அதற்கும் விலை உண்டு!

0
கதையாசிரியர்:
தின/வார இதழ்: தினத்தந்தி
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: September 26, 2016
பார்வையிட்டோர்: 26,191 
 
 

பேருந்து நிறுத்தத்தில் இறங்கிய பரத்-மீனா புதுமணத் தம்பதிக்கு உடம்பு வலித்தது. ஆறு மணி நேரத்துக்கு மேலாக அந்தப் பேருந்தில் பயணம் செய்து தலை தீபாவளிக்கு மீனாவின் ஊருக்கு வந்து சேர்ந்திருக்கிறார்கள். டிரெயினில் டிக்கெட் கிடைக்கவில்லை.

மீனா ஒரு மூலையில் வரிசையாக நின்ற குதிரை வாண்டி களைப் பார்த்தாள். உலகம் பூராவும் மாட்டு வண்டிகளும் குதிரை வண்டிகளும் மறைந்து போனாலும் இந்த ஊரின் கஞ்சித் தொட்டி முனை நிறுத்தத்தில் இவற்றைப் பார்க்க இயலும். முன்னொரு பஞ்ச காலத்தில் இங்கு பத்து அடி நீளம் இரண்டு அடி அகலம், இரண்டு அடி உயரத்துக்கு கஞ்சித் தொட்டி அமைத்து ஏழைகளுக்கு இலவசமாகக் கஞ்சி வழங்கிய இடம் அது. அந்தத் தொட்டியின் இரு நீள் முனைகளின் மீது எதிரும் புதிருமாக இரண்டு பயில்வான்கள் மல்யுத்த போ° கொடுத்து நிற்பார்கள். தொட்டியும் பயில்வான்கள் சிலைகளும் மீனாவின் சின்ன வயதில் பார்த்தது ஞாபகத்துக்கு வந்தது. இப்போது அந்தத் தொட்டியும் இல்லை; பயில்வான் சிலைகளும் இல்லை!

“யம்மோவ், சின்னக் கடைத் தெருவுல சீனு ஐயர் சாமி வீட்டுக்குத்தானே போவணும்? வாம்மா, நம்ம குருதை வண்டில போகலாம். கொடுக்கிற சத்தம் கொடும்மா!” பழக்கமான வண்டிக்காரர் அழைத்தார்.

“வாங்க பரத், குதிரை வண்டியில் போகலாம். எவ்வளவோ வருஷத்துக்கு முந்திப் போனது…ரொம்ப ஜாலியா இருக்கும்!” என்றாள் மீனா.

“எதுக்கு மீனா, பத்து நிமிஷம் நடந்தா வீடு வந்துடும். காசை எதுக்கு வீணாக்கணும்?” என்றான் பரத்.

“கையில் சூட்கேஸையும் தூக்கிகிட்டு எப்படி பரத் நடக்கறாது? நீங்க கவலைப் படாதீங்க. குதிரை வண்டிக்காரருக்கு நான் காசு கொடுத்துடறேன்…”

“நல்ல கதையா இருக்கே, உங்க ஊருக்கு வந்திருக்கேன். தலை தீபாவளிக்கு உங்க அப்பாவும் அம்மாவும் வருந்திக் கூப்பிட்டிருக்கா.. இங்கே வந்து நான் பணம் செலவு பண்ணுவேன்னு வேற நினைச்சுண்டிருக்கியா?”

மீனா சிரித்தாள். ஒரு திரைப்படத்தில் ரூல்° ராமானுஜம் என்று ஒருவர் சதா சட்டம் பேசிக் கொண்டிருப்பார். அதைப் போன்று, பரத் ஒரு கருமி கண்ணுச்சாமி என்று மனசுக்குள் நினைத்துக் கொண்டாள் மீனா. காசு விஷயத்தில் அவன் வெகு கறார் பேர்வழி! கறார் என்பதைவிட, கஞ்சப் பிசுநாறி என்று அவள் அடிக்கடி நினைக்கும்படியான சம்பவங்கள் அவனைத் திருமணம் புரிந்த இந்தச் சில நாளில் நிறைய அவள் சந்திக்க நேர்ந்தது.

