா சொல்லி முடிப்பதற்குள் இடைமறித்தான் மகன்.

“ரெண்டும் ஒண்ணு இல்லைம்மா. மழை பெய்ஞ்சா, மனசு வெயிலுக்கு ஏங்கும். ரொம்பக் காய்ஞ்சாலும், கொஞ்சம் காத்தடிச்சு மழை பெய்யாதான்னு தவிக்கும். என்னை மாதிரிதாம்மா அது. ஒரு நிலைக்குள்ள இருக்காது.”

“என்னடா சொல்றே?”

“உன்கிட்ட சொல்றதுக்கு என்னம்மா… இப்ப சன் டி.வி-யில ரமணன் சார் வந்து, சென்னையில் பலத்த மழை. இன்னும் இரண்டு நாளைக்கு நீடிக்கும்னு சொன்னப்போ உடனே உன்கிட்ட வரணும். உன்னைப் பார்க்கணும். வெங்காயப் பக்கோடா, கற்பூரவல்லி பஜ்ஜி சாப்பிட்டு ஏப்பம் ஏப்பமா விடணும்னு எப்படிப் பரபரத்துப்போச்சு தெரியுமா?”

“டேய் அஸ்வின்…”

“ஆயிரம் சொல்லு… சென்னை… சென்னைதாம்மா. மழைத் தண்னி சாக்கடைத் தண்ணியோட கலந்து ரோட்ல சளசளன்னு நாலு நாள் நடப்போம். அஞ்சா வது நாள், எங்க போச்சுன்னு தெரியாம தண்ணி வத்தி, கிழிஞ்ச சட்டையாட்டம் பொத்தல் பொத்தலா ரோடு கிடக்கும். ஆனாலும், அதாம்மா பெஸ்ட்!”

“என்னடா, என்னென்னவோ சொல்ற. வந்தனாவோட சண்டை எதுவும் இல்லையே..?”

சேச்சே.. அவகூட எனக்கென்னம்மா… வீ ஆர் ஹேப்பி. அம்மா உனக்கு ஒண்ணு தெரியுமா? இங்க மழை வந்தா… ரோட்ல தண்ணி தேங்காது. ஆனா, பனிக் கட்டி மழை பெய்ஞ்சு… ரோடு, வீடு எல்லாம் பனியால மூடிக்கும். வண்டியை வெளியில எடுக்கணும்னாகூட, வீட்டு வாசல்ல இருக்கிற பனியை அடியோட சுரண்டி எடுத்தாத்தான் உண்டு. அதுக்கு எந்த கார்ப்பரேஷன்காரனும் வர மாட்டாம்மா. நாமதான் ரெண்டு, மூணு மணி நேரம் கஷ்ட்டப்பட்டு கொலுத்து வேலை பண்ணணும். இப்ப சொல்லு… ஆயிரம் குறை இருந்தாலும், இண்டியா இண்டியாதானே? இந்த தேசம் உருப்படவே உருப்படாதுன்னு அங்க உரக்க சொல்லிட்டேகூட உட்கார்ந்து வாழலாம். இங்க எதையும் வாய்விட்டுச் சொல்ல முடியாது. என்னவோ போம்மா… வசதி இருக்கு… பொண்டாட்டி புள்ளைகுட்டி எல்லாமும் பிரச்னை இல்லை. ஆனாலும், நெனச்சா, அடுத்த நிமிஷம் உன்கிட்ட வர முடியாம… என்ன ஒரு அவஸ்தை இது? ப்ச்… என்னவோ, எதுக்காகவோ எதையோ துரத்திண்டு ஓடறோம்னு நல்லாப் புரியுது. இருந்தாலும் இந்த பாழாய்ப்போன மனசுல ஆசை மழை அடிச்சி ஓய மாட்டேங்குதே… அது ஏம்மா? எப்ப நிக்கும்னு சொல்லேன்” – ஒருநாளும் இல்லாத திருநாளாக அஸ்வின் அடை மழைபோல் பொங்கிப் பிரவகித்து விட்டதும்… கமலாவாலும் அடக்க முடியவில்லை.

திடீர் என ஓங்கிய குரலில் அழும் மனைவியைத் தேற்றுவதற்கு பால்கனி சாரலில் இருந்து ஓடிவருகிறார் தியாகு.

வெளியே மழை, சென்னையை வெளுத்து வாங்குகிறது!

– அக்டோபர் 2010

Print Friendly, PDF & Email

1 thought on “அதுவும் ஒரு மழைக்காலம்

  1. எப்படி ஆரமிக்கறதுன்னு தெரில. இந்த கதைய படிச்சுட்டு என் அம்மா அழுத அழுக இருக்கே… நான் அப்ப GRE படிச்சுட்டு இருந்தேன், அம்மாவும் கொஞ்சம் மழை பைத்தியம். பஜ்ஜி, டீ, பால்கனி.. same character. Must have been why she identified with the mom so much. இதே மாதிரி தான் நீயும் US போயிடுவ அம்மா உன்ன miss பண்ணி அழுதுட்டு இருப்பேன்னு ஒரே அழுக!

    அவங்க இப்ப இல்ல. நேத்து தான் அவங்க birthday. இந்த கதைய ரொம்ப நாளா தேடிட்டு இருக்கேன். And it just rained today. A lot. அப்படியே இந்த கதைய பத்தி நெனச்சுகிட்டே தேடினேன் and I can’t help being Ashwin from US missing my mom a lot except I can’t call her! This story helps me connect with her soul and to that moment we both had.

    My heart is so full now! Thanks a lot. I wish you everything in the world, to the writer and to the blogger.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *