கதையாசிரியர்:
தின/வார இதழ்: தினமலர்
கதைத்தொகுப்பு: குடும்பம்  
கதைப்பதிவு: November 11, 2024
பார்வையிட்டோர்: 3,869 
 
 

“ஏய், அஞ்சலை…” என, கத்தினாள், மாலதி.

”என்னம்மா?”

”எந்த லட்சணத்தில, ‘க்ளீன்’ செய்திருக்க பாரு, அடுப்பாங்கரை மேடையை; திட்டு திட்டாக கரை.”

”நல்லா தாம்மா இருந்தது.”

”அப்போ இந்த இடத்தை நான் தான் இப்படி செய்தேனா?”

”இல்லைம்மா.”

அஞ்சலை தலையில், ‘நங்’கென ஒரு குட்டு வைத்தாள், மாலதி. தன் அம்மாவுடன், சிறு குழந்தையாய் இருக்கும் போது வந்தாள், அஞ்சலை. அம்மா இறந்த பிறகு, இந்த வேலையே பழகிவிட்டது. அஞ்சலைக்கு, திருமணமாகி குழந்தையும் பிறந்துவிட்ட நிலையில், இந்த வீடே பழியாக கிடந்தாள்.

அடுப்பு மேடையை சுத்தம் செய்த அவளுக்கு, தன் நிலையை நினைத்து அழுகையாக வந்தது. குடியில் மிதக்கும் கணவன், நான்காவது படிக்கும் தன் மகள் கண்மணியின் நிலைமை என்னாகுமோ என்ற கவலை, போதாதற்கு இந்த வீட்டம்மாளின் திட்டு வேறு.

மீண்டும் பாத்திரம் தேய்க்க போனாள், அஞ்சலை.

மதியம் கிளம்பி வீட்டிற்கு சென்று சிறிது ஓய்வெடுத்து விட்டு… ஓய்வு எங்கே? இவளது வீட்டு வேலையை வேறு யார் செய்வர்? சாயந்திரம் மீண்டும் இதே வீட்டு வேலை தான். இரு வேலையும் இங்கே தான். கணிசமாக சம்பளமும் கிடைத்தது. அதனால், அங்கு, இங்கு என்று அலையாமல் இங்கேயே இருந்து விட்டாள், அஞ்சலை.

சாயந்திரம், மகள் கண்மணி பள்ளியில் இருந்து வந்ததும், தான் வேலை செய்த வீட்டில் இருந்து கொண்டு வந்ததை கொடுத்தாள். அதை சாப்பிட்டு விட்டு, சிறிது நேரத்தில் துாங்கி விட்டாள், கண்மணி.

”கமலா அக்கா, கொஞ்சம் கண்மணியை பார்த்துக்குங்கோ. நான், ரெண்டு மணி நேரத்துல வந்துடுறேன்.”

”சரி அஞ்சலை. நீ போ, நான் பார்த்துக்கிறேன்,” என்றாள், கமலா.

மாலதி வீட்டில், மதியம் ஒழிச்சி போட்ட பாத்திரத்தை தேய்க்க சென்றாள், அஞ்சலை. சிறிது நேரத்திற்கெல்லாம் காபியுடன் வந்து நின்றாள், மாலதியின் மகள் அபி என்ற அபிராமி.

”ஆன்ட்டி, இந்தாங்க காபி. அம்மா கொடுக்க சொன்னாங்க.”

தன் பெண்ணின் வயது தான், அபிராமிக்கும். பெரியோர்களுக்கு மதிப்பு கொடுப்பது, கருணையுடன் நடந்து கொள்வது என, தன் பெண்ணை நன்றாகவே வளர்த்து இருந்தாள், மாலதி.

மீதம் இருந்ததை கொடுக்கும் போது, ‘இந்த ஆன்ட்டி, இதை இவங்க பொண்ணுக்கு கொடுக்கிறதுக்குள்ளே கெட்டு போயிடும்மா. இதை கொடுக்காதே. புதுசா கொடும்மா…’ என்பாள்; அதட்டி பேச மாட்டாள்.

