நச்சை வாயிலே கொணர்ந்து நண்பரூட்டு போதிலும்…
என்றோ பாடி வைத்த பாரதியின் இந்தப் பாடலின் அடியை – மும்மூன்று பேர்களாகக் கைகோர்த்துக் கொண்டு போகும் அந்த நீண்ட மாணவ வரிசையின் முதலில் ஒருவன் சொல்ல…
அச்சமில்லை.. அச்சமில்லை.. அச்சமென்பதில்லையே..! என்று
கணீரென்ற ஒரே குரலில் பின் தொடர்ந்து வரும் நூற்றுக்கணக்கான மாணவ மாணவிகள் – முழக்கமிட்டனர்
அந்த வருங்கால மன்னர்கள் தங்கள் இள நெஞ்சங்கள் விம்மிப் புடைத்தபடி வீர நடையுடன், கைகளில் தாங்கிய வீர வாசகங்களுடன் கூடிய அட்டைகளுடன் கோலாகலமாக வருவதை பார்ப்பதே ஒரு பேறு.!
அப்படித்தான் அந்த கிராமத்து மக்கள் பேசிக் கொண்டனர். அது ஒரு கிராமம் தான்; ஆனாலும் சுற்றிலும் உள்ள பல கிராமத்து மக்களுக்கும், கல்வி ஒளியூட்டும் பணியை அந்த உயர்நிலைப்பள்ளி செவ்வனே செய்து வந்தது.
சமாதான காலத்தில் அவரவர்கள் வேலை தவிர மற்றவைகளில் அதிக ஈடுபாடு இல்லாவிட்டாலும் கூட நெருக்கடி தோன்றும்போது – அதற்கேற்ற வகையில் சற்று இளக்கிக் கொடுக்க வேண்டியது எல்லோர் கடமையும்தான் அல்லவா?
இச்சகத்து ளோரெலாம் எதிர்த்து நின்ற போதிலும்…
முன்னால் செல்லும் மாணவனின் குரல் மறுபடியும் கம்பீரமான மிடுக்குடன் வெளிவந்தது..
அச்சமில்லை! அச்சமில்லை!! அச்சமென்பதில்லையே!!! அதைவிட வீரம் ததும்பும் குரல்களில் பின்தொடர்ந்த மாணவ-மாணவிகள் ஜெய கர்ஜனை புரிந்தனர்.
அந்த இளம் சிங்கங்களின் குரல்கள் பொதுமக்கள் காதில் விழுந்ததுடன்கூட, தனியானதொரு சிலிர்ப்பையும் உள்ளத்தில் ஏற்படுத்தியிருக்க வேண்டும். இல்லாவிட்டால் “டக்… டக்… டொக்…” என்ற நாணயம் விழும் ஓசைகள் கேட்குமா!
இதோ – இங்கே! என்று கூப்பிட்டுக் கூப்பிட்டு வீட்டுக்கு வீடு உண்டியல் சுமந்துவரும் மாணவர்களை கூவி அழைத்து அதில் தங்களால் இயன்ற பொருளை பொதுமக்கள் வழங்கினர்.
மாணவர்களுக்கும் மாணவிகளுக்கும் இதில் விளையாட்டாக, ஓர் ‘போட்டி’ மனப்பான்மை ஏற்பட்டதால் ஒரே வீட்டில் கூட இரண்டு தடவைகள் கேட்டுப் பெற்று பெட்டி நிரம்ப ஆரம்பித்தது.
எல்லாவற்றையும், தவறெதுவும் நேராமல் கண்காணித்து வரும் ஆசிரியர்கள், அணிவகுப்பில் இருபுறமும் அங்கங்கு நின்று ஒழுங்குபடுத்தியபடி தொடர்ந்து மெல்ல நடந்து கொண்டிருந்தனர்.
எவ்வளவுதான் குடும்பத் தொல்லைகள் இருந்தாலும் மாணவர்களுடனேயே பழகி – குழந்தை உள்ளம் கொண்ட அவர்களும் கூடக் கவலைகளை மறந்து எல்லோரையும் ஊக்கி விட்டபடியே ‘வசூல்’ அதிகரிக்க உதவி செய்து கொண்டிருந்தார்கள்.
‘நாடெங்கும் இதுபோன்ற ‘பல துளிகள்’ சேர்ந்து கட்டாயம் ஒரு ‘பெருவெள்ளம்’ போன்ற தொகை பாதுகாப்புக்குச் சேரத்தான் சேரும்!’ என்று எண்ணமிட்டபடியே அந்தக் கூட்டத்தின் ஒரு பக்கமாக நடந்து கொண்டிருந்தான் பழனியப்பன்.
முதலில் தன் தெருமுனை வரை கூடச் சென்றவன், அந்த இளம் குரல்களின் ஆர்வத்தை நழுவ விடுவதற்கு விருப்பமில்லாமல் அடுத்த தெருவுக்கும் தொடர்ந்தான். ஒவ்வொரு தெருவாக சுமார் 2 மணிநேரம் ஊரையே வலம் வந்து விட்டது தெரிந்தது. அதனால் அவன் வருத்தமுறவில்லை.
இரண்டொரு தெருக்கள் கடந்ததும், விடாமல் கூட வரும் அவனுடன் ஆசிரியர்கள் இரண்டொருவர் பேசிப் பழக ஆரம்பித்தனர். அவர்கள் மூலம் மேலும், ஊர்வலம், இரண்டு மூன்று பக்கத்து பக்கத்து ஊர்களுக்கும் செல்லப் போவதை அறிந்து தானும் சென்று வர ஆசைப்பட்டான்.
சுமார் அரை மைல் ரோடிலே சென்ற அணிவகுப்பு, எதை எதையோ மனம் போனபடி மகிழ்ச்சியுடன் உரையாடிச் சென்றது.
அடுத்த ஊரின் முதல் வீடு. அந்த ஊர் பெரிய தனக்காரர்; தவிர அவர் ஓர் எண்ணை மண்டியும் வைத்து நடத்தி வருபவர். பகட்டுக்கும் பெருமைக்கும் ஆசைப்பட்டு ஏராளமாகத் தானதர்மம் செய்து அந்த வட்டாரத்திலேயே பெயர் வாங்கியவர். ஆனால் இன்று வரை பள்ளிக் கூட சம்பந்தமாக எதுவுமே செய்ததில்லை என்று ‘ஸ்கூல் கமிட்டி’ யினருக்கு அவர் பேரில் வருத்தம் கூட உண்டு என்றெல்லாம் ஊர் சொல்லும்.
ஊரை நெருங்கவும் ஒழுங்குபடுத்தப்பட்ட கூட்டம் கோஷங்களை உதிர்த்தது. ‘யுத்த நிதிக்கு’ப் பொன் தாரீர்- சத்தம் வானைப் பிளந்தது.
அவன் சற்று விலகியபடியே வசூலிக்கும் மாணவர்களுக்கு வழிபட்டு அந்த வீட்டை ஒதுங்கியிருந்து கவனித்தான். அங்கிருந்த சிறு பித்தளைத் தகட்டில், அவர் பெயர் வெள்ளி எழுத்தில் மின்ன, கீழே எழுதியிருந்த சொல் அவனை வியப்பில் ஆழ்த்தியது.
அட! இவர் வர்த்தக சங்கத்தின் தலைவரா? சரிதான். ஒரு பெருமூச்சு அவனை அறியாமல் வந்தது. அவர் போட்ட நூறு ரூபாய் தாள் கூட ஒரு போலியோ என்னவோ? என்றுதான் உடனடியாக நினைக்க முடிந்தது.
‘அப்படி போடமாட்டார். ஏனென்றால் இது சர்க்காருக்கு போகும் .பணம். இந்த ஊரில் இவர்தான் இவ்வளவு அதிக தொகை போட்டவர் என்பது ‘பப்ளிக்’காகத் தெரியும்போது மாட்டிக்கொள்வாரே..’ எனவும் நினைவு திரும்பியது.
தலைமை ஆசிரியர் அவரது தாராள மனத்தை புகழ்ந்த படி விடைபெற்றார். அது அவர் கடமை. மாணவர்கள் உண்டியலில் மட்டும் பணம் போட்டு… எங்கள் பெட்டிக்கு போடாமல் விடமாட்டோம்…, கிளிகளெனக் கலகலக்கும் குரல்களுடன் மாணவிகள் பட்டாளம் அவர் மனைவியை சூழ்ந்துகொண்டது.
சற்று நேரம் மறுத்தாலும் கூட கடைசியில்… கணவனின் பக்கம் பார்த்து அர்த்தத்துடன் சிரித்தாள் மனைவி. இடது கை வலது கையின் விரல்களை நெருங்கிக்கொண்டிருந்தது.
“உன் இஷ்டம் போல் செய் மனைவியைப் பார்த்து சொன்னபடியே, ‘சக்கைபோடு தான் போங்க…’ மாணவிகள் பக்கம் திரும்பிச் சிரித்தார் அந்த பிரமுகரான வியாபாரி.
“சீக்கிரம்… சீக்கிரம்… கூட்டம் அதோ போய்விட்டது” குழந்தைகள் அவசரப்படுத்தினர். யாரும் எதிர்பாராதவிதமாகத் தன் கை விரல்களில் இருந்த மோதிரங்களில் ஒன்றை கழட்டிப் போட்டார் அவர்.
கோலாகலமான இரைச்சலுடன் சிட்டுக் குருவிகளைப் போல் பறந்து ஓடினர். அவன் வியந்தபடியே சற்று அங்கு நின்றான்.
“என்ன அரைப் பவுனா?” தொலையறது?”… இப்ப கையிலே இருக்கிற ஸ்டாக்லே… ‘டின்னுக்கு’ நாலு ரூபா ஏத்தினா தீந்திச்சி… ‘அரையும் குறையுமாக இதை மட்டும் காதில் வாங்கிக் கொண்ட அவன் பொறுமிக் குமுறினான். அடுத்த கணமே அவன் இயற்கையான பொறுமை தலைதூக்கியது. கடந்த மூன்று மாத காலத்தில் எண்ணையின் விலை ஏற்றம் எப்படி எல்லாம் படிப்படியாக ஏறி வந்தது என்பது நினைவுக்கு வந்தது. ஒரு பக்கம் ‘தருமம்’ செய்வது போல் ஏய்த்துவிட்டு, மறுபக்கம் அதை ஈடு செய்ய முயலும் ‘துரோகிகளை’ப் பற்றி நினைத்தான். இவர்கள் வாழ்வு இன்னும் எத்தனை நாள்! இதைவிட மிகப் பெரிய கருப்பு மார்க்கெட்காரர்கள் எல்லாம் நாற்பத்தி எட்டில் மண்ணைக் கவ்வவில்லையா – தொடர்ந்து இந்த இரட்டைவேஷக்காரர்களைத் தண்டிக்க எவ்வளவு நேரம் ஆகும். இந்த யுத்த நிலை நீடிக்க வேண்டும் என்று கூட விரிவாக இவர்கள் எண்ணுவார்கள். ‘நல்லவேளை! நாட்டின் நேர்மை இன்னும் பூராவும் அஸ்தமித்து விடவில்லை..’ தன்னையே தேற்றிக்கொண்டபடி நடந்தான். வெய்யில் ஏறி வந்ததால் கூட்டம் தொலைவில் சென்று நிழலில் நின்றது. வசூலித்து வருபவர் மட்டும் மெதுவாக தன் பணியை செய்து கொண்டு வீடு வீடாக ஏறி இறங்கினார். உண்டியல் கனக்க ஆரம்பித்து விட்டது போலும்.
“என்னத்துக்கும்மா இந்தக் கூட்டம் போகுது?” ஒரு வீட்டின் திண்ணையில் இருந்த கறிகாய் கடை வீராயி கேட்டாள். அதற்கு மேல் போக மனமில்லாத பழனியப்பன் சோர்வுடன் கூட அங்கேயே ஒரு ஓரமாக அமர்ந்தான். அவன் மனம் களைத்திருந்தது.
