அதிர்ஷ்டம்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: August 31, 2024
பார்வையிட்டோர்: 1,713 
 
 

குபேரன் என்று பெயர் வைத்த நேரமோ என்னமோ அதிர்ஷ்டம் அவனை நெருங்கவில்லை. பணம் சேரவில்லை. அதற்கு காரணம் வேலைக்கு சரிவர போகமாட்டான். வாழ்க்கையில் பல அடிகள் விழுந்தாலும் அவன் மாறவில்லை.

அவனுக்கு துணைவியாய் வந்தவள் அதிர்ஷ்ட லெட்சுமி. மகன் சூஷன் பிறந்தான். சூஷன் என்றால் அதிர்ஷ்ட சாலி என்று அர்த்தம்.

தனக்கு கிடைக்காத அதிர்ஷ்டம் தன் பிள்ளைக்காவது கிடைக்கட்டும் என்ற எண்ணத்தில் இந்த பெயரை வைத்தான்.

அவர்கள் அவன் வாழ்வில் வந்த பிறகும் , அவன் பக்கம் அதிர்ஷ்ட காற்று வீசவில்லை , அதனால் தன் மனைவி மகனை எப்போதும் அதிர்ஷ்டம் இல்லாதவர்கள் என திட்டி கொண்டே இருப்பான்.

அதிர்ஷ்ட தெய்வங்களின் பெயரை வைத்தால் மட்டும் போதுமா? உழைத்தால் தானே பலன் உண்டு.


ஒரு நாள், “என்னங்க, என்னங்க” என்று , பதட்டமாக கணவன் குபேரனை நோக்கி, ஓடி வந்தாள் மனைவி அதிர்ஷ்ட லட்சுமி. ஒரு கையில் பையனையும் , மற்றொரு கையில் ஒரு பையுடன் ஓடி வந்தாள். அவள் வருவதை பார்த்து பதட்டமாக எழுந்து,

“ஏண்டி , இப்படி ஓடிவர. கடன் காரன் யாராவது வந்திருக்கானா?” குபேரன் கேட்க, “அதெல்லாம் இல்ல. இந்த பைய பாருங்க” என்று கூறியபடி , அந்த பையை கீழே சாய்த்தாள் அதிர்ஷ்ட லெட்சுமி. பையிலிருந்து தங்க நகைகள் மற்றும் ஐநூறு ரூபாய் பணக்கட்டு சில கீழே விழ, அதை ஆச்சரியமும் அதிர்ச்சியும் கலந்தவனாய் பார்த்தபடி, “இது எப்படி கிடைத்தது உங்களுக்கு!” என ஆச்சரியமாக குபேரன் கேட்க, “எங்கள அதிர்ஷ்டம் இல்லாதவங்கனு எத்தனை தடவை சொல்லியிருப்பீங்க?. பார்த்தீங்களா! அதிர்ஷ்டத்தை!.” என்று குபேரனின் மனைவி அதிர்ஷ்ட லக்ஷ்மி கூற ஆரம்பித்தாள்.

“நாங்க கடைக்கு போறப்ப, சூசன் பந்தை தூக்கி போட்டு விளையாடிட்டே வந்தான். அப்போ அந்த பந்து குப்பை தொட்டியில விழுந்திருச்சு. பந்தை எடுக்க போன இடத்தில் இந்த பையை பார்த்து எடுத்தேன். நகையும் பணமும் இருந்துச்சு. அத அப்படியே தூக்கிட்டு வந்துட்டோம். எப்படி சூப்பரா?” என அதிர்ஷ்டலட்சுமி கூற, அதை ஆச்சரியத்தோடு, பார்த்தபடியே அதன் மதிப்பை கணக்கிட்டான் குபேரன். குறைந்தது 15 லட்சத்துக்கு மேல் இருக்கும். அவ்வளவுதான் அவன் மனதில் பல எண்ணங்கள் ஓட ஆரம்பித்தன, பெரிய வீடு, சொந்தமான வண்டி , வசதியான வாழ்க்கை, அவன் கண் முன் வந்து சென்றது. தன் வாழ்க்கை வேற மாதிரி மாற போகிறது என்றும், அதில் முதலில் தோன்றியது, இந்த விளங்காத வீட்டை மாத்தணும் என்ற எண்ணம் தோன்றியது. இந்த வீட்டுக்கு வந்ததிலிருந்து ரொம்ப சிக்கல் ஆயிருச்சு என்ற எண்ணம் அவன் மனதில். தன்னை பெரிய மனிதனாக சமுதாயம் பார்ப்பது போன்றும் தோன்றியது. “வாங்க , என் அதிர்ஷ்டங்களே!” என்று இருவரையும் கட்டி அணைத்து கன்னத்தில் முத்தமிட்டான் குபேரன்.

மீண்டும் மனைவியின் குரல் மிக அருகில் கேட்ட மாதிரி இருக்க, “என்னங்க? என்னங்க? இங்க பாருங்களேன்!” என்று அதிர்ஷ்ட லட்சுமி அழைக்க, கண் திறந்து பார்த்தான் குபேரன். அடச்சே! இவளோ நேரம் கனவா கண்டோம்னு நினைத்தபடி, அவர்களை பார்த்தான். அதே அழுக்கு சீலையுடன் அதிர்ஷ்ட லட்சுமி எதிரே நின்றிருந்தாள், அவளுடன் கையில் விளையாட்டு பந்துடன் மகன் சூசன். அவர்களுக்கு பின்னால் வீட்டு ஓனர் தன் மகனுடன் முறைத்தபடி நின்று கொண்டிருந்தார். “இந்தாப்பா! குபேரா, வீட்டை நாளைக்குள்ள காலி பண்ணிரு. உன் மகன் பந்தை எரிஞ்சு, என் மகன் மண்டைய உடைச்சிட்டான். இதுக்கு மேல பொறுத்து கொள்ள முடியாது. எனக்கு என் மகன் தான் அதிர்ஷ்டம். அவன் பிறந்த பிறகு, இவ்ளோ வசதி வந்தது. அவன் வந்த பிறகு தான் என் வாழ்க்கையே நல்ல நிலைக்கு மாறிச்சு. உன் மகன் என்னமோ என் அதிர்ஷ்டத்தை கெடுக்க பார்க்கிறான். ஒழுங்கு மரியாதையா நாளைக்குள்ள வீட காலி பண்ணிரு ” என வீட்டு ஓனர் கூற, தன் மகனை முறைத்த படி எழுந்தான் குபேரன்.

கனவில் கூட அதிர்ஷ்டம் கொஞ்ச நேரம் கூட இருக்க மாட்டேங்குதே என்ற ஏக்கத்தில் வீட்டை காலி செய்ய யோசனையுடன் தன் மனைவி மகனை முறைத்த படி நகர்ந்தான் குபேரன்.

அதிர்ஷ்டம் கிடைக்கும் என்று வீட்டிலே இருந்தால் எப்படி? உழைத்தால் தான் அனைத்தும் கிடைக்கும். அதிர்ஷ்டம் என்பது எதிர்பாராமல் கிடைப்பது…

– இந்த கதை 24 ஆகஸ்ட் 2024 அன்று தமிழ்நாடு இ பேப்பர்.காம் தின இதழில் வெளியானது.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *