ஃபிஃப்டி, நாட் அவுட்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: August 4, 2014
பார்வையிட்டோர்: 8,508 
 
 

“நீயும் வாயேன் யமுனா.”

“நீங்க இரண்டு பேரும் போயிட்டுவாங்க. இன்னிக்கு ஒரு நாளாவது உங்க இரண்டு பேர் தொந்தரவு இல்லாமல் நிம்மதியாக இருக்கேன்”

“அம்மா” என்று சிணுங்கிய கௌதமையும், “அப்படியா சொல்றே, இரு, வந்துப் பேசிக்கிறேன்” என்ற முகுந்தையும் அனுப்பி விட்டு வாசல் கதவைத் தாள் போட்டுவிட்டு உள்ளே வந்தாள்.

இனி அவர்கள் இருவரும் கௌதமின் பள்ளியில் நடக்கும் கிரிக்கெட் போட்டி முடிந்து மாலைதான் திரும்புவார்கள். இன்று எப்படியாவது படுக்கையறை பரணை சுத்தம் செய்ய வேண்டும் என்ற தீர்மானத்துடன் ஒரு கைக்குட்டையை எடுத்து மூக்கைச்சுற்றி கட்டிக்கொண்டு, டேபிளை நகர்த்திப்போட்டு மேலே ஏறினாள்.

எப்படித்தான் இவ்வளவு குப்பை சேர்கிறதோ என்று சொல்லிக்கொண்டே ஒவ்வொன்றாக எடுத்துப் பார்த்து, தேவையில்லாததையெல்லாம் தனியாக எடுத்து வைத்துக்கொண்டே வந்தாள். கிட்டத்தட்ட முன்பக்கமாக இருந்தவையெல்லாம் பார்த்து சுத்தம் செய்தாகிவிட்டது. இனி பின்வரிசையில் அடுக்கியுள்ள இரண்டு பெட்டிகள்தான் பாக்கி.

முதல் பெட்டியை எடுத்தாள். கௌதமின் பழைய புஸ்தகங்கள், மாத இதழ்களில் வந்த உதவிக்குறிப்புகள் யமுனா சேர்த்துவைத்தது. அதென்ன நடுவில் ஒரு ப்ளாஸ்டி கவர்?

யமுனா கையில் எடுத்துப்பார்த்தாள்.

இதுவரை அவள் கண்ணில் இது பட்டதே இல்லையே. கையில் எடுத்து பிரித்துப்பார்த்தாள். பழைய தொலைபேசி பில், இன்னும் சில கவர்கள் இருந்தன.

முகுந்த் வைத்திருப்பாரென்று திருப்பியதை இருந்த இடத்திலேயே வைக்கப்போகும்போது வழுக்கிக் கீழே விழுந்து சிதறியது. யமுனா சலித்துக்கொண்டு கீழே இறங்கினாள். ஒவ்வொன்றாக எடுத்து பைக்குள் அடுக்கினாள்.

அப்பொழுதுதான் அந்தக்கவரைப்பார்த்தாள்.

பிரித்தாள். அதில் ஏதோ எழுதிய ஐந்தாறு பேப்பர்கள். ஒன்றை எடுத்துப் பிரித்தாள்.

“டியர், ஏன் நேற்று வரவில்லை. உனக்காகக் காத்திருந்து களைத்துப்போனேன். இன்றாவது உன் தரிசனம் கிடைக்குமா?” என்று ஆரம்பித்து மேலும் எழுதப்பட்டிருந்தது.

யமுனாவின் முகம் மாறியது. அவள் உணர்ச்சிக்கொந்தளிப்பில் கோபத்துடன் அந்த காகிதத்தை கையில் கசக்கினாள். அவ்வளவுதான் அவளுடைய சுத்தம் செய்யும் வேலை பாதியில் நின்றது. அதற்குப்பிறகு எந்த வேலையும் ஓடவில்லை.

மாலையானது.

முகுந்தும், கௌதமும் வீடு திரும்பினார்கள்.

அம்மா, இன்று மாட்ச்சில் நான் 50, நாட் அவுட்ம்மா. என்றான் கௌதம்.

ஆம்மாம். வீட்டில் கூட உங்கப்பா 50 நாட் அவுட், நாந்தான் அவுட்” என்றாள் யமுனா.

இருவரும் என்னவென்று புரியாமல் திகைத்தார்கள்.

அன்று அதற்கப்புறம் வீடே அமைதியாக இருந்தது. முகுந்துக்கு மட்டும் புரிந்தது, இந்த அமைதிக்குப் பிறகு ஒரு புயல் இருக்கிறது என்று.

இரவுச் சாப்பாடு முடிந்து கௌதமும் உறங்கிவிட்டான்.

முகுந்த் மெதுவாக யமுனாவின் அருகில் சிறிது அச்சத்துடன் வந்தான்.

யமுனா, என்ன இன்னிக்கு ரொம்ப கோபமாக இருக்கே? என்று ஆரம்பித்ததுதான் தாமதம். யமுனா அவனிடம் கத்த ஆரம்பித்தாள்.

ஏங்க, உங்களுக்கு கொஞ்சமாவது உங்க வயது நினைவிருக்கா? ஏதுடா, நமக்கு 12 வயது பையனிருக்கானே, அவனை ஒழுங்காக வளர்க்கணுமே என்ற அக்கறையிருக்கா என்று அடுக்கிக் கொண்டேபோனாள்.

ஒன்றும் புரியாமல் முகுந்த் முழித்தான். நான் என்ன பண்ணினேன் என்றான் தடுமாற்றத்துடன்.

இன்னும் என்ன பண்ணனும்? இன்னும் பழைய கடிதத்தையெல்லாம் கிழிக்காமல் வைத்துக்கொண்டு? கௌதம் பார்த்தால்? என்று கேட்டாள் முகுந்தின் காதல் மனைவி யமுனா!!!!!

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *