மானிட வேட்டை

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: கிரைம்
கதைப்பதிவு: March 6, 2016
பார்வையிட்டோர்: 19,739 
 
 

இருட்டில் மூழ்கி இருந்தது அறை. கட்டில் பக்கத்தில் இருந்த பெரிய டிஜிட்டல் வாட்ச் மணி 10.20 எனக் கூறியது. அந்த இரவு நேரத்தில் நிமிட நேர நிசப்தத்தை கூட விரும்பாதவன் போல் பேசினான் ஜன்னல் ஓரம் நின்றிருந்த பரத்.

“பயமா இருக்கு சித்தப்பா..”

இதே வார்த்தைகளை வேறு வேறு உடல்மொழியோடு முன்னமே அவன் சித்தப்பா என்றழைத்த மூர்த்தியிடம் பல முறைக் கூறிவிட்டான். இதே வேறு சூழ்நிலையில் இந்த வார்த்தைகளை அவன் கூறியிருந்தால் தலையில் கொட்டி “டேய்.. எத்தனை தடவைடா உனக்கு நான் தைரியம் கொடுத்துட்டு இருக்குறது.. சொன்னா புரிஞ்சிக்க மாட்ட..?” எனக் கேட்டிருப்பான். ஆனால் இப்போது அப்படி நடந்து கொண்டால் “வெண்ணெய் திரண்டு வரும் நேரத்தில் பானை உடைந்த” கதையாகிவிடும் என்று பொறுமை காத்தான் மூர்த்தி.

“டேய்.. பரத்.. எத்தனை தடவைடா உனக்கு சொல்றது.. உன்னோட பயம் தேவையில்லாதது.. இந்த பிசினஸ் இங்க கடல் மாதிரிடா.. நாமெல்லாம் சுறா மீன்களுக்கு வேலை செய்யுற சின்ன மீனுங்க.. நமக்கு எந்த பிரச்சனையும் வராம அந்த சுறாங்க பாத்துக்கும்..” என்றான் மூர்த்தி.

“போலீஸ நினைச்சாத்தான்…” என்று இழுத்தான் பரத்.

“டேய்.. நான் சொன்ன சுறா எல்லாம் அதிகாரத்துல இருக்குறவங்களையே ஆட்டிப்படைக்குற அதிகாரம் படைச்சவங்க தான்டா.. நீ தேவையில்லாதத நினைச்சி கவலைப்படாம ஆக வேண்டிய வேலைய பாரு..” என்றபடி முதுகுக்கு தலையணையை முட்டுக் கொடுத்து சரியாக அமர முயற்சித்தான் மூர்த்தி. திடிரென நினைவு வந்தவனாக “ஹா.. மறந்துட்டேன் பாரு..” என எழுந்து விளக்கை போட்டு கட்டிலுக்கு வலப்புறம் இருக்கும் கபோர்டில் இருந்து வாசனைத் திரவியம் போன்ற ஒரு புட்டியை எடுத்தான்.

“இந்தா மயக்க மருந்து.. சரியா 12 மணிக்கு மேல அவங்க தூங்குற ரூம்க்குள்ள போ.. வேலைய முடி.. அதுக்கு அப்புறம் நான் பாத்துக்குறேன்..” என்றான் மூர்த்தி.

அதை ஒரு வித உற்சாகமின்மையின்றி வாங்கிக் கொண்டான் பரத்.

“சித்தப்பா.. அவங்கள இன்னைக்கே கொன்னுடுவாங்களா..?”

“அதெல்லாம் எனக்கு தெரியாது.. புரோக்கர்க்கு முன்னாடியே சொல்லிட்டேன்.. அவங்க மயக்கமானதும் அவனுக்கு கால் பண்ணி சொல்லிட்டோம்ன்னா வண்டில வந்து அவனோட ஆளுங்க தூக்கிப் போட்டு எடுத்துட்டு போய்டுவாங்க.. ஆனா அதுக்கு அப்புறம் என்ன பண்ணுவாங்க எப்படி கொல்லுவாங்க பார்ட்ஸ் எவளோக்கு விப்பாங்க அதைப் பத்தி எல்லாம் புரோக்கர்ங்க பேச மாட்டாங்க.. ஆனா நமக்கு சேர வேண்டிய அமௌன்ட் அடுத்த நாளே பிளாக் மணியா வந்து சேந்துடும்.. அது தான் பிசினஸ்.. “ என விளக்கம் கொடுத்தான் மூர்த்தி.

“ஹ்ம்ம்.. சரி சித்தப்பா..” என கூறியபடி கட்டில் அருகே இருந்த டேபிள் மீது அந்த புட்டியை வைத்து விட்டு மூர்த்தியின் இடது பக்கம் படுத்தான்.

“கொஞ்ச நேரம் தூங்கு.. நான் 12 மணிக்கு மேல எழுப்பி விடுறேன்..” என்றான் மூர்த்தி.

இருவரும் கண்களை மூடினர்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை மட்டும் பரத் பெசன்ட் நகர் பீச் போகாமல் இருந்திருந்தால் இப்படி ஒரு சம்பாஷனை இருவருக்குமிடையே ஏற்ப்பட்டிருக்க வாய்ப்பில்லை. நண்பன் ஒருவனை பார்ப்பதற்காக அன்று பீச் சென்றிருந்தான் பரத்.

“டேய்.. எங்கடா இருக்க..? என்ன இனி தான் வீட்ல இருந்து கெளம்ப போறியா..? டேய் எப்படா வரேன்னு சொன்ன.. நான் வந்து அரை மணி நேரம் ஆச்சி.. போன் பண்ணா அட்டென்ட் பண்ணாத போதே நினைச்சேன் இந்த மாதிரி ஏதாவது பண்ணுவன்னு.. சரி நான் கெளம்புறேன்.. டேய் போடா இனிமே எல்லாம் வெயிட் பண்ண முடியாது.. பாய்” எனப் பேசிக் கொண்டே போனை அணைத்து பாக்கெட்டில் வைக்க போகும் போதுதான் கவனித்தான் அங்கே பீச் மணலில் அமர்ந்திருந்த கணேஷ், கோகுல், முரளி, விக்னேஷ் ஆகியோரை. அந்த நான்கு பேரும் பரத்துடன் அவர்களின் சொந்த ஊரான விழுப்புரம் அருகே ஒரே பள்ளியில் எட்டாம் வகுப்பு வரை படித்தவர்கள். பரத் அந்த பள்ளியில் டீசி வாங்கிக் கொண்டு வந்த பின்பு பிள்ளை இல்லாத சித்தப்பா மற்றும் சித்தி வீட்டில் தங்கி படித்துக் கொண்டிருக்கிறான்.

“டேய்.. நீங்கெல்லாம் எப்போடா சென்னைக்கு வந்திங்க..? எப்படி இருக்கீங்க..?” என விசாரித்தான் பரத்.

“டேய்.. பரத்.. நல்லா இருக்கோம்டா.. வண்டலூர் பக்கத்துல்ல இருக்குற காலேஜ்ல தான் இன்ஜினியரிங் ஜாயின் பண்ணிருகோம்.. நீ எப்படிடா இருக்க..? எங்க படிக்குற..?” என்றான் கணேஷ் அனைவரின் சார்பாக.

“சூப்பர் டா.. நான் லயோலா விஸ்காம் படிக்குறேன்டா.. நீங்க எங்க தங்கியிருக்கீங்க..?” என்ற பரத்தின் கேள்விக்கு “ஹாஸ்டல்ல தாண்டா.. நீ எங்கடா தங்கியிருக்க..?” என்றான் கோகுல்.

“நான் எட்டாவது முடிச்சி டீசி வாங்கிட்டு வந்ததுல இருந்து சென்னைல எங்க சித்தப்பா வீட்டுல தங்கி தாண்டா படிச்சிட்டு இருக்கேன்..” என்றான்.

கணேஷ் “ஓ.. ஓகே டா..” என்றான்.

“சரி எங்கேயும் போற பிளான் இருக்கா உங்களுக்கு..?”

“இல்ல டா.. ஏன்..”

“நான் வீட்டுக்கு தான் கெளம்புறேன்.. வாங்க நீங்களும்.. பக்கத்துல தான் எங்க சித்தப்பா வீடு.. வந்துட்டு போங்க..”

“இல்ல டா.. நாங்க கொஞ்ச நேரம் அப்டியே இங்க சுத்திட்டு கெளம்பிடுவோம்.. இன்னொரு நாள் வரோம் டா..” என முந்திக் கொண்டு பதில் கொடுத்தான் கோகுல்.

“டேய்.. வாங்கடா.. நம்ம ஊரு பசங்கன்னு உங்கள கூட்டிட்டு போன எங்க சித்தப்பாவும் சந்தோசப்படுவாரு.. வாங்க..” என பரத் வற்புறுத்தவும் நால்வரும் பார்வையால் கலந்துப் பேசி சரியென பரத்திடம் சொல்லிவிட்டு ஷேர் ஆட்டோ பிடிக்க அவனோடு சேர்ந்து பீச் மணலில் இருந்து ரோடு நோக்கி நடந்தனர்..

காலிங் பெல்லை அழுத்திவிட்டு வாசலில் நான்கு பேரோடும் காத்திருந்தான் பரத். சில நொடிகளின் காத்திருப்பிற்குப் பின் கதவை திறந்தார் மூர்த்தி. பரத்தை மட்டும் எதிர்பார்த்த மூர்த்திக்கு உடன் இருந்த நான்கு பேரும் குழப்பதை எற்ப்படுத்தினார்கள். மூர்த்தியின் முகத்தில் எழுந்த கேள்விக்குறியைப் பார்த்ததும் “சித்தப்பா.. இவங்க நம்ம ஊருக்காரப் பசங்க.. என்கூட ஸ்கூல்ல எட்டாவது வரைக்கும் படிச்சாங்க..” என அறிமுகப்படுத்தினான் பரத்.

சட்டென முகம் பிரகாசமாகி, “ஓ.. அப்படியா.. வாங்கப்பா.. உள்ளே வாங்க..” என்றார் மூர்த்தி.

உள்ளே வந்த நால்வரும் வீட்டைப் பார்த்து விட்டு வாய் பிளந்தார்கள். விலை அதிகம் போல் தெரிந்த சோபா, ஹாலில் மாட்டியிருந்த பெரிய சைஸ் எல்.ஈ.டி. டிவி, பளபள டைல்ஸ் தரை, டுப்லெக்ஸ் டைப் வீட்டின் உள்ளமைப்பு ஆகியவற்றைப் பார்த்ததும் “இவன் சித்தப்பா செம்ம டப்பு பார்ட்டி போல” என மனதுக்குள் நினைத்துக் கொண்டான் கணேஷ். அவர்கள் நால்வரும் சோபாவில் செட்டில் ஆகும் வரை பேசாமல் இருந்த மூர்த்தி “அப்புறம் சொல்லுங்க.. என்ன படிக்குறிங்க..?” என்றார்.

“இங்க தான் சார் வண்டலூர் பக்கத்துல இருக்குற காலேஜ்ல இன்ஜினியரிங் படிக்குறோம்.. ஹாஸ்டல்ல தங்கியிருக்கோம்..” என அவர் கேட்க்கும் முன்பே தங்குமிடம் குறித்தும் தகவல் கொடுத்தான் கணேஷ்.

“சரி சரி.. ஏதும் சாப்பிட்டிங்களா.?” என்றார் மூர்த்தி.

“ஹா.. சாப்பிட்டோம் ஸார்..” என்றான் கோகுல்.

“சரி.. இருங்க.. டீ போட்டு எடுத்துட்டு வரேன்..” என எழுந்தவரை “இல்லை.. பரவால ஸார்.. அதெல்லாம் வேணாம்..” எனத் தடுக்க முயன்றான் கணேஷ்.

“என்னப்பா நம்ம ஊருக்காரப் பசங்களா இருக்கீங்க.. ஒரு டீக்கூட கொடுக்காம எப்படிப்பா உங்கள அனுப்ப முடியும்.. இருங்க வரேன்..” எனக் கூறிவிட்டு எழுந்து சமையலறை சென்றார் மூர்த்தி.

அவர் சமையலறைக்குள் நுழையும் வரை அமைதியாய் இருந்த கணேஷ், மூர்த்தி கண்ணில் இருந்து மறைந்ததும் பரத்தை நோக்கி ,”டேய்.. என்னடா உங்க சித்தப்பா டீ போடுறேன்னு போறாரு.. உங்க சித்தி இல்லை..” என்றான்.

“இல்லடா.. சித்தி இறந்து ரெண்டு வருஷம் ஆச்சி.. கான்சர்.. சித்தப்பா காப்பாத்த எவளோ ட்ரை பண்ணாரு.. ப்ச்.. பட் முடியல..”

“ஓ.. அப்போ சமையலுக்கு ஆள் வச்சிக்கலாம்ல.. உங்க சித்தப்பா தான் வசதியானவரா தெரியுறாரே..”

“ஆள் வச்சிருந்தோம்டா.. ஒரு அம்மா தான் கொஞ்ச நாளா சமைச்சிட்டு இருந்தாங்க.. ஆனா அந்தம்மா சமையல் சாமான், டம்ளர், ஸ்பூன்ன்னு திருடி சித்தாப்பக்கிட்ட மாட்டிக்கிச்சி.. அதுக்கு அப்புறம் சித்தப்பா யாரையும் நம்பி வேலைக்கு சேத்துக்கல.. முடிஞ்சா நாங்க சமைப்போம்.. இல்லனா ஹோட்டல் தான்..”

“சரி.. உங்க சித்தப்பா என்ன வேலை செய்யுறாரு..?”

“ரியல் எஸ்டேட்டா.. ஏண்டா..?”

“வீடு செம்மையா இருக்கே.. அதான்..” என்றான் கணேஷ்.

மூர்த்தி டீ ட்ரேயோடு வரவும் கணேஷ் பேச்சை நிறுத்திக் கொண்டான். எல்லோரும் டீ சாப்பிட்டப்படி கொஞ்ச நேரம் பேசிக்கொண்டிருந்தார்கள். 1 மணி நேர உரையாடல்களுக்குப் பிறகு மூர்த்தியிடம் சொல்லிக் கொண்டு கிளம்பினார்கள். பரத் அவர்களோடு மெயின் ரோடு வரை வந்து எல்லோரிடமும் அலை பேசி எண்ணைக் வாங்கிக் கொண்டு ஷேர் ஆட்டோ பிடித்து அனுப்பி வைத்தான்.

அன்று இரவு சிகரெட் பிடித்தபடி மொட்டை மாடியில் இலக்கற்ற பார்வை பார்த்தப்படி நின்றார் மூர்த்தி. அப்போது அவரை தேடிக் கொண்டு ஷார்ட்ஸ் முண்டாபனியன் சகிதம் அங்கே வந்தான் பரத்.

“என்ன சித்தப்பா.. ஏதோ பயங்கரமான யோசனைல இருக்கீங்க போல..” என்றான் பரத்.

“ப்ச்.. அதெல்லாம் ஒண்ணும் இல்லடா..” எனக் கூறிவிட்டு அமைதியாகி விட்டார் மூர்த்தி.

“ஹ்ம்ம்.. தீவிரமான யோசனை போல” என மனதுள் நினைத்துக் கொண்டு தன் மொபைலை எடுத்து நோண்டத் தொடங்கினான் பரத்.

சில நிமிட இடைவெளிக்குப் பிறகு மூர்த்தியே பேச்சை தொடங்கினார்.

“பரத்.. இன்னைக்கு நம்ம வீட்டுக்கு வந்தாங்களே அந்த பசங்க அவங்களோட அப்பா எல்லாம் என்ன வேலைப் பண்றாங்க..”

“கணேஷ் அப்பா மளிகை கடை வச்சிருக்காரு.. கோகுல் அப்பா கவர்ன்மென்ட் பஸ் டிரைவர்.. முரளி அப்பா ஏதோ கவர்ன்மென்ட் ஜாப்ல இருக்காரு.. விக்னேஷ் அப்பா நகை வேலை.. ஏன் சித்தப்பா..?”

“அவங்களுக்கு வேற எதாவது பெரிய காண்டக்ட்ஸ் இருக்கா..? ஏதாவது அரசியல்வாதி அந்த மாதிரி..?

“அந்த மாதிரி எல்லாம் இருக்க வாய்ப்பே இல்லை சித்தப்பா.. ஏன் கேக்குறிங்க..?”

“ஹ்ம்ம்.. இல்ல.. ஒரு சின்ன யோசனை.. “

“என்ன சித்தப்பா..?”

“சுடுகாட்டுல இருந்து எலும்பு எடுக்குற பிசினஸ்ல எல்லாம் 40000, 50000 மேல எதுவும் தேர்றது இல்லை.. பாதி புரோக்கருக்கே போய்டுது.. “

“அதுக்கும் நீங்க கேட்டதுக்கும் என்ன சித்தப்பா சம்பந்தம்..?”

“இல்லடா.. உயிரோட ஒருத்தரோட மார்க்கெட் வேல்யு ஒன்றரைக் கோடி ரூபா.. நமக்கு எப்படியும் 50 லட்சம் கிடைக்கும்ன்னு புரோக்கர் சொன்னான்.. கொஞ்சம் லம்பா பாத்துட்டு செட்டில் ஆகிடலாம்னு பாக்குறேன்..”

“அதுக்கு..?”

“இன்னைக்கு வந்தாங்களே அந்த நாலு பசங்க அவங்கள தூக்குனா என்ன..?”

இதைக் கேட்டதும் அதிர்ந்து விட்டான் பரத்.

“சித்தப்பா.. அவங்க நம்ம ஊருக்காரப் பசங்க சித்தப்பா.. அதுவுமில்லாம என்கூட படிச்ச பசங்க..”

“கூட தானே படிச்சாங்க.. ஒண்ணும் உன்னோட க்ளோஸ் பிரெண்ட்ஸ் இல்லல..”

தயக்கத்துடன் “இல்லை..” என்றான் பரத்.

“அப்புறம் என்ன..? உனக்கே தெரியும் உன் சித்தி ட்ரீட்மெண்ட்க்கு எவளோ செலவாச்சின்னு.. அத சமாளிக்க தான் சுடுக்காட்டுல இருந்து எலும்புகள திருடி விக்கிற தொழிலுக்கு வந்தேன்.. வேற யாரையும் நம்ப முடியாமத்தான் உதவிக்கு உன்னையும் உள்ளே இழுத்தேன்.. ரியல் எஸ்டேட் முன்னை மாதிரி இல்லை பரத்.. இப்படியே எலும்பைத் திருடுற வேலையும் ரொம்ப நாள் பண்ண முடியாது.. அதனால கொஞ்சம் பெருசா பண்ணிட்டு வர பணத்தை வச்சி அப்படியே ஏதாவது ஹோட்டல் பிசினஸ் ஆரம்பிச்சி செட்டில் ஆகிடுவோம்.. என்ன சொல்ற..?”

பரத் அமைதியாக இருந்தான்.

மூர்த்தி முதலில் ரியல் எஸ்டேட் பிசினஸ் மட்டுமே செய்து வந்தான். அதில் நல்ல வருமானம் பார்த்துக் கொண்டிருந்தான். சொந்த வீடு, கார் என சொகுசு வாழ்க்கை கிடைத்தது. இதில் கிடைக்கும் வருமானத்தால் உள்ளே நுழைந்த பலரின் வருகை மூர்த்தியின் வருமானத்தை பாதித்தது. அதோடு கான்சரால் பாதிக்கப்பட்ட மூர்த்தி மனைவியின் மருத்துவச் செலவும் சேர்ந்து கொள்ள இருந்த பேங்க் பாலன்ஸ், கார் என்று ஒவ்வொன்றாக கரைந்தது. அப்போது பழக்கமான ஒருவன் “ரெட் மார்கெட்” என அழைக்கப்படும் உடல் உறுப்பு திருட்டு, எலும்பு திருட்டு ஆகியவற்றில் கிடைக்கும் வருமானம் பற்றி சொல்லவும் மூர்த்திக்கு அதன் மேல் ஒரு ஆர்வம் வந்தது. கிறித்துவ, முஸ்லீம் கல்லறையில் இருந்து திருடப்படும் எலும்புகள் பூட்டானினுள்ள புத்தமதத்தை பின்பற்றுபவர்களுக்கு சடங்கு பயன்பாட்டுப் பொருட்கள் செய்வதற்கும், புல்லாங்குழல் செய்வதற்க்கும், உச்சந் தலையிலிருந்து வெட்டி எடுக்கப்பட்டு பிரார்த்தனை கிண்ணங்கள் செய்வதற்கும் உபயோகப்படுவது குறித்து அறிந்து கொண்டான். கல்லறைத் திருடர்களுக்கு எதிராக குறிப்பிட்ட சட்டம் ஏதும் இல்லை என மூர்த்திக்கு தெரிந்தவன் சொல்லவும் முதலில் மற்றவர்களோடு சேர்ந்து எப்படி செய்கிறார்கள் எனப் பார்த்துக் கொண்டான். பிறகு நம்பிக்கையான ஆள் வேண்டி பத்தாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த பரத்தை தன்னோடு சேர்த்துக் கொண்டான். பரத்க்கு முதலில் மூர்த்தி எதற்க்காக இந்த எலும்புகளை எடுக்கிறான் என்றுப் புரியவில்லை. பிறகு அவனிடம் கேட்டு தெரிந்து கொண்டான். அதன் பின் எந்த எலும்புக் கூடுகளை பார்த்தும் அவன் பயந்ததில்லை. அவனுடைய பள்ளியில் உயிரியல் ஆய்வகத்தில் இருக்கும் எலும்புக் கூடும் கூட தன் சித்தப்பாவைப் போல் யாரோ ஒரு எலும்புத் திருடனால் திருடப்பட்டதாக இருக்கும் என்று அதனை பார்க்கும் போதெல்லாம் நினைத்துக் கொள்வான். இதில் மண்டையோடு சேதமடைந்திருந்தால் ஒரு விலை சேதமடையாமல் இருந்தால் ஒரு விலை, புரோக்கர் கமிஷன் என்று சொற்பமான அளவிலே மூர்த்திக்கு பணம் கிடைத்தது. அந்த புரோக்கர் ஒரு நாள், “முழுசா உயிரோட இருக்குற திடமான ஆளா கொடு.. உனக்கு முழுசா அம்பது லட்சம் தரேன்.. மார்க்கெட்ல அவளோ டிமாண்ட்..” என சொல்லிவைத்திருந்தான். மதியம் அந்த நான்கு பேரையும் பார்த்ததும் புரோக்கர் சொன்ன வார்த்தைகள் மூர்த்தியின் மனதில் ஓட ஆரம்பித்தது. அதனால் பரத்திடம் பேச்சு வார்த்தை நடத்திக் கொண்டிருந்தான்.

பரத்தின் அமைதி அவன் கிட்டத்தட்ட சம்மதித்து விட்டான் என்ற முடிவுக்கே மூர்த்தியை அழைத்து சென்றது.

“டேய்.. பரத்.. எனக்குன்னு உன்ன விட்டா யாருடா இருக்கா..? எனக்கு அப்புறம் இந்த சொத்தெல்லாம் உனக்கு தான்.. நான் உயிரோட இருக்குற வரைக்கும் உன்கூட சந்தோசமா இருக்கணும் அதுக்காக இந்த ஒரு காரியம் மட்டும் பண்ணுடா..” என்றான் மூர்த்தி.

மூர்த்தி எதிர்பார்த்ததைப் போலவே இந்த வார்த்தைகளை கேட்டு இளகினான் பரத்.

“ஹ்ம்ம்.. சரி சித்தப்பா.. என்ன பண்ணனும் சொல்லுங்க..” என எவ்வித உணர்ச்சி வெளிபாடுமின்றி கூறினான் பரத்.

“இப்போதாண்டா நீ என் புள்ள.. ஒண்ணும் இல்லை.. அவனுங்க நம்பர் இருக்குல்ல..?”

“ஹ்ம்ம். இருக்கு சித்தப்பா..”

“புதன் கிழமை போல அவனுங்களுக்கு போன் பண்ணு.. சனிக்கிழமை நைட் வீட்டுக்கு சாப்பிட நான் வர சொன்னேன்னு சொல்லு.. அவனுங்க வந்ததும் நைட் சாப்பிட்டு இங்கயே தங்கச் சொல்லுவோம்.. அவனுங்க தூங்கினதும் மயக்க மருந்து ஸ்ப்ரேவ ஒவ்வொருத்தன் முகத்துலையும் அடிச்சிவிட்டுடு.. மீதிய நான் பாத்துக்குறேன்.. சரியா..?”

“அதுக்கு பதிலா சாப்பாட்டுல மயக்க மருந்து கலந்துட்டா..?”

“நாம சாப்பிடாம இருந்தா அவங்களுக்கு சந்தேகம் வந்துடாதா.. அதான்..”

“ஹ்ம்ம்.. சரி சித்தப்பா..”

“அவங்களுக்கு கால் பண்ணும் போது டெலிபோன் பூத்ல இருந்து கால் பண்ணு.. சப்போஸ் அவங்க காணோம்னு போலீஸ் என்குயரி வந்தா மொபைலுக்கு வந்த கால்ஸ் தான் பர்ஸ்ட் ட்ரெஸ் பண்ணுவாங்க.. சரியா..?”

“சரி சித்தப்பா..” என்றான்.

மூர்த்தி சொன்னதை அப்படியே செய்தான் பரத். நான்கு பெரும் சாப்பிட்டு விட்டு பக்கத்துக்கு அறையில் தூங்கச் சென்றார்கள். அவர்கள் திட்டம் தீட்டி வைத்திருந்த நாள் இரவு தான் இருவரும் சம்பாஷனை நடத்தினார்கள். 12 மணிக்கு மேல் ஆகட்டும் என மூர்த்தி அலாரம் வைத்து விட்டு சற்று கண்ணயர்ந்தான்.

இருட்டை அமைதி கொஞ்சம் கொஞ்சமாக விழுங்கிக் கொண்டிருந்தது. 11.30 என அங்கிருந்த டிஜிட்டல் வாட்ச் காண்பித்த நேரம் “டங்” “டங்” என அந்த அமைதியைக் கிழிக்கும்படியான ஒலிகள் இரண்டு முறை சுவர்களில் பட்டு அதிர்ந்தது. தூங்கிக் கொண்டிருந்த பரத், மூர்த்தி இருவரின் தலைகளில் பட்ட இரும்பிக் கம்பிகள் எழுப்பிய ஒலிகள்தான் அவை. “ஆ” என அலற முடியாத படி இருவரின் வாயும் தலையனைக் கொண்டு அடைக்கப்பட்டுக் கொண்டிருந்தன. என்ன நடக்கிறது என அவர்கள் கிரக்கிப்பதற்க்குள் மீண்டும் ஒருமுறை இருவரின் தலைகளையும் பதம் பார்த்தன அந்த இரும்பிக் கம்பிகள். அங்கிருந்த அழகான வாட்ச் எழுத்துக்கள் ரத்தத்தால் மொத்தமாக மறைக்கப்பட்டன. “அவர்கள்” “அவைகள்” ஆகிவிட்டார்கள் எனத் தெரிந்ததும் வாய் மூடிய தலையணையை எடுத்தார்கள் முரளியும் விக்னேஷும். கணேஷ், கோகுல் இருவரும் மூச்சைப் பரிசோதித்து விட்டு ஆசுவாசமானார்கள். நால்வரும் மாறி மாறி ஒரு முறை பார்த்துக் கொண்டார்கள். எல்லோர் முகத்திலும் நினைத்ததை சாதித்த பெருமிதமும் இனம் புரியாத மெல்லிய பயமும் இழையோடியது.

பள்ளிக் காலம் முழுவதும் சிறிய ஊரில் கழித்த அவர்களுக்கு உடன் படித்த மாணவர்கள் தங்களில் இருந்து பெரிதாய் வித்தியாசப்படுவதாய் அவர்கள் உணரவில்லை. ஆனால் சென்னையில் கல்லூரி சேர்ந்த அவர்களுக்கு உடன் படித்த மாணவர்களின் பிராண்ட்டட் ஷர்ட் பேன்ட், காஸ்ட்லி ஷூ, பைக், ஸ்மார்ட் போன் போன்ற ஹை-பை வாழ்க்கை ஒரு வித தாழ்வு மனப்பான்மையையும் தங்களால் இப்படி வசதியாக இருக்க முடியவில்லையே என்ற ஏக்கமும் மனதை பிராண்டியது. வார விடுமுறையில் பெரிய பெரிய ஷாப்பிங் மால் சென்று வெறும் வேடிக்கை மட்டும் பார்த்துவிட்டு வருவதும் தியேட்டரில் படம் பார்க்க சென்றால் பாப்கார்ன் வாங்கி சாப்பிடுவதற்கு கூட நூறு முறைக்கும் மேல் யோசிக்க வேண்டி இருப்பதும் வசதி வாய்ப்பின் மேல் அவர்களுக்கு ஒரு வித போதையை ஏற்ப்படுத்தி இருந்தது. அதுகுறித்து ஒரு முறை விசனப்பட்டுக் கொண்டிருக்கும் போது தான் பெசன்ட் நகர் பீச்சில் இவர்களை பார்த்து வீட்டுக்கு அழைத்து வந்தான் பரத். மூர்த்தியின் வசதியான வீடும், அவர்கள் இருவர் மட்டுமே இருக்கிறார்கள் என்ற காரணமும் கணேஷை வேறு மாதிரி யோசிக்க வைத்தது. அந்த யோசனையை மறுநாள் மாலை அவன் மூன்று பேரிடமும் சொல்லும் போது முதலில் பதறிப்போனார்கள் எல்லோரும்.

“நல்லா யோசிச்சிப் பாருங்க.. எப்படியும் பரத் சித்தப்பா இருக்குற வசதியைப் பாத்தா பணம், நகைன்னு நிறைய தேறும். எல்லாத்தையும் எடுத்துட்டு 1 வாரம் லீவ் போட்டுட்டு நாம ஊருக்கு போய்டுவோம். அப்புறம் எதுவும் தெரியாத மாதிரி காலேஜ் போய்ட்டு வந்துட்டு இருக்க வேண்டியது தான். 1 மாசம் கழிச்சி இருக்குற பணத்தை வச்சி நாம ஆசைப்படுறத வாங்கிக்கலாம்.. என்ன சொல்றிங்க..” என்றான் கணேஷ்.

மற்ற மூவருக்கும் கொலை செய்வதில் பிரச்சனை இல்லை. மாட்டிக்கொள்ளாமல் எப்படி கொலை செய்வது என்பதில் தான் பிரச்சனை.

“அதப் பத்தி நீங்க கவலைபடாதிங்க.. பக்காவா நான் ஒரு பிளான் சொல்றேன்..” என்றான் கணேஷ். இப்படி இவர்கள் முடிவு செய்திருந்த இரண்டு நாள் கழித்து தான் பரத் அவர்களை சனிக்கிழமை வீட்டுக்கு சாப்பிட வரும்படி டெலிபோன் பூத்திலிருந்து தொடர்பு கொண்டான். அவனுடைய போனில் இருந்து அழைக்காமல் பூத்திலிருந்து அழைத்தது அவர்களுக்கு மிகவும் வசதியாகப் போய்விட்டது. கணேஷ் சுலபமாக பிளான் செய்தான். அவர்கள் வீட்டில் சாப்பிடுவது. சாப்பிட்டுவிட்டு தூங்கச் செல்வது. ஆனால் தூங்காமல் விழித்திருந்து அவர்கள் தூங்கிவிட்டார்கள் என உறுதி செய்து கொண்டு பையில் வைத்திருக்கும் 1 அடி நீள இரும்பிக் கம்பிகள் கொண்டு இருவர் தலையில் அடிக்க சத்தம் போடாமல் இருக்க இருவர் தலையனைக் கொண்டு வாயை மூடிக் கொள்ள வேண்டும். பிறகு பீரோவில் இருக்கும் பணம், நகை எடுத்துக் கொண்டு நடந்து நான்கு தெரு தள்ளி வந்து ஆட்டோ அல்லது இரவு நேர பேருந்து பிடித்து கோயம்பேடு அல்லது எக்மோர் ரயில் நிலையம் சென்று ஊரை நோக்கி கிளம்புவது. அவ்வளவே. கணேஷின் திட்டம் இம்மி பிசகவில்லை. 4 லட்ச ருபாய் பணமும் 18 பவுன் நகையும் எடுத்துக் கொண்டு நடந்து மெயின் ரோடு வர கோயம்பேடு செல்லும் இரவு நேர பேருந்து வந்தது. மூர்த்தியின் திட்டத்திற்கும் கணேஷின் திட்டத்திற்கும் மௌன சாட்சியாய் இருந்த இரவு கொஞ்சம் கொஞ்சமாய் கரைந்து கொண்டிருந்த போது நான்கு பேரும் விழுப்புரத்தை நெருங்கிக் கொண்டிருந்தார்கள்.

(முற்றும்)

பின்குறிப்பு: இந்த கதை தமிழ் நண்பர்கள் என்ற தளத்தில் பதியப்பட்டுள்ளது..

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *