அக்கினிக் குண்டத்தில் ஓர் அழகு ரோஜா

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: August 7, 2016
பார்வையிட்டோர்: 9,318 
 
 

கோவிலில் இறை அருள் வேண்டி ஹோமம் செய்யும் பொருட்டு ஓம குண்டத்தில் தீ வளர்த்துத் தெய்வீகச் சடங்கு செய்வார்கள் இது அதுவல்லாத சதை உணர்வுகளால் வருகின்ற உலகியல் உறவு நடை முறைக் குடும்ப வாழ்க்கையின் புனிதங்களையே களங்கப்படுத்தும் ஒரு திரிபுபட்ட நிழற் கோல மனிதர்களின் உயிர் வதை செய்யும் அக்கினிக் குண்டத்தையே மையமாக வைத்து வருகின்ற கதை வெறும் பகிடிக் கதை பேசவல்ல இதன் தொனிப் பொருள் கதையின் ஆழத்துக்குச் சென்று உயிர் மறவாத உண்மையைக் கண்டறிய வேண்டி இக் கதையைத் தொடரும் தார்மீக மனம் கொண்டு எழுதுகிறேன்

ஹரிணியின் மாமி வாய் பிளந்தால் உடல் ரீதியாகப் பற்றியெரியும் அக்கினிக் குண்டமே கண்ணில் படும் அவள் நாக்கிலே தீ வளர்த்து வசைபாடி உயிர்வதை செய்வது சர்வசாதாரணமாக நடந்தேறும் அதிலும் அவர்களுக்கு அவள் நெருங்கிய சொந்தம் வேறு அப்பாவின் ஒரே தங்கை என்ற உரிமை கோரும் உறவு நிலையையும் தாண்டி அவள் இருப்பு ஒரு கறை படிந்த தனி வட்டம்

அப்பாவை மணமுடித்த குற்றத்துக்காக அப்பாவி அம்மாவுக்கு அவளை அனுசரித்துப் போவது வேண்டுமானால் சகஜமாகப் படலாம் தார்மீக சிந்தனையையே தனது வாழ்க்கை வரமாகப் பெற்று வாழ்ந்து கொண்டிருக்கும் ஹரிணியைப் பொறுத்தவரை மாமியின் நெறி தவறிய வாய்க் கொழுப்பினாலான இந்த அக்கினிக் குண்டமே அவள் முன் ஒரு பெரும் சவால் தான் அதை எதிர் கொண்டு தர்மத்தை நிலை நாட்டி மாமிக்கு வேதம் சொல்ல ஒரு காலம் பிறக்காமலா போகும் அப்படி அவள் கேள்விகள் கேட்டுப் பேசத் தொடங்கினால் அப்பாவுக்கு மனம் நொந்து போகும் என்று கருதியே நெடுநாளாய் அவள் பூண்டிருக்கும் இந்த மெளனகவசம்

நேர்கோடாக இல்லாமல் இடறி வீழ்த்துகின்ற உயிர் வதைக்கு முகம் கொடுத்தே பழகி மனம் நொந்த வாழ்க்கைப் பயணம் அவளுக்கு அதைச் சீர் செய்து நிமிர்த்த வேண்டுமென்பதே அவளின் அறிவு விழிப்புடன் கூடிய ஓர் இலட்சியக் கனவாக இருந்தாலும் வாழ்க்கை போகிற போக்கில் அது சரி வருமென்ற நம்பிக்கை வேர் விட்டுக் கழன்று போய வெகு நாளாகிறது அதற்கு ஒரு யுகம் கூடச் செல்லலாம் அல்லது உயிர் விடும் போது அது ஈடேறாத வெறும் கனவாகவே காற்றில் நிழல் கொண்டு கரைந்து போகும்

சலன வாழ்க்கையும் அப்படித் தான் வெறும் நிழல் என்ற பாடம் படிக்க வெகு நாள் பிடித்தது வாழ்க்கை மீது கண்மூடித்தமான பற்று வைத்து வாழ்கிற நிழல் திரிந்த மனிதர்கணிடையே சத்திய உயிர் மூச்சுக் கொண்டு உலாவும் அவள் ஓர் மறு துருவம் மாதிரி வாழ்க்கை மாய வலைக்குள் சிக்கித் தடுமாறும் மனிதர்களின் பார்வைக்கு எடுபட மறுக்கும் யதார்த்தத்தையே அடியொற்றிச் செல்லும் தன் புனிதமான உண்மை மனதின் பிரக்ஞைக்கு அகப்படாமல் நழுவிப் போகும் இருப்பு நிலை குறித்து கடவுளுடன் மட்டுமே அவளால் பேச முடிந்தது

கடவுள் கண் திறந்து பார்த்தால் தான் எதிர் மறையாகத் தோன்றுகின்ற இந்த மிகவும் பாரதூரமான வாழ்க்கையின் சவால்களுக்கு ஒரு முடிவு கிட்டும் அப்படி நடக்கிற மாதிரியும் தெரியவில்லை தறி கெட்ட மனிதர்கள் வாயைத் திறந்தால் வருவது ஒரே நெருப்பு மழை தான் அதிலிருந்து தப்பிக் கரை ஒதுங்கவும் வழி தெரியவில்லை குடும்ப உறவுகளின் தலையீடுகள் சாகும் வரை தொடரும் அப்படித் தான் சண்டித்தனம் மிக்க சொந்த மாமியின் வாய்க் கொழுப்புக்கு அன்றாடம் இரையானது அவள் மட்டுமல்ல ஒன்றுமே அறியாத அப்பாவி அக்காவை அவள் காலில் போட்டு மிதிக்காத குறையாகத் தினம் தினம் அவள் கரித்துக் கொட்டுவது தான் அவளுக்கு பெரிய மனக் குறையாக இருந்தது

மாமியின் உயிர் வதையாய் தோன்றுகின்ற கடும் போக்குப் பிரசன்னம் அவர்கள் வீட்டில் காலை பத்து மணிக்கெல்லாம் தவறாது நிகழும் மாமா ஓர் கல்லூரி ஆசிரியர் பள்ளியில் படிப்பித்தாலும் மாமியின் சொற்பேச்சுக்கு முன்னால் அது எடுபடுவதில்லை மாமியின் அரசாட்சியே கொடிகட்டிப் பறக்கிற நிலைமை தான் அது அவரை மணந்த உரிமைப் போக்கில் தொண்டைத் தண்ணீர் வற்ற அவரைத் தூக்கி எறிந்து அவள் பேசினாலும் கேட்க நாதி இல்லாமல் போனஒரு வெறும் மனிதன் தான் அவர் அவர்களுக்குப் பிள்ளைகளும் கிடையாது மாமிக்கு ஊர் மேய்கிறதைத் தவிர வேறென்ன வேலை? மாமா வேலைக்குப் போன பின் அதே மலட்டுத் தோரணை மாறாமல் அவள் வருவது தான் ஒரு யமனின் பிரசன்னம் போல அவர்களைக் குலை நடுங்க வைத்து அப்படி அவர்கள் குடை சாய்வது ஒரு கருந்தீட்டு நிழலாய் அவ் வீட்டையே சூறையாடிக் கொளுத்துகிற நிலைமையில் ஹரிணிக்கு மட்டும் வாய் துடிக்க அவளுக்கு வேதம் கற்பிக்க ஏதாவது ஒளி தெறித்த வார்த்தைகளாக ஆவேசம் கொண்டு பேச வேண்டும் போல் மனம் அடங்காமல் பொங்கிச் சரிகிற நிலை வந்த போதும் அவள் சினம் காத்துத் தவம் கிடப்பதெல்லாம் அப்பா ஒருவருக்காக மட்டுமே அது ஓரு வாழ்க்கை வேள்வி போல் தொடர்வதை யார் தான் அறிவர் அவரின் வாழ்வின் பண்பு நிலை தவறாத ஆன்மீக சத்தியமே தன்னிலும் உயிர் கொண்டு நிலைத்திருக்கிற மாதிரி உணரும் நிலையில் வாழ்க்கையைத் தடம் புரட்டிப்பேசிச் சேறு பூசிக் கொள்கிற மாதிரி வாய்க்கு வந்தபடி பேச அவளுக்கு மனம் வருவதில்லை அடங்காத மாமி முன் இந்த மெளன கவசம் எத்தனை நாளைக்கு எடுபடுமென்று புரியவில்லை அப்பா இருக்கும் வரை தான் அவள் பேசாமடந்தை. அவர் காலத்திற்குப் பிறகு சத்தியத்தை நிலை நாட்ட அவள் தயங்காது முன்னின்று போர்க்கொடி தூக்கியே ஆக வேண்டிய தார்மீகப் பொறுப்பு தனக்கிருப்பதாக அவள் மிகவும் நம்பிக்கையுடன் நினைவு கூர்ந்தாள்

அவள் அப்பா கார்த்திகேயன் சைவநெறி தழைத்தோங்கத் தன்னை அர்ப்பணித்து வாழ்ந்த ஓர் இறை தொண்டன் தமிழில் பாண்டித்தியம் பெற்ற ஒரு தமிழ் பண்டிதனாகக் கல்லூரியில் பணி புரிந்த ஒரு நல்லாசான் அவரின் மாசற்ற பிறவிப் பெருமைகளை பிரதிபலிக்கவென்றே ஹரிணி அவர் நிஜத்தின் மாறுபடாத உயிர்ப் பிழம்பின் சாயலையே உள் வாங்கிக் கொண்டு பிரகாசிக்கும் ஒரு சத்தியதேவதையாகக் களை கட்டி நிற்பது அசுர மாமியின் மாயக் கண்களுக்குப் புலப்படாத ஒரு மறை பொருள் காவியமாக இருந்து வந்த நிலையில் தான் எதிர்பாராத ஒரு பெருஞ்சோகத்துக்கு அவள் முகம் கொடுக்க நேர்ந்தது திடீரென்று நேர்ந்த அப்பாவின் இழப்பு அவளை உலுக்கிய விதம் அப்படி தன் மானஸீக குருவையே இழந்து விட்ட தவிப்பில் அவள் இருந்த நேரம் அதற்கு முன்னரே அம்மா போய் விட்டாள் இந்த இழப்புகளைச் சொல்லி அழ உடன்பிறப்புகள் இருந்தாலும் அவர்கள் சொந்த இருப்பிலிருந்து வேர் விட்டுக் கழன்று போய் வெகு நாளாகிறது எல்லோருக்கும் கல்யாணமாகி தனிக் கூட்டுக்குள் சுருங்கி விட்டது அவர்கள் உலகம் பெரியண்ணா வரதனுக்குக் கண்டியில் வேலை. குடும்ப இருப்பு மாறினாலும் உயிராகப் பேணி வளர்த்த மூன்று தங்கைகள் மீதும் அவன் அதீத பாசத்தையே கொண்டிருந்தான். அது பின்னொரு சந்தர்ப்பத்தில் கண்கூடாகப் புலனாகியது அக்கா இந்து கொழும்பில் இருக்கிறாள் மது அக்காவுடன் கூட இருப்பது ஹரிணி மட்டும் தான் மதுவுக்கும் கல்யாணமாகி விட்டது. இருக்கிற வீட்டை அவளுக்கே சீதனம் கொடுத்து அவளை ஊரோடு தங்க வைத்து விட்டார் அப்பா. அவள் கணவன் பாபுவிற்குக் கச்சேரியில் வேலை ஒரு சாதாரண எழுதுவினைஞன் அவன் ஆள் கொஞ்சம் முரட்டுப் பேர்வழி அவனைச் சமாளிப்பதே மது அக்காவிற்குப் பெரிய சவால்

எனினும் மாமி அவளை விட்டு வைக்கவில்லை இப்படித் தான் அப்பா இறந்த போது அவருக்குக் கிரியை செய்து தகனம் முடிந்த பிற்பாடு மாத முடிவில் அந்தியேஷ்டி செய்வதற்காகப் பெரியண்ணா மட்டும் வீட்டில் தனியாகத் தங்கியிருந்த நேரம், அவர்களுக்கு ஆலோசனை கூறும் ஒரு மந்திரி கணக்கில் மாமியின் வருகை தினமும் நிகழும் காலை வேளை வந்து பெருங்குரலெடுத்து ஒப்பாரி வைக்கவும் அவள் தவறுவதில்லை இப்படித் தான் அந்தியேஷ்டி நாளுக்கான ஏற்பாடுகளை முன்னெடுக்கும் தருணங்களில் அவள் தலையீடு சுயமாகவே நடந்தேறும் அன்றைய நாளுக்கு முதல் நாள் மாலை ஹரிணி தனியாக இருந்து மறு தினம் நடக்க இருக்கிற பெருஞ் சமையலுக்காக கத்தியால் காய்கறிகள் வெட்டிக் கொண்டிருந்த போது மது கூட வராமல் மனதில் சோகம் கனக்க ஒற்றை ஆளாக வாசலில் நின்று வெறும் வானத்தையே வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்த போது திடுமென்று மாமி உள்ளே நுழைவது ஒரு பொறிப்படலமாய் கண்களைச் சுட்டது. அப்போது அண்ணாவும் கூடவே இருந்தான். அவள் அதையெல்லாம் கண்டு கொள்ளாத மாதிரி, முகம் இறுகிய பாவனையோடு மதுவை மட்டுமே கணக்கெடுத்த நிலையில் தோள் குலுக்கி அவள் பார்த்த பார்வையின் கனத்துக்கு முன்னால் உலகமே எகிறிக் குதித்து வேர் கழன்று போவது போல, எல்லாம் கனல் கொண்டு பற்றியெரிவதைக் கண்கூடாகப் பார்த்த சோகம் அடங்க ஹரிணிக்கு வெகு நேரம் பிடித்தது

உயிரையே காவு கொள்ளும் அந்தப் பெருந்தீ அணையாத நிலையிலேயே விழுக்காடு கண்ட அண்ணனும் வாயைத் திறந்து ஏதோ சொல்வது போலிருந்தது அதைக் காது கொடுத்துக் கேட்பதற்காக அவளும் சிரத்தையோடு மனம் குவிந்தாள்

“அவன் சொல்வது கேட்டது

“நாங்கள் ரோஜாப் பூ மாதிரி இதுகளை வளர்த்தம் இந்த இரண்டு தங்கைச்சிகளும் எனக்கு உயிர் போல என்ரை உயிரையே நெருப்பு வைச்சுக் கொளுத்துகிற மாதிரி என்ன சொல்ல வாறியள் மாமி?

“ நான் என்ன சொல்லுறது ஊரே சொல்லுது உன்ரை தங்கைச்சிகளுக்கு அதுவும் குறிப்பாக மதுவுக்கு செய்காரியம் பத்தாது “பிள்ளை குட்டிகளை வளக்கத் தெரியாது அங்கை பார் அது நிக்கிற நிலையை அது தான் பாத்து நெளிச்சனான்”அவள் வாய் திறந்து மூண்டெரியும் தீ வளர்த்த அந்த அக்கினிக்குண்டத்தின் அடங்காத சுவாலையினுள் அகப்பட்டு உணர்வுகள் கருகி வீழ்ந்து நிற்கும் மதுவைப் பார்த்த மனக் கொதிப்போடு ஆவேசம் கொண்டு அவன் சொன்னான்

“போதும் மாமி உங்கடை செய்காரிய வேதம் உங்கடை வீடு இதை விடக் கேவலம் எவர்சில்வர் டம்ளரெல்லாம் சேறு குளிக்குது எத்தனை நாள் கறையோ யார் கண்டது அதுவுமல்லாமல் வருத்தத்தைச் சொல்லியே உங்கடை அடுப்பிலே பூனை தூங்குதே இதுக்கு மேலே உங்கடை குடும்ப லட்சணத்தைப் பாட ஒரு அகராதியே என்ரை கையிலை இருக்கு பேசாமல் வாயை மூடிக் கொண்டு போங்கோ

இதை கூறி முடிக்குமுன்பே சத்தியம் பிசகாத அருள் வேத வாக்காகக் குரலை உயர்த்தி ஹரிணி சொல்வது கேட்டது

“இதைத் தான் நானும் சொல்ல நினைச்சேன் எத்தனை நாளைக்கு இந்த மிலேச்சத்தனமான பகல் வேஷம் உங்களுக்கு மாமி அது தான் அண்ணா நார் நாராய் உங்களைக் கிழிச்சுப் போட்டது பத்தாதென்று நானும் கேக்கிறன் மாமி ரோஷம் இருந்தால் சொல்லுங்கோ வருத்தத்தைச் சாட்டி நீங்கள் இப்படி ஊர் மேஞ்சு எவ்வளவு யுகமாகிறது “

“போதும் நிறுத்தடி எனக்கொன்றும் நீ பாடம் படிப்பிக்க வேண்டாம் என்னை நீங்கள் ஆரும் கடைசிக் காலத்திலை பாக்கவும் வேண்டாம் வழியை விடு இப்ப நான் போறன் “

ஒரு ரோஜாவை எரிச்ச பாவம் உங்களுக்கு அதையும் நான் இருந்து பாக்கத் தான் போறன் என்று ஹரிணி சொன்னது அவள் காதில் விழவில்லை இப்படித் தான் ரோஜாவை எரிக்கத் துணிந்த மனிதர்களும் கதி மோட்சமின்றிக் காட்டில் விடப்பட்ட கதையாக நிழல் தரித்து நிற்பது ஒரு காட்சி வெறுமையாகக் கண்களையே குத்தி விட்ட நினைப்பில் அவள் வாசல் கடந்து போகும் வரை அவள் சிலைவடித்த பொம்மையாக உறைந்து போய் நின்றது வெறும் கனவல்ல உண்மை தான் என்று பிடிபட வெகு நேரம் பிடித்தது அவனுக்கு மாமியின் வாயினுள் அக்கினிக் குண்டமாய்ப் பற்றியெரிந்த அடங்காத தீச்சுவலையினுள் அகப்பட்டுக் கருகி ஓழிந்து போன வெறும் நடைப் பிணமாய் வாசலில் உறைந்து போய்த் தனிமையில் நின்று கொண்டிருந்த மதுவைக் கண்டு மனம் பொறுக்காமல் அவளருகே வந்த ஹரிணி ஆன்மீக விழிப்புடன் கூடிய சத்திய தரிசனமான உயிர் வேதத்தையே நினைவு மறக்காத மனதை வருடிக் கொடுக்கும் பெருங் கருணையோடு அவள் முகத்தை நிமிர்த்திக் கூர்ந்து பார்த்தவாறே சொன்னாள்

“அழ வேண்டாம் மதுவக்கா எல்லாம் ஒரு நிழல் மாதிரி மாமியின் இந்த வாய்க் கொழுப்பைக் காலம் தின்று விடும் அவள் நின்றது குரலில் சூடேறிப் பேசினதெல்லாம் வெறும் கனவுதான் என்று நம்பத் தொடங்கினால் இந்த மாமியென்ன எல்லாமே காணாமல் போய் விடும். ஒரு கனவு தான் எங்கடை வாழ்க்கை”

அவள் சொன்ன சத்தியம் காற்றில் எடுபடாமல் தனக்குள்ளே பிரகடனமாக ஒலிப்பதைக் கிரகித்து ஏற்றுக் கொண்டு விட்ட மகிழ்ச்சியில் மது போதை தெளிந்து நிற்பது போல் மதுவின் முகம் களை கொண்டு நிற்கும் ஒளி நிறைந்த பாதையில் மாமி வளர்த்த அக்கினிக் குண்டமென்ன அவள் முகமே ஹரிணியின் நினைவுக்கு வர மறுக்கிற சுழலில் எல்லாமே அவளுக்கு அடியோடு மறந்து போனது உடல் நினைப்போடு வாழ்ந்து தேயும் அவ் வீடு பற்றிய ஞாபகம் கூடக் கண்களுக்கு எட்டவில்லை

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *