கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: June 14, 2024
பார்வையிட்டோர்: 1,634 
 
 

என் வீட்டில் மொட்டை மாடிதான் முதலில் இருந்தது. கீழே தரை தளத்தில்தான் எங்கள் குடியிருப்பு. பையனுக்குத் திருமணம் என்று வந்தது. ஆக மேலே ஒரு ரூம் போடலாம் என்று ஆரம்பித்து அப்படி இப்படி கட்டிட மேஸ்திரியிடம் பேசிப்பேசி மேலேயும் ஒரு வீடு என்றபடிக்கு அது முடிந்தது. முதல் தள மேல் வீட்டுக்கே பின்னர் கொஞ்சம் கொஞ்சமாக நாங்கள் குடிபெயர்ந்தோம். வீட்டு ஜாமான்கள் தினமும் முடிந்தது தூக்கிக்கொண்டு மேலே செல்வது வழக்கமாகியது. துணி துவைக்கும் இயந்திரமும் இன்னும் பீரோவும் மிச்சம் இருந்தன.

சன் டிவி வட்டக்குடையை, ஹிடாசி ஏசியில் நீட்டிக்கொண்டிருக்கும் வெளிப்பாதியை இடம் மாற்றி வைக்க வந்த இரண்டு ஆட்களை வைத்துக்கொண்டே அந்த துணி துவைக்கும் மெஷினையும் மேலே கொண்டு வரும் அசுர வேலையை முடித்தாயிற்று. இன்னும் கீழ் வீட்டில் பாக்கி இருப்பது நெட்டை ஸ்டீல் பீரோ மட்டும் தான். அதனுள் ஒன்றும் பெரிய விஷயமும் இல்லை. வீட்டுக்கு வாடகைக்கு வருவோர் உறுதியானால் பிரோவை மேலே கொண்டு வருவது ஒன்றும் பெரிய மூட்டை இல்லை.

கீழ் வீடு வாடகைக்கு ரெடியாகியது. ஒரு விஷயம், என் மூத்த பையன் திருமணம் சில மாதங்களில் வருகிறது. பையன் திருமணம் வரை வீட்டுக்கு வருவோரும் போவோரும் கொஞ்சம் கூடுதலாக இருப்பார்கள். பையன் திருமணம் முடியட்டும். பின்னர் அந்தத் தரை வீட்டை வாடகைக்கு விடலாம். அதுவே சரி என்றிருந்தேன்.

தாமிரபரணி தீரத்து சேரன் மாதேவிக்காரர்கள் நடத்திய என் பையன் திருமணம் விமரிசையாக முடிந்தது. நாங்கள் வாடகைக்கு விட வைத்திருந்த கீழ் வீடு வந்துபோன சம்பந்தி மார்களுக்கு வசதியாகவே இருந்தது. திருமண களேபரங்கள் முடிந்தன.

இனி கீழ் வீட்டை தாராளாமாக வாடகைக்கு விட்டு விடலாம். கடலூர் மஞ்சகுப்பத்திலிருந்து சென்னைக்கு ஐந்தாண்டுகள் முன்னர் குடி வந்தோம்.சென்னை வாசம் ஏதோ கைலாச வாசம் என்று நினைத்துக்கொண்டுதான் அற்புதமான கடலூரை விட்டு புறப்பட்டேன். சென்னையில் அப்போது வீடு தேடுவது சாதாரண விஷயமில்லை. அவரைப் பிடித்து இவரைப்பிடித்து குடியிருக்க வீடு தேட வேண்டிய ஒரு காலம். அவரைப் பிடிப்பதும் இவரைபிடிப்பதும் சாமான்ய காரியமாக இல்லை.

வாடகை வீட்டில் குடியிருந்துகொண்டே, கஜப்பிரசவமாய் ஒரு சிறிய மனை வாங்கினேன். அதனில்தான் இங்கும் அங்கும் கடன் வாங்கிய பணம் கொண்டு ஒரு வீடு என்று உருப்பெற்றது. அந்த வீட்டு மாடியில்தான் இப்போது ஜாகை.

வீடு காலி ஆக ‘டு லெட்’ என்று ஒரு அட்டையில் எழுதி வாசல் கேட்டில் தொங்கவிடலாம். எந்த வீடு காலியோ அந்த வீட்டிற்கு திரும்பவும் குடி இருக்க அப்படித்தான் ஆட்கள் வருகிறார்கள். அசைவம் சாப்பிடுபவர்கள் வாடகைக்கு வந்து விட்டால் என்ன செய்வது. கோழி முட்டையைக்கூட இன்னும் தொட்டுப்பார்த்தது இல்லையே. ஆக ‘வெஜ் ஒன்லி’ எனவும் சேர்த்து எழுதிப்போட்டுவிடலாம். குடிகாரர்கள் யாரேனும் வந்து வாடகைக்கு வீடு கேட்டால் என்ன செய்வது. குடிப்பதே தவறா அதில் ஏதும் அளவீடுகள் உண்டா என்ன யான் அறியேன். குடிப்பழக்கம் இல்லாதவர்கள் தான் வாடகைக்கு குடியிருக்க வேண்டுமென்றால் சென்னை என்று என்ன எந்த ஊருக்குப் போனால் என்ன எங்கும் தான் அது சாத்தியப்படுமா? அதுவும் குழப்பமாகத்தான் முடிந்து போகிறது. இப்படி நாட்கள் மாதங்கள் என்ன வருடம் கூட முடிந்தது. கீழ் வீடு காலியாகத் தான் கிடந்தது. அசைவம் சாப்பிடுவோர் ஒருவ்ர் இருவர் விசாரித்து விட்டு ‘இது சரிப்படாது’ என்று போய்விட்டார்கள் அவ்வளவே.

ஒரு நாள் எப்போதுமில்லாத திருநாளாய் என் ஒன்று விட்டதம்பி பேசினான். அவன் மகளுக்கு இசை ஆசிரியர் வேலை கிடைத்திருப்பதாகவும் அதுவும் என் வீட்டருகே இருக்கும் தனியார் பள்ளி ஒன்றில் என்றும் தொலைபேசியில் என்னிடம் கூறினான். ‘ஒரு வாடகை வீடு பார்க்கணும். என் பெண்ணால முப்பது கிலோமீட்டர் போறது வர்ரது முடியல்ல. ரொம்ப அவஸ்த படுறா. கரெக்ட் டயத்துக்கு ஸ்கூலுக்கு வாத்தியருங்க வர இல்லன்னா அண்ணைக்கு அரை நாள் சம்பளம் கட் ஆயிடும்னு சொல்றா. நான் உன் வீட்டுக்கு வர்ரேன். வாடகைக்கு எனக்கு ஒரு வீடு பார்க்கணுமே. நீதான் ஒத்தாசை செய்யணும் எனக்கு, அங்க வேற யாரும் இல்ல’ என்றான்.

எனக்கு மனதிற்குள் மகிழ்ச்சியாக இருந்தது. எப்படியும் கீழ் வீட்டிற்கு ஆள் கிடைத்துவிட்டது. வாடகை மாதம் ஐந்தாயிரம் வந்து விடும். அப்பாடா ‘கடவுள் லேசுப்பட்டவரா எதைக்கொண்டு வந்து எங்க முடிச்சு போடறாரு’ மனதிற்குள் சொல்லிக்கொண்டேன்.

‘வர்ர ஞாயிற்றுக்கிழமை நானு வரேன். வீடு எதனா பார்த்து வை. கொஞ்சம் சவுகரியமா இருக்கட்டும்’

‘என் வீட்டுக்கு கீழ் வீடு காலி இருக்கு. நீ தாராளமா வந்துடலாம்’

‘கீழ் வீடுன்னா அது யாரு வீடு’

‘அட என்னப்பா என் வீடுதான் நீ எதுக்கும் கவலைப்படாதே. நீ இங்க வா பாத்துகலாம்’

‘அப்புறம் என்ன பருத்தி புடவையா காச்சிது. நா வந்துடறன். நீயும் மேலு வீட்டுல இருக்க அப்புறம் எனக்கு என்ன’

அவன் தொலை பேசியை வைத்துவிட்டான். எனக்கு இருந்த ஒரு பெரிய பிரச்சனை தீர்ந்து விட்டதாக நினைத்தேன். கீழ் வீட்டைத்திறந்து கூட்டிக்குப்பை அகற்றி தண்ணீர் விட்டு அலம்பி தரையை பளிச்சென்று மாற்றின்னேன். ஒட்டடை அடித்து வாஷ் பேசின் டாய்லெட் எல்லாம் சரி செய்து கரண்ட் பல்புகள் போனது வந்தது பார்த்து மாற்றி , பூட்டு சாவி தாழ்ப்பாள் எல்லாம் சரியா இருக்கிறதா என்று ஒரு முறை பார்த்துக்கொண்டேன். மாத வாடகை எவ்வளவு என்பது முடிவானது, ஐந்தாயிரம் என ஆரம்பித்து நான்காயிரம் வரை குறைத்துக்கொண்டு வரலாம். அட்வான்ஸ் ஆறு மாத வாடகை அல்லது நான்கு மாத வாடகை வைத்துக்கொள்வது என்பதாக நானும் என் மந்திர ஆலோசனை மனைவியும் முடிவு செய்தோம். ஞாயிற்றுக்கிழமை எப்போது வரும் எனக்காத்துக்கொண்டு கிடந்தேன்.

சொல்லி வைத்தாற்போல ஞாயிற்றுக்கிழமை காலை வாடகைக்கு வீடு வேண்டும் என்று கேட்ட தம்பி வந்தான். அவனோடு அவன் மனைவி வந்திருந்தாள். அந்த இசை ஆசிரியைப் பெண் வரவில்லை. யாருக்கு வீடு பார்க்கிறார்களோ அவள் வரவில்லை என்றால் எப்படிக்கதை ஆகும். அவன் மனைவி உடன் வந்திருப்பது எனக்கு கலக்கமாக இருந்தது. எது எனக்கும் என் தம்பிக்கும் சவுகரியமாய் இருக்குமோ அது நிச்சயம் என் தம்பி மனைவிக்கு சரிப்பட்டு வராதுதான். உலக நீதியும் அது அல்லாமல் பிறகு என்ன என மனம்சொல்லியது.

‘இது என்ன உங்க வீடு பஸ் ஸ்டாப்லேந்து ஒரு கிலோ மீட்ருக்கு மேலே இருக்குமா?’

என் தம்பி மனைவி ஆரம்பித்தாள். ஆரம்பமே சரியில்லையே என நினைத்தேன்.

‘அப்படி இல்லை. அரை கிலோமீட்டர் இருக்கும்’

‘அது சரி! சொந்த வீடு இந்த மாதிரி காட்டுப்புறமா கட்டுனவங்க வேற வழி இல்லாம அங்க குடி இருக்குறவங்க எல்லாரும் சொல்றதுதானே இது’

என் மனவியின் முகத்தை ஒரு முறை பார்த்தேன். அவள் வந்த விருந்தினர்களுக்கு காபி தயார் செய்து கொண்டு இருந்தாள். என் தம்பி எதுவும் பேசாமல் அமர்ந்திருந்தான்.

‘நீ எப்படி மழைகாலத்துல ரோடுக்கு வருவ ஒரே தண்ணியாவே இருக்கும் போல இந்த இடம் எல்லாம்’ எந்தம்பியும் அவன் பங்குக்கு பிறகு ஆரம்பித்தான்.

‘மழை என்னாப்பா ஒரு பத்து நாளுக்கு தொடர்ந்து பேஞ்சிடுமா’ என்றேன்.

‘நீ வேற பொரட்டாசி ஐப்பசி கார்த்திகைன்னு ஒரு மூணு மாசத்துக்குக்கொஞ்சம் சிரமம்தான்’ சொல்லிய தம்பியைப்பார்த்து அவன் மனைவி ‘கொஞ்ச சிரமம் இல்லே ரொம்ப சிரமம்னு சொல்லுங்க’ என்று பின் பாட்டுச் சொல்லி நிறுத்தினாள்.

என் மனைவி எதுவுமே பேசவில்லை.

‘வீடு எங்க எப்படி காலி இருக்கும்னு பாக்கலாம் வா எழுந்திரு போகலாம்’ என்றான் தம்பி.

‘நீங்க வாங்க இந்த பக்கத்து ஆளில்லாம நாங்க என்ன செய்ய இருக்கு. அது எப்படி சரியாவும் வருமா’ அவன் மனைவி தொடர்ந்தாள்.

என் கீழ் வீடு பூட்டிக்கிடந்தது. அதனைத் திறந்தாவது காட்டுங்கள் என்று சொல்வார்கள் என எதிர்பார்த்தேன். ‘நேரத்தை எதுக்கு வீணாக்கிக்கிட்டு போகலாம் வா’ என்றான் தம்பி. மதிய வெயில் மண்டையை பிளந்துவிடும் போலக்காய்ந்தது. சற்று முன்னர்தான் எங்கயோ எல்லாம் சுற்றி வந்துவிட்டு வீட்டிற்கு வந்தவன் நான். ‘செத்த போவட்டுமே தம்பி இப்பக்கி வெயலு கடுமையா இருக்குது’ என்று சொல்லித் தயங்கினேன்.

‘வெயில பாத்தா காரியம் ஆவுமா’ என்று பதில் சொன்னான். ‘யாருக்கு காரியம் ஆவுணும் இப்ப’ கேட்டுவிடலாம் போல் இருந்தது. வேண்டாம் என்று விட்டு விட்டேன். நாங்கள் மூவரும் தம்பியின் பெண் இசை ஆசிரியையாய் வேலை செய்யும் அந்தப் பள்ளி அருகே வந்தாயிற்று. வாடகை ஆட்டோவுக்கு நான் தான் ருபாய் நூறு கொடுத்தேன்.

‘டுலெட்’ போட்ட வீடு எங்கே எனத்தேடி அலைய ஆரம்பித்தோம். ஒன்றிரெண்டு வீட்டு வாசலில் டுலெட் என்று எழுதி வைத்திருந்தார்கள். மூவாயிரத்து ஐநூறு என ஆரம்பித்தது வாடகை. அதிலிருந்து எட்டாயிரம் வரைக்கும் போனது. கரன்ட் நிர்வாகம், தண்ணீர் நிர்வாகம்; பாலாற்றுத் தண்ணீர் நிர்வாகம். பொது இடம் கூட்டும் நிர்வாகம், மூன்று நபர் மட்டுமே தங்க அனுமதி யார் ஒருவர் அதிகம் வந்து தங்கினாலும் பத்து நாட்களுக்கு அதிகம் போய் விட்டால் மாதம் ஐநூறு கூடுதலாக வாடகையில் கூட்டப்படும் நடப்பு என சட்ட திட்டங்கள் சொன்னார்கள். கவுச்சியும் தண்ணியும் குடிக்கறவங்க யாரும் வந்தா அதுக்கும் சில விதிமுறைகள் உண்டென்றார்கள். ‘பாப்பார மக்க வாடகைக்கு குடி வந்தா அந்த பிரச்சனை இல்லை’ என்பதும் சொன்னார்கள். ஆறு மாத வாடகை அட்வான்ஸ் கட்டாயம் தர வேண்டும் என்றும் சொன்னார்கள். இசை ஆசிரியையின் பள்ளியை நடுவில் வைத்து நான்கைந்து தெருக்களில் சுற்றி வந்தோம்.

‘எம் பொண்ணயும் கூட்டிகிட்டு வந்து வூடுவ காமிச்சி அவளுக்கு புடுச்சி இருந்தாதான் அட்வான்ஸ் தர்ரது எல்லாம்’ என் தம்பியின் மனைவி கறாராகச்சொன்னாள். எனக்கு கால் வலி எடுத்துக்கொண்டது. வெய்யிலோ வெயில்.. எல்லோரும் இளநீர் குடிக்கலாம் என்று ஆகி நானே அதற்கும் செலவு செய்து பேருந்து நிலையம் வந்தோம்.

‘நாங்க அத்திப்பட்டு ரிடேர்ன் டிகட் எடுத்து இருக்கோம். ரயிலுக்கு போறோம்’ என்றான் தம்பி.

அப்பாடா என்று இருந்தது. ஒரு வழியாக அவர்கள் எனக்கு விடுதலை தந்து போனார்கள். நான் என் வீடு வந்து சேர்ந்தேன்.என் மனைவியிடம் ஊர் நிலவரம் டுலெட் விஷயங்கள் சொல்லி முடித்தேன்.

என் கீழ் வீடு இன்னும் பூட்டித்தான் கிடக்கிறது.

‘அடுத்தாப்புல இருக்குற பையனுக்குக் கல்யாணம்னு ஆரம்பிச்சா நமக்கே இந்த் கீழ் வீடும் வேணுமே. அவனுக்கு வயசு ஆகுது. நமக்கும் காலா காலத்துல அந்த பொறுப்பு முடியணும். அவன் ஜாதகத்தை எடுத்துகிட்டு போயி புரசவாக்கம் கங்காத்ரர் கோவிலண்ட இருக்குற மலையாள ஜோஸ்யரைப் பாருங்க’ என்றாள் என் மனைவி.

விஷயம் இவ்வளவு சுலுவாக முடிந்துவிடும் என்று நான் எங்கே எதிர்பார்த்தேன். இனி கீழ் வீடு சும்மா கிடப்பதாகவும் வாடகைக்கு ஆள் வரவேண்டுமே என்றும் வரும் அந்த அவர்களும் சைவம் சாப்பிடுபவர்களாக, தண்ணியும் கிண்ணியும் அடிக்காதவர்களாக இருக்க வேண்டுமே என்கிற கவலையெல்லாம் ஏது.

அடுத்த நாள் தம்பி போன் செய்தான். ‘உன் ஆசிர்வாதத்துல எம் பொண்ணுக்கு ஸ்கூல் ஆஸ்டல்லயே இடம் கிடைச்சிடுச்சி, அதுலயே தங்கிக்ககுறா. அதுதான் வசதி சிக்கனமும் கூட. ஆக வாடகைக்கு இப்ப வீீடு ஒண்ணும் பார்க்கவேண்டான்னு சொல்லிட்டா. ஆக நான் அதுவே சரின்னு முடிவு பண்ணிட்டேன்.’ சொல்லிய அவனிடம்
‘என் தம்பி பொண்ணு எப்பவும் சமத்து.’ சொல்லி போனை வைத்தேன்.

எஸ்ஸார்சி (பிறப்பு: மார்ச் 4 1954) என்கிற எஸ். ராமச்சந்திரன் என்பவர் ஒரு தமிழக எழுத்தாளர். கடலூர் மாவட்டம் தருமநல்லூரில் பிறந்தவர். பாரத் சஞ்சார் நிகாம் நிறுவனத்தில் இளநிலைக் கணக்கு அதிகாரியாகப் பணியாற்றி வருகிறார். தமிழ், ஆங்கிலம், தெலுங்கு, இந்தி, சமற்கிருதம் ஆகிய மொழிகளில் புலமை பெற்ற இவர் எட்டையபுரம் பாரதி பிறந்த நாள் விருது, திருப்பூர் தமிழ்ச் சங்க விருது, பாரத மாநில வங்கி இலக்கிய விருது போன்றவைகளையும்…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

* Copy This Password *

* Type Or Paste Password Here *