இருவரும் சென்னையில் தனித்தனி நிறுவனங்களில் வேலை செய்தார்கள். வடபழனியில் குமரன் காலனியில் ஒரு அபார்ட்மெண்டில் வாடகைக்குக் குடியிருந்தார்கள். பரத்தின் தாய் தந்தையும் இவர்களுடன் வசித்தார்கள். தலை தீபாவளிக்குச் செய்ய வேண்டிய சீர் செனத்தியெல்லாம் குறைவில்லாமச் செய்துடணும் என்று பரத்தின் அம்மா ஃபோனில் மீனாவின் பெற்றோருக்கு இரண்டு மூன்று முறை வலியுறுத்தி விட்டாள்.

மீனாவின் அப்பா ஓய்வு பெற்ற ஓர் தமிழாசிரியர். தினப் பத்திரிகை ஒன்றின் விளம்பரம் பார்த்து ஜாதகம் அனுப்பித் தேடிய சம்பந்தம் இது. பையனின் பெற்றோர் கேட்ட வரதட்சணை போன்ற எல்லாம் ஒரே பெண் என்பதால் சிறுகச் சிறுக முன்பே சேர்த்து வைத்திருந்ததால், மீனாவின் தந்தை எதற்கும் பின்வாங்கவில்லை. தலை தீபாவளிக்கும் மாப்பிள்ளைக்கு உயர் ரகத்தில் உடைகள், பெண்ணுக்கு பட்டுப் புடவை எல்லாம் எடுத்து வைத்திருந்தார்.

தீபாவளிக்கு இரண்டு தினங்கள் முன்பாகவே பெண்ணும் மாப்பிள்ளையும் வந்தது மீனாவின் தந்தைக்கும் தாய்க்கும் மிகுந்த மகிழ்ச்சியைத் தந்தது. அக்கம் பக்கத்திலிருப்பவர்கள், மீனாவின் பள்ளி, கல்லூரித் தோழிகள் எல்லோரும் வந்து பேசி மகிழ்ந்தார்கள்.

தீபாவளியன்று அதிகாலையில் சுத்தமான நல்லெண்ணெயைக் காய்ச்சி வாணலில் வைத்து அதில் ஒரு °பூனைப் போட்டு எடுத்து வந்தாள் மீனா. “உம்.. சீக்கிரம், பொழுது விடியறதுக்குள்ளாற தலைக்கு ஒரு முட்டை எண்ணெய் வெச்சிண்டு °நானம் பண்ணிடுங்கோ!” என்றாள்.

பரத் “எண்ணெய் °நானம் பண்றது இருக்கட்டும் மீனா. செய்ய வேண்டிய முறை, மரியாதை எதுவும் காணமே?” என்று சன்னமான குரலில் அவளிடம் கேட்டான்.

“என்ன சொல்றேள், செய்ய வேண்டிய முறையா? என்ன அது?”

“ஒரு பவுன்ல தங்க மோதிரம் போடுவா. அதுக்கப்புறம் தான் தலைக்கே எண்ணெய் வெச்சுக்கணும்னு அம்மா படிச்சுப் படிச்சுச் சொல்லித்தானே அனுப்பினா..” என்றான் பரத்.

தூக்கிவாரிப் போட்டது மீனாவுக்கு. தங்க மோதிரம் ஒரு பெரிய விஷயமில்லை; ஆனால், கணவன் தன் தாயார் சொன்னதற்கு இவ்வளவு முக்கியத்துவம் கொடுத்துச் செயல்படுகிறானே என்கிற கவலை அவளுக்கு.

மீனாவின் தாய் மீனா, மாப்பிள்ளைக்கு வைரக்கல் வெச்ச தங்க மோதிரம் வேணும்னு அவரோட அம்மா போன்ல சொன்னா. அதைச் செஞ்சிட்டாரு உன் அப்பா. இதோ மோதிரம்! என்று கொண்டு வந்து கொடுத்தாள். பரத்தின் முகம் மலர்ந்தது.

எண்ணெய் °நானம் குறைவின்றி நடந்தது. பட்டாசு கொளுத்தினார்கள். பட்சணம் சாப்பிட்டார்கள். மனசில் மீனாவுக்கு ஒரு நெருடல், சப்தம் போடாமல் வந்து உட்கார்ந்து கொண்டது. “என்ன இவன் இப்படி இருக்கிறான்?”

அன்று மாலை சினிமாவுக்குப் போனார்கள். தியேட்டர் வாசலில் குண்டு மல்லிகை விற்ற பெண்மணி மீனாவுக்குப் பழக்கமானவள். “அட, இவுருதான் உன் வூட்டுக்காரராம்மா? அழகா அஜீத் கணக்கா இருக்காரே, பூ வாங்கிக் கொடுக்கச் சொல்லும்மா ஐயரை!” என்று சிரித்தபடியே சொன்னாள் பூக்காரி.

“பரத், குண்டுமல்லின்னா எனக்குக் கொள்ளை இஷ்டம். வாங்கிக்கட்டுமா?” என்றாள்.

ரூபாயை எண்ணிக் கொடுத்தான் பரத். “தோ பார் மீனா! தலை தீபாவளிச் செலவு எல்லாம் உங்க வீட்டுதுன்னு அம்மா சொல்லியிருக்கா. இந்த ஊருக்கு வந்தது முதல் திரும்பிப் போகிற வரைக்கும் எல்லாம் உங்க வீட்டுச் செலவுதான். இந்தப் பூவுக்கு நான் கொடுத்த இருபது ரூபாயை மறக்காம வீட்டுக்கு வந்ததும் எனக்குக் கொடுத்துடணும், தெரிஞ்சுதா?” என்றான்.

கிண்டலுக்குச் சொல்கிறான் என்று நினைத்துச் சிரித்தாள் மீனா. சினிமா டிக்கெட் வாங்கி உள்ளே போகும்போது, “மீனா, சினிமா டிக்கெட் நூறு ரூபாய் வீதம் இரண்டு பேருக்கு இருநூறு ரூபாய். பூ விலையைச் சேர்த்தால் இருநூற்று இருபது ஆச்சு. ஞாபகம் வெச்சுக்கோ. வீட்டுக்கு வந்ததும் எனக்கு நீ இதையெல்லாம் தந்துடணும்.. என்ன?” என்று பரத் சொன்னபோதுதான் அவன் விளையாடவில்லை, ஸீரியஸாகத்தான் சொல்கிறான் என்று புரிந்தது. மனசில் ஒரு வலி லேசாக அவளை வதைக்க ஆரம்பித்தது.

இண்டர்வெல் சமயத்தில் பாப்கார்ன், குளிர் பானம் வாங்கி வந்து தந்தான் பரத். அவற்றின் செலவையும் தன் செலவுக் கணக்கில் சேர்த்துக் கொண்டான். சே, இவன் என்ன இவ்வளவு அற்பனாக இருக்கிறான்?

“வீட்டுக்கு ஆட்டோவில் திரும்பும்போது ஏன் பரத், ஒய்ஃபுக்குச் செய்யும் செலவுகளைக்கூடக் கணக்கு பார்க்கணுமா, ஏன் இப்படி இருக்கீங்க?” என்று பளிச்சென்று கேட்டாள் மீனா.

“நீ தப்பாப் புரிஞ்சுண்டிருக்கே மீனா! பணம் காசுன்னு வர்றச்சே பெத்தவங்க, உற்றார் உறவினர், மனைவி இப்படி எந்த வேற்றுமையும் பார்க்காம கண்டிப்பா இருந்தால்தான் நம்ம காசு நிலைக்கும். நான் யாருக்காகக் காசு விஷயத்தில் கறாரா இருக்கேன்? நாளைக்கு வயசான காலத்தில் நம்மகிட்ட நாலு காசு இருந்தால்தானே, நம்மை நாம காப்பாத்திக்க முடியும்? மத்தவங்க கையை எதிர்பார்த்துண்டு இருந்தா யாரு நமக்குச் செய்வா சொல்லு!” என்று கீதோபதேசம் செய்தான் பரத். மடேர் மடேர் என்று தலையில் அடித்துக் கொள்ள வேண்டும்போல் இருந்தது மீனாவுக்கு.

வீட்டுக்குள் நுழைந்ததும் அவள் பர்ஸை எடுத்து அவளிடம் நீட்டினான் பரத். “குண்டுமல்லி, சினிமா டிக்கெட், பாப்கார்ன், கோக், போக வர ஆட்டோ வாடகை எல்லாம் சேர்த்துப் பணத்தைக் கொடுத்துடு மீனா. அப்புறம் மறந்துடுவேன்!” என்றான் அவன்.

அவன் கேட்ட தொகையை எண்ணி அவனிடம் கொடுத்தாள் மீனா.

அவன் நல்லவனா, கெட்டவனா? புரியாமல் மனது தடுமாறியது மீனாவுக்கு. திருமணம் ஆகி இந்த ஒரு மாதத்தில் அவன் காசு விஷயத்தில் கண்டிப்பாக இருந்தது ஓரளவுக்கு நல்லது என்றுதான் நினைத்தாள் மீனா. ஆனால் இப்படியா?

தடபுடல் விருந்து தயாரித்திருந்தாள் மீனாவின் அம்மா. மாப்பிள்ளைக்குப் பிடிக்குமே என்று ரஸ வாங்கி, பருப்பு உசிலி, அவியல், வடை அப்பளம், பாயஸம் என்று அமர்க்களமான சாப்பாடு. “சிலபேர் ராத்திரியில் டிபன் தான் சாப்பிடுவா. ஆனா எனக்கு சூடா சாப்பாடுதான் பிடிக்கும்” என்று சொல்லியபடி, நாக்கைச் சப்புக் கொட்டிக் கொண்டு சாப்பிட்டான் பரத்.

இரவு வீட்டு மாடியில் தனியறையில் காத்திருந்தான் பரத். இன்று அவனிடம் பேசி அவன் அடாவடிப் போக்கை மாற்ற வேண்டும் என்று நினைத்தபடி, பால் சொம்புடன் மாடிக்குப் போனாள் மீனா.

“இன்னிக்குப் பார்த்த சினிமாவில் அந்த லவ் ஸீன்கள் ரொம்ப நேச்சுரலாக, மனசைத் தொடும்படி இருந்துச்சு இல்லே?” என்றபடி பால் சொம்பை வாங்கி ஓரமாக வைத்துவிட்டு அவள் கையைப் பிடித்துத் தன்னருகே இழுத்தான் பரத்.

“அருமையான காதல் காட்சிகள். அதிலும் டூயட் பாட்டு ரொம்ப அற்புதம்!” என்றபடி அவன் அருகில் படுக்கையில் விழுந்தாள் மீனா.

“சினிமாவில் வர்ற நடிகையைப் போலவே நீயும் ரொம்ப அழகு மீனா!” என்றபடி அவள் இரு தோளையும் பற்றித் தன்னோடு இழுத்து அணைக்க முற்பட்டான் பரத்.

“என்ன இவ்வளவு அவசரம் பரத்? ஒரு விஷயம் சொல்லணுமே…” என்றாள்.

“என்ன சொல்லணும்னாலும் அப்புறம்தான் மீனா…வா, என்கிட்டே!” என்றான்.

“கொஞ்சம் பொறுங்க பரத், சொல்ல வந்ததைச் சொல்லிட றேன். நான் உங்க மனைவி தானே, எங்கே போயிடப் போறேன்?”

“என்ன சொல்லப் போறே மீனுக்குட்டி. சீக்கிரம் சொல்லுடி என் செல்லம்!”

“நம்ப கடைசிக் காலத்துல பணத்துக்கு யார் கையையும் எதிர்பார்த்து நிக்கக் கூடாதுன்னு சொன்னீங்க இல்லே, அதனால் நான் ஒரு முடிவுக்கு வந்திருக்கேன். அதாவது, நீங்க என்னைத் தனிமையில் தொட்டு ஆளும் ஒவ்வொரு முறையும் ஆயிரம் ரூபா எனக்குத் தந்துடணும். இப்படிச் சேருகிற பணம் எனக்கு இல்லீங்க. நம் எதிர்கால நல்வாழ்வுக்கு அதைச் சேர்த்து வெச்சிக்கப் போறேன். அதனால் நீங்க இப்ப என்கிட்டே ஆயிரம் ரூபாய் தந்துட்டு அப்புறம்தான் என்னைத் தொடுவீங்களாம்.. சரியா?”

தீயைத் தொட்டவன் போல அவளிடமிருந்து விலகி நின்றான் பரத்.

“எல்லாம் ஒரு கணக்குத்தான்னு நீங்க சொன்னதைத்தான் உங்களுக்குத் திருப்பிச் சொல்றேன். உம்.. எடுங்க ஆயிரம் ரூபாயை!”

சிலையாக வெகுநேரம் நின்றிருந்த பரத், மெல்ல நடந்து டிர°ஸிங் டேபிள் முன் இருந்த தன் பர்ஸை எடுத்தான். மல்லிகைப்பூ, சினிமா டிக்கெட், பாப் கார்ன், கோக், ரிக்ஷh வாடகை என்று அவளிடம் சற்று முன் வசூலித்த தொகையை எடுத்து மௌனமாக அவளிடம் நீட்டினான்.

“வெரி ஸாரி மீனா, ப்ளீ°, என்னை மன்னிச்சுடு!”

(தினத்தந்தி ஞாயிறு மலர்)

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *