மரணம் என்னும் தூது வந்தது.

4
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: கிரைம்
கதைப்பதிவு: July 29, 2014
பார்வையிட்டோர்: 25,968 
 

கிருஷ்ணகாந்தை மதிவாணன் தான் கொன்றிருக்க வேண்டும்.

“அந்த நாய கொல்லாமல் விடமாட்டேன்.” என்ற சொற்களில் இருந்த கோவம் தனக்கு நேற்றே புரிந்திருக்க வேண்டும் என்று நொந்து கொண்டாள் சௌமியா. இப்போது காலம் கடந்து விட்டது. நேற்று வரை உயிரோடு இருந்த கிருஷ்ணகாந்த் இன்று இல்லை. அவர் மறைவுக்குத் தான் மறைமுக காரணமோ என்ற எண்ணம் ஓடியபோது அவள் உடல் அவளை அறியாமல் ஒரு முறை சிலிர்த்தது.

சிவப்பாக மாறிய சிக்னலை கடைசி நேரத்தில் பார்த்த அவள் ப்ரேக் பிடித்து காரை நிறுத்தினாள். இன்னும் தாம்பரமே பத்து கிலோமீட்டர் இருக்கிறது. அதற்கு அப்புறம் ஊரப்பாக்கம் கூடுவாஞ்சேரி என்று நூல் பிடித்தாற்போல் இந்த நெரிசலில் மதுராந்தகம் போய் சேருவதற்கு எப்படியும் இன்னும் இரண்டு அல்லது இரண்டரை மணி நேரம் ஆகிவிடும். ஆயாசத்துடன் சிக்னலை வெறித்தன அவள் கண்கள். மனம் பின்னோக்கி ஓடியது.

சுமார் ஒரு வருடம் முன்தான் அவள் அந்த முகநூல் குழுவுக்கு அறிமுகமானாள். எல்லாம் அவள் தோழி லலிதாவால் வந்தது. இவளுக்குக் கவிதைகள் மேல் இருக்கும் தணியாத காதல் அறிந்த லலிதா, இவளுக்கு அந்தக் குழுவை அறிமுகம் செய்து வைத்தாள்.

சுமார் ஐந்நூறு மெம்பர்களைக் கொண்ட அந்த க்ரூப்பில் முதல் நாளே அவளை ஈர்த்தது கிருஷ்ணகாந்தின் கவிதைகள்.

இலக்கண சுத்தமான கவிதைகள் என்று சொல்ல முடியாது. ஆனால் மனதை ஈர்க்கும் கவிதைகள். ‘அப்பா! என்ன சொல்லாட்சி ! ‘ என்று அவர் கவிதையைப் படித்தவுடன் வியந்தாள் சௌமியா.

“விண்வெளியை நிறைத்திடும் நிலவொளி
உன் அறைக்குள் சாளரத்தின் அளவொளி ‘ என்பது தான் அவள் படித்த முதல் கவிதை. பரவுலக ஞானமாகட்டும் இகவுலக வெற்றிகள் ஆகட்டும், நம் வாங்கிக்கொள்ளும் அளவே நமக்குக் கிட்டும் என்பதை மிக அழகாக சொல்லியிருந்ததாக அவளுக்குப் பட்டது.

அதற்கப்புறம் அவர் சொந்தப் பக்கத்துக்குப் போய் பார்த்தாள். வியந்தாள். கவிதைகள் குப்பல் குப்பலாகக் கொட்டிக் கிடந்தன. எதை படிப்பது எதை விடுவது என்று தெரியாமல் திக்குமுக்காடினாள்.

மனிதர் இன்ன சப்ஜெக்ட் என்று இல்லாமல் எல்லாவற்றிலும் கை வைத்திருந்தார். காதல், காமம், ஞானம், இயற்கை என்று கவிதைகள் எழுதிக் குவித்திருந்தார். அதிலும் குறிப்பாக அன்றைய இளம் திரை நடிகை ஒருத்தியைப் பற்றி அவரது கவிதைகள் காமத்தில் முக்கி எடுக்கப்பட்டவை.

மற்றவர் எப்படியோ தெரியாது, சௌமியாவுக்கு அவர் கவிதைகளைப் படிக்கும் போது, அவர் சொற்களாலேயே இவளைச் சீண்டுவது போலிருக்கும்.

அவரின் கவிதைகளை நன்கு ஆராய்ந்து கமெண்டு போட்டாள். விமர்சனம் செய்தாள். விவாதம் செய்தாள். ஒரு நாள் அவர் அனுப்பிய பிரெண்ட் ரிக்வெஸ்ட் வந்தது.

அதை மிகுந்த சந்தோஷத்துடன் ஏற்றுக் கொண்டாள். அதன் பின்னர் வாத விவாதங்கள் விமர்சனங்கள் ப்ரைவேட் மெசேஜில் தொடர்ந்தன.

எப்போது, எப்படி என்று அறியாமலேயே அவர் மேல் காதலானாள்.

அப்புறம் ஒரு நாள் அவர்கள் குழுவில் அவரது கவிதைத் தொடர் ஒன்று வந்தது. ‘சிவப்புப் பின்னணிக் கவிதைகள்’ என்ற தலைப்பிட்டு வறுமையாலும், வேறு பல காரணங்களாலும் விபசாரத்தில் தள்ளப்பட்ட அபலைகளின் கண்ணீர் கதைகளை கவிதை வடிவில் தந்திருந்தார்.

பலர் அதை எதிர்த்தாலும் சௌமியா அதனை மிகவும் பாராட்டினாள். அந்தப் பாராட்டு மெசேஜில் தன் செல்போன் நம்பரையும் தந்தாள்.

அவள் எதிர்பார்த்த மாதிரியே அடுத்த நிமிடத்தில் கிருஷ்ணகாந்திடமிருந்து போன் வந்தது.

ஆனால் அவள் எதிர்பார்க்காத ஆண்மையும் ஆளுமையும் அந்தக் குரலில் இருந்தது. சொற்களால் அவளைக் கட்டிப்போட்டார். ஒரு மணி நேரம் போனதே தெரியவில்லை.

கவிதைகளுடன் காதலான தனக்கு இன்னும் கல்யாணம் ஆகவில்லை என்பதை இவள் கேட்காமலேயே சொன்னார்.

அதற்கு பதிலாக சௌமியாவால் ‘ம்ம்ம்ம்’ என்று முனக மட்டுமே முடிந்தது. அன்று அந்த போன்கால் முடிந்தபோது சௌமியா கிட்டத் தட்ட உச்சத்தை அடைந்திருந்தாள்.

மறுநாளில் இருந்து அவர்கள் இருவரும் உரையாடுவது அன்றாட வழக்கமானது. ‘whatsapp’ இவர்களுக்கென்றே உருவானது போல ஆனது. முகநூலில் பதிவதற்கு முன் இவளுக்குத் தன் கவிதைகளைப் பகிர்ந்தார். இவள் சரி பார்த்த பின்னரே அவர் அவற்றைப் பதிந்தார்.

இப்படி இருக்கும் போது இத்தனைக்கும் காரணமான லலிதா மீண்டும் ஒரு பூகம்பத்தைக் கிளப்பினாள்.

“ டீ! அந்த ஆள் கிருஷ்ணகாந்த் சுத்த fraud. வேற ஒருத்தர் எழுதின கவிதைகளை தன்னோடதுன்னு போட்டுக்கிட்டு இருக்கார். நீயும் பைத்தியம் மாதிரி பாராட்டிக் கமெண்டு போடற. நான் ஒரு லிங்க் உன் மொபைல்ல அனுப்பிச்சி இருக்கேன். அதைப் பாரு. உண்மை தெரியும்” என்று சொன்னாள்.

பதட்டத்துடன் அந்த லிங்க் சென்று பார்த்த சௌம்யா உறைந்தாள்.

லலிதா சொன்னது அத்தனையும் உண்மை. மதிவாணன் என்ற ஒருவரின் blog அது. கிருஷ்ணகாந்த் தனது என்று போட்டிருந்த அத்தனைக் கவிதைகளும் அங்கு இருந்தன.

சௌமியாவுக்கு காலடியிலிருந்து தரை நழுவியது போலிருந்தது.

‘சே! எப்படி ஏமாற்றி விட்டான் பாவி!’ என்று கொதித்தாள். அந்த மதிவாணன் email அந்த blogல் குடுத்திருந்தது. உடனே அதைத் தொடர்பு கொண்டு நடந்து கொண்டிருக்கும் திருட்டைப் பற்றி அவருக்குத் தெரிவித்தாள். தன் முகநூல் குழு லிங்க் அனுப்பி வைத்தாள்.

அடுத்த நாள் அவளுக்கு மதிவாணனிடம் இருந்து ஒரு மெயில் வந்தது. மனிதர் மிகவும் கொதித்துப் போய் எழுதி இருந்தார். அந்த கிருஷ்ணகாந்தைத் தொடர்பு கொண்டதாகவும் அவர் மிகவும் மோசமான முறையில் தன்னைப் பேசியதாகவும் குறிப்பிட்டு இருந்தார்.

‘உன்னால் முடிஞ்சதப் பாத்துக்கடா! ஆனா எதுனாச்சியும் செஞ்சி சௌமியாவுக்கும் எனக்கும் நடுவுல பிளவு ஏற்படுத்த முயற்சி செஞ்சின்னா நான் பொல்லாதவன் ஆகிடுவேன்’ என்று மிரட்டியதாவும் சொன்னார்.

கடைசியாக அவர் எழுதியிருந்த வார்த்தைகள் தான் முதலில் சொன்னது.
“என் படைப்புகளையாத் திருடிய அந்த நாய நான் கொல்லாமல் விடமாட்டேன் ‘.

சௌமியா அதை பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. அவள் எண்ணமெல்லாம் கிருஷ்ணகாந்திடம் இருந்து எப்படி பிரிவது என்பது பற்றியே இருந்தது.

அன்று கிருஷ்ணகாந்த் பல முறை போன் செய்தார். ஆனால் இவள் எடுக்கவில்லை. அப்புறம் சலித்துப்போய் ப்ரைவேட் மெசேஜ் செய்தார். தான் எந்தத் தவறும் செய்யவில்லை என்றும், கவிதைகளைத் திருடியது மதிவாணன் தான் என்றும், தன்னிடம் அதற்காக proof இருக்கிறது என்றும், மாலையில் அதை எடுத்துக் கொண்டு இவள் அலுவலகம் வருவதாகவும் எழுதி இருந்தார்.

சௌமியாவுக்கு நம்ப முடியவில்லை தான். ஆனால் காதல் கொஞ்சம் நம்பித் தான் பாரேன் என்றது. சரி என்று சொன்னாள்.

ஆனால் மாலையில் அவர் வரவில்லை. சௌமியா அவருக்குக் கால் செய்தாள். போன் சென்றதே ஒழிய அவர் எடுக்கவில்லை. அன்று இரவுக்குள் ஒரு பத்து முறை செய்திருப்பாள். ஆனால் அவர் எடுக்கவில்லை.

களைத்து குழம்பித் தூங்கிப் போனாள். காலை சரியாக ஆறு மணிக்கு கிருஷ்ணகாந்திடம் இருந்து கால்.

ஒரு கலந்த உணர்வுடன் எடுத்துப் பேசினாள். எதிர்முனையில் “ யாரு? சௌமியா மேடமா?” என்றது ஒரு விறைப்பான குரல்.

“ஆமாம்”

“ நான் மதுராந்தகம் போலீஸ் ஸ்டேஷனில் இருந்து இன்ஸ்பெக்டர் தனபால் பேசுறேன் மா. நீங்க எங்க இருக்கீங்க? கிருஷ்ணகாந்துக்கு என்ன வேணும்? உங்க நம்பரில் இருந்து நிறைய மிஸ்டு கால் வந்திருக்கவே கூப்பிட்டேன்”

“ சார், அவருக்கு என்ன ஆச்சு? அங்க போலீஸ் எதுக்கு வந்திருக்கு? நான் சௌமியா. சென்னையில் இருந்து பேசறேன். அவரோட முகநூல் பிரெண்ட்”

“ஒ! அப்படியா? I am sorry to inform you Mr. Krishnakanth is no more. ஆனால் சில விஷயங்களைத் தெளிவு படுத்திக்கொள்ள வேண்டும். தயவு செய்து இங்கு வர முடியுமா? மதுராந்தகம் வந்து போலீஸ் ஸ்டேஷன் வந்துடுங்க. அங்கிருந்து ஒரு ஆள் உங்கள இங்க கூட்டி வருவார்”

“சரி சார்” என்று சொன்னதன் விளைவுதான் இந்தப் பயணம்.

எண்ணங்களில் இருந்து அவள் விடுபடவும் மதுராந்தகம் வரவும் சரியாக இருந்தது. போலீஸ் ஸ்டேஷனை விசாரித்துப் போய் சேர்ந்தாள். அங்கே இருந்த ஒருவரிடம் விசாரித்த போது அவர் இவள் காரிலேயே ஏறிக் கொண்டு கிருஷ்ணகாந்த் வீட்டுக்குக் கூட்டிச் சென்றார்.

தனபால் அவளுக்காகக் காத்திருந்தார். உள்ளே சென்று உடலைக் காட்டினார்.
கிருஷ்ணகாந்த் இறந்தும் கூட ஒரு ஆளுமையுடன் இருந்தார்.

மேலும் அங்கு நிற்க முடியாமல் சௌமியா வெளியே வந்தாள். தொடர்ந்து வந்த தனபால் “இப்ப சொல்லுங்க” என்றார்.

தன்னைச் சுதாரித்துக் கொண்ட சௌமியா , அவருடன் எல்லாவற்றையும் சொன்னாள். மதிவாணன் பற்றியும் சொன்னாள். அவர் அனுப்பிய மெயிலையும் காட்டினாள்.

கேட்டுக் கொண்டிருந்த தனபால் நெற்றி சுருங்கியது. ஒரு வித கலவரத்துடன் அவளை தன் ஜீப்புக்கு அழைத்துச் சென்றார். அங்கு முன்சீட்டில் ஒரு லேப்டாப்.

“இது கிருஷ்ணகாந்த் லேப்டாப். ஆனா நீங்க சொல்ற email இதிலிருந்து தான் போயிருக்கு. பாருங்க, ஒரு email, ரெண்டு browserல ஒரு blogம் ஒரு facebook பேஜும் திறந்திருக்கு. Facebook பேஜ் கிருஷ்ணகாந்துடையது. Blog மதிவாணனுடையது. ஒண்ணும் புரியலையே” என்றார்.

திடீரென்று சௌமியாவுக்கு எல்லாம் புரிந்த மாதிரி இருந்தது. அப்போது பிரேத பரிசோதனை செய்ய உடலை எடுக்க வந்திருந்த மெடிக்கல் எக்ஸாமினர் தனபாலை நெருங்கினார்.

“தனபால், கொஞ்சம் சிக்கலான கேசு மாதிரி தெரியுது. இனிஷியல் எக்ஸாமிநேஷன்ல இது self strangulation மாதிரி தோணுது. முழு விவரம் பரிசோதனை முடிஞ்சப்பறம் சொல்றேன்” என்று சொன்னார்.

தனபாலுக்கும் புரிந்து விட்டது.

– ஜூலை 2014

Print Friendly, PDF & Email

4 thoughts on “மரணம் என்னும் தூது வந்தது.

  1. ஒருவரே இரண்டு பெயரில் செயல்பட்டதால் ஏற்பட்ட சிக்கல்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *