அசன்பே சரித்திரம்

0
கதையாசிரியர்:
கதை வகை: தொடர்கதை
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: September 18, 2024
பார்வையிட்டோர்: 1,089 
 
 

(1885ல் வெளியான நாவல், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

இலங்கையின் முதல் தமிழ் நாவல்.

இந்நாவல் தமிழில் எழுதப்பட்ட முதல் வரலாற்று கற்பனை நாவல். தமிழில் எழுதப்பட்ட இரண்டாவது நாவல் என்றும் இதை கருதலாம் என ஆய்வாளர் சிலர் சொல்வதுண்டு. இந்நாவல் அரேபியக்கதை ஒன்றை அடிப்படையாகக் கொண்டது. இது நாவல் என்னும் தலைப்புடன் வெளிவராமல் மதநூலாக வெளிவந்தமையால் நாவலாக ஆய்வாளர்களால் கருத்தில் கொள்ளப்படவில்லை

அத்தியாயம்-3 | அத்தியாயம்-4 | அத்தியாயம்-5

இது இப்படியிருக்க, பாளின நடனசாலையை விட்டு அஸன் புறப்பட்ட நேரத்தில் நண்பர்களிடம் சென்று தனக்கு அசௌக்கியமாயிருக்கிறதென்று அவர்களிடத்தில் விடை பெற்றுக்கொண்டு தான் வீட்டுக்குப் போய் அஸனுடைய எண்ணமாகவே இருந்தாள். அஸனை அவள் நினைக்கும் போதெல்லாம் சந்தோஷமென்னும் வெள்ளம் அவள் உள்ளத் தில் பொங்கிப் பூரித்தெழும்ப அவள் சரீரமெல்லாம் புளகாங் கிதமாகி அவரை எப்பொழுது காண்போம் என்ற ஆவல் மேலிட அவர் வரவை எதிர்பார்த்த வண்ணமா யிருந்தாள். மறுநாட் சாயங்கால வேளையில் அஸன் கிரமமாக வருகிற நேரத்தில் வருவாரென்று எதிர்பார்ததுக் கொண்டிருந்தும். அவர் வராமற் போனபடியால் விசாரம் மேலிட அவளுக்குண் டாயிருந்த சந்தோஷம் நீங்கிக் கவலைகொண்ட மனதின ளாய்க் கலக்கமுற்றிருந்தாள். ஒவ்வொரு நாளும் இப்படியே அவர் வருகிற சமயமெல்லாம் எதிர்பார்த்திருந்தும் அவர் வரா மற்போனதினால், நாட் செல்லச்செல்லத் துக்கசாகரத்திலாழ்ந் தினவளாய், ஊணுக்கமின்றித் தேக மெலிவுற்றனள். தகப் பன் இச்சூதையறியாதவனாகையால், மகள் வாடியிருப்பதைப் பார்த்து என் அருமை மகளே! நீ யிந்தக் கோலமாயிருப்ப தென்ன? என்று பலமுறை கேட்டும் அதற்கு அவள் உண்மை யைச் சொல்லாமல், ஐயா! எனக்குத் தேகம் அசௌக்கிய மாகவிருக்கிறதென்று சொல்லிவிட்டாள். இப்படி எட்டு நாள் சென்றபின், அஸன், நாம் இவ்விதமா யிவவூரிலிருப்பது சரி யல்ல, பாளினா உயர்குலத்திற் பிறந்த பெண். அவளோ மிகவும் பாக்கியவதி. நஸ்ரானி மார்க்கத்தையனுசரித்தவள்; நாமோ தாய் தகப்பன் இன்னாரென்று அறியாத அநாதி, நாம் ஓர் ஆங்கிலேயே துரையினால் ஆதரிக்கப்பட்டு வருகின்றோம்; மதவிஷயத்திலோ முகம்மது சல்லல்லாகு அலைகிவசல்லம் அவர்களுடைய இரட்சிப்பைக் கா தலித்திருக்கிற ஓர் முஸ்லீம் இப்படி இருப்பதால் நாம் அவளை மணம்புரிய ஆசை கொள் வது எவ்வாறு இசையும்? ஆகையால் நாம் இவ்வூரிலிருக்க லாகாது; இருந்தால் அவளைச் சந்திக்கும்படி நேரிடும்; சந்தித் தால் நம் மனம் தாளாது அனலிட்ட மெழுகாய் உருகிவிடும்; ஒரு வேளை ஏதாகிலும் தவறுகளுண்டாகவும் கூடும், ஆத லால், அவளுக்காக நாம் செய்யவேண்டிய கடமை யென்னெ னில், நமது மரண பரியந்தம் நாம் அவளை மறக்கக் கூடாமை யாயிருந்தாலும் அவள் நம்மை மறந்து தனக்குத் தகுதியான ஓர் கனவாளைத் தெரிந்து விவாகஞ் செய்துகொண்டு செல்வ மாய் வாழ்ந்திருப்பதற்காக நாம் இவ்வூரை விட்டு நீங்கி விடு வதே நன்றென்று தனக்குள் ளே’ தீர்மானஞ் செய்துகொண்டு‘ பாளினாவைக் கடைசியாய் ஒருமுறை பார்ப்போமென்று அவ ளிருககிற மாளினகக்குச் சென்றார். 

அங்கே யிவர்போய்ச் சேர்ந்தபின் அவள் இவரைக் கண் டவுடனே மிகவும் சந்தோஷங்கொண்டு அவருக்கு எதிரே ஓடிவந்து கைலாகு கொடுத்து, என்னருமைச் சிநேகிதரே நீர் ஏன் இவ்வளவு நாளாய் வரவில்லையென்று கேட்டாள் அதற்கு அவர் மறுமொழியாக என் அன்புள்ள பெண்கள் நாயகமே; நான் உன்னோடு சிநேகமான நாள் முதல் அந்தப் பாழிரவு வரையிலும் எனது சதோதரி யென்று நினைத்திருந் தேன் அன்றிரவு ஓர் வாலி ன் உன்னைத் தன் மார்போட ணைத்துக்கொண்டு ஆடுவதைக கண்ணுற்ற பொழுது என் முன்னே இருந்த ஓர் திரை நீங்கி, எனனிருதய முழுவதும் உனக்கு வசப்பட்டுபபோய் விட்டது. அதை யறிந்த நான் அவ்விடம் விட்டுப்போய் உன்னை எவ்விதததி லாயினும், மறந்து விடலாமென்று நினைத்தும், உன்னுருவம் என்னுள் ளக்திற் பதிந்து போனபடியால் என்னாற் கூடாமற் போயிற்று நான் எங்கெங்கே பார்த்தாலும் உன்னுருவமே தோன்றுகின் றது. நீயோ மேற்குலத்தவள் நான் யாருமற்ற அநாதி, ஆகையால் நீ யென்னையு மறந்து உனக்குத் தகுதியான கன வானை விவாகஞ் செய்துகொண்டு சுகமாய் வாழ்ந்திருப்ப தற்கு நான் இவ்வூரைவிட்டுப் போவதே நலம் என்று தீர்மா னித்திருக்கிறேனென்றார். இதைச் செவியுற்ற பாளினா மறு மொழி சொல்ல நாவெழாதவளாய் நின்று சற்று தேம்பித் தேம்பி யழுது பின்பு, என் பிரியமுள்ள அஸனே உன்னை மறந்திருக்க என்மனம் சகிக்குமா? என்று சொல்லி மீண்டும் அழுதாள். இவ்விதம் அவர்களிருவரும். ஒருவருக்கொருவர் பாராட்டுகிற அன்பையும் ஒருவரை யொருவர் விட்டுப் பிரிவ தால் அவர்களுக் குண்டாகும் வியாகூலத்தையும் பற்றி சொல்லிச் சொல்லி யழுததின் பின் பாளினா அஸனை நோக்கி, என் புருஷ இரத்தினமே. நான் என்னுடைய மரண பரியந் தம் உமது ரூபத்தை என்னிருதயத்திற் குடியிருத்திக் கொள் வேன் ஒவ்வொரு நாளும் எனது கண்ணீரை அதற்குப் பலி யாக வைப்பேன் ஆனால் உமது உருவத்தை என் மனதிற் குடியிருத்திக் கொள்ள என்னிருதயம் பரிசுத்தம யிருக்க வேண்டும். அதற்குத் தாங்கள் அனுசரித்து வருகிற பரி சுத்த மார்க்கத்தைக் கொண்டு தூய்மை யாக்குதல் ஆவசியகம், 

ஆகையால், நானும் முஸ்லீமா ஆய்விடுகிறேன் நாமிருவரும் ஒரே நாயனை வழிபடுகிறவர்களாவோம், நாம் ஒரு வேளை அதிஷ்ட ஈனத்தால் இம்மையிற் சுக போகங்களை யனுபவிக்கா விடினும். மறுமையிலின்புற்று ஒரு மித்து வாழ்ந்து நல்லபதவி யடையும்படி நமது அல்லாகுத்த ஆலாவைத் தினந்தோறும் காலமுறை வழுவாது தொழுது வழிபட்டு வருவோமென்று சொன்னபோது அஸன் மிகவும் சந்தோஷமடைந்து அவளுக்கு “லா இலாஹ இல்லல்லாஹு முகம்மதுர் ரசூலுல்லாஹி” என்ற கலிமாவை உபதேசிக்க அவளும் அதை மிகவும் உறுதியாய்க் கடைப்பிடித்து நாள் தோறும் இடைவிடாது ஒதி யீமான்கொண்டு முஸ்லிமா வானாள் அது முதல் அவள் அடிக்கடி அஸனிடத்தில் ஈமான். இஸ்லாம், முதலியவைகளுடைய பறுளு ஷறுத்துகளை யெல்லாம் கேட்டறிந்து அவ்விதமே நடந்துவந்தாள். 

அஸனும் பயணத்துக்குரிய ஆயத்தங்களை யெல்லாஞ் செய்யத்தொடங்கினர், கவர்னர் ஜனரல் அவர்களிடம் போய்த்தன் தாய் தகப்பனைத் தேடிப்பிடிக்க மிசுறுக்குப் போவதற்கு, தான் உத்தேசித்திருப்பதை யறிவித்த போது அவரிப்படித் திடீரென்று புறப்படத் தீர்மானித்ததற்காக ஆச்சரியமடைந்து, அஸனை இன்னுஞ் சில காலங் கல்கத்தா விலிருந்து விட்டுப் போகும்படி சொல்ல, அஸன் மிகவுங் கெஞ்சி ஐயா ! தயவுசெய்து அன்புடன் விடை தரவேண்டு மென்று கேட்க, அதற்கு சிரேஷ்ட தேசாதிபதி நல்லது உமக்கு விடை தருகிறேன், நீர் ஒவ்வொரு மாதமும் நமக்குக் கடிதமெழுதி அனுப்பவேண்டு மென்றும், நாமும் இங்கிலாந் துக்குச் சில மாதத்திற்குப் பின் போவதற்கு நியமித்திருப்ப தால் கடிதங்களை நேரே அங்கு அனுப்பிவர வேண்டுமென் றுஞ் சொன்னார். பின்பு அஸன், பாளீ னுடைய தகப்பனா ராகிய லார்ட் டெலிங்டனைப் போய்ச் சந்தித்துத் தான் பய ணம் போவதற்குத் தீர்மானித் திருப்பதைச் சொன்னபோது, அவரும் இப்படித் திடீரெனப் பயணம் புறப்படக் காரண மெனை வென்று விளங்கக் கேட்டும் அஸன் ண்மையை வெளிப்படுத்த வில்லை. அவர், அஸனுக்குப் பயணத்துக் காகக் கொண்டுபோக வேண்டிய முதலும் மிசுறு பாங்கியில் கேட்ட தொகை கொடுக்கும்படிக்கு உண்டியுங் கொடுத்து அந்த உண்டியைக் கொண்டு வேண்டியதருணங்களில் எந்தப் பாங்கியிற்போய்ப் பணங்கேட்டாலும் பணங்கிடைக்கு மென்று அநேக நற்புத்திகளையும், அன்பான் வார்த்தைகளை யுஞ் சொல்லி, அஸனே! உம்மை என்னுடைய ஓர் பிள்ளை யைப்போலப் பட்சம் வைத்திருக்கிறேன், என் மகளும் உம்மை ஒரு சகோதரன்போல நேசம் வைத்திருக்கிறாள். நானும், என் மகளும் இன்னமிரண்டு மூன்று வருடஞ் சென்றபின், மிசுறு, ஷாம், ஜெறுஸலேம் (பய்துல் முகத்தஸ்) முதலிய ஊர்களைல்லாவற்றிலும் பிரயாணஞ் செய்து விட்டு லண்டனுக்குப் போக நினைத்திருக்கிறோம் பாளினாவுடைய கல்யாணம் நடக்கும்போது நாங்களெந்த வூரிலிருந்தாலும் கடித மனுப்புவோம்; நீர் தவறாது வரவேண்டுமென்று சொன்னார். 

அஸன் பயணத்திற்குரிய சகல முஸ்திப்புகளுஞ் செய்த பின் மறுநாட் காலமே பயணப்பட்டு, பாளீனைச் சந்தித்து விடைபெறும்போது அவர்களொருவருக்கொருவர் கட்டிய ணைத்து முத்தமிட்டு அழுது பட்ட துயரத்தை இவ்விதமென்று எழுதமுடியாது ஓர் தேகத்தை இரண்டாய்ப் பிரிப்பதைப் போல் வேதனைப்பட்டவர்களாய்ப் பிரிந்தார்கள். மறுநாட் காலமே அஸன் இஷ்டீமரிலேறிப் பயணம் புறப்பட்டு விட்டார். 

அவர் மிசுறுக்கு வந்து சேர்ந்து, அதற் கிராசதானி யாகிய காயீர் என்னும் பட டணத்தில் இஸ்மாயில் என்பவர் வைத்திருக்கிற ஹோட்டலில் வந்து தங்கியிருந்தார். அவர் வந்து, சிலகத்துக்குள் பல சாள திரங்களிற் சிறந்த உல மாககள (பண்டிதர்கள்) கூடிய அஸ்ஹார் என்னும் கல்விச் சாலைக்குப்போய் அவர்களுடனே சிநேகம் புரிந்து அவர்களுடைய அறிவினாழத்தையும் புத்தியின் கூர்மையையும் பார்த்துத் தரமும் அவர்களிடஞ் சிலகாலம் படிக்கவேண்டு மென்று ஆசைகொண்டு படித்து வந்தார். அறபி பாஷையி லுள்ள பற்பல சாஸ்திரங்களையும் ஒவ்வொன்றாய் மிகவுமாவ லுடனே படித்துத் தேர்ச்சியடைந்தார். 

இப்படியந்தப் பாடசாலையிற் படித்துவரும்போது படிக்கு நேரந் தவிர மற்ற வேளைகளில் உலகத்திலுள்ளவை களெல் லாவற்றிலும் தமக்கு அரும்பொருளாயிருந்த அந்தப்பெண்ணை நினைத்துப் பெருமூச்சு விடாத வேளை மிகவுமரிது ஆகிலுந் தான் செய்து கொண்ட தீர்மானப்படியே அவளுக்கு யாதொரு கடிதமும் எழுதவில்லை; அவளிட மிருந்தொரு கடி தமும் வரவில்லை. இவ்வுலகத்திற் பெண்களின் அன்பும் இன்பமும் தமக்கு வேண்டிய தில்லையென்று தீர்மானித்துக் கொண்டார். இன்னும் தமக்குச் சாவகாசங் கிடைக்கும் போதெல்லாம் நமது பிதாமாதா யாவரென்று கண்டுபிடிக்கும் நோக்கமாகத் தெருக்கள் தோறும் திரிவார். சில தருணங் களில் இரவிலும் மறுவேடம் பூண்டு ஏழையனாதிகளிருக்கிற தெருக்களுக்கும், வீடுகளுக்குஞ் சென்று தருமங்கள் செய்யத் தக்கவர்களுக்குத் தருமமும், உபகாரஞ் செய்யத் தக்கவர் களுக் குபகாரமும் செய்துவருவார். ஆகிலுந் தன்னுடைய தாய் தந்தையைப்பற்றி யறிவதற்குரிய யாதொருவழியுந் தெரியவில்லை. இப்படியே மூன்று வருஷம் சென்றுவிட்டன. இதற்கிடையில் கவர்னர்ஜெனரலும் லண்டன் பட்டணத் திற்குப் போய்விட்டார், அவருக்குக் கொடுத்த வாக்கின் படியே மாதந்தோறுங் கடிதங்கள் எழுதிவந்தார் பதில் கடிதங்களும் வந்து கொண்டிருந்தன. ஒரு நாள் மாலை நேரத்தில் பட்டணத்தில் சற்று தூரமான ஓர் பாதையில் நடந்து போகும்போது. மிட்டாய்களும் கனிவர்க்கங்களும் வைத்திருக்கிற ஓர் சிறுகடையருகாகச் செல்லும்போது திடீ ரென அந்தக் கடைப்பக்கம் திரும்பிப் பார்க்கையில் ஓர் மனிதன் தனக்கருகே நிற்கிற ஒரு கோஜாவுக்குத் தன்விரலை நீட்டி அஸனைக்காட்டி ஏதோ சொல்லிக் கொண்டிருந்தான். அஸன் அவனை யுற்றுப்பார்த்தவுடனே அந்தப் பாதகனாகிய அலீயுடைய முகச்சாயலாக விருப்பதைக்கண்டு திடுக்கிட்டு விட்டார். அக்கணமே அந்த மனிதன் வீட்டுக்குள் நுழைந்து கொண்டான். அஸன் அவனை நன்றாய்ப்பார்த்தறிய வேண் டுமென்று சற்று நின்றும் அவன் வெளியே வராததாலும் அந்த கோஜா அஸனை யுற்றுப்பார்த்த படியாலும் அவன் அலீதானென்று தன் மனதில் திடப்பட்டது, பின்பு அஸன் அலீயைக்கண்ட நேரமுதல் மனக்கலக்கங் கொண்டவ ராய்த் தானிருக்கிற ஹோட்டலுக்குத் திரும்பி வரும்போது ஒரு சந்தில் நின்று திரும்பிப்பார்த்தார். அந்தக்கடையில் கண்ட கோஜா பின்றொடர்ந்தவனாக வந்து, இவர் முகத்தைத் திருப்பினவுடனே சட்டெனத்தானும் நின்று மறுபுறந்திரும்பி ஒருவீட்டைப் பார்த்துக்கொண்டு நிற்பவனைப்போல நின் றான். அஸன் மறுபடியும் நடந்து தானிருக்கிற ஹோட்ட லுக்குப்போய் உட்செல்லும்போதுந் திரும்பிப்பார்த்தார். அந்த கோஜா சற்று தூரத்திலிருந்து இந்த ஹோட்டலைப் பார்த்தபடியே நின்றான். அஸனுக்கு மனதில் அச்சமுண் டாகி விட்டது. அலீ ஏதோ இன்னுஞ் சூதுசெய்ய நினைத்தி ருக்கிறான் போலத் தோற்றுகின்றது என்று சிந்தித்துக் கொண்டிருந்தார். 

அலீ சூரத்தை விட்டு வந்த பின் பல ஊர்களிலுமலைந்து திரிந்து காயீர் நகரூக்கு வந்து சேர்ந்தான்; அங்கு சிலகால மிருந்து திரிந்து சொற்ப முதல் சேர்த்து வியாபாரஞ் செய்து வந்தான்; இந்த கோஜாவானவன் யூசுபுபாக்ஷாவின் பத்தினி யுடைய மிகவும் பட்சமுள்ள பணிவிடைக்காரன். இவன் அலீயுடனே சிநேகிதமாயிருந்தான். அஸன் அலீயுடைய வீட்டுக்கருகாகப் போனபோது முன்னர் அந்த கோஜா அலீ யைச் சந்திக்கவந்து சம்பாஷணை செய்துகொண்டிருக்கை யில் அஸனை அலீ கண்டவுடனே திடுக்கிட்டான் இதை அந்த கோஜா கண்டு ஏனிப்படி திடுக்கிட்டீரென்று கேட்க, அலீ அஸ்ஸனை விரலாற் சுட்டிக்காட்டி அந்த வாலிபனை நான் சூரத்திலிருக்கும் போ தறிவேன்; அவனை ஜகுபர் என்கிற ஒரு மனிதனுக்கு யாரோ ஒருவர் அவன் சிறு குழந்தையாயிருக் கையில் கொண்டுவந்து கொடுக்கப்பட்டு ஜகுபரால் வளர்க்கப்பட்டான். அவன் தாய் தந்தை யாவரென்று ஒருவருக் குந் தெரியாது; எனச் சொல்லுகையில் அஸன் அந்தக் கடை யைத் திரும்பி பார்ததார், அப்போது அலீ தன் வீட்டுக்குள் நுழைந்துகொண்டான், 

அந்த கோஜா தக்ஷணமே, ஓகோ என்னுடைய நாச்சி யாருடைய பிள்ளை சிறு பிராயத்திற் களவு போயிற்றே அந் தப் பிள்ளையோவென்று சந்தேகித்து அஸனை யுற்றுப்பார்த் தான், யூசுபாக்ஷா வளர்க்கிற மகனைப் போலவே யிருந்தது; முகவடிவிலோ, உயரத்திலோ, தேகக் கட்டுப் பாட்டிலோ இருவரும் ஒத்திருந்தமையால் இவர்கள் இரட்டைப்பிள்ளை களென்று சொல்லத் தக்கவர்களா யிருந்தார்கள். இந்த ஆச்சரியமான சங்கதியைத் தனது நாச்சியாரிடஞ் சொல் லவேண்டுமென்று தீர்மானஞ் செய்துகொண்டு அஸனிருக் கிற விடமெங்கே யென்றறிந்து கொள்வதற்காக முன் சொல்லி யபடி பின்றொடர்ந்து போனான். அந்த ஹோட்டற்காரனிடம் அஸனுடைய சங்கதிகள் யாவற்றையுங் கேட்டுக்கொண்டு யூசுபாக்ஷா அவர்களுடைய பத்தினியாகிய குல்னார்பனூ அவர்களிடம் போய்ச் சகல செய்திகளையுஞ் சொன்னபோது அவள் மிகவு மதிசயப்பட்டாள்; ஆ! நானிவ்வளவு காலம் என்னுடைய மகனென்று அருமையாய் வளர்த்த பிள்ளை வேறொருவருடைய பிள்ளையாகவும், என் வயிற்றிற் சுமந்து பெற்ற என் சொந்தப் பிள்ளை யாருமற்ற அனாதியாய்த் திரிய வுஞ் சம்பவிததிருக்கிறதோ வென்று மனங்கலங்கி வெகு நேரம் யோசித்து பின்காணும் விதமாய் மனதிற்றீர்மானித் தாள். “நானிச்செய்தியை ஒருவரிடமுஞ் சொல்லமாட்டேன், பாக்ஷாவுக்கும் அறிவிக்கமாட்டேன்; நானிதை நன்றாய் ஆராய்ந்து தேரவேண்டும்; அந்த ஹோட்டலிலிருக்கிற பிள் ளையினுடைய பிடரியில் ஓர் மறுவிருந்தால் அப்போதுதான் என் பிள்ளையென்று எனக்கு நிச்சயம். அப்படி என் மன திற் திடமாகிவிட்டாலும், அந்தப் பிள்ளையை என் பிள்ளையென்று யாவரு மேற்றுக்கொள்ளவும், இப்போது நான் என் மக னென்று வளர்த்துவருகிற பிள்ளை அன்னியர் பிள்ளையென்று தள்ளவும் போதுமான நியாயங்களும், அத்தாட்சிகளுமிருக்க வேண்டும்; அப்படி அத்தாட்சிகளைத் தேடுமுன் அந்தப் பிள்ளை யென்னை யின்னாளென அறியவுங் கூடாது.” இவ்வி தந் திட்டஞ் செய்துகொண்டு, கோஜாவை யழைத்து நீ நூறு தங்கக் காசை எடுத்துக்கொண்டு, அந்த ஹோட்டல் காரனிடம்போய் அந்தப் பணத்தை யவனுக்குக் கொடுத்து நான் இன்றிரவு நடுச் சாமத்தில் அந்த வாலிபனிருக்கிற வறைக்குட் செல்ல நினைத்திருப்பதால் ஒருவருங் காணாமல் என்னை யங்கு கொண்டுபோய்விட உதவி செய்ய வேண்டு மென்றும், அந்த வாலிபன் நன்றா யுறங்குகிறதற்காக இராப் போஜனத்திற் கொஞ்சம் அபினைச் சேர்த்துக்கொடுக்க வேண்டுமென்றும் இவ்விஷயத்தில் அவன் செய்கிற உதவிக் காக இன்னும் அதிக நன்கொடை கொடுக்கப்படுமென்றுஞ் சொல்லியனுப்பிவைத்தாள் கோஜாவும், அந்த ஹோட்டற் காரனாகிய இஸ்மாயீலிடம் போய் தன்னிறைவி சொல்லிய வார்த்தைகளையெல்லாஞ்மொல்லி அத்தொகையையு மவனி டங் கொடுக்க, அவனும் இச் சங்கதிகளுக்கெல்லா மிணங்கிக் கொண்டான். இப்படியிருக்க, அன்றிரவு நடுச் சாமத்திற் றானே குல்னார்பனூ எழுந்து வேறொருவரு மறியாமல் தன் வீட்டைவிட்டு வெளியே வந்து ஹோட்டலுக்குப் போக, அந்த ஹோட்டல்காரன் அவர்களைச் சந்தித்து, அழைத்துக் கொண்டுபோய் அஸன் படுத்திருக்கிற அறையில்விட்டான்” அவள் அஸன் படுத்திருக்கிற கட்டிலை நெருங்கிப் பார்க்கும் போது, அவர் ஆழ்ந்த உறக்கமாக உறங்கினார் அந்த அறை யில் வைத்திருந்த தீபத்தால் அவருடைய முகத்தை அவள் உற்றுப்பார்த்தாள்; தன்னுடைய சொந்த மகனென்று மிகவு முகப்போடு வளர்த்துவருகிற இஸ்மாயில்பே என்பவருடைய முகவடிவுக்கு யாதொரு வித்தியாசந்தோன்றவில்லை. சொற்ப நேரம் வரையில் நன்றாயுற்றுப் பார்த்திருக்கும்போது அஸன் உறக்கத்தில் மறுபுறந்திரும்ப, அவர் பிடரியில் ஒர் மறுவிருப் பதை அவள் கண்டாள்; அவள் சரீரம் சிலுர்த்து, மயிர்க் கூச்சிட்டன. என்னுடைய வயிற்றில் உற்பத்தியாகி யென் இரத்தந் திரண்டு உருவாகிச் சமைந்ததும் ஒன்பது மாதம் வயிற்றில் சுமந்து நான் பெற்றதும் இப்பிள்ளையல்லவா! என்ற இந்தவுடனே இருதயம் பூரித்து மார்பு விம்மிச் சுரந்து மனமுருகிக் கண்ணீர் பீரிட்டுப்பாய்ந்தது. அஸனுடைய கையை மெல்லவெடுத்துக் கண்ணில் வைத்துக்கொண்டாள்; பின்பு தன் பிள்ளையை முத்தமிடாமலிருக்க முயற்சி செய்தும் அப்படி யிருக்கக் கூடாமற் போயிற்று; ஆகையால் உடனே ஒடிப் போய் விளக்கை யமர்த்திவிட்டு வந்து அவருடைய இரு கன்னத்தையும் முத்தமிட்டாள். இப்படி நடக்கும்போது அஸன் ஓர் சொற்பனங்காண்கிறார். எப்படியானால், அலீயா னவன், ஓர் ஈட்டியினால் தன் மார்பிற் குத்தவும் அந்தக் குத்தி னால் தனக்கு மரணஞ் சமீபித்திருக்கவும் அப்படி யிருக்கும் போது தன்னுடைய அன்பான பெண்ணாகிய பாளினா கட்டில ருகே வந்து குனிந்து தன்முகத்தைப் பார்த்து அழுது கொண் டிருக்கவும், அவளைக் கண்டவுடனே தனக்குச் சந்தோஷம் பொங்கி வேதனையெல்லாம் நீங்கிச் சவுக்கியமுண்டாகவும் அந்நேரம் பாளினாவுடைய முகம் முதிய வயதினையுடைய ஓர் அழகான பெண்ணுடைய வடிவமாய்மாறித் தன்னை நெருங்கி நெருங்கி, முகத்தோடு முகம்வைத்து முத்தமிடவுங் கண்டவு டனே திடுக்கிட்டு விழித்தார். 

அந்நேரத்தில் அந்த அறையில் வெளிச்சமிருக்கவில்லை கட்டிலுக்கருகேயிருந்து ஒருவர் விரைவாய்ப் போகிற சத்தங் காதிற்கேட்டது; இது சொற்பனமோ உண்மையோ வென்று யோசிக்கலானார். கன்னம் நனைந்திருப்பதை யறிந்தவுடனே சட்டென எழுத்து நெருப்புப் பெட்டியை யெடுத்து விளக் கேற்றிப்பார்த்தார். அறையிலொருவரையுங் காணவில்லை; வெளியேபோய்ப் பார்த்தார், ஒருவரும் வந்த அடையாளங்க ளொன்றுந் தெரியவில்லை; பின்பு சற்றுநேரம் உறங்காமல் அந்தப்பாதகனாகிய அலீ இன்னும்மென்ன தீங்குகள் செய்யப் போகிறானோ வென்று சற்றுநேரம் சிந்தித்துக்கொண்டிருந்து உறங்கிவிட்டார். 

மறுநாட் பகல் அஸனுக்குத் தபாலில் ஓர் கடிதம் வந்தது, அதைவாசிக்க அதில், என் அன்பானமகனே! உன்னுடைய தாய்தந்தை உன்னை விட்டுப் பிரிந்திருப்பது அல்லாகுத்தா லாவின் நியமனம்; உன்னுடையதாய் உன்னைத் தன்கண்ணீராற் குளிப்பாட்டி நெஞ்சோடணைத்துக்கொள்ள ஆவலா யிருக்கிறாள். ஆகிலும் உன்னைப்பெற்றோரும் நீயும் சில காலம் பொறுத்திருக்க வேண்டும். நீ சொற்பக்காலத்தில் செல்வத்தை யடைவாய்; உன்தாயுந் தககப்பனும் இந்தப் பட்டணத்திலே தானிருக்கிறார்கள் அவர்கள் கண்யமான வர்கள். ஆகிலும் நீ அவர்களைத்தேட யத்தனிக்க வேண்டி யதில்லை. அவர்களே யுன்னைச் சிலகாலத்திற்குள்ளே யழைத்துக்கொள்வார்கள். உன்னு டய செலவுக்கா ஆயி ரந்தங்கக்காசு பொறுமானபாங்கி நோட்டு-க-இதற்குள் வைத்திருக்கிறேன். என்மகனே உன்னை எங்களோடு சேர்த்துவைக்கும்படி அல்லாகுத்தாலாவிடத்தில் பிரார்த் தித்துக் கொண்டிருக்கிற உன்னுடைய, 

தாய். 

என எழுதியிருந்தது இந்தக்கடிதத்தைப் பார்த்தவு டனே அஸனுக்குண்டான ஆச்சரிய மிவ்விதமென்று சொல் லக்கூடாது. 

தன்னுடைய தாயுந் தகப்பனுந் தகுதியான வர்களென்றும் அவர்களிருவரும் அந்தப்பட்டணத்திற்றானே குடியிருக்கிறார்களென்று மறிந்து ஆனந்தமடைந்தார்; ஆகி லும் அவர்கள் தன்னைத் தங்கள் பிள்ளையென்றேற்றுக்கொள் ளாம லிருக்கிறது ஏதோதடையுண்டா யிருக்கிறதே அது என்னவென்று யோசிக்கத்தொடங்கினார்; அவர்புத்திக்கு ஒன்றுந் திடப்படவில்லை. இப்பட்டணத்திலே அவர்களிருக் கிறது நிச்சயமாயிருக்கிறதே; நான் அவர்களாரென்றறிய யத்தனிக்கிறதே யுத்தமமென்று யோசித்தும் தன்னுடைய தாயினது சொல்லைத் தட்டப்படாது எல்லாம் வல்ல நாயனின் கட்டளைப்படியே நடக்குமென்று தீர்மானித்துக் கொண்டி ருந்துவிட்டார். 

அஸனுடைய காரியமிப்படியிருக்க அந்தச்சண்டாளனா கிய அலீ அந்தகோஜாவிடந்தான் அஸனைப்பற்றிய செய்தி யைச் சொன்னபோது அவன் அத மிகவுங்கவனமாய்க் கேட்டிருந்ததையும், பின்பு அஸனைப் பின்றொடர்ந்து போன தையும் பார்த்து, ஓகோ அஸனுடைய அந்தரங்கம் வெளியாகப் போகின்றதே !? நானிவ்விஷயத்தை நன்றாய் விளங் கத் தேடவேண்டும்; அதிஷ்ட மிருந்தால் எனக்கு நயமுண்டா கத்தக்க காரியங்கள் சர்பவிக்கக் கூடுமென்று நினைத்துக் கொண்டு அஸனை சோஜா பின்றொடர அந்த கோஜாவை அளீ பின் றொடர்ந்து போனான். இப்படி கோஜா ஹோட்ட லுக்கு சமீபமாகப் போய் நின்று அஸன் வீட்டுக்குள் நுழைவ தைப் பார்த்துக் கொண்டிருப்பதையுங் கண்டான். அதன் பிறகு அலீ இனிமேல் என்ன நடக்கின்றது பார்ப்போமென்று ஹோட்டலுக்கு சமீபமாக இருக்கிற ஒரு வீட்டுத் திண்ணை யிற் பூனை பதுங்குவதுபோற் பதுங்கி யிருந்தான் சற்று நேரம் இப்படி யிருக்கும்போது அந்த கோஜா ஹோட்டலுக்குள் போய்ச் சற்று நேர மிருந்து விட்டுப் போவதைக் கண்டு இதி லேதோ ரகசியமிருக்கிறது ஆகையால் நான் சில நாள் வரை யிலு மிவ்விடத்திலிருந்து நடக்கின்ற காரியங்கள் சகலத்தை யும் ஆராயவேண்டுமென்று திட்டஞ்செய்து கொண்டான். அலீ சூரத்தில் ஜகுபருக்கு எழுதி யனுப்பிய கடிதமொன்றை அவன் வாசித்திருந்தான். அக்கடிதத்தில் சீன் என்ற அறபு எழுத்தை யொப்பமாகப் போட்டிருந்தது ஜகுபர் எழுதிய னுப்பிய கடிதங்கள் முக்கிய தபால் ஆபிஸில் வந்தபோது அதைவந்து எடுத்துக்கொண்டு போனவர்க ளாரென்றறிந்து கொண்டால் அவனுடைய இரகசியத்தை அறிந்கொள்ள வழி யுண்டாகு குமென்று நினைத்துச் சில பணங்களையுங் கையிலெ டுத்துக்கொண்டு தபால் ஆபிஸிற்குப் போய் அங்குள்ள கிளார்க்குமார்களிடம் சென்று நான் சூரத்திலுள்ளவன்; என் னுடைய பெயர் ஜகுபர்; எனக்கு சீன் என்று பெயர் போட்டு ஒருவர் கடி தங்க ளெழுதிக்கொண்டு வந்தார். நானுமவவித மாகவே மறுமொழி யெழுதி வந்தேன். சிலகாலமாக அவரு டைய கடிதமொன்றும் வரவில்லை; நான் சூரத்திலிருந்து அவ ரைத் தேடி வந்திருக்கிறேன், நான் ஏழை; என்பேரில் நீங் கள் மனமிரங்கி அந்த மனிதனைக் கண்டு கொள்வதற்காக எனக்குதவி செய்யுங்களென்று சொன்னான்; அதற்கு அவர்க ளெல்லோரும் அந்த விவரம் பிறர் ஒருவருக்குஞ் சொல்லி வெளிப்படுத்த எங்களுக்கு கட்டளை யில்லையென்று சொல்லி விட்டார்கள். பின்பு அந்த கிளார்க்கு மார்களி லொருவரிடம் கோய் இரண்டு தங்கக் காசை கையில் வைத்து நீங்கள் எவ் விதமாகிலும் இந்த உபகாரத்தைப் பரதேசியாகிய எனக்கு செய்யவேண்டுமென்று கெஞ்சி நின்றான் அப்போது அந்த கிளார்க்கு நல்லது நாளைச் சாயங்காலத்திற்கு இங்கே வா நான் உன்னோடுவந்து அந்த மனிதனிருக்கிற வீட்டைக் காட்டி விடுகிறேனென்று சொன்னான் அலீ அவன் குறித்த நேரத்துக்குப்போக அவனும் அலீயுங் கொஞ்சந் தூரம் நடந்து போய் ஒரு பெரிய வீட்டு வாசலில் ஓர் அபஷி நின் றான்; இந்த உத்தியோகள் தன் அலீக்குக் காட்டி அந்த அப ஷியை நன்றாய்ப் பார்த்துக்கொள்; அவன் அந்த வீ, டிலிருக் கிற பணிவிடைக்காரன்; அவன்தான் அந்தக் காகிதங்களை வந்தெடுத்துக் கொண்டு போனானென்று சொல்லிவிட்டுப் போனான். அலீ சற்றுநேரம் அங்கே நின்றபோது அபஷி. அந்த வீட்டிலிருந்து வெளியே வந்து தெருவில் வரும்போது அலீ அவனைச் சமீபித்து சலாஞ்சொல்லி என் சகோதரனே உங்களுக்கு ஜகுபரென்ற நாமமுடைய ஒரு மனிதனைத் தெரி யுமாவென்று கேட்டான்; அதைக் கேட்டவுடனே அந்த அபஷி திடுக்கிட்டு அலீயுடைய முகத்தைப் பார்த்து நீரா ரென்று கேட்டான் அலீ நான் ஜுகுபருடைய சகோதரன் ஜகுபர் இறந்துபோனார் அவர் மரணமடைகிற தருணத்தில் என்னை யழைத்து எனக்குக் கட்டளையிட்டதாவது:- மிசுறுக்குப் போய் எனக்கு இந்தப் பிள்ளையை யொப்புவித்த வரைக் கண்டு அவருக்கு இந்தப் பிள்ளையைப் பற்றிய காரி யங்களை யெல்லாஞ் சொல்லி அவருடைய கருத்துப்படி நடந்துகொள்ளென்று சொன்னார். அதற்காக நான் இங்கே வந்திருக்கிறேன் என்பதே. இந்த வார்த்தையைக் கேட்ட அந்த அபஷி அப்பிள்ளை யெங்கே யென்று கேட்டான்: அலீ அந்தப் பிள்ளை இப்போது வாலிபனாய் இந்தப் பட்டணத்தில் வந்திருக்கிறானென்று சொல்ல, அந்த அ ஷி முகம் பேதித் துக் கவனங் கொண்டவனைப்போல் நிற்கையில் அலீ சொல்கி றான் அஸனுக்கு நானிங்கே வந்திருக்கிறது தெரியாது அவன் என்னோடு விரோதமாயிருக்கிறான்; அவன் தன்னுடை தாயை யும் தகப்பனையுந் தேடி அறிய வந்திருக்கிறானென்று சொன் னான். அபஷி அதற்கு மறுமொழி யொன்றுஞ் சொல்லவில்லை ஆனால் அலீயுடனே வேறு சங்கதிகளைப் பேசிக்கொண்டே அவன் வீட்டுக்கு வந்தபன். அலீ சாராயத்தை வரவழைந்து அவனுக்கு மண்டை கொள்ளுமட்டுங் குடிப்பாட்டினான்; அந்த அபஷி குடித்தவுடனே இரகசிய முழுவதையும் வெளி யிட்டான்; அலீக்கும் அந்த அபஷிக்கும் நடந்த பேச்சுக்களை இப்போது வாசிப்பவர்களுக்கு அறிவிக்கமாட்டோம். பின் னால் தெரியப்படுத்துவோம்; அவர்களிருவரும் அஸன் தன் தாயையுந் தகப்பனையும் அறிந்து கொள்ளாமல் இருக்கச் சில தந்திரங்களைச் செய்ய வேண்டுமென்று யோசித்துத் தீர்மா னஞ் செய்துகொண்டார்கள், என்பதை மட்டும் இவ்விடம் சொல்வோம். 

அவர்கள் செய்த தீர்மானப்படியே அந்த அபஷி அப்பட் டணத்தி லிருக்கிற ஒரு டாக்டர் வீட்டுக்குப் போய் அவரைக் கண்டு காலில்விழுந்து கைகட்டி நின்று தான் கொண்டு போயிருந்த ஆயிரந் தங்கக்காசையுங் கொடுத்துச் சொல்லு கிறான். என் நாயகமே இந்தப்பணத்தை யென்னுடைய நாச்சியாராகிய சீமாட்டி தங்களுக்கு நன்கொடையாகக் கொடுத்துத் தங்களாலோர் உபகாரம் பெற்றுக்கொள்ள நாடுகிறார்கள் தாங்கள் அந்த வுபகாரத்தைச் செய்வீர் களே யானால் தங்களுக்கு அவர்கள் ஆயுசுபரியந்தம் நன்றியு டையவர்களா யிருப்பார்க ளென்று அந்த அபஷி சொல்ல. டாக்டர் அந்தச் சீமாட்டியுடைய பெயரென்ன? நான் செய்ய வேண்டிய வுபகாரமென்ன? தெளிவாய்ச் சொல்லென்று கேட்டார் அப்போது அவ்ஷி எஜமானே அந்தச் சீமாட்டி யின் பெயரை இத்தருணத்தில் வெளிப்படுத்த வெனக் குத்தரவில்லை. ஆகிலும் பின்னா லுங்களுக்குத் தெரிவிக்கப் படும்; இப்போது நீங்கள் செய்யவேண்டிய வுபகாரமாவது, இந்தியாதேசத்திலிருந்து அஸனென்ற பெயரையுடைய ஒரு வாலிபன் இந்தப்பட்டணத்திலுள்ள ஓர் பாஷாவினுடைய மகனென்றும் அந்த பாஷாவைத் தேடி யறிய வந்திருக்கிற தாயும் சொல்லிக் கொண்டிருக்கிறான்; அவன் வஜீகரமுள் ள முகத்தை யுடையவனா யிருப்பதினாலும் பேச்சிற் சாதுரியமு டையவனாதலாலும் அவனைப் பார்த்தவர்கள் பயித்தியக்கார னென்று சந்தேகிக்காமல் அவனுடைய சொற்களை நம்பிக் கொள்வார்கள் அதனால் இந்தவூரிலுள்ள சிலபிரபுக்களுக்குத் தொந்தரவுகள் நேரிடப்போகின்றன இதற்காகத் தாங்கள் தயவுபுரிந்து அவனைப் பயித்தியக்காரர்களை யடைத்து வைத் திருக்கும் சாலையில் அடைத்து வைக்கும்படிசெய்வீர்களே யானால் தங்களுக்குக் கீர்த்தியுண்டாகிறது மல்லாமல் அந்தப் பிரபுக்கள் தங்களுடைய நன்றியை மறவாதிருப்பார்கள்; இன்னும் அந்த வாலிபனைச் சிறையாக வைப்பதுமன்றி அவ னுக்கு யாதொருவே னையுஞ் செய்யாமற் சவுக்கியமாய் வைத்திருக்கவேண்டுமென்று சொன்னபோது அந்தடாக்டர் சிலநேரஞ்சிந்தித்துக் கொண் டிருந்துவிட்டு அவனிருக்கிற விடத்தையும் அவனுடைய அங்கவடையாளங்களையுங் கேட் டறிந்ததின் பின், நல்லது உன்னுடைய நாச்சியாருடைய இஷ்டப்படி நடத்துகிறேனென்று வாக்குக் கொடுத்தார். 

மறுநாட்காலமே அந்த டாக்டர் ஒரு வண்டியிலேறிக் கொண்டு அஸனிருக்கிற ஹோட்டலுக்குப்போய் அவரைக் கண்டு சலாஞ்சொல்லி யுட்கார்ந்து, சொல்லுகிறார்,ஓ வாலி பனே! உமக்குச் சந்தோஷஙகூறுகிறேன், நீரிந்தவூருக்கு நாடிவந்தகாரியஞ் சித்திபெறப்போகிறது, உம்முடைய தாய் தகப்பன் யாவரென்று காட்டித்தருவதற்காக நான் வந்திருக் கிறேன் ஆனால் இவ்விஷயத்தில் நான் சொல்கிறபடியே நீர் நடக்கவேண்டும்; நானிப்போது உம்மையோர் பெரியவீட் டிற்குக் கூட்டிக்கொண்டுபோகிறேன். அங்கே நீர் இரண்டு நாள்வரையிலுமிருக்க வேண்டும்; உமது தாயுந் தந்தையும் அவர்கள் சினேகீதர்களும்வந்து உம்மை வெகுசிறப்பா யழைத்துக்கொண்டு போவார்களென்று சொன்னபோது, அஸனுக்குண்டான சந்தோஷம் இவ்வள வென்று சொல்ல முடியாது; இதுவரையிலும் ஏக்கமாய் யாதொரு உறவின் முறையா ரில்லாதவனாய்த் திரிந்தேன்; ஆனால் அல்லாகுத் தாலா என் தாய்தப்பனோடு என்னைச்சேர்த்து, செல்வம் பெற்றிருக்கச் செய்யுநாள் வந்துவிட்டதென்று நினைத்து விரைவாய்ப் போயுடுத்திக்கொண்டு டாக்டருடனே வந்து வண்டியிலேறினார், அந்தவண்டி அரைமணிநேரம் ஓடினதின் பின் ஓர் பெரியவீட்டிற்குமுன் வந்துநின்றது அந்த வீட்டிற்கு வெளியே சில சேவகர்கள் துப்பாக்கியெடுத்தவர்களாகக் காவலாய் நிற்கின்றார்கள்; டாக்டரும் அஸனும் வண்டியை விட்டிறங்கி வாசலுக்குப் போய்க் கதவைத்தட்ட, ஓர் சேவ கன் வந்து கதவைத்திறந்தான், இவர்களிருவரும் உள்ளே சென்றார்கள், அந்தவீடு மகாவிஸ்தார முடையதாகவும், அநேகசாலைகளும், அறைகளுமுடையதாகவும், இருப்பதை அந்த அறைகளிற் சிலமனிதர்கள் அடைக்கப்பட்டிருப்பதை யும் அஸன் கண்டபோது இது சிறைச்சாலையோ என்னை இதிற் கொண்டுவந்து சிறையாக்கப்போகிறார்களோ வென்று திடுக்கிட்டார்; அதைடாக்டர் கண்டு சிரித்துக்கொண்டு நீர் ஒன்றுக்கும் யோசிக்க வேண்டியதில்லை; நீர் தங்குமிடம் வேறுபகுதியிலிருக்கிறதென்று சொல்லி அஸனைக் கூட்டிக் கொண்டோர் சாலைக்குப்போனார் அங்கே ஒரு உத்தியோ கஸ்தன் எழுந்து அந்த டாக்டரைச் சமீபிக்க அந்த டாக்டர் உத்தியோகஸ்தனிடம் அஸனுக்குக் கேளாமல் சிலவார்த்தைகளைச் சொன்னார். உடனே அந்த உத்தியோகஸ்தன் அஸனை யழைத்துக்கொண்டுபோய் ஒருசோபாவிலிருக்கச் செய்து, ஒரு பணிவிடைக்காரனை யழைத்துப்போசனங்  கொண்டுவந்து மேசையில் வைக்கும்படி கட்டளை கொடுத் தார்; அஸனுடைய மனதில் மிகவுங் கலக்கமுண்டாலும் டாக்டர் இரண்டுநாள் வரையிலும் இணங்கியிருக்க வேண்டு மென்று சொன்ன பேச்சையேயுறுதிகொண்டு சந்தோஷமாக விருந்தார். இப்படி இரண்டுநாட் சென்றபின் அஸன் தன் தாய்தகப்பனுடைய வரவை வெகு ஆவலாய் எதிர்பார்த்தி ருந்தும் வராமலிருப்பதையும் தன்னையங்குகொண்டுவந்து விட்டவர் வராததையும் பார்த்துப் பதறி அந்த உத்தியோ கஸ்தனிடம் போய் எசமானே! என்னை இங்கேயழைத்துக் கொண்டு வந்தவரார்? அவர் உங்களிட மென்னைக்குறித் தென்ன சொன்னார்; நானிங்கு எத்தனை நாள் தங்கியிருக்க வேண்டுமென்று கேட்க, அந்தவுத்யோதிகஸ்தன் அஸனைப் பார்த்து வாலிபனே நீர் பதற வேண்டாம்; உம்மை இங்கு கொண்டுவந்திருப்பது நீர் சரீரசவுக்கியம் பெறுவதற்கே யல்லாது வேறொன்றுக்கு மன்று; உம்மையழைத்துக் கொண்டு வந்தவர் கவர்ண்மென்டு டாக்டர்; நீர் பைத்தியங்கொண் டிருக்கிறீரெனத் தெரியவந்து அந்நோயைச் சுகப்படுத்த வேண்டுமென்ற விருப்பத்தினாலேயே அங்கு உம்மை யழைத் துக்கொண்டுவந்தார். நீர் சவுக்கியமடைந்தவுடனே உம்மை யாதொரு தடையில்லாமல் விடப்படும், ஆனால் அப்படி யும்மை விடுதலைசெய்யுமுன் நீர் ஓடிப்போக அல்லது புரளிகள் செய்ய முயன்றால் நீர் வருகிற வழியிலிருக்கின்ற அறைகளி லொன்றில் அடைக்கப்படுவீர்; நீர் கட்டளைக்கமைந்து பொறுத்திருந்தீரேயானால் உமது சவுக்கியத்திற்கு யாதொரு குறைவுமிருக்கமாட்டாதென்றுசொல்ல, அஸன் (இன்னாலில் லாஹி வ இன்னயி ைஹி றாஜிஊன் ) என்று சொல்லி அல்லா குத்தாலா எனக்குப் பூரணமான புத்தியையும் அறிவையுந் தந்திருக்க என்னைப் பயித்தியக்காரனென்று கொண்டுவந்து அவ்விடத்திற் றடுத்துவைத்திருப்பது என்ன புதுமை, யாரோ துட்டர்கள் எனக்குவிரோதமாய் டாக்டரிடஞ் சொன்ன பொய்யானவார்த்தைகளை நம்பி யவர் மோசம்போய்விட் டார்; ஆகையால் நீர் என்னை அக்கணமே போவதற்கு விடைகொடும்; அல்லது அந்த டாக்டரை அங்கு அழைப்பித் தீரேயானால் அவரை யார் தூண்டுதல் செய்துவிட்டார்க ளென்று கேட்டுத்தெரிந்துகொள்கிறேனென்று சொன்ன போது அந்தவுத்தியோகஸ்தன் அஸனைப்பார்த்து வாலி பனே, நாங்களெல்லோருஞ் சட்டப்படி நடக்கவேண்டியவர் கள்; அந்த டாக்டர் வாரத்திற்கொருமுறை வருவது வழக் கம் மறுவாரமவர் வரும்போது நீர் சுகவீன முடையவரல்ல வென்று அவரறிந்தால் உம்மை விடுதலைசெய்வார்; அது வரையில் நீர் பொறுத்திருக்க வேண்டுமென்று சொன்னவு டனே அஸன் உக்கிர கோபங்கொண்டு உதட்டைக்கடித்துக் கண்சிவந்து தனக்குச் சதிமோசமன்றோ நடந்துவிட்டது, இந்த விடத்தை விட்டுத் தப்பிப்போக ஏதேனு முபாயமுண் டோவென்று யோசிக்கயோசிக்க ஒவ்வொருயோசனையும் ஒன்றற்கொன்று அதிக அபாயகரமானதாகவே காணப் பட்டது. 

இப்படி அந்தச் சாலைபில் அஸன் அடைக்கப்பட்டுச் சில நாட் சென்றபின், அவரைக்கொண்டுவந்து விட்ட டாக்டர் ஒருநாள் வந்து அஸனைப் பார்த்து அஸனே நீர் இன்னுஞ் சிலகாலம் இந்த வீட்டில் இருக்க வேண்டும். அதன் பின்னால் நீர் சவுக்கியமுஞ் சம்பத்து முடையவராவீரென்று சொல்ல, அஸன் கோபங்கொண்டு நீர் என் தாய் தகப்பனைக் காட்டித் தருவேனென்று ஆசை வார்த்தை என்னை இங்கே யழைத் துக்கொண்டு வந்து இங்கிருக்கிற உத்தியோகஸ்தர்களிடம் என்னைப் பயித்தியக்காரனென்று சொல்லி அடைத்துவைத் திருக்கிறீர்; இப்படி நீர்செய்ததற்குக் காரணம் என்னவென் பது எனக்குத் தெரியவில்லை. அதையெனக்குத் தெளிவாய் சொல்லவேண்டும்; இன்னும் என்னை க்கணமே இந்த வீட்டை விட்டுப் போகும்படி எனக்கு விடைகொடுக்க வேண் டும். அப்படி நீர் செய்யாதிருந்தால் அரசாட்சியாரிடம் முறையிட்டு உமக்குத் தகுந்த தண்டனை கொடுக்கும்படி செய்விப்பேனென்று சொன்னார். அந்த டாக்டர் அஸன் பேசி முடிந்தவுடனே, சிரித்துவிட்டு நீர் கோபங்கொள்வ தாற் பலனில்லை. சிலகாலம் வரையிலும் பொறுமையாயிரும் என்று சொல்லிவிட்டுப் போய்விட்டார். அஸனுக்கு அவரை யோடிப்போய்ப் பிடித்திழுந் தடிக்கத்தக்கதாகக் கோபமூண் டும் அப்படிச் செய்தால் வேறு என்ன உபத்திரவங்கள் வந்து சம்பவிக்குமோவென்று நினைத்துச் சும்மாவிருந்து விட்டார் ஆகிலும் அதனால் தனக்குண்டான விசனம் இவ்வளவென்று சொல்லக்கூடாது தன் சிறுபிராயமுதல் தனக்குச் சம்பவித்த சகல காரியங்களையும் நினைக்கத்தொடங்கினார். சகலகாரியத் தையுஞ் சிந்தித்துத் தனக்கு நடந்த சங்கதிகளெல்லாவற்றை யும் ஓர் சரித்திரமாய் எழுதினால் கீர்த்திபெற்ற அறபு இராக் கதை யில் நின்றும் அதிக ஆச்சரியமும் புதுமையான சரித்தி ரமாயிருக்கு மென்றும் இப்படி இன்னுஞ் சிலகாலம் என்னை யிங்கு வைத்திருக்கச் சம்பவித்தால் நான் புத்தி பேதித்தவ னாய்ப் போவதற்கு யாதொரு சந்தேகமுமில்லை, என்றிப்படி விசாரத்தில் மூழ்கியிருந்தார். இப்படி நாட்களும், வாரங்க ளும் மாதங்களுஞ் சென்றன; அந்த வீட்டை விட்டு ஓடிப் போவதற்கு அஸன் அனேக விதமான தந்திரங்களை யோசித்தும் ஒன்றுமுபயோகப்படவில்லை. இவ்விதமாக ஒரு வருஷம் அந்தக் காவற்சாலையிலே இருந்தார். ஒருநாள் கடும் பைத் தியங்கொண்டவர்களை யடைத்து வைத்திருக்கிற அறைக ளைப்பார்க்க அஸனும் அங்குள்ள ஓர் உத்தியோகஸ்தனும் போனார்கள். அப்படிப் போகும்போது ஒரு அறையில் வயது சென்ற ஓர் மனுஷன் குந்திக்கொண்டு தன் தலையை முழந் தாளில் வைத்தவராக விருக்கக் கண்டார், அஸன் அவரிருக் கிற அறையின் வாசலைச் சமீபித்து நின்று னந்த மனிதனைப் பார்த்துக் கொண்டிருக்கையில் அந்த மனிதன் தலையையு யர்த்தி அஸனைக் கூர்மையாய்ச் சிலநேரம் பார்த்துவிட்டு ஆ என் மகனே என்று ஓர் சத்தமிட்டுக்கொண்டு பாய்ந்து ஓடிவந்து அஸனைக் கட்டியணைக்கையில் நினைவற்று மயக்க மாய்க் கீழே விழும்போது அஸனவரைத் தாங்கி நிலத்திற் சாய்ந்திருக்கச் செய்து, அவர் தலையைத் தன் மடிமேல் வைத்து முகத்தையுற்றுப் பார்த்தபோது தன்னை வளர்த்த தகப்பனாராகிய ஜகுபர் என்றறிந்து தன் கண்ணாற் கண்ணீர் சொரிந்தார் ஜகுபருக்கறிவுண்டாகச் செய்வதற்குத் தண் ணீரைத் தெளித்துங் குடிக்கக் கொடுத்தும் நினைவுண்டாகா மையால் அந்த உத்தியோகஸ்தனிடம் அஸன் உத்தரவு கேட்டு அவரைத் தானிருக்குஞ் சாலைக்குத் தூக்கிக் கொண்டுபோய் வைத்து டாக்டரை யழைத்து வைத் தியஞ் செய்வித்து வந்தார். மறுநாட்காலமே ஜகுபருக்கு ஸ்மரணை யுண்டாகி, அஸன் தன் சமீபத்திலிரு பதைக்கண்டு சந்தோஷங்கொண்டு கையை யெடுத்துக் கண்ணில்வைத்து, மகனே நான் உன்னைவிட்டுப் பிரிந்து இவ்வளவு காலமென்று எனக்குத் தெரியவில்லை; நான் என் வீட்டைவிட்டு வெளியே வந்ததின் பின்னால் நடந்த காரியங் களெல்லாம் ஓர் சொற்பனம்போலிருக்கின்றது; நான் வரும் போது நீ சிறுபிள்ளையா யிருந்தாய்; இப்போது நீ வாலிபனா யிருக்கிறாய்; அதனால் நான் உங்களைவிட்டுப்பிரிந்து வெகு கால மிருக்குமென்று நினைக்கிறேன்; ஆகையால் உன்னு டைய தாயைப்பற்றியும் உன்னைப்பற்றியும் இதுவரையிலும் நடந்த சங்கதிகளையெல்லாம் எனக்குத் தெளிவாய்ச் சொல்லென்று கேட்டார். அஸன் அந்நேரத்தில் தன்னுடைய சரித்திரத்தைச் சொல்வது யுசிதமல்லவென்று நினைத்து என் தகப்பனே! நான் இனிமேல் உங்களைவிட்டுப் பிரியேன்; உங்களுக்கு நல்ல சவுக்கிய முண்டானதின் பின்னால் எல்லாச் செய்திகளையும் விபரமாகச் சொல்வேன், நீங்களிப்போது மனச்சந்தோஷ முடையவர்களாய்ச் சரீரசவுக்கியம் பெற்றுக் கொள்ள முயலுங்கள் என்று சொல்லிவிட்டு, அவருடைய சரீர பெலனுக்காகவேண்டிய ஆகாரங்களைக் கொடுத்து வந் தார். இரண்டு வாரங்களுக்குள் ஜகுபருக்கு நல்ல சரீர சவுக் கியமுண்டாகி அஸனிடம் நடந்த சங்கதிகள் சகலத்தையுங் கேட்டறிந்தார். ஆகிலும் தன் மனைவியாகிய ஆயிஷாவுக்கு நடந்த சர்ப்பனைகள் ஒன்றும் அஸனுக்குத் தெரியாதபடியால் அஸன் சொல்லவில்லை; அவள் இறந்ததையும் அடக்கஞ் செய்யப்பட்டதையும் பின்பு அலீ என்கிற பாதகன் செய்த காரியங்களையும் விபரமாகச் சொன்னார். பின்பு ஒருநாள் அஸனும் ஜகுபரும் அந்தச் சிறைச்சாலை வீட்டைச்சுற்றி யுலாவி வரும்போது ஒரு அறையில் ஒரு மனிதன் மிகவும் மெலிந்து வளைந்து கண் குழிவிழுந்து வாயிலிருந்து நுரை வடி யச் சரீரம் நடுநடுங்கிக் குந்தியிருந்து பெருமூச்சு விட்டுக் கொண்டிருந்தான். அவன் அஸனைக் கண்டவுடனே திடுக் கிட்டெழுந்து தடுமாறித் தடுமாறி நடந்து ஓர் மூலையில் ஒளிந்து தன் முகத்தைத் தன் கைகளால் மூடிக்கொண்டு பயந்தவனாகப் பேசாமற் பதுங்கினான். அஸனிதைக் கண்ட வுடனே ஆச்சரியங்கொண்டு அவன் யாரென அறியும்படி சமீபத்தில் சென்று நிற்க அந்தக் கிழவன் ஓவெனச் சத்த மிட்டு அஸனே என்னைக் கொல்லவேண்டாம் நான் உதை யுண்டு போகுங்காலம் வந்துவிட்டது; நான் செய்த குற்றங் களைப் பொறுத்துக்கொள்ளும்; என அலறி வீரிட்டு அங்குமிங் கும் பதுங்கிப் பைத்தியங்கொண்ட நாய் ஓடித்திரிவதுபோல் ஓடுகிறதும் கீழே விழுகிறதும் பயந்து சத்தம் போடுகிறது. விருந்தான். அஸன் அவன் இன்னான் என அறிந்துகொள்ள யத்தனித்தும் தெரிந்துகொள்ளக்கூடாததாயிருந்தது, அஸ னுடைய குரலைக் கேட்கும்போதல்லாம் அவனுடைய சரீரம் நடுங்கிப் பயந்து சத்தமிட்டான். அதனால் ஒவ்வொரு நா ளும் அஸன் போயவன் யாரென்றறியப் பிரயத்தனப்பட்டும் கண்டுகொள்ளக் கூடாததாயிருந்தது. அஸனைக் கண்ட வுடனே அவன் சரீரமெல்லாம் ஒடுங்கிக் கீழே விழுந்து புரளு வான்; அஸன் பலவிதமான நயந்த வார்த்தைகளைச் சொல்லி யும் ஒரு மறுமொழியுஞ் சொல்லாமல் சிலநேரத்தில் அஸனே என்னைக் கொல்லாதேயும் என்னை விட்டுவிடுமென்று மாத் திரஞ் சொல்லுவான். ஒருநாட் காலையில் ஒரு காவற்காரன் அஸனிடம் வந்து அந்தக் கடைசியறையிருக்கிற வோர் பைத் தியக்காரன் மரண தருவாயிலிருக்கிறான். அவன் தான் மரணமடையுமுன் உம்மைக்கண்டு சில வார்த்தைகளைச் சொல்ல விரும்புகிறான் ஆதலால் இக்கணமே வாருமென்று சொன்னான். உடனே அஸனும் ஜகுபருமெழுந்து முன் சொன்ன பைத்தியக்காரனிருக்கிற அறைக்குட்போய் பார்த்த போது அந்த மனிதன் சாகுந் தருணத்தில் இருக்கக் கண் டார்கள். ஆகிலும் நினைவு தெளிவுடையனாய் அஸனே அருகே வாருமென்றழைத்துச் சொல்லுகிறான்; “அஸனே என்னுடைய பெயர் இபுறாகீம், நான் செய்த அநியாயத்தி னாலே உம்முடைய தாயுமுயிரிழந்தாள்; உம்முடைய தகப்பனு முயிரிழந்தார்” நான் அச்சங்கதிகளைச் சொல்லுகிறேன் கேளுமென்று. தான் ஆயிஷாவைச் சிறு பிராயத்தில் நிகா செய்ததையும், தூனிசுக்குப் போயிருந்ததையும், பின்பு ஆயி ஷாவை ஜகுபர் விவாகஞ் செய்துகொண்டு சூரத்திலே செல்வ முடையவர்களா யிருந்ததைக் கேள்விப்பட்டு அப்பட்டணத் திற்குப் போய் ஆயிஷாவிடம் பணம் பெற்றுக்கொண்டதை யும், இரண்டாமுறை அவளிடம் போனபோது நடந்த சங்கதி களையும், ஆயிஷாவுக்குக் காகிதமெழுதினதையும் சொல்லிக் கொண்டு வரும்போது ஆயிஷாவுக்குண்டான மரணம் இப் பாதகனாலேயே யென்று அஸனுக்கும் ஜகுபருக்கும் தெரிய வந்தது. ஜகுபர் என் பெண்ணே! என் பெண்ணே! என் கண்மணியே! என்று தலையிலடித்துக்கொண்டு ஸ்மரணை தப் பித் தரையில் விழுந்தார்; அஸனும் தேம்பித் தேம்பி யழு தார்; அந்த இரும்பு நெஞ்சனாகிய பாதகனும் இவர்கள் பரிதா பத்தைப் பார்த்துக் கண்ணீர் விட்டான். அஸன் ஜகுபருக்கு அறிவுண்டாக்க வேண்டிய காரியங்களைச் செய்தும் அறிவுண் டாகவில்லை; இப்படியிருக்கையில் இபுறாகீம் அஸனைக் கூப் பிட்டு நான் இன்னுஞ் சற்றுநேரத்தில் இறந்துவிடுவேன், இன்னுஞ் சில சங்கதிகளையு மறிவிக்கவேண்டும் அப்படியறி வித்தால் என் நெஞ்சிலிருக்கிற பாரம் நீங்கிவிடுமென்று ஆயி ஷா மரணமான செய்தியைத் தானறிந்தபின், ஜகுபருடைய ஆஸ்திகளை யபகரிக்க அலீயையும் பார்சியையும் சேர்த்துக் கொண்டதையும், தான் அஸனிடம், ஓர் கள்ளஞானி வேடம் பூண்டு வந்து சொன்ன கூட்டு வார்த்தைகளையும், பின்பு அலீயுந் தானும் பார்சியும் அஸனைக் கொல்ல இரண்டுமுறை யத்தனித்ததையும் அதன் பின்பு காசீமுக்கு விரோதமாய் நடத்தின கொலை வழக்கையுஞ் சொல்லி இன்னும் சொல்லு கிறான், ”நானும் அலீயும் பார்சியும் கப்பலேறி மிசுறுக்குப் வந்து சேர்ந்தோம். இங்கு வந்த பின் எங்கள் ஜீவனத்துக்கு யாதொரு வழியுமில்லாமையால் வழியில் நின்று இராக் காலங் களில் பிரயாணிகளை யடித்துப் பறித்துக் கொள்ளையிட்டுக் காலங்கழித்து வந்தோம். இப்படிச் சில வருடங்கள் சென்ற பின் ஒருநாள் ஓர் வீட்டை யிடித்துள்ளே போய்க் களவு செய் கிற வேளையில், அந்த வீட்டிலுள்ளவர்கள் என்னைப் பிடித் துக்கொள்ள. அலீயும் பார்சியும் ஓடித் தப்பித்துக் கொண் கொண்டார்கள். என்னைக் கோட்டிற்கொண்டுவந்து வழக்கு விசாரணை செய்து 5 வருடங் கடூரவூழியஞ் செய்யத் தீர்மா னிக்கப்பட்டது. நான் அந்த 5 வருடமும் சிறைச்சாலையி லிருந்து விடுதலையடைந்தபோது சரீரமெலிந்து யாதொரு வேலையுஞ் செய்யமாட்டாதவனாய் இரந்துண்டு திரிந்தேன்; பின்பெனக்கு நோயுண்டாகிவிட்டது. அந்த நோயுண்டான பின் நான் எங்கிருந்தேன்; நானிங்கு எப்படி வந்தேனென்று எனக்கு விளங்கவில்லை; சில நாளைக்கு முன் உம்மைக் கண் டதுபோல் எனக்கு நினைவிருக்கிறது; எனக்குச் சற்று நேரத் துக்கு முன் உறக்கத்திலிருந்து விழித்தவனைப் போற் றெளி வுண்டாயிற்று, அப்போது என் கைகால் சோர்ந்து திடனற் றுப் போனதும், மேல் மூக்சுக் கண்டதும் என்னுடைய அநித் திய காலம் சமீபித்துவிட்டதென்பதை எனக்குணர்த்தின. நான் அப்போது என் அருகில் நின்ற காவற்காரனிடம் அஸனென்று ஒரு வாலிபன் இந்த அறைக்குள் வந்ததுண்டா வென்று கேட்டேன் அதற்கு அவன் ஆம் பலமுறை வந்திருக் கிறார். இப்போது மிங்குதா னிருக்கிறாரென்று சொன்னான்; ஆகையால் நான் உம்மை யழைத்துவரும்படி சொன்னேன்; இன்னும் சொற்ப நேரத்துக்குள்ளாக என்னுயிர் வாங்கப் படும்; நான் செய்த பாவங்களுக் கெல்லாம் தண்டிக்கப்படு வேன்; ஆகிலும் நயனுமக்குச் செய்த கெடுதிகளை மன்னித்தீ ரானால் எனக்குண்டாயிருக்கிற பயங்கரங் குறைந்து விடும் என்றான்”. இதைக்கேட்ட அஸன், இபுறாகீமே நீ யெனக் குச் செய்த குற்றங்களை யெல்லாம் மன்னித்து விட்டேன்; நாயகன் பூரண தயாளன். எவ்விதமான பாவங்களையும் பொறுக்கக் கூடியவன்; அவனை மறவாமல் உனது இருதயத் தில் இருத்திக் கொள்ளென்று, லாயிலாஹு யில்லல்லாஹு என்னங் கலிமாவைச் சொல்லிக் கொடுக்க அவன் சொல்லிக் கொண்டே யிருந்தான்; கொஞ்சநேரத்தில் அவனுயிர் போய் விட்டது. அஸன் ஜகுபரைத் தூக்கிக்கொண்டு தன் அறைக்குட்சென்று அவருக்கு வைத்தியங்களைச் செய்து கொண்டு வந்தார்; இரண்டு மூன்று நாளுக்கொரு முறை தெளிவுண்டாகி என் பெண்ணே என் கண்ணே ஆயிஷாவே என்று சொல்லிக்கொண்டிருந்து மயங்கி மெய் மறந்து விடு வார். இப்படி ஒருமாதஞ் சென்றபின், கொஞ்சங் கொஞ்ச மாய்ச் சவுக்கியமுண்டாகிக் கொண்டு வந்தபோதிலும் அவரு டைய எண்ணமுஞ் சிந்தையுந் தன் மனைவியின் பேரிலேயே யிருந்தது. எப்போது இந்த வீட்டைவிட்டு விடுதலை பெறு வேன். என் மனைவியை யடக்கியிருக்கிற ஸ்தானத்திலி ருந்து அவளை நினைத்து பாத்திஹா வோதிக் கொண்டிருப் பேன், என்று சொல்லிக் கொண்டிருந்தார். 

இப்படி விருக்கும் நாளையில் ருஷியருக்குந் துருக்கி யருக் கும் யுத்தமுண்டாகி விட்டது. அதற்காக மிசுறிலிருந்து ஓர் உதவிச் சேனையை யனுப்புவதற்கு ஆரம்பஞ் செய்யப்பட்டது. அந்தச் சேனையுடன் போவதற்கு டாக்டர் மார்களைத் தெரிந் தெடுத்ததில் இந்தப் பைத்திய வைத்தியசாலைக்கு வந்து கொண்டிருந்த டாக்டரையும் துருக்கி தேசத்துக்குப் போகும்படி கட்டளை கொடுக்கப் பட்டது. அவருக்குப்பதி லாக சாலிம் அபந்தி என்பவர் நியமிக்கப் பட்டார். அவர் நல்ல யோக்கியதையுடையவர். மனவிரக்க முடையவர். அவர் தமது உத்தியோகத்தைக் கையேற்று அச்சாலைக்குப் போய் அங்குள்ள ஒவ்வொரு வரையும் பார்த்துப் பரிசோ தித்துக் கொண்டு வரும் போது அஸனைக் கண்டு பேசினார். அவர் தனக்குச் செய்திருக்கிற அநியாயங்களை யெல்லாமவ ரிடஞ்சொன்னார். அந்த டாக்டர் கேட்டு ஆச்சரியங் கொண்டு அங்கிருக்கிற உத்தியோகஸ்தனை யழைப்பித்து அஸனுடைய நடத்தையைப்பற்றி விசாரணை செய்தார். அந்த உத்தியோகஸ்தனும் அஸனுக்கு விரோதமான செய் திகளொன்றுஞ் சொல்லாததால் அஸனைப்பார்த்து நீர் இக்க ணமே போய்விடலாம்; உமக்குச் செய்த அநியாயத்தைக் குறித்து கவர்ண்மெண்டுக்குத் தெரிவிப்பேன் என்று சொல்ல அஸன் ஜகுபரையுங் காட்டி அவரிப்போது சவுக்கியமடைந் திருக்கிறார். அவரையும் நான் கூட்டிக்கொண்டுபோவதற்கு எனக்கு உத்தரவு கிடைக்க வேண்டுமென்று சொன்னார். அவரும் பரிசோதிக்கப்பட்டு அஸனுடன் விடுதலை செய்யப்பட்டார். 

அஸன் வெளியேவந்து ஒருவண்டி வாடகைபேசி அதில் ஜகுபரும் தானும் ஏறிக்கொண்டு ஹோட்டலுக்கு வந்துவிட் டார். அங்கேவந்தபோது ஹோட்டற்காரன் அசனைக் கண்டு ஆச்சரியமடைந்து நீர் இவ்வளவு காலமெங்கேபோயி ருந்தீர் என்றுகேட்க அஸன் அவனிடம் உண்மையைச் சொல்லக்கூடாதென்று நான் வேறோரூருக்குப் போய்வந் தேன்; என்னுடைய பெட்டிகளும் சாமான்களுமெங்கே யென்று கேட்டார். அப்போது ஹோட்டற்காரன் அவரு டைய சாமான்களெல்லாவற்றையுங் கொண்டுவந்து முன்னே வைத்தான். சகல சாமான்களுஞ் சரியாயிருந்தன. 

அஸனும் ஐகுபரும் ஹோட்டலுக்கு வந்த மறுநாள் அஸன் தான் மறியற்சாலையில் அடைக்கப்பட்டிருந்த காலத் தில் தனக்குவந்த காகிதங்கள் தபாலாபீஸிலிருக்கவேண்டு மென்று நினைத்து அந்த அபீஸில் வந்து விசாரித்தார். அங்கே அவர் பெயருக்கு ஒரு கடிதமாத்திரமிருந்தது; இது இங்கிலீஷ்பாஷையில் ஒரு பெண்ணுடைய கையெழுத்தாய் மேல்விலாசம் எழுதியிருந்ததைப்பார்த்தவுடனே பதறிப் பதறி முத்திரையையுடைந்தார். அந்தக்கடிதத்தில் பாளினா என்று கையொப்பமிட்டெழுதி யிருந்ததைக் கண்ணுற்றவு டன் அதிக ஆவலாய்ப் படித்தார். 

என் அருமையான அஸனே ! 

சென்றமாதம் நானொருகாகிதம் தங்களுக்கனுப்பினேன். அதில் என் தகப்பனும் நானும் ஷாம்தேசத்துக்குப்போய் ஜெறூஸலம், (பைதுல்முகத்தஸ்) முதலியவூர்களிற் பிரயா ணஞ்செய்யப் போகிறோமென்றும், இந்தமீ” 15ந்தேதி கல்கற் றாவைவிட்டுப் புறப்படுவோமென்றும், தங்களைக்கண்டு கொள்ள எனக்கு அதிக ஆவலாயிருப்பதால் பேறூத் என்கிற விடத்தில் இந்த மீ 28-ந்தேதி எங்களைக்கண்டு சந்தித்துக் கொள்ள வரக்கூடுமா வென்றும், எழுதியிருந்தேன்; அந்தக் கடிதத்துக்கு இதுவரையிலும் எனக்கு மறுமொழி வந்துசேர வில்லை. என்னை மறந்துவிட்டீர்களோ அல்லது என்னைக் கண்டு கொள்ளப் பிரியமில்லா திருக்கிறீர்களோதெரியவில்லை. ஆனால் நாம்பிரிந்த நாள் முதல் தங்கள் ஞியாபகமேயொழிய எனக்கு வேறு சிந்தனையில்லை; இன்னுமொரு முறையாவது சந்திக்கு நாளெப்போது வருமோவென்று எதிர்பார்த்திருக் கிறேன். எங்களை பேறூத்தில் சந்தித்துக்கொள்வீர் களென்று வழிபார்த்திருக்கிற 

பாளின் 

என்று எழுதியிருந்தது. 

இந்தக் காகிதந்தை வாசித்தவுடனே அள்னுக்கு மிக வுங் கலக்கமுண்டாகி, யாராவது தனக்கு வந்த கடிதங்களை யெடுத்திருக்க வேண்டுமென்று நினைத்து அந்த ஆபிஸ் உத் தியோகஸ்தர்களிடம் போய் விசாரிக்க அவர்கள் இந்தப் பெயருக்கு அநேக கடிதங்கள் வந்திருந்தன; எங்களுக்குத் தெரியும், அக்காகிதங்களை யொருமனிதன் வந்து நான் அஸனுடைய பணிவிடைக்காரன் என் எஜமான் அவைக ளைக் கொண்டு வரும்படிக்குச் சொன்னாரென்று சொல்லி அக்காகிதங்களை கேட்டெடுத்துக்கொண்டு போவது வழக்க மாயிருந்தது. இதற்கொரு வாரத்திற்கு முன்னும் அவன் வந்து சில கடிதங்களை யெடுத்துக்கொண்டு போயிருக்கிறா னென்று சொன்னபோது அந்த மனிதன் எப்படிப்பட்டவ னென்று அஸன் கேட்க. அவனுடைய இலக்ஷணத்தையவர் கள் சொன்னார்கள். அவர்கள் சொன்னது அலீயுடைய இல க்ஷணத்திற்கு ஒத்திருப்பதை யறிந்து, அலீ இன்னம் என்ன தீங்குகள் செய்கிறதற்கோ எனக்கு வந்த காகிதங்களை யெல் லாம் கொண்டு போயிருக்கிறானென்று பயந்து, பின்பு அவ னைப் பிடித்துத் தன் காகிதங்களைக் களவெடுத்த குற்றஞ் சாட்டிப் போலீஸில் ஒப்புவித்து அவன் வீட்டைச் சோதனை செய்து காகிதங்களைப் பிடிக்க வேண்டுமென்று தீர்மானித்துக் கொண்டு அலீ யிருந்த வீட்டை நோக்கிப் போக அவனு டைய வீடு பூட்டியிருக்கக் கண்டார், அயலார்களிடம் விசா ரிக்க அவன் ஏழு நாளைக்கு முன் வீட்டை விட்டுப் போனதா கத் தெரியவந்தது. அஸனுக்கு இது மிகவும் அச்சத்தை யுண்டாக்கினது; அவன் தபாலாபீஸிற்குப் போய்க் காகிதத்தை யெடுத்த மறுநாள் வீட்டை விட்டுப் புறப்பட்டிருக்கி றான்; அந்தக் காகிதத்தில் பாளினும், அவள் தகப்பனும் ஷாமுக்கு போகிற செய்தி எழுதியிருந்ததையுமவன் வாசித் திருப்பான்; அந்தக் கடிதத்தை பார்வையிட்டு அவர்களுக்கு ஏதாவது தீங்குகள் செய்கிறதற்குப் போயிருப்பானோ அப்படி அவர்களுக்குத் தீங்கு செய்ய அவனுக்கென்ன காரணமிருக் கிறது என்றிவ்வாறு யோசிக்க யோசிக்க அவர் புத்தி மயங்கி என்ன செய்வேன், என்ன இடை யூறுகள் வரவிருக்கின்றன வோ தெரியவில்லையே! என்று புலம்பிக்கொண்டிருந்து விட்டு நானிக்கணமே புறப்பட்டு ஷாமுக்கு போக வேண்டும்; அங்கே போய் என்னுயிருக் குயிராகிய பெண்ணுக்கு ஒரு தீங்கும் வராமற் காப்பாற்ற வேண்டுமென்று தீர்மானித்துக் கொண்டு ஹோட்டலுக்குப் போய், நடந்த காரியங்களெல்லா வற்றையும் ஜகுபருக்கு அறிவித்து; உத்திரவு பெற்றுக் கொண்டு மறுநாட் காலமே பயணம்புறப்படுகிறதற்கு ஆயத் தமானா.

மறுநாட் காலமே ரெயிலேறி இஸ்கந்திரியாப் பட்டணத் துக்கு வந்து சேர்ந்தார் அந்தப் பட்டணத்தில் வந்து விசா ரித்தபோது மறுநாட் காலமே கப்பல் பயணமாயிருந்தது. அன்றிரவு அஸன் பட்டணத்தைச் சுற்றிப் பார்க்கும்போது கடலருகே போனார். அந்நேரத்தில் சந்திரன் பிரகாசித்துக் கொண்டிருந்தது. அஸன் கடலருகே ஒரு வாலிபப் பெண் மிகவுங் களைத்துச் சோர்ந்து வியாகுலமா யிருப்பதைக் கண்டு மன திலிரக்கமுண்டாசி அவளுக்கென்ன வருத்த முண் டாயிருக்கிறதென்று விசாரித்துத் தன்னாற்கூடிய உதவி செய்ய நினைத்தும் தனித்திருக்கிற பெண்ணை நெருங்கிப் டேசு வது மரியாதையல்லவென்று யோசித்துக் கொண்டிருக்கை யில், அந்தப்பெண் இவரைர் கண்டு வெட்கித்துச் சீக்கிரம ய் முகப் போர்வை யிட்டுக்கொண்டாள். 

பின்பு இவர் சிலநேரம் அப்படியே நின்று பார்த்துக் காண்டிருப்பதைக் கண்டு அவள் இவர் முகத்தைப் பார்த்து சொன்னாள் முஸ்லீமாகிய சகோதானே! நீர் என்னைப் பார்த்துக்கொண்டிருப்பது நானிப்போதிருக்கிற பரிதாபமான நிலையைக் குறித்துத் துக்கிதது நிற்கிறீர் என்று நினைக்கி றேன். நானித் தருணத்தில் யாருமற்ற பரதேசியாய் வெகு துலையிலிருந்து நடந்துவந்து, மிகவும் பசி தாகமாக விருக்கி றேன்! இரண்டு நாளாக யாதொரு அன்னந் தண்ணீரென் வாயிற்படவில்லை. எனக்கு மிகவுங் களையாயிருக்கிறது” என அந்தப் பெண் சொன்னவுடனே, அஸன் நான் இதோ வருகிறேனென்று சொல்லிவிட்டு அந்த விடத்திலிருந்து ஓடிக் கடைக்குப் போய்ச் சில திண்பண்டங்களை வாங்கி ஓர் கிண்ணத்திலே தண்ணீருங்கொண்டு ஓடிவந்து அந்தப் பெண்ணுக்கு முன்பாக அவைகளை மெத்தவும் மரியாதையாக வைத்தார். அவள் அந்தப் பக்ஷண ங்களையும் புசித்துத் தண்ணீரும் பானஞ்செய்து கொஞ்சங்களை தீர்ந்த பின் அஸன் அவளைப் பார்த்து நீங்களிந்த விடத்திலேன் இருக்கிறீர்கள் ; ஒரு வீட்டிற்குப் போய்த் தங்கும்படி முயற்சி செய் யுங்களென்று சொல்ல, அவள் நானிந்த வூருக்கின்றுதான் வந்தேன்; எனக்கு ஒரு வீடாவது தெரியமாட்டாது; நானெங்கே போவேனென்று சொன்னாள். அஸன் நீங்கள் என்னோடு வருவீர்களேயானால் நீங்களிருப்பதற்கு ஒரு வீடு தேடித் தருகிறேன். நானுமிந்தவூரில் பரதேசியாயிருக்கி றேன். நான் இன்று சாயந்தரம் இந்தப் பட்டணம் வந்து சேர்ந்தேன். நீங்களென்பேரில் நம்பிக்கை வைத்து வருவீர் களேயானால் உங்களுக்குத் தகுதியான ஒருவிடத்தைத் தேடித் தருகிறேனென்று சொன்னார். அவள் உடனே எழுந்து அஸன் பின்னே போனாள் அஸன் ஹோட்டலுக்கு நெருங்கிப் போனபோது அவளை நிற்கும்படி செய்துவிட்டு ஹோட்டற்காரனை யழைத்து ஓர் நல்லொழுக்கமுடைய சமு சாரியுடைய வீட்டைக் காட்டிக் கொடுக்க வேண்டுமென்று கேட்க, அவன் அஸனைக் கூட்டிக்கொண்டு ஓர் வீட்டுக்குப் போனான். அந்த வீட்டு மனிதன் ஓர் தையற்காரன், அவ னும் அவன் மனைவியும் மிகவும் யோக்கியமானவர்கள்; அவர்கள் முகத்தைக் கண்டவுடனே அஸனுக்கு சந்தோஷ முண்டாகி ஒரு வாலிப வயதையுடைய ஒரு பெண்ணுக்கு இங்கே சில நாளைக்கிருக்க விடங்கொடுக்கக் கூடுமாவென்று கேட்க, அவர்கள் நாங்கள் சந்தோஷமாக விடங் கொடுப்போ மென்று சொன்னார்கள். உடனே அந்தப் பெண்ணை யழைத் துக்கொண்டு போய் அங்கே யிருக்கும்படி செய்துவிட்டு அந்தப் பெண் கையில் இருபது பவுன் கொடுத்து, நான் நாளைக் கப்பலேறி பேறூத் தென்கிற பட்டணத்துக்குப் போகிறேன். என்று சொன்னபோது அவள் திடுக்கிட்டுச் சந்தோஷங்கொண்டவளாகச் சொல்லுகிறாள். 

நான் நாடி வந்ததும் அந்தப் பட்டணத்துக்குப் போவ தற்கே; நீங்கள் என்னைத் தங்கள் சகோதரியென்று நினைத்து கூட்டிக் கொண்டுபோய் அந்தப் பட்டணத்தில் விட்டீர்களே யானால் அல்லாகுத்தாலா அதற்குத் தக்க நன்மை கொடுப் பான். ஆனால் நீங்கள் என்னிடம் என் பெயரையல்லது என் சரித்திரத்தைக் கேட்கலாகாது; எனக்காகச் செலவு பண்ணுகிற பணங்களைப் பின்னாலெனக்குக் கொடுக்கக்கூடிய சமயம் வந்தபோது, நான் தந்தால் நீங்கள் பெற்றுக்கொள்ளுகி றதாகவும் எனக்குவாக்குத் தரவேண்டுமென்று கேட்க அஸன் அப்படியே வாக்குக் கொடுத்து, மறுநாள் இருவருங் கப்பலுக்குப் போகிறநேரம் முதலியவைகள் சகலத்தையும் பேசித் தீர்மானித்துக் கொண்டு அஸன் ஹோட்டலுக்குப் போனார். இவ்வளவு சம்பாஷணைகள் அந்தப் பெண்ணுக்கும் அஸனுக்கு மிடையில் நடந்தபோது அவள் முகப்போர்வை யிட்டுக்கொண்டிருந்ததால் அவளுடைய முகலக்ஷணத்தைக் காணவில்லை; ஆகிலும் அவளுடைய ரூபத்தைப்பார்த்த போது ஓர் சித்திரப்பாவை போலும் அவள் குரல் குயிலினோ சைபோலு மிருந்தது, அவளுடைய இனிமையான பேச்சும் ஆசாரோபசாரமும் மேற்குலத்துப்பெண்ணென்று அறிவித் தன. மறுநாட் காலமே அஸனும் அந்தப்பெண்ணுங் கப்ப லேறினார்கள், அஸன் அவளுக்கு மிகவும் மரியாதைசெய்து வந்ததால் அந்தப்பெண் அவர் சற்குணரென்றறிந்து ஒருநாள் அஸன் அவளிருக்கும் அறைக்குள் வந்தபோது முகப் போர்வை போடாதவளாக எழுந்து சலாஞ் சொன்னாள். அவள் முகத்தைக் கண்டவுடன் திகைத்துவிட்டார். அவர் இதுவரையிலுங் கண்ட பெண்களில் பாளீனுக்கு அழகி லொப்பானவர்கள் ஒருவருமில்லையென் றெண்ணியிருந்தார். ஆனாலிந்தப் பெண்ணின் வில்போன்ற கரியபுருவமும், மானின் விழிகளும்,ஆகிய இவைகளே, பாளீனுடைய அழகையெல் லாம் மிகைத்து வெல்லுமென்பதிற் சந்தேகமில்லையென உறு திப்பட்டு மரம்போல் திகைத்து நின்றார். அவள் அஸன் இப்படி ஆச்சரியமாய்ப் பார்த்துக்கொண்டு நிற்பதைக் கண்டு நாணி நிலத்தைப்பார்த்துத்தலையைச் சாய்த்துகொண்டாள். அஸன் இதைக்கண்டு என்சகோதரியே நான் தங்கள் வடிவைப்பார்த்து ஆச்சரியங்கொண்டது நிசம்; ஆகிலுந் தங்களை எனது சகோதரியென்றே எவ்வேளையும் நினைத்திருப்பேன். உங்கள் மனந்திருப்தியடைவதற்காக என்னுடைய சரித்திரமுழுவதையும் நான் சொல்லுகிறேன், அதைக்கேட்டதின்பின் என்மீது தங்களுக்கு நம்பிக்கை வைக்கக் கூடுங்கூடாதென்று தாங்களே நிச்சயஞ் செய்து கொள்ளுங்களென்று சொல்லி, தம்முடைய சரித்திர முழுமை யும் ஒன்றும் விடாமற் சொன்னார். அஸன் சொல்லும்போது அந்தப்பெண் மிகவும் வியப்பு – ன் கேட்டிருந்து, சொல்லி முடிந்தபின் இவ்விதமான கதை நானிதுவரையிலுங் கேட்டது மில்லை; ஓர் புத்தகத்திலாவது பார்த்ததுமில்லை; இதுகாறும் உங்களுக்கு நேரிட்ட வருத்தங்களை யெல்லாம் நீக்கிய அல்லா குத்தால உங்கள் அரு மையானப “ளீனோடு சேர்த்துவிடுவா னென்று உறுதியாய்ச் சொன்னாள். 

நீங்களென்னை விசுவாசித்துத் தங்கள் சரித்திரத்தைச் சொன்னபடியால் யானு மன் சரித்திரத்ை சொல்லுகிறேன் கேளுங்கள்; நான் காயிறா பட்டணத்தி லுள்ள அப்துல்கரீம்பாக்ஷா வென்கிறவருடையமகள்; என் பெயர் ஷம்ஷூன்னஹார்; நான் சிறுமியாயிருக்கும்போ தெனக்கு இரண்டு வயதுக்கு மூத்த என்மைத்துனனும் நானும் மிகவும் அன்பாயிருந்தோம். அந்த அன்புநாளுக்கு நாள் அதிகப்பட்டு ஒருவரையொருவர் காணாமலிருக்கக் நான் கன்னிப்பருவமடைந்தபின்பும் கூடாமலாகிவிட்டது. அவரை எங்கள் தோட்டத்திற்கண்டு சந்தித்துக்கொள் வேன். அவரென்மீது வைத்திருந்த அன்பைக்கவிய கப்பாடி அனுப்பிவைப்பார். நானும் கவிகளைப்பாடி எழுதி அனுப்பி வைப்பேன். என்னுடைய தாயுந் தகப்பனும் அவருடைய தாயுந் தகப்பனும் எங்களிருவருக்கும் விவாகஞ்செய்ய சர்ம தப்பட்டுக் கொண்டார்கள். என்னுடைய மைத்துனனு டைய பெயர் அப்துஸ்ஸமது அவருடைய அழகைப்பார்த்துப் புதுமைப் படாதவர்களில்லை. என்னைக் கண்டவர்களெல் லோரும் எனக்கு அவரே தகுதியான மணவாள னென்று சொல்லுவார்கள்; அவர் நல்லொழுக்கமுங் கல்வியுமுடைய வாலிபன். ஆகிலும் சிறு பிராயமுதல் வேட்டை யாடுவதி லும், ஆயுதப் பயிற்சியிலும் மனதைச் செலுத்கிவந்தார். அவருடைய விருப்பமெல்லாம் யுத்தஞ் செய்வதிலும், யாராவ தனியாயம் செய்யப்பட்டார்களெனத் தெரியவந்தால் உடனே அவர்களுக் குதவிபுரிவதுமா யிருந்தது. பின்பு மிசுறு தேசத்தில் இங்கிலீஷ்காரரும், பிரான்சுக்காரரும் வந்து அவர்களுடைய அதிகாரத்தைச் செலுத்த இஸ்மாயில் பாக்ஷாவிடங் கொடுத்ததினால் சனங்கள் அவர்பேரில் வெறுப்புற்றிருந்தார்கள். அப்போது ஷெய்குஜமாலுத்தீனுல் அப்காணி என் றொருவர் மிசுறுக்கு வந்தார். பேச்சு வலலமையில் அவருக்கு ஒப்பானவர்கள் ஒருவருமிருக்க மாட்டார்கள். அவர்போன ஊர்கள் எல்லாவாறிலும் மேற்கண்ட இருதரத்தாரையுந் தரத்தவேண்டு மெனறும் அவர் ஷ யார்களுக்குக் கீழ்ப்பட்டி ருப்பதால் அவரைமாற்றி வேறொருவரைத் தலை மயாக நிய மிக்கவேண்டு மென்றும் பிரசங்கித்து வந்தார். அவருடைய பிரசங்கம் வெடிமருந்துக் குவியலில் நெருப்புக் காட்டினது போலாயிருந்தது. சனங்களெலாம் அரசுக்கு விரோதமாகக் கலகஞ் செய்யவேண்டுமென்ற விருப்பங் கொண்டார்கள். ஒருநாள் ஷெய்கு ஜமாலுத்தீன் பிரசங்கஞ் செய்யும்போது என்னுடைய மைத்துனனும்போய்க் கேடடிருந்தார். அவர் சொன்னதெல்லாம் இவர் மனதிற்குச் சரியாயிருந்து ரே டு சினேகமாகி சதீவுக்கு விரோதியானார். 

