(1951ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
“நான் போனதரம் டில்லி சட்டசபையில் மெம்பராக இருந்தபோதே இந்த யோசனை செய்தேன். சிநே கிதர்கள் முட்டுக்கட்டை போட்டார்கள். இப்போதாவது அந்த யோசனையைப் பூர்த்தி செய்யாவிட்டால் அனுப்பிய தொகுதிக்குத் துரோகம் செய்ததாக முடியும். இனிப் பொறுக்க முடியாது.
இப்படிப் பேசியவர் விசுவநாத அடவியார், எம்.எல். ஏ. எதிரில் இருந்தவர் டாக்டர் சேதுராவ். சீமையிலும் ஜெர்மனியிலும், ஸயன்ஸில் டாக்டர் என்னும் பட்டத் தைப் பெற்றவர். சேதுராவ் கேட்டார்.
“அடவியார்வாள், முகம் சிவந்துவிட்டதே உங்க ளுக்கு! பேசின விஷயம் என் காதுக்கென்று சொல்லி யிருந்தால், கொஞ்சம் வெளிப்படையாகச் சொன்னால் என்னால் ஆன உதவி புரிகிறேன்.
“உண்மையில், ராயர்வாள்,யுத்தத்துக்காகக் கொலைக் காற்று, ஆகாய விமானம், விஷவாசனை, டார்ப்பிடோ இவை களை ஸயன்ஸ் பண்டிதர்கள் கண்டுபிடித்ததிலிருந்து எனக்குக் கோபம். வரவர ஹிம்சை செய்வதற்கும் கொல்வதற்கும் பொழுது போக்குக்கும் ஈசுவரன் கொடுத்த உயர்ந்த மூளையை மேல்நாட்டுப் பண்டிதர்கள் செலவழிப்பதைப் பார்த்தால், அடுத்த யுத்தத்தில் மனிதன் பூண்டற்றுப்போவான் என்றே தோன்றுகிறது. இதைத்தான் புத்தியின் விபசாரமென்று நான் சொல்லு வேன். இந்த விஷம புத்தி, நமது இந்தியருக்குள்ளும் பரவிவருவது, எனக்குச் சகிக்கவில்லை. எதற்காக நமது ஜனங்கள் வெடிகுண்டும் துப்பாக்கியும் பழகிக்கொள்ள வேண்டும்? இதெல்லாம் நமக்கு வேண்டாம். இவைகளைத் தடுப்பதுதான். சுத்த சைவனாகிய என் நோக்கம் சரிதானா?”
“அடவியார்வாள், நான் து விஷயத்தில் முந்திக் கொண்டு விட்டேன். பொதுஜனங்களுக்கு எந்த விதத் திலும் ஹிம்சை செய்யக்கூடிய கருவிகளையோ சக்திகளை யோ நமது தேசத்தில் கண்டுபிடிப்பதோ பரவச் செய் வதோ தண்டனைக்குரிய செய்கை என்று ஒரு சட்டம் தயாரித்திருக்கிறேன். அதற்கு உட்பிரிவுகள், அமலுக்குக் கொண்டுவரும் வழிகள், இவைகளைக் கொஞ்சம் கண்டு தயாரித்திருக்கிறேன். இதுதான் அந்த மசோதாவின் நகல்.”
“அடே, ஆச்சரியமாயிருக்கிறதே, டாக்டர்வாள் சொல்வது! சீமையிலும், ஜெர்மனியிலும் ஸயன்ஸில் நிபுணரென்று மெடல்களும் பவுனும் பரிசு பெற்ற நீர் புகையை எதிர்த்துப் பாயும் புலிபோல் நான் சொல்லுவதை எதிர்ப்பீரென்றல்லவா பார்த்தேன். ஊசி வெடிக்கட்டுப்போல் ‘புஸ்ஸென்று விட்டீரே. காரணம்?”
“அப்படிக் கேளும், காரணம். இந்த மசோதாவைப் பார்த்தாகட்டுமே.”
“இந்த அவசரத்தில் முடியாது.காரணத்தை முதலில் சொல்லும்.”
“அப்படியென்றால் இதைக் கேளும்” என்று ராயர் ஆரம்பித்தார்.
“வெகு நாளாக ஸயன்ஸ் பேர்வழிகள், கடவுளைப் போல் சுயமாகச் சிருஷ்டி செய்யத் தலைகீழாக நின்று வருகிறார்களே தெரியுமா? சிலர் இரண்டொரு ரசாயன வஸ்துக்களைச் சேர்த்து உயிருண்டாக்க முயன்று வருகிறார் கள். சிலர் மனிதனைப்போல இரும்பு அல்லது இதர உலோகங்களில் யந்திரங்கள் செய்து, மின்சார விசைகளை அதற்குள் வைத்துப் பார்த்தார்கள். இதுவரையில் அவர் கள் எண்ணம் முழுதும் கைகூடியதாகச் சொல்லக்கூடாது. ஆனால் சமீபத்தில் கடவுளுக்கே ஆபத்து வந்துவிட்ட தெனச் சொல்லலாம். எச். மே என்பவர் ஓர் ஆளைத் தயார் செய்திருக்கிறார். கடவுள் இப்போது என்ன யோசிக்கிறார் என்று தெரியவில்லை. அந்தப் புதுச் சிருஷ் டிக்கு ஆல்பாவென்று நாமகரணம் செய்யப்பட்டிருக்கிறது. உடலெல்லாம் இரும்புக் கூடு. கண், வாய், மூக்கு, செவி அவ்வள வும் உண்டு. மின்சாரத்தால் அவ்வளவு உறுப்புக் களும் வேலை செய்கின்றன. ஆல்பா சாதாரணக் கேள்வி களுக்கெல்லாம் பதில் அளிக்கிறதாம்; உலாவுமாம். நம் தேசத்து வெற்றிலைப் பெட்டி மிராசுதார் மாதிரி என்று வைத்துக்கொள்ளலாம்.பகுத்தறிவு இருப்பதாகத் தெரிய வில்லை; தானாகவும் ஒன்றும் செய்யாது. ஆகவே ஆல்பா விடம் கொஞ்சம் உஷாராகப் பழக வேண்டுமாம். ஆல்பா ஒருவேளை இரைந்து கத்தினால் அவ்வூரில் இருக்கும் அவ் வளவு கண்ணாடிகளும் நொறுங்கிப்போகின்றனவாம்.இன் னும் அதன் பிரதாபங்கள் பலவாம். அவைகளெல்லாம் இந்தச் சந்தர்ப்பத்துக்கு வேண்டியதில்லை.
“முக்கியமாக, ஆல்பாவைச் சிருஷ்டி செய்தாரே அவர் அந்தச் சிருஷ்டியை முடித்த தினத்திலிருந்து வெளியே செல்லுவதை நிறுத்திவிட்டார். தம் பிள்ளை யின் பேரில் – அதாவது ஆல்பாவின் மீது – அவருக்கு கங்கு கரையில்லாத மோகம். மற்றொரு பக்கத்தில் பெரிய திகில். ‘தட்டுக்கெட்டு நான் வெளியே போகும் வேளை யில் வீடு கூட்டியோ வேறு யாராவதோ வந்து எக்கச்சக்கமாக வாய் திறந்து பேசிவிட்டால் ஆல்பா வின் இரும்புக் கைகளுக்கு இரையாவார்களே. அதைத் தடுப்பதற்கு நான் இனி வெளியே போவ தில்லை’ என்று உறுதிகொண்டாராம். ஆல்பாவின் சிருஷ்டி கர்த்தர் ஆல்பாவின் அடிமையானார். இவ்வெண்ணங்களை அனுசரித்துத்தான் சாப்பாடு, தூக்கம். இச்சமயங்களைத் தவிரப் பாக்கி நேரங்களில் ஆல்பாவை மே என்பவர் பிரியாமல் இருந்தார். இதைப் பாராவென்றும் சொல்ல லாம்; கடுங்காவல் தண்டனையென்றும் சொல்லலாம்.
“அடவியார்வாள், இதெல்லாம் இரண்டு மாதத்துக்கு முந்திய சமாசாரம். அப்போது பேப்பர்களிலெல்லாம் ஆல்பாவின் பேச்சுத்தான்.மே என்பவரைப்பற்றிய முழக் கந்தான். ஆல்பாவின் படமும் வந்திருந்தது.
“பிறகு கொஞ்ச நாள் வரையில் இவர்களைப்பற்றி ஒரு பிரஸ்தாபமும் காணோம். எனக்கு மாத்திரம் இது விஷயம் படித்தது முதல்கொண்டு மனத்தில் அகாரண மான பயம். நான் என்ன மெடல் வாங்கியிருந்தால் என்ன ஐயா? பயம் பயந்தான். நீங்கள் கேட்பீர்கள்: ஆல்பா சீமையிலிருந்தால் இந்தியாவில் உனக்கு என்னவென்று, அதுதான் எனக்கும் புரியவில்லை. பொறுங்கள், இப் போது ஒன்று தோன்றுகிறது. சீமை, இந்தியா, ஆல்பா இவ்வளவும் என் மூளைக்குள் பதிந்துகிடக்கும் எண்ணங் கள்தாமே, உருவுகள் தாமே. அதனால் சீமை ஆல்பாவைப் பற்றி…அது போகட்டும். பிறகு விசாரிப்போம் அந்தத் தத்துவத்தை.
“போன மாதத்தில் பேப்பர்களில் பார்த்திருப்பீர் களே, ஆல்பாவின் கோபமென்று கொட்டை எழுத்துக்க ளில் எழுதியிருந்ததை; இல்லையா? சரி. நான் அதைப் பார்த்தவுடன் என் ரக்தாசயம் சட்டென்று ஒரு நொடி நின்றுவிட்டது. மெய்பதற வாசித்துப் பார்த்தேன்.எச்.மே என்ற விநோத ஸயன்ஸ் நிபுணர் ஆல்பாவிடம் ஏதோ பொழுது போக்குக்காக வார்த்தையாடிக்கொண் டிருந்த காலத்தில், திடீரென்று தம் குரல் கரகரப்படைந்ததன் பயனாக ஸ்தாயி வித்தியாசம் ஏற்பட்டு, அந்த வித்தியா சத்தை ஆல்பா உணரும் முன்னமேயே எட்டி ஓட முயற்சி செய்தும், அது பயன்படாமல், தென்னமரம் சாய்வதைப் போல், ஆல்பாவின் வலதுகை முதலாளியின் முன்கையில் விழுந்து, எலும்புகளை ஒடித்துவிட்டதென்றும், மே ஆஸ்பத்திரியில் இருப்பதாகவும் படித்தேன். அடவியார் வாள், பயத்தின் காரணம் அப்போதுதான் தெரிந்தது. உயிருக்கு ஒரு சூஷ்ம உணர்ச்சி உண்டு. அதைத் தர்க்கத்தினாலாவது புத்தியினாலாவது சட்டங்களினாலாவது ஆராய்ச்சியினாலாவது நிச்சயிக்க முடியாது. எறும்புகள் மழை வருவதற்கு முதல் நாளிலேயே முட்டைகளை எடுத் துக்கொண்டு நல்ல இடங்களைத் தேடிப் போவதைப் பார்த்திருக்கிறீரா? இந்த உணர்ச்சியின் காரியந்தான் அது.
“பேப்பரைப் படித்தேனென்று சொன்னேன். கணக்காய்ச் சொன்னால் அந்தப் பக்கத்தை -இல்லை, அந்த இடத்தை மட்டும் படித்தேன் என்று சொல்லவேண்டும். பாக்கியைப் படிக்க மனம் இடம் கொடுக்கவில்லை; ஒரே குழப்பம் உண்டாயிற்று, இருப்புக் கொள்ள வில்லை. மேல்நாட்டு நிபுணர்கள், கொலைக்கருவிகள், விஷக் காற்றுக் கள், பொழுதுபோக்கு விமானங்கள், ஆல்பாக்கள் இவை களைச் செய்வதன் தாத்பர்யத்தைப்பற்றி யோசித்தேன். எனக்கு அவைகளில் வெறுப்பு அதிகப்பட்டது. ஜனங்க ளுக்கு அவைகளினால் என்ன சௌகரியம்? கடவுளுடன் மேற்படி நிபுணர்கள் போட்டிபோடுகிறார்களாம்; வென்று விடுவதாகக் கங்கணம் கட்டிக்கொண் டிருக்கிறார்களாம். செய்யட்டும், அந்தக் கட்சியைப்பற்றிப் பேசினால் வளரும்.”
“அது மற்றொரு நாள் ஆகட்டுமே” என்றார் அடவியார்.
“ஆகட்டுமே” என்று சொல்லிவிட்டு ராயர் மேலே சொன்னார்: “நான் சொன்னது போல, அடவியார்வாள், அன்று முழுவதும் ஒரே கலக்கம். பிராமணர்கள் பயந்த வர்கள், சோதாக்கள் என்று ஓர் அபிப்பிராயம் உண்டு. நான் குழம்பியதற்கு அது காரணமல்ல. ஆல்பாவின் குணத்தைப்பற்றி எண்ணினபோதெல்லாம் பல பல எண்ணங்கள் உதித்தன. மே என்பவர்மேல் அடங்காத அநுதாபம். கடாவை வளர்ப்பானேன்; அது மார்பில் பாயும்படி விடுவானேன்? இதெல்லாம் சனியனை வலுவில் கல்யாணம் பண்ணிக்கொண்டது போலத்தானே? இப்படி நினைத்துக்கொண்டு அன்று மத்தியான்னம் நாற்காலியில் சாய்ந்திருந்தேன். வழக்கமில்லாத வழக்கம் செய்தால் படித்தான். ஏதாவது பத்து நிமிஷம் இருந்திருக்கும். பிறகு கண்ணுக்கு முன்னே ஒரு தினசரியில் பெரிய எழுத் துக்களில் எழுதியிருந்தது.
ஆச்சரியமான கொலை
நுங்கம்பாக்கத்தில் டாக்டர் சேதுராவ் என்பவர் வீட்டில் வீடு கூட்டும் பாப்பாயி கோரமாகக் கொலை செய்யப்பட்டாள். ஏதோ இரும்பு சம்பந்தமான கருவிகளால் தாக்கப்பட்டதாக ஊகிக்கப்படுகிறது. கொலையின் காரணம் தெரியவில்லை.
“இந்தச் சமாசாரத்தைப் பார்த்த வியப்பு முடிவதற் குள் கேளுங்கள்! – ஒரு ஜெயில் தென்பட்டது. கீழெல்லாம் ஈச்சம்பாய் விரித்திருந்தது. சுவரெல்லாம் மூட்டைப் பூச்சி. நான் உள்ளிருந்தபடியே வெளியே உலாத்திய பாராக்காரரை, ‘எதற்காக ஐயா என்னை அக்கிர மமாக ஜெயிலில் அடைத்திருக்கிறீர்கள்?’ என்று கேட் டேன். பாராக்காரர் சொன்னார்: ‘உங்கள் வீடுகூட்டி கொலையுண்ட சம்பந்தமாக நீர் கைதுசெய்யப்பட்டிருக்கிறீர்’. ‘ஆமாம், எனக்கு என்ன சம்பந்தம் அதில்?’ என்று வேகத்துடன் கேட்டதற்குப் பாராக்காரர், ‘ஸெஷன்ஸ் கோர்ட்டில் ருஜுப்படுத்தும் ஐயா; இங்கே விடைக்காதே’ என்று நாசுக்காகப் பதில் கொடுத்தார். பாராக்காரருடன் நடந்த இந்தச் சல்லாபத்துக்குப் பிறகு தலையெழுத்தை நினைத்துக்கொண்டேன். அட பாவமே!
“அடுத்த பகுதி; தஞ்சாவூர் ஸெஷன்ஸ் கோர்ட்டு ”
“குறுக்கிடுவதை மன்னிக்கவேண்டும், டாக்டர்வாள்! நுங்கம்பாக்கத்தில் கொலை என்று சொல்லித் தஞ்சாவூர் செஷன்ஸ் கோர்ட்டென்றால் கொஞ்சம் நாகபட்டணம் சம்பந்தம் இருப்பதுபோல் இருக்கிறதே” என்றார் அடவியார்.
“கொஞ்சம் பொறுக்கவேணும், எல்லாம் விளங்கும்” என்று சேதுராவ் மறுபடியும் சொன்னார்.
“தஞ்சாவூர் செஷன்ஸ் கோர்ட் என்றேன் அல்லவா? கூட்டம் தாங்கவில்லை. குற்றவாளிக் கூட்டில் நான் நின்று கொண்டிருந்தேன். அடவியார்வாள், ஆச்சரியப்படக் கூடாது, நான் சொல்வதைக்கேட்டு, எனக்கு வக்கீல் இல்லை. ஜட்ஜ் என்னைக் கேட்டார். ‘டாக்டர்வாள், வாதி தரப்புச் சாட்சிகள் சொல்லியதைக் கேட்டீர்களா? கொலைக் குற்றத்துக்குப் பதில் என்ன? குற்றவாளியா, அல்லவா?”
“நான், ‘குற்றவாளியல்ல’ என்று சொல்லிவிட்டு எழுத்து மூலமாக ஒரு ஸ்டேட்மென்டை நீட்டினேன். அதில் சொல்லியிருந்த விஷயம்:
வீடுகூட்டி பாப்பாயி கொலையுண்டதில் எனக்கு யாதொரு வித சம்பந்தமும் இல்லை. நான் ஒரு மாதத்துக்கு முந்தி ஐரோப்பிய ஸயன்ஸ் காங்கிரசுக்குப் போய்ச் சில வைதிக ஸயன்ஸ் கொள்கைகளை – ஸயன்ஸிலும் வைதிகம் உண்டு – பலமாகக் கண்டித்தும், அஹிம்ஸா தர்மத்தை அநுசரித்து ஸயன்ஸை விளக்கியும் மூன்று லெக்சர்கள் செய்ததில் கொஞ்சம் கட்சியும் அபிப்பிராய பேதமும் ஏற்பட்டதில், உடனே பம்பாய் திரும்பி வந்துவிட்டேன். பம்பாயிலிருந்து திரும்பிச் சென்னபட்டினம் வந்த அரை மணி நேரத்துக்குள் நான் கைதுசெய்யப்பட்டேன். ஸயன்ஸ் காங்கிரஸில், ஆல்பாவின் சிருஷ்டி மிகவும் விநோதமானதென்று ஸ்தோத்திரம் செய்துவிட்டு, பிறகு அதே மூச்சில் மிகுந்த வணக்கத்துடனும் முழு உணர்வுடனும் ஆல்பா மாதிரி விஞ்ஞானிகள் சிருஷ்டி செய்வது அர்த்தமில்லாததென்றும், அபாயகரமான தென்றும், அதைச் செய்தவரைக் கொண்டே ஆல்பாவை அழிக்கும்படி உத்தரவிட வேண்டுமென்றும், அந்த யுக்தியை இதரர்களுக்குத் தெரிவிக்காமல் இருக்கும்படி மேற்படியாரிடம் கடவுள் சாட்சியாக வாக்குறுதியும் வாங்க வேண்டுமென்றும் பேசினேன். இந்த அபிப்பிராயம் மேல்நாட்டுக்குப் பிடிக்கவில்லை; ஆல்பாவை ஆக்கிய வருக்கு வேப்பெண்ணெயாக இருந்தது. கூட்டத்தில் குழப்பம் ஏற்பட்டது. சற்று அமைதி ஏற்பட்ட பிறகு மேற்படி மே என்பவர் எழுந்திருந்து என்னைப்போல் பேசுகிறவர்கள் இயற்கையால் அருளப்பட்ட சிருஷ்டி சக்தியை – கற்பனாயுக்தியை – உபயோகித்து மாசு படியா மல் வைத்திருக்கச் சக்தியற்ற பேடிகளென்றும், ஸயன் ஸின் வெற்றிகளைப் பழிப்பவர் மானிட வகுப்பின் எமன்களென்றும், அவர்களை ஒழிப்பதும் இகழ்வதும் விஞ்ஞானிகளின் முதல் வேலையாக வைத்துக்கொள்ள வேண்டுமென்றும் ஆரவாரத்துடன் பேசிச் சண்டை இட்டார்.
அவர் பேச்சு பெருத்த கரகோஷத்தை எழுப் பிற்று. எனக்கு மனம் உடைந்துவிட்டது. அடுத்த நாளே நான் இந்தியாவுக்குத் திரும்பிப் பிரயாணமானேன். இந்தக் கொலைக்கும் ஸயன்ஸ் காங்கிரஸில் ஏற்பட்ட பேச்சுக்கும் சம்பந்தம் இருக்கிறதென ஊகிக்கிறேன். வீடு கூட்டி பாப்பாயி நுங்கம்பாக்கத்தில் என் பங்களாவில் ஆல்பாவினால் அடிபட்டுக் கொலையுண்டாள் என்பது என்னுடைய நிச்சயமான கொள்கை. கேவலம் வீடு கூட்டியைக் – கிழவியை – கொல்வதில் எனக்கென்ன பயன்? யோசித்துப் பாருங்கள். தவிரப் போலீசாரால் என்னிட மிருந்து வாங்கி இப்போது தாக்கல் செய்யப்பட்டிருக்கும் பட்டங்களும் மெடல்களும் என் கல்வித் திறமையைக் காட்டும். இத்துடன் என்னால் தாக்கல் செய்யப்படும் அத்தாட்சிகள் – இங்கிலாந்து, ஜர்மனி, வங்காளம், இவ் விடங்களிலிருந்து-என் உயர்குணத்தையும் உயர் நோக்கத்தையும் காண்பிக்கும்.
இன்னொரு விஷயம் முக்கியமானது. கோர்ட்டார் அவர்கள், பப்ளிக் பிராஸிகியூட்டர், போலீசார் ஆகிய எல்லோரும் என்னுடன் நுங்கம்பாக்கத்துக்குக் கிளம்பி வந்து ஸ்தலத்தைப் பார்வையிட்டால் சந்தேகம் தெளிந்துவிடும். எனக்கு வேறு சாட்சிகள் இல்லை. அப் படிச் செய்ய முடியாவிட்டால் எனக்கு மரண தண்டனை நிச்சயம். இவ்வளவுதான்.
“அடவியார்வாள்! என் ஸ்டேட்மெண்டு முடிந்தது. ஊசி விழுந்தால் கேட்கக்கூடிய அந்த நிச்சப்தம் உடனே கலைந்தது. மறுபடி, ‘உஸ் பேசாதே’ என்றான் கோர்ட்டு டபேதார். பப்ளிக் பிராஸிகியூட்டர் எழுந்திருந்து,தம் கவுன்களில் உள்ள வாலைப் பிடித்துக்கொண்டு வெண்ணெய் போன்ற குரலில் சொன்னார்.
‘குற்றவாளியின் கடைசி விண்ணப்பம் நிறைவேற்றக் கூடியதல்ல. எந்தத் தேசத்துச் சட்டமும் அதற்கு இடம் தரவில்லை. அது நாவல்களில் பொருத்தமாக இருக்கலாம். இந்தியன் பீனல் கோடிலாவது கிரிமினல் சட்டத்திலாவது அதற்கு இடமில்லை. அந்தக் கோரிக்கை கோர்ட்டை அவமதிப்பாக இருக்கிறதே யன்றி வேறல்ல. ஆகவே கோர்ட்டார் அவர்கள் ஜட்ஜ்மெண்டுக்கு முந்தி ஜூரர் களுக்குச் சொல்ல வேண்டியதைத் தயவு செய்து சொல் லும்படி பிரார்த்திக்கிறேன்.’
“கோர்ட்டார் அவர்களுக்கு ஒன்றும் புரியவில்லை. நான் மறு படியும் சொன்னேன்.10,000 குற்றவாளி தப் புவதாயிருந்தால்கூட நிரபராதியான ஒருவன் நோகக்கூடா தென்பது கிரிமினல் சட்டத்தின் அஸ்திவாரமென்று கோர்ட்டார் அவர்களுக்கு நான் ஞாபகப்படுத்த வேண்டிய தில்லை. பிராஸிகியூட்டர்வாள் சொல்வதில் பொருளில்லை.
“ஜட்ஜுக்கு என்ன தோன்றிற்றோ என்னவோ? இரவே யாவரும் சென்னைக்குப் புறப்படுவோம் என்று உத்தரவு போட்டார்.
“அடுத்த நாள் காலை எழும்பூர் ஸ்டேஷனை அடைந் தோம். பிளாட்பாரத்திலெல்லாம், வண்டிகளின்மேல் எல் லாம், ‘நுங்கம்பாக்கத்துக்கு ஜனங்கள் எக்காரணத்தைக் கொண்டும் போகக்கூடாதென்று எச்சரிக்கை செய்யப்பட்டிருக்கிறார்கள். போனால் அபாயம் – போலீஸ் கமிஷனர்’ என்று பெரிய பெரிய தாள்களில் அச்சடித்து ஒட்டப் பட்டிருந்தது.
“என்னைத் தவிர மற்ற எல்லோருக்கும் திகில். அவ்வ ளவு பேருக்கும், முகம் புதுக் கடுதாசுபோல் ஆய்விட்டது. நான் பக்கத்திலிருந்தவனை, ‘என்ன விசேஷம் நுங்கம்பாக் கத்தில்?’ என்று வினவியதற்கு அவன், ‘அங்கே ஏதோ ஜடாமுனிபோல் – மன்னார்சாமிபோல் – தெருவில் ஒன்று நின்றுகொண் டிருக்கிறதாம்; ஜனங்கள் பயந்து ஜார்ஜ் டவுனுக்குச் சென்றுவிட்டார்களாம்; பட்டணத்தையே அழிக்க வந்த புது எமன்!’ என்று சொல்லி முடித்தான்.
“பப்ளிக் பிராஸிகியூட்டர் ஜட்ஜினிடத்தில், ‘எனக்கு வேலை போனாலும் போகட்டும், ஊருக்குத் திரும்பிப் போகப் போகிறேன்’ என்று சொன்னது என் காதில் விழுந்தது. மற்றவர்களும் அப்படியே சொன்னார்கள். நான் அமைதியுடன், ‘கோர்ட்டார் அவர்களே! நண்பர் களே! நான் ஊகித்த விஷயம் சரியாகப் போய்விட்ட தென்பது இங்கேயே உங்களுக்குத் தெரிந்திருக்கலாம். அப்படிக்கில்லாவிட்டால் நுங்கம்பாக்கத்துக்கே போவோம். உங்களுக்கு யாதொரு தீங்கும் வராமல் பார்த்துக் கொள்ளுகிறேன்’ என்று தைரியமூட்டினேன்.
“பிறகு நுங்கம்பாக்கத்துக்குச் சென்றோம். தெருக்க ளெல்லாம் வெறிச்சென்றிருந்தன. அப்போதுதான் பிளேக் வந்தால் தெருக்கள் எந்த நிலைமையில் இருக்கு மெனத் தெரிந்தது. சுடுகாட்டில்கூடக் கொஞ்சம் கல கலப்பு உண்டு. நுங்கம்பாக்கத்திலோ அன்று நடுக்குறும் தனிமை. என் பங்களாவுக்குப் போய்ச் சேரும் குறுக்குச் சந்து வந்ததும் ஜட்ஜ் கொஞ்சம் தயங்கினார். ‘பரவா யில்லை, வாருங்கள், நான் இருாக்கிறேன். ஒரு வார்த்தை மாத்திரம் ஞாபகம் இருக்கட்டும். ஆல்பா இருக்கும் இடத் தில் தயவு செய்து மௌனம் சாதியுங்கள், ஜாக்கிர என்றேன்.
“சந்து திரும்பினோம். அந்த இடத்திலிருந்து பங்களா நாற்பது அடி இருக்கும். பங்களாவின் வாசலுக்கு தீர்த்தாற்போல் தெருவில் ஆல்பா கைகாட்டி மரம்போல் ஒரு கையையும் இடுப்பில் மற்றொரு கையையும் வைத்துக் கொண்டு நின்றது. எனக்குப் பின்னால் வந்த பிராஸிகியூட் டர் ஆல்பாவைக் கண்ணுற்றது தான் தாமதம், ‘ஐயையோ!’ என்று கத்திக்கொண்டு கீழே விழுந்து மூர்ச்சையானார். சப்தத்தைக் கேட்டு ஆல்பா எங்களை நோக்கி வந்தது, வெகு வேகமாகவும் பயங்கரமாகவும். ஜட்ஜ் ஒட்டம் பிடித்தார். எனக்கு ஆல்பாவின் பாஷையும் சூட்சுமமும் தெரியுமென்று ஏற்கனவே சொல்லியிருக்கிறேன்.
‘அன்பார்ந்த ஆல்பா! காலை வந்தனம்’ என்று குளிரச் சொன்னேன். ஆல்பா சிரித்துக்கொண்டே, ‘சௌக் கியமா?’ என்று குசலப்பிரச்னம் பண்ணியது.
‘உட்காரு’ என்றேன்.
“நான் இல்லாவிட்டால் பிராஸிகியூட்டரும் பாப் பாயி கோஷ்டியைச் சேர்ந்திருப்பார்.
“இதற்குள் ஓடிப்போன ஜட்ஜ் வகையறாக்கள் புதுக் குரலைக் கேட்டதும் மெதுவாகத் திரும்பி வந்தார்கள். எதிரும் புதிருமாக நானும் ஆல்பாவும் சம்பாஷிப்பதைப் பார்த்து எல்லோரும் மூக்கில் விரலை வைத்தார்கள். எல்லாருக்கும் பயம் தெளிந்துவிட்டது. பிறகு எனக்கும் ஆல்பாவுக்கும் நடந்த பேச்சை ஒரு குறுக்கெழுத்துப் பேர்வழி – ஷார்ட்ஹாண்டு ரைட்டர் – எழுதிக்கொண்டார். அதாவது:
நான்: ஆல்பா ! நீ எனக்குத் தெரியாமலும் என் உத்தரவில்லாமலும் என் பங்களாவில் புகுந்ததைப்பற்றி மிகவும் வருத்தமாக இருக்கிறது.
ஆல்பா : டாக்டரே! என் சிருஷ்டிகர்த்தரை ஸயன்ஸ் காங்கிரஸில் பொதுமக்களுக்கு முன்பு நீர் ஏசியதை அவர் மறக்கவில்லை. உமக்குத் தகுந்த சிக்ஷை விதிக்கும் படி என்னைத் தூண்டி அனுப்பினார். அவ்வுத்தரவைச் சிரமேற்கொண்டு உம்முடைய பங்களாவை அடைந்து ஹாலில் அமர்ந்திருந்தேன்.
நான்: சும்மா இருந்திருக்கக்கூடாதா? பாப்பாயி- கேவலம் வீடு கூட்டி – அவளை ஹிம்ஸை செய்வானேன்? என்னைச் சிக்ஷை செய்தால் அர்த்தம் உண்டு. ஆல்பா, உனக்குப் புத்தி இல்லையா?
ஆல்பா ஆம், எனக்குப் புத்தி இல்லைதான். ஆனால் நான் செய்யக்கூடியது அப்போது வேறு ஒன்றுமே இல்லாமல் போய்விட்டது. எனக்கும் இது விஷயத்தில் மனத்தில் புண்தான். வீடு கூட்டி ஹாலில் வந்து என்னைப் பார்த்ததும், ‘ஐயோ! பூதம்’ என்றாள். அந்தச் சப்தத் தின் அலை என்னை எவ்விடத்தில் தாக்குமென்று உமக்குத் தெரியும். சப்தம் என் பேரில் பட்டால் ஸ்வாதீனமற்ற வன் ஆவேன் என்றும் உமக்குத் தெரியும். அந்தச் சப்தம் கேட்டதுதான் தாமதம். என் கால் ஓர் அடி எடுத்து வைத்தது. என் கை பாப்பாயிக்கு இரண்டு அடி கொடுத் தது. அவள், ‘ஹோ, கொலை’ என்று அலறி விழுந்தாள். இதுதான் கதை.
நான்: ஆல்பா ! ரொம்ப நன்றாயிருக்கிறது, உன் காரியமும் யோக்கியதையும். திரும்பிப்போ பங்களாவுக்கு” என்று சொல்லிப் பிடரியிலிருந்த ஒரு திருகாணியைத் திருப்பிவிட்டேன். சாயங்காலத்தில் மேயச்சலிலிருந்து திரும்பி மாடு நமது வீட்டுக்குள் நுழைவதுபோல் ஆல்பா என் பங்களாவுக்குள் நுழைந்தது. ஒருவரும் வாய் திறக்கவில்லை.
‘கோர்ட்டார் அவர்களே! இனி என்னை விடுவிக்க வேண்டியதுதானே’ என்றேன். அப்போது ஜட்ஜின் முகம் மிகவும் குரூரம் கொண்டிருந்தது. பதிலாக, ‘டாக்டர் வாள்! நடுத்தெருவில் நீர் குற்றவாளி அல்லவென்று இட்லியில் உத்தரவு எழுதிக் கொடுக்க முடியாது. தஞ்சாவூருக்குப் போய்ப் பாக்கி விசாரணைக்குப் பிறகு தான் தெரியும்’ என்று எரிந்து விழுந்தார்.
“அடவியார்வாள், சுவாரஸ்யப்படவில்லையா? என்ன கொட்டாவி விடுகிறீர்கள்?”
“இல்லை ராயர்வாள். பாக்கி நடக்கட்டும்.”
“மறுபடி தஞ்சாவூருக்கு வந்தோம். மறுபடியும் ‘ஸெஷன்ஸ் கோர்ட்டில் விசாரணை. விடுதலை என்று ஒரே வார்த்தைதானே ; விசாரணைக்கு என்ன இருக்கிறதென்று கேட்பீர்கள். அதுதான் வேடிக்கை! என்னை மறுபடியும் ஸ்டேட்மென்டு கொடுக்கும்படி ஜட்ஜ் உத்தரவிட்டார். நுங்கம்பாக்கத்தில் நடந்ததையெல்லாம் எழுதிக்கொடுத் தேன். விசாரணை முடிந்தது. ஜட்ஜ் ஜூரர்களுக்குச் சொல்லவேண்டியதை நீட்டி முழக்கிச் சொல்லாமல் சுருக்க மாக முடித்தார்.
”நீங்கள் சாட்சியத்தையெல்லாம் கேட்டீர்கள். நுங்கம்பாக்கத்தில் நடந்ததையும் பார்த்தீர்கள். இனிச் சந்தேகத்துக்கு இடமென்ன? டாக்டர் என்று மலைக்காதீர் கள். இவர் பெரிய பேர்வழி, நுங்கம்பாக்கத்தில் நாம் பார்த்ததெல்லாம் ஹிப்னாடிஸம்; தெருவில் மாஞ்செடி முளைக்கச் செய்வதைப் போன்ற கட்டுக்கதை. ஆகவே டாக்டர் சேதுராவைப் போன்ற மந்திரவாதிகளையும் யந் திரவாதிகளையும் விஞ்ஞானிகளையும் உலகில் சுயேச் யாக விட்டிருப்பது, பாம்பை இடுப்பில் கட்டிக்கொண்டது போலாகும். ஸயன்சுக்குப் பாப்பாயி பலியிடப்பட்டிருக்கி றாள். இனி ஆலோசியுங்கள்.’
“அதுவரையில் தான் குற்றவாளிக் கூட்டில் எனக்கு என்ன பயமென்று அலட்சியமாக நின்றுகொண் டிருந் தேன். இந்த வார்த்தைகளைக் கேட்டதும் வெடிகுண்டு விழுந்ததுபோல் திடுக்கிட்டேன். இருந்தாலும் விசை ஜூரர்களிடமல்லவா இருக்கிறதென்று கொஞ்சம் மனத் தைத் தட்டிக்கொடுத்துப் பார்த்தேன். தேறுதலடையும் வழியைக் காணவில்லை. அதற்குள் ஜூரர்கள் உள்ளே யிருந்து வந்து நாற்காலிகளில் அமர்ந்தார்கள். கோர்ட்டார் அவர்கள், ‘ஜூரர்களே! குற்றவாளியா அல்லவா?’ என்று கேட்டார்.
‘குற்றவாளிதான்’ என்று பதில் வந்தது.
‘ஏகோபித்த அபிப்பிராயமா அல்லது…’
‘ஏகோபித்த அபிப்பிராயந்தான்.’
என் காதில் விழுந்த வார்த்தைகளை நம்பக்கூடவில்லை. கழுத்தை நீட்டிக் காதை வளைத்துப் பார்த்தேன். ‘நீர் பாப்பாயியைக் கொலைசெய்ததாகக் கண்டுபிடிக்கப் பட்டிருக்கிறது. ஆனால் ஸயன்ஸின் மீதுள்ள மோகத்தால், மூட மோகத்தால் – அன்புக் கண்ணை இழந்து, ஒரே எண்ணத்தின் வலைக்குள் சிக்கித் தடுமாற்றமடைந்த காலத் தில், ஆல்பாவின் மூலமாய் – வேண்டுமென்றல்ல, ஆராய்ச்சித் தோரணையில் – இக்கொலை செய்திருப்பதால் உமக்குத் தீவாந்தர தண்டனை என்ற சிறிய சிக்ஷை விதிக் கப்பட்டிருக்கிறது. அந்தமான் தீவுக்கு மாற்றல்’ என்று ஜட்ஜ் முடித்தார். எனக்கு அப்பொழுது மூச்சில்லை ; மார்பு அடிக்கக் காணவில்லை. கால் மரத்திருந்தது.
“மறுபடி அந்தமான், அந்தமான் என்ற கூக்குரல். அந்தமானா என்று கண்விழித்துப் பார்த்தேன். அடவியார் வாள்! ஆல்பா, ஸெஷன்ஸ் கோர்ட்டு, குற்றவாளி ஒன்றை யும் காணவில்லை. நான் எனது பழைய நாற்காலியிலேயே தான் சாய்ந்தவண்ணம் இருந்தேன். காலின் மீது சாயங் காலத்துத் தங்க வெயில் அடித்துக்கொண் டிருந்தது. வாசலில் என் சம்சாரம் நவராத்திரிக் கொலுச் சாமான் வாங்கிக்கொண் டிருந்தாள். என் பேரன் கிட்டு அந்த மான் அந்த மானென்று ஒரு பொம்மைக்குப் பிடிவாதம் செய்து கொண்டிருந்தான். அப்போதுதான் இவ்வளவும். இது பற்றித்தான் பெரியவர்கள் மத்தியான்னத்தில் தூங்காதே என்று சொல்லுகிறார்கள் போலும்!”
“அடவியார்வாள், இதுதான் மசோதா பிறந்ததற்குக் காரணம்” என்று நிறுத்தினார் சேதுராவ்.
“அதெல்லாம் சரிதான் டாக்டர்வாள். கயிறு திரிப் பது உங்கள் தொழில் அல்லவே ; இதையெல்லாம் கவனித்தால் கொஞ்சம் அசம்பாவிதமாக……”
“அப்படித்தான் ஐயா இருக்கும். பகல் கனவு கால வரம்பு, நடைவரம்பு, இடவரம்பு இவைகளுக்கு உட்பட வில்லை என்பது உங்களுக்குத் தெரியாதா? தள்ளும் கதையை. மசோதாவை எடும்; பரிசீலனை செய்வோம்” என்றார் டாக்டர் சேதுராவ்.
– மோகினி (சிறு கதைகள்), முதற் பதிப்பு: நவம்பர் 1951, கலைமகள் காரியாலயம், சென்னை.