ஏகப்பட்ட அலைச்சல். இரு சக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு டீக்கடைக்குள் நுழைந்தான் ராகவன்.
சிணுங்கிய அலைபேசியை எடுப்பதற்குள் கட்…!
மைத்துனன் மாதவன்தான் டிஸ்பிளேயில், ‘மிஸ்டு கால் மாதவன்’ என்று பெயர் வைத்தால் பொருந்துமோ!
இப்படிப்பட்ட துண்டிப்பு ஒரு முறை, இருமுறையல்ல…எப்போதுமே ..கோபம் கோபமய் வந்தது ராகவனுக்கு.
”என்ன மைதிலி, உன் தம்பி …என்னை மாதிரி சேல்ஸ் ரெப்பா அவன்? ஐ டி கம்பெனியில் கை நிறைய சம்பளம் வாங்குறான். இருந்தும் ஏன் இந்த மிஸ்டு கால் புத்தி?” – மனைவியிடம் இப்படிக்கேட்டுவிடும் தீர்மானத்தோடு வீட்டுக்குப் போனான்.
வாசலில் மைத்துனன் மாதவனின் காலணிகள்.
அப்போ இங்கிருந்துதான் கூப்பிட்டானா?
ஏண்டா அவருக்கு போன் போட்டா பேச வேண்டியது தானே எதுக்கு மிஸ்டு கால் ? தப்பா எடுத்துக்கபோறார்…” – மனைவியின் குரல் வாசல் வரை.
”புரியாம பேசறியேக்கா…அவர் எந்நேரமும் வண்டியில சுத்தறவர். ரோட்ல வண்டியெல்லாம் எமனாட்டம் வருது. நான் விடாப்பிடியா ரிங் கொடுக்க…ஏதோ அவசரமான விஷயம்னு நினைச்சு அவர் பதற்றமா எடுத்துப் பேசினா ஆபத்துதனே? என்றவன் தோளைப் பாசமாய் பற்றி அணைத்து வரவேற்றான் ராகவன்.
– ஜூன் 2014