கதையாசிரியர்:
கதை வகை: தொடர்கதை
கதை வகை: முதல் அத்தியாயம்
கதைத்தொகுப்பு: குடும்பம்  
கதைப்பதிவு: September 12, 2024
பார்வையிட்டோர்: 1,969 
 
 

(1885ல் வெளியான நாவல், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

இலங்கையின் முதல் தமிழ் நாவல்.

இந்நாவல் தமிழில் எழுதப்பட்ட முதல் வரலாற்று கற்பனை நாவல். தமிழில் எழுதப்பட்ட இரண்டாவது நாவல் என்றும் இதை கருதலாம் என ஆய்வாளர் சிலர் சொல்வதுண்டு. இந்நாவல் அரேபியக்கதை ஒன்றை அடிப்படையாகக் கொண்டது. இது நாவல் என்னும் தலைப்புடன் வெளிவராமல் மதநூலாக வெளிவந்தமையால் நாவலாக ஆய்வாளர்களால் கருத்தில் கொள்ளப்படவில்லை.


பதிப்புரை

தமிழ் இலக்கியத்தில் புதினம் மிக அண்மையில் தோன் றிய கலையாகும். ஆனால் இன்று ஆலெனப்படர்ந்து அடர்ந் துள்ளது; மக்கள் மன த்தைப் பெரிதும் கவர்ந்துள்ளது. 

முதல் தமிழ் நாவல் எனப்போற்றப்படும் வே தநாயகம் பிள்ளையின் பிரதாப முதலியார் சரித்திரம் கி. பி. 1879இல் தோன்றியது. அடுத்த ஆறாண்டுகளில் சித்திலெவை நமது அஸன்பே கதையினை வெளியிட்டுள்ளார். தமிழ்ப் புதின வரலாற்றைப் புரட்டிப் பார்க்கும்போது அஸன்பே சரித்திரம் இரண்டாவதாக இலங்குகிறது. 

ஈழ நாட்டுத் தமிழ்ப் படைப்பிலக்கிய வரலாற்றை நோக்குமிடத்து அஸன்பே சரித்திரமே முதல் புதினமாக விளங்குகின்றது. 

தமிழ் மொழியில் தோன்றிய இரண்டாவது புதினமாக வும் ஈழத்தின் முதல் தமிழ்ப் புதினமாகவும் திகழும் ஹஸன்பே சரித்திரம் நம் இஸ்லாமியத் தமிழ் இலக்கியக் கழகத்தின் மூன்றாம் வெளியீடாகக் கொணர்வதில் மகிழ்ச்சி யடைகிறோம். ஒழுக்கத்தையும் சமூக சீர்திருத்தத்தையும் மையமாகக் கொண்டு இன்றும் படித்து மகிழ்ந்து பயனெய் தும் வகையில் அமைந்துள்ள இந்நூலை இரண்டாவது இஸ் லாமியத் தமிழ் இலக்கிய மாநாட்டின்போது வெளியிடு வதில் மகிழ்ச்சியடைகிறோம். 

இந்நூலின் இப்பதிப்பு வெளிவருதற்கு குலசேகரன் பட்டினம் ஜனாப் எஸ். எம் ஷஹாபுதீன் பேருதவி புரிந்தார் கள். மறைந்துவரும் இந்நூலின் இரு பிரதிகளை அரிதின் முயன்று தேடித்தந்ததுடன் அரியதொரு முன்னுரையும் தந் துதவியுள்ளார்கள். இலங்கை நூலக சேவை அதிகாரி ஜனாப் S.M.கமாலுதீன் குறுகிய காலத்திலும் சிறந்த முறையில் அச்சிட்டுத் தந்துள்ளார்கள் திருச்சி சிவாஜி பிரிண்டர்ஸ், இப்பதிப்பு வெளிவர உதவிய அனைவர்க்கும் இதயம் கனிந்த நன்றி. 

திருச்சிராப்பள்ளி, 30-5-74.
இஸ்லாமியத் தமிழ் இலக்கியக் கழகம்.


அறிமுகம் 

ஈழத்துத் தமிழ் இலக்கியத் துறையிலே முஸ்லிம்களின் பங்களிப்பு குறிப்பிடத்தக்க வகையில் அமைந்துள்ளதெனி னும் இவ்வுண்மை தமிழ்ப் பேசும் மக்களுக்குப் பரவலாக அறிவிக்கப்படாத தொன்றாகும். இந்நிலைக்குப் பிரதான காரணய் எமது இலக்கிய வரலாற்றாசிரியர்கள் முஸ்லிம் களின் பணிமை முழுமையாக ஆய்ந்தறிவதற்கான வசதிகள் மிகவும் குறைவாயுள்ளதேயாகும். இதனை நான் உணர, அறிஞர் சித்திலெவ்வையின் “அஸன்பேயுடைய கதை பற்றிய ஆய்வில் எனக்கேற்பட்ட அநுபவமே போதுமாயிருந் தது. இருந்தபோதிலும் சித்திலெவ்வையின் இவ்வாக்கமே இலங்கையில் எழுந்த முதலாவது புனைகதையென்று நிறுவ முடிந்தபோது எனக்கேற்பட்ட மகிழ்ச்சி கூறுந்தரமன்று. 

இனி “அஸன்பேயுடைய கதை” தமிழ்ப்புனைகதைத் துறையில் வகிக்கும் இடத்தை இங்கு சுருக்கமாக விளக்க விரும்புகின்றேன். 

தமிழ் மொழியிலே முதன் முதலாகத் தோன்றிய ‘உரை நடை நவீனம்’ ச. வேதநாயகம் பிள்ளை 1879ம் ஆண்டில் வெளியிட்ட பிரதாப முதலியார் சரித்திரமாகும். 

1896ம் ஆண்டில் இராஜம் ஐயர் வெளியிட்ட “கமலாம் பாள் சரித்திரம்” ‘நாவல்” வரலாற்றில் முதன்மையானது என்றதொரு கருத்தினை திரு எஸ். தோதாத்திரி தெரிவித் துள்ளார் (ஆராய்ச்சி, இதழ் 1-மலர் 3 1972 பக்கம் 30) 

“கமலாம்பாள் சரித்திரம் இரண்டாவது தமிழ் நாவலென் றாலும் உண்மையிலேயே இதைத்தான் முதல் நாவல் என்று கூறுதல் தகும். வேதநாயகம் பிள்ளையின் பிரதாப முதலியார் சரித்திரம் நாவலுக்குரிய சூழலை உருவாக்கவில்லை. ஓர் அற் புத நவீன வகையைச் சேர்ந்தது அது. ஆனால் ராஜம் ஐயர் நடப்பியல்பிற்கு ஏற்பக் கதையை அமைக்கிறார். அவர் சமூக மக்களைக் குறைகளுடனும் நல்லவை கெட்டவையுடனும் காண்கிறார்”. 

திரு.தோதாத்திரியின் மேற்கண்ட கூற்று விவாதற்திற் குரியதாகும். அவர் கூற்றுப்படி கமலாம்பாள் சரித்திரத்தை நாம் முதலாவது நாவலெனக் கொள்வதாயின் 1985ம் ஆண் டில் சித்திலெவ்வை வெளியிட்ட “அஸன்பேயுடைய கதை” யே தமிழ்ப் புனைகதைத் துறையிவே முதலாவது இடத்தைப் பெறுகிறது. அஸன்பேயுடைய கதையும் திரு தோதாத்திரி கூறும் நாவலுக்கான நடப்பியல்பிற்குப் பொருந்துவதாகவே அமைந்துள்ளது. 

ஈழத்தில் எழுந்த முதலாவது நாவல் த. சரவண முத்துப் பிள்ளை எழுதிய ‘மோகனாங்கி” (1895) என்பது பொதுவாக ஏற்றுக்கொள்ளப்படும் கருத்தாகும். எனினும் சோ. சிவபாத சுந்தரம் தமது கட்டுரையொன்றில் இக்கருத்தை மறுத்துள்ளார். இதுபற்றி அவர் கூறுவது கவனிக்கத்தக்கதாகும். 

“தமிழ் நாவல் சரித்திரத்திலேயே முன்னோடியாக வேத நாயகம் பிள்ளையையும், ராஜம் ஐயரையும்தான் பெரும்பான் மையான இலக்கிய வரலாற்றாசிரியர்களும் திறனாய்வாளர் களும் குறிப்பிட்டெழுதி வருகிறார்கள். ஆனால் 1895ல் வெளிவந்த த.சரவணமுத்துப் பிள்ளையின் மோகனாங்கி என்ற அற்புதமான நாவலைப்பற்றி இவர்கள் கவனிப்பதாகத் தெரியவில்லை. 1962ம் வருடம் சில்லையூர் செல்வராஜன் ‘புதுமை இலக்கியம்’ என்ற மலரில் ஈழத்துத் தமிழ் நாவல்களைப் பற்றி எழுதிய கட்டுரையில் மோகனாங்கியைப் பற்றியும் ஒரு குறிப்பு எழுதியிருந்தார். அதில் அவர் ஈழத் தமிழ் நாவல் வரிசையில் மோகனாங்கியைச் சேர்த்திருந்தாலும் உண்மையில் அதனை அப்படி வரையறுக்க முடியாது. ‘சரவண முத்துப் பிள்ளை ஈழத்தில் பிறந்தவர் என்ற ஒரே தொடர்புதான் உண்டல்லாமல் வேறு தொடர்பு இல்லை. நாவல் வெளியிடப் பட்டது சென்னையில், ஆசிரியர் வாழ்ந்தது சென்னையில் நாவலின் கதையும் திருச்சியையும் தஞ்சாவூரையும், நாயக்க மன்னர் வரலாற்றையும் சொல்வது. தமிழ் இலக்கிய வரலாற் றில் ஈழத்தைச் சேர்ந்த சரவண முத்துப்பிள்ளையின் மோகனாங்கி ஒரு முக்கிய இடத்தை வகிக்கின்றது என்று சொல்வதில் உண்மையுண்டு. 

(தினகரன் 12-11-1972) 

மோகனாங்கியின் தோற்றத்துக்குப்பத்து ஆண்டுகளுக்கு முன்பே சித்திலெவ்வையின் ‘அஸன் பேயுடைய கதை வெளி வந்துவிட்டதனால், இலங்கையில் வெளிவந்த நாவல்களுள் காலத்தால் முற்பட்டது ”அஸன்பேயுடைய கதை”யாகும். இவ்வுண்மை தற்போது பரவலாக ஏற்றுக்கொள்ளப்பட்டுள் ளது. சித்திலெவ்வையின் நாவலே இலங்கையில் முதன்மை யான ஆக்கமென்பதை கலாநிதி கைலாசபதி பின்வருமாறு குறிப்பிடுகிறார். 

“இலங்கையில் எழுந்த முதலாவது நாவல் எதுவென்பது விவாதத்திற்குரியதாயினும் இதுவரை நாம் அறிந்துள்ளவற் றிலிருந்து எம் ஸி. சித்திலெவ்வையின் அஸன்பேயுடைய சரித்திரமே முதலாவதாக வெளியிடப்பட்டதாகும். இந்நா வல் 1885ஆம் ஆண்டில் வேத நாயகம் பிள்ளையினுடைய முன்னோடியாக்கத்திற்கு ஆறே ஆண்டுகளின் பின் தோன் றியது. சித்திலெவ்வையின் நூலைப் படிக்குமொருவர் இதற்கு ‘அஸன்பேயின் திகைப்பூட்டும் நூதன சாகசங்கள் என்று பெயரிட்டிருக்கலாமென்று எண்ணக் கூடியதாயுள்ளது. கதையின் கருவும் போக்கும் அவ்விதம் எண்ணத்தக்கதா கவே அமைந்துள்ளன. கதாநாயகன் மத்திய கிழக்கு, இந் தியா, ஐரோப்பா ஆகிய நாடுகளுக்கெல்லாம் செல்கின்றான். தமிழ்க் கதைக்குப் புதிதான பாத்திரங்களும் அறிமுகப்படுத்தி வைக்கப்படுகின்றனர். அதே சமயத்தில் சித்திலெவ்வை ஒழுக்கம், சமூக சீர்திருத்தம் ஆகியவற்றில் கவனம் செலுத் தினார். இவை அவரது நூலில் முக்கிய இடம் பெறுகின்றன. 

(வானொலி மஞ்சரி 25-2-74) 

மற்றும் ஆ.சிவநேசச் செல்வன் அவர்களும் ஈழத்தில் தமிழ் நாவல் இலக்கியம் என்ற கட்டுரையில் “தமிழில் வெளி வந்த முதலாவது நாவலாக 1879ஆம் ஆண்டில் வேதநாய கம் பிள்ளை எழுதின பிரதாப முதலியார் சரித்திரம் தோன்றி யது. இதனைத் தொடர்ந்து எஸ். எம். கமாலுதீனால் அறி முகம் செய்யப்பட்டுள்ள அஸன்பே சரித்திரம் 1885 இல் வெளிவந்துள்ளது. இதனை எழுதிய அறிஞர் சித்திலெவ்வை ஈழத்தின் முதலாவது தமிழ் நாவலாசிரியராவர். இதுவரை காலமும் 1891 இல் உசோன் பாலந்தை கதையை எழுதிய திருகோணமலை இன்னாசித் தம்பியே முதலாவது நாவலாசிரிய ராகக் கருதப்பட்டார்.” என்று குறிப்பிட்டுள்ளார். 

(கலைக்கண் 23-4-73) 

சில்லையூர் செல்வராஜன் தமது ஈழத்தின் தமிழ் நாவல் வளர்ச்சி என்னும் நூலில் இலங்கையில் வெளிவந்த முதலாவது தமிழ் நாவல் திருகோண மலையைச் சேர்ந்த இன்னாசித்தம்பி எழுதிய “உசோன் பாலந்தைக் கதை” எனும் கருத்தை வெளியிட்டுள்ளார். இந்நூல் 1891ம் ஆண்டு வெளியிடப் பட்டதாகும். இதுவும் சித்திலெவ்வையின் நூலுக்குப் பிந்தியதேயாகும். 

“அஸன்பேயுடைய கதை” இலங்கையிலெழுந்த முதலா வது தமிழ் நாவலென்ற சிறப்பினைப் பெறுவதோடு, சிங்கள இலக்கியத் தோற்றத்திற்குப் பல ஆண்டுகள் முற்பட்ட தென்ற பெருமைக்குரியதாகின்றது. இதனைத் திரு. ஆரிய ராஜ கருணா தமது சிங்கள நாவலின் தோற்றம்” எனும் நூலில் தரும் பின்வரும் விளக்கத்திலிருந்து தெளியக் கூடியதாக உள்ளது. 

”தற்கால சிங்கள இலக்கியத் துறையில் நாவல்தான் பரவலாக விரும்பப்படும் இலக்கிய வடிவமாகும். அதன் வர லாறு நூறு ஆண்டுகளுக்கும் குறைவானதேயாகும், முதன் முதலாக சிங்கள நாவல் தோன்றியது இருபதாம் நூற்றாண் டின் முதற் சகாப்தத்தில் தான். ஏ. சைமன் டி சில்வாவுடைய முதலாவது நாவலான ”மீனா” 1905 ஆண்டிலும்; பியதாஸ சிரிசேனாவுடைய முதலாவது நாவலான வாசன வந்த விவாஹய” (அதிர்ஷ்ட விவாகம்) அல்லது ஜயதிஸ்ஸவும் றொஸலினும் 1906ம் ஆண்டிலும் எம் ஸி. வி. எஃ பெரேரா வுடைய ‘மகே கருமமே” (எனது விதி) 1906ம் ஆண்டிலும் ட பிள்யூ. ஏ சில்வாவுடைய “சிரியலதா அல்லது அனாத தருணிய அனாதைப் பெண் 1909ம் ஆண்டிலும். மார்ட்டின் விக்கிரம சிங்கவின் “லீலா’ 1914ம் ஆண்டிலும் வெளியிடப் பட்டன. 

இதற்கு முன்பதாக, அதாவது 19ம் நூற்றாண்டின் பிற் பகுதியில் அற்புதக் கதைகள் படைத்த எழுத்தாளர்கள் சிலர் இருந்தனர். இவர்களுள் எல். ஐஸாக் டி சில்வாவும் பெந் தொட்ட அல்பர்ட் டி. சில்வாவும் சிறப்பிடம் வகிக்கிறார்கள். ஐஸாக் டி சில்வா “வாசனாவந்த உறா காலகண்ணி பவுள்” அதிர்ஷ்டசாலிக் குடும்பமும் தரித்திரக் குடும்பமும்) 1888ம் ஆண்டில் ஒரு தனி நூலாக வெளிவந்தது. அல்பர்ட் டி சில்வாவுடைய “விமலா உறா ஆதர உறஸ்ன” விமலாவும் காதற்கடிதமும்) “சிறிபறி உறா வெசக் தூ தயா (சிறிபறியும் வெசக் தூதரும் ஆகியன முறையே 1892ம் ஆண்டிலும் 1894ம் ஆண்டிலும் வெளிவந்தன. இவ்விரு ஆசிரியர்களும் இருபதாம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் நாவல் இலக்கியம் தோற்றுதற்கு வழியமைத்தனர் சில ஆரம்பகால நாவல் களில் இவர்களுடைய ஆக்கங்களின் தாக்கத்தை நாம் காணக்கூடியதாக இருக்கினறது”. 

சித்திலெவ்வை தமது புனைகதையை “அஸன்பேயுடைய என்ற தலைப்பிலேயே 1885ம் ஆண்டில் கொழும்பில் முஸ்லிம் நேசன் அச்சகத்தில் பதிப்பித்துள்ளார். இந்நூல், பின்னர் இந்தியாவில் வெளியிடப்பட்ட போது “அஸன்பே சரித்திரம்” என்று பெயர் மாற்றம் பெற்றுள்ளது இங்குக் குறிப் பிடத் தக்கது. தமிழகத்தில் தமிழ் நாவல் துறையின் ஆரம்ப காலத்தில் ‘சரித்திரம்” என்ற சொற் பிரயோகம் நாவலோடு இணைந்திருந்தமையும் இப்பெயர் மாற்றத்திற்குக் காரணமாய் இருந்திருக்கக்கூடும். பிரதாப முதலியார் சரித் திரம். கமலாம்பாள் சரித்திரம் முதலிய ‘நாவல்களைப் பின்பற்றி வெளியீட்டாளரும் அஸன்பேயுடைய சரித்திரத்தை” அறி முகப்படுத்தியிருக்கக்கூடும். 

மேல்நாட்டுக் கலாச்சாரத் தொடர்பே தமிழில் நாவல் இலக்கியம் தோன்றக் காரணமாயிருந்ததெபைது நாவல் இலக்கிய வரலாற்றிலிருந்து பெறப்படும் உண்மையாகும் சித்திலெவ்வை ஆங்கில மூலம் கல்வி பயின்றவர், தமிழ் அரபு ஆகிய மொழிகளையும் கற்றவர் அவர் காலத்தே ஆங் கிலக் கல்வியில் ஈடுபட்ட ஏனையோரைப் போல் அவரும் மத் தியதர வகுப்பையே பிரதிநிதித்துவப்படுத்தினார். எனவே அவரது “அஸன்பே சரித்திரத்தில்” அக்காலத்தே ஆங்கிலத்தில் செல்வாக்குப் பெற்றிருந்த ஜி எம். றேனோல்ட் ஹென்றிஃபீல்டிங். டானியல் டிஃபோ போன்ற நாவலாசிரியர் களின் ஆக்கங்களின் சாயல் காணப்படுவதில் வியப்பில்லை. 

அறிஞர் சித்திலெவ்வையின் காலம் இலங்கை முஸ்லிம் களிடையே விழிப்புணர்ச்சி அரும்பிய காலமாகும். அக்கா லத்தே இலங்கை முஸ்லிம்களின் சமய கலாச்சார இயக்கங் களுக்கு மிஸ்ர் (எகிப்து) துருக்கி, அரேபியா போன்ற நாடு களே வழிகோலின. எனவே இந்நாடுகள் இலங்கை முஸ் லிம்களின் சிந்தனைகளின் பெரும் அளவில் இடம் பெற்றதில் வியப்பில்லை இதனையொட்டியே இக்கால இலக்கிய ஆக்கங் களில் மத்திய கிழக்கு நாடுகள் நிழலாடலாயின. சித்தி லெவ்வை. ஐ. எல். எம். அப்துல் அஸீஸ் போன்றோரின் ஆக் கங்களில் மாத்திரமன்றி இலங்கையின் சிங்கள இலக்கியத் துறையிலும்கூட இத்தாக்கத்தை அவதானிக்கக் கூடியதாக இருக்கின்றது. 

இதுபற்றிக் கலாநிதி ஆர்.சரச்சந்திரர் தமது “சிங்கள நாவல்” என்ற நூலில் பின்வருமாறு கூறுகின்றார். ‘சிங்கள நாவலுக்கான அத்திவாரத்தைப் பெரும்பாலும் ”அறாபி திசொல்லாசய” எனும் நூலே அமைத்துக் கொடுத்தது. அதனுடைய தாக்கம் புரட்சிகரமானதும், ஆழமானது மாகும் எம்.சி.எஃப் பெரேரா, சிரிசேன போன்ற ஆரம்ப கால நாவல் ஆசிரியர்களின் அற்புதக் கதைகள் இதன் வழி தோன்றியனவே யாகும். 

அரேபிய (ஆயிரத்தொரு இரவுகள்) அல்பரீட் டி சில்வா வினால் சிங்களமொழியில் ஆக்கப்பட்டு முழுமையாக 1894ம் ஆண்டில் வெளியிடப்பட்டது. சித்தி லெவ்வையின் நாவ லின் பதிப்பு விபரத்தை நானறிந்த அளவு கீழே தருகின்றேன்;- 

(1) முதன் முதலில் சித்திலெவ்வை. கொழும்பு முஸ்லிம் நேசன் அச்சகத்தில் 1885ம் ஆண்டில் அஸன்பேயுடைய கதை என்ற தலைப்பில் தமது நாவலை வெளியிட்டார் 

(2) அடுத்தபடியாக இந்நூல் சென்னையில் வெளியி டப்பட்டது. இதன் விபரத்தை சென்னை தமிழ் நூற்பட்டி யல் (1857 -1900) பின்வருமாறு தருகிறது :- 

சித்திலெவ்வை மரைக்கார் முஹம்மது காசிம் மரைக்கார்.

அஸன்பேயுடைய சரித்திரம்: பா முஹம்மது அப்துல்லா சாகிப். அர்ச்சூசையப்பர் அச்சுக்கூடம், சென்னை, மார்ச், 1890. 

மேலே குறிப்பிட்ட இரண்டு பதிப்புக்களுக்கும் இடையே வேறு பதிப்புக்கள் வெளிவந்தனவா என்பது தெரியவில்லை. ஆனால் இந்நூலை சென்னையிலுள்ள உறாஜி எம். ஏ ஷாகுல் உறமீது அன் சன்ஸ் நிறுவனத்தார் பிற்காலத்தில் பலமுறை வெளியிட்டிருப்பதாகத் தெரிகிறது. இவ்வெளியீடுகளில் பெயரோ அல்லது நூலின் இலங்கைத் தொடர்போ குறிப்பி டப்பட்டிருக்குமா என்பது சந்தேகமே. ஏனெனில் 1986ம் ஆண்டில் அந்நிறுவனத்தார் வெளியிட்டுள்ள நூற்பட்டிய லில் இந்நூல் பற்றிப் பின்வரும் விபரம் மட்டுமே தரப்பட்டுள்ளது. 

“அஸன்பே சரித்திரம். இது ஓர் அற்புதமான நாவல். மிஸ்ர்தேசத்து அரச குமாரனான அஸன்பே என்னும் சிறுவ னின் சரிதை. இது சிலேசமும், சாமர்த்தியமும், பேரானந் தமும் நிறைந்ததோர் நாவல்”. 

தமிழ் நாவல் வரலாற்றில்; தமிழகத்திலும் ஈழத்திலும் முன்னோடிகளாயமைந்த நாவல்கள் பற்றிய ஆய்வில் இது காறும் அறிஞர் சித்திலெவ்வையின் “அஸன்பேயுடைய கதை” இடம்பெறவில்லை. தமிழ் நாவல் வரலாற்றை நிறை வாக்க வருங்காலத் தமிழ்இலக்கிய வரலாற்றாசிரியர்கள் சித்திலெவ்வையின் ஆக்கத்திற்கு அதற்குரிய இடத்தை வழங்குவார்கள் என்று நம்புகின்றேன். 

இப்போது வாசகர்களுக்கு நாம் வழங்கும் இப்பதிப்பு பல தவிர்க்க முடியாத காரணங்களால் இனம் காணாத ஒரு பதிப் பில் இருந்தே உருவாகின்றது. இன்ஷா அல்லாஉற் வெகு சீக்கிரத்தில் மூல நூலின் மறுபதிப்பொன்றை வெளியிட முடியுமென்று நம்புகிறோம். 

அஸன்பேயுடைய கதை பற்றிய தேட்டத்தில் எனக்கு உதவிய அறிஞர் மர்உஹூம் ஏ எம் ஏ. அஸீஸ், கலாநிதி. க. கைலாசபதி, வழக்கறிஞர். முஉறமது றஃபக், ஜனாப்கள். என்.எஸ் எம். அப்துல்காதர், எஃப். எம். இப்றாகிம், கண்டி யைச்சேர்ந்த திருமதி உறபீபுலெவ்வை தற்கலை எம். எஸ். பஷீர் ஆகியோருக்கும், இலங்கை வானொலி முஸ்லிம் பகுதி யினருக்கும். சென்னை ஆவண நிலைய நெறியாளருக்கும். தினகரன் வாரமஞ்சரி, மணிவிளக்கு” சஞ்சிகை ஆகியவற் றிற்கும் எனது நன்றி உரித்தாகும். 

இரண்டாவது அனைத்துலக இஸ்லாமியத் தமிழ் இலக் கிய ஆராய்ச்சிக் கருத்தரங்கு மாநாட்டின் போது இந்நூலை வெளியிடுவதற்கு முன்வந்து தவிய மாநாட்டுக்குழுவினருக் கும், சிறப்பாகப் பேராசிரியர் சி. நெய்னார் முஹம்மது அவர் களுக்கும் நான் பெரிதும் கடமைப்பட்டுள்ளேன். 

எஸ்.எம்.கமாலுதீன் 
உதவி நெறியாளர், 
இலங்கைத் தேசிய நூலக சேவைகள் சபை, 
72, பெள தாலோக மாவத்தை, 
கொழும்பு 4. 
14-2-1974.


அத்தியாயம்-1 | அத்தியாயம்-2

கல்வி செல்வங்களினாலே மிகச் சிறந்து விளங்கா நின்ற மிசுறு தேசத்தின் இராஜதானியாகிய காயீரென்னும் பட்டணத்திலே செய்யிது பாக்ஷா என்பவர் இராச்சிய பரிபாலனஞ் செய்யுங்காலத்தில், அந்த பாக்ஷாவினுடைய மாளிகைக்குச் சமீபமான ஓர் அலங்காரமுள்ள மாளிகையில் யூசுபு பாக்ஷா வென்பவரொருவரிருந்தார். அவர் இராஜ வம்சத்தைச் சேர்ந்தவர்; மஹாபாக்கியவந்தர் ; கதீவுடைய மந்திரிமார்களிலொருவர், மதம் பிடித்த யானையை நடத்தும் பாகன் அதை நயபயத்தினால் நல்வழி நடத்துவது போல அரசன் கோபித்தாலும் அவனை விட்டகலாது அப்போது வேண்டும் யுக்தி புத்திகளை யிடித்திடித்துப் புகட்டும் தொழிலை விடாமலிருப்பவர். நேரான காரியங்களிற் சோராத துணிவுள்ளவர், பின்னேவரும் கருமங்களை முன்னேயறிந்து தெரிவிக்கும் மூதறிவுடையவர்; காலமும் இடமும் ஏற்ற கருவியும் தெரிந்தவர்; பிரஜைகளெல்லாந் தமது திறமை முதலிய நற்குணங்களைப் புகழப் பெற்றவர் ; ஆங்கிலேயர்கள் பிரான்ஸியர்கள் முதலிய ஐரோப்பியர்களெல்லாந் தமது விவேக நுட்பத்தை வியந்து பாராட்டும்படி யதிகாரஞ் செலுத்துபவர். இவ்விதம் அவருக்குச் சகல சம்பத்துக்களும் பரிபூரணமாயிருந்தும் புத்திர சம்பத்தொன்று மாத்திரம் குறைவாயிருந்தது; ஆகையினால் குல்னார்பனூ வென்கிற பெண்ணை விவாகஞ் செய்துகொண்டார். இப்பெண்ணரசி, கற்பு ஒழுக்கம் முதலிய நற்குணங்களுள்ளவள். கல்வி அறிவுகளில் மிக வல்லவள். ஏழைகள் மீதில் எக் காலமும் மிரக்கமுள்ளவள். சகல சம்பத்துமுடைய அரசியா யினும் தன் பத்தாவின் பணிவிடைகளைத் தானே செய்து புருஷனுந்தானும் கரும்பும் ரசமும் போலவும், ஈருடல் ஓருயிர் போலவும் வாழ்ந்து, இவ்வுத்தமகுண சத்தியவதி, பத்தினிப் பெண்கள் இரத்தினமென விளங்கினார். இப்படி பத்து வருட காலஞ் சென்றும் புத்திர பாக்கியமில்லாமையால் மிகவுந் துயரடைந்திருந்தார்கள். இப்படியிருக்க, 1852-ம் பிப்ரவரி – மீ 24-ந்தேதியில் அந்த பக்ஷாவுக்கு அவருடைய பத்தினியின் வயிற்றிலே பூரணச் சந்திரனைப்போன்ற ஓர் குமாரன் பிறத்தான். அந்த நாளிற்றானே காயிர் பட்டணம் மிகவுஞ் சிறப்பினையடைந்தது. தந்தையுந் தாயும் அளவில் லாத இன்பக் கடலிலே அமிழ்ந்தினார்கள். நூற்றுக் கணக் கான உயர்ந்த உத்தியோகஸ்தர்கள் வந்து இந்தப்பாக்கி யத்தைப் பெற்ற அப்பிதாவைச் சந்தித்து வாழ்த்தினார்கள். ஆயிரக்கணக்கான ஏழைகளும் அகதிகளுந்தான தருமங் களினாலே உபசரிக்கப்பட்டார்கள். இவ்வாறே அந்த மாளி கையில் சந்தோஷமென்னுஞ் சூரியன் பிரகாசித்தது. 

இப்படி யாவருக்குஞ் சந்தோஷத்தை யுண்டாக்கிய இரத்தினத்தைப் போன்ற பாலகனைத் தாதிப் பெண்கள் மிகவுமன்போடு சீராட்டிப் பாராட்டி வளர்த்து வந்தார்கள். இப்படிப் பதினைந்து நாட் சென்றன ; பதினாறாம் நாள், அந்தப் பெண்கள் பிள்ளையை வெளிச்சாலையிற் காற்றோட்டமாக ஓர் தொட்டிலில் வைத்துவிட்டு அச்சாலைக்குச் சமீபமாயிருந்த பூந்தோட்டத்திற் சிறிதுநேரம் பந்துவிளையாடிக் கொண்டிருந் தார்கள். இப்படிச் சிறிது நேரமிருந்து பின்பு அவ்விடத்தில் வந்து தொட்டிலிற் பார்க்கப் பிள்ளையைக் காணாமையாற் றிகைத்து யாராவது வீட்டிற்குள்ளே கொண்டுபோயிருப்பார் களென்றெண்ணி ஓடிப்போயுள்ளே தேடி விசாரிக்கும்போது அங்கே யொருவருங் கொண்டு வரவில்லையென்று சொன்னார்கள். அதைத் தாதிமார் கேட்டவுடன் ஏங்கி மனங்கலங்கி பாஷா அவர்களுக்கும் எங்கள் நாயகிக்கும் என்ன சொல் வோம் இனி யாது செய்வோமென்று பதறினார்கள்; கீழ்வீழ்ந் தழுது கதறினார்கள். பாஷாவும் இதனைக் கேள்விப்பட்டு ஓடிவந்து வெறி கொண்டவரைப் போல நான்கு திக்கும் ஓடி யோடித் தேடித்திரிந்தார். அவருடைய மனைவியும் பெருங் கூச்சலிட்டுத் தரையில் விழுந்தழுதாள். இப்படியே மற்ற வர்களுந் துக்கமென்னும் கடலிலே அழிந்தினார்கள். சில தினங்களுக்கு முன் பிரகாசித்த சந்தோஷமென்னும் சூரியன் மறைய, துக்கமென்னுமிருள் அம்மாளிகையை மூடிக் கொண்டது. போலீஸ் உத்தியோகஸ்தர்கள் நான்கு திக்குகளினு மோடித் தேடத் தொடங்கினார்கள். தூரத்துள்ள பட்டணங் கள், நாடுகளெல்லாவற்றிற்குந் தந்திகளுங் காகிதங்களும் அனுப்பப்பட்டன இதைக் கேட்டுத் துக்கப்படாதவர்கள் ஒருவரும் அந்த ஊரிலில்லை; அவ்வூர் முழுவதிலும் இதுவே பேச்சாயிருந்தது. மறுநாள் அந்நகரிற் பிரசுரஞ் செய்யப் படும் புதினப்பத்திரிகைகளில் இந்தப் பிள்ளை காணாமற்போன செய்தியும் அதைக் குறித்து யாராவது யாதேனும் ஒரு சங்கதி யை யறிவித்தால் அவர்களுக்கு விசேஷ வெகுமதி கொடுக் கப்படுமென்பதும் விளம்பரஞ் செய்யப்பட்டன. இப்படிப் பத்துநாட் சென்றும் யாதேனுமே ர் செய்தியும் வந்து சேர வில்லை. பாஷாவும் மனைவியும் கைக்கெட்டினது வாய்க்கெட் டாமற் போய்விட்டதே பிள்ளையை யிழந்துவிட்டோமே யென் கிற ஏக்கத்தினாலே தூக்கமும் ஊக்கமுமின்றியிருந்தார்கள். 

பின்பு பதினாறா நாட்காலையில் மாளிகைக் காவற்காரன் வாயிலைத் திறக்கும்போது ஒரு பிள்ளையைச் சீலையிற் சுற்றி வெளியே வைத்திருக்கக் கண்டு பத்தியுடன் விரைந்தெடுத் துச் சத்தமிட்டுக் காளையைப்போல் மாளிகைக்குள்ளே யோடி னான். உடனே மாளிகையிலிருந்த வர்களெல்லோரும் யாளி யைப் போல ஓடிவந்து கூடினார்கள், காணாமற்போன பிள்ளை யைப் பெற்றுக்கொண்ட சந்தோஷத்தாற் சிலர் பாணம் போற் பாய்ந்துவீழ்ந்து உச்சிமோந்து பரவசமானார்கள். சிலர் சர்வவல்லபத்தையுடைய நாயகனைத் துதித்தார்கள். சிலர் ஆனந்தக் கூத்தாடினார்கள். சிலர் மகிழ்ச்சியினாலே ஆர வாரித்தார்கள். தந்தைந் தாயுஞ்சிந்தை மகிழ்ந்து முந்தி எல்லாப் புகழ்ச்சிக்குரிய அல்லாகுத் த ஆலாவைப் புகழ்ந்து மகிழ்ந்து பிள்ளையைத் தங்கள் கண்ணீராற் குளிப்பாட்டி எங் கும் பொங்கும் மங்களகரமாயிருக்கும்படி யூரெங்குங் கட்டளை யிட்டுப் பேரானந்தக் கடலில் மூழ்கினார்கள். 

இப்படிச் சிறிது நேரஞ் சென்றபின்பு தாயானவள் பிள்ளையுடைய பிடரியில் இருந்த ஓர் சிறு மறுவிருக்கின்றதா வென்று பார்த்தாள்; அதைக் காணவில்லை, அதனால் அவள் இது தன் பிள்ளை தானோவென உள்ளத்திற் சந்தேகமுடைய ய வளாய்க் கள்ளமறக் கண், மூக்கு, நெற்றி, உருவம், முகம், நிறம், வடிவம் முதலிய யாவற்றையுந் தேட்டமாய் நாட்ட மிட்டும் பார்த்து அவைகளெல்லாம் முன்போலவே யிருக்கக் கண்டு தனக்குண்டான சந்தேகத்தை நிந்தித்து நீக்கிக் கொண்டாள். அந்த நாண்முதற் பிள்ளையைக் கிள்ளையைப் போல் அருமை பெருமையுடன் வளர்த்துவந்தாள். 

இது இப்படியிருக்க, முன்னவர் பிள்ளை காணாமற்போன மூன்றாநாளிரவில் ஒரு அபஷியும் ஒரு அபஷிப் பெண்ணும் அழகு பொருந்திய ஒரு குழந்தையையெடுத்துக்கொண்டு மிசுறு தேசத்தின் முக்கிய கரை துறைப்பட்டணமாகிய அலக்ஸான் றிரியாக் குடாவிலிருந்த புகைக் கப்பலில் வந் தேறினார்கள். அவர்கள் வந்தேறிச் சற்று நேரத்திற்குள்ளாக கப்பல் பயணப்பட்டு எட்டா நாளிலே பொம்பாய்க் குடா விலே நங்கூரம் போடப்பட்டது. உடனே அந்தக் கப்பலி லுள்ள ஜனங்களெல்லோருமிறங்கினார்கள். அதுபோலவே அந்த அபஷியும் அபஷிப்பெண்ணுமிறங்கிப் பட்டணத்திற் போய்ச் சேர்ந்தார்கள். அன்றிரவு நான்காஞ் சாமத்திலே அந்த அபஷி அப்பிள்ளையைக் கையிலெடுத்து ஒப்புடன் நெஞ்சோடணைத்து அஞ்சியஞ்சிப் பம்பிப்பம்பி பொம்பாய்த் தெருக்கடோறுந் திரிந்தான். இப்படித் திரியும்போது ஓர் அறபி தன் வீட்டின் கதவைத் திறந்துகொண்டு வெளியே வந்தார். இந்த அபஷி, அவருடைய முகத்தையுற்றுப் பார்த்துச் சலாஞ் சொல்லி யாஷெய்கு, ஷெய்கே இந்தப் பாலகனை யும்மிடத்திலொப்புவித்தால் நீர் உவப்புடன் வளர்ப் பீரோவென்று கேட்டான். அந்த அறபி அதைக் கேட்டுத் திடுக்கிட்டுத் தடுமாறிப் பேச்சு குழறி ஆச்சரியமுடையராகி அந்தப் பிள்ளையை யுற்றுப் பார்த்தார். அந்த நேரத்திற் சந்திரன் தெளிவாய் ஒளிபிரகாசிக்க அப்பிள்ளையானது அன்று மலர்ந்த ரோஜா புஷ்பச் செண்டு போலிருந்தது. அந்த அபஷியோ பார்த்தவர்கள் வேர்த்து நீர்த்து வார்த்தை யாடாமல் மனங்கலங்கி நினைவு மயங்கப் பனைமரப் பருமையுங் கருநிறவுருவமும், அகன்ற முகமும் வெகுண்ட பார்வையும், மடித்த நுதலும், தடித்த உதடும், கடுகடுத்த பல்லும், வெடு வெடுத்த சொல்லும், கொடுமை நடையுமுடையவனாகவிருந் தான். அவன் முகத்தைப் பார்த்து அப்பாலகனைப் பார்க்கும் போது பூரணச் சந்திரனை இராகு தீண்டச் சமீபித்தது போலி ருந்தது. 

அந்த அறபி மதீனத்திலுள்ளவர். அவர் பத்து வருஷத் துக்குமுன் தமது மனைவியுடனே மதீனம்விட்டு பொம்பாய்க்கு வந்து வியாபாரஞ் செய்து வந்தார். அந்த வியாபாரத்தில் அவர் நஷ்டமடைந்து கஷ்டமுடைய ஏழையாய்ப் போனார். அவர் கலியாணஞ் செய்து பதினைந்து வருஷமாகியும் பிள்ளைப் பேறின்றித் துக்கமுற்றிருந்தார். அன்றிரவு அவரும் அவர் மனைவியுந் தங்களுக்குப் புத்திர சம்பத்தில்லாதிருத் தலையும் வறுமையினுபத்திரத்தையும் நினைத்து நினைத்துத் தூங்காமல் ஏங்கி வியசனப்பட்டுக் கொண்டிருந்து விடிந்து போயிற்றென்றெண்ணி சுபகு * தொழுகிறதற்காக வெளியே வந்தபோதுதான், அந்த அபஷியை அவர் கண்டார். அபஷி இப்படிச் சொன்னவுடனே முன்னர் அந்த அறபி பயந்து பின்னர் வியந்து மிகுந்த சந்தோஷங்கொண்டு, நீர் பிள்ளை யைத் தந்தீரானால் என் சொந்த மைந்தனினும் சுந்தரமாய்க் கண்ணைப்போல இவ்வண்ணலை வறுமையுறாமல் அருமை யாய் தளர்வடையாது வளர்த்து வருவேனென்று சொல்ல, அந்த அபஷி, உமது பெயரென்ன, உமது தொழிலென்ன, நீருரிக்கிற தெருவின் பெயரென்ன இவைகளெல்லாவற் றையும் எனக்குச் சொல்லவேண்டுமென்று கேட்க, அறபி என் பெயர் ஜகுபருல்மதனீ ; எனது தொழில் வியாபாரம், நானிருக்கிற தெருவின் பெயர் பிந்தி பஜார் என்று சொன்னார். அப்போது அபஷி ஜகுபறுடைய வீட்டுக் குள்ளே நுழைந்து ஒரு கடிதத்தில் அவைகளெல்லாவற்றையு மெழுதிக்கொண்டு பிள்ளையை அறபி கையிற் கொடுத்து விட்டு, ஜகபறே இம்மகவை உம்முயிரினும் அருமையாய்க் கிருபையுடன் உமது பிள்ளையைப் போல வெறுப்பின்றிப் பொறுப்புடன் வளர்த்துவர வேண்டும்; நீர் எவரிடத்திலும் சொல்லவேண்டும். இந்தப் உம்முடைய பிள்ளையென்றே பிள்ளையிடத்திலுங்கூட நீங்கள் தாய் தந்தையல்லவென்பதை யறிவிக்கவுங் கூடாது. இந்தப் பிள்ளையின் தாய் தந்தை யாரென்று விளங்க முயலவுங் கூடாது. நீர் வருஷத்துக் கொருமுறை இப்பிள்ளையின் சுகத்தைக் குறித்தோர் கடித மெழுதிக் காயிறாவிற் பெரிய தபாற்சாலையில் சீன் என்பவர் வந்து கேட்டாற் கொடுக்க வேண்டுமென்று மேல்விலாச மெழுதியனுப்ப வேண்டும், அப்படி நீர் அனுப்பினால் வருஷத் துக்கோர் தடவை இருநூறு தங்கப்பவுன் உமக்குப் பேங்கு உண்டியல் பண்ணி யனுப்பப்படுமென்றும் சொல்லி இருநூறு தங்கப்பவுனை ஜகுபறுக்குக் கொடுத்துவிட்டு உத்திரவு பெற் றுக்கொண்டுபோய்விட்டான். 

அந்தப் பிள்ளையை ஜகுபர் வெகு பத்திரமாய்க் கையிலேந் திக்கொண்டு தமது மனைவியிடத்திலே யோடிப்போய் மற் ஹபா! மற்ஹபா! சந்தோஷம்! சந்தோஷம்! நேற்று நாம் நாடிய பாக்கியத்தைத் தேடித் திரியாமல் சர்வதயாபரன் வலிய நமக்குத் தந்துவிட்டான், நமது சஞ்சலங்கள் பஞ்சாய்ப் பறந்து விட்டன. நமது வறுமைகள் வெறுமையாய் விட்டன, இந்தப் பாகிக்யத்தை யாக்கமாய்க் கொடுத்த தயாபரனை, சந்தோஷம் பொங்கி முந்தானை யேந்தித்துதி செய்து தமக்கும் அபஷிக்குமிடையே நடந்தவைகள் எல்லாவற்றையுஞ் சொல்லி இருவரும் ஆனந்தக் களிப்புக் கொண்டார்கள். 

அப்போது ஆயிஷா என்கிற ஜகுபருடைய மனைவி தன் நாயகனை நோக்கி யாசெய்யிb! (என்னாயகமே) நாம் இவ்வூரி லிருப்பதால் இந்தப் பிள்ளையை நமது பிள்ளையல்லவென்று அயலார்களறிந்து அதைக்குறித்து விளங்க முயலுவார்கள். ஆகையால் விடிதற்கு முன்னர் இவ்வூரைவிட்டுப் புறப்பட்டு நொடிக்குள் வேறோரூருக்குப் போய்க் குடியிருப்பது நல்ல தென்று சொல்ல, ஜகுபர் இது திருத்தமான கருத்தென்று பொருந்தி, உடனே வண்டிகளைப் பிடித்துச் சாமான்களையேற்றிக் கொண்டு காற்றாய்ப் பறந்து தாமும் மனை வியும் பிள்ளையு மாகச் சூரத்து என்கிற ஊருக்குப் போய்ச் சேர்ந்தார்கள். 

ஜகுபர் முப்பத்தாறு வயதையுடையவர். உயர்ந்த நேர் மையான சரீரத்தையுடையவர், சாந்த குணமும் சன்மார்க்க மான நடத்தையையுமுடையவர், ஏழைகள் அகதிகள் பேரில் மிகவும் அன்புடை யவர், அவருடைய மனைவியோ பெண்கள் சிகாமணியென்றெவராலும் பாராட்டத் தகுந்தவள், சிறந்த முகமும், நயந்த குணமும் இனிய வார்த்தையுமுடையவள். தொழுகை நோன்பு முதலிய வேதகற்பனைகள் சகலமுந் தவறா மற் செய்து வருபவள் அவளும் அவள் நாயகனும், விவாகஞ் செய்த காலமுதல் ஒருவரையொருவர் உயிரைப் போலன்பு வைத்து வாழ்ந்து வந்தார்கள். அவள் சீவிய காலம் முழுவ தும் புருஷனுடைய மனதைப் பிரீதியடையச் செய்வதே அவள் நாட்டம்; அவர் வீட்டைவிட்டு வெளியே போய்த் திரும்பி எப்போது வருவாரென்று தேட்டமாயிருந்து அவர் வந்தவுடனே யவருக்கென்ன வின்பமான போஜனங்களைச் செய்துவைப்போம் அவர் மனதைச் சந்தோஷப்படுத்த என்ன நல்ல செய்திகளைச் சொல்வோம் என்று பகல் முழுவ தும் யோசித்திருப்பாள். அவர் வீட்டுக்கு வழக்கப்படி வர நேரமாயின் அவள் முகம் பூவாடினதுபோல் வாடிப்போகும். அவரைக் கண்டவுடனே வாடின பயிர்க்கு மழை பொழிந்தாற் போல் முகமலர்ந்துவிடும். அவள் வாயினாற் சொரியும் சொற் கள் தேனிலும் மதுரமாயும், அவள் குரலினோசை குளிர்ந்த குயிலோசையாயும் அவருக்கிருக்கும். அவர் தமது மனைவி யின் மீது எவ்வளவு அன்பு வைத்திருந்தாரென்றால் வேத புஸ்தகங்களில் சொற்கலோகத்துப் பெண்களுடைய வர்ணிப் புக்களைக் கேட்கும்போது, அவர்கள் தனது மனைவிக்குச் சமானமல்லவென்று நினைத்துக் கொள்ளும்படி யவ்வளவு அன்பு வைத்திருந்தார். 

இவ்விருவருக்கும், இந்தப் பி ள்ளையும் அந்த அபஷி கொடுத்த பணமும், நிறைந்த செல்வத்தையுங் குறைவிலா வாழ்வையுமுண்டாக்கிவிட்டன. அந்தத்தனத்தில் கனத்த ஷாப்புகளும் நினைத்த கிடங்குகளுந் திறந்து வியாபாரஞ் செய்ய, சில காலத்துக்குள்ளே பலமான ஐசுவரிய முண்டாகி விட்டது. அந்தப் பிள்ளைக்கு அஸன் (சுந்தரம்) என்கிற பெயருங்கொடுத்து மிகவும் அருமையாக வளர்த்து அறபு, பாரிஸ், இந்தி, இங்கிலீஸ் ஆகிய பாஷைகளைக் கற்பித்து வந்தார்கள். 

அபஷி, பிள்ளையைக் கொடுத்துவிட்டுத் தன் பட்டணம் போன சொற்பநாளைக்குப் பின் அவன் கற்பித்தபடி ஜகுபர் ஒரு கடிதத்தில் பிள்ளையுடைய சுகத்தையுந் தாம் இப்பொழுது வந்திருக்கிற ஊரினுடைய பெயரையும் எழுதி அபஷி சொல் லியபடி விலாசமிட்டு அனுப்பி வைத்தார், அந்த ஹாண்டிக் சொன்னபடியே தவறாமற் பணம் வந்துகொண்டிருந்தது. 

அஸன் ஆறு வயதாயிருக்கும்போது ஒரு நாட் பகல் நேரத்தில் ஜகுபர் வீட்டிலில்லாத வேளையில் ஓர் காரியம் நடந்தது, அதாவது: தாய் மகனுடனே கொஞ்சிச் சந் தோஷமாயிருக்கும்போது ஓர் அறபி வாசலில் வந்து நின்றான்; அவள் தலையையுயர்த்தியவன் முகத்தைப் பார்த்த வுடனே சரீரம் நடுங்கி ஒடுங்கி அகம் வெயர்த்து முகம் பெயர்த்துப் பதறிவிட்டாள், இவள் அவனை நெருங்கின வுடனே இரண்டு மூன்று சொற்களைப் பேசிவிட்டு அவன் போய்விட்டான். சொற்ப நேரத்தின் பின் ஆயிஷா எழுந்து உடுத்தி முக்காடிட்டுக்கொண்டு வெளியே போய்ச் சில நேரத்தின் பின் வீட்டுக்கு வந்தாள்; என்பதே. 

இவைகளெல்லாவற்றையும் அஸன் பார்த்திருந்த போதி லும் அவன் சிறு பிராயமானபடியால் அவைகளை யவன் கவனிக்கவில்லை. 

அஸனுக்குப் பதினாலு வயதானபோது சம்பவித்த விஷயம் பின்வருகிற விதமாயிருக்கும்:- ஒரு நாட் பகல் நேரத்தில் ஆயிஷா குர்ஆன்ஷரீபை கையில் வைத்து (அஸன் அருகே நிற்க) ஓதிக்கொண்டிருந்தாள். அந்த நேரத்தில் ஓர் மனிதன் வந்து சத்தமிட்டு அழைக்க இவர் களிருவரும் எழுந்து வந்து பார்க்க முன்சொன்ன அறபி வாசலில் நிற்கக் கண்டார்கள். அவன் எப்படிப்பட்டவ னெனில் தடித்தவன், குட்டையன், செம்பினிறமுஞ், செம் பட்டை மயிரும், ஆழ்ந்த சிறு கண்களும், சடைத்துக் கண்களை மூடிய புருவமும், நீண்டு வெளிவந்த பற்களும், கடு கடுத்த முகமும் உடையவன். இவனைக் கண்டவுடனே ஆயிஷாவுடைய கை கால் சோர்ந்து நிற்க பேதித்து ஆ! என்று பெரு மூச்செறிந்தாள்; உடனே அவள் கால் தடுமாறித் தடுமாறி நடந்து அந்த மனிதனைச் சமீபித்தபோது, அந்த மனிதன் அஸனுக்குக்கேளாமற் சில பேச்சுக்களைச் சொல்லி விட்டுப் போய்விட்டான். அஸன் இவைகளையெல்லாவற் றையும் பார்த்து ஆச்சரியப்பட்டு இதுவென்ன காரணம் இவன் சிலகாலத்துக்கு முன்பு வந்தபோதும் என் தாய் பயந்து பதறக்கண்டேனே, இப்போதும் அதுபோலவே நடந் திருக்கின்றதே! என்று ஆலோசித்துக்கொண்டிருக்கும் போது, தாய் வெளியேபோய் சற்று நேரத்தின்பின் வந்தாள். வந்தபோது அஸன் அவள் முகத்தைப் பார்க்க முகம் வாடி வியாகூலமடைந்தவளாகக் காணப்பட்டாள். சில நேரத் துக்குப் பின் அவள் அஸனைக் கிட்டவழைத்து முத்தமிட்டு மகனே இப்போதந்த மனிதன் வந்ததையும் நடந்த சங்கதி களையும் உன் தகப்பனாரிடஞ் சொல்லவேண்டாமெனக் கண்ணாற் கண்ணீரொழுகக் கெஞ்சிக்கேட்டுக்கொண்டாள். பின்பு அஸன் அப்படியே தகப்பனிடம் ஒரு சங்கதியையுஞ் சொல்லாமலிருந்துவிட்டான். 

மறுநாட் பகல் அஸன் வீட்டிலிருக்கும்போது ஒரு பையன் வந்து வீட்டின் கதவைத் தட்டினான் ; உடனே அஸன் போய்ப் பார்க்க அந்தப் பையன் கையில் ஓர் கடித மிருந்தது. அஸன் அந்தக் கடிதத்தைத் தரும்படி கேட்டும் அப்பையன் பிடிவாதமாய்க் கொடுக்காமல் நான் உன்னிடந் தரமாட்டேன், உன் தாயின் கையிலேதான் கொடுக்க வேண்டுமென்று சொல்லிக்கொண்டிருக்கும் வேளையில் தாய் வந்து அந்தக் கடிதத்தைக் கையில் வாங்கிப் பிரித்து வாசித்தாள். அப்படி வாசிக்கும்போது அவளுக்கு ஒரு மயக்க முண்டாகி நிலத்தில் விழுந்தாள். தலை நிலத்திற் பட்டு டைந்து இரத்தம் வெளியே பீரிட்டது. அஸன் கூச்ச லிட்டுத் தாயைக் கட்டிக்கொண்டழுதான் வேலைக்காரர் வந்து அவளைத் தூக்கிக் கட்டிலின்மீது கிடத்தி முகத்தில் பன்னீர் தெளித்துச் சுகந்தங்களை முகரச் செய்தும் அறிவு வராமல் இருக்கும்போது ஷாப்பிலிருந்த ஜகுபர் இதைக் கேள்விபட்டு ஓடிவந்து தன் மனைவியின் மேல் விழுந்து ஆ! பெண்ணே என்னுயிரே கண்ணைத் திறந்தென்னைப்பார் என்ற ழுது கையைக் கண்ணில் வைக்கிறதும் முகத்தை முத்தமிடு கிறதும், தன் நெஞ்சில் அறைந்து கொள்ளுவதுமாயிருக்கும் போது, வைத்தியர்கள் வந்து கைபார்த்து நாடியிருக்கிறது சுகப்படுத்தலாமென்று சொல்லி மருந்துகளை வாயில் வார்த் துக் கொண்டிருந்தார்கள். வைத்தியர்கள் சொன்ன தைரிய வார்த்தையை ஜகுபர் கேட்டு மனந்தேறி அஸனைப் பார்த்து இவ்விதமாக வந்த காரணமென்னவென்று கேட்க, அஸன் யோசிக்கலானான். நடந்த சங்கதியை நாம் சொன்னால் தாயுடைய சொல்லுக்கு மாற்றமாகும், சொல்லாதிருந்தலோ தகப்பனுக்கு உண்மையை மறைத்த பொய்யனாகவேண்டு மென்று ஆலோசிக்கும்போது, ஜகுபர் மகனே நடந்ததைச் சொல் என்று படபடத்துக் கேட்க, அஸன் அந்த அறபி நேற்றுவந்ததையும், தாய் அவனைக் கண்டு பயந்ததையும். அந்த அறபியைச் சில காலத்துக்கு முன் ஒருமுறை கண்டிருந் ததையும், அன்று பையன் கடிதங் கொண்டுவந்ததையும் சொல்லிவரும்போது அவ்வொவ்வொரு வார்த்தையும் ஈயத் தைக் காய்ச்சியுருக்கித் தன் காதிலூற்றுவது போலிருந்தது. 

பின்பு ஜகுபர் அக்கடிதத்தைக் கண்டு முனிந்து குனிந் தெடுத்துச் சிலவரிகளை வாசித்தார். வாசிக்கும்போது வெடி மருந்துக் குவியலில் நெருப்பு விழுந்து பற்றிக் கிளம்பினாற் போல விசாரமென்னுமக்கினி, அவரிருதயத்திலிருந்து கிளம்பி மூளையைச் சுருக்கிவிட்டது. சரீரம் படபடவென்று துடித் தது, கைகளை நெஞ்சில் வைத்திருத்தினார். கைகளை நெற்றி யில் வைத்தழுத்தினார். சற்று நேரந் தன் மனைவியை யுற்றுப் பார்த்து ஆ! கொஞ்சமும் அஞ்சாத பஞ்சமா பாதகியே யென்றோர் சத்தமிட்டு நெஞ்சிலறைந்து கொண்டார், கண்களைப் புரட்டியுருட்டி அங்குமிங்கும் பார்த்தார்; பின்பு வீட்டைவிட்டு யாதொன்றும் பேசாமல் ஓட்டம் பிடித்தார். அவ்விடத்தி லுள்ளோர் அவர் அறிவு பேதலித்து மெய் மறந்தோடுகிறா ரென்று தெரிந்து அவர்களிருவர் அவரைப் பின்றொடர்ந்தோடி னார்கள். ஆகிலும் அவரை எட்டிப் பிடித்துக் கொள்ளக் கூடாமையாய் ஓர் நதி குறுக்கிட்டது. எப்படியெனில் அவர் கள் ஆற்றுக்குச் சமீபமாக வந்தபோது ஜகுபரைக் காணாததி னால் அவர் ஆற்றில் பாய்ந்துவிட்டாரென்று அல்லது வேறு வழியாகப்போய்விட்டாரென்று அவர்கள்விளங்கிக்கொள்ளக் கூடாமையாயிருந்தது, ஆகிலும் ஜகுபர் ஆற்றருகே வந்து மறைந்தமையால் அவர் ஆற்றில் விழுந் திறந்தாரென அவ் விருவரும் நிச்சயித்துத் திரும்பி விட்டார்கள். 

ஜகுபருடைய மனைவியோ சற்றுநேரம் முற்றும் நினைவற்று மயக்கமுற்றுப் பின்னர் தன்னறிவு நிலைத்துக் தலையையுயர்த் தித் தாவி வெகு ஆவலாய்த் தனது புருஷனைப் பார்த்தாள். அவரைக் காணாமையால் ஆவெனப் பதறிக் கோவெனக் கதறி அவ்விடத்திருந்தவர்களைக் கேட்க, முன்னரவர் துக்கத்தினால் யோசித்ததையும் பின்னர் அக்கடிதத்தை வாசித்ததையும் அவர் அறிவற்றவர் போல் குறியற்று மயங்கித் தயங்கி நின்ற தையும், பின்பு வீட்டைவிட்டு வேட்டைமான் போல ஓடின செய்தியையுஞ் சொல்ல, அவள் கேட்டு அல்லாகூ அல்லாகூ!! என் கர்த்தாவே!!! என் பத்தாவெங்கெனச் சத்தமிட்டுத் தலையணையின் மீது பொத்தென விழுந்தாள். சுற்றியிருந்தவர் கள் போய்ப் பார்க்கப் பொட்டென அவள் உயிர் போயிருக்கக் கண்டார்கள். 

இந்தப் பரிதாபமான காரியஞ் சம்பவிக்கக் காரணமென்ன வென்று இதை வாசிப்பவர்களறிய ஆவலாயிருப்பார்களாகை யால் அதையுமிங்குச் சொல்லுகின்றோம். 

ஆயிஷா மதீனத்திற் பிறந்தவள், அவள் பத்து வயதுள்ள வளாயிருக்கும்போது இபுறாகீம் என்கிற பெயரையுடைய ஒரு அறபிக்கு நிகாகு (கந்தர்வ விவாகம்) செய்யப்பட்டாள் ஆனால் அவள் சிறு பிராயமானபடியால் புருஷனும் மனைவியும் போல் ஒரு வீட்டிலிருந்ததில்லை. இதுவின் றிச் சொற்ப காலத் துக்குப்பின் அவன் சில குதிரைகளை வாங்கிக் கொண்டு தூனிஸ் என்கிற ஊருக்கு வியாபாரஞ் செய்யப் போயிருந்தான். அவன் போய்ச் சில காலத்துக்குப் பின் தூனிஸில் இருந்து வந்தவர்கள் இபுறாகிம் பேதி நோயால் இறந்து போனானென்று சொன்னார்கள். இபுறாகிமுடைய உறவினர் களும், ஆயிஷாவைச் சேர்ந்தவர்களுந் துக்கங் கொண்டாடி அதற்குரிய சடங்குகளெல்லாஞ் செய்தார்கள். பின்பு ஆயிஷா பிராயமானபோது ஜகுபருக்குக் கலியாணஞ் செய்யப்பட்டுச் சிலகாலம் அவ்வூரிலேயே யிருந்து பின்பு இருவரும் அவ்வூரை விட்டுப் புறப்பட்டு பொம்பாய்க்கு வந்து சேர்ந்தார்கள். அங்கு ஜகுபரும் ஆயிஷாவும் வாழ்ந்திருந்ததையும் அஸன் அவர்களிடம் வந்து சேர்ந்த விதத்தையும் முன் சொல்லியிருக்கின்றோம். 

ஆனால் அந்த இபுறாகீம் என்பவன் தூனிசுக்குப் போயிருந்தபோது அவனுக்குப் பேதிவியாதி கண்டிருந்தது மெய்; ஆனால் அங்கு அவனிறந்து போனானென்ற வதந்தி பொய். பின்பு அவன் சவுக்கியமடைந்து மஃரிபு தேசத்துக்குப் போய் அங்கேயொரு பெண்ணைக் கல்யாணமுடித்து அங்கு குடியிருந்துவிட்டான். அவன் முற்றும் இரக்கமற்றவன், வீண் செருக்குற்றவன், வன்னெஞ்சையுடைய மாபாதகன் ஆகையால் தன் மனைவிக்குங் கடுங்கொடுமைகள் செய்து துன்பப்படுத்தி வம்பித்து வந்தான். அவள் சில காலத்திற் குள் இறந்து போனபடியாலும், அவன் வியாபாரத்திலும் நஷ்டமடைந்தபடியாலும் தன் ஜனன தேசமாகிய மதீனத்திற் காவது போய்விடுவோமென்று நினைத்து வரும் வழியில் ஒரு மதீனத்து அறபி அவனைக் கண்டு ஆச்சரியமடைந்து மதீனத் திலுள்ள வர்களெல்லோரும் அவன் இறந்து போனானென்று நம்பியிருப்பதையும் அவன் நிகா செய்த பெண்ணை ஜகுபர் என்பவர் கல்யாண முடித்துக்கொண்டு பொம்பாயிற் போய்ச் சில காலமிருந்து இப்போது சூரத்துக்குப் போய்ச் செல்வ முடையவராயிருப்பதையுஞ் சொன்னபோது, இந்தப் பாதக னாகிய இபுறாகீழ் தனக்குப் பணம் பறிக்கச் சாதகமாயிருக்கிற தென்று நினைத்துச் சூரத்துக்கு வந்துசேர்ந்தான். அங்கு ஜகு பருடைய வீட்டை விசாரித்து வாயிலருகில் நின்று ஆயிஷா வைக் கண்டு நான் இபுறாகீம், நீ என்னுடைய மனைவி, ஜகுபர் உன்னைக் கல்யாணஞ் செய்திருப்பது பொய்க் கட்டேயொழிய மெய்யல்ல நானிவ்வூர் நியாயாதிபதிகளிடத்தில் முறையிட்டு உன்னையழைத்துக் கொண்டு போய்ப் படாதபாடும் படுத்திக் கேடும் கெடுத்தும் நடுத்தெருவில் விடுவேன்; நீ இரகசியமாய் ஆயிரம் ரூபா யெனக்குத் தந்தால் நானிவ்வூரை விட்டுப் போய்விடுவேன், நீயும் ஜகுபரும் சுகமே வாழ்ந்திருக் கலாம். நான் அடுத்த தெருவின் கடைசியில் இருக்கிற குளத்தருகே நிற்பேன்; நீ நான் சொன்ன தொகையையெடுத் துக்கொண்டு அங்கு வந்து ஒருமணி நேரத்திற்குள்ளாக காடாமற் போனால், நான் உன் புருஷனுடைய ஷாப்புக்கு நேரே போய்ச் சகலத்தையுஞ் சொல்லிவிட்டு காஜிமாரிடத்தே போவேனென்று சொன்னபோது ஆயிஷா பயந்து நல்லது நீ ஒருவரிடமும் சொல்லாதே; நீ கேட்ட தொகையைத் தரு கிறேன், நீ சொன்னவிடத்திற் போய் நில்லென்று சொல்லி யவனை யனுப்பிவிட்டு, வீட்டினுள்ளே போய்த் தன் வசமிருந்த பணத்தில் ஆயிரம் ரூபாய் தங்க நாணயமாகவும் நோட்டு களாகவும் எடுத்துக்கொண்டு முக்காடிட்டு வெளிப்பட்டு குறித்தவிடத்துக்குப்போய் அந்தத் தொகையைக் கொடுத்து இனிமேலென்னை வருத்தப்படுத்தாதே என்று வாக்குப் பெற் றுக் கொண்டு வந்துவிட்டாள். அஸன் ஆறு வயதாயிருக் கும்போது நடந்த சங்கதியிதுவே. 

இபுறாகீம் இவ்விதமனியாய்ப் பறித்த அந்தப் பணத்தை யெடுத்துக்கொண்டு இந்தியாவிற் பலவூர்களிலுந் திரிந்து வியாபாரஞ் செய்தான். ஆகிலும் அந்தப் பணமுழுவதும் போய் அவனும் வறுமையடைந்து யாதொரு வழியுமில்லாமல் இன்னுமொருமுறை ஆயிஷாவிடத்தே வந்து பணம் பறிக்க வேண்டுமென்று தீர்மானித்துச் சூரத்துக்கு வந்தான். அவன் ஆயிஷாவைக் கண்டதையும்அவள் நடுங்கினதையும் பின்பு வெளியே போய்ச் சற்றுத் தாமதித்துத் திரும்பி வந்து மிக விசாரமடைந்திருந்ததையும் வாசிப்பவர்களறிந்திருக்கிறார்கள். ஆயிஷா வெளியே போய் ஓரி குளத்தருகே இபுறாகீம் நிற்கக்கண்டு நீ முன்னொரு முறை வந்து என்னிடம் ஆயிரம் ரூபாய் பெற்றுக்கொண்டு போகும்போது இனிமேல் என்னை வருத்தப்படுத்துகிறதில்லை யென்று வாக்குக் கொடுத் திருக்க மறுபடியும் என்னிடமேன் வந்தாயென்று கோபமாய்க் கேட்க, அவன் ஆயிஷாவே நான் சொல்வதைக் கேள், நான் உன்னிடம் அந்தப் பணத்தைப் பெற்றுக் கொள்ளும்போது இனிமேல் உன்னிடம் வருகிறதில்லையென்று உறுதிசொன்னது நிசம். ஆகிலும் என்னுடைய கஷ்டகாலம் அந்தப் பணம் முழுவதும் வியாபாரத்தில் நஷ்டமாகிப் போய்விட்டது; நானினிமேல் இந்தத் தேசத்திலிராமல் மதீனத்திலேயே என் னுடைய சீவிய காலத்தைப் போக்கத் தீர்மானித்திருக் கிறேன், நீ எனக்கு இரண்டாயிரம் ரூபாய் தந்தால் நான் இறந்து போனேனென்று நினைத்துக் கொள். நான் இந்தியா வின் எல்லையிலுங்கூட இனியிருக்கிறதில்லையென்று சத்தியம் பண்ணித் தருகிறேன் என்று சொன்னான். அதற்கு ஆயிஷா என்னிடம் பண மில்லையே; என்னுடைய புருஷனிடங் கேட்க கூடாதே, நீ அல்லாவுக்காக மனமிரங்கி என் மனதை வேத னைப்படுத்தாமல் இங்கு நில்லாமல் போய்விடென்று கெஞ்சி னாள். அதற்கு அவன் ஆயிஷாவே நீ புத்திகெட்டவளா யிருக்கிறாய், நானிப்போதென் வறுமையினாற் களவு கொலை முதலிய பாதகங்களையுஞ் செய்து என் சீவனங் கழிக்கத்தக்க நிலையிலிருக்கிறேன்; நீயும் உன் புருஷனுஞ் சகல சம்பத்து களுமுடையவர்களாயிருக்கிறீர்கள். இச்சிறு தொகைப்பணத் தை யெனக்கு நீ தருகிறது உனக்கு வருத்தமல்ல. நீ அப்ப டித் தராதவரையில் இந்த சூரத்தென்கிற பட்டண முழுவதி லுஞ் சற்று நேரத்தில் உன் அந்தரங்கத்தை வெளியாக்கி யுன்னை நிந்தனைக்குள்ளாக்கிவிடுவேன். யாவரும் பழிக்கச் செய்வேன். நாளை மத்தியானத்திற்கு முன் இரண்டாயிரம் ரூபாய் எடுத்துக்கொண்டு நீ வராமற் போனால் என் பிரியப் படி செய்வேனென்று சொல்ல, ஆயிஷா என் வசம் பணமில்லை ஆகிலும் நான் கூடியவரையிலும் பிரயத்தனப்பட்டுப் பார்க் கிறேனென்று சொல்லிவிட்டுப் போய்விட்டாள். வீட்டுக்குப் போய்த் தன் வசம் பணமில்லாததால் இதற்கென்ன செய் வேன் புருஷனிடம் இச்சங்கதிகளைச் சொல்லிக்கேட்கவுங்கூடி யதாயில்லையேயென்று மயங்கிக் கொண்டிருந்தாள். அன் றிரவு முழுவதும் உறங்காமல் இந்த விசாரத்திலேயே போக்கப் பட்டது. மறுநாள் மத்தியானம் வரையிலும் யாதொரு வழி யுந் தனக்குத் தோன்றாமல் விசாரமாயிருக்கும்போது இபுறாகீம் ஓர் கடிதத்தை முன் சொன்னபடி ஒரு சிறுவன் கையிற் கொடுத்தனுப்பி வைத்தான். அக்கடிதத்தைப் பார்த்தவுடன் அவள் அறிவற்றுத் தரையில் விழுந்தாள். அந்தக் கடிதத் தில் எழுதியிருந்ததாவது:- ஆயிஷாவே நீ சொன்னபடி வருவாயென்று உறுதியாய் வழிபார்த்திருக்கிறேன்; நீ இன்னு மொரு மணி நேரத்துக்குள்ளாக வந்து என்னைக் கண்டு கொள்ளாதிருந்தால் உன் அந்தரங்கமெல்லாவற்றையும் வெளி யாக்கிவிடுவேன், அப்போது உன் புருஷன் உன்னைவிட்டு நீங்கிவிடுவான், ஒரு மணி நேரம் ! ஒரு மணிநேரம்!! ஒரு மணி நேரம்!!! 

இந்தக் கதையை வாசிக்கின்ற பெண்களுக்கு நாம் சொல் லுகிற உபதேசமாவது:- பெண்களே, புருஷனுடைய பாதத் தைச் சிரமேற்கொண்டு வணங்கி நடந்துவந்த இந்தச்சற்குண முடைய பெண்ணுக்கு நேரிட்ட பரிதாபமான முடிவைச் சிந்தி யுங்கள்; அவள் மாசற்ற பத்தினியாயிருந்தும் அவள் ஒரு இரகசியத்தைத் தன் புருஷனுக்கு மறைத்தகாரணமே அவளை உயிரிழக்கச் செய்தது, நீங்கள் இகபரங்களிற் செல்வமும் இன்பமும் பூரணமாய்ப் பெற்றுச் சுகித்திருக்கவேண்டுமாயின், உங்கள் சரீரமும் உங்கள் நாயகர் சரீரமும் இரண்டாயிருந்த போதிலும், உங்கள் மனம், கருத்து, சந்தோஷம், துக்கம் ஆகிய சகலத்தையும் உங்களுடைய நாயகர் மனம், கருத்து சந்தோஷம் துக்கமாகியவைகளிலமைத்து, இருவருக்கும் ஒரே உயிர் ஒரே நினைவு ஒரே மனம் ஒரே சந்தோஷம் ஒரே துக்கமென்று பொருந்தச் செய்து நடந்துகொள்ளுங்கள். பேரின்ப வாழ்வானது, தம்முடைய நாயகனேயல்லாது வேறில்லையென்று தியானித்துத் தானென்னும் செருக்கை மறப்பதேயாம். இவ்வுலக இன்பமாவது பெண்களும் புருஷரும் வேறென்பதை மறந்து இருவருமொரு வழிப்பட்டிருப்ப தாம். ஸ்திரீகளுக்குப் புருஷர்களின்றிச் சந்தோஷம், துக்கம் விருப்பம், இரகசிய முதலியவைகளொன்றுமில்லை, ஏனெனில் எவ்வளவு ஆஸ்திகளைப் புருஷன் தேடிக் குவித்தபோதிலும் எவ்வளவு ஆபரணங்களை ஸ்திரீ பூண்டிருந்தபோதிலும், அவைகள் இன்பத்தைக் கொடா. ஆகையால் இருவரும் ஒரே மனதாய்ப் போவதே குறையாச் செல்வமும் நிறைந்த இன்பமுமா மென்பதே. 

ஆயிஷா ஏங்கித் தன்னுயிரை விட்டவுடனே அஸன்’ தாய் தகப்பனற்றவனாய் ஆதரவில்லாத பரிதாபத்தை இவ் விதமென்று சொல்லமுடியாது. தேம்பித் தேம்பியழுது, பாம் பின் வாய்த் தேரையைப் போலானான். தாமரையிலைத் தண் ணீரைப் போலத் ததும்பினான்; அனலிலிட்ட புழுவைப் போலு மானான். இவ்விதம் அப்பிள்ளையின் பரிதாபத்தைப் பார்த்த வர்களெல்லோருந் தாரை தாரையாய்க் கண்ணீர் சொரிந்தார்கள். 

இங்கு இப்படி இருக்கும்போது இபுறாகீம் குளக்கரையிற் சற்றுநேரம் காத்துப் பார்த்துவிட்டு ஆயிஷாவைக் காணாமை யால் அவள் வீட்டை நோக்கி வந்தபொழுது, அந்த வீட்டில் அழுகையும் விழுகையுமாயிருக்கக்கண்டு அயலார்களிடம் நடந்த காரியங்களெல்லாவற்றையு மறிந்துகொண்டு யோசிக் கத் தொடங்கினான். எப்படியானால் 

நான் கோரிவந்த காரியந் தவறிப்போய்விட்டது. ஆகி லும் புத்திசாலிக்கும் தைரியசாலிக்கும் ஒரு குறைவுமில்லை; புத்தி முற்றினவர்களுக்குச் சித்தியாகாததொன்றுமில்லை. ஜகு பருடைய திரண்ட ஆஸ்திகளுக்கு அச்சிறுவனன்றி வேறு சுதந்திரர்களொருவரையுங் காணோம். ஆகிலும் அந்த ஆஸ்தி கள் யாவற்றையும் தன்வசப்படுத்த உபாயந் தேடவேண்டும் ஆனால் இரண்டுமுறை அஸன் என்னைக் கண்டிருக்கிறான், அதனால் நானே முன்னே றிப் போவது புத்தியல்ல, என் கருத் துக்கிசைந்த தோழர்களைத் தேடி அவர்களின் உதவியைக் கொண்டு இக்காரியத்திற் பிரவேசிக்கவேண்டுமென்று தீர் மானித்து அன்று பகலைக் கழித்து இரவானபோது அடுத்த ஒரு மஸ்ஜீதிற் போய்ப் படுத்திருந்தான். அவனுக்கருகே ஒரு தருவேஷும் (துறவியும்) வந்து படுத்திருந்தான். இபுறாகீ மோ அவ்விராமுழுவதும் ஜகுபருடைய பொருள்களை அப கரிக்க என்ன உபாயஞ் செய்வோமென்ற கவனத்தால் உறக்கமின் றிக்கலக்கமாய் விழித்துக்கொண்டிருந்தான். நடுச் சாமத்தில் அருகே படுத்திருந்த தருவேஷ் பக்குவமாயெழும் மெல்ல மெல்ல அடிவைத்து இபுறாகீமை யடுத்துக் கவிழ்ந்து படுத்து அவன் உறங்குகிறானோ அல்லவோவென்று உற்றுப் பார்த்தான். அப்போது இபுறாகீம் கண்ணையிறுக்கி மூடிச் சுவா சஞ் சீறிச்சீறிப் பாய குறட்டைவிட்டு அயர்ந்த நித்திரையா யிருப்பவனைப் போற் பாவனை செய்தான். அந்த தருவேஷ் இவன் உறங்குகிறானென்று நிச்சயித்து, தான் பூண்டிருந்த துறவியாடைகளைக் களைந்து ஓர் மூளையில் வைத்துவிட்டு, கள்ளர்களணியும் கருநிறத்தையுடைய வஸ்திரங்களை யணிந்து வாள் முதலிய பல ஆயுதங்களையுந் தரித்துக் கொண்டு வெளியே புறப்ப்பட்டுப் போனான். பின்பு விடியற் சாமத்தில் அவன் திரும்பிவந்து தான் உடுத்தியிருந்த உடை களை நீக்கி முன் அணிந்திருந்த கம்பளியையெடுத்து உடுத்துக் கொண்டு படுக்கப் போன போது, இபுறாகீம் ஓ தோழனே உம் முடைய இரகசியமெல்லாம் நான் அறிந்தவனாயிருக்கிறேன். உம்மைப்போல்ஒரு சினேகிதன் எனக்கு அகத்தியம் வேண்டிய தாயிருக்கின்றது. நானும் உம்மைப் போலொருவன் தான். ஆகிலும் நீரெனக்கு விசுவாசகராகவும் எனது நோக்கங்களுக் கிணங்குபவராகவுமிருந்தால் நீர் அதிர்ஷ்டவானாகி விடுவீ ரென்று சொல்ல, அந்தக் கள்ளத்துறவி உள்ளம் பொங்கி அங் கம் பூரித்து வெகுநேரம் இந்தக் குள்ள அறபியோடு பேசிக் கொண்டிருந்தான். காலையில் இபுறாகீம் தருவேஷுடைய உடைகளைக் கேட்டு வாங்கியுடுத்துத் தொழுதுமுடித்துக் கொண்டு, மஸ்ஜீதிருந்து போகிறவர்களொவ்வொருவரையும் குறியாய்ப் பார்த்துக் கொண்டிருந்தான். அப்படியிருக்கும் போது ஒரு அறபி ஜெபமாலையைக் கையிற் பிடித்துருட்டி யுருட்டி முணுமுணுவென உதடுகள் தடதடவெனத் தெரு வீதியிலே யோதிக்கொண்டு போகக் கண்டான். இபுறாகீம் இவன் உலகத்தை மருட்டுந் திருட்டுச் சிந்தையுடையவனா யிருக்கவேண்டும். இல்லாமற்போனால் இப்படிப் பலருங்காண ஜெபமாலையையுருட்ட அவசியமில்லையென்று உத்தேசித்துக் கொண்டு அவரைச் சமீபித்துத் தாழ்மையாய்ச் சலாஞ் சொன்னான். அதற்கு அறபி அலைக்குமுள் ஸலாம் வறகும் துல்லாகிவ பறகாத்துஹு என்று கபுறடியிலிருந்து தல்கீன் ஓதுகிற நேரத்தில் லெவ்வையுடைய முகம் வாடிக் குறாவி யிருக்குந் தன்மையான முகத்தோடு தொண்டையினின்று உற்சாகமாய்த் தொனி கிளப்பி வெகு பயத்தியாய் விடை கொடுத்தான். இடறாகீம் உடனே, இவன் எனக்குத் தகுந்த வன்; எப்படியெனில ஒருவன் தன் சுபாவ நடை, பேச்சு குணம் முதலியவைகளை மாற்றி இயல்பல்லாத இலக்ஷணங் களைப் பூண்டுகொள்பவன் பிறறை வஞ்சனை செய்யும் நோக்க முடையவனேயென்று மனதிற் றீர்மானித்துக்கொண்டு சொல் கிறான். ஓ ஷெய்கே! நீங்கள் பாக்கியவந்தராவதற்கு ஒரு இலேசான வழியுண்டாயிருக்கிறது. ஆகிலும் அதற்குச் சில உபாய தந்திரங்களைச் செய்து பெற்றுக்கொள்ளவேண்டும் நீங்கள் என்னிடத்தில் விசுவாசமுள்ளவராயிருப்பீர்களேயா னால் நான் உங்களுக்கு அதைத் தெரிவிக்கிறேன் என்று சொல்ல, உடனே சட்டென்று அறபி (தஸ்பீகை) ஜெபமாலை யை, ஜேபிலிட்டு, அதுவரையிலும் கடைக்கண்ணாற் பார்த் துக்கொண்டிருந்தவன் கண்விழிமுழுவதும் வெளியே தெரிய, வாயை ஆவென்று திறந்துகொண்டு அதன்னவென்று கேட்டான். இபுறாகீம் இந்தப் பட்டணத்தில் ஜகுபறென்றொரு பாக்கியவானிருந்தான். அவன் நேற்றுப் பைத்தியங்கொண்டு ஆற்றில் விழுந்து திறந்துபோனான். அவன் மனைவியும் இறந்து போனாள். அவர்களுக்குப் பதினாலு வயதையுடைய ஒரு மக னேயன்றி வேறொரு சுதந்திரவாளியுமில்லை. நீரந்த ஜகுப றுடைய சகோதரனென்று சொல்லிக்கொண்டு போய் அவ ருடைய ஆஸ்திகளுக்கெல்லாங் கோட்டாரால் தத்துவம் பெற் றுக்கொள்ள வழியுண்டாயிருக்கின்றது. உங்களிடம் அந்தப் பையன் தானே வந்து தன்னை வளர்த்தாதரிக்கும்படிக் கேட் கச் செய்கிறேனென்று சொன்னான். 

அந்த மனிதன் இந்தச் சொற்களைக் கேட்டு மிகச் சந்தோ ஷங் கொண்டு நீர் சொல்லுகிறபடியே நடக்கிறேனென்று இபு றாகீமை யழைத்துக்கொண்டு தன் வீட்டுக்குப்போய் வெகு பின்பு நேரஞ் சம்பாஷணை செய்து கொண்டிருந்தான். இபுறாகீம் அந்த மனிதனிடம் விடைபெற்றுக்கொண்டு போய் விட்டான். அந்த மனிதனுடைய பெயர் அலீ, அவன் மிகவும் வணக்கமுள்ளவனென்றும் சன்மார்க்கனென்றும் யாவரும் சொல்லும்படியாக வணக்கத்தை  ஓர் வலையாகப் பிரயோகித்து மனிதர்களை யதிற் சிக்கிக் கொள்ளச் செய்பவன். மற்றும் மனமிரக்கமில்லாத வன்னெஞ்சன். எந்தப் பாதகமுஞ் செய்யத்தக்க சண்டாளன். இபுறாகீம் இவனிடம் விடைபெற் றுக்கொண்டு அந்தத் துறவியுடையுடனே அஸனுடைய வீட் டுக்கு நேரே போய் அஸனைக் கண்டு குளிர்ந்த வார்த்தையாக மகனே அல்லாகுத்தாலாவுடைய கட்டளைக்குத் தலைசாய்த் துக் கொள், அவன் யாவற்றையும் அறிந்தவன், பரிபூரணத் தயாளன் அவனுடைய நியமப்படியே சகலமும் நடக்கும், மக னே நேற்றிரவு நான் மஸ்ஜீதில் முஷாகிதா (யோக)த்திலிருக் கும்போது எனக்கு மயக்கமாகி உறங்கிவிட்டேன். அப்போ தோர் சொப்பனங் கண்டேன். உன்னுடைய தந்தையாகிய ஜகுபறும் உன் தாயும் சொர்க்கலோகத்தில் நவரத்தினங் களாற் செய்த ஓர் சிங்காசனத்தின் மீது வீற்றிருக்கவும். மாணிக்கங்களைப் போலும் முத்துக்களைப் போலும் நிறங்களை யுடைய தேவகன்னிகைப் பெண்கள் சூழ்ந்திருந்து ஊழியஞ் செய்யவுங்கண்டேன்; அப்பொழுது உம்முடையதந்தையாகிய ஜகுபர்என்னைநோக்கி ஓ துறவியே! என் பிள்ளையாகிய அஸன் யாருமற்ற அகதியாகிவிட்டபடியால் அடுத்த தெருவிலிருக்கும் எனதன்பிற்குரிய தம்பியாகிய அலீ யென்பவரிடத்தில் நேரே நீர் போய் தாம் உம்மை அன்புடன் வளர்த்து ஆதரித்தது போல் ஆதரிக்கும்படி உம்மைக் கேட்கச் சொல்லுமென்று என் னிடஞ்சொல்ல, நான் விழித்துவிட்டேன். இவ்வுலகத்தில் பொய் வஞ்சனை யதிகம் உனக்குச் சுதந்திரமாயிருக்கிற இந் தத் திரண்ட ஆஸ்திகளை அபகரிக்க பலரும் பற்பல தந்திரோ ரோபாயங்கள் செய்வார்கள். நீ ஜாக்கிறதையாயிருந்துகொள் அந்த சத்தியவாதியாகிய அலி அவர்களுடைய ஆதரவைப் பெற்று அல்லாகுத்தாலாவுடைய கற்பனைகளைத் தவறாமல் நன்னடக்கையுடையவனாயிருந்து உன் தகப்பன் பெற்ற பேறும் பெற்று அவர்களோடுசொர்க்கலோகத்தில் வாழ்ந்திருப்பாயாக வென்று பத்தியுள்ள மகா உத்தமனைப் போல புத்திமதிகளைச் சொல்லி ஆசீர்வதித்தான் இவ்விதம் அவன் அடி நாவில் நஞ்சும் நுனிநாவில் அமிர்தமுமாய்ச் சொல்ல, அஸன் மிக நல்லதென அவனுக்கு அதிகத்துதி செலுத்திப் போஜனமருந் தும்படி மன்றாட, அவன் மகனே! நான் நோன்பாயிருக்கிறேன் உனக்குக் கஷ்டங்களுண்டான சமயத்தில் என்னை நினை, அத் தருணத்தில் அல்லாகுத்தாலாவுடைய உதவியால் உனக்குப காரியாக வந்து நிற்பேனென்று சொல்லிவிட்டுப் போய்விட் டான். இவன் சொன்னவைகளெல்லாவற்றையும் நம்பி அஸன் அலீ இருக்கிற வீட்டை நாடி விசாரித்துத் தேடிப் போனான். அந்நேரத்தில் அலீ வீட்டிலிருந்து தொழுது கொண்டிருக்கிறான். அஸன் தொழுது முடியும் வரைப் பேசா மற் காத்துப் பார்த்திருந்தான். அவன் தொழுகிறதும் ஆண் டவனிடத்தில் மன்றாடி அழுகிறதுமாய் வெகு நேரம் போக்கி விட்டுக் கண்ணீரைத் துடைத்துக்கொண்டு திரும்பி அஸனைப் பார்த்து மிகவும் மெதுவாக மகனே! உனக்கென்ன வேண்டு மென்று கேட்டான். அஸன் தான் ஜகுபருடைய |மகனென் றும், ஜகுபர் பைத்தியங்கொண்டு ஆற்றில் விழுந்திறந்து போனாரென்றுஞ் சொன்னபோது (இன்னாலில்லாஹிவ இன்னா யிலைஹி ராஜிஊன்) என்று சொல்லித் துணியை முகத்திலிட் டுக் கொண்டு தேம்பித் தேம்பி அழுபவனைப்போற் சற்று நேரம் பாசாங்கு செய்து ஜகுபருடைய மனைவியும் இறந்த செய்தியையுங் கேட்டு மிகவும் விசனமுடையவனாகக் காட்டிய பின் எழுந்து மகனே! என்னுயிரையொத்த சகோதரனுடைய பிரேதத்தை நான் ஆற்றிலே தேடியெடுப்பதற்குப் போகிறேன் நீ வீட்டிற்குப்போய் உன் தாயை யடக்கஞ் செய்வதற்குரிய ஆயத்தங்களைச் செய்யென்றனுப்பிவிட்டு, மாலைநேரம் வரை யிலும் அலீ தன் வீட்டிலிருந்துவிட்டு அஸனுடைய வீட்டுக் குப் போய் நான் இவ்வளவு நேரம் பிரயாசையாகத் தேடியும் உன் தகப்பனுடைய தேகத்தைக் கண்டெடுக்கக் கூடாமற் போய்விட்டது. நாம் அல்லாவுடைய நியமனத்துக்குச் சம் மதித்திருக்கவேண்டுமென்று சொல்லி ஆயிஷாவைக் குளிப்பாட்டிக் கபன் செய்து அடக்கஞ் செய்தார்கள். பின்புஅஸன் அலீயைப் பார்த்து என் சிறிய தகப்பனே நீங்களே யன்றி எனக்காருமில்லை என் தகப்பன் என்னையாதரித்தது போல் நீங்களுமென்னை யாதரிக்க வேண்டும், என் ஆஸ்திகளை ஒப்புக்கொண்டு பாதுகாத்துவரவேண்டுமென்று சொன்னான். அதற்கு வஞ்சகமுள்ள அலீ, (ஹஜ்ஜிற்குபோய் வந்த பூனை யைப் போல்) கொஞ்சமுமஞ்சாது, மகனே சிலகாலமாக நான் செய்யும் வியாபாரங்களை யொடுக்கி வருகிறேன். உலக சம் பத்தின் ஆசையை விட்டொழிந்திருக்கிறேன். உன் ஆஸ்தி களை யொப்புக்கொள்ளும் பாரத்தைச் சுமக்க என்னாலாகா தென்று சொல்ல, அஸன் நீங்களன்றி எனக்கு வேறொருவரு மில்லையென்க, சற்றுநேரம் முற்றுந் துறந்தவனைப் போல மவுன மாயிருந்து நல்லது என்ன செய்யலாம்; நாளைக்கு இந்த வீட் டிலுள்ள பொருள்களையெல்லாமென் வீட்டிற்குக் கொண்டு போவோம், நீயும் என் வீட்டில் வந்து என் பிள்ளைகளுடனே யிருப்பாயாக, மேலும் நாளைக்கே கோர்ட்டுக்குப்போய் உன் ஆஸ்திகளெல்லாவற்றையும் நான் ஒப்புக்கொண்டு பராமரிப் யதற்காக உத்திரவு கேட்க வேண்டும். அங்கு நீயும் வந்து அதற்குச் சம்மதஞ் சொல்லவேண்டுமென்று மறுநாள் வேட் டை நாயைப் போல அஸன் வீட்டிலிலுள்ள பொருள்களையெல் லாந் தன் வீட்டுக்குக் கொண்டுபோய் வைத்துவிட்டு அஸ் னைக் கோர்ட்டுக்கழைத்துக்கொண்டு போய், இவர் எனக்கு சிறிய தகப்பன், அன்னையைப் போல என்னைக் காக்கவும், என் பூஸ்திதிகள் முதலிய ஆஸ்திகள் நாஸ்தியடையாது பாதுகாக் கவும், இவரை நியமிக்க விரும்புகிறேனென்று தப்பில்லாக் கை யொப்பம் வைக்கச் செய்து மிக்க அக்கறையுளளவன் போல வீட்டுக்குக் கூட்டிக்கொண்டு போனான். 

பின்பு நடந்த வரலாற்றைச் சொல்வதற்குமுன்பு அலீ யென்பவனைக் குறித்துச் சில விவரங்களை விரித்துச் சொல்ல வேண்டியதாயிருக்கிறது. 

இந்த அலியினுடைய சொந்த ஊர் அறபுதேசமென்றும் அவனவ்வூர் ஓர் பிரபுவின் மகனென்றுஞ் சொல்லிக்கொண்டு சொற்பநாளைக்குமுன் சூரத்துக்கு வந்து அலங்காரமான உடைகளை யுடுத்திக்கொண்டு மாறாட்டமாய் நற்குணங்களை பாராட்டிவந்தான். பின்பில் வஞ்சகன் கொஞ்சம் பொரு ளுள்ள ஒரு சற்குணமுள்ள வாலிபக் கைம்பெண்ணைக் கலி யாணஞ் செய்து கொண்டான். அப்பொழுது அந்தக் கைம் பெண்ணிற்கு முந்தின புருஷனுக்கும் பிறந்த மூன்று பிள்ளை களிருந்தார்கள். அவர்களில் மூத்த பெண்ணின் பெயர் மரியம்; இப்பொழுது தன் மனைவியுடைய ஆஸ்திகளைப் யொப்புக்கொண்டு, ஷாப்பு வைத்து வர்த்தகஞ் செய்வதாய் எத்திவந்தானேயன்றி அவனுடைய பூர்வீகம் ஒருவருக்கும் தெரியாது. பாக்கியவந்தனென்ற அவன் தகப்பனிடமிருந்து அவனுக்குப் பணமாவது ஓ ஓர் கடிதமாவது வந்ததில்லை. இவன் விவாகஞ் செய்த சொற்பகாலத்தினுள்ளே, தன் அற்ப குணத்தைக் கபடமாய் கற்பிக்க ஆரம்பித்தான். எப்படி யெனில் மிகுதியாகச் செலவு பண்ணுதல் விலக்கப்பட்டதென் னும் வேதவாக்கியத்தை மிகவும் ஊன்றுதலாகச் சான்றோனைப் போலப் பயபத்தியுடன் மிகு நயமாய்ச் சொல்லி நல்ல வஸ்திரம் சாப்பாடு ஆகியவைகள் கூடாதெஅபான் செல்வமுள்ள வளே யாயினும் நல்ல மனையாட்டியின் குணம். செலவைச் சிக்கனமாய்ச் செய்வதென்று நலவைப் போலப் போதித்து வீட்டு வேலையைத் தானே செய்யக் கட்டளையிடுவான். இவையன்றி, கச்சவ ஞ்செய்து இச்சகமாய்ச் சம்பாதிக்கும் பொருளில் கொச்சையான பொருள் இராதென்பதரிதாகை யால் மனைவி மக்கள் அனைவரும் கைத்தொழில் செய்து சீவ னஞ் செய்தல் உத்தமமான காரியமென்று போதித்துவந்தான். இப்படியே அப்பாதகன் தன் மனைவி பிள்ளைகளுக்கு நல்ல சாப்பாடு கொடாமல் அக்கெடுமதியன் அதிகக் கொடுமைகள் செய்துவந்த ன்; அவன் தன் மனைவிக்குச் செய்துவந்த கஸ்தி யினால் அவள் மெலிந்து இளைத்து அஸ்தியாகி யெவ்வேளையும் விசாரங்கொண்டவளாய் வாடியிருப்பாள் ஒரு நிமிஷ நேர மாகிலுஞ் சிரித்திருக்கமாட்டாள். தன் பிள்ளைகளுக்கு அவன் செய்யுங் கொடுமைகளைப் பார்க்கும்போதெல்லாம் பெருமூச்சு விடுவாள். அந்தப் பிள்ளைகளும் அவன் குரலைக் கேட்ட வுடனே பாம்பைக் கண்ட மயிலைப் போலவும், பூனையைக் கண்ட கிளியைப் போலவும் பயந்து நடுங்கி ஓர் மூலையில் ஒதுங்கிவிடுவார்கள். இப்படிப்பட்ட உலுத்தனும் பாதகனு மாகிய அலியிடத்தே அஸனை அவன் விதி கொண்டு வந்து விட்டது. 

அஸன் இந்த வீட்டுக்கு வரும்போது மரியம் பன்னிரண்டு வயதுடையவளாக விருந்தாள். அவள் மிகவும் மேன்மை யான தேகத்தையுடையவள். அவளுடைய குளிர்ந்த நீல நிறத்தையுடைய பெரிய கண்களால் ஒருவரை யுற்றுப் பார்த் தால் எவர்கள் மனமும் மெழுகைப்போல உருகிவிடும். முத்து களுக் கொப்பான பற்களும் பவள நிறத்தையுடைய உதடு முடையவள். ஆகிலும் அவள் முகத்தில் சந்தோஷமும் இரத்த புஷ்டியும் இல்லாததால் வெண் கல்லாற் செய்த ஓர் புதுமையைான பதுமையைப் போலிருந்தாள். 

அஸன் அலீயுடைய வீட்டுக்கு வந்த நாள் முதல் நாலு மாத காலம் வரையிலும், பூரண சவுக்கியம் பெற்றிருந்தான். சாப்பாடு முதலியவைகள் சவுக்கியமாய் சாப்பாடு குறைவுமில் லாமல் அவனுக்கு நடத்தப்பட்டன, அஸனை அலீ மிகவும் அன்பு பாராட்டித் துன்பப்படுத்தாமல் சீராட்டி வந்தான், அஸன் மரியமிடத்திற் பிரியமுள்ளவனாய் மிகவும் பட்சமாய், சகோதரியைப் போலக் கொண்டாடிவந்தான், அவனுக்கு வைக்கும் உணவில் அலீக்குத் தெரியாமல் அந்தப் பிள்ளை களுக்குக் கொடுத்தனுப்பி வைப்பான். அஸனுடைய அன் பாதரவினால் மரியம் மலர்ந்த முகமும் சந்தோஷமாகிய மனமும் உடையவளானாள். 

இப்படி நாலுமா தஞ் சென்றபின் ஒரு நாளிரவு, இபுறாகீமும் அவனுடைய தோழனாகிய கள்ள ஞானியும் அலீயும் ஒரு மரத் தடியிலிருந்து இரகசியமாய்ப் பேசிக் கொண்டதாவது:- அலீ மற்றிருவர்களைப் பார்த்து சினேகிதர்களே! நாம் செய்த தந் திரத்தினால் நாம் நினைத்த காரியத்தைச் செய்து முடித்துக் கொண்டோம். ஆகிலும் நம்முடைய தந்திரம் எந்த நேரத் தில் வெளியாகிவிடுமோ அதைச் சொல்லக் கூடாது அது வெளியாகிவிட்டாலோ நாம் கடூரமான தண்டனைக்குட்பட்டு விடுவோம். அஸன் இருக்கும் வரையிலும் நாம் அச்சத் துடனேயிருக்கவேண்டியதாக விருக்கின்றது; ஆகையால் நீங்களிருவரும் நாளையிரவு நடுச்சாமத்தில் வந்து அஸனைத் தூக்கிக்கொண்டுபோய்க் கொன்று போடுங்கள், உங்களிருவ ருக்கும் நான் முந்தித் தந்திருக்கிற பணம் தவிர உங்கள் தேசங்களுக்குப் போய்ச் சவுக்கியமாய்க் காலம் போக்குவதற் குப் போதுமான பணம் இக்ஷணமே தருகிறேனென்று சொல்ல இபுறாகீம் அதற்கு மறுமொழியாக நல்லது நாங்களிருவரும் நடுச்சாமத்தில் உம்முடைய வீட்டுக்கு வருகிறோம்; நீர் நாளைப் பகல் நேரத்தில் அஸனுடைய அறையின் திறவுகோலை எடுத்து ஒளித்துவைத்தால் அஸன் கதவைப் பூட்டாமற் சாத்திவைத்துவிட்டு உறங்குவான். நாங்களுள்ளே போயவ னைத் தூக்கி ஒரு துலையானவிடத்திற்குக் கொண்டுபோய்க் கொன்றுவிடுகிறோம். ஆனால் அவன் உம்முடைய வீட்டில் இல்லாததை அயலார்களறிந்தால் அவனை மோசஞ்செய்தீ ரென்று நியாயஸ்தலங்களுக்கு அறிவிக்கக்கூடியதாயிருக்குமே என்று சொன்னபோது, அலீ நீங்கள் அதைக் குறித்து யோசிக்கவேண்டாம். நான் அதற்குத் தேவையான தந்தி ரங்களைச் செய்துகொள்வேனென்று சொல்லியபின் அவர்கள் மூவரும் பிரிந்துவிட்டார்கள் என்பதாம். 

மறுநாட்காலமே அலீயானவன் அஸன் இருக்கும் அறைக் குள் வந்து மிகவும் அன்பாகப்பேசிக் கொண்டிருக்குஞ் சமயத் தில் அஸனை நோக்கி யென் மனசுக்குகந்த மகனே உன்னுடைய எழுத்தை நான் இதுவரையிலும் பார்த்ததில்லை, அதைத் தெரிசிக்கப் பிரியமாகவிருக்கிறேன். கடிதமும் பேனா வுமெடுத்து ஏதாவது எழுதென்று சொல்ல, அஸன் உடனே பேனாவைக் கையிலெடுத்து என்ன வெழுதவென்று கேட் டான். அதற்கு அலீ உனக்குத் தோன்றினதை யெழுது, வேண்டுமானால் நான் ஒரு வாசகஞ் சொல்கிறேன், அதை யெழுது என்று அஸன் தனக்கு ஒரு கடிதமெழுது கிறதுபோல் “என்னுடைய சிறிய தகப்பனாரவர்களுக்கு அல்லாகுத்தாலா மேலான பதவிகளைத் தந்தருள்வானாக; என்னுடைய தகப்பனுந்தாயும் இறந்து போன விசாரங்களை யெல்லாம் ஆற்றி, அவர்களிலும் அதிக அருமையாய் என் னைப் பரிபாலித்துவருகிறீர்கள். உங்களை விட்டுச் சொற்ப நேரமாவது பிரிந்திருக்க எனக்குப் பிரியமில்லை. ஆகிலும் என்னுடைய தகப்பனார் உயிரோடிருக்கும்போது மதீனத் திலுள்ள எங்கள் இனத்தார்களைப் போய்ப் பார்ப்பதற்கு என்னை அனுப்ப நினைத்திருந்தார், நாளைக்கு இந்த ஊரிலி ருந்து சிலர் போவதற்கு ஆயத்தமாயிருக்கிறார்கள், ஆகை யால் என்பேரிற் கோபங்கொள்ளாமல் என்னை அனுப்பி வைக்கக் கேட்டுக்கொள்கிறேன். 

இங்ஙனம், 
அஸன் இபுனு ஜகுபர். 
என்பதே. 

இந்த வாசகத்தைச் சொல்லியெழுதி முடித்தவுடன் அலீ அந்தக் காகிதத்தை வாங்கிப்பார்த்து மர்ஹபா ! சந்தோஷம்! மிகவும் நல்ல எழுத்து, என்னுடைய மனைவியிடம் இதைக் காண்பிக்கப்போகிறேனென்று எழுந்திருந்து மனைவியிடம் போய்க் காட்டிவிட்டு, பின்பு அதைத் தன் வசத்தில் வைத் துக்கொண்டான். ஏனெனில், நாளை அஸன் இந்தக் காகிதத்தையெழுதி வைத்துவிட்டுப் போயிருக்கின்றா னென்று, பலரிடமுஞ் சொல்லிவிட்டு அவனைத் தேடிப்போகிற தைப்போற் சில நாளைக்குத்தான் அங்கும் இங்குந் திரிந்து விட்டு வந்தால் ஒருவருஞ் சந்தேகிக்கமாட்டார்களென்று திட்டஞ் செய்துகொண்டு, அஸன் காணாமல் அவன் அறை யின் திறவுகோலையெடுத்துத் தன் வசத்தில் வைத்துக் கொண்டான். 

அஸன் அன்றிரவு படுக்கப்போகும்போது கதவைப் பூட்டத் திறவுகோலைப் பார்த்தான். காணாமையால் சில நேரந் தேடிவிட்டுக் கதவை சாத்தி ஓர் நாற்காலியை நெருக்கி பொறுக்க வைத்துவிட்டுச் சற்று நேரம் ஓர் புத்த கத்தை வாசித்துக்கொண்டிருந்தான். பின்பு உறக்கம் அதிகப்பட்டதாற் புத்தகத்தை ஒரு புறம் வைத்துத் தீபத்தை அணைத்துவிட்டுப் படுத்துக்கொண்டான். 

அஸன் உறங்கிச் சில நேரஞ்சென்றபின் ஒரு பயங்கர மான சொர்ப்பனங்கண்டு திடுக்கிட்டு விழித்தான். சரீர மெல்லாம் வெயர்த்து குளிர்ந்து நெஞ்சு படபடவென்று துடித்துக்கொண்டிருந்தது. அறையிருட்டாயிருந்ததினாற் பயந்து தலையையுணர்த்தி மூச்சையடக்கிக் கள்ளர்கள் அறைக்குள் வந்திருக்கிறார்களோ, கதவைப் பூட்டாமற் சாத்திவைத்துவிட்டுப் படுத்தோமேயென்று சில நேரம் நாட்ட மாய்க் கேட்டுக்கொண்டிருக்கும்போது, கதவுக்கு வெளியே குசுகுசென்று மெதுவாய் மனிதர்கள் பேசுகிறது கேட்க, அவன் சரீரமெல்லாவற்றிலும் இரசத்தைப் பாச்சினாற்போல திமிர்கொண்டுவிட்டது ; உரோமஞ் சிலுசிலிர்த்து விட்டது; சத்தம் போட வாயைத் திறக்கும்போது கதவை மெல்ல மெல்லத் தள்ளிக்கொண்டு இருவர் வந்து அஸன் மேல் விழுந்து யானையை யழுங்கு பிடித்ததுபோலும், மானைப் புலி யடித்ததுபோலும் அவனைப் பிடித்து ஒருவன் அஸன் சத்தம் போடாமல் வாயிற் கையைவைத்தமர்த்தி, மற்றொருவன் சரீரத்தைப் பிடித்துயர்த்தி, இருவருந்தூக்கிக்ெெரண்டு வெளியே போனார்கள். அந்நேரத்தில் அஸன் அறிவற்றுப் போனான். இந்த இருவரும் யாரென்று அஸனுக்கு அப்போது தெரியாது, ஆனால் வாசிப்பவர்களுக்கு அந்த பாதகனாகிய இபுறாகீமும், துறவிவேடம் பூண்டிருந்த திருட னாகிய பார்ஸியும் என்பது விளங்கும். இந்தத் துறவி வேடம் பூண்டவன் நெருப்பை வணங்குகிற பார்ஸி ஜாதியான் இந்தியா தேசத்திலுள்ள முஸ்லீம்கள் மனிதர்களுடைய உடையைப் பார்த்து மருண்டு விடுவது இயல்பாகையால் இதையறிந்த இவன் துறவி வேடம் பூண்டு பலரை எத்தி வத்தான். 

இப்படியே எத்தனையொ றாபுஜிகளும், எகூதிகளும் வஞ்சனைக் காரர்களும் சையிதுமார்களைப்போலும் ஷேகுமார் களைப்போலும், மஸ்தான்களைப்போலும், கோலமெடுத்து இந்தியாவிலுள்ள முஸ்லீம்களை ஏற்றித்திரிவதை யின்றுங் காணலாம். 

அப்படியே இந்தப் பாதகன் சமயத்திற்குத் தக்கபடி பற்பல உடைகளைப் பூண்டு கொள்வாள்; சில நேரஞ் சையிதுமார்களைப் போல மிகவும் அலங்காரமாயுடுத்திக் கொண்டுபோக, இஸ்லாமானவர்கள் அவன் உடையும் நடையும் பார்த்தவுடன் அவன் கையை முத்தமிட்டு மிகவும் மேன்மை பாராட்டுவார்கள். 

இவ்வகை வன்னெஞ்சனாகிய கன்னெஞ்சனும் இபுறா ஹிமும் அஸனைத் தூக்கிக்கொண்டு போகும்போது சில நேரஞ்சென்று அஸனுக்கு நினைவுண்டாகி இரண்டுபேர் இரும்புக்கொப்பான தங்கள் கைகளாற் பிடித்துத் தூக்கிக் கொண்டு விரைவாய்ப் போவதையறிந்து சத்தம்போட எத்தனிக்கையில் அவர்களிலொருவன், அடா, நீ வாயைத் திறந்தால் உன் தலையைக் கல்லில் மோதி உன் மூளையைச் சிதறச் செய்வேனென்று உருட்ட, அஸன் நானுங்களுக் கென்ன செய்தேன். நானொன்றுஞ் செய்யவில்லையே. ஏனென்னைக் கொல்லப்போகிறீர்களென்று சொன்னான். அதற்கு அக்கள்ளரிலொருவன் இப்போதந்தப் பேச்சுத் தேவையில்லை, உனக்கு நடக்கக் கூடுமானால் உன்னை விடு கிறோம், ஆனால் இங்கு பார் இருபுறமும் பெரும் பாதாளம்; நீ ஓடத் தொடங்கினால் இந்தப் பாதாளத்தில் விழுந்திறந்து போவாயென்று சொன்னான். அந்நேரத்தில் சந்திரனை மூடி யிருந்த மழைமேகஞ் சற்று நீங்கி மங்கின. நிலா பிரகாசிக்க அஸன் இரண்டு புறமும் பார்த்தான்; தரையானது கண் ணுக்குத் தெரியாப் பெரிய கெபியாபிருந்தது ; அஸனுக்குத் அவைகளெல்லாமோர் பயங்கரமான சொர்ப்பனங் காண்பது போலிருந்தது. அக்கன்ளரிலொருவன் அஸனின் கையைப் பிடித்துக்கொண்டு நடந்தான். இப்படிச் சற்று நேரம் நடந்து போகும்போது கடலருகேயிருக்கிற ஓர் மலையுச் சத்துக்கு வந்து சேர்ந்தார்கள்; கடலின் அலை புரண்டு கல்லில் மோதும் பெருஞ்சத்தமாயிருந்தது. அந்த மலையின் உச்சத்திற்கு வந்ததின் பின்னால், அந்த பாதகர்கள் அஸனைப்பார்த்துச் சொல்லுகிறார்கள். உன்னை நாங்கள் கொல்லப்போகிறோம், நீ எவ்வளவு சத்தம் போட்டாலும் ஒருவரும் இங்கே வரமாட்டார்கள், உன்னுன்டய உடைகளைக் களையென்று சொன்னார்கள், அஸன் அல்லாவே நானென்ன குற்றஞ் செய்தேன், நீங்களேன் என்னைக் கொல் லப்போகிறீர்கள், தாய் தகப்பனில்லா த அகதியாயிருக் கிறேன். நீங்களென்னை மனமிரங்கிவிடுங்களென்று சொல் லிச்சொல்லித் துணிகளைக் களைந்தான். களைந்து முடிந்த வுடனே அக்கள்ளரிலொருவன் அஸனைப் பிடித்து உச்சத் திலிருந்து தள்ளிவிட்டான். அஸன் மலையிலிருந்து உருண்டு புரண்டுகொண்டு வரும்போது ஓர் மரத்தின் வேரில் வந்து தட்டுப்பட்டு, அதைப் பிடித்துக்கொண்டு சற்றுநேரம் அந்தக் கள்ளர்கள் போகும்வரையில் நின்று பின்பு தெண்டித்து மலை யுச்சிக்கேறிவந்தான். சரீரம் நொந்து மிகவும் வேதனையா யிருந்தது. தான் நிருவாணியாயிருப்பதால் விடிந்தால் வீதி யிற் போகக்கூடாதென்றுடனே எழுந்து தன் வீட்டை நோக்கி வந்து வெளிக்கதவு பூட்டியிருக்கக் கண்டு பலமாகத் தட்டினான். உடனே அலீவந்து கதவைத் திறந்து அஸன் நிருவாணியாக நிற்பதைக் கண்டு மகனே உனக்கென்ன சம் பவித்தது நீ எப்படி வெளியே போனாய், ஏன் துணியொன்று மில்லாமலிருக்கிறாயென்று கேட்க, அஸன் ஓடிவந்து அலீயைக் கட்டிக்கொண்டு தேம்பித் தேம்பி வெகுநேரம் பேசக்கூடாத வனாயழுது பின்பு நடந்த காரியங்களெல்லாவற்றையுஞ் சொன்னான். அலீ அச்செய்தியைக் கேட்கும்போது மெத்த விசாரங்கொண்டவனைப் போல் பாவனை காட்டிக் கொண் டிருந்தான். அஸனுக்கு கடூர சுரமுண்டாகி அறிவு மயங்கித் திடுக்கிடுகிறதும், கள்ளர்கள் வருகிறார்கள் என்னைப் பிடிக் கிறார்கள், பாதாளத்திற் றள்ளப்போகிறார்களென்று புலம்பி அலறுகிறதுமாக ஏழுநாள் வரையில் சீக்காயிருந்தான், மரி யம் இரவு முழுதும் விழித்திருந்து மருந்துகளைக் கொடுப்பாள் அவன் திடுக்கிட்டுப் பயந்து கண்ணைத் திறக்கும்போதெல் லாம் மரியமுடைய முகத்தைப் பார்த்துப் பயந்தெளிந்து மறு படியும் கண்ணை மூடிக்கொள்வான். ஏழு நாளைக்குப் பின் சுரங் குறைந்து புத்தி தெளிந்திருக்கையில்; இபுறாகீம் துறவி யின் உடையை யணிந்துகொண்டு அஸனுடைய அறைக் குள்ளே வந்து அஸனைப் பார்த்து மகனே நான் ஏழு நாளைக்கு முன் பம்பாய் பள் ளியில் படுத்திருந்தேன். அப்போது நான் ஒரு சொப்பனங்கண்டேன், இரண்டு மந்திரவாதிகள் சூரத் துக்கு இரண்டு மைலுக்கப்பால் ஒரு மலையுச்சத்திலிருக்கிற புதையலை யெடுப்பதற்கு அழகான தலைப்பிள்ளையை பலியா கக் கொடுக்கவேண்டுமென்று தேடித்திரிந்து, பின்பு உன்னை இரவு நேரத்தில் வீட்டுக்குட்புகுந்து பிடித்துக் கொண்டு போகக் கண்டு விழித்தேன் உடனே நான் இரண்டு ரக் ஆத்துத் தொழுது உன் உயிரை காப்பாற்றும்படிக்கு அல்லா குத்தாலாவிடங் கெஞ்சிக் கேட்டேன். அந்த மனு ஏற்றுக் கொள்ளப்படுமென்று எனக்குத் தெரியும். இன்னம் நீ அந்த பாதாளத்தில் விழுந்து இறந்துவிட்டால் அந்தக் கள்ளர்கள் புதையலை யெடுக்க நினைத்து மறுநாள் போவார்களென்று மெனக்குத் தெரியும். நான் உடனே பொம்பாயை விட்டு அன்று காலமே இந்தப் பட்டணத்திற்கு வந்து உன் சிறிய தகப்பனாரைக் கண்டு பேசினேன். அவர் நடந்த வரலாற்றை யெல்லாஞ் சொன்னார், நீ சுகவீனமாயிருப்பதையும் அறிவித் தார். அந்தக் கள்ளர்கள் புதையலை யெடுக்க வருவார்கள், அவர்களைப் பிடிக்கவேண்டுமென்று உன் சிறிய தகப்பனையும் அழைத்துக்கொண்டு அன்றிரவு போய் ஓர் கற்பாறைக்குப் பின் மறைந்து ஒளிந்திருந்தோம், அப்படி நிற்கும்போது அந் தக் கள்ளர்கள் கடப்பாரை, மண்வெட்டி ஆகியவைகளுடன் மலையருகில் வந்து கடப்பாரையினால் ஓர் கல்லைப் புரட்டும் போது, நான் திடீரென, நீண்ட தடியோடு பிடிபிடியென்று பெருஞ்சத்தம் போட்டுக்கொண்டு முன்னே பாய்ந்தேன். அவர்களிருவருந் திடுக்கிட்டுத் தடுமாறி ஒருரோடொருவர் தட்டுக்கெட்டு முட்டுப்பட்டு இருவரும் மலைப்பள்ளத்திலே யுருண்டு வீழ்ந்திறந்துபோனார்கள் இப்படி நடந்திருப்பதால் அன்றிரவு சம்பவித்த சங்கதியை யொருவரிடமுஞ் சொல்ல லாகா; இச்செய்தி கச்சேரிக்குத் தெரியவந்தால் நானும் உன் சிறிய தகப்பனும் அந்த மனிதர்களைக்கொன்று போட்டோம் மென்றெங்களைத் திண்டாட்டத்திற்குள்ளாக்குவார்கள். இது வுமின்றி அந்தப் புதையல் உனக்கே கிடைக்கும்; உனக்குப் பதினாறு வயதானபிறகு அந்தப் புதையலிருக்கிற விடத்துக்கு நீ போனவுடனே அதன் மேலிருக்கிற கல்லானது தானே வெடித்துப் புதையல் வெளியாகிவிடும். அதை யெடுக்கும் விதத்தையும் அந்தத் தினத்தையும் பின்னால் உனக்கறி விப்பேன். ஆகையால் நடந்த காரியங்களை யொருவரிட முஞ் சொல்லாதேயென்று பொல்லாப்பாவியாகிய இபுறாகீம் நல்லவனைப்போல மெல்லப்போய்விட்டான். 

இந்த இபுறாகீம் ஓர் வொலி (மகாத்மா) வென்றும் அவன் சொன்னவைகளெல்லாம் உண்மையென்றும், அஸன் விசுவா சங்கொண்டு தனக்கு நேரிட்ட காரியங்களொன்றையும் பிற ரொருவருக்குஞ் சொல்லாமலிருந்துவிட்டான். அஸனுக்குத் தேகசவுக்கியமுண்டாக ஒரு மாதஞ் சென்றது. 

அஸனுடைய நல்லொழுக்கமுஞ் சற்குணமுந் தரும சிந் தையும் அப்பட்டணத்திற் பிரஸ்தாபமாகிவிட்டன. ஏழை கள் அகதிகள் வீட்டுக்கு நேரேதான் சென்று அவர்களோடு மிகவுமன்பாய்ப் பேசி அவர்களுக்கு வேண்டியவை கொடுத் துதவுவான். நோயாளிகளைப் போய்ச் சந்தித்து வைத்தியர் களையழைத்துக்கொண்டுபோய் அவர்களுக்கு வேண்டிய பரி காரஞ் செய்விப்பான். அவனை யறிந்தவர்களெல்லோரும் அவன் பேரில் மிகவுமன்பு வைத்து வந்தார்கள். 

அஸனிருக்கிற வீட்டுக்குச் சமீபமாக காசிம் என்றொரு வாலிபனும் அவனுடைய சகோதரியாகிய மைமூன் என்கிற ஓர் பெண்ணும் இவனோடு மிகவுஞ் சினேகிதமாயிருந்தார்கள். அஸன் ஒரு நாளாவது அவர்களைச் சந்திக்காமலிருக்க மாட் டான். அந்த மைமூன் என்பவளுடைய சவுந்திரியத்துக்கு ஒப்பு சொல்ல அப்பட்டணத்தில் வேறுபெண்களில்லை. அவள் மிகவுஞ் சன்மார்க்க நடக்கையுடையவள்; தன் சகோதரன் மீன் பிடித்துச் சம்பா திப்பதைக் கொண்டும், அவள் தையல் வேலைகளைச் செய்து கிடைப்பவைகளைக் கொண்டும் சீவனஞ் செய்துவந்தாள். அலீ அவளைக் கண்டு ஆசைகொண்டு அவளைத் தன் வைப்பாட்டியாக வைத்துக்கொள்ளுவதற்கு மிகவும் இஷ்டப்பட்டான்; பின்பு கலியாணம் பேசியும் அனுப் பினான்; அவளும் அவள் சகோதரனும் ஒன்றிற்குமிணங்காத தால் பிணங்கிக் குரோதங்கொண்டு காசீமுக்கு விரோதமாகப் பொய்யான வழக்குகளைக் கோர்ட்டுகளிற்றொடர்ச்சி செய்து அவனை மிகவுந் தொந்தரவு செய்துவந்தான். இப்படியிருக்க அஸன் அவர்களோடு சினேகமாகி யெந்த வேளையும் அவர் கள் வீட்டுக்குப் போகிறது அலிக்குப் பொருத்தமில்லாத காரி யமாகவிருந்தது; ஆகிலும் அஸனுக்கு மனவருத்தமுண்டாகு மென்று ஒன்றும் பேசாமலிருந்து விடுவான். 

இப்படிச் சில மாதங்கள் சென்றபின் ஒருநாளிரவு இபுறா கீம், அலீ, பார்சீ ஆகிய இம்மூவரும் அலீயினுடைய படுக்கை யறையில் திடும் பிரவேசமாய் யாருமறியால் இரகசியமாய்ப் பிரவேசித்தார்கள் அப்பொழுது அங்கிருந்த மரியம் துரித மாய் அக்கொடியோர் வரவை நோக்கி, ‘ஆடவர்களாதலின் நாணமிகுத்தவளாய், அவர்கள் கண்ணுக்குப் புலப்படாமல் கட்டிலின் கீழ் மறைவாகப் பதுங்கினள். பின்பு அம்மூவரிற் கொடியரிற் கொடியோனாகிய அலீ யென்பவன் மற்றிரு பாவி களையும் நோக்கிச் சொல்லத்தொடங்கினான். 

நண்பர்களே! இவ்வுலகததில் யானறிந்தவரையில், நீங் கள் மிகவும் வல்லமைசாலிகளாயும், தந்திரம் யுக்திபுத்திகளிற் றேர்ந்தவர்களாயுமிருக்கின் றீர்கள். என்றாலும் நீங்கள் சென்ற முறை செய்த தந்திரத்திற் சற்று பிசகு நேரிட்டது. ஆயினு மென்ன! யானைக்கும் அடி சறுக்குமல்லவா! போனது போகட் டும்; நாளையிரவு, நம்மாலியன்ற அளவு சாக்கிரதையாய்த் தக்க தக்க உபாய ஙகளைச் செய்து அஸனின் உயிரை மாய்த் தல் வேண்டும்; ஏனெனில், கீரியுள்ளவரையில் பாம்பிற்கு விசேஷமில்லையாகையால் அவனுயிரோடிருக்குமளவும் நம் முடைய தந்திரங்கள் வெளியிடப்படுமோவென்ற அச்சம், நம் மனதை விட்ட கலாது அல்லாமலும் நமது தந்திரம் வெளிப்படிலோ நமதுயிர் இமைப்பொழுது மிராதென்பது திண்ணமே! ஆகையால் யானோருபாயம் சொல்லுகிறேன் கேளுங்கள்; அஸனாகிய அச்சிறுவன்; நித்திரை செய்யும் அறையில் என்ை டைய வேலையாட்களிலொருவனையும் அவனுடன் பத்திரமாய் நித்திரை செய்யும்படி உத்தரவு செய் கிறேன். நீங்களிருவரும் நாளை நடு இரவில் கள்ளர்களைப்போலச் சுவரைத் துளைத்து உட்பிரவேசித்து, அங்கு நித்திரை செய்யும் அவ்விருவரின் அங்கங்களைப் பங்கப்படுத்தி மாய்த்துவிடுங்கள்; திருடர்களோடு அவர்கள் எதிர்த்து நிற்கும்போது. குற்றுண்டவர்களைப்போல் அவ்வறையின் கதவண்டையி லவர்களைக்கிடத்திவிட்டு, நான் கொடுக்கிற திறவுகோலால் கதவைத் திறந்துகொண்டு வடதிசையாய் ஓடிவிடுவேன். நீங்கள் இவ்வாறு வெளிப்பட்ட சற்று நேரத்திற்கெல்லாம், கள்ளர்! கள்ளர்! என்றலறிக்கொண்டு மெள்ள மெள்ள தென்திசையை நோக்கிச்செல்லுகிறே னென்றான்; இதைக்கேட்ட இபுறாகீமும், பார்ஸியும், ஐயா அலீபிரபுவே, நீங்கள் சொன்ன யோசனை நூற்றிலொன்று, நாங்கள் ஏற்றுக்கொண்டோம். உம்மாலன்றோ நாங்களிடேற வேண்டுமென்று, அந்த அலீயைப் புகழ்ந்து கொண்டாடி நாங்கள் அப்படியே செய்கிறோமென்று அவன் யோசனைக் கியைந்துபோய்விட்டார்கள். 

கட்டிலின் கீழிருந்த மரியமாகிய அரிவையின் செவிகளில் இக்கொடிய பாதகர்களின் சம்பாஷணை. இடியைப்போல் விழவும், உள் நடுங்கி, ஐயோ, இப்பாவிகள், நம் சகோதர னாகிய அவனைக் கொல்லத் துணிந்தனர்களே! இஃதென்ன கொடுமை; ஒப்பற்ற அச்சிறுவன் இப்பாதகர்களுக்கு யாதொரு தீங்குஞ்செய்யவில்லையே ‘அகதிக்கு அல்லாவே துணை’ என்ற பழமொழிப்படி தயாபரனாகிலும் என் சகோதரனுக்குத் து ணைச் செய்யானாவென பவவாறாக வியாகூலித்து, இதற் சென்ன செய்யலாமென்று மெய்விதிர்ப்புற்றிருந்தனள். அவர்கள் போனபின்பு அவள் வெளியேவந்து அன்றிரா முழுதும் நித்திரையின்றிப் புண்பட்ட நெஞ்சினளாய் மனக் கலக்க முற்றிருந்தாள்; மறுநாள் விடிந்தவுடன், தன் சகோதர னாகிய அவனைக் கண்டு பேசவேண்டுமென்று அன்று பகலெல்லாம் சமையம் பார்த்திருந்தும் இமைப்பொழுதுங் கிட்டவில்லை ஐயோ சமையம் வாய்க்கவில்லையேயென்று அமைதியற்றவளாய்ப் புலம்பித் தவித்துக்கொண்டிருக்கை யில், அன்று மாலைப்போதில் பிறவிக் குருடனுக்குக் கண் திறந்ததுபோல், ஒரு நல்ல சமையம் வாய்த்தது. உடனே யினித் தாமதித்தால் மோசம் நேரிடும் என்று நினைத்து அஸனிருக்கும் அறைக்குள் நுழைந்து அவனைக் கட்டித் தழுவி, கண்ணீராறாகப் பெருகி ஓட மிகுந்த துயரத்தால் வளாய் பேசக் கூடாதவளாய்க் கதறியழுதாள். இவளிப்படி யழுக அஸன் அவளை நோக்கி, என் பிரியமுள்ள சகோ தரியா யாகிய மரியமே! நீ யேன் இப்படித் துக்கிக்கின்றாய், உனக்கு யாது குறை நேரிட்டது. என் அன்னையே! உன்னை யாராகிலுஞ் சின்னமாய் ஏதாகிலும் சொன்னார்களா? அவர்களின்னாரென எனக்குத் தெரிவி; நான் அவர்களுக்குத் தக்க தண்டனை யிக்கணமே செய்விக்கிறேன்; என் அன்பான அக்கையே துக் கப்படாதேயென்று பலவாறாக அவளைத் தேற்றிக் கேட்டான். அதற்கு அவள் ஐயோ என்னருமையான சகோதரனே எனக்கு யாரும் ஒரு தீங்குஞ் செய்ததில்லை; உனக்கு நேரிட் டிருக்கிற அபாயத்தைக் குறித்தல்லவோ நான் ஆறாத் துய ருற்றேன்; ஆகையால் நீயிவ்வூரை விட்டோடி யுயிர் பிழைத் துப் போவென்றாள்; அஸன் இதைச் செவியுற்ற மாத்திரத்தில் ஆ! ஆ!! இதுவென்ன புதுமையாயிருக்கிறது, நமக்கு ஏதோ ஆபத்து நேரிட்டிருக்கிறதாமே நல்லது இதை விளங்க விசா ரிப்போமென்று தனக்குள்ளே ஆலோசித்துக்கொண்டு அம்மா, மரியமென்னும் மங்கையே என்னாசைத் தங்கையே எனக்கு நேரிட்ட தீங்கு யாது, நான் ஊரைவிட்டு ஓடிப் போவானேன்; அதை விளங்கச் சொல்லென்று மீண்டும் கேட் டான். அவன் கேட்ட மாத்திரத்தில், நடந்த காரியத்தை யெல்லாம் சவிஸ்தாரமாய் அவனறியச் சொல்லிவிட்டு ஐயோ என் அன்பான சகோதரனே, அருமைத்துரை மகனே நாங் கள் பட்ட துயர்தீர்த்த பண்புள்ளவென் தம்பியே, வாடிச் சுருண்ட என் முகம் மலரவைத்த ஆதவனே. நாங்கள் சலித்து மனம் வருந்துகையில் தாங்கியவென் கண்மணியே, உன்னைவிட்டுப் பிரிய மனம் ஒவ்வவில்லையே, நீ இல்லாத விடம் எங்களுக்கு நிலவில்லா இரவும் சூரியனில்லாப் பகலும் போலாயிருக்குமே இதுவும் அல்லாகுத்தஆலாவுக்குச் சம்மதி தானோவென்று பலவாறாகப் புலம்பி, அவன் மார்பிற் தன் தலை யைச் சாய்த்துக் கண்ணீர் பெருகக் கதறியழுதாள், அவனும் துக்கசாகரத்தி லாழ்ந்தினவனாய்ப் பலவாறாக புலம்பியழு தான். இவ்வாறு நெடுநேரம் ஒருவருக்கொருவர் பிரிவாற்றுமையால் துக்கித்தபின்பு அலீ வந்து தங்களைக் கண்டு கொள் வானென்றஞ்சி, உடலை விட்டுயிர் நீங்கியது போற் பிரிந்து போனார்கள். பின்பு அஸன், தன்னிடமிருந்த பன்னிரண்டு பவுனையும் தனக்கு வழிநடைச் செலவுக்காமென்றெடுத்துக் கொண்டு புறப்பட எத்தனிக்கையில் தன் தந்தையாகிய ஜகு பரின் ஞாபகம் வந்தது. உடனே அவன் ஓகோ நமது தந்தை இறந்துவிட்டாரே, நாமும் தேசாந்திரம் புறப்பட்டுவிட்டோமே ஆகையால் அவருடைய ஞாபகம் நமக்கிரும்படி அவருடைய கையாலெழுதப்பட்ட சில நிருபங்களையாகிலும் எடுத்துச் கொண்டு போவோமென்று தனக்குள்ளே யாலோசித்து, தன் வீட்டிலிருந்த ஒரு மேசையைத் திறந்துபார்த்தான்.’ அதிற் சில காகிதங்களை ஒரு கட்டாகக் கட்டி வைத்திருக்கக் கண் டான். அந்தக் கட்டை அவிழ்த்துப் பார்க்கையில் அக் கடி தங்கள் தன் தந்தையாகிய ஜகுபருக்கு மிசுறு தேசத்திலிருந்து ஒப்பமிடாமல் எழுதப்பட்டவைகளென்றறிந்தான். அக்காகி தங்களிலொன்றையவனெடுத்து வாசித்தபொழுது, திடுக்கிட்டு, அல்லாகூ, இதென்ன புதுமையாயிருக்கிறது, ஜகுப ரும் ஆயீஷாவும் என்னைப்பெற்ற தாய் தந்தையர்களென்றே நினைத்திருந்தேன் இக்காகிதங்களைப் பார்க்கும்பொழுதோ அவர்கள் என்னை வளர்த்தவர்களேயல்லாமல் பெற்றோர் களல்லவென் பது உள்ளங்கை நெல்லிக்கனி போற்றெளிவாய் விளங்குகின்றதே. என்னைப் பெற்றோர்கள் ஏனிப்படி என் னைக் கைவிட்டு எட்டி விட்டார்கள் கடல் புடைசூழிவ்வுலகில் எனக்கு உற்றார் பெற்றார் உறவின் முறை யாரொருவரு மில்லையோவென்றேங்கிக் கண்கலங்கிக் கண்ணீர் ததும்ப சற்று துக்கித்து நித்திரை செய்கிற நேரம் சமீபித்ததால் தானும் வேலைக்காரனும் கதவைப் பூட்டிக்கெ ண்டு படுத்துக் கொண்டார்கள், சற்றுநேரம் சென்றபின்பு, அஸன் தன் படுக் கையினின்றெழுந்து தன்னிடமிருந்த பணத்தையும், மேற் சொல்லிய காகிதங்களையும் எடுத்துக்கொண்டு தன் அயலில் படுத்திருந்த வேலைக்காரன் மெய்மறந்து நித்திரை செய்யும் சமயம் பார்த்துக் கதவை மெல்லத்திறந்து வெளியே போய் விட்டான். அவன் அப்படித் தன் உயிர் தப்பும்படி போகும் பொழுது தனக்குண்மை நண்பனாகிய காசீமென்பவன் மீன் பிடித்துக்கொண்டு வருகிறதைக் கண்டு என் உயிர்த் துணை வனே நான் என் உயிர் தப்பிப் பிழைக்க ஓடுகிறேன்; என் சங்கதிகளையெய்லாம் உன்னிடத்திற் சொல்ல இப்பொழுது நேரமில்லை; உம்முடைய ஆடையைக் களைந்து எனக்குத் தாரும்; என்னுடைய உடுப்பை உமக்குத் தருகிறேனென்று சொல்ல. அதற்கு அவன் சம்மதித்துத் தன்னுடைய ஆடை யையவிழ்த்துக் கொடுக்கத் தடையில்லாமல் இருவரும் உடை களை மாற்றிக்கொண்டு பிரிந்துபோய்விட்டார்கள். 

அது அப்படியிருக்க அன்று நடுராத்திரியில், அந்த இபுறாகீம், பார்சி, ஆகிய இரண்டு கள்வர்களும் வீட்டுமதிலைத் துளைத்து உள்ளே நுழைந்து அஸனுடைய அறைக்குட் சென்று அங்கு பணிவிடைக்காரர்களில் ஒருவன் நித்திரை செய்கிறதைக்கண்டு, தங்கள் கையிலிருந்த கத்தியால் அவன் மார்பிலும் தேகத்தின் பலவிடங்களிலும் குத்திக் கொன்று, கத்தியை கையில்பிடித்து ஓங்கிகொண்டே அஸன் நித்திரை செய்த கட்டிலுக்குச் சமீபமாகச் சென்றார்கள், ஆனால் அஸன் போகும்போது அக்கட்டிலில் தலையணை களைத் தான்படுத்து இருக்கிறபாவனையாகக் கிடத்தி, ஓர் வஸ்திரத்தினால் மூடிவிட்டுப்போயிருத்தான். இவர்கள் அவன்தான். நித்திரைசெய்கிறானென்று நினைத்து யானை யின்மேல் தாவிய சிங்கத்தைப்போல் தாவிப்பிடிக்கத் தலை யணைகள் அவர்கள் கையில் அகப்பட்டன. உடனே வஞ்சக நெஞ்சையுடைய அந்தச் சண்டாளர்கள் ஓகோ! மோசம் கோனோமே, அந்தப் பையன் நம்மினும் மகா சமர்த்தனாயிருக் கிறானே நமது சூதையறிந்து நம்மை ஏமாற்றி, உயிர் தப்பிப் பிழைத்து ஓடிவிட்டானே இது வெளிப்படின் நமக்கென்ன கதி நேருமோவென்று திடுக்கிட்டு நடுங்கி யாதொன்றுந் தெரியா மல்!சரபத்தால் துரத்துண்ட சிங்கத்தைப் போலவும், சிங்கத் தால் துரத்துண்ட யானையைப் போலவும், யானையாற் றுரத் துண்டபுலியைப்போலவும், புலியால் துரத்துண்ட மானைப்போ லவும் அச்சத்தால்துரத்துண்டு, வடதிசையைநோக்கி ஓடினார். கள் அவர்கள் இவ்வாறு வடதிசையை நோக்கி ஓடி சற்றுநேரம் சென்றபின்பு அலீ வீட்டுக்கு வெளியே ஓடிவந்து கள்ளர் கள்ளரென்று, பெருங் கூச்சலிட்டான்; அவ்வூரிலுள்ள ஜனங் களும் துரைத்தனக்காவற் சேவகர்களும் நான்கு குதிரையிலுமிருந்து வந்து மேற்படி கள்ளர்கள் எங்கே யென்று மிகுந்த ஆவலோடு கேட்க அலீ ஐயா இரண்டு கள்ளர்கள் என் வீட்டுக்குள்ளிருந்து வெளியில் ஒடக்கண்டேன், அவர்களில் ஓருவனை மாத்திரம் நான் அறிந்துகொண்டேன்; அயல் நீசனான காசீம் பயலெனத் தெரிந்துகொண்டேனென்க உடனே போலீஸ் சேவர்கர்கள் இவன் சொல்லுகிற வார்த்தையை நம்பி, ஒன்றுமறியாத காசிமின் வீட்டுற்குள் சென்றார்கள். அப்பொழுது காசீம் தன் வீட்டுக்குவந்து குளித்துவிட்டு நித்திரை செய்வதற்கு எத்தனித்துக் கொண்டிருந்தானாதலால், போலீஸ் சேவகர்கள் அவன் நித்திரைசெய்யாமலிருந்ததையும் அவன் அவன் குளித்து தேகம் ஈரமாய் இருந்ததையும் கண்டு அலீயினுடைய வார்த்தைகள் உண்மைதானென்று அவன் வீட்டை பரிசோதிக்கும்போது, அஸன் தரித்திருந்த உடை கள் அங்கேயிருக்கக்கண்டு ஆ ! ஆ !! அஸனைக்கொன்றவன் இவனே இதற்கு யாதொரு சந்தேகமும் இல்லையென்று தீர் மானித்தார்கள். காசீம் ஐயோ என்ன பேரிடியாயிருக்கிறதே கிணற்றைவெட்ட பூதம் புறப்பட்டதுபோல் நமக்கு இத்தீங்கு நேரிட்டதேயென்று மனங்கலங்கிப் பேசத் திடனற்றதைப் பார்த்த மற்ற ஜனங்களும் அஸனைக்கொல்லவவந்த கள்வர் களில் இவனும் ஒருவன்தான் என்பதற்கு யாதொரு சந்தேக மும் இல்லையெனறு தெளிந்தார்கள். உடனே துரைத்தனக் காவற் சேகர்கள் காசீமைக் கைத்தளையிட்டுக்கொண்டு போய்ச் சிறைச்சாலையில் அடைத்துவிட்டார்கள். 

– தொடரும்…

– அசன்பே சரித்திரம் (நாவல்), முதற் பதிப்பு: 1885, 1974 பதிப்பு – புனைவகம், கொழும்பு.

அசன்பே சரித்திரம் இலங்கையைச் சேர்ந்த சித்தி லெப்பை (லெவ்வை) மரைக்காயர் என்னும் முகம்மது காசிம் மரைக்காயர் எழுதிய நாவல். 1885-ல் இந்நாவலை எழுதி வெளியிட்டார். 1890-ல் மறுபதிப்பு வெளிவந்தது. 1974-ல் அடுத்த பதிப்பு வெளியாகியது.

சித்திலெப்பை மரைக்காயர் (முகம்மது காசிம் சித்திலெப்பை மரைக்காயர்) (சித்தி லெவ்வை) (ஜூன் 11, 1838 - பிப்ரவரி 5, 1898) ஈழத்து தமிழ் எழுத்தாளர், இதழாசிரியர், கல்வியியலாளர், சமூக செயல்பாட்டாளர். ஈழத்தின் முதல் நாவலான 'அசன்பே சரித்திரம்' எழுதியவர். முஸ்லீம் சமூகத்தின் முன்னேற்றத்திற்கான பல முன்னெடுப்புகள் செய்தவர். சித்திலெப்பை மரைக்காயரின் நினைவாக ஜூன் 11, 1977-ல் மத்திய அரசு ஒரு ரூபாய் அஞ்சல் தலை வெளியிட்டது சித்திலெப்பை மரைக்காயர் இலங்கையின்…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *