வெள்ளை வேன்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: கிரைம்
கதைப்பதிவு: September 5, 2024
பார்வையிட்டோர்: 945 
 
 

(2009ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

அவனை ஏற்றி வந்த வாகனம் தரித்த போது இந்த இடத்தில் வைத்துத்தான் தன்னைக் கொல்லப் போகிறார்கள் என்று அவன் நினைத்தான். 

வாகனத்திலிருந்து இறக்கப்பட்ட அவனது கண்களை மறைத்துக் கட்டப்பட்டிருந்த கறுப்பு நிறத் துணியை ஒருவன் அவிழ்த்தான். அவனுக்கு எல்லாமே இருள் மயமாக இருந்தது. “இங்கு நடந்த எதையும் யாரிடமும் சொல்லக் கூடாது. சொன்னால் என்ன நடக்கும் என்பதும் உனக்குத் தெரியும்.” 

அவர்களில் ஒருவன் சொல்லி முடித்த தும் வாகனத்தில் ஏறினான். அது அந்த இடத்தி லிருந்தே வேகம் பிடித்து மறைந்தது. கெப்பல கண்ணைக் கட்டிக் காட்டில் விடுவது என்று சொல்வார்களே… அந்த நிலைமைதான் அவனுக்கு. திசைகள் எதுவும் புரியவில்லை. எல்லாமே இருள் போர்த்தப்பட்டிருந்தது. தன்னை ஒரு நிலைப்படுத்திக் கொள்வதற்காக அவன் அதே இடத்தில் சற்றுத் தரித்து நின்றான். 

ஐந்து நிமிடங்களுக்குப் பிறகு, தான் நிற்பது ஒரு கிறவல் பாதை என்று அவனுக்குப் புரிந்தது. தூரத்தே ஆகாயத்தின் அடிவானத்தில் லேசான வெண்ணிறம் தெரிந்தது. அது ஒளியாக இருக்கலாம். அந்த ஒளியை நோக்கி எவ்வித நம்பிக்கையும் இல்லாமல் நடக்க ஆரம்பித்தான். 

வலது புறங்கை தாங்க முடியாமல் வலித்தது. வலித்த இடத்தில் தடவிய போது அந்த இடம் வீங்கியிருந்தது. வலியினாலும் ஆயாசத்தி னாலும் அவனிடமிருந்து பெருமூச்சுக் கிளம்பியது. அந்தப் பெரு மூச்சுடன் வலியின் வேதனை முனகலும் சேர்ந்து வெளியானதை ஒரு கணம் உணர்ந்தான். திடீரென ஒரு பெரும் நீர்த்தாகம் எடுத்தது. தெருவில் நீர் கிடந்தாலும் அள்ளிக் குடித்து விடலாம்போல் இருந்தது. தளர்ந்த நடையின் காலடியில் குறுஞ் சரளைக் கற்களே மிதிபட்டன. 

தாமதிக்கவோ தரித்து நிற்கவோ முடியாது. இது எந்த இடம் என்பதும் தெரியாது. பட்டியறுந்து பைக்குள் இருக்கும் கைக்கடிகாரத்தில் அந்த இருளில் நேரம் தெரியவில்லை. ஒன்றுமே விளங்காத ஒரு புதிய இடத்தில் இன்னுமொரு ஆபத்தில் சிக்கிக்கொள்ளக் கூடாது என்று நினைத்தான். எனவே நடந்தான். நடந்து கொண்டேயிருந்தான். 


என்றும் போல் இன்றும் பத்து மணிக்குத்தான் கடையை மூடினான். வழமையாக அங்கிருந்து தனது மோட்டார் சைக்கிளில் ஏழு கிலோ மீற்றர் தூரத்திலுள்ள வீட்டுக்குவரும்போது நேரம் பத்து இருபது அளவை எட்டும். இரவு என்பதால் வாகன நெருக்கடிகள் ஏதும் இருப்ப தில்லை. அவனுடன் கூடவே அவனது மைத்துனனும் வருவான். 

புறநகர்ப் பகுதியில் புதிதாகக் கட்டிய இரு மாடிகள் கொண்டது அவனது பெரிய வீடு. சற்றுக் குறைந்த விலையில் கிடைத்த காணியில் இரண்டு வருடங்களுக்கு முன் அந்த வீட்டைக் கட்ட ஆரம்பித்தான். வீடு கட்டுவது இலகுவான வேலை அல்ல. துன்பம். அவனும் அதை அனுபவிக்கத்தான் செய்தான். பல்வேறு தடைகளையும் வென்று கடந்த மாதம்தான் பூர்த்தியானது அந்த வீடு. 

பிரதான வீதியிலிருந்து வீட்டுக்குச் செல்லும் பாதையால் திரும்பும் போதே அந்த வெள்ளை நிற வாகனத்தை அவன் கண்டான். மோட்டார் சைக்கிள் அப்பாதையில் நுழைந்த அடுத்த கணத்தில் அவ்வாகனம் உயிர் பெற்றதையும் அவன் அவதானித்தான். 

தெரு விளக்குகள் அணைந்து இருட்கிடங்காய்க் கிடந்தது அப்பிரதேசம். இரண்டொரு வீடுகளில் பாதுகாப்புக்காக எரியும் விளக்கு கள்தாம் அவனுக்கு வெள்ளை வேனை அடையாளங் காட்டின. 

நாட்டில் வெள்ளை வேன் பீதி அதி உச்சத்தில் இருந்ததால் அவனது மனதில் ஒரு சிறிய சந்தேகம் எட்டிப் பார்க்கத்தான் செய்தது. மடியில் கனமில்லையென்றால் வழியில் பயமில்லை. இருந்தாலும் வெள்ளை வேனின் நோக்கம் எதுவாகவுமிருக்கலாம். 

வெள்ளை வேனில் யார் வருகிறார்கள், எதற்காகக் கடத்திச் செல்கிறார்கள் என்பன போன்ற விபரங்கள் யாருக்கும் தெரியாதவை. 

வெள்ளை வேன் பற்றிய பல்வேறு அனுமானங்கள் நாட்டின் அனைத்துத் திசைகளிலும் காற்றில் கலந்திருந்தன. அதிகம் பயங்கொண்ட வர்கள் அதைப்பற்றிக் கதைக்கவும் அச்சப்பட்டார்கள். சிலர் தத்தமது அறிவுக்கு ஏற்பவும் தத்தமது கட்சி மற்றும் கொள்ளைககளுக்கு ஏற்பவும் கதைகள் புனைந்தார்கள். பொழுது போகாதவிடத்து அதைப் பற்றி முடிவில்லாமல் கதைத்தார்கள். 

விடுதலைப் புலிகளோடு சம்பந்தப்பட்டவர்கள், ஆதரவாளர்கள், உதவி வழங்கியோர்தாம் கடத்தப்படுகிறார்கள் என்று சிலர் நினைத்தனர். கப்பம் பெறுவதற்காக இக்கடத்தல்கள் நடக்கின்றன என்றனர் சிலர். கடத்தப்பட்டவர்கள் திரும்பி வராத போது அவர் நிச்சயம் பயங்கர வாதியாகத்தான் இருப்பார் என்றனர் இன்னுஞ் சிலர். ‘தமிழ் விடுதலை இயக்கங்கள் ஆரம்பித்து வைத்ததுதான் இந்தக் கடத்தல் நாடகங்கள். இன்று அவர்களையே நோக்கிக் குறிவைத்துள்ள ‘தாகக் கதைத்தனர் மற்றும் சிலர். கடத்தப்பட்டவர்களில் மூவினத்தவர்களும் இருந்ததால் அநேகருக்குக் கடத்தல் பற்றிய குழப்பம் இருந்து வந்தது. 

தமிழர்களே அதிகமாகக் கடத்தப்பட்டவர்கள் என்பதால் அவர்கள் அச்சத்தில் உறைந்து போயிருந்தனர். நிற்கும் இடம், நடக்கும் இடம் என்று வீட்டில் உள்ளவர்களுக்கோ நண்பர்களுக்கோ கைத் தொலைபேசி மூலம் ரன்னிங் கொமன்ரறி கொடுக்கும் நிலைக்கு அவர்கள் தள்ளப்பட்டனர். 

ஒரு காலத்தில் கொள்ளை நோய், மின்னல் தாக்கு, சுனாமி போல் இயற்கைச் சோதனைகளுக்கு ஒப்பாய் வெள்ளை வேன் ஆள் கடத்தல் யாராலும் தவிர்க்க முடியாத ஒன்றாக மாறிவிட்டிருந்தது. கெட்ட ஒரு நபரைப் பார்த்து ‘நாசமாயப் போவான்’ என்று திட்டுவது மாறி ‘இவனை யெல்லாம் வெள்ளை வேன் கொண்டு போகுதில்லையே’ என்று திட்டு மளவு வெள்ளை வேன் கடத்தல் ஆபத்து நிறைந்ததாய் உணரப்பட்டது.

தன்னைக் கடத்துவதற்கு நியாயங்கள் எதுவும் இல்லை என்று அவன் நினைத்திருந்தான். கடத்துவதற்கு நமக்குத் தெரிந்த நியாயங்களே இருக்க வேண்டும் என்றெல்லாம் கட்டாயம் ஏதுமில்லை என்பதையும் அவன் தெரிந்தே இருந்தான். மோட்டார் சைக்கிளை மறித்து வேன் நிறுத் தப்பட்ட போது அவனது உடல் குளிர்ந்து போயிற்று. 

பின்னால் அமர்ந்து வந்த மைத்துனன் உயிர் தப்பினால் போதும் என்று இறங்கித் தலை தெறிக்க ஓடினான். 

வேனிலிருந்து இறங்கிய வாட்டசாட்டமான இருவர் அவனது இரு புறத்திலும் வந்து கைகளை இறுகப் பற்றிக் கொண்டனர். அவன் சுதாகரிப்பதற்குள் அவனை மோட்டார் சைக்கிளிலிருந்து இழுத் தெடுத்தனர். மோட்டர் சைக்கிள் சாய்ந்து விழுந்தது. அவனுக்கு வார்த்தைகள் எதுவும் வெளிவரவில்லை. அந்தக் கணத்தில் வாய் வரண்டு நாக்கு அண்ணத்தில் ஒட்டியது. அந்த வேனுக்குள் அவனை ஏற்றுவதற்கு அவர்கள் முயன்ற போது அவன் மல்லுக் கட்டினான். 

கடத்தல் என்பது ஒன்று விடுதலை அல்லது மரணம் என்றாகியிருக்கும் நிலையில் தப்புவதற்கு முயல்வதுதான் ஒருவனின் முயற்சியாக இருக்கும். உயிரைக் காத்துக் கொள்ள மேற்கொள்ளும் இறுதிப் போராட்டம். அதையே அவன் செய்தான். அவனைப் பலவந்தப் படுத்தி ஏற்ற முயன்றவர்களை விட ஆஜானுபாகுவான தோற்றம் அவனது. வேனுக்குள்ளிருந்து இன்னொருவன் வெளிப்பட்டு அவனை ஓங்கி அடித்தான். 

“மல்லுக்கட்டாமல் வந்தால் உனக்கும் நல்லது, எங்களுக்கும் நல்லது.” 

இந்த ஒரு வசனத்தைத் தவிர வேறு ஒரு வார்த்தை அவர்களிட மிருந்து வெளிவரவில்லை. 

தான் பணியவில்லை என்பதை அவர்களுக்கு அவன் தனது முழுப் பலத்தையும் பிரயோகித்து உணர்த்தினான். மூவரது பலவந்தத்தைத் தனி ஒருவனால் சமாளிக்க முடியவில்லை. அவனது புறங்கையில் ஓர் அடி விழுந்ததும் அந்த இடம் சுள்ளென்று வலித்தது. அவனை வலிந்து உள்ளே இழுத்து போட்ட பின்னர் வாகனம் வேகமெடுத்துப் பறந்தது. வழியில் ஒரு புடவையால் அவனது கண்கள் மறைத்துக் கட்டப்பட்டன. கண்கள் கட்டப்பட்டதும் பலமாக நான்கு அடிகள் கன்னத்திலும் தோளிலும் விழுந்தன. 

“சண்டித்தனம் பண்ணாதே. பேசாமல் வா!” 

வெள்ளம் தலைக்கு மேல் போய்விட்டது. இனி நடப்பது கடவுள் விதித்த படி என்று நினைத்தான். 

“என்னை ஏன் கடத்திச் செல்கிறீர்கள்?” என்று கேட்டான்.

“சொல்கிறோம்…. பேசாமல் வா!” 

அதன் பிறகு அவன் பேசவில்லை. அவர்களும். 

பல இடங்களில் இடது, வலது புறங்களில் வாகனம் திரும்பித் திரும்பிச் செல்வதை அவன் உணர்ந்தான். நாற்பத்தைந்து நிமிடங்களுக்கு மேலாக அந்த வெள்ளை வேன் வேகத்துடன் ஓடி ஓரிடத்தில் தரித்து நின்றது. அவனை இறக்கி மாடிப் படிகளில் ஏற்றிச் சென்றார்கள். கண்கள் கட்டப்பட்ட நிலையில் படிகளை அனுமானித்துக் கால்களை வைத்து ஏறினான். ஏறிய படிகளைக் கணக்கிட்டால் அது ஒரு மூன்று அல்லது நான்கு மாடிக் கட்டடமாக இருக்க வேண்டும். 

அவனை ஒரு கதிரையில் அமர்த்திய பிறகு கண் கட்டை அவிழ்த்து விட்டார்கள். 

அவனைச் சுற்றி நான்கு பேர் இருந்தனர். ஒருவனது இடுப்பில் கைத்துப்பாக்கி தெரிந்தது. 

அது ஒரு சிறிய அறை, கட்டடம் எப்படியிருக்கும் என்பதைக் கூடக் கற்பனை செய்ய முடியவில்லை. அவனைச் சுவரைப் பார்க்குமாறு அமர்த்தியிருந்தனர். ஒரே ஒரு மங்கல் மின் விளக்கு. இருபது வோட்ஸாக இருக்கலாம். 

“சந்திரன் கொழும்பில் எத்தனை வருடமாக இருக்கிறாய்?” 

“பதினெட்டு வருடமாக..” 

“சொந்த ஊர் எது?”

“சங்கானை” 

“கொழும்பில் என்ன தொழில் செய்கிறாய்?” 

“சலூன் கடை வைத்திருக்கிறேன். அதில் ஆறு பேர் வேலை செய்கிறார்கள்.” 

“எந்தெந்த ஊரைச் சேர்ந்தவர்கள்..?” 

“யாழ்ப்பாணம், வவுனியா, ஹற்றன், மஸ்கெலிய….”

“வெள்ளவத்தையில் இருக்கும் சுசீந்திரனைத் தெரியுமா?”

“தெரியாது!” 

“அவன் உன்னைத் தெரியும் என்கிறான்?” 

“அப்படி எவரையும் எனக்குத் தெரியாது” 

“உண்மையைச் சொன்னால் எங்களது வேலை லேசாகிவிடும். உனக்கும் கஷ்டமில்லை?” 

“உண்மையைத்தான் சொல்கிறேன். எனக்கு அந்தப் பெயருடைய யாரையும் தெரியாது” 

“கடைசியாக நீ எப்போது சொந்த ஊருக்குப் போனாய்?” 

“சரியாக ஞாபகம் இல்லை. கொழும்புக்கு வந்த பிறகு போன ஞாபகம் இல்லை” 

கொழும்பில் சொந்தமாக சலூன் ஆரம்பித்து இன்று வரை நடத்திக் கொண்டிருப்பதைச் சொன்னான். குடும்ப விபரங்கள், நண்பர்கள் பற்றியெல்லாம் துருவித் துருவி விசாரித்தார்கள். எல்லாவற்றுக்கும் உடனே பதில் சொன்னான். 

அவனது புறங்கை வலிக்கத் தொடங்கியது. 

அவனது வங்கிக் கணக்குகள் இரண்டின் விபரம் அவர்களது கைகளில் இருந்தது. அவனது வருமானத்தை விடச் சற்று அதிகமான பணம் அதில் பரிமாற்றம் செய்யப்பட்டிருந்தது. அதை வைத்துக் கொண்டு துருவித் துருவிக் கேள்விகள் கேட்டார்கள். ஒளித்து மறைக்க அவனிடம் எதுவும் இருக்கவில்லை. 

வெளிநாட்டில் உள்ள தனது உறவினர்களும் நண்பர்கள் அவர் களது குடும்பங்களுக்குக் கொடுப்பதற்குத் தனது வங்கிக் கணக்குக்கு அனுப்புவதை விளங்கப்படுத்தினான். தன்மீதுள்ள நம்பிக்கையால் அவர் கள் தமக்கு அனுப்புகிறார்கள் என்று சொன்னான். வேண்டுமானால் அந்த தந்தப் பணத் தொகையை அனுப்பியவர்களுடனும் பெற்றவர்களுடனும் இப்போதே கைத்தொலைபேசியில் பேசித் தன்னால் நிரூபிக்க முடியும் என்று வாதிட்டான். 

அவனுடைய பேர்சில் இருந்து ஒரு சிறிய தொலைபேசி இலக்கக் கொத்தை வெளியில் எடுத்து விரித்தான் ஒருவன். கேள்விகள் அதன் மீது திரும்பின. ஒவ்வொரு பெயரையும் சுட்டிக்காட்டி பெயர் விபரம் கேட்டார்கள். 

“யார் இந்த மத்தேகொட?”

“ஏ.எஸ்.பி.” 

“அவரை எப்படித் தெரியும்?” 

“எனது சலூன் உள்ள பகுதியில் உள்ள பொலிஸ் நிலையத்தில் சில காலங்களுக்கு முன்னர் பொறுப்பதிகாரியாகக் கடமை யாற்றியவர். எனது சலூனுக்கு வந்தே முடிதிருத்திக் கொள்வார்.”

“இப்போதும் வருவாரா?” 

“இல்லை. ஆனால் தொலைபேசியில் பேசிக் கொள்வோம்.”

“பொலிஸில் வேறு யாரைத் தெரியும்?” 

சொன்னான். 

“அவர்களை எப்படித் தெரியும்.” 

“அனைவரும் அங்கு கடமையாற்றியவர்கள்.” 

“வவுனியாவில் யாரும் இருக்கிறார்களா?”

“மூத்த சகோதரி குடும்பத்துடன் அங்குதான் வாழ்கிறாள்.” 

“அவர்களுடன் தொடர்பு உண்டா?”

“ஆம். தொலைபேசியில் பேசுவோம். முடிந்த போது பணம் அனுப்புவேன்.” 

“பணத்தை எப்படி அனுப்புவாய்?” 

“யாராவது தெரிந்தவர்கள் போகும் போது. இல்லாவிட்டால் வங்கி மூலம்.” 

அரை மணி நேரத்தில் விசாரணை முடிந்தது. அதற்கு மேல் அவர்கள் அவனிடம் எதையும் கேட்கவில்லை. 

கண்கள் மீண்டும் கட்டப்பட்டன. படிகளில் மெதுவாக இறங்கப் பணிக்கப்பட்டான். ஒருவன் அவனுக்குப் படியிறங்க உதவினான். 

வாகனத்துக்குள் அவனை ஏற்றுவதற்கு முன்னர் அவனது பேர்சைக் கையில் கொடுத்தான் ஒருவன். 

“எல்லாம் இருக்கிறது. எதற்கும் ஒரு முறை பார்த்துக் கொள்!” ஆனால் இருட்டில் எதையும் பார்க்க முடியவில்லை. அதை அப்படியே எடுத்துக் காற்சட்டைப் பையில் வைத்துக் கொண்டான். 

தன்னை விடுவித்து விடுவார்கள் என்று அவனுக்கு இன்னும் நம்பிக்கை வரவில்லை. கேள்விகளுக்கெல்லாம் பட்டுப்பட்டென்று பதில் சொன்னதில் அவர்கள் திருப்தியடைந்துள்ளார்கள் என்று அவனுக்குப் புரிந்தது. ஆனால் அது மட்டும் தன்னை விடுவிக்கப் போதுமானதா என்பது அவனுக்குத் தெரியவில்லை. 

வாகனத்தில் ஏற்றப்பட்டான். வாகனம் வேகமெடுத்தது. 


அவன் நடந்து வந்த கிறவல் பாதை பிரதான பாதையில் சேர்ந்தது.

அரை மணி நேரம் தொடர்ந்து நடந்து வந்ததில் உடல் வேர்த்து ஷேர்ட் நனைந்திருந்தது. பிரதான பாதையில் வெளிச்சம் இருந்தது. சட்டைப் பையிலிருந்து கடிகாரத்தை எடுத்துப் பார்த்தான். அது அதிகாலை 1.30ஐக் காட்டியது. 

தன்னை உயிரோடு திரும்ப உதவியதற்காக மனதுக்குள் நெக்குருகி முருகனுக்கு நன்றி சொன்னான். 

பிரதான பாதையின் ஓரத்தில் நின்றிருந்த அவனுக்கு எந்தப் பக்கம் கொழும்புக்குப் போவது என்பது பிடிபடவில்லை. 

தூரத்தே ஓர் ஒளி நகர்ந்து வருவது தெரிந்தது. நெருங்கும் போது அது ஒரு ஆட்டா என்று தெரிந்ததால் கையை நீட்டி நிறுத்தச் சொன்னான்.ஆட்டா நின்றது. சிங்களத்தில் தனக்கு ஏற்பட்ட நிலையைச் சுருக்கமாக ஆட்டாக்காரனிடம் சொன்னான். பொலிஸுக்குக் கொண்டு விடும்படி கேட்டுக் கொண்டான். 

ஆட்டாக்காரன் தமிழில் பேசினான். முஸ்லிமான அந்த ஆட்டாக்கார இளைஞன் விமான நிலையத்தில் யாரையோ இறக்கி விட்டுத் திரும்புகின்றான். நள்ளிரவில் தான் இடையில் யாரையும் ஏற்றிக் கொள்வதில்லை என்று சொன்னான் ஆட்டாக்காரன். அவனது நிலையைப் புரிந்து கொண்டதற்காகவே அழைத்துக் செல்வதாகச் சொன்னான். 

ஆட்டோவில் வரும்போது தன்னை இவ்வாறு கடத்தியதற்கான காரணத்தை சிந்தித்துக்கொண்டே வந்தான். ஒரு சலூன் நடத்துபவன் பெரிய வீடு கட்டியது பிழை. ‘இவனுக்கு இவ்வளவு பணம் எங்கிருந்தோ வருகிறது. அந்த வழி பயங்கரவாதத்தோடும் தொடர்புடையதாக இருக்கலாம்.’ இதைத்தான் யாரோ போட்டுக் கொடுத்திருக்கிறார்கள். 

ஐந்து நட்சத்திர ஹோட்டலில் ‘ஹெயார் ட்ரஸ்’ கடை நடத்துபவன் வேண்டுமானால் மாடி மாடியாகக் கட்டலாம். அவன் நுனி நாக்கில் ஆங்கிலம் பேசுவான். அவனை அண்ணாந்து பார்ப்பார்களே தவிர சந்தேகம் வராது. ஆனால் சாதாரண மக்களுக்கு முடிதிருத்தும் கடை நடத்தும் ஒருவன் பெரிய வீடு கட்டலாமா? 

பொலிஸ் நிலையத்துக்குள் நுழைந்ததும் ஆச்சரியம் காத்திருந்தது அவனுக்கு. 

மனைவி, மச்சான், பிள்ளைகள் எல்லோரும் அங்கிருந்தனர். அவர்களைக் கண்டதும் அவனுக்கு அழுகை பொத்துக் கொண்டு வந்தது. அடக்கிக் கொண்டான். அவனது மனைவி பொங்கிய கண்களை அவசரமாகத் துடைத்துக் கொண்டாள். பிள்ளைகள் அவனை ஆவல் ததும்ப அணைத்துக் கொண்டபோது அவனது கண்களில் அவனை யறியாமல் நீர் துளிர்த்தது. 

அவன் கடத்தப்படதைப் பொலிஸில் முறையிடவே அவர்கள் வந்திருந்தார்கள். அதற்கிடையில் அவனே திரும்பி வந்து விட்டான்.

பொலிஸ் உத்தியோகத்தரின் எதிரில் கிடந்த கதிரையில் அமர்ந்து தனது முறைப்பாட்டைச் சொல்ல ஆரம்பித்தான். அவர்கள் ஏற்றிச் சென்றதிலிருந்து திரும்பி வரும் வரை நடந்த எல்லாவற்றையும் ஒவ்வொன்னறாக விலாவாரியாகச் சொல்லி முடித்தான். 

அவனுடைய பேர்சிலிருந்த மூவாயிரம் ரூபாய்ப் பணத்தை அவர்கள் எடுத்துக் கொண்டார்கள் என்பதைத் தவிர! 

– 13.09.2009

– விரல்களற்றவனின் பிரார்த்தனை (சிறுகதைகள்), முதற் பதிப்பு: ஜனவரி 2013, யாத்ரா வெளியீட்டகம், வத்தளை.

நூலாசிரியரின் பிற நூல்கள் கவிதை காணாமல் போனவர்கள் - 1999 உன்னை வாசிக்கும் எழுத்து - 2007 (மொழிபெயர்ப்பு) என்னைத் தீயில் எறிந்தவள் - 2008 (அரச சாஹித்திய தேசிய விருது பெற்றது) சிறுவர் இலக்கியம் புள்ளி - 2007 கறுக்கு மொறுக்கு - முறுக்கு - 2009 புல்லுக்கு அலைந்த மில்லா - 2009 ஏனையவை தீர்க்க வர்ணம் - 2009 (பல்சுவைப் பத்திகளின் தொகுப்பு ஸ்ரீலங்காவிலிருந்து ஸ்ரீரங்கப்பட்டணம்…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *