நவாலியூர் சோமசுந்தரப் புலவரின் பாடல் ஒன்றில், பால்குடம் சுமந்துகொண்டு ஒரு சிறுமி சந்தைக்குப் போவாள். அவளது மனம் கோட்டை கட்டும். ‘நான் பாலை விற்றுக் காசு சேர்த்துப் பணக்காரியாவேன்; பட்டாடை உடுத்தி நடக்கும்போது, எல்லோரும் பார்ப்பார்கள். பாரும், பாரும்!’ என்று அவள் தலை நிமிர்வாள். அப்போது பால்குடம் உடைந்து, அவள் கோட்டையும் சிதைந்துபோகும்.
அந்தப் பாடலின் வரிகள்:
‘சுந்தரிபோல் நானே சந்தைக்குப் போவேனே
அரியமலர் பார்ப்பாள் அம்புசமும் பார்ப்பாள்
பூமணியும் பார்ப்பாள் பொற்கொடியும் பார்ப்பாள்…’
இதிலே, பொற்கொடி என்ற பெயர் அழகானது. அரியமலர், அம்புசம், பூமணி என்ற பெயர்கள் எல்லாம் எங்கள் கிராமத்தில் இருந்தன. ஆனால், பொற்கொடி என்ற பெயரை நான் கேள்விப்பட்டதே இல்லை. அந்தப் பெயர் கொண்ட ஒருவரை நான் சந்தித்ததும் இல்லை. கடைசியில், ‘அப்படி ஒரு பெயர் யாழ்ப்பாணத்தில் இல்லை; ஏன், இந்த உலகத்திலேயே கிடையாது. இது புலவரின் கற்பனை’ என்று விட்டுவிட்டேன்.
சமீபத்தில், கனடாவில் ஒரு விருந்தில், ஓர் அம்மையாரை பொற்கொடி என்று அறிமுகப்படுத்தினார்கள். என்னால் நம்ப முடியவில்லை. ஐம்பது வருடங்களாகத் தேடிய ஒரு பெயரை கனடாவில் கண்டுபிடித்தேன். அவர் சுவாரஸ்யமாகப் பேசினார். திடீரென்று, பலநாள் பழகியவர் போல என் பக்கம் திரும்பி, ‘‘உங்களுக்கு ரேணுகாவைத் தெரியுமா? நான் அவருடைய அம்மா’’ என்றார்.
‘‘எந்த ரேணுகா?’’
‘‘லெப்டினென்ட் ரேணுகா. யாழ்ப்பாணம் கோட்டை முற்றுகைப் போரில் உயிர் துறந்த போராளி!’’
என்னுடைய முகம் சாத்தி வைத்த கதவு போல இருந்தது. அவருக்கு மனசு தாங்கவில்லை. ‘‘கேளுங்கோ..! என்ர புருசன் வெளிநாட்டிலே வேலை செய்தார். நான் ஒரு தமிழ் ரீ(டீ)ச்சர். எங்கள் குடும்பம் சராசரிக் குடும்பம். மூன்று பிள்ளைகள் எனக்கு. மூத்தது மகன். இரண்-டாவது
ரேணுகா. கடைக்குட்டியும் மகள். ரேணுகா என்பது இயக்கப் பெயர்; வீட்டுப் பெயரை எப்போதோ மறந்துவிட்டோம். நாங்கள் ஒற்றுமையாக எங்கள்பாட்டுக்குச் சீவித்தோம்… பக்கத்து வீட்டு நடராசன் வரும் வரைக்கும்!’’
‘‘அது யார் நடராசன்?’’
‘‘அவனும் என்ர மகள் வகுப்புத்தான். படிப்பிலே கெட்டிக்காரன், ஸ்போர்ட்ஸிலும் அவன்தான் முதல். என்ர மகளுக்கு வாழ்க்கையில் லட்சியம் என்று ஒன்றிருந்தால், அது அவனைத் தோற்கடிப்பது. அவள் எப்பவும் எதிலும் இரண்டாவதாக வந்தது கிடையாது.’’
‘‘போட்டி என்றால், நல்லதுதானே?’’
