அகலிகைக் கல்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: February 22, 2021
பார்வையிட்டோர்: 2,542 
 
 

எல்லாம் அடங்கிய தாவரசங்கமமே, நித்திரையில் ஒடுங்கிப் போனதுபோல் தோன்றுமே ஒரு நேரம்… இடம், பொருள், ஏவல் என்ற முப்பரிமாண தாக்கங்களைக் கடந்த காலவுதிர் காலம்…

அந்த நேரத்தில், ஆயாவிற்கு வழக்கம்போல் விழிப்புத் தட்டிவிட்டது. ஐந்தாறு நிமிடங்கள் முந்தியும், பிந்தியும் வரும், இந்த இரண்டு மணியளவிலான நேரம், மற்றவர்களுக்கு அன்றைய இரவுக் கணக்கு. ஆனால், ஆயாவிற்கோ, அது, இருள்கவிந்த ஒரு நாளின் துவக்கம்… ஒரு நாளிற்கு பகல்தான் துவக்கம் என்பது ஆயா மறந்துபோன அல்லது மரத்துப்போன நினைவுகளில் ஒன்று. இளையவர்களுக்கு ஒரு மாதிரியாகவும், முதியவர்களுக்கு ஒரு மாதிரியாகவும் துரங்க விடாமல், அதே சமயம் முரண்பட வருமே வயது கோளாறு… அந்தக் கோளாறு ஆயாவை நெருங்க முடியவில்லை.

ஒவ்வொரு இரவும் பத்து மணியளவில் ஆயா துரங்கப் போவாள். அந்த அடுக்கு மாடி வீடுகளின் உள், வெளி விளக்குகளின் கூச்சப்பிரகாசம், ஆயாவின் விழிகளை ஊடுருவி கண்ணுக்குள் புகமுடியாது. தொலைக்காட்சிகளின் விதவிதமான ஒளிபரப்பு கூச்சல்களும் ஆயாவின் துக்கத்தை அசைத்ததில்லை. இன்னும் சொல்லப் போனால், அவையே தனது தாயின் தாலாட்டுப் போலவே ஆயாவிற்கு கேட்கும். இந்த பின்னணியே அவளை உடனே துரங்க வைத்துவிடும். படுத்த அய்ந்தாவது நிமிடம் தன்னை இழந்த தன்மைக்குப் போய்விடுவாள். உடல் களைப்பும், மனக் களைப்பும் கனவுகளை துரத்திவிடும். ஒரு வினாடி படுத்து மறுவினாடி விழிப்பதுபோல் ஆயாவிற்கு தோன்றும். துக்கம்-விழிப்பு என்ற, இந்த இரண்டு நிகழ்வுகளின் இடைவெளி எப்போதுமே அவளுக்கு இரண்டு மூன்று நிமிடங்கள் மாதிரிதான்.

அன்றும், ஆயா, ஒரு நிமிடம் நினைவற்றவளாய் கிடந்தாள். மனமற்றுப்போன அருவ நிலை. ஆனால் எங்கயோ விலகி நின்ற அவள் மனம் மறுநிமிடம் தலைக்குள் பால் லாரியாக ஓடியது. நெஞ்சுக்குள் ஆவின் பாலாக பெருக்கெடுத்தது. கசிந்த உறைகளாக பயமுறுத்தியது. முன்னெச்சரிக்கை அவள் உடலைத் துக்கி ட’ வடிவில் மடித்து வைத்தது.

பக்கத்திற்கு ஒன்றாக இரண்டடுக்காய் தோன்றும் அந்த அடுக்குமாடி கட்டிடத்தின் தளத்திற்கு இட்டுச் செல்லும் வலது பக்க ஏணிப்படிக்கு கீழ் உள்ள பொந்தில் இருந்து, ஆயா வெளிப்பட்டாள். கிழ் தளத்தில் உள்ள இரண்டு வீட்டுக்காரர்களும் வீசிப் போட்டிருந்த பிய்ந்து போன கார் டயர், சைக்கிள் டியூப், ஒயர் கம்பிகள், அறுந்துபோன கயிறுகள், கிழிந்து போன துணிகள், துருப்பிடித்த ஆணிகள், நைய்ந்து போன சூட்கேஸ்கள், வேலைக்காரப் பெண்கள் விட்டுவிட்டு போகும் துடைப்பங்கள் போன்றவற்றுடன், தட்டு முட்டுச் சாமானாக படுத்தெழுந்த ஆயா, இப்போது தவழ்ந்து தவழ்ந்து அந்தப் பொந்துக்கு வெளியே வந்தாள். குனிந்தபடியே உள்ளே கையை நீட்டி தலையணையாகிப் போன சைக்கிள் டியூப்பை, அந்த இருளில் ஒரு அனுமானத்தோடு தொட்டு, ஒரு ஒரமாக தள்ளிவிட்டாள். பள்ளி கொள்வதற்கு படுக்கையான கோணிப்பையைச் சுருட்டி எதிர்ப்பக்கமாக வைத்தாள். ஒரு திருப்தியோடு தலையை மேலும் கிழுமாக ஆட்டிக் கொண்டே எழுந்தாள்.

பின்னர், எழுந்த வேகத்திலேயே, அந்தத் திண்ணைப் பகுதி போன்ற இடத்திலிருந்து வெளியே வந்து, அந்த வளாகத்தின் ஒரு ஒரமாக உள்ள கைப்பம்பை கத்த விட்டபோது, அது இரும்புத் துகள்களோடு கண்ணிர் சுரந்தது. கிட்டத்தட்ட ஒபாரிப் போன்ற சத்தத்தை எழுப்பியது. அப்போது பார்த்து அண்டை வீட்டு, சேவல் ஒன்று கூவியது… கோழிப்பண்ணை நடத்துகிற ஒருவர் கொண்டுவந்துள்ள வி தவிதமான சேவல்களில் இது ஒரு சமயோசித சேவல். பொழுது விடிந்ததென்று கூவுகிறதோ இல்லையோ, ஆயாவின் காலடிச் சத்தமும், பைப் சத்தமும் கேட்டு விட்டால் போதும். உடனே கூவும்… கூவி க்கொண்டே, இறக்கைகளை, படுக்கைத்துணியை உதறுவதுபோல் உதறும்.

ஆயா, முகத்தைக் கழுவிக் கொண்டு, குறுகிக் கிடந்த உடம்பை ஆசுவாசப் படுத்திய படியே மீண்டும் அந்த ஏணிப் பொந்தருகே வந்தாள். உள்ளே ஒரு மூலையில் வைக்கப்பட்ட அலுமினிய பாத்திரத்தை தரதரவென்று இழுத்து வெளியே கொண்டு வந்தாள். குண்டா மாதிரியான சுமாரான பாத்திரம். அதன் விளிம்புகள் பின்பக்கமாய் வளைந்து பள்ளப்பகுதியை தாராளமாய் காட்டும். ஆயா, அதற்குள் கையை விட்டு சாவகாசமாக துளாவினாள். பிறகு வேகவேகமாக கைகளால் தடவினாள். தூக்குப் பை அகப்படவில்லை. காதறுந்த பையானாலும் அதற்குள் இருந்த பிளாஸ்டிக் உறைக்குள் அறுபது பால்கார்டுகள் வைக்கப்பட்டிருந்தன. பையைக் காணவில்லை. ஒருவேளை தட்டுமுட்டு சாமான்களில் முடங்கி போயிருக்கலாம்… அந்தப் பாத்திரம் கவி ழாமல் அதெப்படி முடங்கும்.?

ஆயா, அந்த இருட்டில் வயதான வாத்தாய் நடந்து, வைத்திலி ங்கம் என்று பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்பட்ட இரண்டாம் நம்பர் வீட்டு கதவிற்கு மேலே உள்ள மின் சுவிட்சை ஆள்காட்டி விரலால் அழுத்தியபோது, மஞ்சள் விளக்கு அவள் தலைக்குமேல் ஒளிவட்டமாக காட்சி காட்டியது. கூடவே அந்த வீட்டு கதவு மெள்ள மெள்ள திறந்தது. சுவரை விட்டு ஒரடி இடைவெளியில் நின்ற அந்த கதவிற்கு பின்பக்கம், ஒரு ஆண் தலையும், பெண் தலையும் வெளியே எட்டிப் பார்த்தன. திருடர்களுக்கு பயந்தது போன்ற திருட்டுத் தலைகள். பின்னர் ஆயாவை மட்டுமே பார்த்துவிட்டு, அந்தக் கதவை உடைப்பதுபோல் பக்கவாட்டில் இழுத்துப் போட்டுவிட்டு, வைத்திலிங்கமும் அவரது மனைவி யும் வெளிப்பட்டார்கள். அந்தம்மா நைட்டியை மார்புக்கு மேலே தூக்கிக் கொண்டு, மார்பு கூட்டிற்குள் வாயால் லேசாய் ஊதிக் கொண்டாள். அய்யாவோ, முடிச்சவிழ்ந்த லுங்கியை கட்டிக் கொண்டே, ஆயாவை முறைத்தார். ஆயாவை எப்படி திட்டலாம் என்று யோசிப்பது போல் இருவரும் வாய்களை லேசாக அகலப்படுத்தி அழகு காட்டுவதுபோல் நின்றார்கள். அந்தம்மா பேசப்போவதாக நினைத்து இவரும், இவர் பேசப்போவதாக நினைத்து அவளும் சிறிது இடைவெளி நேரம் கொடுத்த பொழுது, கடைசியில் வைத்திலிங்கமே வாய்திறந்தார்.

“ஏய் கிழவி… எதுக்காக காலிங்பெல்ல அழுத்துனே?”

அப்போதுதான், ஆயாவிற்கு தனது விரல்களில் ஒன்று செய்த தவறு புரிந்தது. ஆள்காட்டிவிரல், சுவிட்சை அழுத்தியபோது, வெறுமனே உள்ள மோதிர விரல் அழைப்பு மணியை அழுத்தியிருக்கிறது. ஆயா, அத்தனை விரல்களையும் எதிரிகளை உதறுவதுபோல் உதறிய படியே தெரியாம அய்யா, தெரியாம என்று இழுத்தபோது, அந்தம்மா விளக்கம் கேட்டாளா அல்லது கொடுத்தாளா என்பதை கண்டுபிடிக்க முடியாதபடி கத்தினாள்.

“என்னது தெரியாமல்? பக்கத்துல வீடு இருக்கது தெரியலையா… நடு ராத்திரி என்கிறது தெரியலையா? நாங்க துங்குறது தெரியலையா? தெரியாமத்தான் கேட்கிறேன். எதுக்காக காலிங் பெல்லை அடிச்சே?”

“பால்கார்டு இருக்கிற பையை தேடுறதுக்காக லைட்ட போட்டேன். தெரியாத்தனமா { பெல்லையும் அடிச்சிட்டாப்போல… மன்னிச்சிடு மவராசி”

“என்னத்த மன்னிக்கிறது?”