பின்பு அப்துஸ்ஸமதும் இன்னுஞ் சிலவாலிபர்களும் ஒன்றாய்ச்சேர்ந்து கவர்ண்மெண்டுக்கு விரோதமாகப் பிகசங் கங்கள் செய்யத் துணிந்தார்கள் இது கதீவுக்குத் தெரிய வந்து ஜமாலுத்தீனை யும் அந்த வாலிபர்கள் எல்லோரையும் பீடித்துத் தூக்குப் போடும்படிக்குக் கட்டளை செய்தார். அவர்களைப் பிடிக்கவந்தபோலீஸ் உத்தியோகஸ்தர் அவர் களுக்கு இஷ்ட மானவரான படியால் அவர்களைத் தப்பி ஓடிப் போக விடங்கொடுத்தார். என்னுடைய மைத்துனனும் மிசுறைவிட்டு ஓடிப்போய்விட்டார்; அவர் போய் ஒரு வருஷ மாகிவிட்டது அவர் போனவிடம் ஒருவருக்கும் தெரிய வில்லை; இப்படி யிருக்கும்போது என்னுடைய தாய் தகப்பன் மர் எனக்கு வேறொரு கலியாணம் பேசித் தீர்மானஞ் செய் தார்கள் என மைத்துனனுடைய எண்ணமும் சிந்தையு மாகவே யிருந்ததால் நான் அவர்கள் சொல்லுக்குச் சம்மதப் படவில்லை. அவர்கள் என்னைப் பலவிதமாக வலோத்காரஞ் செய்து கஸ்திப்படுத்தி வந்ததுமல்லாமல் கலியாணத்துக்கு நாளும் நிர்ணயஞ் செய்து அதற்குரிய ஆரம்பஞ் செய்துவந்தார்கள். இப்படி இருக்கும்போது எங்களுடைய கோஜா பட்டணத்துக்குப் போய்வந்து, ஒருமனிதன் அப்துஸ்ஸமதை’ ஷாம் தேசத்திற் கண்டேனென்று சொன்னதாகச் சொன்னான் நான் உடனே எனக்கு என்ன நேரிட்டாலுஞ் சரியென்று வீட்டைவிட்டு ஓடி ஷாம் தேசத்துக்குக்குப் போகவேண்டு மென்று தீர்மானித்துக் கேயிறோ பட்டணத்தைவிட்டு நடுச் சாமத்திற் புறப்பட்டு நடந்து இஸ்கந்திரியாப்பட்டணத்துக்கு வந்து சேர்ந்தேன். அங்கே நான் வந்திருக்கும்போது அல்லா குத்தாலா தங்களை யெனக் குதவியாகக் கொண்டு வந்து விட்டானென்று சொன்னாள். இந்தச் செய்திக ளெல்லா வற்றையுங்கேட்டபின், அஸனும் ஷம்ஷுன்ன ஹாரும் தங்கள் நாட்டங்களை நிறைவேற்றும்படி அல்லாகுத்தாலாவிடந் தோத்தரித்தார்கள்; அன்று முதல் அஸனும் ஷம்ஸுன்ன ஹாரும் சகோதரனும் சகோதரியும்போல அன்பாயிருந் தார்கள். 

கப்பல் பேறூத் தென்கிற பட்டணத்துக் குடாவில் நங் கூரம் போடப்பட்டது. பாளின் அஸனுக்கு எழுதிய கடிதத் தில் அந்த மீ 28-ந் தேதியில் வந்து பேறூத்திற் சந்தித்துக் கொள்ளும்படி சொல்லியிருந்தது. ஆனால் அஸன் ஏறின கப் பல் வந்து சேர ஒரு நாட் சுணங்கிவிட்டபடியால் அஸன் கப் பலை விட்டிறங்கி விரைவாய் ஹோட்டலுக்குப் போய்ப் பார்க்க அன்று காலமே பாளினும் அவள் தகப்பனும் பேறூத்தை விட்டுப் புறப்பட்டுப் போனதாகத் தெரியவந்தது. இதை யறிந்தவுட ன அஸன் மிகவும் வியாகூலமடைந்து ஷம்ஷுன்னஹார் இருக்க ஒரு வீடு தேடி வைத்துவிட்டு, உடனே திமுஷ்கிற்குப் போகிற தபால் வண்டியிலேறிப் போனார். இரவானபோது அந்த வண்டியிலோர் வாலிபன் வந்தேறினார்; அந்த வாலிபனுடைய அழகைப் பார்த்தவர்க ளெல்லாம் அதிசயிக்கத் தக்கதாயிருந்தது. அந்த வாலிபன் அஸனுக்கருகே வந்திருந்தார் இப்படிச் சற்று தூரம் போன போது அந்த வண்டியிலேறியிருந்த ஓர் கிழவன் அஸனையும் அந்த வாலிபனையும் பார்த்துச் சொல்லுகிறான். “இன்னும் நாற்பது மைலுக் கப்பால் இரண்டு மலைகளுக்கிடையில் ஓர் பாதை போகிறது, அந்த விடத்தில் கள்ளர்கள் கூட்டமாய் வந்து அடித்துப் பறிக்கிறார்களென்று நான் கேள்விப்பட்டிருக் கிறேன் அந்தக் கள்ளர்களைப் பற்றிச் சில ஆச்சரியமான செய்திகளெனக்குத் தெரிய வந்திருக்கிறது; இந்தச் செய் தியை திமிஷ்குப் பட்டணத்திலிருக்கிற ஓர் கனவான் சொல் லக் கேட்டிருக்கிறேன். ஆகையாலது நம்பக்கூடியதாக யிருக்கிறது அதாவது சில காலத்துக்குமுன் ஸ்தம்பூலுக் கும் அதிரியனோ பளென்கின்ற பட்டணத்துக்கு மிடையில் பசுபுசூக்கென்கிற சாதிக் கள்ளர்களின் ஒரு கூட்டம் மிகவுந் துணிவாய்ப் பிரயாணிகளையுந் தபால் வண்டி முதலியவை களையும் மறித்தடித்துக் கொள்ளை செய்து வந்தார்கள். ஒரு நாள் சுல்தானுடைய முதன் மந்திரியின் வீட்டிலும் அவர்கள் கன்னம் வைத்துட் புகுந்து சில விலையுயர்ந்த சாமான்களைக் கொள்ளையடித்துக் கொண்டோடி விட்டார்கள். 

அந்தக் களவு நடந்ததின் பின் அவர்கள் அந்தத் தேசத்தைவிட்டு பேறூத்துக்கும் திமிஷ்கிற்கு மிடையில் தங்கியிருந்து அவ்வழியில் நின்று கொள்ளை செய்து வருகிறார் கள். பகல் நேரங்களிலும் பட்டணங்களுக்குத் திடீரென்று வந்து விழுந்து கொள்ளை செய்துகொண்டும், சீமான்களைச் சிறையாகப் பிடித்துக்கொண்டும் போய்விடுவார்கள். 

பின்பு சிறைைெள மீட்சி செய்கிறதற்காகப் பெருந் தொகைப்பணங் கொடுக்கும் வரைபில் அவர்களைக் காவ லில் வைத்திருப்பார்கள். போர்ச் சேவகர்கள் பலமுறை அவர்களைப் பிடிக்கப் பிரயத்தனப்பட்டும் பிரயோசன மில்லா மற் போய்விட்டது ஒரு முறை அவர்களின் தலைவனைப் பிடித்துச் சிறைச்சாலையில் வைக் ப்பட்டது. பின்பு அவன் எவ்விதமோ சிறைச்சாலையிலிருந்து தப்பிப் போய்விட்டான். அவன் தப்பியோடின விதம் ஒருவருக்கும் விளங்கவில்லை. மறியற் காவற் காரர்கள் அவனை யோடிப்போக விடங் கொடுத்தார்களென்றும், அந்த ஊர் கவர்னராகிய பாக்ஷாவே அதற்கு உதவியாக விருந்தாரென்றுஞ் சொல்லிக் கொள்ளு கிறார்கள். என்பதே; இந்தப்படி அந்தக் கிழவன் சொன் னதை அஸனும் அப்துஸ் ஸமதும் மிகவுங் கவனமாகக் கேட்டிருந்தார்கள். 

இப்படிப் பேசி முடிந்த நேரத்தில் நடுச்சாமமாகி இரவில் தங்கும். ஹோடடல் வந்துவிட்டது எல்லோரு உள்ளே னோர்கள். அஸனும் அந்த வாலிடனும் யிலிருந்து சம்பாஷணை செய்துகொண்டிருந்தார்கள் இப்ப டிச் சற்று நேரம் போனபின் அந்த வாலியன் தன்னுடைய ஜேப்பிலிருந்து ஓர் சிறு பெட்டியை எடுத்துத் திறந்து அதிலி ருந்தோர் படத்தைக் கையிலெடுத்து உற்றுப் பார்த்துப் பார்த்து பெருமூச்சு விட்டுக்கொண்டிருந்தார்; சற்றுநேர மிப்படி யிருந்ததின் பிறகு அந்தப் படத்தை மேசையின் மேல் வைத்துவிட்டு எழுந்து நிற்கையில்; அஸன் அந்த வாலிப னிருந்த விடத்தருகே உலாவிக்கொண்டு வரும்போது அவர் பார்வை அந்தப் படத்தில் விழுந்தது. அஸன் அந்தப் படத்தைக் கண்டவுடனே திடுக்கிட்டுப் பிரமித்து நின்று விட்டார். இதை அந்த வாலிபன் கண்டு ஆச்சரியப்பட்டு அஸனுடைய முகத்தைக் கூர்மையாகப் பார்த்துக் கொண் டிருப்பதை அஸன் கண்டு வெட்கித்து ஓ சிநேகிதனே நான் இந்தப் படத்தை மூர்க்கமாய் வேண்டு மென்று பார்க்கவில்லை நான் உலாவி வரும்போது என் பார்வை தற்செயலாய் அதில் விழுந்தது நான் அந்த ரூபமுடைய பெண்ணைக் கண்டிருப்பதி னால் நான் திடுக்கிட்டு மயங்கி நின்றேன். ஆகையால் நீங்க ளென்னை மன்னிக்க வேண்டு மென்று கேட்டுக்கொண்டார் 

இப்படிச் சொன்னவுடனே, அந்த வாலிபனோடி வந்து அஸனுடைய கையைப் பிடித்துக்கொண்டு என் சிநேகி த னே அந்தப் பெண்ணை நீங்களெங்கே கண்டீர்கள்; சீக்கிரம் சொல்லுங்களென்று கேட்டார். அஸன் ஷம்ஷுன் னஹுாரை இஸ்கந்திரியாவிற் கண்ட செய்தியையும் பின்பு தனனோடு கப்பலேறி வந்ததையும், அவள் கப்பலில் வரும்போது தனனு டைய சரித்திரத்தைச் சொன்னதையும், இப்போது பேறூத் துக்கு வந்திருப்பதையுஞ் சொல்லக் கேட்டு, அந்த வாலிபன் என் சிநேகிதனே அந்தப் பெண் சொன்ன வாலிபன் நான் தான், நீர் அந்தப் பெண்ணுக்குச் செய்த உதவியை என் ஆயுசுள்ள வரையிலும் மறவேன். எனக்கிங்கே நிற்க நேர மில்லை. இக்ஷணமே நான் போகவேண்டிய அலுவலிருக் கின்ற தென்று அஸனிடம் உத்தரவு பெற்றுக்கொண்டு போய்விட்டார். 

– தொடரும்…

– அசன்பே சரித்திரம் (நாவல்), முதற் பதிப்பு: 1885, 1974 பதிப்பு – புனைவகம், கொழும்பு.

அசன்பே சரித்திரம் இலங்கையைச் சேர்ந்த சித்தி லெப்பை (லெவ்வை) மரைக்காயர் என்னும் முகம்மது காசிம் மரைக்காயர் எழுதிய நாவல். 1885-ல் இந்நாவலை எழுதி வெளியிட்டார். 1890-ல் மறுபதிப்பு வெளிவந்தது. 1974-ல் அடுத்த பதிப்பு வெளியாகியது.

சித்திலெப்பை மரைக்காயர் (முகம்மது காசிம் சித்திலெப்பை மரைக்காயர்) (சித்தி லெவ்வை) (ஜூன் 11, 1838 - பிப்ரவரி 5, 1898) ஈழத்து தமிழ் எழுத்தாளர், இதழாசிரியர், கல்வியியலாளர், சமூக செயல்பாட்டாளர். ஈழத்தின் முதல் நாவலான 'அசன்பே சரித்திரம்' எழுதியவர். முஸ்லீம் சமூகத்தின் முன்னேற்றத்திற்கான பல முன்னெடுப்புகள் செய்தவர். சித்திலெப்பை மரைக்காயரின் நினைவாக ஜூன் 11, 1977-ல் மத்திய அரசு ஒரு ரூபாய் அஞ்சல் தலை வெளியிட்டது சித்திலெப்பை மரைக்காயர் இலங்கையின்…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *