அக்னிப் பிரகாசம்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: January 31, 2023
பார்வையிட்டோர்: 3,214 
 
 

(2003 வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

ஆனந்த், தன்னுடைய ஆஃபீஸ் அறைக்குள்ளே சந்தடியில்லாமல் பிரவேசித்ததைப் பார்த்த அப்பாவுக்கு ஆச்சர்யம். அதோடு ஒரு குறுகுறுப்பும். விஷயமில்லாமல் இந்தப் பயல் இந்தப் பக்கம் தலைவைத்துக்கூடப் படுக்க மாட்டானே !

“வாடா மகனே, என்னது இது திடீர் ஆஃபீஸ் பிரவேசம்? என்ன விசேஷமோ?’

அப்பா எதிரில் ஆனந்த் நுனி நாற்காலியில் அமர்ந்து கொண்டான்.

“ஒண்ணுமில்ல டாடி, ஒங்க சொமயக் கொஞ்சம் கொறைக்யலாம்னு ரொம்ப நாளாவே யோசிச்சிட்டிருந்தேன். இன்னிக்கித்தான் டைம் கெடச்சது.”

“என் சொமயக் கொறைக்யப் போறியா? நாளைலயிருந்து கம்ப்பெனிப் பொறுப்ப நீ எடுத்துக்கிட்டு என்ன ரிலீவ் பண்ணப் போறேங்கற. நா இன்னிக்கே ரெடி. வா வந்து இந்தச் சேர்ல ஒக்காரு.”

“அட, அந்த சொமயில்ல டாடி. இது வேற சொம.”

“வேற என்னடா சொம எனக்கு?”

“அதாவது டாடி, என்ன ஒரு நல்ல எடத்ல கல்யாணம் பண்ணிக்குடுத்துக் கரையேத்தணுங்கற பொறுப்பு ஒங்களுக்குகில்லியா. அது சொம இல்லயா டாடி?”

“ஓ, நீ அங்க வர்றீயா? இது ஒங்க அம்மாவோட டிப்பாட்மென்ட்டாச்சே!”

“மம்மி ஒரு போர் டாடி. நாலு பொண்ணு பாத்து வச்சிருக்காங்களாம்.”

“நாலு பத்தாதுங்கிறியா?”

“அதில்ல டாடி, வந்து…. அஞ்சாவதா நா ஒண்ணு பாத்து வச்சிருக்கேன்.”

“அவ்ளோ தான? கவலய வுடு முடிச்சிருவோம். பொண்ணு யாரோ?”

“லாவண்யா.”

“மொட்டையாச் சொன்னா?”

“கமர்ஷியல் டாக்ஸ் ஆஃபீசர் பொண்ணு.”

“அப்பா ஸி.டி.ஓ. வா. ஓக்கே.”

“அப்பா இல்ல டாடி, அம்மா.”

“அம்மாவா!”

அப்பாவின் முகம் திடீரென்று பிரகாசங்குன்றிப் போனது. நெற்றியில் இருந்திருந்தாற்போல சில கூடுதல் கோடுகள் விழுந்தன.

“பேர் தெரியுமா?” என்றார்.

“அம்மா பேரா டாடி? தெரியாதே!”

“எந்த ஸர்க்கிள்னு தெரியுமா?”

சொன்னான்.

அப்பாவின் முகம் முன்னிலும் இறுகியது.

அப்பாவின் முக மாற்றம் ஆனந்துக்கு லேசாய்க் கிலி கொடுத்தது.

“ஏன் டாடி, ஒங்களுக்கு அவங்களத் தெரியுமா?”

“தெரியும்னே வச்சுக்கோயேன். நம்ம ஸர்க்கிள் தான். நீ அவங்களப் பாத்திருக்கியோ?”

“இல்ல டாடி”.

“பாக்கறியா?”

“பாக்கறியான்னா?”

“ஓக்கே சொல்லு. அரேஞ்ஜ் பண்றேன்.”

“எப்படி டாடி?”

“ஸஸ்பென்ஸ் ஒண்ணுமில்லடா. நம்ம அக்கவுன்ட் டன்ட் ரஹீம் சார் ஸேல்ஸ் டாக்ஸ் ஆஃபீஸ்க்குக் கிளம்பிட்டிருக்கார். நீயும் அவர் கூடப் போய்ட்டு வா. லாவண்யா அம்மாவப் பாக்கலாம்.”

ஆனந்த் தன்னோடு வருவதில் அக்கவுன்ட்டுக்கு ரொம்ப ரொம்ப சந்தோஷம். தன்னுடைய சந்தோஷத்தை வார்த்தைகளில் வெளிப்படுத்தினார்.

“ரொம்ப புண்ணியந் தம்பி ஒங்களுக்கு ஒங்க தயவுல ஜம்ன்னு ஒங்க கூடக் கார்ல வர்றேன். இல்லன்னா பஸ்ல அடிச்சுப்புடிச்சி ஏறி இடிச்சிக்கிட்டே வரணும்.”

“ஏன், ஆட்டோல வர்றது தான, ரஹீம் சார்.”

“வரலாந் தம்பி. எம்.டி. அப்படித்தான் சொன்னார். பஸ்ல வந்தாக்கூட ஆட்டோ சார்ஜ் க்ளெய்ம் பண்ணிக்கலாம். ஆனா மனசு கேக்கணுமே. மத்த பிஸினஸ்மேன்களப் போல கள்ளக் கணக்கு எழுதறவங்க, கருப்புப் பணம் வச்சிருக்கறவங்கன்னா, அங்க வேல செய்றவங்களுக்கும் அந்தப் புத்திதான் இருக்கும். ஆனா ஒங்கப்பா அந்த மாதிரி குறுக்குப் புத்திக்காரர் இல்லியே தம்பி. நேர்மை, நாணயத்துக்கு மரியாத தர்றவர். பிஸினஸ்ல தர்மஞாயம் பாக்கறவர். கோடியில ஒருத்தர். அவருக்கு விஸ்வாசக் கொறையா நடக்க யாருக்குத் தம்பி மனசு வரும்!”

ஆனந்துக்கு அப்பாவைக் குறித்து மிகவும் பெருமையாயிருந்தது. அவருடைய கள்ளங்கபடமில்லாத உள்ளம் வியாபாரத்தில் மட்டுமல்ல, வாழ்க்கையிலும் கூடத்தான். இவனுக்கு விவரந் தெரிந்த நாள் முதல் இன்றுவரை அப்பா இவனுக்குத் தந்தை கம் சிநேகிதன். சின்ன வயசில் அப்பா இவனைக் கை நீட்டியோ கடிந்து கொண்டோ தன்னுடைய தந்தை ஸ்தானத்தை நிலை நாட்டிக் கொண்டதாய் இவனுக்கு நினைவில்லை.

அப்பாவின் உதவியால் அம்மாவை வழிக்குக் கொண்டு வந்து லாவண்யாவை சிரமமில்லாமல் கைப்பிடிக்கலாம். ஆனால்… லாவண்யாவின் அம்மாவைக் குறித்து அப்பா கவலை கொண்டதாய்த் தெரிந்ததே அது ஏன்?

“தம்பி, இப்படி ஓரமாப் பார்க் பண்ணிட்டு எறங்குங்க” என்று அக்கவுன்ட்டன்ட், இடம் வந்ததை நினைவுபடுத்தினார்.

ஸி.ட்டி.ஓ.விடமிருந்து அழைப்பு வந்ததும் ரெண்டு பேரும் அறைக்குள்ளே போனார்கள்.

படபடக்கும் நெஞ்சோடு தன்னுடைய வருங்கால மாமியாரின் முன்னே அமர்ந்தான் ஆனந்த்.

“தம்பி யாரு?’

“எங்க எம் டி யோட ஸன் மேடம். ஒரே மகன். ஒரே வாரிசு.”

“ஸ்மார்ட் லுக்கிங் பாய்.” மாமியாரின் முதல் ஸர்ட்டிஃபிகேட் ஆனந்துக்கு சந்தோஷந் தந்தது.

லாவண்யாவின் முக ஜாடை அம்மாவிடம் இருந்தது. இன்னும் முப்பது வருஷங் கழித்து இவனுடைய லாவண்யா இப்படித்தான் இருப்பாள்.

“புக்ஸ் எல்லாம் நேத்தே கொண்டு வந்து வச்சுட்டுப் போய்ட்டேன் மேடம். நீங்க பாத்துக் கையெழுத்துப் போட்டுட்டீங்கன்னா முடிஞ்சிரும்” என்று அக்கவுன்ட்டன்ட் ஆரம்பித்தார்.

“அதென்ன, அஞ்சு நிமிஷ வேல. கவர் கொண்டு வந்திருக்கிங்கல்ல?”

‘கவர்’ என்றதும் கலவரமானார் அக்கவுன்ட்டன்ட். “ஒரு நிமிஷம் மேடம். இதோ வந்துடறோம்” என்று ஆனந்தை இழுத்து கொண்டு அறைக்கு வெளியே வந்தார்.

“தப்புப் பண்ணிட்டேன் தம்பி. கவர் எடுத்தேன். காஷ் எடுக்க மறந்துட்டேன். ஒங்கட்ட பணம் இருக்குமா தம்பி?”

“எதுக்கு ரஹீம் சார்?”

“கப்பங்கட்டத்தான், இந்த பொம்பளக்கி ரெண்டாயிரம் ரூவா கவர்ல வச்சுக் குடுக்கணும். அப்பத்தான் சனியன் கையெழுத்துப் போடும்.”

“லஞ்சமா?”

“அப்படித்தான் வச்சுக்குங்க. ஒங்கட்ட காஷ் இருக்கா தம்பி?”

“நாமதான் நேர்மையான பிஸினஸ் பண்றோமே ரஹீம் சார், பின்னே எதுக்கு லஞ்சம் குடுக்கணும்?”

“அதனாலதான் ரெண்டோட போகுது. கோல்மால் பிஸினஸாயிருந்தா பத்து பதினஞ்சுன்னு கறந்துருவாங்க. இது வருஷா வருஷம் அஸஸ்மென்ட் டைம்ல கட்ற மாமூல் தம்பி. கேள்வி கேக்கவே முடியாது. இந்த மாதிரி ஜென்மங்களைப் பாக்க ஒங்க அப்பாவுக்குப் புடிக்கவே புடிக்காது. அதான் அவர் இங்கேயெல்லாம் வர்றதில்ல. சரி அதிருக்கட்டும், ஒங்கட்டக் காஷ் இருக்கா இல்லியா?”

“சட்டுப்புட்டுன்னு இந்த லஞ்ச லாவண்யாவுக்கு அழுதுட்டுக் கெளம்புவோம்.”

லஞ்ச லாவண்யா! இவனுடைய லாவண்யாவின் அம்மா. வருங்கால மாமியார்.

ஆனந்த் ஜடமாகிப் போனான். எந்திரம் மாதிரி பான்ட் பாக்கெட்டில் கையை விட்டு வாலட்டை எடுத்து அக்கவுன்ட்டன்டிடம் நீட்டினான்.

அவர், பிரித்துப் பார்த்துவிட்டு, “ஆயிரம் ரூவா இருக்கு எடுத்துக்கவா” என்றார்.

இவன் தலையாட்டினான்.

அக்கவுன்ட்டன்ட்டுக்கு திருப்தியில்லை. “ரெண்டாயிரம் தரணும். ஷைத்தான் என்ன சொல்லப் போகுதோ. ட்ரை பண்ணிப் பாப்பம் உள்ள வாங்க தம்பி.”

உள்ளே போய் உட்கார்ந்தார்கள்.

எதிரேயிருந்த தாய்க்குலத்தை ஆனந்த் ஆத்திரத்தோடு பார்த்தான். “முப்பது வருஷங் கழித்து கடவுளே என்னுடைய லாவண்யா இவளைப் போல இருக்கக் கூடாது. இருக்கவே கூடாது.”

தயங்கித் தயங்கி அக்கவுன்ட்டன்ட் சுவரை நீட்டினார்.

“எவ்வளவு சார் இருக்கு?”

“தவ்ஸண்ட் இருக்கு மேடம்.”

“ஏன் சார், நீங்க என்ன மொதல் தடவையா வர்றீங்க? ரேட் தெரியாதா ஒங்களுக்கு?”

“பாலன்ஸ் நாளக்கிக் கொண்டு வந்து தர்றேன் மேடம்.”

“அப்ப புக்ஸ் எல்லாம் இங்க இருக்கட்டும். நாளக்கி பாலன்ஸ் கொண்டு வந்து குடுத்துட்டு எடுத்துட்டுப் போங்க.”

ஆனந்தைக் கூட்டிக் கொண்டு அக்கவுன்ட்டன்ட் வெளியேறினார்.

ஆஃபீஸில் அப்பாவின் முன்னால் போய்த் தொப்பென்று உட்கார்ந்தான். நடந்த விஷயங்களை அக்கவுன்ட்டன்ட் சொல்லி விட்டுப் போனார். அவர் போன பின்னால் அப்பா இவனிடம் பேச்சுக் கொடுத்தார்.

“என்ன ராஜா, மாமியாரப் பாத்தியா?”

ஆனந்த் ஒன்றும் பேசாமலிருந்தான். அப்பாவே தொடர்ந்து பேசினார்.

“ஆனந்த், பழைய சினிமாப் பாட்டு ஒண்ணு எனக்கு ஞாபகத்துக்கு வருது. சிவாஜி நடிச்ச தெய்வப்பிறவி படம். கட்டடத்துக்கு மனைப்பொருத்தம் அவசியம்ங்கற அந்தப் பாட்டுல ஒரு வரி வருது பார், மட்டச்சுத்தம் பாத்து வீட்டக் கட்ட வேணும். மாமியாளப் பாத்துப் பொண்ணக் கட்ட வேணும்னு அருமையான வரி அது. மாமியாள நீ பாத்துட்ட. இனி என்ன செய்யப் போற?”

ஆனந்த் மெல்ல வாயைத் திறந்தான். “லாவண்யா அவங்க அம்மாவப் போல இல்ல டாடி.”

“ஒனக்கு அப்படித்தான் ராஜா தெரியும். தாயப்போல பிள்ள நூலப் போல சேலன்னு சொல்லிவச்சிட்டுப் போயிருக்காங்க. யோசிச்சிக்க.”

அப்பாவின் முன்னே என்ன நியாயத்தை எடுத்து வைப்பது என்று தெரியாமல் ஆனந்த் தலை கவிழ்ந்து உட்கார்ந்திருந்தான்.

அப்பா தொடர்ந்து பேசினார்.

“ஆனந்த், ஊழல், லஞ்சம் எல்லாம் இந்தக் காலத்துல சர்வ சாதாரணம் தான். ஆனா அத ஒரு பொம்பள செய்யற போது நம்மால தாங்கிக்க முடியலப்பா. ரொம்ப விகாரமாத் தெரியுது. இன்னுஞ் சொல்லப் போனா, கற்பு மாதிரியான சமாச்சாரம் இது. கற்புங்கறது இரு பாலருக்கும் பொதுன்னு ஏட்டுல எழுதி வச்சிருக்காங்களே யொழிய நடைமுறைல அப்படியில்ல. ஆண் கெட்டுப் போனா சம்பவம், பெண் கெட்டுப் போனா சரித்திரம்ங்கறதுதான் நடைமுறை. லஞ்ச ஊழலும் அப்படித்தான். இந்த வகயில லாவண்யாவோட அம்மா சரித்திரம் படச்சிட்டிருக்கா. பொம்பளைங்க எல்லாம் லஞ்சம் வாங்குவாங்கன்னு நா நம்பவேயில்ல, இந்த அம்மாவப் பாக்கறவரக்யும். லாவண்யாவோட அம்மா ரேட் பேசற ஜாதிடா ராஜா. இந்தக் குடும்பத்துல பெண் எடுத்தா நமக்கு ஸூட் ஆகுமான்னு பார். ரஹீம் சார் உர்துல சரியாச் சொல்லுவார். ஹராம் பைசான்னு. ஒன்ன டிஸ்க்கரேஜ் பண்றேன்னு நெனைக்யாத. நா மஹாத்மா காந்திய பூஜிக்கிறவன்னு ஒனக்குத் தெரியும். அப்புறம் உன் இஷ்டம்.”

அன்றைக்கு ராத்திரி ஆனந்துக்குத் தூக்கம் பிடிக்கவில்லை.

அடுத்த நாள், வணிக வரி வளாகத்துக்குப் போகப் பிடிக்கவில்லையானாலும், அக்கவுன்ட்டன்ட் தனியாய்ப் போனால் பஸ்ஸில் அவதிப்படுவாரே, அவரைக் காரில் கூட்டிக் கொண்டு போய், திரும்ப ஒருமுறை புண்ணியங் கட்டிக் கொள்ளலாமே என்று அவரோடு போனான்.

அழைப்பு வருவதற்காக அறைக்கு வெளியே அக்கவுன்ட்டன்ட்டோடு காத்திருந்த போது கொஞ்சமும் எதிர்பாராமல் அங்கே ப்ரசன்னமானாள் லாவண்யா.

“ஹாய் ஆனந்த் நீ எங்க இங்க?”

அவளைப் பார்க்கிற போது வழக்கமாய மனசில் வீசுகிற தென்றல் இன்றைக்கு வீசவில்லை. ஒப்புக்கு, அவளுடைய கேள்வியையே இவன் திருப்பிக் கேட்டான்.

“நீ எங்க இங்க?”

“எங்கம்மாவப் பாக்க வந்தேன். அம்மாவுக்கு லஞ்ச் கொண்டு வந்திருக்கேன். ஆமா, நீ?”

“நானும் ஒங்கம்மாவப் பாக்கத்தான் வந்தேன். நீ லஞ்ச் குடுக்க வந்திருக்க, நா லஞ்சங் குடுக்க வந்திருக்கேன்.”

லாவண்யா ஆடிப் போனாள். எட்டி அவனுடைய கையை இறுகப் பற்றிக் கொண்டாள். கை நடுங்கியது, குரலும். “ஆனந்த்! என்ன சொல்ற நீ?”

“எல்லாம் சொல்றேன், எங்கூட வா” என்று ஆனந்த், அக்கவுன்ட்டன்ட்டிடம் சொல்லிக் கொண்டு, லாவண்யாவோடு வளாகத்தை விட்டு வெளியே வந்தான்.

காரில் உட்கார்ந்து அவளிடம் எல்லாவற்றையும் விவரமாய்ச் சொன்னான். பேயறைந்த முகத்தோடு கேட்டுக் கொண்டிருந்தாள் லாவண்யா. பிறகு, ரெண்டு கைகளாலும் முகத்தைப் பொத்திக் கொண்டு பொங்கிப் பொங்கி அழுதாள்.

அழுகைக்கு நடுவே சில வாக்கியங்கள் வெளிவந்தன. கண்ணீரில் தோய்ந்து.

“எங்கம்மா நாங் கேட்டு எதுவும் இல்லன்னு சொன்னதில்ல ஆனந்த். எதக் கேட்டாலும் மறுக்காம ஒடனே வாங்கிக் குடுப்பாங்க. புது டிரஸ், வாட்ச், கம்ப்யூட்டர், ஸ்கூட்டர்…. இப்பத்தான் புரியுது ஆனந்த். எல்லாமே லஞ்சப்பணம்.

பாட்டால ஒரு புது மாடல் செருப்புப் பாத்தேன். காஸ்ட்லி செருப்பு. ஆயிரம் ரூபா. அம்மாட்ட சொன்னேன். நேத்து ஆஃபீஸ்லந்து வரும்போது வாங்கிட்டு வந்துட்டாங்க. இப்ப தெரியுது. ஒங்கட்டயிருந்து புடுங்கின லஞ்சத்துல தான் எனக்கு இந்தச் செருப்பு வாங்கியிருக்காங்க. செருப்பு இல்ல இது, நெருப்பு!”

இந்த இடத்தில் லாவண்யா நிறுத்தினாள். பிறகு மெல்ல “நெருப்பு நெருப்பு” என்று ஆரம்பித்தவள், “நெருப்பு நெருப்பு நெருப்பு” என்று வால்யூமைக் கூட்டிக் கொண்டே போனாள்.

ஆனந்த் அவளைப் புதிராய்ப் பார்த்துக் கொண்டிருக்க, லாவண்யா காரிலிருந்து இறங்கி, வணிகவரி வளாகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த அவளுடைய ஸ்கூட்டரைக் கிளப்பி, அதில் ஏறிக் கொண்டு பறந்தாள்.

ஆனந்த் அடித்துப் பிடித்துக் கொண்டு காரில் அவளைப் பின் தொடர்ந்தான்.

லாவண்யா தன்னுடைய வீட்டையடைந்து பூட்டைத் திறந்தாள். உள்ளே ஓடிப்போய் நெருப்புப் பெட்டியை எடுத்து வந்து, ஸ்கூட்டரின் பெட்ரோல் டாங்க்கைத் திறந்து அதற்குள்ளேயே நெருப்புக் குச்சியைக் கிழித்துப் போட்டாள். குபுக் கென்று நெருப்புப் பற்றிக் கொண்டு ஜெகஜ்ஜோதியாய்க் கொழுந்து விட்டு எரிந்தது.

திரும்பவும் உள்ளே ஓடினாள். தன்னுடைய விதவிதமான ஆடைகளையெல்லாம் அள்ளிக்கொண்டு வந்து அந்த நெருப்பில் போட்டாள். கம்ப்யூட்டரை சுமக்க முடியாமல் சுமந்து கொண்டு வந்து டமாலென்று போட்டாள். கைக்கடிகாரத்தைக் கழட்டிப் போட்டாள். ஆயிர ரூபாய்ச் செருப்பையும் நெருப்பில் எறிந்தாள்.

லஞ்ச சமாச்சாரங்களெல்லாம் சுடர்விட்டு எரிந்து கொண்டிருந்தன.

லாவண்யா, வீட்டைப் பூட்டி, சாவியை அந்த நெருப்புக்குள்ளே வீசினாள்.

உடுத்தியிருந்த உடையோடும் ஆனந்தை ஏறெடுத்துப் பார்த்தாள்.

வெறுங்காலோடும் வந்து காரை சமீபித்து ஆனந்த், அவளுக்குக் கார்க் கதவைத் திறந்து விட்டான், புன்னகையோடும் பெருமிதத்தோடும்.

நன்றி : க்ருஹஷோபா, அக்டோபர் 2003

(சுட்டும் விழிச்சுடராய்)

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *