கனவு துலங்கிய கொலை

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: கிரைம்
கதைப்பதிவு: June 21, 2018
பார்வையிட்டோர்: 17,538 
 
 

இன்ஸ்பெக்டர் சிவலிங்கத்தை (சிவா) தன் அலுவலகத்திற்கு உடனே வரும்படி யாழ்ப்பாணம் போலீஸ் அத்தியட்சகர் (Superintendent) ஹரி வாட்சன் என்பவரால் அவசரமாக அழைக்கப்பட்டார். பறங்கி அதிகாரிகள் இலங்கை போலீசில் வேலை செய்த காலத்தில் ஹரி வாட்சனும் அவர்களில் ஒருவர் . வாட்சன் கண்டிப்பான அதிகாரி. இன்ஸ்பெக்டர் சிவா எந்தவொரு கடினமான கொலை வழக்கையும் கையாளக் கூடியவர் என்று மிஸ்டர் ஹரி நம்பியதால் அவருக்கு இன்ஸ்பெக்டர் சிவா மேல் நல்ல மரியாதையும் நம்பிக்கையும் இருந்தது. ஒரு தொழிலதிபர் தங்கராஜா மற்றும் அவரது மகன் ஜெயராஜா கொலை வழக்கில் கொலையாளிகள் அவர்களை கண்டுபிடித்த கெட்டித்தனம் இன்ஸ்பெக்டர் சிவாவுடையது.

அளவெட்டி கிராமம் ஒன்றில் ஒரு சாதி சம்பந்தப்பட்ட பிரச்சனையில் ஒரு சாரயக் கடை உரிமையாளர் மார்கண்டு மற்றும் அவருடைய ஒரே மகள் வனிதாவின் படுகொலை வழக்கை இன்ஸ்பெக்டர் சிவா கையாண்பு வெற்றியும் கண்டவர்..

சில நேரங்களில் கொழும்பில் உள்ள பொலிஸ் தலைமையகம் கடினமான கொலை வழக்குகளைத் தீர்ப்பதில் சிவாவின் உதவியை நாடியது. ஸ்காட்லாந்தில் யார்ட் (Scotland Yard) பொலிஸில் ஆறு மாதங்களுக்கு இங்கிலாந்தில் சிவா பயிற்சியளிக்கப்பட்டார். மேலும் அவருக்கு நகைச்சுவையுணர்வு உண்டு. விசாரனையின் பொது பகிடி விட்டு விசாரிப்பார். அவர் மனதில் என்ன இருக்கிறது என்று விசாரணைக்கு உற்பட்டவர் அறிவது கடினம்

***

இன்ஸ்பெக்டர் சிவா யாழ்ப்பாண போலீஸ் சுப்ரீண்டேண்டன் (Superintendent) ஹரி வாட்சன் ஆபீஸ் அறைக்கதவை தட்டினார்

” ப்லீஸ் கம் இன் ( Please come in ) “. ஹரி இடம் இருந்து அழைப்பு வந்தது

மரியாதையோடு சிவா அறைக்குள் நுழைந்தார். ஹரி வாட்சன் பெயர், .பெற்ற பட்டம், பதவி பதிவு செய்த ஒரு பெயர் பலகை அவர் மேசையில் இருந்தது . ஹரி ஒரு பறங்கி அதிகாரி என்பதால் , அவருக்கு கீழ் வேலைசெய்தவர்கள் மத்தியில் அவருக்கு சிறப்பு மரியாதை இருந்தது.

” சிவா அமரும், உம்மைத்தான ஒரு முக்கிய கேஸ் விசயமாக எதிர் பார்த்துக் கொண்டு இருந்தனான். இது ஒரு சுவாரஸ்யமான கொலை வழக்கு. நீர் திறமையான பயிற்சி பெற்ற துப்பறியும் அதிகாரி என்று நான். அறிவேன், இந்த பைலில் (File) கேஸ் பற்றிய முழு விபரம் இருக்கிறது” பைலை சிவாவிடம் கொடுத்தபடி ஹரி சொன்னார் .

“சேர். தயவுசெய்து வழக்கைப் பற்றி சுருக்கமாக சொல்லுங்கள். கொலை பின்னணியை அவிழ்ப்பதற்கும், கொலைகாரர்களை தெளிவான ஆதாரங்களுடன் அடையாளம் காட்டுவதற்கும் முழு நம்பிக்கையுடன் நான் விசாரணையை மேற்கொள்வேன். எனக்கு கான்ஸ்டபிள் பொன்னையா உதவியாளராக தாருங்கள். இரண்டு கேஸ்களில் என்னோடு வேலை செய்து குற்றவாளிகளை காண்டு பிடிக்க அவர் உதவி இருக்கிறார்.

”அது பிரச்சனை இல்லை. விரைவில் கொலையாளிகளை கண்டு பிடியும் உயர் அதிகாரிகள் இந்த கேஸ்சில் அக்கரை காட்டுகிறார்கள்” : ஹரி சொன்னார்

“ ஊர் வாசிகள் என்னோடு விசாரணையின் போது உதவுவார்கள் என்ற நம்பிக்கை எனக்கு உண்டு சேர்”

“எனக்குத் தெரியும், அதனால்தான் நான் உம்மை அழைத்தேன். கிளிநொச்சியில் இருந்து பூனகரிக்கு போகும் பாதையில் மூன்று மைல் தூரத்தில் உள்ள ஒரு ஊர் ருத்திரபுரம் அக் கிராமத்தில் நடந்த இந்த கொலை வழக்கு தொடர்பாக ஒரு உயர் ஜாதி பெண்ண ஊர் வாசிகள் சந்தேகிக்கப்படுகின்றனர். கொலை செய்யப்பட்டவர் 48 வயதுடைய கணேஷ சர்மா ஐயர். ருத்திரபுரம் பிள்ளையார் கோவிலின் பிரதம உரிமையாளர் அவரை சில நாட்களாக காணவில்லை என்று அவரின் மனைவி மோகனாம்பாள் போலீசில் முறையிட்டுள்ளார். தன் கணவன் சொந்த ஊரான நெடுந்தீவுக்கு அவரின் தந்தை சிவசர்மாவை சந்திக்கப் போனவர் திரும்பி வரவில்லை என்று கிளிநொச்சி பொலீசுக்கு மோகனாம்பாள் முறையிட்டார். . கணேஷ சர்மா வின் தந்தை சிவசர்மா. தன் மகன் தன்னிடம் வரவில்லை என்று போலிசுக்கு சொல்லிக் கவலை பட்டு முறையிட்டுள்ளார் அவருக்கு கணேஷ ஐயர் ஒரு மகன் மட்டுமே . அது சரி சிவா, ருத்திரபுரம் எங்கே இருக்கிறது என்று உமக்கு தெரியுமா “? ஹரி கேட்டார் .

“தெரியும் சேர். கிளிநொச்சி பிரதேசத்தில் உள்ளது. இது முக்கியமாக காடுகளாலும் வயல்களாலும் சூழப்பட்ட கிராமம் . அந்த கிராமத்தில் சக்தி வாய்ந்த ஒரு பிள்ளையார் கோவில் உள்ளது. நான் அந்த பிள்ளையார் கோவிலுக்கு ஒரு முறை போய் வந்திருக்கிறேன் . அக் கிராம மக்களுக்கு அக்கோவிலின் விசேஷ சக்தி பற்றித் தெரியும் .. ”

சிவாவிடம் ருத்திரபுரம் பற்றிய விபரம் சொன்ன போது ஹரி புன்னகைத்தார் . ” நீர் சரியான முறையில் வழக்கை அணுகுறீர்கள் என்று நான் நினைக்கிறேன். உங்கள் உதவியாளர் கொன்ஸ்டபிள் பொன்னையாவோடு பைலை படிக்கவும். வழக்கின் உள்ளடக்கங்கள் மிகவும் ரகசியமாக வைக்கப்பட வேண்டும். கணேஷ் ஐயரின் மறைவு தொடர்புள்ள சந்தேக நபர்களை நீங்கள் விசாரிக்க வேண்டும். . அவர்கள்மூலம் வழக்கில் சில உண்மைகள் தெரிய வரும். முதலில் முக்கியமாக .மறைந்த கணேஷ ஐயர் இறந்து இருந்தால் அவர் உடலைக் கண்டு பிடித்து பிரேத பரிசோதனை நடத்த வேண்டும். அப்போது தான் அவரின் மறைவுக்கு காரணமும் அவர் கொலை செய்யப் பட்ட விதமும் தெரிய வரும்.

“சேர், நான் முன்பு கையாண்ட, ஜாதி பிரச்சினை சம்பந்தப்பட்ட வழக்கு. தீர்ப்பு இறுதியாக குற்றவாளிகளுக்கு ஆயுள் தண்டனையுடன் முடிந்தது. ஒரு கிராமத்தில் இந்த கொலை நடந்தது என்றால், அது பல மக்களை விசாரணை செய்யப்பட வேண்டும். ருத்திராபுரம் கிராமவாசிகள் பல்வேறு விளக்கங்கள் தருவார்கள். வழக்கை திசை திருப்பப் முயற்சிப்பார்கள் . பலர் கிசுகிசுக்களில் வாழ்கின்றனர். அவர்கள் தாங்கள் பொலிஸாரால் விசாரணை செய்யப்படுகிறார்கள் என்பதை அறிந்தால் உண்மை சொல்லப் பயப்படுவார்கள்”

“. அந்த கிராமத்தின் சேர்மன் சுந்தரத்தையும் கிராம அபிவிருத்தி அதிகாரி ராஜனையும், பள்ளிகூட தலைமை ஆசிரியர் சிவராசனையும், நான் ஏற்கனவே கூப்பிட்டு விசாரித்ததில் கிராமவாசிகளின் மனநிலையைப் பற்றி அவர்கள் என்னிடம் கூறினார்கள். கிராமத்துக்கு இந்த கொலை அவமானத்தை கொண்டுவந்து விட்டதாம். வழக்கை நன்கு படிக்கவும். இந்தக் கொலை, கிளிநொச்சி பகுதியில் உள்ள ஒரு கிராமத்தில் நடந்த முதல் கொலை கேஸ் . உமது புலன் விசாரனை வெற்றியாக அமைய வாழ்த்துகிறேன். “, அவர் சிவாவுக்கு கைகுலுக்கி வழியனுப்பினார்

****

கேஸ் பைலை சிவா முழுமையாக படித்து முடித்தபின் அதிர்ச்சியடைந்தார். கணேஷ் சர்மா .திட்டமிட்டு அவருக்கு தெரிந்தவர்களால் கொலை செய்யப்பட்டு அவரின் உடல் போலீஸ் கண்டு பிடிக்கமுடியாதவாறு காட்டுக்குள் மறைக்கப் பட்டிருக்கக் கூடும். அப்படி நடந்திருந்தால் இவ்வளவு நாட்களில் மிருகங்களும் பறவைகளும் உடலை ருசி பார்த்து இருக்கும். அதனால் துர்மணம் வந்திருக்கலாம். அந்தப் பெரிய காட்டில் உடலை எப்படி தேடுவது. ஒரு வேளை உடலை புதைத்து இருந்தால் புதைத்த இடத்தை தேடிக் கண்டு பிடிப்பது கடினம். பக்கத்தில் முதலைகள் உள்ள குளத்திலும் உடலை போட்டிருக்கலாம் . கணேஷ் சர்மாவின் உடலை மறைக்க கொலை செய்தவர்கள் பல வழிகளை கையாண்டு இருக்கலாம் என்று இன்ஸ்பெக்டர் சிவாவும் கான்ஸ்டபிள் பொன்னையாவும் தங்களுக்கு பேசிக் கொண்டனர் .

“சேர் ஒரு வேளை குருக்களை யாராவது பணத்துக்கு கடத்தி சென்று இருப்பார்களோ ”? பொன்னையா தன் சந்தேகத்தை வெளியிட்டார்.

“ இருக்காது பொன்னையா .அப்படி இருந்தால் இந்த சில நாட்களுக்குள் பிணையப் பணம் கேட்டு யாராவது செய்தி அனுப்பி இருப்பார்கள்” என்றார் சிவா.

இன்ஸ்பெக்டர் சிவா ஒரு திறமையான துப்பறியும் ஆய்வாளராக இருந்தார். ஸ்ரீலங்கா குற்றவியல் சட்டத்தின் நுணுக்கங்களை தனது விரல் நுனியில் அவர் அறிந்திருக்கிறார்.

***

சிவா பொன்னையாவோடு கடவுளின் ஆசீர்வாதம் பெற ருத்திரபிரம் பிள்ளையார் கோவிலுக்கு போனார். அந்த கோவில் பல ஆண்டுகளுக்கு முன்னர் கட்டப்பட்ட அதிசயங்கள் பல செய்த கோவிலாக இருந்தது. யானைகள் கிராமத்தில் நுழைந்து விவசாயத்தை அழிப்பதினால் . கணபதிக்கு கோவில் அமைத்து அவ்வூர் மக்கள் பொங்கி வணங்கினார்கள்

இன்ஸ்பெக்டர் சிவாவும், கான்ஸ்டபிள் பொன்னையாவும் ஆலய வளாகத்தில் கொலை நடந்திருக்கலாம் என சந்தேகிக்கப்பட்டதால் கோயிலுக்குள் விசாரணை நடத்தினார்கள்

. கணேஷ் சர்மாவின் உடலைத் தேடி மரங்கள் மற்றும் புதர்களால் சூழப்பட்ட காட்டு வயல் பகுதியான கோவில் காணியில் பொன்னையாவுடன் சிவா தேடினர். அவர்கள் இருவரோடு சேர்ந்து கோவில் வளவைப் பராமரிக்கும் வேலாயுதமும் அவனின் உதவியாளன் செல்லப்பாவும் கிராமத் தலைவர் சுந்தரமும். கிராம அபிவிருத்தி அதிகாரி ராஜன். பாடசாலை தலைமை ஆசிரியர் சிவராசன் . இன்னும் சில ஊர் வாசிகளும் தேடினார்கள். .

***

முதலில் கணேஷ் சர்மாவின் மனைவி மோகனாம்பாளிடம் சிவா குறுக்கு விசாரணையை ஆரம்பித்தார் ஆரம்பிக்க முன் மோகனாம்பாளை மேலும் கீழுமாக ஒரு நிமிடம் கண்ணோடம் விட்டார். ஐயர் அம்மாவின் அழகு அவரைய் பிரமிக்க வைத்தது நான்கு பிள்ளைகளுக்கு தாய் என்று மோகனாம்பாள் அம்மாவை பார்த்ததும் அவரால் நம்ப முடியவில்லை. ஐயர் அம்மாவுக்கு துரு துருத்த கண்கள். சிவப்பு மூக்குத்தி போட்டிருந்தாள். . கழுத்தில் தாலியும் ஒரு ஒரு சங்கிலியும், காது இரண்டிலும் சிவப்புக் கற்கள் பதித்த தோடுகள். . கையில் ஒரு சோடி தங்க வளையல்கள். நெற்றியில் ஒரு .குங்குமப் பொட்டு. அழகிய உதடுகள். சந்தன நிற உடல். ஒரு நிமிடம் இன்ஸ்பெக்டர் சிவா மோகனாம்பாளின் அழகில் தன்னை மெய்மறந்து நின்றார் .

பக்கத்தில் இருந்து குறிப்பு எடுத்த பொன்னையா “சேர் விசாரணையை ஆரம்பிப்போமா” என்று சொன்ன போது சிவா சுய நிலைக்கு வந்தார்

“உங்கள் பெயர் தானே மோகனாம்பாள் கணேஷ சர்மா”

“ஓம் சேர் :

“ நீங்கள் தானே கிளிநொச்சி போலீசில் உங்கள் கணவர் கணேஷ சர்மாவை சில நாட்களாக காணவில்லை என்று முறையிட்டீர்கள்”?

“ஓம் சேர் “

“உங்களுக்கு எத்தனை வயசு”?

”எனக்கு இப்ப வாசு இருபத்தி எட்டு”

“:எப்போ அம்மா உங்களுக்கு திருமணம் நடந்தது”?

“பத்து வருஷங்களுக்கு முன் இராமேஸ்வரத்தில்”

“நீங்கள் பிறந்தது இராமேஸ்வரத்திலா “?

“ஓம் சேர் “

“அதெப்படி நெடுந்தீவில் பிறந்த உங்கள் கணவர் கணேஷ சர்மா இராமேஸ்வரத்தில் உங்களைத் திருமணம் செய்தார்”?

“ அவரின் இனத்தவர் ஓருவரின் திருமணத்துக்கு அவர் இராமேஸ்வரம வந்திருந்த போது என்னைக் கண்டு. விரும்பி என் பெற்றோரிடம் என்னைத் திருமணம் செய்யக் கேட்டார். அவர்களும் சம்மதித்து என்னை அவருக்கு திருமணம் செய்து வைத்தனர். அதன் பின் நான் அவரோடு நெடுந்தீவு வந்து அங்கு இரு வருஷம் வாழந்து அதன் பிறகு இங்கு ருத்திரபுரம் பிள்ளையார் கோவிலுக்கு அவரோடு வந்திட்டன்”

“உங்களுக்கு எத்தனை பிள்ளைகள்?

“ எனக்கு நாலு பிள்ளைகள் மூத்தவள் என் மகள் பரமேஸ்வரி அவளுக்கு .ஒன்பது வயது: மற்ற மூன்றும் ஆண் பிள்ளைகள்”.

“உங்கள் கணவர் காணமல் போகும் பொது அவருக்கு என்ன வயசு இருக்கும்”?

“ நாற்பத்தி எட்டு”

”உங்கள் தாம்பத்திய வாழ்க்கை எப்படி இருந்தது”?

:”மகிழ்ச்சியாக இருந்தது சேர். நான் கேட்டதை அவர் வாங்கிக் கொடுத்தார். இதோ இந்த நகைகள் எல்லாம் அவர் எனக்கு வாங்கி கொடுத்தவை ”

”உங்கள் குடும்பத்தில் சண்டை சச்சரவுகள் ஏதும் இருக்கவில்லையா “?

“இல்லை சேர் “

“அவர் குடித்துப் போட்டு வந்து உங்களை அடித்தது உண்டா”?

“ அவர் பிராமணர், அதனால் குடிப்பதிலை சேர்:”

“உண்மைதான் சொல்லுகிறீர்களா”?

“ உண்மை தான் சொல்லுறன் சேர். ஒரு வேலை எனக்குத் தெரியாமல் அவர் குடித்திருக்கலாம் ” :

“கோவில் வளவுக்குள் உள்ள உங்கள் வீட்டில் எத்தனை அறைகள் உண்டு

“இரண்டு அறைகள். ஒரு ஹால். ஒரு சமையல் அறை ஒரு ஸ்டோர் அறை. இரண்டு வாசல்கள் ”

“நீங்கள் எப்படி குடும்பத்தில் அறைகளை பங்கு போடுவீர்கள் “

” நானும் கணவரும் ஒரு அறையைப் பாவிப்போம் பிள்ளைகள் இரண்டாம் அறையைப் பாவிப்பார்கள்” :

“அவர் காணமல் போனது எப்படி என்று சொல்ல முடியுமா”?

“:சென்ற வெள்ளிக்கிழமை பூசை முடித்து சனிக்கிழமை காலை தன் தந்தையை காணி விசயமாக் சந்தித்துப் பேச நெடுதீவுக்குப்போய் திங்களுக்கு முன் வருவாதக சொல்லிப் போனவர், திரும்பிவரவில்லை. நான் செவ்வாய்கிழமை என் மகளோடு போய் கிளிநொச்சி போலீசில் முறையிட்டேன்”

“போலீசில் முறையிட முன் உங்கள் கணவரின் தந்தைக்கு போன் செய்து அங்கு உங்கள் கணவர் வந்தாரா என்று நீங்கள் விசாரிதீர்களா ”?

“ ஓம் விசாரித்தேன் சேர். ஒரு வேளை பணத்தோடு ஊருக்கு போன அவரை யாராவது கடத்தி இருக்கலாம் எண்ட பயத்தில் . போலீசில் முறையிட்டேன்.

உங்கள் கோவில் வளவையும் கோவிலையும் துப்பரவு செய்வது, மரக்கரித் தோட்டத்தையும் பசு மாடுகளையும் கவனிப்பது. . கோவில் பிரசாதம் செய்வது யார் “?

“அந்த வேலைகளுக்கு என் கணவர் இண்டு பேரை வேலைக்கு அமர்த்தி இருந்தார்”

“அவர்களின் பெயர்களை சொல்ல முடியுமா”?

“ அவர்களில் ஒருவர் வேலாயுதம் மற்றவர் செல்லப்பா . அந்த இருவரில் பொறுப்பானவர் வேலாயுதம் “:

“ எவ்வளவு காலம் வேலை செய்கிறார்கள்”? சிவா கேட்டார்

“எனக்குத் தெரிந்த மட்டில் நான் ருத்திரபுரம் வந்த காலத்தில் இருந்து வேலை செய்கிறார்கள். முதலில் தனியாக வேலாயுதம் வேலை செய்து, இரண்டு வருடங்களுக்கு பின்னர் தன் உறவினன் செல்லப்பாவை உதவிக்கு வைத்து கொண்டார்”

“ நான் உங்கள் வீட்டை பார்க்கலாமா”

“நிட்சயமாக சேர்”

சிவாவையும். பொன்னையாவையும் மோகானம்பாள் அழைத்து சென்று கோவில் வளவுக்குள் உள்ள தன் வீட்டைக் காட்டினாள். கணேஷ் சர்மாவின் திருமணப் படம் சுவரில் இருந்தது. அதில் தொற்றறமளித்த மோகானம்பாள் பதினெட்டு வயதில் எவ்வளவு அழகி என்பது தெளிவாக சிவாவுக்கு தெரிந்தது. அவளின் அழகில் மயங்கி கணேஷ் சர்மாஅவளைத் திருமணம் செய்தார் என்று அவருக்கு தெரிய வெகு நேரம் எடுக்கவில்லை

வீட்டுக்கு வெளியே வந்ததும் இரகசிமாக “சார் அழகு இருக்கும் இடத்தில ஆபத்தும் இருக்கும்.” என்றார் பொன்னையா

”இருக்கலாம். ஒருவரின் தோற்றத்தைக் கண்டு நாம் முடிவு எடுக்கக் கூடாது பொன்னையா. மேலும் விசாரணை களைத் தொடர்ந்து மர்மத்தை கண்டு பிடிப்போம்” என்றார் சிவா

****

அடுத்தது சிவா குறுக்கு விசாரணை செய்தது வேலாயுதம், செல்லப்பா,. சுந்தரம் , கிராம அபிவிருத்தி அதிகாரி ராஜன் ஊர் பாடசாலை தலமை ஆசரியர் சிவரராசன் மற்றும் கள்ளுக் கொட்டில் வைத்திருந்த பொன்னுத்துரை. இறுதியாக கணேஷ் சர்மாவின் தந்தை சிவசர்மா ஆகியோரை சிவா விசாரணை செய்தார். விசாரணையில் இருந்து கணேஷ் சர்மாவுக்கு குடிப்பழக்கம் இருந்ததையும் அவர் வேலாயுதம் செல்லப்பா ஆகிய இருவரோடு சேர்ந்து குடித்ததை கண்டதாக பொன்னுத்துரை சொன்னான். கணேஷ் சர்மாவின் மகள் பரமேஸ்வரி தன் பாடசாலலையில் படிக்கும் படு சூடியான பெண் என்று சிவராசன் சொன்னார். அவள் ஒரு நாள் தன் ஆபிசுக்குள் வந்து வேலாயுதத்தொடு தந்தை இல்லாத நேரம் தாயின் கள்ள உறவை பற்றியும், இரவில் தந்தை படுக்கைக்குப் போன பின் அடி வளவு கொட்டிலடியில் அவர்கள் சந்தித்து பேசியதை தான் கண்டதாகவும் எனக்கு சொன்னாள். தன் தந்தை கோவில் விசயமாக யாழ்ப்பாணம் போயிருக்கும் நேரம் பார்த்து வேலாயுதம் தன் வீட்டுக்கு வந்து பின் கதவை தட்டி உள்ளே வந்து தன் தாயின் அறைக்குள் போய் கதவை மூடிய பின் இருவரும் வெகு நேரம் சிரித்துப் பேசியதைக் கேட்டதாக தனக்கு சொன்னதாக சிவராசன் சிவாவுக்கு சொன்னார்.. மோகனாம்பாளுக்கும் வேலாயுதத்துக்கும் கள்ளக் காதல் உறவு இருந்தாக ஊர் வாசிகள் பேசியதாக சுந்தரமும், ராஜனும் சொன்னார்கள் கணேஷ் சர்மாவும் . வேலாயுதமும் செல்லப்பாவும் சில நேரம் ஒன்றக அடிவளவுக்குள் இருந்த குடிசைக்குள் இருந்து குடிப்பதைப் பலர் கண்டதாக சொன்னார்கள். அதை பொன்னுத்துரையும் உறுதி செய்தார்

****

வேலாயுதத்தை இன்ஸ்பெக்ட்ர் சிவா அடி வளவுக்குள் இருந்த குடிசைக்கு அழைத்து சென்று விசாரித்தார். அக்குடிசைக்கு ஐம்பது யார் தூரத்தில் காட்டின் ஓரமாக . குப்பை, மாட்டு சாணம் குவிக்கப்பட்டிருந்தது

“உன் பெயர் தானே வேலாயுதம்”?

“ஓம் சார்.”

“ உனக்கு எத்தனை வயசு “?

:”முப்பத்திரண்டு சேர்”

“ சுமார் ஆறடி உயரம் உள்ள உன் உடலை இவ்வளவு கட்டுமஸ்தான தேகமாக வைத்திருக்கிறாயே அது ஏப்படி முடிகிறது ”?

“தினமும் தேகப்பியாசம் செய்வேன். ஒரு மைல் தினமும் ஓடுவேன் சேர்”

“உனக்குக் கலியாணம் ஆகிவிட்டதா”?

”ஓம் சேர்.எனக்கு இரண்டு பிள்ளைகள் உண்டு” .

”உன் வீடு எங்கே இருக்கு”?

“கிளிநோச்சியில் . தினமும் என் சொந்தக்காரன் செல்லப்பாவுடன் இங்கு வந்து வேலை செய்து போட்டு அவனோடு வீட்டுக்கு போய்விடுவேன்”

“உன்னையும் செல்லப்பாவையும் கணேஷ் சர்மாவின் குடும்பம் எப்படி நடத்தியது”?

“ எங்களை மரியாதையாக நடத்தினார்கள் சில சமயம் அவரின் மனைவி சமைத்த சாப்பாடு எங்கள் இருவருக்கும் தருவார்கள் . அந்த ஐயர் அம்மா எங்கள் இருவரினதும் சகோதரி போல்”.

“விசாரித்ததில் உனக்கும் அந்த ஐயர் அம்மாவுக்கும் ஒரு உறவு இருத்தாக சொன்னார்கள் அது உண்மையா”?’

“இல்லவே இல்லை சேர். அது பொய் . நான் பிள்ளை குட்டிக்காரன் எனக்கு என்று ஒரு குடும்பம் உண்டு. எனக்கு கிடைக்கும் ஊதியம் போதுமானது திருவிழா காலத்தில் கூடுதலாக ஊதியம் கிடைக்கும்”

“ எப்போவாவது நீ கணேஷ் சர்மாவின் வீட்டுக்குப் போய் இருக்கிறாயா”?

“அந்த வீட்தடில் வேலை செய்ய இருந்தால் போய் செய்து கொடுப்பேன் . சுவருக்கு வெள்ளை அடிக்கவும் வீட்டை சுத்தம் செய்யவும் சில நாட்கள் நானும் செல்லப்பாவும் போய் இருக்கிறோம்.”:

:”நீ உண்மைதான் சொல்லுறியா.? கணேஷ் சர்மா காணமல் போன தினத்துக்கு முன் எப்போ அந்த வீட்டுக்குப் போயிருக்கிறாய் “?.’

“ஒரு மாதத்தில் வரப் போகும் கோவில் திருவிழா பற்றி ஐயரோடு பேசப் போயிருந்தேன் :

“கணேஷ் சர்மா காணமல் போனதை ஐயர் அம்மா பொலீசுக்கு போய் முறை இட்டபோது நீயும் கூடவே போய் இருந்தாயா”?

“ஓம் சேர். துணைக்கு ஐயர் அம்மாவோடும் அவவின் மூத்த மகளோடும் போனேன். வீட்டையும் ஐயர் அம்மாவின் பிள்ளைகளையும் கவனிக்கும படி செல்லப்பாவுக்கு சொல்லிவிட்டு போனேன்”.

“நீ இனி போகலாம். இந்த ஊரை விட்டு எனக்கு சொல்லாமல் நீ எங்கயும் போக கூடாது. வேன்டும் மெண்டால் உன் வீட்டுக்கு மட்டும் போய் வரலாம். திரும்பவும் விசாரணைக்குத் தேவைப் பட்டால் நான் உன்னை அழைத்து விசாரிக்கிறேன்”

“சரி சேர்”

****

இன்ஸ்பெக்டர் சிவாவும் பொன்னையாவும் நெடுந்தீவுக்கு பயணம் செய்து சிவசர்மாவை சந்தித்த போது அவர் அவர்களை கண்டதும் அழத் தொடங்கினார் மகனின் மறைவுக்குப் பின் அவர் சரியாக உணவு உண்பதில்லை என்று அவரின் மனவி ராஜம்மாள் சொல்லிக் கவலைப்பட்டாள்

“வணக்கம் ஐயா. உங்கள் அன்பு மகனைப் பிரிந்த சோகம் உங்களை வாட்டுகிறது போல எனக்குத் தெரிகிறது. அவரின் உடலை இன்னும் நாங்கள் கண்டு பிடிக்கவில்லை எப்படியும் கண்டு பிடித்து விடுவோம் கவலை வேண்டாம்” என்றார் சிவா.

“ சேர் நான் ஒரு கனவு கண்டேன். என் குல தெய்வம் கணபதி வழிகாட்டி விட்டான் “ சிவசர்மா சொன்னார்

“என்ன கனவு ஐயா”?

“உன் மகனை எங்கும் தேடாமல் குப்பையிலை தேடு அவன் அங்கு துயுலுகிறான் என்றது கனவில் என் தெய்வம்”

சிவாவும் பொன்னையாவும் அவர் சொன்ன கனவைக் கேட்டு அதிசயப் பட்டனர்.

“உங்கள் கனவில் உண்மை இருகிறதா என்று பார்ப்போம் உண்மையாக இருந்தால் இன்னும் சில நாட்களில் கொலை செய்தவர்களை கண்டு பிடித்து விடுவோம். நீங்கள் ஒன்றுக்கும் யோசிக்க வேண்டாம் . ஐயா. நீங்கள் கணபதி மேல் வைத்த நம்பிக்கை வீண் போகாது” என்று அவருக்கு ஆறுதல் சொல்லி இருவரும் அவரிடம் இருந்து விடை பெற்றனர்

***

ருத்திரபுரம் திரும்பி வந்த உடனே சிவாவும் பொன்னையாவும் சுந்தரம். ராஜன், சிவராசன் சில ஊர்வசிகள் உதவியோடு கோவில் வளவில் இருந்த குப்பைமேட்டை சில அடிகள் தோண்டிய போது கணேஷ் சர்மாவின் சிதைந்த உடலையும் . இரத்தக் கரை உள்ள அவரின் வேஷ்டியும், இரத்தக் கரையோடு ஒரு கொடுவாக் கத்தியையும் கண்டு எடுத்தனர் . பிரரேதத்தின் உடல் அழுகிய நிலையில் இருந்தது. உடனே சிவா பிரேதபரிசொதனைக்கு ஒழுங்கு செய்தார். இரு நாட்களில் பிரேதபரிசோதனை நடந்து .இறந்தவரின் கழுத்து வெட்டப் பட்டு கொலை செய்யப் பட்டார், அதோடு இறந்தவரின் உடலில் மது அருந்திய அறிகுறிகள் இருந்தது என்று பிரேத பரிசோதனை அறிக்கையை டாக்டர் சமர்பித்தார்.

தாமதியாமல் உடனே மோகனாம்பாள். வேலாயுதம் செல்லப்பா ஆகிய மூவரையும் சிவா கைது செய்து ரிமாண்டில் வைத்தார் மேலும் விசாரணையின் போது .

தானும் செல்லப்பாவும் கணேஷ் சர்மாவுக்கு வெள்ளி இரவு குடிக்க மது கொடுத்து அவர் மயக்கத்தில் தூங்கும் போது மோகனாம்பாளின் உதவியோடு வீட்டின் பின் கதவால் இருவரும் வீட்டுக்குள் புகுந்து, மது போதையில் தூங்கிக் கொண்டிருந்த கணேஷ் சர்மாவின் வாயை மோகனாம்பாள் துணியால் பொத்த . செல்லப்பா அவரின் கால்களைப் பிடிக்க தான் அவரின் கழுத்தையும் உடலின் சில இடங்களை வளவு சுத்தப் படுத்தும் கொடுவாக் கத்தியால் வேடியதாக வேலாயுத்ம் ஒப்புக் கொண்டான். தானும் செல்லப்பாவும் வெட்டிய உடலை ஒரு சாக்குக்குள் போட்டு, கட்டி., நள்ளிரவில் இருவரும் சுமந்து கொண்டு அடி வளவில் உள்ள குப்பை மேட்டில் புதைத்து மேலே குப்பைகளையும் மாட்டு சாணத்தை போட்டதாக தம் குற்றத்தை ஒப்புக் இருவரும் கொண்டார்கள். வேலாயுதத்தின் மேல் உள்ள தன் கள்ள உறவு தன் கணவனுக்குத் தெரிய வந்து அதனால் குடும்ப வாழ்கைக்கு இடையூராக இருந்ததால் அவரை தானும் வேலாயுதமும் செல்லப்பாவின் உதவியோடு கொலை செய்ய முடிவேடுத்ததாகவும் அவர்கள் இருவருக்கும் கோவில் உண்டியலிலும் பாதுகாப்பு பெட்டியிலும் இருந்த பணமும் நகையும் அவர்களுக்கு தான் கொடுத்ததாகவும், அவர்கள் இருவரையும் இந்தியாவுக்கு உடனே தொணியில் போக ஒழுங்கு செய்ததாக மோகனாம்பாள் தன் குற்றத்தை ஒப்புக் கொண்டாள் .அதோடு தன் கணவன் தன்னை தாம்பத்திய உறவின் போது திருப்தி படுத்தாதலால். தோற்றமுள்ள இளம் வயது வேலாயுதத்தை தான் நாடி சென்றதன் கரணத்தை விளக்கினாள். கணவருக்கு தன் கள்ளக் காதல் தெரிந்த பின் அவர் தன்னை அடித்து துன்பறுத்தியதாகவும்.. அதனால் அவரை கொலை செய்ய தான் வேலாயுதத்திதொடு சேர்ந்து முடிவு எடுத்ததாக மோகனாம்பாள் சொன்னாள். தன் செயலால் தன் பிள்ளைகளுக்கு இழிப் பெயர் வந்துவிடும் என்பதை உணர்ந்து , பிள்ளையாரிட்ம் மன்னிப்புக் கேட்டதாக இன்ஸ்பெக்டர் சிவாவுக்கு மோகனாம்பாள் சொன்னாள்

காலதாமதமின்றி மூவருக்கும் எதிராக யாழ்பாணத்து நீதி மன்றத்தில் வழக்கு பதிவு செய்து விசாரணை நடந்தது ஒரு பிரபல அரசியல்வாதியான வழக்கறிஞர் ஒருவர் பணத்துக்காக மோகனாம்பாளுக்கு ஆஜரானர் ஆனால் மூவரக்கும் மரண தண்டனை விதிக்கப்பட்டது. தீர்ப்பு கொடுக்கப்பட்ட தினம் சுமார் 6000 மக்கள் நீதிமன்ற வளாகத்தில் குழுமி இருந்தனர் . மூவரினதுஅப்பீல் மனுவை உச்ச நீதிமன்றம் மறு ஆய்வு செய்து அவர்களின் தூக்கு தண்டனையை ஆயுள் தண்டனையாக மாற்றியது

சுப்பீரின்டெண்டன் ஹரி வாட்சன் இன்ஸ்பெக்டர் சிவாவுக்கும். பொன்னையாவுக்கும் பதவி உயர்வுக்கு சிபார்சு செய்து மேல் இடத்துக்கு அறிக்கை அனுப்பினார்.

( யாவும் உண்மையும் புனைவும் கலந்தது )

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

* Copy This Password *

* Type Or Paste Password Here *