“இப்ப சண்டை நடக்குதில்லையா? அதுக்குப் பணம் கேட்கறாங்க. பள்ளிக்கூடத்து பசங்க!” வீட்டுக்கார அம்மாள் தனக்குத் தெரிந்ததை விவரித்துக் கொண்டிருந்தாள்.
“ஓஹோ அப்படிங்களா? நின்னுடுச்சு ன்னாங்களே?” அத்துடன் நிறுத்தி விட்டு தன் வியாபாரத்தில் நினைவை ஆழ்த்தினாள். கூட்டம் தொலைவில் சென்று குரல் மட்டும் லேசாகக் கேட்டுக்கண்டிருந்தது.
வீட்டுக்காரம்மாள் பேரம் பேச, அந்தக் கிழவி பரிதாபமாகக் கூறினாள். “தெனம் தெனம் காலையிலேருந்து சுமைதூக்கிச் சுத்தி சுத்தி வியாபாரம் பண்ணினா ஒரு ரூபா காசு தேறும். இதுக்கு அரிசி வாங்க கூட முடியாதுங்களே! எனக்கு கட்டாதுங்க..” தீர்மானமாகச் சொல்லிக் கூடையை தூக்குவதற்கு ஆயத்தமானாள்.
கூடையில் இருந்த பொருள்களை அனுசரித்து ‘பாதி வியாபாரம் கூட ஆகவில்லை’ என பழனியப்பனின் எண்ணங்கள் வேலை செய்தன. இவகிட்டே போயி இப்படி அக்கிரமமா விலை குறைச்சிக் கேட்கறாங்களே?’ அவன் மனம் அவளுக்காக இறக்கப்பட்டது.
அந்த அம்மாளின் பேரில் கோபமும் வந்தது.
“அதுக்குக் கேட்கலை – நாலு நாள் முந்தி கிலோ எட்டணானு வாங்கியாந்தாங்க…” அதனால… சொன்னேன்..”
அந்த அம்மாள் சொன்னது சுத்த பொய் என்பது சற்று கவனித்தால் புலப்படும். அவனுக்கு அது தெரிந்தது.
அன்னியன் ஒருவன் எதிரில்… இவ்வளவு நேரம் பேரம் பேசி நிற்பதால் கூசிப் போனதுபோல் ஏதோ ஒரு விலைக்கு முடித்து பணம் கொண்டு வர உள்ளே போனாள் அதே அம்மாள்.
“ஏங்கிழவி உனக்கு இதேதான் வியாபாரமா? பெத்த குழந்தைங்க எதுவும் சம்பாரிகறதில்லையா?” பழனியப்பன் மெதுவாக கேட்டான். அவளது முதிர்ந்த வயதில் படும்பாடு அவனுக்குப் பரிதாபமாக இருந்தது.
“இந்தாப்பா..” அந்தக் கிழவி அவனைக் கூப்பிட்டாள்.
“‘”ஏம்மா’ கூடையைத் தூக்கி விடணுமா?”
“‘ “இல்லெ’ இந்தப் பணத்தை அவங்க – அந்த ‘இஸுக்கூல்’ பசங்க வந்தா போடு”. முழு ஒரு ரூபாய் நோட்டு ஒன்றை எடுத்து அவனிடம் தந்தாள். அவன் வியப்பு அதிகமாயிற்று.
“இவ்வளவு ஏதுக்கம்மா? உங்க லாபமே – அதுவும் – பூரா வித்தாத் தானே – இது வரும். இதைப் போட்டுட்டா நீங்க என்னா செய்வீங்க?” ரூபாயை வாங்காமலேயே சொன்னான் அவன். தூரத்தில் மாணவர்கள் அதே தெருவில் திரும்பி வரும் ஆரவாரம் கேட்டது.
“எனக்கு ஒரு நாளைக்கு லாபமே இல்லாட்டி கூடப் போகுது இந்தப் பணம் போய் சேர்ந்து சண்டை நின்னுடிச்சின்னா ‘என் மகன் போன மாதிரி’ யாரும் போயிட மாட்டாங்களே..- அதுக்காக இது என்ன இன்னும் கூட தர்றேன். தன் சுருக்குப் பையை அவிழ்க்க ஆரம்பித்தாள். சண்டை நின்னா ஜனங்க கஷ்டம் குறையுமே! அவள் வாய் முணுமுணுத்தது.
“என்ன உன் மகனா?” பதறியபடியே கேட்டான் பழனியப்பன்.
“ஆமாங்க அவன் போயி வீர வீரமாகச் சண்டை போட்டு போயே போயிட்டானாமுங்க..” ஒரு கடிதத்தையும் எடுத்துப் பிரித்துக் காண்பித்தாள்.
நாட்டில் எவ்வளவு கயவர்கள் திரிந்தாலும் கூட இது போன்ற லட்சோப லட்சம் ஏழை தியாகிகளின் உள்ளன்புடன் கூடிய தேசபக்தி இருக்கும் வரை நாட்டுக்கு கேடு இல்லை என்ற முடிவுடன் கூட்டத்தில் சேர்ந்து நடந்தான் அவன்.
அன்று மாலை பழனியப்பன் அரசமரத்து மேடையில் நண்பர்களுடன் பேசிக் கொண்டிருந்தாரன் – பேசுவதாவது? மற்றவர்கள் பேச்சை கேட்டுக் கொண்டு உட்கார்ந்திருந்தான். அவன் மனம் எங்கெங்கோ சென்று கொண்டிருந்தது. ஆகவே பேச்சையும் கூட நன்றாக கவனிக்க முடியாதபடி தன் எண்ணங்களிலேயே லயித்திருந்தான்.
சட்டென்று கவனம் மாறி அப்படிச் சொல்லாதே “இந்தப் போராட்டத்தில் வெற்றி நம் பக்கம் தான்..” என்று தரையை அடித்துச் சொன்னான் பழனியப்பன்.
முந்தைய ‘பாட்டன் டேங்க்’ அனுபவத்தை மட்டும் வைத்து சொல்லாதேப்பா. இப்போது அவர்கள் கார்கில் பகுதியில் ‘பாதாளக் காப்பறைகள்’ கட்டிக் கொண்டிருக்கிறார்களாம், தவிர …வின் உதவிவேறு தாராளமாக இருக்கும் போலிருக்கிறது…”இழுத்தாற்போல் சொன்னான் முதலில் பேசியவர்களில் ஒருவன்.
அட! பைத்தியமே… ஏளனப் புன்முறுவல் பூத்தபடியே சற்று வெறித்துப் பார்த்தேன்… உனக்குத் தெரியாது! தர்மம் என்பதும் மக்களின் ஒருமுகமான சிந்தனை என்பதும் சாமான்யமானதல்ல. அது நம் பக்கம் இருக்கிறதடா!
அந்த வார்த்தையை அவன் உச்சரிக்கும்போது காலையில் பார்த்த ‘கறிகாய்க் கூடை வீராயி தான் அவன் கண்களுக்கு எதிரில் நின்றாள். அவளது அன்றைய வருமானமே அந்த அவள் போட்ட ரூபாய்தான்! அது அவளைப் பொறுத்தவரை ‘சர்வ பரித் தியகமே’ அல்லவா.?
யாருடைய வற்புறுத்தலும் என்றி நாட்டுக்கு ஒரு கேடு என்று உணர்ந்துகொண்ட உடன் வீறுகொண்டு எழும் அவளைப் போன்ற தியாகிகள் நாடெங்கும் இன்னும் அத்துப்போகவில்லை என்று சொல்ல துடித்தது அவன் வாய். அதை உணர்ச்சிகள் தடுக்க மௌனமாக இருப்பது ஒன்றுதான் அவனால் இப்போதைக்கு முடிந்தது.
– குடியரசு – 29-11-1965