ஹலோ !
ஹலோ..!
நான் ரஹீம், சலாம் அலைக்கும், எப்படி இருக்கே?
அலைக்கும் சலாம்…நல்லா இருக்கேன், இங்க எல்லாரும் நலம். நீ எப்படி இருக்கே?
ம்..நல்லாத்தான் இருக்கேன்….
ஏண்டா இழுக்கறே…ஏதாவது பிரச்சினையா?
என்ன வழக்கம்போலத்தான்…சண்டை, சண்டை..சில நேரங்கள்ல என்னை மீறிடுவனோன்னு பயமாயிருக்கு.
அப்படி இப்படி எதுவும் பண்ணிடாதே, அனுசரித்து போ..குழைந்தைகளை பார்த்தாவது இரண்டு பேரும் அட்ஜஸ்ட் பண்ணிக்கலாமில்லை.
வேற வழி..! இந்த நாட்டுல அவங்களுக்குத்தான் மரியாதை..பொண்ணுங்க ஏதாவது கம்பிளெயிண்ட் பண்ணுனா போதும், கவர்ன்மெண்ட் ரொம்ப சீரியசா எடுத்துக்கறான். நம்ம நாடா இருந்தா இரண்டு பக்கம் நியாயம் என்னண்ணு கேட்பாங்க.
அப்துலுக்கு சிரிப்பு வந்தது. அப்படித்தான் தோணும். நியாயமா பார்த்தா உங்களுக்கு என்ன பிரச்சினை? வெளி நாட்டுல மெடிக்கல்ல இருக்கறே, உன் பொண்டாட்டியும் நல்ல வேலையில இருக்கறா, சொந்தமா வீடும் வாங்கிட்டே, குழந்தைங்க இரண்டும் ஸ்கூல்ல படிக்கறாங்க. அப்புறம் எதுக்கு இரண்டு பேரும் சண்டை போட்டுகிட்டே இருக்கறீங்க.
எனக்கு இங்க இருக்க “இன்ட்ரெஸ்ட்” இல்லை, சொன்னா கேட்கமாட்டேங்கறா, எங்க சண்டையினால சில நேரம் சமைக்கறது கூட நாந்தான்.
இதைய சாப்பிட்டு குழந்தைகளும் நானும் கஷ்டப்பட வேண்டி இருக்கு.
ஏன் உனக்கு அங்க இருக்க விருப்பமில்லையா?
பதினைஞ்சு வருஷமாச்சு, போதும்! அங்க அப்பா ரிட்டையர்டு ஆயிட்டாரு, இரண்டு மூணு முறை இங்க வந்து இருந்துட்டு போனாரு. ஏதாவது ஒண்ணுன்னா சொந்தம் பந்தம் பக்கத்துல இருந்தா நல்லதுன்னு நினைக்க தோணுது.
இப்ப பாரு இரண்டு வருஷமா சண்டை போட்டுட்டு இருக்கோம், நல்லது கெட்டது பேசி சமாதானப்படுத்த கூட இங்க யாருமில்லை. இந்நேரம் நம்ம ஊரா இருந்தா..எத்தனை பேரு நம்ம கூட இருப்பாங்க…
அப்துல் மீண்டும் சிரித்து கொண்டான். இதுவரைக்கும் அமைதியாத்தானே போச்சு. இரண்டு பேருக்கும் லீவு கிடைச்சா இங்க வந்து பேசி சமாதானம் பண்ணிட்டு போங்க..
ஆமா போ..என்னால முடியாது, நான் முடிவு பண்ணிட்டேன், நம்ம ஊருக்கு வந்துடறதுன்னு..
அவசரப்படாதே, நிதானமா இரு!
ஆமா..போ..நிதானம் நிதானம்னு எத்தனை நாளைக்கு..சரி போனை வைக்கிறேன். ஹாஸ்பிடல் வந்துருச்சு..
நீ இப்படி கார்ல வரும்போது பேசறதே டேஜ்சர்.
இங்க அப்படி பயப்பட அவசியமில்லை. இங்க ஹார்ன் அடிக்கறது கூட அடுத்தவங்களை டிஸ்ட்ரப் பண்ணும் அப்படீனு நினைக்கறவங்க.
தேவையில்லாம ஹாரன் அடிக்கறதோ, முரட்டுத்தனமா வண்டிய ஓட்டிட்டு போறதோ இங்க கிடையாது. ஒரே ஸ்பீடுல நமக்குன்னு ஒதுக்கியிருக்கற பாதையில போனா போதும் வீட்டுல இருந்து கிளம்பும்போது உங்கிட்ட பேச ஆரம்பிச்சன்னா இருபது நிமிஷம் ஹாஸ்பிடல் வந்துடலாம்.
வேலையில உனக்கு பிரச்சினை இருக்கா?
நல்லா வச்சிருக்கறாங்க. “சீனியர்” அப்படீங்கற மரியாதை, அடுத்தவங்க வேலையில கூட தலையிட மாட்டாங்க.
அப்ப ஏன் இங்க வரணும்னு துடிக்கறே?
சொந்த பந்தம் கூட இருக்கணும்னு அப்படீங்கற எண்ணம் வந்துடுச்சு, அவ்வளவுதான்.. சரி வைக்கிறேன்.
ஆறு மாதம் ஓடியிருந்தது.
ஹலோ !
ஹலோ..!
நான் ரஹீம், சலாம் அலைக்கும்….. எப்படி இருக்கே?
அலைக்கும் சலாம்..நல்லா,…. இருக்கேன், நீ எப்படி இருக்கே?
உனக்கு விஷயம் தெரியாதா? நான் இங்க வந்திட்டேன்.
இங்க வந்திட்டயா? எப்ப?
கொரோனா ஆரம்பிக்கறதுக்கு முன்னாடி ஒரு “பிளைட் கிளம்புச்சு” நான் மட்டும் கிளம்பி வந்துட்டேன்.
நீ மட்டுமா? அப்பா குழந்தைக, அவங்க அம்மா..
அவங்க வந்தா வரட்டும், நான் வந்துட்டேன்.
இங்க வந்து என்ன பண்ணுவே?
ஏதாவது கிளினிக் வைக்கலாமுன்னு இருக்கேன். சித்தப்பா பசங்க நல்ல இடமா ஏற்பாடு பண்ணிதர்ரேன்னு சொல்லியிருக்காங்க.
அப்பா, அம்மா, நல்லாயிருக்காங்களா?
எல்லாம் நல்லாயிருக்காங்க.
பேச்சு தொடர்ந்து சென்றது. போனை வைத்த பின்னும் அப்துல் மனசுக்குள் ஒரு கவலை.அவசரப்பட்டுவிட்டானோ..!
மூன்று மாதங்கள் ஒடியிருந்தது
ஹலோ !
ஹலோ..!
நான் ரஹீம், சலாம் அலைக்கும்….. எப்படி இருக்கே?
அலைக்கும் சலாம்….நல்லா இருக்கேன், நீ..?
மனசே விட்டு போச்சு, இங்க இருக்கறவங்க நம்மளை ஏமாத்ததான் பார்க்கறாங்க,
என்னாச்சு? அப்பா அம்மா இருக்காங்களே!
அவங்க கூட எனக்கு துரோகம் பண்ண நினைக்கறாங்க. அவங்களுக்கு மூத்த பசங்க இரண்டு பேரும்தான் முக்கியம்னு நினைச்சு என்னைய மட்டம் தட்டறாங்க. இதுக்கு என் தங்கச்சிங்களும், அவங்க வீட்டுக்காரனுங்களும் ஒத்து ஊதறானுங்க.. எனக்கு மனசே விட்டு போயிடுச்சு..போ…
என்னாச்சு, ஏன் இவ்வளவு வருத்தமா பேசறே..
என்ன ஆகணும்? எங்கப்பா சம்பாரிச்சது, பரம்பரை சொத்து எதைய பங்கு பிரிச்சாலும் என்னைய கடைசியிலதான் தள்ளி விடறாங்க.
சரி நீ இப்ப அவங்களோடதான் இருக்கே..
அவங்களோட யாரு இருக்க முடியும்? உங்க சகவாசமே வேண்டாமுன்னு தனியா வந்துட்டேன்.
தனியான்னா…?
நானே சமைச்சு சாப்பிட்டுட்டு..
அப்துல் ரஹீமுடன் பேசி முடித்து போனை வைத்தாலும் மனசு மட்டும் கனத்து கிடந்தான். இவனுக்கு இனி எப்படி உண்மைகளை புரிய வைப்பது?
அக்கரைக்கு இக்கரை பச்சையாகத்தான் தெரியும் என்பதை..!