அந்தம்மா, அவளை மன்னிக்கப்போவதில்லை என்பதுபோல் முறைத்தபோது, அந்த வீட்டுக்கு எதிர்வீட்டு கதவும் தானாய் திறப்பதுபோல் திறந்து கொண்டது. உயர்தர பதிப்புகள் போல் இன்னொரு ஜோடி… எதிர் வீட்டுப் பெண், தூக்கக் கலக்கத்தில் கண்களை இடுக்கியபடியே ஆயாவைப் பார்த்தாள். அவள் வீட்டுக்காரர், வைத்திலிங்கத்தை கேள்விப் பாவனையில் நோக்கினார். இதற்குள் வெளியே ஊத வேண்டிய விசிலை உள்ளே ஊதிக்கொண்டே காக்கி யூனிபார காவலாளி ஓடிவந்தார். அப்போதுதான் காக்கி உடைகளை களைந்துவிட்டு லுங்கி கட்டி படுத்தவர். மீண்டும் காக்கியை போட பத்து நிமிடம் ஆகிவிட்டது. ஒண்ணாம் நம்பர்க்காரர் கத்தினார்.

“சார் கத்துறாங்க. அது உனக்கு கேக்கலியா? கொல நடந்தாக்கூட பத்து நிமிசம் கழிச்சுதான் வருவியா?”

ஒண்ணாம் நம்பர்க்காரி குறுக்கிட்டாள்.

“வாட்சுமேன் போறாரு பாவம். முதல்ல இந்த கிழவிக்கு ஒரு வழி பண்ணுங்க. ஏணிபொந்துக்குள்ள அபசகுனமா படுத்துக்குறாள். காலங்காத்தால இது முகத்துலதான் முழிக்க வேண்டியிருக்கு. இதுக்கு எதாவது ஒரு வழி பண்ணனும். இது, நாளைக்கே மண்டையப் போட்டா யாரு பொறுப்பு? அசோசியஷன் கிட்ட கேட்கணும். சந்தா பிடிக்க மட்டும் மாதாமாதம் வராங்க. எல்லாம் எட்டாம் நம்பர் பொண்ணு கொடுக்கிற இளக்காரம்.”

இரண்டாம் நம்பர்க்காரியும் வாய்விட்டாள்.

“தேவைன்னா அந்த கவி தாவே, ஆயாவை அவள் வீட்டுக்குள்ள வச்சுக்கலாமே. இந்த கிழவியை ஏவி, ஏன் நம்ம கழுத்த அறுக்காள்?”

“சரி..சரி… போய் தூங்கலாம். சின்ன விஷயம் இது. காலையில் பேசி தீர்த்துக்கலாம்”

ஒண்ணாம் நம்பர்க்காரி, அதே நம்பர் கணவனை சாடினாள்.

“என்ன நீங்க… இந்த ஆயாவ ஒரு பிளாட்காரி மாதிரி நினைச்சு பேசlங்க. திர்க்கறது என்ன திர்க்கறது திர்த்துக்கட்டணும். முரளி சார்! உங்களத்தான். இவரு எப்பவுமே எடக்கு மடக்கானவரு. நாளைக்கு நீங்க அசோசியேசன் தலைவர்கிட்ட பேசி, இந்த அம்மாவை வெளியேத்தணும்.”

இரண்டாம் நம்பர் காரனை தன்னைவிட பெரிதாக நினைக்கும் மனைவியிடம் பொறுமை காக்க முடியாத ஒண்ணாம் நம்பர், வீட்டுக்குள் போய் மனைவியை ஒருபிடி பிடிக்க வேண்டும் என்ற கோபவேசத்தில் அவளை வலுக்கட்டாயமாக இழுத்துக்கொண்டே போய்விட்டார். அப்போதும் அந்தம்மா எல்லாம் அந்த எட்டாம் நம்பர்காரியால… காலையில் இருக்கு சேதி. அவள கிழ இறக்கி கேக்கதான் போறோம் என்று ஆயாவை பார்த்து ஒரு முறைப்போடு சொல்லிவிட்டு, கணவன் இழுத்த இழுப்புக்கு பின்வாங்கிப் போனாள். காவலாளியும், ஆய்ாவை ஒரு முறைப்பு முறைத்துவிட்டு ஓடினார். கேட்டில் சந்தேகத்துக்கு உரியவர்கள் வருகிறார்களா என்பதை பார்ப்பதற்காக அல்ல… காக்கி யூனிபாரத்தை கழட்டிப் போடவேண்டும். ஒரே அரிப்பு.

ஆயாவிற்கு, எட்டாம் நம்பர் என்ற சொல்லைக் கேட்டதும் அந்த நம்பர்க்குரிய கவிதா நினைவுக்கு வந்தாள். கூடவே, மகிழ்ச்சியும் குதிபோட்டது. நேற்று மழை பலமாக பெய்தது. அந்த அடுக்குமாடி கட்டப்பட்ட லட்சணத்தில் ஏணிப்படி பொந்துக்குள்ளும் தண்ணிர் பெருக்கெடுக்கும் நிலைமை. உடனே ஆயா, அந்த தூக்குப்பையை எடுத்து எட்டாம் நம்பர் கவிதாவிடம், கொடுத்தது, இப்போதுதான் நினைவுக்கு வந்தது. அவளிடம் தான் ஆயா, பால்கார்டு விநியோகிப்பில் செலவு போக மிச்சம் பிடித்த ஒராண்டுகால உழைப்பான ஆயிரம் ரூபாயை கொடுத்து வைத்திருக்கிறாள்.

ஆயா, அந்த ஏணிப்படிகளை இரண்டிரண்டாக தாண்டினாள். பல்புகள் அலங்கார வளைவுகளுக்குள் வைக்கப்பட்டிருந்தாலும் அவை மூளிகளாகவே கிடந்தன. முன்பு ஒரிரு சமயங்களில் சில்லரை திருடர்களுக்கு இந்த விளக்குகளே வழிகாட்டியதாக பழிபோடப்பட்டு, அவை நிரந்தரமாக குருடாக்கப்பட்டன.

ஆயாவிற்கு, படியேற ஏற மூச்சிளைத்தது. மூக்குப்புயல் நுரையீரலை, வாய்வழியாக வெளியே இழுத்துப் போடுவது போன்ற வாதை. சிறிது நேரத்தில், அதே மூக்கு, தொண்டைக்குள் சிக்கிக் கொள்வது போன்ற திணறல். ஆனாலும், இளைப்பாறவோ, களைப்பாறவோ நேரமில்லை. ஏடாகூடம் நடக்கும்முன்பே, ஆவினுக்குப் போய்விட வேண்டும்.

ஆனாலும், ஆயாவின் மனோ வேகத்திற்கு, உடல் வேகம் ஈடுகொடுக்க முடியவில்லை. முதல் தளத்திற்கு வந்தவள், மேலும் இரண்டு மாடிகளை எப்படி கடப்பது என்று அண்ணாந்து பார்த்தாள். யோசித்தபோது, பழைய நினைவுகள் மலர்ந்தன.

அந்த மாடிப் படிக்கட்டு போய், திருக்கழுக்குன்ற மலைப் படிக்கட்டுகள் தரிசனம் தந்தன. அந்த மலைக்கோயிலுக்கு, அவள் போனபோது பிள்ளைத்தாச்சி. பத்தாண்டுகாலமாக உருவாகாத பிள்ளை, வேண்டுதலின் பேரில் கருவானதாய் நினைத்தவள். அந்த வேண்டுதலை நிறைவேற்றுவதற்காக அப்போதைய இளம்பெண்ணான இந்த ஆயாவும், அவள் கணவனும், திருக்கழுக்குன்ற மலைப்படிகளில் ஏறியபோது, இவளால் வயிற்றுச் சுமையோடு எளிதாக ஏறமுடியவில்லை. உடனே, இவள் ஆம்படையான், அந்த படிக்கட்டுகளில் ஏறிக் கொண்டிருந்த குருக்களைச் சுட்டிக் காட்டினார். இவளைப் போலவே வயிறு துருத்திய குருக்கள், ஒவ்வொரு படிக்கட்டிலும் நேராக நடந்து அதன் ஒரத்தில் மறுபடிக்கு ஏறி, பின்னர் எதிர்பக்கமாக நடந்தார்கள்… இப்படி அவர்கள் ஏறுவது தெரியாமல் எஸ் வடிவத்தில் நடந்ததை சுட்டிக் காட்டினார். இவளும் அப்படியே நடந்தாள். கணவனின் தோளில் கை போட்டிருந்ததால் களைப்பு வந்தாலும், இளைப்பு வரவில்லை.

ஆயா, இந்த மல்லிகை வாசனை நினைவுகளோடு இரண்டாவது மாடி தளத்திற்கு வந்து விட்டாள். சிறிது நின்று மூச்சு விட்டாள். உடனயே அவளுள் எழுந்த அந்த மல்லிகை வாசனை, துர்வாசனை ஆயிற்று.

அவளை கோயிலுக்கு கூட்டிக்கொண்டு போனவன் அதற்குபிறகு ஏழெட்டு ஆண்டுகளில் ஆயாவிற்கு கோவிலாகிவிட்டான். அவனைப் போலவே முகத்தோற்றம் கொண்டவளும், குல தெய்வமான கடல் தெய்வத்தின் பெயர் வைக்கப்பட்டவளுமான, மகள் மச்சகாந்தியை ஒரு துாசுபடாமல் வளர்ப்பதற்காக, கடலோர ஏலத்தில் மீன் வாங்கி, சாலையில் கூறுபோட்டு விற்றது, மீன் வாடிக்கையாளரான ஒரு அதிகாரி மூலம், குடிசை மாற்று வாரியத்தில் ஒரு வீடு கிடைத்தது, அதே வீட்டில் ஒரு படித்த பையனுக்கு தன் மகளை கட்டிவைத்து வீட்டோடு மாப்பிள்ளையாக்கியது, அந்த மாப்பிளைக்காரன், ஏதோ தொழில் துவங்குவதற்கு வங்கி கடனுக்காக ஆயாவிடம் வீட்டை தன் பெயருக்கு எழுதி வாங்கியது, பிறகு அதை ஒரு போக்கிரிக்கு விற்றது, தட்டிக் கேட்ட ஆயாவை, மகள், கணவனுக்கு ஒத்தாசையாக பிடித்துக் கொள்ள, மருமகன் பல்லை உடைத்து விட்டு, வெளியேறியது, வீட்டை வாங்கிய அந்த போக்கிரி, தன்னை தட்டுமுட்டுச் சமான்களோடு வெளியே துக்கிப் போட்டது, அங்கிருந்து இடறி இடறி இந்த இடத்திற்கு வந்தது, இப்போது மகள் பூக்காரியாக, மாமல்லபுரம் பக்கம் உடலை விற்று திரிவது, வெள்ளையும் சொள்ளையுமான அந்த மருமகப் பயல் இன்னொருத்தியோடு குடித்தனம் நடத்துவது – இவை அத்தனையும் ஆயாவிற்கு மெய்யாய், கொடுங்கனவாய் கண்கொத்திப் பாம்பாய் பிராண்டின.

ஆயாவிற்கு, மீண்டும் கடமை கண்ணாகியது. கால்களில் கைகளை ஊன்றி ஊன்றி நான்காவது மாடிக்கு எப்படியோ வந்துவிட்டாள். எட்டாம் நம்பர் கதவின் பக்கவாட்டுச் சுவரில் தனக்கு அத்துபடியான அழைப்புமணியின் சுவிட்சை நான்கு விரல்களை மடக்கிக் கொண்டு ஒற்றையாய் நீட்டி வைத்த ஆள்காட்டி விரலால் தொடப்போனாள். அதை அழுத்த வேண்டியதுதான் பாக்கி. ஆனாலும், சாக்கடிப்பதுபோல் அந்த விரலை மடக்கிக் கொண்டாள்.

இந்த எட்டாம் நம்பர் பொண்ணு அறியாதவள். கல்யாணம் ஆகி நாலைந்து மாசமே இருக்கும். தன் கணவன் திரும்பிப் படுத்துக் கொள்வதாக ஆயாவிடம் ஒருதடவை கையறு நிலையில், யாரிடமாவது சுமையை இறக்கி வைக்க வேண்டும் என்கிற முனைப்பிலோ என்னமோ சொல்லிவிட்டாள். முதல் மாதம் அவன் அப்படி இல்லை என்றும் அவள் பின்னுரையாகச் சொன்னாள். உடனே ஆயா ஒரு கைவைத்தியம் சொன்னாள். அதுவும் போனவாரந்தான் சொல்லிக் கொடுத்தாள். அதாவது கொதிக்கிற பாலில் இரண்டு பச்சை முட்டைகளை உடைத்து அப்படியே பாலுக்குள் கொட்டி, அதை இரு டம்ளர்களில் மேலும் கிழுமாக ஆற்ற வேண்டுமாம்… முட்டை, கூழாகி பாலுக்குள் இரண்டற கலந்தவுடன், அதை அவனுக்கு கொடுக்கவேண்டுமாம். ஒருமனி நேரத்திற்கு, அவனை நோண்டக் கூடாதாம்.

மறுநாளுக்கு மறுநாள் ஆயாவை பார்த்த அந்தப்பெண் கவிதா நாணிச்க் கோணிச் சிரித்தாள். ஆயா அவளை கண்ணால் கேட்டபோது “இப்ப எல்லாம் அவரு என்னை திரும்பி படுக்க விடமாட்டேங்காரு” என்றாள் சிரிப்பும் கும்மாளமுமாய்.

ஆயா, மீண்டும் அந்த சுவிட்சை தொடப்போனாள். ஆனாலும் ஒரு தடங்கல். யோசித்துப் பார்த்தாள். நேற்று பெய்த மழையில் இளம்பனி வீசும் நேரமிது. அவளுக்கு தெரிந்து அதுதான் அதற்கு இதமான வேளை. இந்தச் சமயத்தில் அந்த சின்னஞ்சிறிசுகளின் தூக்கத்தைக் கலைப்பது, கருவை கலைப்பது மாதிரி. ஆனாலும், நேரம் கரைஞ்சிகிட்டே போகுதே. அந்தப் பாழாப் போற லாரி ரெண்டரையிலிருந்து காலை அஞ்சு மணிக்குள்ள எப்ப வேணுமுன்னாலும் வரலாமே… இதே மாதிரி பகல் பன்னிரெண்டு மணியிலிருந்து மூணு மணி வரைக்கும் எந்த நிமிசத்துலயும் வரலாம். வரும்போது இல்லாட்டி ஏடாகூடமா நடந்துரும். இந்நேரம் ஒருவேள, அது வந்துட்டுப் போயிருக்கலாமே. என்ன பண்ணலாம்.

ஆயா பதைபதைத்தாள். படபடத்தாள். வலது கையை சுவரை நோக்கி நீட்டுவதும், நீட்டிய கையை மடக்குவதமாக அல்லாடினாள். அதற்குள் அண்டைவீட்டின் இன்னொரு சேவல் கூவிவிட்டது. அது புதிய வரவான வெள்ளைச் சேவல். நீட்டி முழக்கி கூவாமல். கட்டு அண்ட் ரைட்டாக கூவக் கூடியது. அடக் கடவுளே! இந்நேரம் பால் வந்திருக்க வேண்டுமே. இல்லாட்டி, அந்த சேவல் இப்போ கூவாதே.

ஆயா, ஆபத்துக்கு பாவமில்லை என்று மனதை திடப்படுத்திக் கொண்டு, அழைப்புமணி படம் போட்ட நீண்ட சுவிட்சை விரலால் தொட்டுவிட்டாள். அதற்குள் உள்ளே இருந்து செல்லமான சிணுங்கல்கள் கேட்டன. விடாப்பிடியும், கொடாப்பிடியுமான உறவுப் பிடிகளின் உரசல் சத்தங்கள் சன்னசன்னமாய் கூடி ஒருமையாய்-கலவையான வலுத்துப் போன முக்கல் முனங்கல்கள். ஆயாவிற்கே வெட்கம் பிடுங்கித் தின்றது. ஒரு கணம்தான்…மறுகணம், கடமை நினைவுக்கு வந்தது. ஆனாலும், அழைப்பு மணியை அழுத்தவில்லை. அந்த சின்னஞ் சிறிசுகளுக்கு இடையேபோய் அவள் கரடியாய் நுழைந்துக் கொள்ள விரும்பவில்லை.

என்றாலும் ஆயாவுக்கு ஒரு ஆறுதல் எப்படியும் வழக்கம்போல் டெப்போ பையன் வந்திருக்க மாட்டான். முழு மாசத்துக்கு சம்பளம் வாங்குனாலும் மாதத்துல ஒரேஒரு தடவ பதினாறாம் தேதி மட்டுமே வருவான். அன்றைக்குத்தான் பணம் வாங்கிட்டு புதுகார்டுகளை எல்லாருக்கும் கொடுப்பான். பழைய கார்டுகளை வாங்கி, அவனே அத்தனை துளைகளிலும் குத்திக் கொள்வான். இன்றைக்கு பதினாறாம் தேதிஇல்ல. பால் லாரியில வருகிற ஆயிரம் டிரேய் தட்டுக்கள்ல, முன்னுற ராக்கப்பனோ, அல்லது குப்பனோ கிழே எடுத்து வைப்பாங்க. வாடிக்கை ஆட்களுக்கு டிரைகள ஒதுக்கி வைப்பாங்க. எல்லாருடைய கார்டுகளும், அவங்களுக்கு அத்துபடி. சம்பந்தப்பட்ட பால்கார பட்டுவாடா ஆளுக, அதுல இருக்கற உறைகளை எடுத்துக்கணும். சில சமயம் அனுப்பற இடத்துலேய, பேஜாரு நடக்கும். நாலைஞ்சு பாக்கெட்டுங்க காணாம போயிடும். அப்பல்லாம் கடைசியா போற ஆளோட தலைச்சுமை குறையும். தல சும குறைஞ்சி மனச் சும கூடும்.

ஆயா, அழைப்பு மணியை அழுத்தாமலே, அந்தத் தளத்தில் இருந்து அவசரஅவசரமாக கீழ்நோக்கி நடந்தாள். ஏணிப்படிகளை இடது கையால் பற்றிக் கொண்டு அவற்றில் கையை வளையம் போல் வைத்துக் கொண்டு, படிகளில் தாவித் தாவி, கைவளையம் அந்த கம்பிகளில் உருள, உருள, கால்கள் அதற்கு இணையாக நடக்க நடக்க, கீழ்தளத்திற்கு வந்து, கேட்டு வாசல் வரைக்கும் ஓடினாள். பிறகு தனது தலையிலே மென்மையாக அடித்துக் கொண்டு, மீண்டும் அந்த ஏணிப்பொந்திற்கு வந்து அதன் ஒரத்தில் இருந்த குண்டா பாத்திரத்தை எடுத்து இடுப்பில் வைத்துக் கொண்டாள். ஒரு கொழுத்த பிள்ளையை அணைப்பதுபோல், பக்கவாட்டில் கைகளை நீட்டி அணைத்தபடியே, ஓடாக்குறையாக நடந்தாள். நடக்காத குறையாக ஓடினாள்.

டிப்போ சாலைக்கு ஆயா வந்தபோது, வழிப் போக்கர்களும், வாக்கிங் ஆசாமிகளும் ஆயாவை பொழுதுபோக்காய் பார்த்தார்கள். கவிழ்ந்து நடக்கும் ஆமையை நிமிர்த்தி வைத்தது போன்ற கூன் போட்ட உடம்பு. அந்த ஆமையிலும் நட்சத்திர ஆமைபோல், காய்ப்புகளும், தேமல்களுமான உடம்பு… பறட்டைத்தலை… ஒடுங்கிபோன வயிற்றை துருத்திக் காட்டுவது போன்ற முரட்டுச் சேலையின் இரட்டை மடிப்புகள்.

ஆயாவுக்கு, டிப்போவில் ஒருத்தன் இருப்பதை பார்த்ததும் மகிழ்ச்சிதான். ராக்கப்பனா, குப்பனா என்று தொலைநோக்காய் கண்விலக்கி பார்த்தாள். வயதாகிப்போன கண்கள் பின்வாங்கின. இரண்டுபேருல எவன் இருந்தாலும் சரிதான். ராக்கப்பன் சவுக்கியமா ஆயான்னு கூட கேக்காமல் அவளோடு பங்கை எடுத்துக் கொடுப்பான். குப்பன் அவளுடைய நேற்றைய ராத்திரியை விலாவாரியா விசாரிச்சுட்டு அனுதாபமா உம் கொட்டுவான். பாத்திரத்தை ஒரே மூச்சுல தூக்கி, அவள் தலையில வைப்பான். சிலசமயம் வேடிக்கையா அவளோட இரண்டு கையையும் பிடிச்சு அந்தப் பாத்திரத்தின் ரெண்டு பக்கமும் ஒப்புக்கு வைத்துக் கொண்டே உயரத் தூக்கி வைப்பான். அந்த சைக்கிள்காரி நின்னா “உனக்கு இப்படி உதவட்டுமான்னு கேப்பான். உடனே அவள் “கரிமூஞ்சி ஆசையைப்பாரு’ என்று செல்லமாக சிணுங்குவாள். எல்லாருக்கும் சிரிப்பு வரும். கசிவுகளால் மெலிந்து போன பாலுறைகளின் ஆதங்கம் கூட காணாமல் போய்விடும்.

ஆயா ஓடோடினாள். டிப்போ பக்கத்தில் போனதும் அவளுக்கு மூச்சு வாங்கியது. அது நிலைப்பட்டதும் ஏறிட்டுப் பார்த்தாள். அவளுக்கு ஒரு ஏமாற்றம். ஆனாலும் அது அதிர்ச்சியாக வில்லை. டிப்போக்காரன் அத்தி பூத்தது போல் நின்றான். ஒரு சினிமா நடிகர் படம் போட்ட பனியன் சட்டை போட்டிருந்தான். காக்கா மாதிரியான சாய்வுப் பார்வை. அவன் கால்மாட்டில் மூன்று டிரேய்கள். வழக்கம்போல் மேல்நோக்கி தோன்றாமல் உள்ளடங்கிக் கிடந்தன. ஆயாவை பார்த்ததும் அவன் கத்தினான்.

“எவ்வளவு நேரமா உனக்காக காத்திருக்கது? ஏன் லேட்டு? இப்படித்தான் தினமும் வர்றியா?”

“இல்ல சாரே! ரெண்டரை மணிக்கே பர்ஸ்ட்ல வந்து பர்ஸ்டுல போறது நான்தான். இன்னிக்குப் பார்த்து, நான் கார்டுங்கள கொடுத்து வச்ச வீட்டுக்கதவு மூடிக் கிடக்கு. உன்ன காக்க வைக்கக் கூடாதுன்னுதான் ஒடி வந்தேன்.”

“சரி சரி டிரேய காலி பண்ணி சிக்கிரமா கொடு. லாரி வருகிற நேரம்.”

“இதோ ஆச்சுப்பா.”

ஆயா, அந்த மூன்று டிரேய்களில் உள்ள உறைகளை ஒவ்வொன்றாக எடுத்து, எண்ணி எண்ணி பாத்திரத்திற்குள் போட்டாள். அறுபது உறைகளுக்கு பதிலாக ஐம்பத்திநாலுதான் கணக்கிற்கு வந்தன. ஆயா, மீண்டும் அந்த பாத்திரத்தில் இருப்பதை ஒவ்வொன்றாக எடுத்து எண்ணி எண்ணி கிழே வைத்தாள். அப்போதும் ஐம்பத்துநாலுதான். பதப்படுத்தப்பட்ட பால் உறையில் மூணக் காணோம். ஒருலிட்டர் கொண்ட கொழுப்பு சத்து பாலுலயும் ரெண்டக் காணோம். ரெண்டுக்கும் மத்தியா இருக்கிற நிலப்படுத்தப்பட்ட பால் உறையில ஒண்ணக் காணோம். ஆகமொத்தத்துல ஆறக் காணேம்.

ஆயா, அருகே டிப்போ கிளார்க் நிற்பதாக அனுமானித்து ஏறிட்டுப் பார்த்தாள். அவனைக் காணாதபோது, அக்கம்பக்கம் பார்த்தாள். அவனோ, தெருவில் ராக்கப்பனை வழிமறித்து பேசிக்கொண்டிருந்தான். ஆயாவிற்கு சிறிது தெம்பு. ராக்கப்பனை வைத்தே நியாயம் கேட்கலாம்.

ஆயா இடறிய ஒரு காலை இழுத்துப் போட்டுக் கொண்டே அவர்கள் பக்கம் போனாள். எதையோ பேசிக் கொண்டிருந்த அவர்கள் பேசி முடியட்டும் என்பது போல் காத்திருந்தாள். அவர்கள் பேச்சை நிறுத்துவதாக இல்லை. இவளுக்கு அப்போதே கேட்கவில்லை என்றால் தலை வெடித்து மூளை சிதறிவிடும் போல் இருந்தது. இடைமறித்தாள்.

“ஏம்பா டிப்போ சாரே! மொத்தம் ஆறு உறைங்க குறையுது. மூணு உறையில பால் கசிந்து பாதிதான் இருக்குது. இன்னாப்பா இதெல்லாம்?”

“இதுக்குத்தான் நீ முன்னாலேயே வந்திருக்கணும். யாரோ வாடிக்கைக்காரங்க உன் டிரேயில இருந்து எடுத்துட்டுப் போயிருப்பாங்க.”

“எங்க ஆளுங்க அப்படிப்பட்ட ஆளுங்க இல்ல நயினா. அடுத்தவங்க உறையில கைவச்சுக் கூட பார்க்க மாட்டாங்க. அப்படிப்பட்ட சனங்க. நீ தெனமும் வந்தால்தானே உனக்கு இது தெரிஞ்சிருக்கும்? ஆடிக்கும் அமாசைக்குமா வந்தா…”

“ஒகோ. சட்டம் பேசறியா? சரி. ஒன் கார்டுங்கள எடு.”

“அதான் சொன்னேனே. அங்க வெச்சுட்டேன்னு. போய் எடுத்துக்கினு வரட்டுமா”

“ஒனக்காக நான் காத்திருக்க முடியாது. நீ என்னை நம்பாட்டா நான் உன்னை நம்பணுமா?”

“அப்ப என்னதான் செய்யணுங்கிற?”

“என்ன செய்வியோ தெரியாது. இன்னும் அஞ்சு நிமிசத்துல நீ கார்டுங்கள காட்டணும். அதோ தொலைவுல லாரி தெரியுது பாரு. அது வருமுன்னால காட்டனும். இல்லாட்டா இதுங்கள எல்லாம் எடுத்து லாரியில ஏத்திடுவேன்.”

ஆயா, ராக்கப்பனிடம் முறையிடுவதற்காக ஏறிட்டுப் பார்த்தாள். அவன், எப்போதோ நழுவி விட்டான் என்பது அப்போதுதான் அவளுக்கு உறைத்தது. அவளுக்கு, கை, கால்கள் ஆடின. காதுகள் குடைந்தன. கண்கள் எரிந்தன. ஆறுபேருக்கு எப்படி ஜவாப் சொல்வது? அத்தன கார்டுகளும் அடுக்கு மாடி கார்டுங்க. அந்த கார்டுங்க சாக்குலதான், அவள், அங்கே தங்கியிருக்காள். இன்னைக்கு வேற கசமுசா. ஒருத்தருக்கு கொடுத்துட்டு இன்னொருத்தருக்கு கொடுக்காட்டால், அந்த எலி வளையில இருக்க முடியாது. அதோட, அது நியாயமும் இல்லை. ரெண்டுவாட்டி, அரையரை லிட்டரா கொடுக்கறதுக்கு வீட்டுக்கு முப்பது ரூபா கொடுக்காங்க. எல்லாருமே பாலுக்கு காத்திருப்பாங்க. ஏன் இன்னிக்குப் பார்த்து எல்லாமே என் தலையில வியுது…

ஆயா, தனக்குள்ளே புலம்பிக் கொண்டு குறுக்கும் நெடுக்குமாய் நடந்தாள். மனதுக்குள் கோவிலாகிப் போன கணவனை நினைத்தாள். மகளாகப் பிறந்த மசச்காந்தியை திட்டினாள். மாப்பிளையாகிப் போன அடாவடி பயலை சபித்தாள் முட்டைப்பால் கவிதாவையும் திட்டப்போனாள். ஆனால் நாக்கைக் கடித்துக் கொண்டாள். இந்தச் சமயத்துல ஏற்படுற வயித்தெறிச்சல் அந்த சின்னஞ்சிறிசை ஏதாவது செய்துடக்கூடாது.

டிப்போக்காரனுக்கு, ஒருவேளை இறக்கம் வந்ததோ என்னமோ… ஒரு வேளை அதோ வருகிற அந்த லாரி டிரைவரிடம் அவள் போட்டுக் கொடுத்துடக்கூடாது என்று நினைத்தானோ என்னமோ… கருணைப் பரவசமாய் ஆயாவுக்கு அறிவுரை சொன்னாள்.

“சரி ஒன் கார்டுங்கள நான் கேக்கல. போய்த் தொலை. சும்மா பினாத்திட்டு நிக்காதே. அதோ பால் லாரி வருது. டிரைவர் வீட்டுக்கு இன்னைக்கு விருந்தாளிங்க வராங்களாம். ஒன் பாலுல இன்னும் ரெண்டு லிட்டர் போயிடும். சிக்கிரமா காலிபண்ணு.”

ஆயா, அந்த பாத்திரத்தை இழுத்து தலையில் துக்கப்போன போது, லாரி நெருங்கி விட்டது. எதிர்ப்பக்கம் போனாலும் வம்பு… லாரிப் பக்கம் போனாலும் வம்பு… என்ன செய்யலாம் என்று யோசித்தவளின் தலைக்குகையில் மங்கியதோர் வெளிச்சம்… உடனே அவள் சாலையில் இருந்து ஒரு பொந்தை காட்டியபடியே சிறிது துக்கலாக உள்ள பிளாட்பாரத்தில் அந்த பாத்திரத்தை எடுத்து வைத்து அதை தரதரவென்று இழுத்து இழுத்து டிப்போவுக்கு பின்னால் வைத்து விட்டு அவளும் அங்கே ஒளிந்து கொண்டாள்.

எதிர்ப்புறம் உள்ள பச்சை இலைமயப் பின்னணியில் மஞ்சள் பூ கொத்துகளை சரவிளக்குகளாய் காட்டிக் கொண்டிருந் வாகை மரத்தில் ஆயாவிற்காக காத்திருந்த காகங்களுக்கு அவளை காணாததில் ஏமாற்றம். அந்த இளைத்த கிழவியிடம் மட்டுமே தலைக்கு மேல் பறந்து, பாத்திர விளிம்புகளில் தைரியமாக உட்கார்ந்து, பாலுறைகளை லாகவமாக கொத்திக் குடிப்பவை. காத்திருந்த காகங்கள் அங்குமிங்குமாக பறந்துவிட்டு, இவளை மாதிரி ஒரு மீன்கார, கிழவி எவளாவது கிடைக்காமலா போவாள் என்ற அனுமானத்தில் பறந்து போயின.

இதற்குள் பால் லாரி வந்துவிட்டது. இருபக்கமும் சாலைகளை அடைத்து தக்காரும் மிக்காரும் இல்லாமல் அனைத்து வாகனங்களையும் ஒரங்கட்டச் செய்து, உருமியபடியே வந்து நின்றது. அந்த உருமலின் பின்னணியில் லாரிக்காரனும், டிப்போக்காரனும் பேசுவது ஆயாவுக்கு சத்தமாகவே கேட்டது.

டிரைவரண்ணே! போனவாரம் எங்க தாத்தா செத்தாரே. அவருக்கு இன்னிக்கு பாலு. நீங்க சடங்குக்கு வராட்டாலும் குடும்பத்தோட சாப்பாட்டுக்காவுது இன்னிக்கு வந்துடுடனும். உங்கள கூப்பிடறதுக்குதான் இன்னிக்கு வந்தேன்.”

“பால் பாயாசத்தோட சோறு போடுவியா?”

“பின்ன என்ன அது இல்லாமலா”

“அப்புறம்பா, எனக்கும் சாயங்காலம் மாமனார், மாமியார் வராங்க. நீ என்ன செய்வியோ எனக்கு தெரியாது, இப்போவே எனக்கு ரெண்டு லிட்டர் பால் வேணும்.”

டிப்போக்காரன், பரமசிவன் கழுத்து பாம்பான லாரி டிரைவரை திருப்திப்படுத்துவதர்காக ஆயா பதுங்கி இருக்கும் இடத்தை நோட்டமிட்டான். அப்போது –

ஆயா, தனக்கு யாரோ பால் ஊற்றுவது போல அசைவற்று அகலிகைக் கல்லாய் கிடந்தாள்.

– தமிழரசு பொங்கல் மலர் – 2001 – சமுத்திரக் கதைகள், முதற் பதிப்பு: டிசம்பர், 2001, ஏகலைவன் பதிப்பகம், சென்னை – 600 041

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *