வெடிகுண்டு நிபுணர்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: கிரைம்
கதைப்பதிவு: August 13, 2024
பார்வையிட்டோர்: 1,710 
 
 

இரவு பத்து மணி. மூத்த காவல்துறை அதிகாரி ராஜமாணிக்கம் களைப்புடன் தன்னுடைய வீட்டிற்குள் நுழைந்தார். கூடத்தில்  இருந்த ஒற்றை சோபாவில் அமர்ந்தார். அவருடைய புதல்வி உயரமான நடுத்தர வயது பெண்மணி ராஜேஸ்வரி ஓர் அறையிலிருந்து வெளிப்பட்டாள். ஏதும் பேசாமல் அவரிடம்  குளிர்ந்த தண்ணீர்ப் புட்டியைக் கொடுத்தாள். தண்ணீரைக் குடித்த ராஜமாணிக்கம்  ‘என்ன  ராஜி வீடு அமைதியா இருக்கு..அம்மா எங்கே…எங்கே பசங்க எல்லாம்?‘ என்றார்.

‘அம்மா பார்க்க வேண்டிய சீரியல் எல்லாம் பார்த்துட்டு சாப்பிட்டு தூங்க போயிட்டாங்க..ஒங்க பேரப் பசங்க ரெண்டு பேரும் ஒங்க மாப்பிள்ளையோடு  அந்த தாத்தா பாட்டியைப் பார்க்கப் போயிருக்காங்க..‘

‘நீயும் மாமனார் மாமியாரைப் பார்த்துட்டு வர வேண்டியதுதானே’

‘ஒங்க மனைவியைப் பார்த்துக்கற வேலைய எனக்கு கொடுத்துட்டு கேள்வியா கேட்கறீங்க டாடி..சரி வெளில சாப்பிட்டு வந்தீங்களா இங்க சாப்பிடறீங்களா?‘

‘எனக்கு இருக்கற களைப்புக்கு அப்படியே உட்காந்துகிட்டே தூங்கிடுவேன்..‘

‘நீங்க தூங்கறது எங்கே நடக்கும்? உங்களுக்கு மிகப் பெரிய சவால் காத்திருக்கு போய் ரெப்ரெஷ் ஆயிட்டு டிவிய பாருங்க ஆஷா மல்ட்டி ஸ்பெஷாலிட்டி ஹாஸ்பிட்டலை கொள்ளைக்காரங்க தங்கள் கட்டுப்பாட்டில் எடுத்துக்கிட்டாங்க..அங்க இருக்கிற எல்லாரையும் பணயக் கைதிகளாக ஆக்கி வெச்சிருக்காங்க..உங்களுக்கு இன்னிக்கு சிவராத்திரிதான்..‘

ராஜமாணிக்கம் உள்ளே சென்று உடை மாற்றிக் கொண்டு டிவியைப் பார்த்தார். சற்று நேரத்தில் அவருடைய மொபைல் ஒலித்தது. அமைச்சர் கதிரவன் பேசினார். தந்தையின் முகம் மாறியதை ராஜேஸ்வரி கவனித்தாள். அவர்  பேசி முடித்தார்.

‘என்னப்பா…‘

‘என்னன்னு சொன்னா உனக்கு புரியும்’ மகளிடம் சிடுசிடுத்தார் ராஜமாணிக்கம்.

‘அப்படியா..நான் எழுத்தாளர் ரங்கா ராவை ஆஷா ஹாஸ்ப்பிடலுக்கு அனுப்பி இருக்கேன்…‘

‘உன்னோட தத்து அண்ணன் என்ன பெரிய ஜேம்ஸ்பாண்டா..நீயும் அவனும் யாரு இதுல மூக்கை நுழைக்க…‘ தண்ணீரைக் குடித்தார் ராஜமாணிக்கம்.

‘சரி நீங்களே பாத்துக்கங்க’ என்று சொன்ன ராஜேஸ்வரி அறையை நோக்கிச் சென்றாள்.


நள்ளிரவு பன்னிரண்டு மணி. எழுத்தாளர் ரங்கா ராவ், வாட்டம் சாட்டமான  ஓர் இளைஞனுடன் ஆஷா மருத்துவமனைக்குள் நுழைந்தார்.

வாசலில் இருந்த கொள்ளைக் கூட்டத்தின் தலைவனான உயரமான ஆள் அவனைத் தடுத்தான். அவன் உடன் இருந்தவர்களும் அவரைத்  தடுத்தனர்.

‘யோவ் நரைச்ச தலை… இந்த ஆஸ்பத்திரி எங்க கன்ட்ரோல்ல இருக்கு. இங்க இருக்கிற பிக் ஷாட்ஸ் உறவுக்காரங்க கிட்ட பணம் கேட்டிருக்கோம். எல்லாம் முடியட்டும்.. அப்புறம் நீ யாரைப் பார்க்கணுமோ பார்க்கலாம்..‘

ரங்கா ராவுடன் வந்த இளைஞன்,  செடிகள் உள்ள தொட்டிகளை உற்று நோக்கிப் பார்த்துக் கொண்டிருந்தான். அந்த இடத்தின் மூலை முடுக்கெல்லாம் பார்த்து எதையோ தேடினான்.

தலைவன் கேட்டான்.

‘யோவ் வெள்ளைத் தலை…தமிழ்ல தானே பேசினேன்..போயா போ’ என்றான். ‘சார் என்  பேரு ரங்கா ராவ்..இவர் பேரு ராஜசேகர். வெடிகுண்டு நிபுணர்…இந்த மருத்துவமனைல  ரெண்டு மூணு இடத்துல வெடிகுண்டு வெச்சிருக்காங்கன்னு ஒரு ரகசிய தகவல் எங்களுக்கு கிடைச்சுது அதான் நானும் இவரும் யாரையும் தொந்தரவு பண்ணாம கமுக்கமா அதை எல்லாம் கண்டுபிடிச்சு செயலிழக்க செய்ய வந்திருக்கோம்..‘ என்றார் ரங்கா ராவ்.

தலைவன் சிரித்தான். ‘யோவ்..பார்க்கறதுக்கு தாலின்னா என்னன்னு  தெரியாத சின்னத்தம்பி மாதிரி இருக்கான் இவன் வெடிகுண்டு நிபுணரா? என்னய்யா ஜோக் காட்டறே கையில டிடக்ட்டர் எதுவும் இல்ல…‘

‘சார் அவர் உருவத்தைப் பார்த்து கணிக்காதீங்க..அவர் மோப்ப நாய் மாதிரி கருவிகள் எல்லாம் இல்லாமலே வெடிகுண்டு இருக்கிற இடத்தைக் கண்டுபிடிச்சிடுவார்’ என்றார் ரங்கா ராவ்.  ராஜசேகர்,  மருத்துவமனை  நிறுவனரின் சிலையின் பின்புறத்திலிருந்து ஒரு வெடிகுண்டை எடுத்து செயலிழக்கச் செய்து இருட்டிலிருந்து மெதுவாக குரல் கொடுத்தான்.

‘பார்த்தீங்களா கில்லி மாதிரி ஒரு வெடிகுண்டை எடுத்து டிப்யூஸ் பண்ணிட்டாரு.. இன்னும் எங்கெங்கே இருக்கோ…‘

கொள்ளைக் கூட்ட தலைவனின் முகம் மாறியது. ‘தம்பி வா இது வேலைக்கு ஆகாது.. உயிர் முக்கியம் எல்லாரையும் வர சொல்லு போவோம்..‘

உடன் இருந்த இளைஞன் சொன்னான் ‘அண்ணே..இவங்க நம்மள துரத்த ஏதோ ஸ்கெட்ச் போடறானுங்க..நம்பாதீங்க..‘

தலைவன் சொன்னான் ‘ஏதாவது வெடிச்சா என்ன ஆவது பணத்துகாக  உயிரை ரிஸ்க்ல விட முடியுமா..இந்த ஆபரேஷன் வேணாம் வாங்க..‘ அவனுடைய கட்டளையை ஏற்று கொள்ளைக் கும்பல் வேகமாக வெளியேறியது. ரங்கா ராவ், ராஜசேகரின் கைகளைக் குலுக்கினார். ஒளிந்திருந்த  மருத்துவமனையின்  பொது மேலாளர் கனமான சரீரம் கொண்ட நடுத்தர வயது நபர் ரங்கா ராவ் அருகில் வந்தார். வந்தவரின் மொபைல் சிணுங்கியது.

அவர் மொபைலில் பேசினார் – ‘சார்…நான்  பிரமாதமா ஒரு சூழ்ச்சி வேலை பண்ணி அவங்கள ஓட வெச்சுட்டேன். சார்..இனிமேல் பயம் இல்லை. நீங்க  நல்லா நிம்மதியா தூங்குங்க .சார் குட் நைட்..‘ என்றார். ரங்கா ராவும் ராஜசேகரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர். மருத்துவமனைக்குள் காவல் துறை வாகனம் ஒன்று வந்தது. அதிலிருந்து காவல்துறை பெண் உதவி ஆணையர் புவனா இறங்கினார். ரங்கா ராவ் அருகில் வந்தார். ‘ராஜேஸ்வரி சொன்னாங்க. தாங்க்ஸ் மிஸ்டர் ரங்கா’ என்றார். மருத்துவமனையின் பொது மேலாளர் திகைப்பை வெளிக்காட்டாமல் ‘வாங்க மேம் வணக்கம்’ என்றார்.

குறிப்பு – சவால் என்பதை  அடிநாதமாக கொண்டு சவால் கதைகள் 10 என்ற இந்த சின்னஞ்சிறு புனைகதைகளைப் படைத்துள்ளேன். இந்தப் புனைகதைகளில் , சமூக கதைகளில் விவரிக்கப்படும் சூழல்கள் , பாத்திரங்கள் அனைத்தும் கற்பனையே. யாரையும் குறிப்பிடுவன அல்ல.

Print Friendly, PDF & Email
விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த எஸ்.மதுரகவி (1962) எண்பதுகளிலிருந்து சிறுகதைகள். புதுக்கவிதைகள். நாடகங்கள் மற்றும் கட்டுரைகள் எழுதி வருபவர். புதுச்சேரி வானொலியில் 1984-ஆம் ஆண்டு நிகழ்ச்சிகளைத் தொகுத்துத் தந்துள்ளார். சென்னையில் விளம்பரவியல் துறையில் 1984 முதல் 2000 வரை ஊடகத் தொடர்பு மேலாளராகப் பணியாற்றியவர். 2000ம் ஆண்டு முதல் முழுநேர விளம்பரத்துறை எழுத்தாளராகப் பணியாற்றி வருகிறார். தொண்ணூறுகளில் இவரது படைப்புகள் சுமங்கலி, அமுதசுரபி, குங்குமம், குங்குமசிமிழ். முல்லைச்சரம், குடும்பநாவல் ஆகிய இதழ்களில்…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *