கதையாசிரியர்:
கதை வகை: தொடர்கதை
தின/வார இதழ்: தினமணி
கதைத்தொகுப்பு: கிரைம்
கதைப்பதிவு: November 19, 2023
பார்வையிட்டோர்: 13,485 
 
 

(2001ல் வெளியான குறுநாவல், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

அத்தியாயம்-3 | அத்தியாயம்-4 | அத்தியாயம்-5

இரண்டு நாட்களுக்குப்பின் என் ஆபீஸில் கத்தை கத்தையாகக் காகிதங்கள், பீர் பாட்டில் கள், நடுவே நானும் வஸந்தும் உட்கார்ந்திருந்தோம். 

ஸர் ஜான் உட்ரஃபின் தந்த்ரா என்கிற புத்தகத்தில் சில பகுதிகளை அவன் தேர்ந்தெடுத்து, காகிதம் வைத்து, பல வரிகளை அடிக்கோடிட்டு வைத்திருந்தான். செய்தித்தாள்களில் வந்திருந்த விஷயங்களின் சாராம்சத்தை அழகாகச் சுருக்கி, தேதிப்படி டைப் அடித்து வைத்திருந்தான். மேலாகப் படித்தேன். பத்திரிகைகளையும் பார்த்தேன். தமிழ்ப் பத்திரிகைகள் புகுந்து விளையாடி இருந்தார்கள். ‘இதுதான் அந்தச் சாமியார்’ என்று சுவாமி கிருஷ்ணானந்தாவின் படத்தைப் பெரிதாக அச்சிட்டிருந்தார்கள். மாயா இளம்பெண், கன்னிப்பெண், அழகி என்று வெவ்வேறு விதமாக வருணிக்கப்பட்டிருந்தாள். 

‘சென்சேஷன் கொஞ்சம் அதிகம் இருக்கும்போல் இருக்கிறது… இந்த ஆர். வாசுதேவன் என்பவர் பற்றி என்ன தெரிந்து வைத் திருக்கிறாய்?’ 

‘ஓ எஸ்! ஆர். வாசுதேவன்.’ ஒரு காகிதத்தை என்னிடம் கொடுத் தான். ஆர். வாசுதேவன், வயது முப்பத்து எட்டு. மேனேஜிங் டைரக்டர். என்ன பிஸினஸ் என்று தெரியவில்லை. அவர் மேல் கஸ்டம்ஸ் விதிகளை மீறினதற்காக ஒரு கேஸ் இருக்கிறது. இன்வாய்ஸில் தப்பு பண்ணி மாட்டிக் கொண்டதாகத் தெரிகிறது. அபராதம் ஒரு லட்சத்தை எட்டும் என்பது தெரிகிறது. அப்பா ஒரு மிகப் பிரபலத் தொழிலதிபர். பெயர் ராஜாராம். வாசுதேவன் ஒரு எக்ஸ்ட்ரா நடிகையைச் சமீபத்தில் கல்யாணம் செய்துகொண்ட தால் குடும்பத்திலிருந்து இவரை விலக்கி விட்டதாகத் தெரி கிறது. ரேஸ் பழக்கம் உண்டு. சினிமா ஒன்று எடுத்து பாதியில் விட்டிருக்கிறார். 

‘வெரிகுட்! நிறையச் சேகரித்திருக்கிறாய். மனுஷனுக்கு அளவில் லாத பணக் கஷ்டம் என்று தெரிகிறது. ஆனால் இவருக்கும் கிருஷ்ணா மிஷனுக்கும் ஏதாவது சம்பந்தம் இருக்கிறதா?’ 

‘சம்பந்தம் எதுவும் இருப்பதாகத் தெரியவில்லை. மற்றொரு விஷயம் தெரிந்துகொண்டேன். அந்தப் பையன் மாயாவின் அண்ணன். அவன் பெயர் ரமேஷ்தானே?’ 

‘ஆம்.’ 

‘அவன் வாசுதேவனிடம் வேலை செய்கிறான்; செகரட்ரி மாதிரி!’ 

‘ம்ஹும்.எப்படி இதெல்லாம் தெரிந்துகொண்டாய்?’ 

‘ஸிம்பிள். அந்த வீட்டருகே சென்று ஒரு வெற்றிலை பாக்குக் கடையில் விசாரித்தேன். அந்த ஆளுக்கே வாசுதேவன் நூற்று இருபது ரூபாய் பாக்கி! முட்டையாகவே வாங்கித் தின்றிருக் கிறான். வீட்டு வேலைக்காரன்மூலம் கடைக்காரனுக்கு எல்லா விஷயமும் தெரிந்திருக்கிறது. என் மலையாளம் கொஞ்சம் உபயோகப்பட்டது.’ 

‘வஸந்த்! யு ஆர் கிரேட்.’ 

டெலிபோன் ஒலித்தது. வஸந்த் அதை எடுத்தான். கேட்டான். ‘இருக்கிறார், நீங்கள் யார் பேசுவது?’ 

‘…’

‘ஜஸ்ட் எமினிட்…’ டெலிபோனைப் பொத்திக்கொண்டு, ‘மாயா’ என்றான். 

‘ஹலோ! கணேஷ் ஹியர்.’ 

‘மிஸ்டர் கணேஷ்! நான் மாயா பேசுகிறேன். உங்களை நான் உடனே சந்திக்கவேண்டும்.’ 

‘எதற்கு?’ 

‘முந்தாநாள் நீங்கள் சொன்னதை மறுபடி யோசித்துப் பார்த்தேன். நீங்கள் குறிப்பிட்டதுபோல் கோர்ட்டுக்குப் போகாமலேயே விஷயத்தைத் தீர்த்துவிடலாம் என்று நினைக்கிறேன்.’ 

‘உங்கள் அண்ணன் என்ன நினைக்கிறார்?’ 

‘அவனிடம் பேசினேன். அவனும் சம்மதித்துவிட்டான். நீங்கள் இடத்தைச் சொல்லுங்கள். அங்கு வருகிறோம்.’ 

‘என் ஆபீசுக்கு வாருங்களேன். தம்புச் செட்டித் தெருவில் இருக்கிறது. நம்பர் எழுபத்து எட்டு.’ 

‘ஒரு நிமிஷம்.’ 

வஸந்த் என்னையே பார்த்துக்கொண்டிருந்தான். ‘இன்னும் அரை மணியில் வருகிறோம்’ என்றாள். 

நான் டெலிபோனை வைத்துவிட்டு யோசித்தேன். 

வஸந்த் பேசக் காத்திருந்தான். 

‘அவர்கள் இங்கே வருகிறார்கள்…’ 

‘எதற்கு?’” 

‘கோர்ட்டுக்குப் போகவேண்டாம். வெளியிலேயே பேசித் தீர்த்துக்கொள்ளலாம் என்கிறாள்!’ 

‘அது சாத்தியமில்லை. இது ஒரு கிரிமினல் வழக்கு. அவர்கள் புகாரை வாபஸ் வாங்க முடியாது. இந்த ஸ்டேஜில் அது கண்டெம்ப்ட் ஆஃப் கோர்ட் ஆகிவிடும்.’ 

‘தெரியும் வஸந்த். இது வசீகரமான கேஸ். முந்தாநாள்தான் ‘சுப்ரீம் கோர்ட்வரை நான் வாதாடப் போகிறேன். எங்களுக்கு பிரின்ஸிபிள்தான் பெரிசு’ என்றான். இன்று மாறிவிட்டான். இந்த இரண்டு தினங்களில் ஏதோ நிகழ்ந்திருக்கவேண்டும். அவர்கள் எதிர்பார்த்தது… வரட்டும், என்ன சொல்கிறார்கள் பார்க்கலாம்…’ 

டெலிபோன் மறுபடி ஒலித்தது. 

‘மிஸ்டர் கணேஷ், வணக்கம். நான் கிருஷ்ணா மிஷனிலிருந்து பேசுகிறேன். ஸ்ரீமதி என் பெயர். ஞாபகம் இருக்கிறதா?’ 

அம்மாள்! 

‘ஓ! நன்றாக நினைவிருக்கிறது.’ 

‘மிஸ்டர் கணேஷ். இந்தக் கேஸின் தீவிரம் கிருஷ்ணா மிஷனைத் தாக்க ஆரம்பித்து விட்டது. மிஷனின் வருமானத்தை அது மிகவும் பாதிக்கும் என்று தோன்றுகிறது. மிஸ்டர் கணேஷ்! எப்படியாவது அந்தக் கேஸ் போட்ட பெண்ணிடம் பேசி இந்தக் கேஸை கோர்ட்டுக்கு வராமல் செய்துவிட முயற்சியுங்கள். அதற்காக என்ன செலவானாலும் பரவாயில்லை. வழக்கின் பப்ளிஸிடியை மிஷன் தாங்காது.’ 

‘சுவாமி என்ன சொல்கிறார்?’ 

‘சுவாமி இதைப் பற்றிக் கவலைப்படவே இல்லை. எங்களுக்குத் தான் மிகவும் கவலை ஏற்பட்டிருக்கிறது. எங்களுக்கு வரவேண்டிய மிகப் பெரிய கிரான்ட் தொகை ஒன்று நின்றுபோய் விட்டது… நீங்கள் அந்தப் பெண்ணிடம் பேச வேண்டும்! 

‘நான் பேசிவிட்டேன்!’ 

‘என்ன சொன்னாள்? என்ன சொன்னாள்?’ 

‘அவளுக்குச் சம்மதம் என்று தெரிகிறது. அவளுக்கும் இதைக் கோர்ட்டுக்கு கொண்டுசெல்ல விருப்பமில்லை என்று சொன் னாள். செட்டில்மெண்டுக்குத் தயார் என்று தெரிகிறது!’ 

‘செட்டில் பண்ணிவிடுங்கள்!’ 

‘அது முடியாது.’ 

‘ஏன்?’ 

‘இது ஒரு கிரிமினல் வழக்கு.’ 

‘எப்படியாவது தீர்த்துக்கொடுங்களேன். யாருக்காவது பணம் கொடுத்து.’ 

‘நான் உங்களுக்கு மறுபடி டெலிபோன் செய்கிறேன்.’ 

டெலிபோனை வைத்தேன். 

‘கிருஷ்ணா மிஷன் பணம் கொடுக்கத் தயாராக இருக்கிறார்கள்! மாயா வாங்கிக்கொள்ளத் தயாராக இருக்கிறாள். நானும் நீயும் மடையர்களைப் போல ஸர் ஜான் உட்ரஃபின் தந்த்ரா படித்துக் கொண்டு வெற்றிலை பாக்குக் கடைக்காரனிடம் மலையாளத் தில் பேசிக்கொண்டிருக்கிறோம்.’ 

‘பாஸ்! எனக்குப் புரியவே இல்லை’ என்றான் வஸந்த். 

‘எல்லாம் அந்த ஹேவஜ்ரனுக்குத்தான் தெரியும்.’ 

‘திடீரென்று இரண்டு பேரும் ஒரே பக்கம் போய்விட்டார்களே!’ என்ற வஸந்த் ‘ஷ்ய்’ என்று விசிலடித்தான். 

‘இதுதான் மாயாவா! நோ வொண்டர், என்னை நீங்கள் அழைத்துச் செல்லவில்லை.’ 

நான் தந்த்ரா புத்தகத்தை மறைத்து வைத்தேன். மாயாவும் அவள் அண்ணனும் உள்ளே வந்தார்கள். மாயாவை என்னால் முதலில் அடையாளம் கண்டுபிடிக்க முடியவில்லை. மார்பை இறுகப் பிடித்த சட்டையும் ஜீன்ஸும் அணிந்திருந்தாள். மேக்கப் அணிந் திருந்தாள். அவள் சட்டை மார்பைச் சரியாக மூடாதது வஸந்தின் ரத்த அழுத்தத்தை மிகவும் சோதிக்கப் போகிறது. 

நான் காகிதங்களை எல்லாம் சீர்படுத்தினேன். அண்ணன், ‘ஹலோ மிஸ்டர் கணேஷ், வீ மீட் எகய்ன்’ என்று மிக சினேகித மாக என் கையைக் குலுக்கினான். வஸந்த் மாயாவை உபசாரம் செய்து உட்கார வைத்தான். ‘சொல்லுங்கள்’ என்றேன். 

‘நீங்கள் எந்த காலேஜில் படிக்கிறீர்கள்?’ என்றான் வஸந்த். 

‘ஒன் மினிட் வஸந்த்!’ என்று அதட்டினேன். 

‘நாங்கள் மனம் மாறிவிட்டோம்’ என்றான் அண்ணன்! 

‘முந்தாநாள், இப்படி இந்த ஜன்மத்தில் மாறுவீர்கள் என்று தோன்றவில்லை.’ 

‘முந்தாநாள் நான் கோபத்தில் இருந்தேன். அப்புறம் யோசித்துப் பார்த்தேன். நீங்கள் சொல்வதுபோல் இவள் எதிர்காலம் வீணாகி விடும். நாங்கள் ஸ்டேட்மெண்டை வாபஸ் வாங்கிக் கொள் கிறோம் கோர்ட்டில். மன்னிப்பு, அபாலஜி கேட்டுக்கொண்டு விட்டால் அவர்களும் சம்மதித்துவிடுவார்கள் என்று நினைக்கிறேன்.’ 

‘எவ்வளவு?’ என்றேன். 

‘பார்டன்?’ 

‘உங்கள் விலை என்ன? எவ்வளவு பணம் வேண்டும்?’ 

‘ஒன்னரை லட்சம்’ என்றான். 

‘ரூபாயா?’ 

‘இல்லை, பைசாவா! கிருஷ்ணா மிஷன் பணக்கார மிஷன், கொடுப்பார்கள்’ என்றான். 

வஸந்த் மாயாவை விட்டு என்னையே பார்த்துக் கொண்டிருந் தான். 

நான் மெதுவாக சிகரெட் பற்றவைத்து, அவனுக்கு ஒன்று கொடுத்து, அதனையும் பற்றவைத்தேன்.’ 

‘ம்ஹூம்’ என்றேன். 

‘பார்டன்?’ 

‘பணம் தர முடியாது’ என்றேன். 

‘ஒன்னரை லட்சமா? பின் எவ்வளவுதான் கொடுப்பீர்கள்?’ என்றான். 

‘ஒரு பைசா கிடையாது! போக வர பஸ் சார்ஜ்கூடக் கிடையாது!’ 

‘வாட்! அன்றைக்கு நீங்கள் சொன்னீர்கள்.’ 

‘அது அன்றைக்கு, அன்றைய தினம் வேறு. அன்றைய தினம் உங்கள் குறிக்கோள் என்ன என்று தெரிந்துகொள்வதற்கு அப்படிக் கேட்டேன், நண்பர் ரமேஷ்! அந்தக் கேஸை நீங்கள் விரும்பினால்கூட வாபஸ் வாங்கிக்கொள்ள முடியாது. இது ஒரு கிரிமினல் கேஸ்.’ 

‘கணேஷ், என்னை முட்டாள் ஆக்குகிறீர்களா? எதற்கு என்னைக் கூப்பிட்டீர்கள்?’ 

‘நான் கூப்பிடவில்லை. நீங்கள்தான் வருகிறேன் என்று சொன்னீர்கள்!’ 

‘கொடுக்கவேண்டியதைக் கொடுத்துவிடுங்கள். சாட்சி சொல்லும்போது மாற்றிச் சொல்லி விடுகிறோம். வி வில் டர்ன் ஹாஸ்டைல்!’ 

‘தேவையில்லை’ என்றேன். 

‘கணேஷ்! யூ ஆர் மேக்கிங் எ மிஸ்டேக்! எங்கள் கேஸ் வீக்கானது என்ற காரணத்தால் நான் இந்த காம்ப்ரமைஸுக்கு வரவில்லை. அந்த சுவாமி பாஸ்டர்ட் செய்ததற்கு ஆதாரபூர்வமாக நிரூபணம் இருக்கிறது. இந்தக் கேஸ் நடந்தால் அவனுக்கு நிச்சயம் சிறைத் தண்டனை கிடைக்கும். தீர்ப்பு ஆன உடனே ஒரு சிவில் வழக்கும் போட்டு நஷ்ட ஈடு கேட்கப் போகிறோம். அதை நீங்கள் உணர்ந்துதான் ஒப்பந்தத்துக்குக் கூப்பிட்டிருக்கிறீர்கள். எனக்கு நன்றாகத் தெரியும். இப்போது நானாக உன்னை அணுகியது உன்னை இப்படிப் பேசவைக்கிறது. இந்தக் கேஸ் உங்களுக்கு ஜெயிக்கும் என்று கனவிலும் நினைக்காதே! அப்படிப்பட்ட சாட்சியங்கள் வைத்திருக்கிறோம். அந்த சுவாமி செய்த அக்கிரமங்கள் அனைத்தையும் அம்பலப்படுத்துவோம்! அப்புறம் வருத்தப்படாதீர்கள்!” 

‘செய்யுங்கள், யூ ஆர் வெல்கம்!’ 

‘வலுவில் வரும் வாய்ப்பை இழக்கும் உன் போன்ற முட்டாளைப் பார்த்ததில்லை. மாயா, வா! நாம் இங்கு வந்தது தப்பு ! ப்ளடி ஃபூல்ஸ், விளையாடுகிறார்கள்!’ நான் கொடுத்த சிகரெட்டை அழுத்திக் கொன்று ஆஷ் டிரேயில் திணித்துவிட்டுச் சென்றான். மாயா அவனுடன் பொம்மைபோல நடந்து சென்றாள். 

நான் நிதானமாக சிகரெட் பிடித்தேன். வஸந்த் மலைத்துப்போய் என்னையே பார்த்துக்கொண்டிருந்தான். 

‘என்ன பாஸ் இது?’ என்றான். 

‘என்ன?’ 

‘கதையையே மாற்றிவிட்டீர்கள்!’ 

‘மிஸ்டர் வஸந்த், ஒரு சாதாரண வக்கீலுக்கும் என்னைப் போன்ற ஒரு ஜீனியஸுக்கும் கொஞ்சம் வித்தியாசம் இருக்கிறது. 

‘நீங்கள் அதிகம் பீர் சாப்பிட்டிருக்கிறீர்கள் என்று நினைக்கிறேன்.’ 

‘நான் அதிகம் வெண்டைக்காய் சாப்பிட்டிருக்கிறேன். மூளை! நான் எடுத்துக்கொள்வது கால்குலேடட் ரிஸ்க் என்பார்களே அது. ‘டெலிபோனை எடுத்து கிருஷ்ணா மிஷனின் நம்பரைச் சுழற்றினேன். 

அம்மாள் டெலிபோனில் வந்தாள். அருகேயே காத்திருக்கிறாள் போலும். ‘என்ன காரியம் முடிந்து விட்டதா? செட்டில் பண்ணி விட்டீர்களா?’ 

‘ம்ஹும், இல்லை, கேஸ் நடக்கப் போகிறது!’ 

‘அய்யோ! ஏன் அவள் பணம் வாங்கச் சம்மதிக்கவில்லையா?’ 

‘அதிகத் தொகை கேட்டாள்.’ 

‘கொடுத்துவிடுவதுதானே. எத்தனை கேட்டாள்!’ 

‘கேட்டாள் இல்லை, கேட்டான். அந்தப் பெண்ணின் அண்ணன். அவன்தான் இதன் மூல காரணம். என்னை வக்கீலாகத் தேர்ந்தெடுத்திருக்கிறீர்கள். என் திறமையில் உங்களுக்கு நம்பிக்கை இருக்கிறதல்லவா?’

‘இருக்கிறது.’ 

‘பின் ஏன் பயப்படுகிறீர்கள். அந்தப் புகாரில் கூறியிருப்பது நிஜமா?’ 

‘இல்லவே இல்லை, அத்தனையும் பொய்.’ 

‘பின் ஏன் பயப்படுகிறீர்கள்?’ 

‘மிஸ்டர் கணேஷ்! ஏற்கெனவே இந்தக் கேஸ் எங்கள் மிஷனை மிகவும் பாதித்துவிட்டது. வரவேண்டிய பணம் எல்லாம் நின்று விட்டது. கொடுப்பவர்களுக்கு எல்லாம் சந்தேகம் வந்து விட்டது.’ 

‘கேஸ் ஜெயித்தால் அவர்கள் மனம் மாறிவிடுவார்கள் அல்லவா? உங்கள் பக்கம் குற்றம் இல்லை என்றால் ஏன் தயங்கவேண்டும்? பயப்படாதீர்கள். எனக்கு ஒரு விஷயம் தெரியவேண்டும். சற்றுமுன் சொன்னீர்கள். உங்களுக்கு வர வேண்டிய ஒரு மிகப் பெரிய கிரான்ட் தொகை நின்று போய்விட்டது என்று. அந்தத் தொகையை யார் கொடுப்பதாக இருந்தார்கள்?’ 

‘கொஞ்சம் இருங்கள் சொல்கிறேன்… பத்து லட்சம் ரூபாய் கொடுக்க ஒப்புக்கொண்டிருந்தார்கள், ஏவி.ஆர் குரூப் ஆஃப் இண்டஸ்ட்ரீஸ் என்கிற ஸ்தாபனம். அவர்களிடமிருந்து கடிதம் வந்துவிட்டது. உங்கள் மிஷனைப் பற்றி எங்களுக்குச் சந்தேகம் ஏற்பட்டுவிட்டதால் நாங்கள் இந்தத் தொகையை கொடுப்பதற் கில்லை என்று…’ 

‘ஒரு நிமிஷம்’ என்று டெலிபோன் டைரக்டரியைப் புரட்டி ஏவி.ஆர் க்ரூப் ஆஃப் இண்டஸ்ட்ரீஸின் பக்கத்தைப் புரட்டி ஆராய்ந்தேன். பிறகு வஸந்தின் குறிப்புகளை ஆராய்ந்தேன். 

‘உங்கள் கேஸ் ஜெயித்துவிட்டது. நிம்மதியாகத் தூங்குங்கள். கவலையே படாதீர்கள்’ என்றேன். 

‘எப்படி?’ 

‘இனி நான் பார்த்துக்கொள்கிறேன். நூறு சதவிகிதம் உத்திர வாதம். கேஸ் வெற்றி! அப்புறம் விவரமாகச் சொல்கிறேன். வணக்கம்.’ 

டெலிபோனை வைத்த என்னை வஸந்த் வினோதமாகப் பார்த்தான். ஏனெனில் நான் நிதானமாக ஒரு நிமிஷம் சிரித்தேன். கடைசியில் வாயைத் திறந்து அனுபவித்துச் சிரித்தேன். வஸந்த் நிச்சயம் என் மன ஆரோக்கியத்தைப் பற்றி சந்தேகப்பட்டிருப் பான். 

‘என்ன பாஸ் நீங்களே சிரித்துக்கொள்கிறீர்கள்?’ 

‘எல்லாம் பொருந்துகிறது. சக் என்று கோத்து வைத்தாற்போல்! வஸந்த், வேடிக்கையைப் பார். மிஷனைச் சேர்ந்தவர்களும் கோர்ட்டுக்குப் போக இஷ்டப்படவில்லை. மாயாவின் கட்சியும் கோர்ட்டுக்குப் போக இஷ்டப்படவில்லை. நான் மட்டும் தனிக் கட்சி ஆகிவிட்டேன். எந்தப் பக்கம் உண்மை இருக்கிறது என்பது கோர்ட்டில் தெரியாமல் போகலாம். ஆனால், சுவாமி அவர்கள் கட்சி கேஸில் ஜெயிக்கப் போவது என்னவோ நிச்சயம்.’ 

‘நீங்கள் சொல்வது ஒன்றுமே புரியவில்லை.’ 

‘காரணம்… வஸந்த், காரணம். எல்லாவற்றுக்கும் காரணம் இருக்கிறது. கிருஷ்ணா மிஷன் பணம் கொடுக்க இசைந்ததின் காரண மும் மாயாவின் அண்ணன் புகாரை வாபஸ் வாங்கிக் கொள்ளச் சம்மதிப்பதின் காரணமும் ஒன்றே, சிம்பிள்.’ 

‘ம்ஹூம்’ என்றான் புரியாமல். 

‘நீ ஒரு மரமண்டை. ஒரு பேப்பர் பென்சில் எடுத்துக்கொள். ப்ரீஃப் தயாரிப்பதற்கான பாயிண்டுகள்!’ 

‘அப்படி என்றால் இந்தக் கேஸ் நடக்கத்தான் போகிறது.’ 

‘நிச்சயம் மேளதாளத்துடன்! பாவம் மாயா!’ என்றேன்.

– தொடரும்…

– மாயா (குறுநாவல்), வெளிவந்த ஆண்டு: 2001, தினமணி கதிர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

* Copy This Password *

* Type Or Paste Password Here *