‘‘எதுக்கும் லிமிட் வேணும். அவன் இவளைச் சீண்டியபடியே இருப்பான். இவள் எப்பவும் ஆணுக்குப் பெண் சமம் என்று அவனுடன் வாதாடுவாள்.’’
‘‘ரேணுகாவுக்கு என்ன வயசிருக்கும்?’’
‘‘அப்ப அவளுக்கு 12, 13-தான். ஆனால், துணிச்சலானவள். சைக்கிள் ரேஸில் அவள் வலுதிறம். நடராசனுடன்தான் போட்டி. அடிக்கடி தோற்பாள். ஒருமுறை எப்படியோ வென்றுவிட்டாள். அதற்குப் பிறகு அவனுடன் ரேஸ் ஓடவே இல்லை. அவன் எவ்வளவோ கெஞ்சிப் பார்த்தும் மறுத்துவிட்டாள்!’’
‘‘ஏன்?’’
‘‘அவள் அப்படித்தான்… கிடைத்த வெற்றியைத் திருப்பிக் கொடுக்க மாட்டாள். ஊர் எல்லாம், நடராசன் ரேஸில் தோற்றுவிட்டான் என்ற கதை பரவிவிட்டது. ஒரு நாள் நடராசனுக்கும் இவளுடைய அண்ணன்காரனுக்கும் இடையில் ஏதோ வாக்குவாதம். ஏச்சுப்பட்டுக்கொண்டினம். இவள் சும்மா இருக்க ஏலாமல், நடராசன் வீட்டுக்குள் உறுமிக் கொண்டு போனாள். அவன் சாப்பிட்டுக் கொண்டு இருக்கும்போதே, பிடரியில் அடித்திருக்கிறாள். அவன் தலையைச் சோத்துத் தட்டோடு சேர்த்து அடித்ததில், சோறெல்லாம் மூக்குக்குள் போய்விட்டது.’’
‘‘என்ன, இரண்டு பேரும் விரோதிகளாக மாறிவிட்டார்களா?’’
‘‘அப்படியில்லை. இரண்டே நாள்தான்; பிறகு பழையபடி சிநேகிதர்கள் ஆகிவிட்டார்கள். அபாயகரமான எந்த விளையாட்டென்றாலும், அவளுக்குச் சம்மதம். அதிலே ஒரு த்ரில். மேசையிலே கைவிரல்களை விரித்து வைத்து, பாண் வெட்டும் கத்தியால் விரல்களுக்கிடையில் மாறி மாறிக் குத்துவாள். நடராசனும் செய்வான். யார் வேகமாகச் செய்ய முடியும் என்பதுதான் போட்டி. ஒரு நாள் இவள் அப்படிக் குத்தியதில், இடது கை பெருவிரலுக்கும் ஆள்-காட்டி விரலுக்கும் இடையில் கத்தி குத்தி, ரத்தம் பாய்ந்தது. இவள் கொஞ்சமும் பயப்படவில்லை. ஆஸ்பத்திரிக்குக் கூட்டிக்கொண்டு போய் நாலு தையல் போட்ட பிறகுதான் சரிவந்தது. சோதனை (பரீட்சை) வந்தால், இரவிரவாகச் சேர்ந்து படிப்பார்கள். வரலாறு, கணிதம், தமிழ்ப் பாடங்களில் இவள்தான் முதல் மார்க் வாங்குவாள். அவன் வேறு பள்ளிக்கூடம் என்றபடியால், அவர்களுக்கிடையில் போட்டி இல்லை.’’
‘‘எப்ப இயக்கத்தில் சேர்ந்தார்?’’
‘‘பொறுங்கோ, வாறன்! அவசரப்படுறியள். மாவீரன் அலெக்சாண்டரைப் பற்றி இவள் எழுதிய கட்டுரைக்கு முதல் பரிசு கிடைத்தது. அவள் சொல்வாள், பிள்ளைகளைத் தாய்மார் வீரமாக வளர்க்க வேண்டும் என்று. அலெக்சாண்டரின் தாயின் படுக்கையில் பாம்புகள் இருக்குமாம். சிறுவயதில் இருந்து அலெக்சாண்டர் பயமில்லாமல் வளர்ந்ததால்தான் உலகத்தில் பாதியைப் பிடித்து ஆட்சி செய்தானாம். 1988-ம் ஆண்டு ஆரம்பத்தில் அவள் புத்தியறிஞ்சாள். அடுத்து வந்த சில நாட்களுக்குள், அவளுக்கும் நடராசனுக்கும் இடையில் பெரும் சண்டை மூண்டது. அதுவே கடைசி. அதற்குப் பிறகு, அவள் அவனுடன் பேசுவதையே நிறுத்திவிட்டாள்.’’
‘‘என்ன சண்டை?’’
‘‘திலீபன் ஐந்து அம்சக் கோரிக்கை வைத்து, நாலு மாசம் முன்புதான் உண்ணாவிரதத்தில் இறந்துபோயிருந்தான். நாடே கொந்தளித்த காலம் அது. இவள் இரண்டு நாட்களாகச் சாப்பிடவில்லை. அவ்வளவு துக்கம். அந்த நேரத்தில் நடராசன், ‘லெப்டினென்ட் கர்னல் திலீபன் போராடிச் செத்திருக்க வேண்டும்; உண்ணாவிரதம் கோழைகளின் ஆயுதம்’ என்றான். அதுதான் அவளால் தாங்க முடியவில்லை. ‘துரோகி, துரோகி’ என்று பற்களை நெருமிக்கொண்டு, அடிக்கப் போய்விட்டாள். அந்தச் சம்பவம் அவளை அடியோடு மாற்றிவிட்டது. பள்ளிக்குப் போக மறுத்ததும் அப்போதுதான்!’’
‘‘ஏன்?’’
‘‘பள்ளிக்கூடத்தில் அவளை ஐந்து நாள் சஸ்பெண்ட் செய்திருந்தார்கள். அவள் படித்தது வேதப் பள்ளிக்கூடத்தில். ஒரு கட்டுரையில் இப்படி எழுதியிருந்தாள்… ‘ஏசு சிலுவையில் அறையப்பட்டார். அவருக்குத் தேவாலயம் எழுப்பினார்கள். இங்கே ஓர் உயிர் தன்னைத் தானே சிலுவையில் அறைந்துகொண்டது. அதற்குக் கோயில் இல்லையா?’
“பிறகு பள்ளிக்கூடம் போனாரா?”
“போனாள். ஆனால், ஆர்வம் கெட்டுவிட்டது. முன்னெப்போதும் இல்லாத மாதிரி கெமிஸ்ட்ரியில் மோசமாகச் செய்திருந்தாள். நாங்கள் டியூசன் ஏற்பாடு செய்தோம். பிப்ரவரி 26-ம் தேதி டியூசனுக்கு வெளிக்கிட்டாள். வாசலில் நின்று, ‘அம்மா, போட்டு வாறன், போட்டு வாறன்’ என்று இரண்டு தரம் பிலத்துச் சத்தம் போட்டாள். எனக்கு இடுப்பொடியிற வேலை. எரிச்சலுடன், ‘சரி, போ!’ என்று கத்தினேன். அப்பப் போனவள்தான், பிறகு திரும்பவில்லை.”
“தேடினீர்களா?”
“தேடாமல்? என்ன பிரயோசனம்? இரண்டு மணி நேரமாக அவள் திரும்பவில்லை. அப்ப சின்னவள் இன்னும் நித்திரைப் பாயில் கிடந்தாள். படுக்கைச் சீலை சுருண்டு தொடைக்குக் கீழே போய்விட்டது. ‘எழும்படி, பிரமசத்தி’ என்று காலால் எத்தினேன். நித்திரை முறியாமல் எழும்பி, கண்ணைக் கசக்கிக்கொண்டு வந்தவள், ‘அம்மா! இண்டைக்கு அக்கா ஏன் இரண்டு பிராவும், இரண்டு சட்டையும் போட்டுக்கொண்டு போறா?’ என்றாள். நான் ‘ஐயோ, ஐயோ!’ என்று கத்தத் தொடங்கினேன். எனக்கு நெஞ்சுத் தண்ணி வத்திப்போச்சுது. சின்னவளுக்குப் பத்து வயது. அவளுக்கு என்ன தெரியும்! அவள் நேர காலத்துக்கு வந்து எனக்குச் சொல்லி-யிருந்தால், நான் என்ர மகளை அன்றைக்கு எப்படியும் தடுத்திருப்பேன்!”
“பிறகு தேடிப் பிடித்தீர்களா?”
“பதினெட்டு மாதங்களாகத் தேடி, கடைசியில் ஒரு நாள் செய்தி வந்தது… எங்களை வரும்படி! நான் கடைசி மகளைக் கூட்டிக்கொண்டு காட்டுக்குள்ளே போனேன். சந்திப்புக்கு ஏற்பாடு செய்த வழிகாட்டி முன்னுக்குப் போனார். அடர்த்தியான பெரும் காடு. நிறைய முள்மரங்கள். என் மகள் தன்னந்தனியா எப்படி இந்தக் காட்டைக் கடந்திருப்பாள் என்று நினைத்தபோதே நெஞ்சு பதறியது. நான் படிப்பிக்கும் பழைய பாடல் ஒன்று ஞாபகத்துக்கு வந்தது.
‘அற்றாரைத் தாங்கும் ஐவேல்
அசதி அருவரையில்
முற்றா முகிழ் முலை
எங்ஙனஞ் சென்றனள்…’
ரேணுகாவைக் கண்டதும் திகைத்துப் போனேன். கறுத்துப் போயிருந்தாள். முன்னிலும் ஆள் மெலிவு! ஆனால், உடம்பு வயர்போல முறுகிக் கிடந்தது. ஒட்டியாணம் கட்டித் துள்ளித் திரிந்த பிள்ளை இடுப்பிலே கிரேனட்டைக் கொழுவி வைத்திருந்தது. ஓடிவந்து கட்டிப்பிடிப்பாள் என்று நினைத்தேன். ஆனால், அவள் ஒரு மூன்றாம் ஆளைப் பார்ப்பது போல அப்படியே நின்றாள். அசையவில்லை. கடைசி மகள்தான் கட்டிப்பிடித்து அழுதாள். நான் அடக்க முடியாமல் விம்மியபடியே இருந்தேன். அவள் பேசிய முதல் வாசகம், ‘அம்மா அழுகிறதென்றால், அவவைத் திருப்பிக் கூட்டிக்கொண்டு போ’ என்பதுதான்.”
“மகளுக்கு ஏதாவது கொண்டு போனீர்களா?”
“புட்டும் சாம்பாரும் கொண்டு போயிருந்-தேன். குழல் புட்டு அவளுக்குப் பிரியம். கோழிக்கால் போட்டு வைத்த சாம்பார். அதுவும் அவளுக்குப் பிடிக்கும். நான் அவ்வளவு புட்டையும் சாம்பாருடன் குழைத்துத் தீத்திவிட்டேன். ஓர் இரவு மட்டுமே தங்குவதற்கு அனுமதி. என்னுடன் படுப்பதற்கும் அவள் ஓம்படவில்லை. மனதை மாத்திவிடுவேன் என்று பயப்பட்டாள். அவளும் கடைசி மகளும் பட்சமாய் ஒரு கூடாரத்தில் தூங்கினார்கள். நானும் அவளுடைய கூட்டாளியும் இன்னொரு கூடாரத்தில் படுத்தோம். கூட்டாளியின் பெயர் பாமினி. கவிதை எழுதுவாள் என்று நினைக்கிறேன். கூடாரத்துச் சுவரில் கவிதைகள் எழுதி ஒட்டியிருந்தாள். ‘அவர்கள் சவப்பெட்டி நிறைப்பவர்கள். அவர்-கள் மரணத்தின் மொத்த விற்பனைக்காரர்கள்.’
பாமினி இரவு முழுக்க என்ர மகளின் துணிச்சலைப் பற்றியே பேசினாள். மகள் பயிற்சியில் திறமாகச் செய்ததால், குறுகிய நேரத்தில் படைக்குத் தலைவியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டு இருந்தாள். அவள் அடிக்கடி சொல்லுவாளாம்… ‘எங்களுக்குத் தேவை எதிரிகளின் உயிர் மட்டும் அல்ல. அவர்களுடைய ஆயுதங்கள், துப்பாக்கிகள், குண்டுகள், கிரேனட்டுகள், ரேடியோக்கள்… எல்லாமே தேவை.’ கிரேனட் என்றால் அவளுக்குப் பைத்தியம். பந்துபோலத் தூக்கிப்போட்டுப் பிடித்து விளையாடுவாள். பின்னைக் கழற்றி கிரேனட்டை மேலே எறிந்து, அது திரும்பி வந்ததும், பின்னைச் சொருகி, இடுப்பிலே அணிந்துகொள்வாள். கிரேனட்டின் ஆயுள் ஐந்து செகண்டுதான். ‘அது ஆயுளைத் தாண்டினால், உன் ஆயுள் போய்விடும்’ என்று சொல்லிச் சிரிப்பாளாம். இவளுக்கு எங்கேயிருந்து இவ்வளவு துணிச்சல் வந்தது என்று நானே என்னைக் கேட்டுக்கொள்வேன்.
அடுத்த நாள் அதிகாலை மகள் போய்விட்டாள், விடை சொல்லாமல்! அதுதான் நான் கடைசியாக அவளை உயிருடன் பார்த்தது.
யாழ்ப்பாணம் கோட்டை உங்களுக்குத் தெரியும், போர்த்துக்கீசியர் கட்டியது. யாழ்ப்பாணத்தின் மையம் அது. அங்கே இருந்துதான் எல்லா அளவுகளும் ஆரம்பிக்கும். 350 வருடங்களுக்கு முன், டச்சுக்காரர் அதைப் போர்த்துக்கீசியரிடம் இருந்து கைப்பற்றிக்கொண்டார்கள். அந்த முற்றுகை சரியாக 107 நாளில் முடிவுக்கு வந்தது. அது சரித்திரம்.
இந்தக் கோட்டையைச் சிங்கள ராணுவத்திடம் இருந்து கைப்பற்றத் தொடங்கிய யுத்தம், யூன் மாதம் 1990-ம் ஆண்டு ஆரம்பித்தது. பயிற்றுவிக்கப்பட்ட பெண் படை முதல்முறையாக இதில் பங்கு கொண்டது. இதற்கு என் மகள் தலைமை வகித்தாள். அவளுடன் முப்பது போராளிகள். கோட்டை மதிலைத் தாண்டி இவர்கள் உள்ளே பாய்ந்துவிட்டார்கள். குண்டுகள் சரமாரியாகப் பொழிந்தன. அவளைத் தொடர்ந்து போன போராளிகளால் வியூகத்தைக் கடக்க முடியவில்லை. அவ்வளவு பேரும் மாண்டுபோனார்கள். என்ர மகள் அந்த இறுதி நிமிடத்தில் என்ன செய்தாளோ, என்னை நினைத்தாளோ… தெரியாது. கடைசியில் என்ன நடந்ததென்றால், போரின் உக்கிரம் தாங்க முடியாமல் சிங்கள ராணுவம் வான் மார்க்கமாகவும், சுரங்கப் பாதை வழியாகவும் தப்பி வெளியேறிக்கொண்டது.
திலீபன் இறந்த மூன்றாவது ஆண்டு நினைவு தினம் நடந்த அன்று, கோட்டை விழுந்தது. இந்தப் போரும் சரியாக 107 நாட்களில் முடிவுக்கு வந்தது. அந்த வெற்றியைப் பார்க்க மகள் இல்லை. அவள் இறந்து பல நாட்கள் ஆகிவிட்டன.
போர் ஓய்ந்த நிலையில் எங்களைக் கோட்டைக்குள் அனுமதித்தார்கள். நான் என் மகனோடு போயிருந்தேன். கோட்டை முற்றிலுமாகப் பிடிபட்டபோதிலும், போராளிகளின் சடலங்கள் அங்கங்கே விழுந்த இடத்திலேயே கிடந்தன. அவை சதைகள் எல்லாம் அழுகி அழிந்துபோய், அடையாளம் தெரியாத நிலையில் காணப்பட்டன. மேலே கழுகுகள் வட்டமிட்டன. அடங்கலும் இலையான்களும் மொய்த்தன. நாற்றம் காற்று முழுவதும் வியாபித்திருந்தது.
நான் என் மகளைத் தேடி அலைந்தேன். சடலம் சடலமாகப் புரட்டித் தேடினோம். முகங்கள் அழிந்துவிட்டன, ஆகையால், வேறு உடல் அடையாளத்தை வைத்துதான் கண்டுபிடிக்க முடியும். இடது கையை மட்டும் குறிவைத்துத் தேடுவது என்று முடிவு செய்துகொண்டு தேடினோம். அங்கே பல பிணங்கள் கிடந்தபடியால், எங்கள் தேடுதலைக் கெதியாக முடிக்க அப்படிச் செய்தோம்.
மதியம் சற்று ஓய்வு எடுத்துக்கொண்டு மீண்டும் தேடத் தொடங்கிய போது, ஒரு புதுப் பிரச்னை முளைத்தது. எங்களைப் போல இன்னும் சில தாய்மாரும் அங்கே அலைந்ததால், ஒரே குழப்பமாகிவிட்டது. ஒழுங்கு முறை கிடையாது. சிலவேளை ஒரே பிணத்தைத் திருப்பித் திருப்பிச் சோதிக்க வேண்டி வந்தது. நாங்கள் களைத்துப்போன சமயம், மிகவும் அழுகிய நிலையில் ஒரு பிணம் கிடைத்தது. அது இளம் பெண்ணின் உடல். உயரம், பருமன் எல்லாம் பொருந்தியிருந்தது. இடது கையை ஆராய்ந்தபோது இடது பெருவிரலுக்கும், ஆள்காட்டி விரலுக்கும் நடுவில் பெரிய வெட்டுக் காயம் தென்பட்டது. நாலு தையல் போட்டது வடிவாய்த் தெரிந்தது. ஐமிச்சத்துக்கு இடமே இல்லை. அது என் மகளேதான்! பதினாறாவது பிறந்த நாளை என்ர கிளி காணவே இல்லை. காகங்கள் கொத்திப் புழுக்கள் தின்று முடித்த உடலை இழுத்து என் மடியில் போட்டுக்கொண்டு, இரண்டு வருடத்து அழுகையை அழுது தீர்த்தேன்.”
“உடலை என்ன செய்தீர்கள்?”
“உங்களுக்கு மாத்திரம் ஒரு ரகசியம் சொல்வேன். இதை வேறு யாருக்கும் நான் சொன்னதில்லை. அவளுடைய வலது கை ஒரு கிரேனட்டை இறுக்கிப் பிடித்தபடி இருந்தது. பின் இழுக்கப்-படாத முழு கிரேனட்.”
“கிரேனட்டா?”
“என் மகன் அதைச் சோதித்துவிட்டுச் சொன்னான்… ‘இது போராளிகளுடைய கிரேனட் அல்ல; சிங்கள ராணுவத்தின் கிரேனட்’ என்று.”
“அது எப்படி நடந்தது என்று நினைக்கிறீர்கள்? இறந்துபோன ராணுவச் சிப்பாயின் கிரேனட்டை உங்கள் மகள் பறித்துக்கொண்டாரா? அல்லது, எதிரிகள் எறிந்த கிரேனட்டை அது வெடிக்குமுன், பின் கொழுவி வைத்துக்கொண்டாரா?”
பொற்கொடி அம்மையார் என்னைப் பார்த்தார். ஐந்து நிமிடத்துக்கு முன்னர் அறிமுகமாகிய என் முகம் எப்படியோ அந்நியமாகிவிட்டது. என் கேள்விக்குப் பதில் கூறவில்லை. தலையைக் குனிந்தபடி விம்மி விம்மி அழத் தொடங்கினார். அரியமலர், அம்புசம், பூமணி இன்னும் அங்கே கூடியிருந்த அத்தனை விருந்தினரும் எங்கள் பக்கம் திரும்பிப் பார்ப்பதுபோல எனக்குத் தோன்றியது. நான் மெள்ள அந்த இடத்தை விட்டு அகன்றேன்.
– 03rd அக்டோபர் 2007