காலங்கள் ஓடியது. கண்மணி இப்போது, ஐந்தாம் வகுப்புக்கு சென்றாள். இங்கு அபியும், ஆங்கில பள்ளியில் அதே ஐந்தாம் வகுப்பு தான்.

கடந்த ஆண்டின் கடைசியில், அஞ்சலையின் கையில், 1,000 ரூபாயை கொடுத்து, ‘உன் பொண்ணை எங்கேயாச்சும் கூட்டிகிட்டு போ. புடிச்சதை சாப்பிட வாங்கி கொடு. வீட்டு வேலைய பத்தி கவலைப்படாதே. நீயும் மனுஷி தானே, போய் சந்தோஷமா இரு…’ என, ‘லீவு’ கொடுத்தாள், மாலதி.

கண்மணியுடன், அதிக நேரத்தை செலவு செய்தாள், அஞ்சலை. ஆசை தீர குழந்தையை கொஞ்சினாள். மடியில் வைத்துக் கொண்டு முத்தத்தை கொடுத்தாள். பீச், சினிமா என்று சுற்றிவிட்டு வீட்டுக்கு வந்தால், கணவன் ரவி நன்றாக துாங்கி கொண்டிருந்தான்.

இட்லி பொட்டலத்தை பக்கத்தில் வைத்து விட்டு, இருவரும் துாங்க போயினர். சாராயம் வாங்கும் அளவுக்கு சம்பாதிப்பான். சாராயம் போடுவான். என்றைக்காவது குழந்தையின் நினைப்பு இருந்தால், சாப்பிட எதாவது வாங்கி வந்து கொடுப்பான். என்ன இருந்தாலும், குழந்தை பாசம் போகுமா?

உடம்பு சுகமில்லாமல், மாலதியின் கணவன் செந்தில், அன்று வீட்டில் இருந்தான். கடைக்கு போய் வருவதாக கூறி சென்று விட்டாள், மாலதி.

செந்திலுக்கு இருமல் அதிகரிக்கவே, சுடு தண்ணீர் வைத்து கொண்டு போய் கொடுத்தாள், அஞ்சலை. அவனுக்கு கை லேசாக நடுங்கியது. தலையில் கை வைத்து அவனை சற்று துாக்கி, வெந்நீரை கொடுத்தாள்.

கடையில் இருந்து வந்த மாலதிக்கு, இதை பார்த்ததும் துாக்கி வாரி போட்டது. அவனை தலையணையில் கிடத்திய, அஞ்சலை, ”அண்ணா கொஞ்சம் படுத்து ஓய்வு எடுங்க. அம்மா இப்போ வந்திடுவாங்க,” எனக் கூறி, தன் வேலையை கவனிக்க, பின் பக்கம் சென்றாள்.

கடையில் வாங்கியதை வைத்துவிட்டு, நேராக பின் பக்கம் வந்தாள், மாலதி.

”என்ன பாத்திரம் தேய்த்தாகி விட்டதா,” என்றாள்.

”ஐயா, தொடர்ந்து இருமிக்கிட்டே இருந்தார். கொஞ்சம் சுடு தண்ணீர் கொடுத்தேன். இப்போ தான், ‘கொஞ்ச நேரத்தில் அம்மா வந்திடுவாங்க, படுங்கண்ணா’ன்னு சொல்லிட்டு வந்தேன். ஏம்மா, ஐயாவுக்கு கை எல்லாம் நடுங்குது. டாக்டர் கிட்ட அழைச்சுகிட்டு போங்களேன்,” என, கள்ளம் கபடம் இல்லாமல் பேசினாள், அஞ்சலை.

”மாத்திரை போட்டிருக்கார். துாங்கி எழுந்தால் எல்லாம் சரியா போயிடும். சாயந்திரம் வேண்டுமானால் பார்க்கலாம்,” என்றாள், மாலதி.

”அதுவும் சரிதான்ம்மா,” என்று கூறிவிட்டு, தன் வேலையில் ஈடுபட்டாள், அஞ்சலை.

மாலதியும், மனதில் எதுவும் வைத்துக் கொள்ளவில்லை. காமாலைக்காரனுக்கு கண்டதெல்லாம் மஞ்சளாக தெரியுமாம். தன் கணவனை பற்றி தனக்கு தானே தெரியும். அதே போல, அஞ்சலை பற்றியும் நன்றாக தெரிந்து வைத்திருந்தாள்.

தன் அம்மா காலத்தில், இவளின் அம்மாவும், இப்போது, இவளின் காலத்தில், இவளும் வேலை செய்வது நன்றாக புரிந்து கொண்டதால் தானே? எடுத்ததற்கெல்லாம் சந்தேகப்பட்டால், வாழ்க்கை பெரிய கேள்விக்குறி ஆகிவிடும். முதலில், தனி தனி அறை என்றும், பின் விவாகரத்து என்றும் போய்விடும்.

மாதங்கள் ஓடின. மாலை நேரம். மாம்பழ துண்டை எடுத்து, வாயில் வைக்க போனாள், கண்மணி.

”கண்மணி…” என, அழைத்தாள், அஞ்சலை.

”என்னம்மா,” என, கண்மணி கேட்க, ”அம்மாவிற்கு ஏதோ நெஞ்சை அடைப்பது போல் இருக்கு, கொஞ்சமா தண்ணீர் கொண்டுவா,” என்றாள்.

மாம்பழ தட்டை, கீழே வைத்து விட்டு போய், தண்ணீருடன் வந்து அம்மாவை எழுப்ப, எழவில்லை.

”ஆன்ட்டி… அம்மா தண்ணீர் கேட்டாங்க. கொண்டு வந்தேன். ஆனா, அம்மா எழுந்திருக்கல,” என்று பக்கத்து வீட்டிற்கு வந்து கூறினாள்.

ஓடி வந்து பார்த்தாள், கமலா. அவளது கணவனும் கூட வந்தான். எல்லாம் முடிந்து விட்டிருந்தது. அஞ்சலை இறைவனடி சேர்ந்து விட்டிருந்தாள். கண்மணியைப் பற்றிய கவலையுடனே சென்றிருப்பாள்.

அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள் வந்து கண்ணீர் சிந்தினர். நடந்ததை திரும்ப திரும்ப கண்மணியும், கமலாவும் வருவோரிடம் சொல்லிக் கொண்டிருந்தனர். இரவு, 8:00 மணிக்கு, தள்ளாடி தள்ளாடி வந்து சேர்ந்தான், ரவி. மனைவி இறந்தது கூட தெரியாமல் கீழே விழுந்து துாங்கியும் போனான்.

காலையில் விஷயம் கேள்விப்பட்டு, மாலதியும், அவளது கணவன் செந்திலும் வந்தனர். அஞ்சலையின் கணவனின் தலையில், தண்ணீர் கொட்டிய போதும், அவன் தலை நிலை கொள்ளாமல் தவித்தது. செந்தில் தான், அஞ்சலையின் அண்ணன் என்று சொல்லி, கொள்ளிப் போட்டான்.

மறுநாள் மதியம், 1:00 மணிக்கு, ஏதோ புரிந்தும், புரியாமலும், ”அம்மா எங்கே?” என்று, கண்மணியிடம் கேட்டான், ரவி.

”அம்மா சாமிகிட்டே போயிட்டாங்கப்பா,” என்று சொல்லி அழுதாள், கண்மணி.

”அப்பா எனக்கு பசிக்குது,” என்று, கண்மணி கூறவும், சாதம், குழம்புடன் கமலா வரவும் சரியாக இருந்தது.

”அண்ணா நீங்களும், குழந்தையும் சாப்பிடுங்க,” என்று கூறி, பாத்திரத்தை வைத்து விட்டு சென்றாள்.

”அப்பா நானும், கடவுள்கிட்டே போகணும்ன்னா என்னப்பா செய்யணும்,” என்று கேட்ட கண்மணியை, வாரி அணைத்துக் கொண்டான், ரவி. அவனின் கைகள் நடுங்கியது. சாப்பாடு கூட சாப்பிடாமல், சாராய கடைக்கு சென்றான். திரும்ப வந்து துாங்கியும் போனான்.

கவலையை மறைக்க இந்த சாராயமா அல்லது தன் இயலாமையை மறைக்கவா? இவர்கள், இவர்களுக்கும் பாரம், பூமிக்கும் பாரம்.

ஏதோ வேலையாக, அவளின் அம்மா வீட்டிற்கு சென்று விட்டிருந்தாள், கமலா. அப்பாவின் சட்டை பையில் இருந்த, பத்து ரூபாயை எடுத்து சென்று, பிஸ்கட் வாங்கி சாப்பிட்டாள், கண்மணி. பிற்பகல், 3:00 மணிக்கு பசி வயிற்றை கிள்ள, மாலதி வீட்டிற்கு சென்றாள், கண்மணி.

கேட்டை தட்ட, ‘கேட்டும், கதவும் திறந்து தான் இருக்கு, அஞ்சலை. உள்ளே வா…’ என்று, பழக்கதோஷத்தில் கூறினாள், மாலதி.

பின் சுதாரித்து, ”யாரு கண்மணியா, உள்ளே வாம்மா,” என்றாள்.

”கேட்டு திறக்க முடியல, ஆன்ட்டி, உயரமா இருக்கு.”

”இரு நான் வர்றேன்,” என, கேட்டை திறந்தாள், மாலதி.

”ஆன்ட்டி, எனக்கு பசிக்குது.”

”ஐயையோ இரும்மா…” என, ஓடி சென்று, கையில் கிடைத்ததை எல்லாம் எடுத்து வந்து கொடுத்து சாப்பிட கூறினாள்.

”அப்பா என்ன செய்யறார்?” என கேட்டாள், மாலதி.

”துாங்கிக் கொண்டிருக்கிறார்.”

”கமலா ஆன்ட்டி.”

”அவங்க ஊருக்கு போயிட்டாங்க, அவங்க அம்மா வீட்டுக்கு…” என்றாள், கண்மணி.

சாப்பிட்டு முடித்ததும், ”ஆன்ட்டி, எங்க அம்மா சொல்லுவாங்க. எங்க பாட்டி இங்கே தான் வேலை செய்தாங்களாம். அவங்க இறந்த பிறகு, எங்க அம்மா இங்கே தான் வேலை செய்தாங்க. இப்போ எங்க அம்மாவும் செத்து போயிட்டாங்க. நானும், எங்க அம்மா மாதிரியே உங்க கிட்ட வேலை செய்யட்டுமா, ஆன்ட்டி,” என்று கேட்டாள், கண்மணி.

கண்மணியை அப்படியே வாரி அணைத்து, தன் மடியில் வைத்து கொண்டாள், மாலதி.

”இங்கே பாரு, இது மாதிரி எல்லாம் பேசக் கூடாது. இனி உனக்கு அம்மா, அப்பா எல்லாம் நாங்க எல்லாரும் தான். நீ, இனி கவலைப்படாதே,” என்று கூறி, மேலும் இறுக அணைத்துக் கொண்டாள், மாலதி.

அதை அங்கீகரிப்பதை போல இருந்தது, மாலதியின் கணவனின் பார்வை. அபியும், பக்கத்தில் வந்து உட்கார்ந்து கொண்டாள்.

மறுநாள் காலை, அபியின் இன்னொரு சீருடையை கண்மணி அணிந்து, செந்திலின் காரின் பின் இருக்கையில் அபியுடன் உட்கார்ந்திருந்தாள். அபியும், கண்மணியும் மாலதிக்கு டாட்டா சொல்ல, பள்ளியை நோக்கி கிளம்பியது, கார்.

இறைவன் ஒரு கதவை அடைத்தால், இன்னொரு கதவை திறந்து வைப்பார் என்பர். கண்மணியை பொறுத்தவரை, அது மிகவும் நல்ல கதவாகவே இருந்தது.

– வாரமலர், அக்டோபர் 2024, இரண்டாம் பரிசு ரூ. 15,000, டி.வி.ஆர்., நினைவு சிறுகதை போட்டி – 2024

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

* Copy This Password *

* Type Or Paste Password Here *