டக் டுடும் டக் டக்
டக் டுடும் டக் டக்
ஒவ்வொரு முறையும் இராணுவமும் புலிகளும் மோதிக்கொள்ளும் போதும் எனக்கேன்னவோ அவர்கள் ராஜாதி ராஜா படத்தில் வரும் “வா வா மஞ்சள் மலரே” பாட்டின் ஆரம்ப இசையை இசைக்கிறார்களோ என்ற சந்தேகம் தான் வருவதுண்டு. எம்மோடு மெதுவாக நடக்க ஆரம்பித்த மழை இன்னும் சன்னமாகவே பெய்து கொண்டு இருந்தது. தீபாவளிக்கு அளவுக்கதிகமாக சாப்பிட்ட அக்கா சமைத்த ஆட்டிறைச்சி கறி வயிற்றுக்குள் கடகட என்றது. இப்போதைக்கு இந்த கூட்டத்தில் ஒதுங்க முடியும் என்று தோன்றவில்லை. சைக்கிளை எங்கே நிறுத்துவது? இப்போது தான் செம்மணி சுடலை தாண்டியிருக்கிறோம். கண்டி வீதி இணையும் போது இன்னும் சனநெரிசல் கூடும் என்று பலர் பேசிக்கொண்டது கேட்டது. சைக்கிளின் பின்னாலே கட்டி இருக்கும் suitcase ஒருபக்கம் சரிவது போல ஒரு பிரமை. சைக்கிளை நிறுத்தி சரிசெய்ய நேரமில்லை. விடிவதற்குள் வலிகாமம் தாண்டவேண்டுமென்பது உத்தரவாம். அக்காவின் சைக்கிளுக்கு வேறு காற்று போய் விட்டது. காற்றில்லாத சைக்கிளில் அந்த பெரிய suitcase ஐ வைத்து உருட்ட சிரமப்பட்டுகொண்டிருந்தாள். நானும் அவளும் தான். எம்மோடு வந்த அயலவர்கள் எல்லாம் கூட்ட நெரிசலில் மாறுபட்டு விட்டார்கள்.
“அறுவாங்கள், இப்பிடியா எல்லா சனத்தையும் அலைக்கழிக்க வேணும். கொஞ்சம் கொஞ்சமா அனுப்பியிருக்கலாம்”
“எனே, இப்பிடி செய்தாதான் நீங்க எல்லாம் அசைவீங்க, இல்லாட்டி, ஆடு, கன்னுகுட்டி எண்டு கட்டி பிடிச்சு கொண்டு பங்கருக்க கிடந்திருப்பீங்க, ஆர்மி கோப்பாய்க்கு வந்திட்டாம் எண்டு ஒரு கதை நிலவுது, குமருகளையும் வச்சுகொண்டு ஏன் தேவையில்லாத ஆக்கினை?”
உண்மை தான். நேற்று முன்தினம் கூட ஆர்மி ஏவிய ஒரு செல் உரும்பிராய் பகுதியில் நேரே ஒரு பங்கருக்குள் விழுந்து ஒரே குடும்பத்தை சேர்ந்த ஆறு பேர் இறந்து போனார்கள். கடைசி மகன் மட்டும் பயத்தில் சிறுநீர் கழிக்க வெளியே சென்றிருக்கிறான். இப்பிடி பல சம்பவங்கள், வைத்தியசாலை முழுதும் ஒரே மரண ஓலம் தான். இன்று மாலை வலிகாமம் மக்கள் எல்லோரையும் வடமராட்சி, தென்மராட்சிக்கு இடம்பெயர சொல்லும் அறிவித்தல் வந்த போது எனக்கு அதில் சந்தோசமே. அடுத்த இரண்டு வாரத்துக்கு பாடசாலை இருக்காது, ஒரே விளையாட்டு தான். ஆனால் அக்கா ஏனோ பேயறைந்தவள் போல இருந்தாள். இந்த நேரம் பார்த்து அப்பாவும் அம்மாவும் கொழும்பில், நானும் போயிருக்க வேண்டியது. இரண்டாவது நேர்முகத்தேர்வில் எனது பாஸ் விண்ணப்பம் மறுக்கப்பட்டது. அம்மாவுக்கு மட்டும் அனுமதி கொடுத்தார்கள். எனக்கு வயது கட்டுப்பாடாம், இருபத்தைந்து வயது கடந்தால் தான் அனுமதி. அதற்கு இன்னும் பன்னிரண்டு வருடங்கள் காத்திருக்க வேண்டும். 2007 இல் தான் அனுமதி கிடைக்கும். கொழும்புக்கு போய் அங்கே இருக்கும் பேராதனை பூங்காவை ஒரு முறை பார்க்க வேண்டும். அங்கே எல்லா இடமும் ஒரே பூக்கள் மயம் என்று ஐந்து வருடங்களுக்கு முன்னர் சுற்றுலா போய் விட்டு வந்த அக்கா கதை கதையாக சொல்லுவாள். நல்லகாலம் sweater ஐ கவனமாக எடுத்து வைத்திருந்தேன்.
ஆடியபாதம் வீதி வரை தொடர்ந்து வந்த ஹீரோவையும் காணவில்லை. திரும்பி போயிருக்குமோ? நாய்கள் எந்த சூழ்நிலையையும் சமாளிக்கும் என்று நினைக்கிறேன். அக்கா அதிகம் பேசாமலேயே வந்தாள். எங்கே கூட்டி போகிறாள் என்று தெரியவில்லை. திருநெல்வேலிக்கு அப்பால் தனியாக ஒருநாளும் அவள் சென்றதில்லை. கேட்டபோது சாவகச்சேரி செல்வதாக சொன்னாள். சாவகச்சேரி எப்பிடியான ஊர் என்று தெரியவில்லை. இத்தனை சனத்தை அந்த ஊர் தாங்குமா? சாவகச்சேரியில் அவளுக்கு யாரை தெரியும் என்றும் சொல்லவில்லை. எனக்கு எல்லாம் சொல்ல மாட்டாள். சிறுபிள்ளையாம். ரமணிச்சந்திரன் புத்தகம் தரமாட்டாள். கெட்டு போய்விடுவேனாம். அம்புலிமாவில் ஆற்றுக்குள் எத்தனை தடவை தான் கோடரியை போடுவது. இப்போது கூட சன்னமாக அழுகிறாள் போல, ஏன் என்று தெரியவில்லை. சொல்லவும் மாட்டாள். எதற்கும் துணிந்தவள் ,எப்படியும் சமாளிப்பாள். இத்தனை மனிதரை இடம்பெயர சொல்பவர்கள் அதற்குரிய ஆயத்தங்களை செய்யாமலா இருப்பார்கள். இவள் எதற்கு அழுகிறாள் என்று தான் தெரியவில்லை.
“கோப்பாய் வரைக்கும் தான் ஆர்மிகாரரிண்ட ஆட்டம். எப்பிடியும் இங்கால கரும்புலி பாஞ்சிடும் எண்டு கதைகிறாங்கள்”
“கோதாரி பிடிச்சவங்கள் எங்களுக்கு முதலே camp எல்லாம் கிளியர் பண்ணி கொண்டு போறாங்கள். எனக்கென்னவோ யாழ்பாணத்த விட்டிடுவாங்கள் போல தான் கிடக்கு”
“இப்பிடித்தான் அம்மா முன்னேறி பாச்சல்ல போன முறை வந்தவ. ஒரு நாளில பெடியளிண்ட பாச்சல்லில என்ன ஓட்டம ஓடினவ எண்டு தெரியும் தானே”
ஏன் சந்திரிக்கா இப்படி மாறிவிட்டார் என்று எனக்கு புரியவில்லை. சந்திரிக்கா ஆட்சிக்கு வந்தபோது எனக்கு சந்தோசத்தில் தலை கால் புரியவில்லை. எப்பிடியும் கூடிய சீக்கிரம் கொழும்பு போகலாம் என்று நினைத்தேன். பாலபட்டபெந்தி தலைமைலான பேச்சுவார்த்தை குழு helicopter இல் சென்ற வருடம் வந்தபோது நான் தென்னை மரத்தில் ஏறி நின்று வேடிக்கை பார்த்து தடக்கி விழுந்து பத்து போட்ட இடது கை இன்னும் சரியாகவில்லை.
“சிங்களவன் சோறு தருவான் ஆனா வேற ஒரு மண்ணும் தரமாட்டான், இந்தியவோடையும் கொளுவியாச்சு, இனி எங்கட கதை அவ்வளவு தான்”
என்று அப்பா அன்று சொன்னபோது என்னால் நம்ப முடியவில்லை. சந்திரிக்கா நீல புடவையில் வசீகரமாகவே இருந்தார். எங்களுக்கும் நிச்சயம் ஏதும் செய்வார் என்றே நம்பினேன். இனி எங்களுக்கு மின்சாரம் வரும், ஒளியும் ஒலியும் பார்க்கலாம், இனி எல்லாமே மாறும் என்று நினைத்து கொண்டிருந்த போது தான் பேச்சு வார்த்தை முறிந்த செய்தி உதயனில் வந்தது.
அக்கா பேசாமலேயே அருகில் நடந்து வந்து கொண்டிருந்தாள். முன்னாலே ஒரு ட்ராக்டர் இல் நான்கு ஐந்து குடும்பங்கள் பயணித்துகொண்டு இருந்தனர். அதிலிருந்த நாய் ஒன்று எல்லோரையும் பார்த்து குறைத்து கொண்டிருந்தது. நாய்க்கு என்ன தெரியும் cycle உருட்டும் கஷ்டம். அதற்கும் ஒரு பெட்டியையும் சைக்கிளையும் கொடுத்திருக்க வேண்டும். எப்போது திரும்புவோம் என்று தெரியவில்லை. இடம்பெயருவதில் எந்த பிரச்சனையும் இல்லை. ஆனால் வருகிற சனிக்கிழமை எங்களுக்கு ஒரு கிரிக்கெட் மேட்ச் இருக்கிறது. நூறு ரூபாய் பந்தயம். நடக்குமா? சரியான நேரத்துக்கு போகாவிட்டால் walkover குடுத்து விடுவார்கள்.
“அக்கா சனிக்கிழமைக்கு முதல் திரும்பிடுவமா?”
“சும்மா அரியண்டம் குடுக்காம வாடா”
“இல்லை அக்கா, முக்கியமான மேட்ச் இருக்கு”
“பேசாம வாறியா இல்லை பூசை வேணுமா?”
அக்கா தலையில் குட்டினால் வலி தாங்க முடியாது. நேற்றிரவு (a-b)(a+b) ஐ விரித்து எழுதியது தப்பாகியதில் குட்டியது இன்னமும் வலிக்கிறது. இன்றிரவுக்கும் நூறு முறை மீண்டும் மீண்டும் எழுத வேண்டும் என்று வீட்டு வேலை வேறு தந்திருந்தாள். நல்ல வேளை இன்றைக்கு கேட்க மாட்டாள் என்று நினைக்கிறேன். ஆனாலும் என்னுடைய பொருட்களை அடுக்கும் போது அவள் பள்ளிகூட புத்தகங்களையும் எடுத்து வைத்தது கொஞ்சம் புளியை கரைத்தது.
புலிகளின் வாகனங்கள் வரும்போது இடம் கொடுத்து ஒதுங்குவது தான் இங்கு பெரும் பிரச்சனை. அத்தனை மக்களும் கரையில் ஒதுங்கும் போது சைக்கிள்கள் எல்லாம் சாமான்களுடன் சரிந்து விழும். நைலோன் கயிற்றை எப்பிடி இறுக்கி கட்டினாலும் வழுக்கி விடும். நேரம் செல்ல செல்ல நகருவது சிரமமாகிக்கொண்டே வந்தது. சிலர் வீதியில் செல்லாமல் வயல்களுக்குள்ளால் சென்றால் வேகமாக செல்லலாம் என்று எண்ணி வீதியில் இருந்து விலகி இறங்கி சென்றனர். கொஞ்சம் தூரம் செல்ல ஒரு பெண் கூச்சலிடும் சத்தம் கேட்டது.
“சும்மா இருக்கேலாமா வயலுக்க இறங்கிச்சினம், கிணறு இருந்தது கவனிக்க இல்லை போல. ஒரு பொடி விழுந்துட்டுதாம்”
ஆர்மி போட்டிருந்த பரா வெளிச்சம் செம்மணி வெளி எங்கும் வியாபித்திருந்தது. பரா வெளிச்சம் போட்டால் தொடர்ந்து helicopter அல்லது குண்டு விமானம் வரும் என்பது ஈழத்து ஐதீகம். அந்த வெளிச்சத்தில் அக்காவின் முகம் இப்போது இன்னும் வெளிறி இருந்தது நன்றாக தெரிந்தது.
“தம்பி, மாறுபட்டா அப்பாண்ட பெயர் விலாசம் எல்லாம் சொல்லு. திரும்பி வீட்டு பக்கம் போயிடாத. சனத்தோடயே போ என்ன. அவங்கள் கூப்பிட்டா போயிடாத சரியா, வீட்டில ஒரே பிள்ளை நீ தான் எண்டு சொல்லு என்ன”
“பயபிடாதீங்க அக்கா, கூப்பிட்டா எடுபட்டு போறத்துக்கு நான் ஒன்னும் சின்னப்பிள்ளை கிடையாது. அடிபட எல்லாம் போமாட்டன். நான் ரகுமான் மாதிரி மியூசிக் போட போறன்”
எனக்கு ரகுமான் தான் எல்லாமே. வீட்டிலே ஒரு டைனமோ பூட்டிய சின்ன சைக்கிள் இருக்கிறது. ஒரு சின்ன ஸ்டீரியோ ரேடியோவும் இருக்கிறது. நானும் அக்காவும் ஐந்து பாட்டுக்கு ஒரு முறை ஆள் மாறி ஆள் மாறி சைக்கிள் மிதிப்போம். திருடா திருடா வில் வரும் தீ தீ பாட்டு இருக்கிறது இல்லையா. இலங்கை வானொலி வர்த்தக ஒளிபரப்பில் அது போகும் போது இரண்டு ஸ்பீக்கர் இலும் சத்தம் மாறி மாறி ஓடி திரியும். அதை கேட்டதில் இருந்து ஒருகாலத்தில் வந்தால் ரகுமான் மாதிரி வருவது என்று முடிவு செய்து இருந்தேன். “என் வீட்டு தோட்டத்தில்” பாட்டை நானும் அக்காவும் சேர்ந்து பாடும்போது SPB போல பல இடங்களில் சிரிப்பேன். ஒருமுறை ரெகார்ட் பண்ணி ரகுமானுக்கு அனுப்ப வேண்டும். அக்காளோடு சேர்ந்து பாட கூடாது. அவளுக்கு அடிக்கடி தாளம் தப்பும். நான் சொல்வதில்லை. சொன்னால் குட்டுவாள்.
“இன்னும் எவ்வளவு தூரம் நடக்கோணும் அக்கா?”
“நாவற்குழி பாலம் தாண்டினால் அங்கால சைக்கிள் உலக்கலாம், கொஞ்சம் சமாளிச்சுகொள்ளு”
என்னுடைய suitcase இன் நைலோன் கயிறு சிறிது விலகி suitcase ஒரு பக்கமாக சரிந்து போய்க்கொண்டிருந்தது. இப்போது உருட்டுவது இன்னும் கடினமாக இருந்தது. ஹான்ட்டிலின் இரண்டு பக்கமும் இரண்டு பைகள் வேறு. எல்லாமே புத்தகங்கள் தான். அக்காவுக்கு அடுத்த வருடம் உயர்தர பரீட்சை இருக்கிறது. அவள் தன்னுடைய எல்லா புத்தகங்களையும் என் சைக்கிளில் கட்டி விட்டாள். என்னுடைய GM கிரிக்கெட் பேட்டை எடுத்து சைக்கிளில் களவாக சொருகியபோது கண்டு பிடித்து விட்டாள். இப்போது அது வீட்டு முற்றத்தில் கிடக்கும் என்று நினைக்கிறேன். பின்வீட்டு ரவி திரும்புவதற்கு முன்னாள் நாங்கள் திரும்ப வேண்டும். இல்லாவிட்டால் அவன் எடுத்து விடுவான். அக்காவுக்கு இந்த பிரச்சனை எல்லாம் புரியாது. இன்னும் மூன்று வருஷம் போனால் எனக்கும் பதினாறு வயது. டெண்டுல்கர் அடிக்கிற ரன்ஸ் எல்லாம் ரேடியோவில் விடாமல் கேட்பாள். இவள் எல்லாம் எங்கே பாஸ் பண்ணி டொக்டர் ஆவது. பார்ப்போம்.
இரவு மணி பன்னிரண்டு தாண்டியிருக்கும். நல்ல காலத்துக்கும் செம்மணி சுடலையை தாண்டி விட்டோம். இந்த நேரம் அந்த வழியால் வரும் சனங்கள் தான் பாவம். செம்மணியில் மோகினி பிசாசு சுத்துவதாக அம்மா ஒரு முறை சொன்னபோது அக்கா அம்மாவை பார்த்து சிரிப்பாய் சிரித்தது ஞாபகம் வருகிறது. யாரோ சுஜாதா எழுதிய “கரையெல்லாம் செண்பகப்பூ” புத்தகமாம், அதில் இந்த மோகினி பிசாசு எல்லாம் ஏமாற்று கதை என்று எழுதியிருக்காம். அக்கா சில சமயம் கடவுளே இல்லை என்று கூட சொல்லும். இருந்தாலும் எனக்கு பேய் என்றால் காய்ச்சல் அனல் பறக்கும். இன்றைக்கும் இரவு பாத்ரூம் போவதென்றால் வீட்டில் யாராவது துணைக்கு வர வேண்டும், “Eagle Death” படத்தில் சுவற்றுக்குள்ளால் ஒரு கை வருவது போல ஒருநாள் பாத்ரூம் இல் உண்மையிலேயே ஒரு கை வந்தது. அம்மாவை கூப்பிட்டவுடன் ஓடி விட்டது. அன்றில் இருந்து பாத்ரூம் கதவு கூட சாத்துவதில்லை. அக்காவுக்கு இந்த பயம் எல்லாம் இல்லை. வீட்டில் பாம்பு வந்தால் கூட அக்கா தான் முதல் ஆளாய் தும்புத்தடியுடன் நிற்பாள். துணிஞ்ச கட்டை. எதற்கும் அசையாது.
“எல்லாரும் ஒரு கரையா அசைஞ்சு போங்க. லொறி வாறது கண்ணுக்கு தெரியேல்லையே?”
ஒரு காவல் துறை உறுப்பினர் வந்து கொண்டிருந்த லொறிக்கு பாதை ஒதுக்கி கொண்டு இருந்தார்.
“தம்பியவயள் ஏலுமேண்டா போவம் தானே. இங்கால எங்க ஒதுங்கிறது?”
“அய்யா கொஞ்சம் தள்ளி நில்லுங்க. அங்க … அதுக்குள்ளே நல்ல இடம் இருக்கு’
“கட்டேல்ல போவாங்கள், போன கிழமை தான் மீட்பு நிதி வாங்கிட்டு இண்டைக்கு இப்பிடி சிப்பிலி ஆட்டிறாங்கள்”
அய்யா விடுவதாக இல்லை. காவல்துறை உறுப்பினருக்கு என்ன செய்வது என்று புரியவில்லை. தானே சென்று அந்த அய்யாவின் சைக்கிளை ஓரப்படுதினார். இந்த சத்தத்தில் அக்கா கூப்பிட்டது கேட்கவில்லை என்று நினைக்கிறேன். யாரோ தம்பி என்று கத்திய போது தான் காதைக்கிழிக்கும் கிறீச்சிட்ட சத்தமும் வந்தது. எனக்கு என்ன நடந்தது என்று தெரியவில்லை. எல்லாமே ஒரு சில கணங்கள் தான். Supersonic விமானம் தான். குண்டு போட்டு எழுந்த பிறகு தான் supersonic விமானத்தின் சத்தமே எங்களுக்கு கேட்கும். குண்டு போட்டதா என்று தெரியவில்லை. அதிர்ச்சியில் ஒன்றும் கேட்கவில்லை. இரண்டு காதிலும் ஒரே அதைப்பு. நான் கீழே விழுந்து விட்டேன். காலில் லேசான சிராய்ப்பு. எங்கும் ஒரே அல்லோகலம். எனது suitcase கீழே விழுந்து சிதறி கிடந்தது. அதற்குள் ஒளித்து வைத்திருந்த மூன்று டென்னிஸ் பந்துகளும் வெளிய உருண்டு போய் கிடந்தன. இப்போது அக்கா பார்த்திருப்பாள். விளையாட்டு சாமான் ஒன்றும் எடுத்து வைக்கக்கூடாது எண்டு சொல்லியிருந்தாள். இன்றைக்கு குட்டு நிச்சயம். அக்கா எங்கே போனாள்? சுற்றிவர ஒரு பதட்டம் உருவாகி இருந்தது. எல்லோரும் முண்டியடித்து கொண்டு முன்னாலே போக முயற்சி செய்து கொண்டிருந்தனர். அக்காளை மட்டும் காணவில்லை. என்னோடு தானே இருந்தாள். எனக்கு மெதுவாக நடுக்கம் பிடிக்க ஆரம்பித்திருந்தது. காவல்துறை உறுப்பினர் எனது suitcase ஐ எடுத்து ஓரப்படுத்தி கொண்டிருந்தார். அக்காளை உண்மையிலேயே காணவில்லை. எல்லா இடமும் தேடிவிட்டேன். குண்டு வேடித்துதான் இருக்கிறது. ஆனால் அவள் என்னை விட்டு விட்டு போகமாட்டாள். பந்தை ஒளித்து கொண்டு வந்தது கோபமோ தெரியாது? அவளுக்கு சொல்வழி கேட்காவிட்டால் கெட்ட கோபம் வரும். வேண்டுமென்றால் இரண்டு குட்டு குட்ட வேண்டியது தானே. அதுக்கு ஏன் கோபித்து கொள்வான்? எனக்கு என்ன நடக்கிறது ஏன் நடக்கிறது ஒன்றுமே புரியவில்லை.
“அக்கா அக்கா, எங்கே இருக்கிறீங்க”
இயலுமான மட்டும் சத்தமாக கத்தினேன். வேறு பலர் குரல் தந்தனர். அக்கா இல்லை தான். மெதுவாக நடுங்க ஆரம்பித்தது. விட்டுவிட்டு போய்விட்டாள்.
“அண்ணை என்ட அக்காவை கண்டீங்களா? பச்சை கலர் சட்டை போட்டிருந்தா”
“இல்லை தம்பி, முன்னுக்கு தான் போயிருப்பா, பொம்மர் வந்ததில எல்லாரும் குழம்பிட்டினம், நீ இப்ப அழாத”
“அதிண்ட சைக்கிளுக்கும் காத்து இல்லை அண்ணை, அது என்ன விட்டுட்டு போகாது”
“இதுக்க எங்க எண்டு தேட சொல்ற? பேசாம முன்னுக்கு நட”
சொல்லிவிட்டு அந்த அண்ணாவும் முன்னுக்கு போய்விட்டார். இப்போது நான் வீதியில் அப்பிடியே இருந்துவிட்டேன். அக்காவுக்கு என்னமோ நடந்திருக்க வேண்டும். இப்பிடியெல்லாம் விட்டு விட்டு போக மாட்டாள். நான் தனியே என்பது அவளுக்கு தெரியும். அவளுக்கு நான் என்றால் நல்ல விருப்பம். நான் ஒரு விசரன். பந்தை எடுத்து வைத்திருக்க கூடாது. இல்லை இல்லை, இந்த நேரத்தில் இதற்கெல்லாம் அக்கா கோபிக்காது. இங்கே தான் என்னை தேடிக்கொண்டு இருக்கும். பக்கத்தில் நின்ற காவல்துறையிடம் போனேன்.
“அண்ணை, அக்கா என்னோட தான் வந்தவ, இப்ப காணேல்ல. பயமா இருக்கண்ண, ஒருக்கா கண்டு பிடிச்சு தாங்க, ப்ளீஸ் அண்ண”
“தம்பி இந்த அந்தரத்துக்க தேடேலாது. பேசாம சாவகச்சேரில போய் அறிவிச்சா கண்டு பிடிச்சு தருவாங்க, எல்லாரும் அங்க தான் போறாங்க”
“இல்லை அண்ண, அது என்ன விட்டுட்டு அவ்வளவு தூரம் போகாது. எனக்கு சாவகச்சேரியும் எங்கே எண்டு தெரியாதனை”
“அப்ப நான் சொல்லுறன், கேளு, இந்த லொறில ஏறு, சாவகச்சேரி AGA ஓபிஸ்ல இறக்கி விடுவாங்கள். அங்க வச்சு கண்டு பிடிப்பம்”
“இல்லை அண்ணா, செத்தாலும் இந்த லொறில ஏற மாட்டன்”
“ஏண்டா”
“இயக்கம் கூப்பிட்டா போக வேண்டாம் எண்டு அக்கா சொன்னவ, நான் வீட்டுக்கு ஒரே பிள்ளை அண்ண”