கதையாசிரியர்:
தின/வார இதழ்: விகடன்
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: February 27, 2016
பார்வையிட்டோர்: 22,874 
 

”இன்றைக்கு பௌர்ணமியா?”

– நான் வானத்தைப் பார்த்துக்கொண்டே தனுஷ்கோடி அண்ணனிடம் கேட்டேன். நிலா முழு வட்டமாக நிறைந்துகிடந்தது. சின்னத் துண்டுமேகம்கூட இல்லை. எட்டுத் திசைகளும் சுத்தமாக இருந்தன. எல்லா இடங்களையும் துடைத்து எடுத்ததால் அப்படியொரு துடிப்புடன், கொதிபால் காம்புச் சூட்டுடன் கறவைச் செம்பில் நுரைத்துக்கொண்டு இருந்தது. நட்சத்திரங்கள் விடுமுறையில் போயிருந்தன.

”நேற்றுதானே கோயிலில் கூட்டமாக் கிடந்துது. பிரதோஷத்துக்கு மினிபஸ்காரன் ஸ்பெஷல்கூட விட்டிருந்தானே. அப்போ நாளைக்குத்தானே பௌர்ணமியா இருக்கும்?” – தனுஷ்கோடி அண்ணனும் இப்போது நிலாவையே பார்த்துக்கொண்டிருந்தான்.

அகஸ்தியம்1தனுஷ்கோடி அண்ணனின் முகம் அழகாக இருந்தது. யார் இப்படி நிலாவை ஏறிட்டுப் பார்த்தாலும் அவர்களுடைய முகம் அழகாகிவிடும்போல. சொக்குப்பிள்ளை கடையில் சாப்பிட்டுவிட்டு, கைகழுவுகிற இடத்தில்தான் இலையைப் போட வேண்டும். ஆனால், எல்லோரும் அந்தத் தகர தார் டின்னுக்குள் போடுவதும் இல்லை; அப்படியே போட்டாலும் எல்லா இலைகளும் உள்ளே விழுவதும் கிடையாது; அப்படி வெளியே விழுந்துகிடந்த இலைகளின் மீது நிலா பளபளத்தது. அருள்ராஜ் கடைக்கு முன் இறக்கிப்போட்டிருந்த காலி ஈய பால்கேன் நிறம், வேறு மாதிரி ஆகிவிட்டிருந்தது.

”வேல்சாமி பாண்டியன் இருந்தாம்னா, நிலா இப்படித் துடிச்சுக் கிட்டுக்கிடக்கிறதைப் பார்த்தா, பாட ஆரம்பிச்சிருவான். ‘ஆசையே அலை போலே… நாம் எல்லாம் அதன் மேலே…”’ தனுஷ்கோடி அண்ணன் நாக்கு உச்சரிப்பு இன்னும் குளறுகிற மாதிரியேதான் இருந்தது. ‘நீ எப்போ வந்தே குட்டிப் பயலே?’ எனக் காலையில் கட்டிப்பிடிக்கும்போதே சாராய வாடை தாங்க முடியவில்லை. ‘கல்யாணத்தில் ஆளைக் காணோமேனு பார்த்தேன். மறுவீட்டுக்கு வந்து நிக்கே. ஆபீஸில அப்படி என்ன பெருசா கோபுரத்தைக் கட்டி நிமுத்திதியாக்கும்?’ என இன்னும் கொஞ்சம் தோளை இறுக்கினான். இப்போது அவ்வளவு உறுதியாக இல்லாவிட்டாலும் தோளைப் பிடித்துக்கொண்டே மேலே பாடுகிறான். ‘சூறைக்காற்று மோதினால், தோணி ஓட்டம் மேவுமோ..?’

நான் இன்னும் நிலாவையே பார்த்துக்கொண்டிருக்கிறேன். என்னை அறியாமலே, உள்ளே திருச்சி லோகநாதனின் குரல் அடுத்தடுத்த வரிகளுக்குப் போய் நகர்ந்தபடி இருந்தது. தனுஷ்கோடி அண்ணனையே பார்த்தேன்.

அவன் நாகஸ்வரம் வாசிப்பான். மில் வேலைக்குப் போகிற வரைக்கும்கூட அவனுடைய அப்பாவோடு வாசிக்கிறது உண்டு. அது ஒரு திருவாதிரை தினம். வாசிப்பு முடிந்து அண்ணனுடைய அப்பா போய்விட்டார். நடை அடைத்தாகிவிட்டது. திட்டிவாசல் கதவு மட்டும் திறந்துகிடக்கிறது. நான், அவன், பட்டரின் மூத்த பையன் ராஜாமணி மூன்று பேரும் மட்டுமே மிச்சம்.

”நடலம் பார்க்க வேண்டாமா நீங்க?” என்றான். ‘நடனம்’ என்பதை அவனுடைய அப்பாவும் ‘நடலம்’ என்றுதான் சொல்வார். வில்வ மரத்தடியில் உட்கார்ந்தான். எங்கள் இரண்டு பேரையும் உட்காரச் சொன்னான். எடுத்து வாசிக்க ஆரம்பித்தான்.

‘தனுஷ்கோடியா அது?’ என்பதுபோல ஆகிவிட்டது. அரளிச் செடி மூட்டில் இருந்த செம்போத்து படபடவெனப் பறக்கிறது. வில்வப் பழம் பொத்தென விழுந்து உருள்கிறது. பால்கொச்சை வாசனைக்கு மூஞ்சூறு நடமாடுகிறதுபோல. ஓரமாக ஓடுவது அதுவாகத்தான் இருக்கும். பிராகாரத் தளம் முழுக்க பளபளத்து விம்முகிறது. கல்பாளம் எல்லாம் உருகிக் குளிர்ந்து ஆறாகப் பாய்வதுபோல இருக்கிறது. ‘வாசிப்பது போதும் அண்ணன்’ எனச் சொல்ல முடியவில்லை. ‘எழுந்திரு’ என அமர்த்த வாய் வரவில்லை.

அகஸ்தியம்2அவனுக்குக் கண்களைத் திறக்கவேண்டும் எனத் தோன்றியதும் சீவாளியைவிட்டு உதட்டை எடுத்தான். கண்களை மூடிக்கொண்டு அப்படியே இருந்தான்; எழுந்திருந்தான். பொட்டென ஒரு வில்வப் பழத்தைத் தரையில் தட்டி, பிசின் கம்பியிழுக்க, ஒரு துண்டு எடுத்து வாயில் போட்டான். தக்ஷிணாமூர்த்தி சன்னதியை விழுந்துக் கும்பிட்டான். பிள்ளையார் முன்பு தொங்கும் மணியை அடித்தான். திருநீறை அள்ளிப் பூசிவிட்டு, வாத்தியத்தை எடுத்துத் தோளில் போட்டுக்கொண்டு வெளியே போய்விட்டான். ஒரு வார்த்தை எங்களிடம் சொல்லவில்லை.

அன்றைக்கு நிலவு இப்படி இருந்ததா என ஞாபகம் இல்லை. அவன் வாசிப்பு மாத்திரம் எங்களோடு வெளிச்சமாக வந்துகொண்டிருந்தது. ராஜாமணியும் நானும் ஒன்றும் பேசிக்கொள்ளவில்லை. ஒரு தடவையோ இரண்டு தடவையோ பட்டர் மகனுடைய கையில் இருந்த பெரிய திறவுகோல்கள் மோதி, சத்தம் வந்தது. அதுகூட தனுஷ்கோடி அண்ணனின் நாபியில் இருந்து வந்தது போலத்தான் இருந்தது.

”அப்போ போய்த்தான் ஆகணும்கிறியா? இனிமே இங்கே காத்துக்கிடந்து பிரயோஜனம் இல்லை. கிடாரங்குளம் விலக்குக்குப் போனால், ஏகப்பட்ட பஸ் வரும். ஒண்ணு இல்லாவிட்டால் ஒண்ணுல ஏறிப் போயிரலாம். மறுவீட்டுக்கு வந்த ஆட்கள் எல்லாம், மினிபஸ் வரலைனு தெரிஞ்ச உடனே செட் செட்டா அங்கேதான் போயிக்கிட்டு இருக்கு” – தனுஷ்கோடி அண்ணன் என் முகத்தையும் நிலாவையும் மாறி மாறிப் பார்த்தான்.

தொடர்ந்து குடித்துக்கொண்டே இருக்கிறவர்களுக்கு இன்னும் கொஞ்சம் குடிக்கவேண்டும் எனத் தோன்றும்போது வருகிற பிரத்யேகக் களை அவனிடம் இருந்தது. ”என்னமா இருக்கு பாரு நிலா?” என்றான். ” ‘முழுங்கிவிட்டுக் கக்கிவிடலாம்போல இருக்கு’ன்னு எங்க அம்மை சொல்லுவா. அது மாதிரித்தான் இருக்கு” – தலையைக் குனிந்துகொண்டு கொஞ்ச நேரம் இருந்தவன், ”ஏற்கெனவே தொயந் தாப்பில மூணு நாள் மில்லுக்கு லீவைப் போட்டுட்டேன். நைட் ஷிஃப்ட்டுக்குப் போகணும் இன்னைக்கு. இல்லாட்டி உன்கூடவே வந்திருவேன்” என்றான்.

”எனக்கு இப்படியே தனியா நடந்துபோகணும்போல இருக்கு” – நான் தனுஷ்கோடி அண்ணனிடம் சொன்னேன்.

”அது சரி. நிலா, அருவி, வனாந்திரம் எல்லாம் ‘மோகினி’ல்லா. தனியாத்தான் வரச் சொல்லும்” – அண்ணனின் கண்கள் ஒரு சர்ப்பத்தின் கண்களைப்போல மினுங்கின. அவன் தரையோடு தரையாக ஊர்ந்துசெல்லத் தொடங்கிவிடக்கூடும் என்பதுபோல, நிலா வெளிச்சத்தில் அவனுடைய திரேகம் நெளிந்து நிமிர்ந்தது. நான் மேற்கொண்டு தனுஷ்கோடி அண்ணனிடம் எதுவும் சொல்லிக்கொள்ளவில்லை. நடக்க ஆரம்பித்தேன்.

பக்கத்தில் எருக்குழி ஏதாவது இருக்கிறதா எனத் தெரியவில்லை. ரொம்ப நாட்களாக ஒன்றுக்கு மேல் ஒன்றாகக் கொட்டப்பட்டு வெக்கையில் நீறி வெதுவெதுவெனச் சூடாகப் பரவுகிற பசுஞ்சாணியின் வாடை அடித்தது. பட்டாத் தேவர் தொழுவில் எருமைகள்தான் உண்டு. அவர் போய்ச் சேர்ந்துவிட்டார். பையன்கள் யாருக்கும் பால்மாடு வைத்திருக்கும் உத்தேசம் இருக்க வாய்ப்பு இல்லை. பட்டாத் தேவர் தன் எருமைகளைப் பத்திக்கொண்டு இப்போது எதிரே வந்தால் நல்லது. எருமைகளின் பிட்டி எலும்பின் மேலும், முதுகு எலும்புக் கண்ணிகளின் லேசான துருத்தலிலும், நிலா வெளிச்சம் வழிந்து வழிந்து தரையில் சிந்தும் எனில் எப்படி இருக்கும்?

பக்கத்தில் மலை ஒன்றும் இல்லை. அங்கிருந்து யாரோ உருட்டிவிட்டதுபோல, ஒரு கார் அல்லது வில்வண்டி மட்டும் போகிற அளவுக்கு வழிவிட்டு தெற்கேயும் வடக்கேயுமாக இரண்டு பெரிய பாறைகள் இந்த இடத்தில். செடி முளைக்கிற மாதிரி பாறைகளும் முளைக்குமோ என்னவோ. எண்ணி இரண்டே இரண்டு. பொதுவாக எல்லா பாறைகளுக்கும் பக்கத்தில் பெரிது சிறிதாக இன்னும் ஏழெட்டுக் கிடக்குமே அப்படி எதுவும் இல்லை. தென் பக்கத்துப் பாறையில் சுண்ணாம்பு வைத்துப்போட்ட ஒரு பெரிய அம்புக் குறி. வட பக்கத்தில் ஆளுயரத்துக்குக் கோரை முளைத்துக்கிடந்தது. முன்னால் பஸ்ஸுக்கு நடந்துபோகிற யாரோ கை வாக்கில் கிள்ளிவிட்டுப் போயிருக்க வேண்டும். பச்சை வாசம் காற்றில் அடித்தது.

இதைத் தாண்டிக் கொஞ்ச தூரம் போனால், பாதையை விட்டு உட்பக்கம் நகர்த்திவைத்தது மாதிரி ஒரு கல்மண்டபம். மூட்டம் போட்டு இப்போதுதான் எடுத்த புகையடிப்பு நிறம். அதற்குப் பின்னால்தான் தாமரைக் குளம். அது குளம் அல்ல. கனடியன் கால் வாய்க்கால். அதேபோல தாமரைக்குளம் என்ற அதன் பெயரும் தப்பு. அங்கே பூத்துக்கிடப்பது தாமரை அல்ல; அல்லிப் பூ. இது மாதிரி குறிப்பிட்ட சில இடங்களில் எப்படியோ இப்படி மொத்தமாக, தண்ணீர் இருந்தாலும் வற்றினாலும், அல்லி முளைத்துக்கிடக்கிறது. தண்ணீர் இருக்கிற தடமே தெரியாமல் சிவப்புச் சிவப்பாக, நடுவில் விளையாட்டுக் காட்டுகிற மாதிரி ஒன்று, இரண்டு வெள்ளையாகவும்.

பக்கத்தில் வர வர, அல்லித் தண்டின் வழுவழுப்பான வாசனை. ஒரு சிறிய பதற்றம் உண்டாயிற்று. சாரைப் பாம்புபோல கிடக்கும் இந்த இடத்தைப் பார்க்காமலே போய்விட முடிந்தால் நல்லது. கிழிசலை வெட்டி எறிந்துவிட்டு, இந்தப் பக்கமும் அந்தப் பக்கமும் தையல் போடுவது இல்லையா. அது மாதிரி, இந்த இடத்தை மட்டும் பிட்டு தூரப் போட்ட கையோடு, கிடாரங்குளம் விலக்கு வரை போய்விட முடியாதா? அப்படி நினைக்கிறோமே தவிர, சில சமயங்களில் எதையும் தவிர்க்க முடிகிறது இல்லை. அல்லது எதைத் தவிர்க்க நினைக்கிறோமோ, அது முதலில் வந்து நிற்கிறது.

யாரோ பைக்கை நிறுத்திவிட்டு நின்று கொண்டிருந்தார்கள். என்னதான் அந்தப் பக்கம் பார்க்கக் கூடாது என நினைத்தாலும், எனக்குள் சிவப்புச் சிவப்பாக மலர்ந்துகொண்டே இருந்தன. செருப்புக் காலும் சேலையுமாக முன்னால் நகர்ந்து வந்து, ”யாரு, வடிவேல்தானே?” என்று என்னைக் கேட்பது, யார் என உடனடியாகப் பிடிபட்டுவிட்டது. அகஸ்தியர் அத்தை நின்றுகொண்டிருந்தாள். ‘அகஸ்தியர் என்பது ஆண் பிள்ளை பெயர் அல்லவா?’ எனக் கேட்கக் கூடாது. அதேபோல, அத்தைக்கு அதிகமாகப்போனால் 40 வயது இருக்கும். சரியாகச் சொன்னால் என்னையும் தனுஷ்கோடியையும்விட ஏழு, எட்டு வயது பெரியவள். தனுஷ்கோடி அண்ணனுக்கும் அகஸ்தியர் அத்தைக்கும் ரொம்ப நெருக்கம். அவ்வளவு சொன்னால் போதும். அப்படித்தான் அவர்களுக்குள் எல்லாம் இருந்தது. ”என்ன மாப்பிளை சௌக்கியமா?” என்று பைக்கைத் தடவிவிட்டுக்கொண்டு, இப்போது என் பக்கமாக வந்து கேட்கிற பழனியாண்டி மாமாவும் ரொம்பச் சுருக்கமாகவே அதை எடுத்துக்கொண்டார்.

”தனுஷ்கோடி போயிட்டுதா?” – அகஸ்தியர் அத்தை எப்போதும்போல தலை நிறைய மஞ்சள் சிவந்திப் பூ வைத்திருந்தாள். ஒரு சிறிய அரசமரம்போல அல்லது அரசமரத்தடி நாகர் சிலை என நின்று என்னைக் கேட்டாள். அகஸ்தியர் அத்தை எப்போதும் எல்லோர் காதும் கேட்கும்படியாக தனுஷ்கோடியைப் பெயர் சொல்லித்தான் கூப்பிடுவாள்; பேசுவாள். பெயர் தேவைப்படாத இடத்துக்குப் போன பின், பெயரைச் சொல்வதில் என்ன தயக்கம் என ஆகிவிட்டதுபோல.

”அது இந்தப் பக்கம் கூடிவருகிறதை விட்டு ரொம்ப வருஷங்கள் ஆச்சே” – பழனியாண்டி மாமா என்னையும் பார்க்காமல் அத்தையையும் பார்க்காமல், அவருடைய மோட்டார் பைக்கும் அவரும் பேசிக்கொள்வதுபோல சொன்னார்.

”எனக்கு அது தெரியாதா என்ன? இருந்தாலும் வடிவேலுகூட பஸ் ஏத்திவிட அப்படியே ஒண்ணா நடந்துவரும்னு தோணுச்சு. இந்த இடத்தைப் பார்த்ததும் நானே இதுக்கு மேலே ஒரு எட்டு எடுத்துவைக்க முடியலை. அதுக்கு எப்படி முடியும்?’- அகஸ்தியர் அத்தை குளத்தையே பார்த்தாள். அத்தையின் கையில், மூட்டோடு முழுதாகப் பிடுங்கிய ஒரு வெள்ளை அல்லிப் பூவும் தண்டுமாக இருந்தது. பழனியாண்டி மாமா என் பக்கமாக நெருங்கி வந்து தோளில் கைவைத்து, ‘நீ அங்கே போய் என்ன பண்ணப்போற?’ என்பதுபோல தடுத்து என்னை நிறுத்தினார்.

இந்த மூன்று அடிச் சுவர், பஞ்சாயத்து போர்டில் இருந்து இப்போது சமீபத்தில் கட்டியிருக்கிறார்கள்; முன்னால் கிடையாது. ஆட்கள் கைகால் கழுவுவது, இறங்கிக் குளிப்பது, துவைப்பது கொள்வது, மாடு குளிப்பாட்டுவது… என எல்லாம் முன்பு இது வழியாகத்தான். இறங்கும்போது சரிவாக இருக்கும். ஏறும்போது கொஞ்சம் உன்னி ஏற வேண்டும்.

இருக்கிற இடத்தை எல்லாம் விட்டுவிட்டு, தனுஷ்கோடி தங்கச்சி இங்கே வந்து மருந்தைக் குடித்துவிட்டுப் படுத்துவிட்டாள். இந்த ஊரில் அப்படி எத்தனை பேர் பத்தாவது பாஸாகி மேல்படிப்புக்கு டவுன்பஸ் ஏறிப் போயிருக்கிறார்கள்? அது என்னவோ இவளுக்கு மட்டும் ஃபெயிலாகிப் போனது அவ்வளவு கேவலமாகிவிட்டது. பள்ளிக்குப் போகிறது போலவே ஊதாப் பாவாடை, வெள்ளைத் தாவணி, ரெட்டைச் சடை. ரோக்கர் நுரைத்த வாய்கூடச் சிரிக்கிற மாதிரிதான் இருந்தது.

அகஸ்தியம்3அகஸ்தியர் அத்தைதான் கூடவே இருந்தாள். ‘புறவாசலில் வளர்ந்து சாய்ஞ்சுக்கிட்டு நிக்கிற வாழைக்குப் பக்கத்தில, குட்டியா ரெண்டு இலை விட்டுக்கிட்டு பக்கக் கன்னு இருக்குமே, அது மாதிரி இருக்கு தனுஷ்கோடி’ அவளைக் குளிப்பாட்டியதும் இப்படி அழுதாள். வேறு புதுசு கட்டுவதற்காக மறைப்புக்குள் இருந்த அகஸ்தியர் அத்தை, ‘பாவி, பாவி’ என வெடித்தாள். ‘இந்த மேனிக்கு ஒரு திரியைப் போட்டு நெய்யை ஊத்திப் பொருத்தி பட்டாசலில் வச்சிரலாம்போல இருக்கே’ என ஒப்புச் சொன்னாள். ‘மன்னார்கோயில் விளக்கு. என்கிட்டே ஒரு வார்த்தை யோசனை கேட்காமல் போயிட்டாளே’ எனக் கதறியபோது, என்னைவிட, தனுஷ்கோடியைவிட பழனியாண்டி மாமாதான் அதிகம் குலுங்கினார். துண்டை வாயில் சுருட்டி வைத்துக்கொண்டார். சுதாரித்து நிதானம் ஆகி, ‘டைம் ஆச்சு… டைம் ஆச்சு’ என எல்லோரையும் முடுக்கிவிட்டதும் அவர்தான்.

‘படிக்கவெச்சு, பாடவெச்சுக் கட்டிக்கொடுத்திரணும்’னு படாதபாடு எல்லாம் பட்டுக்கிட்டு இருந்தான். ‘அண்ணனா அப்பாவா?’னு கேட்டால், அண்ணன்தான் அன்றைக்கும் இன்றைக்கும் அந்தப் பிள்ளை சொல்லும். கடைசியிலே இப்படிப் புத்தியைக் கடன் கொடுத்துட்டுதே…’ – பழனியாண்டி மாமா வழக்கத்தைவிட அதிகமான போதையில் என்னிடம் சொல்லிக்கொண்டு இருந்தார். எனக்கு நன்றாக ஞாபகம் இருக்கிறது. அண்ணன் வீட்டுக்கு வெளியில் வேப்பமரத்தடியில் நார்க்கட்டில் போட்டு உட்கார்ந்திருக்கிறோம். சுடலைக் கோயில் பக்கத்து ஆலமரத்தில் சமீபத்தில் யாரோ ‘இளங்கொடி’ கட்டிவிட்டுப் போயிருக்க வேண்டும். காற்றில் வாடை அடித்தது. என்னைப் போலவே மாமாவுக்கும் தெரியும், தனுஷ்கோடி அண்ணனும் அகஸ்தியர் அத்தையும் இதேபோல வீட்டுக்குள் ஒருவரையொருவர் தேற்றிக்கொண்டும் அழுதுகொண்டும் இருக்கிறார்கள் என்பது. இன்றைக்குத் தோளில் வைத்திருக்கிறது போலத்தான், அன்றைக்கும் அவர் கை என் மேல் இருந்தது.

வாயாக, வார்த்தையாக அவர் சொல்வதைவிட இப்படித் தோளில் கைவைப்பதன் மூலம் அவர் நிறைய சொல்லிவிடுகிறார்; நிறைய இல்லை, எல்லாவற்றையும்.

”எம்புட்டு நேரம் இங்கேயே நிப்பே?” – பழனியாண்டி மாமா பைக்கை உதைத்துக்கொண்டே அத்தையைப் பார்த்தார். அத்தைக்கு என்ன தோன்றியதோ, கையில் வைத்திருந்த அல்லிப் பூவைத் தண்டோடு என் கையில் கொடுத்துவிட்டு, பின்பக்கம் ஏறி உட்கார்ந்தாள். ”தனுஷ்கோடியைப் பார்த்துக்கோ” என்று சொல்லிவிட்டு, ”அதைக் குடு வடிவேலு” எனக் கையை நீட்டினாள். அத்தை என்னிடம் இருந்து பூவை வாங்குகிற நேரத்தைத் துல்லியமாகக் கணித்ததுபோல, மாமா பைக்கை நகர்த்தினார். அகஸ்தியர் அத்தை பூவும் கையுமாக உட்கார்ந்துகொண்டு சிரித்த சிரிப்பு உருக்கமாக இருந்தது. இந்தச் சிரிப்பை அப்படியே அள்ளிக்கொண்டுபோய் சிந்தாமல் சிதறாமல் தனுஷ்கோடியிடம் சேர்த்துவிட வேண்டும்.

இது எல்லாம் எனக்குப் புரியவே இல்லை. இதுவரை எப்படி அகஸ்தியர் அத்தையுடன் தனுஷ்கோடி அண்ணனுக்கு அத்தனை நெருக்கமாக இருக்க முடிந்தது? நானும் மாமாவும் நார்க்கட்டிலில் வெளியே உட்கார்ந்து பேசிக்கொண்டிருந்த அந்த ராத்திரிக்குப் பிறகு, கதவைச் சாத்தினதுபோல, அப்படி ஒரு திசையே இல்லாதது மாதிரி எப்படி விலகிவிட முடிந்தது? இவ்வளவு நாட்களையும்விட, இந்தத் துக்கம்தானே கதவை அகலமாகத் திறந்துவைக்க வேண்டும்.

தனுஷ்கோடி அண்ணன் அழுததையும்விட அகஸ்தியர் அத்தை ஒப்புச்சொல்லி அழுகிறாள். ‘பாவி, பாவி’ என்கிறாள். ‘மன்னார்கோயில் குத்துவிளக்கு’ எனத் துடிக்கிறாள். தன்னுடைய வருத்தத்துக்காக இல்லாவிட்டாலும், அகஸ்தியர் அத்தை வருத்தம் குறைவதற்காகவேனும் அண்ணன் எப்போதும்போல, அல்லது எப்போதையும்விட சகஜமாக அல்லவா இருக்க வேண்டும். எனக்கு இப்படி எல்லாம் தவிப்பாக இருந்ததே தவிர, இதை அண்ணனிடம் சொல்லவோ கேட்கவோ இன்றைக்கு வரை முடியவில்லை. மேலும் இதில் அடுத்தவன் சொல்வதற்கு என்ன இருக்கிறது? அவனுக்கே அல்லவா தெரிய வேண்டும்.

பால கிருஷ்ணாவில் செகண்ட் ஷோ பார்த்துவிட்டு வருகிறேன். அனுமார் கோயில் உள்பக்கத் தென்னை மரத்தில் இருந்து ஒரு காய்ந்த முழுத் தோகையும் மட்டையுமாகச் சலார் என ரோட்டில் விழுகிறது. விழுந்த வேகத்தில் எழுந்த புழுதி அடங்குவதையே பார்க்கிறேன். தெருவிளக்கு வெளிச்சத்தில் பழனியாண்டி மாமா அவருடைய ஐஸ் கம்பெனிக்குப் பக்கத்தில் பைக்கில் நிற்கிறார்.

”உன்னைத்தான் எதிர்பார்த்துக்கிட்டு நிக்கேன்” என்றார். மாமா ஜிப்பா போட்டு, சுருக்கி மேல் கைப் பக்கம் ஏத்திவிட்டிருந்தது அழகாக இருந்தது. நான் அவர் பக்கத்தில் போனதும், ”வசூலுக்கு வந்தேன்” என்றார். ‘வசூலுக்கு வந்த சமயம் உன்னைத் தற்செயலாகப் பார்த்தேன்’ என அர்த்தம்.

”அத்தை நல்லா இருக்காங்களா?”

– என் கேள்விக்கு அவர் பதில் சொல்லவில்லை. ”நீயாவது உங்க அண்ணன்கிட்டே சொல்லக் கூடாதா? ஏன் இப்படி மாட மடங்கக் குடிக்கணும்?” எனச் சொல்லிவிட்டு அமைதியாக இருந்தார். ”அசந்து மறந்து மெஷினுக்குள்ளே கையைக் குடுத்திட்டான்னு வெச்சுக்கோ… என்ன பண்ண முடியும்?”

இதற்கு நேரடியாக நான் எதுவும் சொல்லவில்லை. மாமா பேசுவது எனக்கு அகஸ்தியர் அத்தை பேசுவதுபோல இருந்தது.

”நல்ல வேளை கொஞ்சம் முந்துச்சு. ஓலையும் மட்டையும் விழுந்த வேகத்துக்கு என்னமாவது ஆகியிருக்கும்” என்று வேறு பக்கம் பேச்சைத் திருப்பினேன்.

பழனி மாமா கண் கலங்கியது. என் மேல் கையை வைத்தார். என்னைப் பார்க்கவில்லை. தெருவிளக்கின் அடி உருளையைப் பார்த்தார். ”அப்போ அவனை ‘வா’னு சொன்னேனா? இப்போ அவனை ‘வராதே’னு சொன்னேனா?” என்று எச்சிலை விழுங்கினார். மேற்கொண்டு பேச்சு வரவில்லை. ”பார்ப்போம்” என்று பைக்கைக் கிளப்பினார்.

ஒருபக்கம் சைக்கிளைப் பிடித்துக்கொண்டு, இன்னொரு பக்கம் தென்னை மட்டையை இழுத்துக்கொண்டு யாரோ போனார்கள். யார் என்றே எனக்குத் தெரியவில்லை. ”சினிமா பார்த்துட்டுப் போகிற பாதையா?” என்று கேட்டார்கள். நிறையப் பேருக்குப் பதில் தேவைப்படுவது இல்லை.

இப்படி பழனியாண்டி மாமா வருத்தப்பட்டதைக்கூட நான் தனுஷ்கோடி அண்ணனிடம் சொல்லவில்லை. இதை மட்டும் அல்ல. அகஸ்தியர் அத்தையை ஒரு தடவை பஸ்ஸில் வைத்துப் பார்த்ததையும் சொல்ல வாய்க்கவில்லை.

திருநெல்வேலியில் இருந்து வந்துகொண்டிருக்கிறேன். அத்தை எங்கே எப்போது ஏறியிருப்பாள் எனத் தெரியவில்லை. முன்பக்கத்து ஸீட் ஒன்றில் இருந்து எழுந்து, மேல் கம்பியையும் பக்கவாட்டு ஓர வளைவையும் மாறி மாறிப் பிடித்தவாறே என் பக்கம் வருகிறாள். கண்ணாடி புதிதாகப் போட்டிருப்பதால், அத்தை மாதிரியும் இருக்கிறது; அத்தை மாதிரியும் இல்லை.

”என்ன அடையாளம் தெரியலையா?” என்று என் பக்கம் உட்கார்ந்துகொண்டே கண்ணாடியைக் கழற்றி, ”இப்போ தெரியுதா?” என்று சிரிக்கிறாள். அகஸ்தியர் அத்தை பக்கத்தில் இதுவரை உட்கார்ந்தது இல்லை. அத்தை சிரிப்பை ஒரு ஜாண் தூரத்தில் பார்த்தது இல்லை. எனக்கு தனுஷ்கோடி அண்ணனைத் தேடியது. ”மாமா வரலையா?” என்று கேட்டேன்.

அகஸ்தியர் அத்தை விளக்கம் சொன்னாள். இடது கண்ணில் வெடுக்வெடுக்கென நான்கு நாட்கள் குத்து எடுத்ததாம். ஒரு கரண்டியால் நார்த்தங்காய் ஊறுகாயை எடுக்கிறமாதிரி எடுத்துப்போட்டுவிடலாம் என இருந்ததாம். கண்ணாஸ்பத்திரியில் காட்டி சொட்டு மருந்து விட்டார்களாம். டெஸ்ட் பண்ணி எழுதிக்கொடுத்தார்களாம். ‘கண்ணாடி போட்டுக்கிட்டால் நல்லது’ என்றார்களாம். போட்டாச்சாம். இப்போது ஒரு தொந்தரவும் இல்லையாம்.

அகஸ்தியர் அத்தைக்குக் கண்ணாடியும் நன்றாக இருந்தது; சிரிப்பும் நன்றாக இருந்தது.

”டீச்சர் மாதிரி இருக்கு” என்றேன்.

”சொல்லுததே சொல்லுதே… ‘வக்கீல் மாதிரி டாக்டர் மாதிரி’னு சொல்லவேண்டியதுதானே?” என்று மேற்கொண்டும் சிரித்தாள். மறுபடியும் எழுந்து மேல் கம்பியையும் பக்கவாட்டு வளைவையும் பிடித்து முன்பக்கம் போய் உட்கார்ந்துகொண்டாள். ஒரு வார்த்தைகூட தனுஷ்கோடி அண்ணனைப் பற்றி கேட்கவே இல்லை. அகஸ்தியர் அத்தையைப் பார்த்தேன். உன்னைப் பற்றி ஒரு வார்த்தைகூடக் கேட்கவில்லை என தனுஷ்கோடி அண்ணனிடம் எப்படிச் சொல்ல?

இப்படி அகஸ்தியர் அத்தை நான்கைந்து ஸீட் தாண்டி இங்கே வந்து என் பக்கத்தில் உட்கார்ந்ததும், என்னுடன் பேசிவிட்டு அண்ணனைப் பற்றி ஒன்றுமே மருந்துக்குக்கூட ஒருவார்த்தை பேசாமல் எழுந்துபோய் மறுபடியும் அச்சடித்ததுபோல முன்பக்கம் உட்கார்ந்துகொண்டது மட்டும் புரிந்துவிடுகிறதா என்ன? இன்றைக்கு மாதிரி நல்லது – கெட்டது வீடுகளில் பார்த்தால்கூட எப்படி இவர்களால் பேசாமல் இருக்க முடிகிறது? இவர்கள் பேசுகிறார்களா, பேசுவதில்லையா என மற்றவர்கள் கவனிப்பது இருக்கட்டும். இவர்கள்தான் ஏதாவது இவர்களுக்கு மட்டுமே கேட்கிறமாதிரியாவது பேசிக்கொண்டால்தான் என்ன?

பைக்தான் இப்போது பெருத்துப் போய்விட்டதே. பின்னால் யாரோ வருகிறார்கள். கற்றையாக வெளிச்சம் மேடும் பள்ளமுமாகத் தடவியபடி போகிறது. மண் சுவரோடு சுவராக வைத்து வளர்த்திருந்த சோற்றுக் கற்றாழை பச்சை மடல், மடலாகத் தெரிந்தது. குடிதண்ணீர்க் குழாய் உடைந்து தண்ணீர் பெருகிக் கிடந்தது. மஞ்சணத்திப் பூ வாசனை வந்தது. பம்ப் செட் ஓடி, தொட்டி நிரம்பி நுரைக்கிற சத்தம். ராம கோனார் வயல் கிரயம் பண்ணிக் கைமாறிவிட்ட இடத்தில் வாழை போட்டிருக்கிறார்கள். குலை தள்ளின வாழைப்பூவின் கருநீல மடல் இருட்டைத் துளாவிக்கொண்டு நுனி மடங்கியிருந்தது.

இப்போது மறுபடியும் இன்னொரு பைக் பக்கத்தில் காலை ஊன்றி நின்றது. ”விலக்கு வரைக்கும்தானே… ஏறிக்கிடுதியா?” – ரைஸ்மில்காரர் என் தோளைத் தட்டினார். ஏற்கெனவே யாரோ பின்னால் இருந்தார்கள். ”இருக்கட்டும்… கொஞ்ச தூரம்தானே” எனச் சிரித்தேன். கொஞ்சம் நிலா வெளிச்சத்தில், கொஞ்சம் இருட்டில் சிரிக்கப் பிடித்திருந்தது. மினுக்கட்டாம்பூச்சிபோல வெளிச்சமாக அந்தச் சிரிப்பு இருந்திருக்கும். அகஸ்தியர் அத்தை கொஞ்ச நேரத்துக்கு முன் அல்லிப்பூவைக் கையில் வைத்தபடி புறப்பட்டுப் போகும்போது சிரித்தது மறுபடியும் தெரிந்தது.

தனியாக நடக்கும்போது ஒரு வேகம் வந்துவிடுகிறது. கருங்கல் ஜல்லியும் கப்பியுமாக பாதை பின்னால் ஓடியது. நிறையப் பேர் நடக்கிற சத்தம் கேட்டது. எதுவும், யாரும் தெரியாமல் சத்தத்துக்கு கால்கள் முளைத்து முன்னால் போவதை உணர முடிந்தது. தோளில் கிடக்கிற குழந்தை முனங்குகிறது. சிகரெட் வாசனையுடன், ‘கீழே பார்த்து வா’ என ஒருவர் எச்சரிக்கைப்படுத்துகிறார். இந்த இருட்டில் கீழ் எது, மேல் எது? புது நார்ப்பெட்டி வாடை, கதலிப் பழ வாடை எல்லாம் தலைக்கு மேல் நகர்கிறது. தொடர்ந்து நிலா வெளிச்சத்தில் கும்பல் கும்பலாக ஊமத்தம் பூ. நேற்றையப் பூவா… நாளையப் பூவா? எல்லாம்தான். நேற்றைக்குப் பார்த்தால், நேற்றைய பூ; நாளைக்குப் பார்த்தால் நாளைய பூ.

டயர் பிருபிருவெனத் தரையும் மணலுமாகச் சறுக்க, லைட் இல்லாமல் ஒரு சைக்கிள் இடுப்பில் மோதுவதுபோல் எதிரே வந்து நின்றது. மோதிவிடாமல் தடுப்பதுபோல கையை உயர்த்தியபடி, நிமிர்ந்து பார்த்தால் தனுஷ்கோடி அண்ணன். எனக்குத் திகைப்பாக இருந்தது; எதிர்பார்க்கவில்லை.

” ‘போயிட்டு வாரேன்’, ‘தனியா போரேன்’… அப்படி இப்படி’னு சொல்லிட்டுக் கிளம்பினே. இப்படி ஆடி அசைஞ்சு வாரே’ – தனுஷ்கோடி அண்ணன் சிரித்துக்கொண்டேதான் கேட்டான்; மேலும் குடித்திருந்தான்.

”உன்கூடப் புறப்பட்ட ஆளுக எல்லாம் எப்பவோ பஸ் பிடிச்சுப் போயாச்சு. இந்நேரம் வரை அங்கன நின்னுட்டுத்தான், ஆளைக் காணுமேனு வாரேன்” – தனுஷ்கோடி அண்ணன் சைக்கிளைவிட்டு இறங்கும்போது கொஞ்சம் லம்பியது. முன் பக்கம் சாய்வதுபோல உடம்பு தடுமாறியது. பிடிக்கப் போவதுபோல, கையை உயர்த்தினேன்.

”மில்லுக்குப் போகலையா?” – என் குரலில் கோபம் இருந்தது.

”எதுக்குப் போகணும்?” – சைக்கிள் ஸீட்டில் கையைக் குத்தினான்.

” ‘நைட் ஷிஃப்ட்டுக்கே போறேன்’னு சொன்னே” – இதைச் சொல்லும்போது எனக்கு அகஸ்தியர் அத்தை ஞாபகமும், அவள் கையில் அல்லிப்பூவை வைத்துக்கொண்டு பழனி மாமாவோடு பைக்கில் போனதும் ஞாபகம் வந்தது. இப்போது கொஞ்சம் நேரத்துக்கு முன்னால், மிஞ்சிப் போனால் அரை மணிக்குள் நடந்தவை எல்லாம் ஞாபகக்கணக்கில் சேர்ந்துவிடுமா?

”ராஜாமணியை சாவியை எடுத்துக்கிட்டு வரச் சொல்லு” – தனுஷ்கோடி அண்ணன் பக்கத்தில் இருந்துகொண்டு சொன்னான். வேறு எங்கோ தூரத்தில் இருந்து அவன் குரல் கேட்டது. ராஜாமணி, கோயில் பட்டர் வேலையை எல்லாம் விட்டுவிட்டு, கோவில்பட்டி பஸ்ஸ்டாண்டில் கடம்பூர் போளி விற்றுக்கொண்டிருப்பது அவனுக்கும் தெரியும்.

தனுஷ்கோடி அண்ணன் சைக்கிளை மிகுந்த பிரயத்தனத்துடன் ஸ்டாண்டு போட்டு நிறுத்திவிட்டு, கேரியரில் கட்டிவைத்திருந்ததை அவிழ்க்கத் தொடங்கினான். கேரியருக்கும் வெளியே காவி நிறத் துணியில் சுற்றப்பட்டு நீண்டு இருப்பது என்ன எனத் தெரிந்துவிட்டது.

”நான் எதுக்குடா நைட் ஷிஃப்ட்டுக்குப் போகணும்?” – மிக உரக்கவும் இல்லாமல், தணிவாகவும் இல்லாமல் சுருதி சேர்க்கப்பட்டது போன்ற குரலில் சொன்னான். காவி உறையில் பொதியப்பட்டிருந்த நாகஸ்வரத்தைக் கொஞ்சம் கொஞ்சமாக உருவினான். புற்றுக்குள் இருந்து வெளிவரும் பாம்புபோல, தனுஷ்கோடி அண்ணன் கையில், அவனுடைய அப்பாவின் நாகஸ்வரம் மினுங்கியது.

”நான் யாரு தெரியுமா? நடேசக் கம்பர் மகன்… நடேசக் கம்பர் மகன்” – தனுஷ்கோடி அண்ணன் திரும்பத் திரும்பச் சொல்வது ஒரு நாதம்போல பெருகத் தொடங்கியிருந்தது!

– செப்டம்பர் 2014

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *